Thursday, 16 March 2017

மக்கள் நலக் கூட்டணி - ஒரு உணர்வு...

நீயா’ திரைப்படத்தில் காதலனைக் கொன்ற ஆறு(?) நபர்களை காதலனுடையக் கண்கள் அடையாளம் காட்டிச் சொல்லும்.
அந்த நபர்களைப் பார்த்துக் கொண்ட காதலி ஒவ்வொருவராய் பழிவாங்குவார்.
அதுல திமுகவினரை அதிகார ருசியை எட்டிப்பிடிக்க விடாமல் தேர்தல் தோல்வி செய்துவிடுகிறது.
யார் இதற்குக் காரணம் என்று திமுகவினர் அதிகார வெறியிடம் “யார் உன்னை அடைய விடாமல் தடுத்தது” என்று கேட்க ’அதிகார வெறி’ மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களின் போட்டோக்களை கண்களில் ஒவ்வொன்றாய்க் காட்டிப் போய்விடுகிறது.
அதைத் தொடர்ந்து திமுக பதிவர்கள் முகநூலில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ளவர்கள் ஒவ்வொருவராய் கிண்டல் செய்து முடிந்த மட்டும் கீழே இறக்கிவிடுவதாக நினைத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
முதலில் மாட்டியது விஜயகாந்த்.
அடுத்தது மாட்டியது தா. பாண்டியன்
மூன்றாவதாக மாட்டியது வை.கோ
நான்காவதாக இந்த கோஷ்டியினர் குறிவைத்திருப்பது திருமாவளவனை.
மற்றவர்கள் விஜயகாந்த்,தா.பாண்டியன், வைகோவை விமர்சனம் செய்வதற்கும் இந்த கோஷ்டியினர் செய்வதற்கும் வித்தியாசம் என்ன?.
மற்றவர்கள் ஒரு அரசியல்தலைவரை விமர்சனம் செய்வது மாதிரி செய்வார்கள். திமுக வெறி பதிவர்கள் “பக்கத்துல வந்த வெண்ணெய்யை திங்க விடாம செய்த பாவிகளா” என்ற ஆவேச வெறியில் தூற்றிக் கொண்டே இருப்பார்கள்.
மக்கள் நலக் கூட்டணியை அதிமுகவின் பி டீம் என்பார்கள். ஆனால் விடுதலைச் சிறுத்தைகளையும் கம்யூனிஸ்டுகளையும் தேர்தலில் ஆரம்பத்திலேயே மதித்து நல்ல தொகுதிகளைக் கொடுத்து தங்களோடு சேர்த்திருக்கலாம் என்பது பற்றி பேச மாட்டார்கள்.
இவர்கள் எப்படியும் நம்மோடு வந்துதான் ஆகவேண்டும். வருவார்கள். நம் கணக்கு விஜயகாந்த்தான் அவரை இழுத்தால் இவர்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்ற எண்ணம் திமுகவுக்கு இருந்தது பற்றி பேசவே மாட்டார்கள்.
மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களை முடிந்த மட்டும் கிண்டல் செய்து பேசிக் கொண்டும், ஏதோ அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அவர்களே காரணம் என்பது மாதிரியும் முகநூலில் எழுதிக் கொண்டிருப்பார்கள்.
மக்கள் நலக் கூட்டணில் இருக்கும் விஜயகாந்துக்கோ, வைக்கோவுக்கோ, தா.பாண்டியனுக்கோ அது ஒரு அரசியல் உத்தியாக இருக்கலாம். ஏன் திருமாவளவனுக்கு கூட அது ஒரு அரசியல் தந்திரமாகப் பட்டிருக்கலாம்.
ஆனால் மக்களில் பலருக்கு, கொஞ்சம் விவரம் தெரிந்தவர்களுக்கு, அரசியல் தெரிந்தவர்களுக்கு, சமூகநீதி புரிந்தவர்களுக்கு “மக்கள் நலக் கூட்டணி’ என்பது ஒரு உணர்வு.
மக்கள் நலக் கூட்டணி என்பது ஒரு சமூக முன்னேற்ற Updation க்கான முயற்சி.
நீங்கள் அதிமுகவும், திமுகவும் ஊருக்கு ஊர் சாதி இந்துக்களை வளர்த்துவிட்டுக் கொண்டிருப்பீர்கள். தினம் ஒரு ஆணவக் கொலை நடந்து கொண்டிருக்கும்.
அதற்கெல்லாம் நசுக்கி நசுக்கி குசுவிட்டாற் போல ஒரு போலி எதிர்ப்பை செய்து கொண்டிருப்பீர்கள்.
இதையெல்லாம் எதிர்த்து ஒரு தலித் இயக்கம் முன்னேறக் கூடாதா? அதிகாரத்தை நோக்கிப் போகக்கூடாதா என்ன?
முஸ்லிம்கள் பல்வேறு இயக்கங்களாக பிரிந்து தனியே நிற்கமுடியாமல் வேறுவழியில்லாமல் திமுக அதிமுகவை ஒட்டியே நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மாதிரி தலித்களும் இருக்க வேண்டும் உங்களுக்கு.
அப்படித்தானே?
தலித்தியம் என்பது தலித்களைத் தாண்டி சமூகநீதி உணர்வு கொண்ட அனைத்து ஜாதியினரிடம் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது என்றே நினைக்கிறேன்.
அது தேர்தல் அரசியலில் ஒலிக்க காலம் எடுக்கலாம்.
ஆனால் பேப்பரில் வரும் ஆணவக் கொலைகளும், அடக்குமுறைகளும் அனைத்தும் சமூக நீதி உணர்வை மக்களில் ஏதோ ஒரு வகையில் ஏற்படுத்துகிறது என்றே நம்புகிறேன்.
மக்கள் ஆதரவுக்கான Space தற்போதைக்கு தலித்தியத்தில் மட்டும்தான் இருக்கிறது.
சென்னையில் ஒரு சமூகநீதி விழா நடக்கிறது. திராவிடக் கழக்கத்தில் நடக்கும் ஒரு அம்பேத்கர் பற்றிய செமினார் என்றே வைத்துக் கொள்வோம்.
அந்த செமினாரின் முடிவில் அதை அட்டெண்ட் செய்த மக்கள் யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். அவர்கள் திருமாவளன் போன்றக் கட்சித்தலைவரைத்தான் நினைத்துப் பார்ப்பார்கள்.
இதோ திவ்யா ”கக்கூஸ்” திரைப்படம் திரையிடுகிறார். அதைப் பார்த்து பாதிக்கப்படும், மனதில் ஏதாவது செய்யவேண்டும் என்று 100 நபர்கள் நினைக்கிறார்கள்.
சமூகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களும் திருமாவளனைத்தான் நினைப்பார்கள். நான் சொல்ல வருவது ஒரு திமுக மரமண்டை பதிவருக்காவது புரிகிறதா என்று தெரியவில்லை.
என்ன சொல்ல வருகிறேன் என்றால்
திரும்ப திரும்ப சமூகநீதிப் பிரச்சாரம் செய்யும் போது அது ஒரு தலித் முன்னேற்ற அக்கறை கொண்ட தலைவருக்குதான் ஆதரவாகப் போய்ச் சேரும் என்று சொல்ல வருகிறேன். நீங்கள் உண்மையான தலித் முன்னேற்ற அக்கறை கொண்ட தலைவரை உருவாக்காதவரை உங்களுக்கு அந்த ஆதரவு கிடைக்காது என்று சொல்ல வருகிறேன்.
சமூகநீதி பிரச்சாரத்துகான வெளி எங்கிருக்கிறது?
தலித்தியம் பேசுவதில் இருந்து கிடைக்கிறது.
1.ஏன் அந்த Space அங்கிருந்து கிடைக்கிறது?
ஏன் என்றால் இன்னமும் பல மனிதர்களை ஜாதியின் பேரால் கேடாய் நடத்துவதை தலித்தியம்தான் கேட்கிறது.
2.திராவிடக் கட்சிகளும், கம்யூனிஸ்டுகளும் தலித்தியம் பேசாமலா இருக்கிறார்கள்? பின் ஏன் ஒரு தலித்களுக்கான தனித்தலைவருக்கு அந்த கிரெடிட் போய் சேர்கிறது?
3.ஏனென்றால் திராவிடக் கட்சிகளுக்கோ, கம்யூனிஸ்டுகளுக்கோ அவர்கள் கொள்கையில் ஒரு பகுதி சாதி ஒழிப்பு, அதை நேரடியாக எடுத்துச் செல்வதில் நிறைய சிக்கல் இருக்கிறது. ஆனால் ஒரு தலித் ஆதரவு கட்சிக்கு அப்படியில்லை. ஆகையால் அவர்களுக்கு முன்னுரிமை.
திருமாவளவன் ஒன்றும் சூப்பர் ஹீரோவோ, அல்லது பலருக்கும் அவரை அப்படியே தோளில் தூக்கிவைத்து ஆட வேண்டும் என்ற எண்ணமோ கிடையாது.
ஆனால் பல அநியாயங்களை சமூகத்தில் நடக்கும் பல்வேறு அடக்குமுறையைப் பார்த்து, சமூகநீதி பற்றி கொஞ்சம் அறிவுள்ள ஒரு உள்ளத்துக்கு ஒரு தீர்வின் ஆகுபெயராக திருமாவளவன் என்ற பெயர் இருக்கிறது.
அதனால்தான் சமூகநீதி பார்வை கொண்டவர்களுக்கு
ஸ்டாலினை விட திருமாவளவன் கவர்ச்சியான தலைவராகத் தெரிந்தார்.
நிற்க..
50 வருடங்கள் முன்னால் காமராஜரை விட அண்ணா கவர்ச்சியான தலைவராக தெரிந்ததுக்கும் இதே காரணம்தான். அப்போதைய மக்கள் தேவைக்கான தீர்வாக அண்ணா (அவர் இயக்கத்தையும் சேர்த்து சொல்கிறேன்) என்ற பெயர் இருந்திருக்கிறது. அதனால் அவர் முன்னேற்றம் அடைந்தார்.
Suppose திருமாவளவன் இப்படியே இருக்கிறார். அவர் வாழ்நாள் முழுவதும் பெரிய அதிகாரத்தை பெற முடியாமல் இருக்கிறார். உடனே அவர் தோற்றுவிட்டார் என்ற அர்த்தமா?
அதற்கடுத்து ஒரு தலித் தலைவர் அவரை விட வலிமையாக தோன்றுவார். தலித்தியம் என்ற சமுகத்திற்கான தேவையில் இருந்துதான் தலைவர்கள் உருவாகிறார்கள். சமூக ஏற்றத்தாழ்வு இருக்கும் போது அது அதுபாட்டில் அடுத்த கட்ட வலிமையான தலைவரை உருவாக்கிக் கொள்ளும்.
திராவிடக் கழகம் சமூகநீதி பேசினாலும் சரி,
திமுக அதிமுக சமூகநிதி பிரச்சாரம் பேசினாலும் சரி
கம்யூனிஸ்டுகள் சமூகநீதி பிரச்சாரம் பேசினாலும் சரி,
அதனால் கிடைக்கும் ”பெரும்பான்மையான அரசியல் பலம்” ஒரு தலித் தலைவருக்கும், அவர் சார்ந்த இயக்கத்துக்கும்தான் கிடைக்கும்.
ஏனென்றால் முழுநேரமும் அடக்கப்பட்டவர்களின் மேல் தவிப்பாக இருக்கும் தலைவரின்பால் மக்கள் தன்னிச்சையாக ஈர்க்கப்படுவர்.
Long Term யில் பார்த்தால்
1.மக்களிடம் கல்வி அறிவு அதிமாகிறது.
2.கல்வி அறிவை ஒட்டி சமூக அறிவு விரியும்
3.சமூக அறிவு சமூக நீதி அறிவாக வளரும்.
4.சமூக நீதி என்று வரும் போது முதல் பிரச்சனையான அனைவர் மனசாட்சியையும் உறுத்துவது தலித்கள் மேல் வைக்கப்படும் அடக்குமுறைதான்.
5.அதற்கு என்ன செய்யலாம் யாருக்கு ஒட்டுப்போடலாம் என்று பார்க்கும் போது தலித் இயக்கங்களே அவர்களைக் கவரும்.
6.தலித் இயக்கங்கள் கவரும் போது அதில் நல்ல இயக்கத்தின் அல்லது கட்சியின் தலைவர் அவர்களுக்கு கவர்ச்சிகரமான தலைவராகத் தெரிவார்.
7.அப்படி தெரிய ஆரம்பித்திருக்கும் தலைவராகத்தான் திருமாவளவைப் பார்க்க வேண்டும்.
நான் ஏழு பாயிண்டுகள் கொடுத்திருக்கிறேன் பாருங்கள் இதுதான் வருங்கால அரசியலின் போக்காக இருக்கும்.
ஒருவேளை இந்தியாவில் ஜாதி இல்லையென்றால் இந்த நான்காவது பாயிண்டில் கம்யூனிஸ்டுகள் முன்னே வந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் ஜாதி வெறி அதிகமாக இருக்கும் போது அதில் தலித் பிரச்சனைகளை முன்னிறுத்தும் கட்சியே முன்னேறும்.
திமுகவும் அதிமுகவும் தங்களுடைய Comfortable Zone களான சாதி இந்து ஆதரவு மனநிலையை விடுத்து, விடுதலைச் சிறுத்தைகளை விட ஆவேசமாக அடக்கப்பட்டவர்களின் பிரச்சனையை முன்னிறுத்தினால் மட்டுமே அவர்களுக்கு வருங்கால அரசியலில் இடமிருக்கும்.
இல்லையென்றால் நீங்கள் பெரியாரை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்யும் பெரியாரியமே தலித் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சிக்குதான் ஆதரவாய் போய் முடியும். அப்படித்தான் நடக்கிறது.
பெரியார் ஒக்கே... ஆமா சாதி ஒழிக்கனும்னாரு... ஆனா அத திமுகவும் அதிமுகவும் செய்யுதா ? அதிமுகவாவது பெரியார், சமூகநீதி எதுவும் பேசுவதில்லை. திமுக கொஞ்ச தொடர்பில் இருக்கும் போது “இவன் என்னடா சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணா இருக்கு” என்று அதுவே வருங்கால மக்கள் மத்தியில் வெறுப்பாக ஆகிவிடும். அந்த மக்கள் தன்னிச்சையாக திருமாவளவன் மாதிர் தலைவர்களை நோக்கி திரும்புவார்கள்.
ஸ்டாலினோ, எடப்பாடியோ, பன்னீர்செல்வமோ ஒரு உணர்வு அல்ல.
ஆனால் திருமாவளவனோ, அவர் சேர்ந்த மக்கள் நலக் கூட்டணியோ ஒரு உணர்வு.
மொத்த Intellect உலகமே அடக்கப்பட்டவர்களின் பிரச்சனையைத்தான் முன்னிறுத்திப் பேசப்போகிறது.
திரும்ப திரும்ப அதையெல்லாம் கிண்டல் செய்யும் போது மறுபடியும் மறுபடியும் தவறு செய்கிறீர்கள் என்றுதான் சொல்வேன்.

No comments:

Post a Comment