கருந்துளை என்ற Black hole பற்றி எனக்கு அதிகம் தெரியாது.
அதற்கு ஈர்ப்பு சக்தி மிக அதிகம் ஒளியைக் கூட தன்னுள் இழுத்துக் கொள்ளும். வெளியே விடாது. பெரிய பொருட்களைக் கூட உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்ளும் என்று நினைத்து வைத்திருக்கிறேன். தெள்ளத் தெளிவாக கருந்துளைப் பற்றி தெரியாது.
”எங்க இருக்கீங்க” மனைவியிடம் இருந்து போன்.
“இதோ பக்கத்துல வந்துட்டேன். 30 நிமிசத்துல வந்துருவேன்” என்றேன்.
எனக்கு அதிகமான மரணதண்டனைக் கருணை மனுக்களை நிராகரித்த கருணாமூர்த்தி, நம் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்சி சென்னையில் ரவுண்டடிக்க வந்திருக்கிறார் என்று தெரியாது.
அதற்காக ரோட்டின் வாகனங்களை நிறுத்த என் பஸ்ஸும் நிற்க நேரமாகியது.நினைத்ததை விட ஒரு மணி நேரம் அதிகமாக வீடு போய் சேர்ந்தேன். மனைவி சோர்வுடன் படுத்திருந்தார்.
“வெங்காயச் சட்னி வெச்சி, தோசை சுடனும்னு நினைச்சேன். திடீருன்னு சோர்வா இருந்துச்சு. படுத்துட்டேன்” என்றார்.
நான் லேட்டாக வருவது பற்றி கோபப்படாமல் சோர்வாக கட்டிலில் படுத்திருந்தது பார்த்ததும் மனம் ஒருமாதிரி பாசமாக ஆகிவிட்டது.
“அய்யயோ பிள்ளைக்கு காய்ச்சல் அடிக்குதா பாப்போம்” என்று தொட்டுப் பார்த்தேன். காய்ச்சல் இல்ல.
தொடர்ந்தேன்
“இரு நா தோசை சுட்டு எடுத்துட்டு வரேன்”
“தோசைச் சுட்டு இட்லிப் பொடி வெச்சி சாப்பிடுக்கலாம்” இது மனைவி.
கை மட்டும் கழுவிவிட்டு கிச்சனுக்குள் போனேன்.
தோசை சுடலாம் என்று மாவை பிரிட்ஜிலிருந்து எடுத்து வெளியே வைத்தேன்.
அப்போதுதான் நினைத்தேன்.
நான் என்றாவது தோசை உணவு தயாரித்தால் மட்டும் சைட் டிஷ் சிம்பிளாக இருக்கிறது. நேற்று வைத்த குழம்பு, தக்காளி தொக்கு இருக்கும். தோசை சுட்டு கொடுப்பேன்.
இல்லாவிட்டால் இட்லிப் பொடி நல்லெண்ணெய்தான்.
நான் ஏன் நல்ல சைட் டிஷ் வைக்காமல் இருக்கிறேன் என்று தோன்றியது.
சரி மனைவி விரும்பியவாறு வெங்காயச் சட்னியே செய்துவிடுவோம் என்று நினைத்தேன்.
வெங்காயச் சட்னி செய்முறைய ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கும் மனைவியிடம் போய் கேட்க முடியாது.
என்னத்தடா வெங்காயச் சட்னி, பெரிய மாயமா மந்திரமா? நாம செய்வோம் என்று நினைத்து, இரண்டு பெரிய வெங்காயத்தை எடுத்துக் கொண்டேன். இரண்டு சிறிய தக்காளியை எடுத்துக் கொண்டேன். நறுக்கிக் கொண்டேன். பச்சைமிளகாய் இரண்டு எடுத்துக் கொண்டேன்.
அதையெல்லாம் ஆயில் விட்டு வதக்கினேன். ஒரளவுக்கு வதங்கிய பிறகு சிறிய மிக்சி ஜாரை எடுத்து அந்த வதக்கலை உள்ளே போட்டேன்.
பாதி அளவுதான் அந்த ஜாருக்குள் போனது. சரி என்று அரைத்தேன். வெங்காயச் சட்னிக்கு ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும் போல் தெரிகிறது. நான் மையாக அரைத்து விட்டேன்.
அதையெடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டிவிட்டு, மீதம் உள்ள வதக்கலை விட்டு அரைத்தேன்.இப்போது அரைபட்ட இரண்டும் அளவில் சிறியதாகிவிட, இன்னும் கொஞ்சம் உப்பு போட்டு அரைத்துவிடலாம் என்று சேர்த்து அரைக்கும் போது மூடியை சரியாக மூட மறந்துவிட்டேன்.
சர்ர்ர்ர்ர்ர்
வெங்காயச் சட்னி தெறித்து என் சட்டையில் விழுந்து ஒட்டிக் கொண்டது.
நல்லவேளையாக கண்ணில் விழவில்லை. இதற்கு முன்பு சப்போட்டா ஜூஸ் செய்யும் போது இப்படி நடந்திருக்கிறது. அந்த அனுபவம் இருந்த பின்னும் அதே மாதிரி ஒரு தவறு.
சட்டை முழுவதும் சட்னி,
மிக்ஸி முழுவதும் சட்னி.
அப்படியே பதட்டத்திலும் எரிச்சலிலும் சோர்வு வந்தது. சரி இப்போது சோர்ந்தால் வேலைக்காகது என்று நினைக்கும் போது பின்னால் இருந்து ஒஹோ என்றொரு குரல் கேட்டது. அது என் மகள்தான்.
”சரி சரி இத சொல்லிராத அம்மாகிட்ட. நா இப்ப க்ளீன் பண்ணிருவேன்” என்று சொல்லி முடிக்குமுன் மனைவியிடம் சொல்ல பெட்ரூம் சென்று விட்டாள்.
சட்டையைக் கழட்டி பாத்ரூமில் ஊற வைத்துவிட்டு, மறுபடி மிக்சியைத் துடைத்து, மீதமிருக்கும் சட்னி போன்ற அக்கலவையை எடுத்து வைத்து, தோசைச் சுடப் போனேன்.
நல்லவேளையாக தோசை சரியாக வந்தது. வடிவமாகவும் வந்தது.
ஒரு தோசையைச் சுட்டு தட்டில் வைத்து வெங்காயச் சட்னியை வைத்தும் இட்லிப் பொடியையும் வைத்து மனைவியிடம் நீட்டினேன்.
“வெங்காயச் சட்னியை மையா அரைக்ககூடாது. ஒண்ணு ரெண்டாத்தான் அரைக்கனும். அவ வந்து சொல்றதுக்கு முன்னாடி மிக்சி சவுண்ட வெச்சே நான் கண்டுபிடிச்சிட்டேன்”என்றார்.
இருவரும் சிரித்தோம்.
மூன்று தோசை மனைவிக்கு. எனக்கும் மகளுக்கும் சேர்த்து நாலு தோசை.
அந்த நான்காவது தோசை அதாவது மொத்தத்தில் ஏழாவது தோசை சரியாக வரவில்லை.
அதாவது வட்டமாக மாவை ஊற்றினேன்.
ஊற்றி கரண்டியை உள்ளே விட்டுப் புரட்டிப் போட நினைத்தால் உள்ளே விடும் போது இடம் கொடுக்காமல் தோசையின் கரை சுருங்க ஆரம்பித்தது.
மேலும் மேலும் கரண்டி போக போக தோசை சுருங்கிக் கொண்டே போனது.
குறிப்பிட்ட கட்டத்தில் தோசை சுருங்கி சுருங்கி காணாமல் போய்விடுமோ என்னும் அளவுக்கு சுருங்கியது.
தோசையின் நடுவே இருக்கும் ஏதோ ஒரு அதிகமான ஈர்ப்பு சக்தி தோசையின் கரைகளை இழுத்து, சுருங்க வைத்து, தோசையையே மறைத்து விடுமோ என்று நினைத்தேன்.
இது ஒரு கருந்துளை (Black hole) தோசை என்று நினைத்தேன்.
குளிக்க பாத்ரூம் சென்ற போது அந்த Black hole தோசை சுடும் போது கரண்டியை வைத்தது மாதிரி கையால் செய்து பார்த்தேன்.
சிரிப்பாய் வந்தது. சிரித்துக் கொண்டேன்.
சீக்கிரம் பிளாக் ஹோல் பற்றி கசடற கற்றுத் தெளிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
வெந்நீர் உடலில் பரவ மனம் திருப்தியாக இருந்தது
Super❤
ReplyDelete