Thursday, 16 March 2017

ஒரு மெக்சிகன் அபராதா...

இரண்டு இயக்கங்களின் மாணவர் குழு,
ஒரு கல்லூரியில் மோதிக் கொள்ளும் சூழ்நிலை வருகிறது.
ஒன்று KSQ என்ற வலதுசாரி ஃபாசிச அமைப்பு, மற்றொன்று SFY என்ற இடதுசாரி ஜனநாயக அமைப்பு.
இதில் எக்காலத்திலும் SFY கல்லூரித் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பதில் KSQ குறியாக இருக்கிறது.
அதற்காக அது அடியாள் பலம், தந்திரம், பொய்ப்பிரச்சாரம் என்று அனைத்து வழிகளையும் உபயோக்கிறது.
சுபாஷ் என்னும் மாணவன் KSQ வை எதிர்க்கிறான்.
பால்(Paul) என்னும் மாணவன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் காதல் உணர்வில் இருந்து சக மாணவியை காதலித்துக் கொண்டிருக்கிறான்.
காதல் தோல்வியும், சமூக உணர்வும் ஒரே சமயத்தில் நடக்க, பால் SFY யில் சேர்கிறான்.
எதிர்க்கவே முடியாத KSQ அணியை எதிர்க்கிறார்கள் SFY அணியினர். தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இப்போது ச்பாஷ்க்கு ஒரு சிக்கல் வருகிறது.
SFY யின் சார்பான அரசியல்வாதி சுபாஷை அழைத்து, சேர்மேன் பதவிக்கு போட்டியிடும் Paul ஐ நாமே கொன்றுவிடலாம், பழியை KSQ மேல் போட்டுவிடலாம். அனுதாபத்தில் SFY வென்றுவிடும் என்று சொல்கிறான்.
சுபாஷ் இது கேட்டு அதிர்ச்சியடைகிறான். எப்படி அது சரியாகும் என்று கேட்க,
அந்த அரசியல்வாதி “இல்லை கட்சிக்காக இந்த தியாகத்தை நாம் செய்துதான் ஆக வேண்டும். பால் இல்லாவிட்டால் நீ தியாகம் செய், நீயும் இல்லாவிட்டால் நான் செய்கிறேன்” என்கிறான்.
அதன்படியே ஒருநாள் SFY அரசியல்வாதி ஆட்களே சொந்தகட்சிக்காரனான பால் ஐ கொலைச் செய்யப் போக, பால் போராடிக் கொண்டிருக்கும் போது,
இன்னொரு SFY மாணவர் எழுந்து “ பால் ஐக் கொல்ல முயற்சி நடக்கிறது. இதற்கு சுபாஷும் உடந்தை” என்று அறிவிக்க, கூட்டம் சுபாஷைத் துரத்த, சுபாஷ் தப்பி ஒடிவிடுகிறான்.
இப்போது Paul யின் மீது மொத்த கல்லூரியும் இன்னும் அதிக பாசம் கொள்கிறது.
இந்நிலையில் சின்ன ப்ளாஷ்பேக்.
அந்த மோசமான அரசியல்வாதி பால் ஐ கொல்வது பற்றி சுபாஷிடம் சொல்ல, அதை கேட்ட
சுபாஷ் கோபத்தில் கட்சித்தலைமையிடம் கேட்கப் போகிறான்.
தலைவர் மறுக்கிறார்
“எக்காலத்திலும் நம் கட்சியில் இந்தப் பண்பாடு இல்லை. இது போன்ற தவறான மனிதர்கள்தாம் கட்சியின் பெயரை கெடுக்கிறார்கள். எதாவது செய்து மக்கள் கவனத்தைத் நம் பக்கம் திருப்புவது நம் கட்சியின் வேலைகிடையாது. இரண்டு பேர் இருந்தாலும், கொள்கையைப் புரிந்து கொண்டு செங்கொடியை ஏந்தி மக்களுக்காக குரல் கொடுத்தால் அதுவே நம் கட்சியின் பலம். அவனை நம்பாதே” என்று சொல்லிவிடுகிறார்.
இதையொட்டி சுபாஷ் செய்த தந்திரம் மற்றும் தியாகம்தான் அந்த பொதுக்கூட்ட அறிவிப்பு.
இவ்வாறு Paul யின் புகழ் அதிகரிக்க தேர்தலில் KSQ வை எளிதில் தோற்கடிக்கிறான்.
வெற்றி பெற்ற அறிவிப்பு வந்ததும், பால் செங்கொடியை எடுத்து நடுவதற்காக ஒடிப்போகிறான், KSQ குண்டர்கள் பால் ஐ அடிக்கிறார்கள்.
நெற்றியை கட்டையால் பிளக்கிறார்கள். பின் தலையில் அடிக்கிறார்கள். வயிற்றில் மிதிக்கிறார்கள். முதுகில் அடிக்கிறார்கள். இடுப்பில் கம்பியால் குத்துகிறார்கள்.
ஒருகட்டத்தில் பால் செங்கொடியை நாட்டமுடியாமல் தரையில் விழுந்துவிடுகிறான்.
அப்போது KSQ வின் தலைவன் சொல்கிறான்
“எங்கள் கொடியை இறக்கிய உன் நண்பன் கிருஷ்ணனை கொடியை இறக்கிய காரணத்துக்காகவே வெட்டிக் கொன்றோம். பின் உன்னை மட்டும் எப்படி கொடி ஏற்றுவிடுவோம். கொன்றுவிடுவோம்” என்கிறான்.
தன் நண்பன் கிருஷ்ணனைக் கொன்றது இவர்கள்தாம் என்ற செய்து பால் யின் காதுகளில் விழ, மறுபடியும் ஆவேசமாக பால் எழுந்து நின்று போராடி செங்கொடியை நாட்டுகிறான்.
இப்போது KSQ குண்டர்கள் தாக்க வரும் போது மொத்தக் கல்லூரியும் பால் ஐ ஆதரிக்கிறது. ஜனநாயக அமைப்பான SFY வெல்கிறது.
இந்தப் படம் ஒரு தீவிரப் படம் அல்ல. ஒரு மசாலாப் படம்தான்
இதில் சொல்லியிருப்பது கம்யூனிசம் இல்லை என்பதுபோலத்தான் தெரிகிறது.
ஆனால் பார்வையாளருக்கு ஒருவிதமான நல்ல ஆவேசத்தைத் தூண்டுபடியாக இருக்கிறது. கிளைமேக்சில் பால் அந்தக் கொடியை நாட்டும் போது இசைக்கப்படும் பாடலுக்கும், பால் காட்டும் ஆவேசத்துக்கும் பார்க்கும் போது உடலும் மனமும் துள்ளுகிறது.
அங்கே சொல்லப்படும் ஒவ்வொரு லால் சலாமும், இன்குலாப் சிந்தாபாத்தையும் நாமும் சொல்லவேண்டும் போல் இருக்கிறது.
செல்வராஜ், ராஜ் மற்றும் நான் மூவரும் இப்படத்தைப் பார்த்தோம்.
தோழர் செல்வராஜுக்கு இப்படத்தில் பெரிய திருப்தி இல்லை.
இது ஆழமாக எதையும் சொல்லவில்லை என்பது அவர் கருத்து. ஒருவன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து கொஞ்சநாளில் எல்லாம் இப்படி கல்லூரி இயக்கங்களை அதிகாரம் செய்யும் பலம் பெறமுடியாது. அந்த கதாப்பாத்திர சித்தரிப்பே தவறு என்றார். இதைவிட பல நல்லப் படங்கள் கம்யூனிசத்தை அடிப்படையாக வந்திருக்கிறது அதைப் பாருங்கள் என்றார்.
நான் திரும்ப திரும்ப அந்த கிளைமேக்ஸ் கொடுக்கும் ஆவேசமும் எழுச்சியையும் கவனியுங்கள் என்றே சொல்லி வந்தேன்.
மணிரத்னம், அரவிந்த்சாமி இந்திய தேசியக் கொடியை எரிப்பதை வெறித்தனமாக விழுந்து தடுப்பது போல் ஒரு காட்சி எடுத்திருப்பார்.
அந்த ஒரு காட்சி ஏற்படுத்திய பாதிப்பு என்ன?
காஷ்மீர் விஷயத்தில் இந்திய அரசு என்ன நிலை எடுத்தாலும் அது சரிதான் என்று இந்தியமக்களின் புத்தியை மழுங்கடிக்க செய்ததில் அக்காட்சிக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இந்திய தேசிய எதிரிகள் என்று தவறே செய்யாத முஸ்லிம்களை கைது செய்வதற்கு அக்காட்சி தன் பங்கை அளிக்கிறது.
இந்திய தேசம் என்ற சொல்லை முன்னிறுத்து ஆளும் அரசு என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்யலாம் என்பதை மணிரத்னத்தின் அக்காட்சி வசதி செய்கிறது. நெடுவாசலில் நடக்கும் போராட்டத்துக்கும் அக்காட்சிக்கும் சம்பந்தமிருகிறது. பிராந்திய மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒரு மத்திய அரசு உருவாகுவதற்கும் அக்காட்சி துணை செய்கிறது.
ஒரே காட்சியில் இந்திய மக்களின் ஒட்டுமொத்த பார்வையும் மணிரத்னம் என்ற அயோக்கியர் மழுங்கடித்துவிடுகிறார்.
இப்படி அயோக்கியர்கள் உணர்ச்சியைத் தூண்டிவிடும் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் போது, நன்மை செய்வதை முன்னிறுத்தும் கம்யூனிஸ்டுகள் போன்ற கட்சிகள் ஏன் இது மாதிரி காட்சி உள்ள திரைப்படங்களை முன்னிறுத்தக் கூடாது.
தாராளமாகச் செய்யலாம்.
நிச்சயமாக இப்படத்தை பார்க்கும் எந்த ஒரு இளைஞனும் ஒரு விநாடி இது என்ன? என்று யோசிப்பான்.
இது என்ன?
ஏன் இவன் செங்கொடியை கையில் ஏந்தி அதை ஊன்றுவதற்கு மரண அடி வாங்குகிறான்?
இவன் பின்னால் உள்ள கட்சி என்ன?
அவர்களின் கொள்கை என்ன?
படத்தில் கண்ணூரை போராட்டக்காரர்கள் பூமி என்கிறார்களே அப்படி என்ன அந்த ஊரில் விசேசம்?
“ ஒ முதன் முதலி விவசாயிகள் கிளர்ச்சி செய்த ஊரா அது. அங்குதான் பிணரயி இருக்கிறதா. பிணரயீ என்றால் பிணங்களை அடக்கம் செய்யும் ஊர் என்ற பொருளா? போராட்டத்தில் உயிரழந்தவர்களின் பிணத்தையா அடக்கம் செய்தார்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட இயக்கத்தை நடத்தியிருகிறார்கள். அதெல்லாம் தெரியாமல் இருந்துவிட்டோமே. அது படிப்போம். தெரிந்து கொள்வோம் என்ற Mode க்கு போக மாட்டானா?
வாய்ப்பிருகிறதுதானே?
போது நன்மை பற்றிய ஆவேசம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால் போதும், கொள்கைகளைக் கற்றுக் கொள்ளும் உழைப்பு அவனுக்கு தன்னால் சேர்ந்துவிடும்,
B.E படிப்பில் கணிதம் ஒன்று, இரண்டு, Probabilty போன்ற பாடங்களைப் படித்து Operation Management, Operation research, Reserach Methodology போன்ற படிப்புகளை படித்து வரும் இளைஞர்களுக்கு ’மூலதனம்’ படிப்பதோ, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை புரிந்து கொள்வதோ ஒரு விஷயமே கிடையாது.
அம்பேத்கர் எழுதிய புத்தகமோ, பெரியார் எழுதிய புத்தகங்களோ,
சமூகவியல் பற்றிய கோட்பாடுகளைப் படித்து புரிந்து கொள்வதோ பெரிய விசயம் கிடையாது.
அவன் எளிதாக அதைச் செய்துவிடுவான். அதுதான்
அவன் பலம்.
ஆனால் அவன் அதைப் படிப்பதற்குரிய ஆவேசத்தைப் பெற வேண்டும். அதை எப்படி எங்கே அவனுக்கு ஊட்டப்போகிறீர்கள் என்பதுதான் சவால்.
இந்த ”ஒரு மெக்சிகன் அபராதா” என்றத் திரைப்படம் அந்த நாடி நரம்பு முறுக்கேறும் ஆவேசத்தை நன்கு ஊட்டுகிறது.
கட்டாயம் பாருங்கள்.
நான் இரண்டு முறை பார்த்துவிட்டேன்.
நல்லதொரு பொழுதுபோக்குப் படம்...
சினிமாத்தனமான மசாலா திரைப்படம்தான் So What ..

No comments:

Post a Comment