Monday, 30 March 2015

உண்மையான கேள்விகள்...

நேற்று மனைவி ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் உள்ள பத்தியொன்றை படித்துப் பாருங்கள் என்று படிக்கக் கொடுத்தார்.
கிளன் மெல்டன் என்பவர் எழுதிய அந்த பத்தியின் சாரம் வருமாறு: கிளன் மெல்டன் எழுதுகிறார். (அப்படியே அல்ல எஸன்ஸை எழுதியிருக்கிறேன்)
ஒருகாலத்தில் மூன்று சிறு குழந்தைகளின் தாயாயிருக்கும் போது கிரேய்க் (என் கணவர்) காலை ஆறு மணிக்கு ஆபீஸ் கிளம்பிவிடுவார்.மாலை ஆறுமணிக்கு வருவார்.வந்தவுடன் என்னைப் பார்த்து “அப்புறம் இன்னைக்கு எப்படியிருந்தது” என்று கேட்பார்.
அந்த கேள்வியின் எளிமை என்னைத்தாக்கும்.”நல்லாத்தான் போச்சு” என்று அவருக்கு சொல்லிக்கொண்டிருக்கும் போதே
இடுப்பில் இருக்கும் குழந்தை மூத்திரம் பெய்யும், ஃபிர்ட்ஜில் வர்ணத்தை தேய்த்து விளையாடும் இன்னொரு குழந்தை, இன்னொன்று டிஷ் வாஷர் லிக்விட்டை குடிக்க கையில் எடுக்கும்.
மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு மூன்று நிமிடங்களில் எனக்கு எதிர் எதிர் உணர்வுகள் வரும். ஒருநிமிடம் அற்புதமாக உணர்வேன். இன்னொரு நிமிடம் அற்பமாக உணர்வேன்.ஒரு நிமிடம் உலகிலே சுகமாக உணர்வேன். இன்னொரு நிமிடம் கடும் எரிச்சலாக உணர்வேன்.
உடனே என் பிரச்சனையை சரி செய்ய வந்து விட வேண்டாம்.இது பிரச்சனையில்லை.என் வாழ்க்கை என் குழந்தைகள் நான் அனுபவித்தே செய்கிறேன்.இருப்பினும் செயலாக செய்யும் போது நிஜ வாழ்க்கையில் தோன்றும் சோர்வை பகிர்ந்து கொள்ள கிரேய்க்கின் “இன்னைக்கு எப்படி போச்சு” என்ற பொத்தாம் பொதுவான கேள்வி உதவாது.
காதல் என்பது காதலிப்பவர்களின் பிரச்சனைகளை பார்த்தே புரிந்து கொள்வது.அப்படிப் பார்க்கும் போதே கேள்விகள் குறிப்பிட்டபடியாக வரவேண்டும். பொத்தாம் பொதுவான கேள்விகள் அன்புக்கு உதவாது.
அன்பானவர்களிடம் பொதுவான கேள்விகளைக் கேட்டு நல விசாரிப்புகளையே மரத்து போக வைத்திருக்கிறோம்.
எப்போதும் பொதுவாக கேள்வி கேட்காதீர்கள்.
- நீ இன்று எப்போதாவது தனிமையாய் உணர்ந்தாயா?
- ஆங்கிலப் பரீட்சை எப்படி எழுதினாய்?
-போன மாதம் சுற்றுலா போனாயே அங்கே கோல்கோண்டோ கோட்டை பார்த்தாயா?
- ஏன் சோர்வாயிருக்கிறாய் ஜூரம் இருப்பது போலிருக்கிறதே.
என்று கேள்விகளை குறிப்பாக கேட்டுப்பழகுங்கள்.
கேள்விகள் அன்பானவர்களுக்கு நாம் கொடுக்கும் பரிசு.நம் அன்பை அவர்களுக்கு தெரியவைக்கும் சாதனம்.அதை அழகாக கேட்க நீங்கள் எவ்வளவு அக்கறையும் அன்பும் காட்டுகிறீர்களோ,
அதே அழகாக பதில்களும் கிடைக்கும்.
அன்பு என்பது தொடர்ச்சியான அக்கறையான வார்த்தை பரிமாறல்.அதை அழகாக்குங்கள்.
பின்குறிப்பு:இந்தப் பதிவை நான் திருந்த வேண்டும் என்று என் மனைவி படிக்க கொடுத்திருக்கலாம்.ஆனால் இதைப் படித்த உடன் சொன்னேன் “சூப்பர் நல்ல பதிவா எழுதிர்றேன்” என்றேன்.

துயில் எழுப்புதல்...

காலை துயிலில் இருந்து மகளை எழுப்பும் முறையில் எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வரும்.
என் மனைவி சாதரணமாக எழுப்பி அவளை பல்விளக்க அனுப்பி வைப்பார்.
நான் அப்படி செய்ய மாட்டேன்.அவள் பக்கத்தில் போய் ”எழும்பும்மா செல்லம்” என்று மெல்லமாய் கெஞ்சுவேன்.கால் அமுக்கி விடுவேன்.அப்புறம் அவளை அப்படியே தூக்கிப் போய் ஹாலில் சோபாவில் படுக்க வைப்பேன்.
மறுபடியும் ஒடிப்போய் தலைக்கும்,கைகளுக்கும் தலையணை எடுத்து சோபாவில் வைப்பேன்.பின் போர்வையை எடுத்து போர்த்திவிடுவேன்.ஐந்து நிமிடம் போன பிறகு மறுபடியும் அவளிடம் கொஞ்சுவேன்.
அப்போது கண் திறந்து பார்ப்பாள்.டிவியை ஆன் செய்து அவள் சொல்லும் சேனலை வைப்பேன்.இவ்வளவு நடந்து முடிந்த பின்தான், பல்விளக்க அனுப்பி வைப்பேன்.
இப்படி செய்வது அவளை சோம்பேறியாக்கும் என்பார் என் மனைவி. நான் சொல்வேன்
“ஏபிள டக்குன்னு எந்திரிக்க முடியுமா? எந்திரிச்ச உடன அஞ்சு நிமிசம் படுக்க மாட்டோமான்னு ஒரு தவிப்பு வரும். தண்ணி குடிக்கிற தவிப்புக்கு சமம் அது.சின்னப் பிள்ள மெல்லமா எழும்பட்டும” என்பேன்.
இது பொதுவாக ஒரு இந்திய தந்தை காட்டும் பாசம்தான். ஆனால் அடுத்து நான் சொல்லவருவது ஒருவேளை இந்த பத்தியை சுவாரஸ்யமாக்கக் கூடும்.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, எங்கள் கடைக்கு என்னை விட ஒன்றிரண்டு பெரிய வயதுப் பையன் வந்தான்.”என்னது அப்போ குழந்தை தொழிலாளர் முறையை செய்தீர்களா?” என்று பத்தியை திசை திருப்பாதீர்கள்.
ஒருகாலத்தில் சாத்தான்குளம் வட்டத்தில் நாடார் இனம் என்று சொல்லிக் கொள்ளும் மக்களிடையே இந்த டிரண்ட் இருந்தது (இது ஜாதி பேசுறதில்லைதானே).
அதாவது ஆம்பிளைப் பையன் படிச்சா நல்லா படிக்க வைக்கிறது.அப்படி படிக்காம ஊர் சுத்திக்கிட்டு, சுத்தமா வீட்டுக்கு அடங்காம,ஸ்கூலுக்கே போகாம இருந்தா அவனைக்கொண்டு எதாவது மளிகைக்கடையில் சேர்த்து விடுவார்கள்.
அவன் அந்த பலசரக்குக் கடையில் ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்தால் தனியே கடை வைப்பான்.பலர் அப்படி வைத்து பெரிய முதலாளிகளாகவும் ஆகியிருக்கிறார்கள்.இது ஒரு டிரண்ட்.
ஊரில் இப்படி ஒரு டிரண்ட் இருக்கும் போது சில பயல்கள் முதலிலேயே படிக்க மாட்டேன் என்று தீர்மானித்து விடுவான்கள்.அவன்களை ஒன்றும் செய்ய முடியாது.
இப்படியாக ஒரு பையன் எங்கள் கடைக்கு வந்தான்.தினமும் காலையில் அவனை எழுப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு.
யார் எனக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்தார்கள்? நானே எடுத்துக் கொண்டேன்.
”நான் முதலாளி” என்ற செருக்கு அந்த சிறுவயதில் எனக்கிருந்தது.காலை ஆறரை மணிக்கெல்லாம் அவனை எழுப்புவேன்.
எப்படி எழுப்புவேன் தெரியுமா? நன்றாக பாயில் தூங்கிக்கொண்டிருப்பவனை அப்படியே சரக்கென்று கையைப் பிடித்து தூக்கி விட்டுவிடுவேன்.
எவ்வளவு கொடுமையான காரியத்தை செய்திருக்கிறேன் பாருங்கள்.
நன்றாக ஆழ்ந்து உறங்கும் ஒருவனுக்கு அதைவிட அதிர்ச்சியான விசயத்தை செய்ய முடியுமா? அப்படி எழுந்ததும் அவன் அப்பாவியாய் முழிப்பான்.அதைப் பார்த்து ஒரு மகிழ்ச்சி எனக்கு.
தட்டான்பூச்சியை குண்டூசியை வைத்து நறுக்கென்று குத்தி தூக்கி பறக்க விட்டால், எவ்வளவு உச்சம் பறக்க முடியுமோ அவ்வளவு உச்சம் பறந்து கிழே விழுந்து சாகும். அதைப் பார்க்கும் போது வரும் மகிழ்ச்சிக்கு இணையானது, அந்த பையன் திரு திரு என்று முழிக்கும் காட்சி.
அந்தப் பையனால் என்னை திட்டவும் முடியாது. ஏனென்றால் நான் முதலாளிப் பையன்.எரிச்சலுடன் என்னைப் பார்ப்பான்.
நான் வாய்விட்டு ”ஹி ஹி” என்று சிரிப்பேன்.
என் மகளை வாஞ்சையாக சோபாவில் கிடத்தி போர்வையை போர்த்தி விடும் போது அந்தப் பையன் ஞாபகம் வரும்.”ச்சே எவ்வளவு கேவலமா இருந்திருக்கிறேன்” என்ற எண்ணம் வரும்.ஒரு விநாடி மனம் சோர்வாகும்.
அந்தப் பையனையும் அவன் அம்மா அப்பா சீராட்டி வளர்த்திருப்பார்கள்.
அந்தப் பையனுக்கும் உடம்பு சரியில்லாவிட்டால் பதறிப்போய் டாக்டரிடம் கூட்டிப் போயிருப்பார்கள்.
அந்தப் பையனையும் வாஞ்சையாக அணைத்துக் கொஞ்சியிருப்பார்கள்.
அந்தப் பையனுக்கும் பால்சோறு வாயில் வழியும் போது அவன் அம்மா அதை துடைத்து விட்டிருப்பார்கள்.
இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு என் மகளைப் பார்த்தால், அவள் நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருப்பாள்.
“ஏன் விஜய்! இவள அந்தப் பையன எழுப்புறது மாதிரி சட்டுன்னு தூக்கிவிட்டு எழுப்பேன்” என்றொரு மனசாட்சி குரல் கேட்கும்.
கறிக்கடையில் கோழியின் தலையை அறுத்து பெட்டியில் போட்டால் டப டப டப வென்று அடித்துக் கொள்ளுமே,
அது மாதிரி உள்ளம் சொல்ல முடியாத உணர்வால் அடித்துக் கொள்ளும்.

சிரிப்பு வரும்

சிலவற்றை நினைத்தால் தன்னால் சிரிப்பு வரும் எனக்கு...
1.நெருக்கடியான பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கம்பியை பிடித்திருப்பார்கள்.
அந்தக் கம்பியை எல்லாம் மந்திர அழிப்பான்கள் கொண்டு அழித்து விட வேண்டும்.அப்படி அழித்தால் நெருக்கடி பஸ்சில் ஒவ்வொரு மனிதனும் கொடுக்கும் போஸை நினைத்தால் சிரிப்பு வரும்.
2.சிறுவயதில் என்னோடு படித்த ஜெரால்டு என்னும் நண்பன்” இந்திராகாந்தி வெள்ளை யானைக்கு தீனி போடுவதை போன்று மன்னர்களுக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த மானியத்தை நிறுத்தினார்” என்று எழுதுவதற்கு பதிலாக,
சரியாகப் படிக்காமல் “இந்திராகாந்தி வெள்ளை யானைக்கு பாசமாக புல் கொடுத்தார்” என்பது மாதிரி எழுதியிருந்தான்.
அதை எப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.
3.இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் குழந்தைகளாயிருப்பார்கள் என்று வி.ஐ.பிகளைப் பற்றி நினைக்கும் போது சிரிப்பு வரும்.
அப்துல் கலாம் டிரவுசரோடு சுற்றியிருப்பார்,
ஐஸ்வர்யா ராய் மிட்டாய்க்காக அழுதிருப்பார்,
வால்டர் தேவாரம் “எம்மே எனக்கு ஊசிவேண்டாம்” என்று அவர் அம்மாவை நோக்கி ஒடிவந்திருப்பார் இப்படியெல்லாம் நயமாக ஒவ்வொரு வி.ஐ.பி பற்றியும் அவர்கள் குழந்தைகளாக கற்பனை செய்ய வேண்டும்.
அப்படி செய்யும் போது எனக்குச் சிரிப்பு வரும்.
4.கல்யாண விட்டில், எதாவது நல்லது கெட்டது நடக்கும் வீட்டில் சுறுசுறுப்பாக அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டு,மற்றவர்களிடம் நன்றாகப் பேசிக்கொண்டு நல்ல பண்பாளராக ஸீன் போடும் ஆட்களைப் பார்த்தால் சிரிப்பு வரும்.
5.நாளைக்கு சயின்ஸுக்கு ஒரு நோட்டு வாங்கிட்டு வாங்கடே என்று வாத்தியார் சொல்வார்.
வகுப்பில் ஸ்மார்டான பெயர் எடுக்க நினைக்கும் பையன் “சார் ரூல்ட் நோட்டா, அன்ரூல்ட் நோட்டா? என்று சும்மானாச்சும் கேட்பான்.
”குறிப்பெடுக்கனும்டே அவ்வளவுதான் எதாவது ஒரு நோட்ட வாங்கிட்டு வா.ஏன் இப்படி மொக்க கேள்விக் கேட்டு கழுத்தறுக்கிற” என்று வாத்தியார் கேட்பது மாதிரி ஒரு சம்பவத்தை கற்பனை செய்து பார்த்து சிரிப்பேன்.
6.ஒருமுறை நாகர்கோவில் சைமன் நகர் அருகே இருக்கும் போது, சைக்கிளில் வரும் போது யாருமில்லாத சாலையில் செல்லும் போது கறுப்பு நாயொன்று என்னைத் துரத்தியது.
நான் எப்பே என்று சைக்கிளை பதறி பக்கத்தில் இருந்த கொல்லாம்(முந்திரி) விளையில் விட்டு, நேரேப் போய் ஒரு மரத்தில் முட்டி கிழே விழுந்தேன்.
நான் விழுந்தது பார்த்து பயந்த நாய் ஒடிப்போயிற்று.
”நாயீ நாயீ நாய்ச்சனியன்” என்று என்னவெல்லாமோ வசனம் பேசி கொஞ்சம் அழுவது மாதிரி முகத்தை வைத்து சிணுங்கினேன்.
யாரும் பார்க்கவில்லை என்று நினைக்கும் போது பக்கத்தில் ஒரு வீட்டு மாடியில் இருந்து இரண்டு மூன்று பெண்களும் ஆண்களும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
அந்தக் காமெடியை நினைத்தால் சிரிப்பு வரும்.
7.நன்றாக பேசிக்கொண்டிருக்கும் ஒருவரை திடீரென்று அடிக்க வேண்டும்.அவர் ஏன் அடிக்கிறாய் என்று கேட்பார் ? அப்போதும் அடிக்க வேண்டும்.
அவர் கோபத்தோடு ஏன் அடிக்கிறாய் என்று கேட்பார்.அப்போதும் அடிக்க வேண்டும்.அடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.குறிப்பிட்ட சமயத்தில் வலிதாங்காமல் கேள்விக்கு விடையே வேண்டாம் என்று அவர் ஒடும் அளவுக்கு மட அடி அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். முடிவில் அவர் விட்டு விட்டு ஒடுவார் பாருங்கள்
ஏனென்று தெரியாது இப்படி கற்பனை செய்து பார்த்தால் எனக்கு சிரிப்பு அதிகமாய் வரும்.

வாதத்தைத் திரிக்கும் ஒற்றைச் சொல்...

சபையில் பேசும் போது சில சொற்களால் அல்லது ஒற்றை வாக்கியத்தால் நாம் சொல்ல வந்த கருத்தே திரிக்கப்பட்டுவிடும்.அது மாதிரி நான் அடைந்த அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்.
பெண் படைப்பாளிகள் நான்கு பேர்களின் புத்தகங்கள் பற்றிய கருத்துப் பரிமாற்றக் கூட்டம் கிட்டத்தட்ட ஆறுமாதங்களுக்கு ? முன்பு பனுவலில் நடந்தது.
அதற்காக தமயந்தி,குட்டி ரேவதி,கவின்மலர்,மற்று அ.வெண்ணிலாவின் சிறுகதைத் தொகுப்புகளைப் படித்து போயிருந்தேன்.நான் மெயின் பேச்சாளர் எல்லாம் இல்லை. இருந்த இடத்தில்தான் மைக்கைப் பிடித்துப் பேசினேன்.
ஒவ்வொரு எழுத்தாளர் எழுதிய கதைகளிலும் எனக்குப் பிடித்த இரண்டு இரண்டு கதைகளைப் பற்றிய குறிப்புகளை எடுத்து வைத்திருந்தேன்.அதையெல்லாம் புகழ்ந்து பேசினேன்.
ஆனால் அந்த சபையில் தொடக்கத்தில் இருந்தே அனைவரும் புகழ்ந்தே பேசி வந்தனர்.சில புகழ்ச்சிகள் சலிப்பூட்டும் அளவுக்கு கூட இருந்தன.சரி அவர்களுக்கு பிடித்திருக்கிறது அவர்கள் புகழ்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.ஒரே ஒரு விமர்சனம் வந்தது. குட்டி ரேவதில் எழுதிய சில கதைகள் கொஞ்சம் செக்ஸாக இருக்கிறது என்ற விமர்சனம்.அதையெல்லாம் எழுத வேண்டுமா? என்றொருவர் கேட்டார்.
எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அவர் எழுதிய கதைகளில் எனக்கு பிடித்தமானதாக நான் அதைத்தான் எடுத்து வைத்திருந்தேன்.
நான் புகழ்ந்து பேசினேனா? அதன் பிறகு ஒவ்வொரு எழுத்தாளர்களின் எழுத்தில் இருக்கும் குறைகளைப் பேசினேன்.கவின் மலர் எடுத்துக் கொண்ட கருக்கள் நன்றாயிருந்தாலும் இன்னும் நன்றாக கிராப்ட் செய்திருந்தால் இதைவிட அழகாக இருக்கும் என்று சொன்னேன்.
அந்த வரிசையில் அ.வெண்ணிலா பற்றி சொல்லும் போது
“இந்த சிறுகதைத் தொகுப்பில் வெண்ணிலா ஒரே மையத்தை வைத்து கிட்டத்தட்ட ஏழுகதைகள் எழுதியிருக்கிறார்.அதாவது ஏழு கதைகளிலும் ஒரு பெண் குழந்தை அசால்ட் செய்யப்படுவாள்.ஆட்கள் வெவ்வேறு.தெருப் பையன், ஸ்கூல் வாத்தியார்,
அப்பா, மாமா இப்படி போகும் அந்த லிஸ்ட்.
இவையெல்லாம் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பத்திரிக்கைகளுக்கு அ.வெண்ணிலா எழுதிக்கொடுத்தவை.
அதைப் படிக்கும் போது.இவை அனைத்தும் ஒற்றைத் தன்மையோடு இருக்கிறதோ என்ற எண்ணம் வருகிறது. நாலு கதை அப்படியிருந்தால், ஒரு கதையில் அந்த தவறு ஆணின் பார்வையும் உளவியலும் ( ஆணை ஞாயப்படுத்த அல்ல) இருந்தால், அந்த பன்மைத்தன்மை இதைவிட சிந்தனையை கிளறுவதாக இருக்குமே” என்று சொன்னேன்.
(மிக மிக டைலர் மேய்டு தன்மையோடு எழுதப்பட்ட கதைகள் அவை)
இப்படி சொல்லும் போது “ஆண்கள் எல்லோரும் பிறக்கும் போதே காமத்தை சுமந்து இப்படித்தான் செய்ய வேண்டும் என்று வருவதில்லையே”என்று கொஞ்சம் குரலை சிரிப்பாக வைத்து சொல்லிவிட்டேன்.
அந்த வாக்கியம் நான் தவறுதலாக சொன்ன வாக்கியம்தான்.அது நிச்சயமாக பெண்களின் மனதை புண்படுத்தியிருக்கும்.சபையோரின் மனதை புண்படுத்தி இருக்கும்.
அடுத்து கொஞ்சம் நேரம் பிறகு மைக்கைப் பிடித்த குட்டி ரேவதி “ ஃபேஸ்புக்கில் அது இது என்று பேசுபவர்கள். இது மாதிரி நிகழ்வில் பத்தாம் பசலித்தனமாக பேசுகிறார்கள்” என்றொரு போடு போட்டார்.
அதை என்னைத்தான் என்று நினைத்துக் கொண்டேன்.கொஞ்ச நேரம் ஒரு மாதிரி இருந்தது. வீட்டுக்கு வந்ததும் அது பற்றி விளக்கம் சொல்லி ஒரு பதிவிட்டேன்.
அதன்பிறகு ஒருநாள் “தப்பா பேசிட்டோமா” என்று உறுத்தலாய் இருந்தது.
சட்டென்று தோன்றியது “ தப்பா பேசியிருந்தாதான் என்ன? நம்ம மனசில தப்பில்லையே.வெண்ணிலாவின் எழுத்தை சரியாகத்தான் விமர்சனம் செய்தோம்.ஒரே ஒரு வாக்கியம் பிசகிவிட்டது.அதுக்கென்ன அடுத்த முறை கவனமாக இருப்போம்” என்று தன்னம்பிக்கையை ஏற்றிக்கொண்டேன்.
அனைத்து மனக்கிலேசங்களில் இருந்தும் விடுதலை அடைந்தேன்

அஜித் ரசிகை...

”என்னை அறிந்தால்” படம் பார்க்கும் போது ஒரு தீவிர அஜித் ரசிகையைப் பார்த்து ஆடிப்போய்விட்டேன்.
காலேஜ் முதலாம் ஆண்டு படிக்கும் பெண் (கேட்டுத் தெரிந்து கொண்டேன்) அவர் அம்மாவோடு வந்திருந்தார்.
குண்டா இருந்தாலும் அது பத்தி கவலப்படாம தன்னம்பிக்கையா இருக்கிறவங்களப் பார்க்க நல்ல ஃபீலிங் வருமே அதுமாதிரி இருந்தார்.
படம் ஆரம்பிக்கும் முன்னரே ஒரு க்ரீம் டூனட்டை பெரிய கடியாய் கடிக்க ஆரம்பித்தார்.அதில் ஒட்டியிருக்கும் சீனியை கையால் தட்டிவிட்டார்.அந்த சீனித்துகள்கள் அவர் மடியில் இருக்கும் சுரிதார் படுதாவில் படுகிறது.உடனே அதை தட்டி விடுகிறார்.இப்படி ஒவ்வொரு கடிக்கும் செய்து கொண்டே இருந்தார்.
படம் ஆரம்பித்தது.அஜித் வந்ததும் இரண்டு கைகளையும் கிரிக்கட் கேட்ச் பிடிப்பது மாதிரி உதட்டருகே வைத்துக் கொண்டு ஊ ஊ ஊ என்று ஊளையிட்டார்.எனக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். அந்த அதிர்ச்சி எனக்கே பிடிக்கவில்லை.ஏன் ஊளபோடக்கூடாதா என்ன? என்று தோன்றியது.
அடுத்து எப்போதெல்லாம் அஜித் ஹிரோயிஸம் செய்கிறாரோ அப்போதெல்லாம் ஊளை. ஒரு மணி நேரம் போன பிறகுதான் அமைதியானார்.
கிழக்கு வாசல் திரைப்படத்தில் ரேவதி கலகலவென சிரிக்கும் போது ஜனகராஜ் தோளில் துண்டோடு, “சிரி தாயீ நீ நல்லா சிரி தாயீ” என்று கண்கலங்க சொல்வாரே,
அது மாதிரி அந்தப் பெண்ணைப் பார்த்து ஒரு அண்ணன் ஃப்லீங்கில் “ ஊள போடு தாயீ... நீ நல்லா ஊள போடு.” என்று மனதுக்குள் டயலாக் பரவியது.
லேடீஸ் எது செய்தாலும் பிடிக்கிறது எனக்கு

ரஜினி ரசிகன்...

ரஜினிகாந்த் இரண்டு வருடங்கள் முன் மோசமான உடல்நிலையை அடைந்து சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று திரும்பினார் என்பது நாம் அனைவரும் அறிந்து செய்தி.
அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டு பூரண குணம் ஆகும்வரை, தன் முடியையும் தாடியையும் எடுக்காத ஆட்டோ டிரைவர் ரசிகர் ஒருவரின் ஆட்டோவில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
அவர் ரஜினிகாந்த் மீது பக்தியாக பேசிக்கொண்டிருக்கும் போது ஒன்றும் சொல்லத்தோன்றவில்லை.ஏனென்றால் இதயசுத்தியாக ரஜினியை அவர் விரும்புகிறார்.
உலகில் இன்னாரை விரும்பு இன்னாரை விரும்பாதே என்றெல்லாம் இன்னொரு மனிதனுக்கு சொல்ல நாம் யார்.
டெரி ஜோன்ஸ் ஃபேரி டெய்ல்ஸில் ஒரு கதை வரும்.
மூன்று மழைத்துளி மேகத்தில் இருந்து புறப்பட்டு தரையை நோக்கி வந்து கொண்டிருக்கும். மூன்று துளிகளுக்கும் யார் பெரியவன் என்ற போட்டி நடக்கும். போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே தரையில் இருக்கும் குட்டையில் விழுந்து கலந்து விடும்.
மனித வாழ்க்கையும் அப்படித்தான்.
இறப்பு என்னும் குட்டையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம்.நடுவுல நாப்பது வருசம் கொஞ்சம் உருப்படியா உயிரோடு இருக்கோம்.
இதில் என்ன நீ ம்னைவியைத்தான் நேசிக்க வேண்டும், குழந்தையைத்தான் நேசிக்க வேண்டும் என்ற வியாக்கியானம் எல்லாம்.
ஆட்டோ டிரைவர் ரஜினிகாந்தை நேசித்தால் நேசம் செய்யட்டுமே.தலைவனுக்காக முடியையும் தாடியையும் எடுக்காமல் இருந்தால் இருக்கட்டுமே.
இதில் கிண்டல் செய்ய என்ன இருக்கிறது.இப்படியெல்லாம் என் மனதில் ஒடிக்கொண்டிருந்ததற்கு காரணம் அந்த ஆட்டோடிரைவரின் ரஜினிகாந்த் அன்பில் இருந்த நேர்மை (அது எப்படி உங்களுக்கு எப்படித்தெரியும் என்று கேட்டால்.அதெல்லாம் தெரியும் பாஸ் )
“தல ரஜினியைப் பாத்தீங்களா?”
“ஆமா சிங்கப்பூர் போயிட்டு வந்து ரெஸ்ட்ல இருக்கும் போதே என்ன கூப்பிட்டனுப்பி பாத்தார்”
“அப்படியா என்ன சொன்னார் உங்க சூப்பர் ஸடார்”
“ஏன் என்ன உனக்கு பிடிச்சிருக்கு.எந்தப் படத்துல இருந்துன்னு கேட்டார்”
“நா அவர் படம் எல்லாத்தையும் வருசம் மாசம் மொதக்கொண்டு வரிசையாச் சொன்னார்.ரொம்ப நெகிழ்ச்சியாக் கேட்டார்”
“ம்ம்ம்”
“நல்லாப் பேசினார். எனக்கு பாபா படம் போட்ட டாலர் ஒண்ணு கொடுத்து,’என் மேல இருக்கிற அன்பு உண்மையின்னா இத பத்திரமா வெச்சுக்கனும்.இது உன் வாழ்க்கைக்கு தேவைன்னார்.இன்னும் விரிவா பிறகு பேசுவோம்ன்னார்”
“உங்களுக்கு எப்படி இருந்திச்சி”
“தலைவர் பக்கத்துல இருந்து பேசுறத பாத்துகிட்டே இருந்தேன்.அவர் பேசுறதே போதும். இன்னொருதடவை அவர் கூப்பிடும் போதுதான் போவேன்” என்றார்.
“தல இவ்வளவு ரசிகரா இருந்தா உங்க வைஃப் கோச்சுக்கமாட்டாங்களா?”
“இல்ல இந்த விசயத்துல நான் பிடிவாதம்ன்னு அவளுக்கு தெரியும்.மத்தபடி ஒழுங்க குடும்பம் நடத்துவேன்” சிரித்தார்.
“ஹலோ இல்ல நீங்க குடும்பம் ஒழுங்க நடத்துறீங்களா இல்லையான்னு நான் செக் பண்ணல” என்று நானும் சிரித்தேன்.
”நான் தலைவர குடும்பத்தோடத்தான் போய் பார்த்தேன்.குடும்பத்துக்கும் சந்தோசம்” என்றார்.
அவர் தாடியுடன் பரட்டைத்தலையுடன் ரஜினிகாந்தோடு எடுத்த போட்டோவை காட்டினார்.
மறுபடியும் சொல்கிறேன்.
ஏனோ அன்று அந்த ஆட்டோ டிரைவரை மனதால் கூட கிண்டல் செய்ய தோன்றவில்லை.

Too much smartness...

ஒரு கடையில் நின்று கொண்டே குழந்தைகளுக்கான கதையொன்றைப் படித்தேன்.படித்து முடிக்கும் போது க்ளுக் என்று சிரித்துவிட்டேன்.
Too much smartness என்கிற கருத்தைப் பற்றிய கதை அது. ஒருவேளை உங்களுக்கு க்ளுக் வரவில்லையென்றால் அதற்கு நான் பொறுப்பில்லை. smile emoticon
ஒரு ஊரில் சாமியார் எப்போதும் மரத்தடியில் தவம் செய்து கொண்டே இருப்பார்.ஊர் மக்கள் அவரை நல்ல சாமியார் என்று சொல்லி ஏமாந்து கொண்டிருந்தார்கள்.
ஊரின் பண்ணையார் சாமியாரிடம் வந்து “ ஐயா! இந்த ஊரில் திருடர்கள் பயம் இருக்கிறது.அதனால் இந்தத் தங்கத்தை உங்களருகே பூமிக்குள் புதைத்து வைக்கிறேன்.நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.சாமியார்
“ஒ எஸ்” என்று தலையாட்டி வைத்தார் சாமியார்.
அடுத்த இரண்டு நாட்களில் தங்கத்தை அபேஸ் செய்து தன் துணிமுட்டைக்குள் வைத்துக் கொண்டு கிளம்பினார்.
கிளம்பும் போது பன்ணையாரிடம் சொல்லாமல் விட்டு போகலாம்.அப்படியே சொல்லாமல் போனால் நம்மை சந்தேகப்படுவார் என்று , துறவிகள் அதிக நேரம் ஒரே இடத்தில் தங்கக்கூடாது என்று சொல்லி விடைபெறுவார்.
சாமியார் மேலுள்ள நம்பிக்கையில் அந்த புதைத்த தங்கக்காசுகள் பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறார் பண்ணையார்.
சாமியார் இரண்டு மைல்தூரம்தான் நடந்திருப்பார்.அவருக்கு யோசனையாக இருந்தது.
”ஒரு வேளை பண்ணையார் பிற்காலத்தில் தங்கம் இல்லாத போது,நம்மை சந்தேகப்பட்டுவிட்டால் என்ன் செய்ய? சாமியார் என்றால் நல்லவன் என்று அவரை நம்ப வைக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்.
தீவிரமாக ஐடியா பண்ணுகிறார்.
ஐடியாவின் படி சாலையோரம் இருக்கும் குடிசையின் கூரையில் இருந்து ஒரு காய்ந்த(கூரை வேயப்பட்டிருக்கும் புல்) புல்லை எடுத்து தலையில் சொருகிக் கொள்வார்.நடக்கிறார்.
விடைபெற்ற கொஞ்ச நேரத்திலேயே சாமியார் திரும்ப வருவதைப் பார்த்த பண்ணையார் ப்தட்டமாக வருகிறார்.
“ஐயா சாமி என்னய்யா திரும்ப வந்துட்டீங்க”
“இல்லையப்பா நான் ஒரு சாமியார்.எனக்கு பொருள் ஆசை இருக்கவே கூடாது”
“நல்லதய்யா” இது பண்ணையார்.
“நான் உன்னிடம் விடைபெறும் போது கூரையில் இருக்கும் காய்ந்த புல் ஒன்று என் தலையில் சொருகிக்கொண்டது.அதையறியாமல் போய்விட்டேன்.இப்போதுதான் இதைப் பார்க்கிறேன்.அந்தப் புல்லை உன்னிடம் ஒப்படைக்கவே வந்தேன்” (ரொம்ப நல்லவராம்)
“போயும் போயும் புல்லைக் கொடுக்கவா வந்தீர்கள் சாமி”
“ஆம் மகனே எனக்கு பிறர் பொருள் மேல் ஆசை கிடையாது”
அதுவரை சாதரணமாக இருக்கும் பண்ணையாருக்கு “இந்த புல்லைத் திரும்பக் கொடுக்கும் சாமியார் புத்தி” ஒவர் ஸீனாகத் தெரிந்தது.
சாமியாரின் துணிமூட்டையை அவிழ்த்துப் பார்க்க அதில் சாமியார் திருடிய தங்கம் இருந்தது.சாமியார் மாட்டிக்கொண்டார். Too much smartness யினால் மாட்டிக்கொள்வது இதுதான்.
இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு “வறுமையின் நிறம் சிகப்பு” படத்தில் கமல்,திலீப்,எஸ்.வி.சேகர் மூவரும், ஸ்ரீதேவி ரூமுக்கு வெளியே காத்திருக்க,
உள்ளெ “போலிச்சாப்பாடு” சாப்பாடு உண்ணும் நாடகம் ஞாபகத்துக்கு வந்தது.
அதில் எல்லாம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருக்கும்
எஸ்.வி.சேகர் இன்னும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று ஸ்பெசலாக சத்தமாக விக்கல் (ஏப்பமா விக்கலா ?) விடுவது போல நடிப்பார்.
அந்த விநோதமான குரலைக் கேட்டுதான் ஸ்ரீதேவிக்கு சந்தேகமே வரும்.
சாமியார் புல்லைத் திரும்ப ஒப்படைக்கும் கதை க்ளுக் கதையாகிவிட்டது

மேயர் ஆஃப் கேஸ்டர்பிரிட்ஜ்...

”பூவே பூச்சூடவா” திரைப்படத்தில் ”பாட்டி பத்மினி” நதியாவை மேலோட்டமாக வெறுப்பார். பின் பேத்தியுடன் பாசத்தில் திளைப்பார்.
அப்படித் திளைத்துக் கொண்டிருக்கும் போது பேத்தியை பிரிய நேரிடும்.பத்மினியுடன் சேர்ந்து அந்த வலியை பார்வையாளர்களும் அனுபவிப்பார்கள்.
அது மாதிரியான ஒரு உணர்வை “மேயர் ஆஃப் கேஸ்டர்பிரிட்ஜ்” நாவல் படிக்கும்போது ஒரிடத்தில் நான் அடைந்தேன்.
கதைப்படி,
மேயர் தன் இளம்வயதில் குடிவெறியில் மனைவியையும் கைகுழந்தையும் வேறொரு மாலுமியிடம் ஏலத்தில் விற்றுவிடுவார்.தன் கணவன் இப்படி செய்கிறானே என்ற கோபத்தில் மனைவியும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அந்த மாலுமியுடன் போய்விடுவார்.போதை தெளிந்த பிறகு நடந்ததை நினைத்து வருந்தும் மேயர் (இளம் வயதில்) இனிமேல் குடிக்கமாட்டேன் என்று சபதம் செய்கிறார்.
பின் தன் உழைப்பால் மேயர் ஆகிறார்.அந்த காலகட்டத்தில் அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பும் அன்பும் ஏற்படுகிறது.அவரிடம் தன்னுடைய முந்தைய மனைவியின் கதையை மேயர் மறைத்துவிடுகிறார்.
இந்த சமயத்தில் மேயர் தொலைத்த அவருடைய மனைவியும் மகளும் இருபது வருடங்கள் கழித்து வருகிறார்கள்.மேயருக்கு தன் மகளைப் பார்த்து மகிழ்ச்சி.தன் மனைவியை ஊரறிய மறுமணம் செய்து கொள்கிறார்.தன் சொந்த ரத்தமாகிய மகள் எலிசபத்தின் மீது பாசமாக இருக்கிறார்.
இந்த சமயத்தில் மனைவி இறந்து விடுகிறார்.அவர் இறந்து போன பிறகு அவருடைய ஒட்டிய கடிதத்தில் இருந்து ஒரு தகவலை தெரிந்து கொள்கிறார்.
மேயருக்கும் அவர் மனைவிக்கும் பிறந்த குழந்தை இருபது வருடங்கள் முன்பே நோயால் இறந்துவிட்டது. இப்போதிருக்கும் எலிசபத் மேயரின் மனைவிக்கும் மாலுமிக்கும் பிறந்த குழந்தை என்பது அந்தத் தகவல்
எலிசபத் தன் குழந்தை இல்லை என்றதும், மேயர் அந்த அப்பாவி எலிசபத்தை வெறுக்க ஆரம்பிப்பார்.சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவமானப்படுத்துவார்.எலிசபத் அப்பாவின் எரிச்சலைக் கண்டு அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறிவிடுவாள்.
மேயர் அதன் பிறகு தன் பழைய காதலியை திருமணம் செய்ய ஆசைப்படுவார்.ஆனால் அதற்கும் பிரச்சனை வரும்.
மேயருக்கு உதவியாளாக பணியாற்றி பின்பு பிரிந்து சென்று தனியாக வியாபாரம் செய்து பணமும் புகழும் ஈட்டிய ஒருவன்,
மேயரின் முன்னாள் காதலியை இப்போது காதலிப்பான்.அவளும் மேயரைக் காதலிக்காமல் அவனையே காதலிப்பாள்.
மேலும் மேயருக்கு,
புகழ் ஊரில் குறைந்து வரும் கவலை.
பணம் ஊரில் குறைந்து வரும் கவலை
மனைவி ”மகள் விசயத்தில்” சொன்ன பொய் கொடுத்த அயர்ச்சியும் கவலை.
முன்னாள் காதலி அவரை மதிக்காத கவலை
தன் உதவியாளனே வியாபாரத்திலும் காதலிலும் போட்டி போட்டு தன்னை ஜெயித்த கவலை
இப்படியாக கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது “எந்த பாவமும்” அறியாத தன் முதல் மனைவியின் மகளை(எலிசபத்) அவமானப்படுத்தியது பற்றி வேதனையடைகிறார்.
”மகளே எலிசபத் என்னை மன்னித்துவிடு” என்று மனவிம்மலோடு மகளைச் சென்றடைகிறார்.
மகள் அவரிடம் எப்போதும் போல பாசமாயிருக்கிறார்.மகளை தங்கம் என்று பார்த்துக் கொள்கிறார்.அந்த் வீட்டை அவரே பராமரிக்கிறார்.
அவரே மகளுக்கு சமைத்துக் கொடுக்கிறார்.மகள் அவர் வாழ்க்கையாகிவிட்டாள்.
ஒருநாள் மேயர் (முன்னாள் மேயர்) வீட்டில் இருக்கும் போது கதவு தட்டப்படுகிறது.மேயர் கதவைத்திறந்து கேட்கிறார்.
“யார் வேணும்”
“நான் எலிசபத்தின் அப்பா.என் மகளைத் தேடிவந்திருக்கிறேன்.மாலுமியாக இருந்தேன்.அவள் இங்கிருக்கிறாளா? “
“இல்லை அப்படி யாரும் இங்கில்லை. ஒருவேளை அவள் இறந்திருக்கிலாம்” என்று சொல்லி வேகமாக கதவை அடைத்துவிடுகிறார்.
எலிசபத்தின் உண்மையான அப்பா தன் மகளைத் தேடி வந்திருக்கிறார் என்ற விசயம் மேயரின் மனதை தொட்ட அடுத்த விநாடி அவர் மனம் எப்படி கலங்கியிருக்கும்.
எப்படி கலங்கியிருக்கும்.எப்படி கலங்கியிருக்கும் என்று நினைத்துக் கொண்டே கோட்டூர்புரம் லைப்ரரியில் இருந்து மத்திய கைலாஷ் வரை நடந்து சென்றேன்.அந்த நடை எனக்கு டயர்டாகவே இல்லை.
மேயரின் மனம் எப்படி கலங்கியிருக்கும். எப்படி கலங்கி இருக்கும்.

துரை.குணா எழுதிய ”ஊரார் வரைந்த ஒவியம்” ...

துரை.குணா எழுதிய ”ஊரார் வரைந்த ஒவியம்” என்ற படைப்பை நாவல் என்று சொல்வதை விட முப்பத்தியாறு பக்க சிறுகதை எனலாம்.
இந்த நாவலுக்காகத்தான் துரை.குணா ஊராரால் ஊரில் இருந்து விரட்டப்பட்டார்.
ஜாதி இந்துக்களின் அடக்குமுறையை எதிர்க்கத் திணறும் முந்தைய தலைமுறையினரின் மனக்குழப்பம்தான் கதையின் மையம் என்று நான் புரிந்து வைத்திருக்கிறேன்.
தன் மகன் கோவில் திருநீறை கையில் எடுத்து நெற்றியில் தடவிக்கொண்டதன் அடிப்படையில் வரும் அடிதடியில், மறுநாள் விடியலில் நடக்கப் போகும் ஜாதி வெறி பஞ்சாயத்தை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்ற சங்கரனின் தவிப்பிலேயே கதை நகர்கிறது.
-இவர்களைச் சார்ந்திருக்கிறோமே? இவர்களை எப்படி எதிர்த்து நமக்கான உணவை இழப்பது.
-இவர்களின் அதிகார அடக்குமுறை முன்னால் நம்மால் நிற்கமுடியுமா?
என்றெல்லாம் சராசரி மனிதனுக்கு வரும் குழப்பம், இக்கதையில் வரும் சங்கரன் கதாப்பாத்திரத்துக்கு வருகிறது.
இன்னொருபக்கம் தன் காலத்துக்கு முந்தைய காலத்திலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஜாதி இந்துக்களை எதிர்த்த ஒற்றைக் கிழவனும் சங்கரன் மனதை குடையாமல் இல்லை.
தன் இனமான தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று கூட முயற்சி செய்து, அந்த ஒன்று கூடலுக்கு சங்கரனின் மகன் விவகாரத்தை கையில் எடுக்க முயற்சி செய்யும் போது,
அது தன் மகனின் எதிர்காலத்தை சிதைத்து விடுமோ என்று சங்கரன் பிடிகொடுக்காமல் பேசும் காட்சியும்,
அதற்கு சங்கரனின் ஜாதியைச் சேர்ந்தவர்கள் சலித்துக் கொள்வதும், விடலைகள் சங்கரனை கோபத்தில் கெட்ட வார்த்தை கொண்டு திட்டுவதுமாக கதையை நகர்த்தியிருப்பது,
தேவையில்லாமல் லட்சியவாதத்தை திணிக்க விரும்பாமல்,
இப்படித்தான் நடக்கிறது, இப்படித்தான் சிந்திக்கிறார்கள், இப்படி சிந்திக்கும் படியாகத்தான் நம் சமுக வெளி இருக்கிறது என்பதை துரை.குணா அதீதமில்லாமல் எழுதிச்செல்கிறார்.
யதார்த்த ஜாதி வெறி சூழ்நிலைக்கும் கொடுக்கப் போகும் பயங்கரத்துக்கும், சங்கரனின் தன்மானத்துக்கும் இடையே நடக்கும் மவுனமான விவாதத்தை வாசிக்கும் போது உணரமுடிகிறது.
துரை.குணாவில் தெறிக்கும் வட்டார வழக்கின் தெறிப்பு இயல்பானது.அவர் அதற்காக எதையும் மெனக்கெடவில்லை.அந்த இயல்பிலேயே இலக்கியமான பல சொற்றொடர்கள் வந்துவிடுகின்றன.
உதாரணமாக இது போன்ற
// நாலுப்புள்ளேய பெத்து.மூண மண்ணுலப் போட்டுட்டு அருவமுன்னு ஒண்ணு வெச்சிருக்கேன்.நின்னுக்குடிகெடுக்க இந்த ஊரான் எட்டுனாப் பட்டினிகிடப்பான்//
வட்டார வழக்கு வாக்கியங்களை உடனே கடந்து விட முடியவில்லை.
நின்று இன்னொருமுறை படித்து அதன் பின்னால் இருக்கும் நிகழ்வை யோசித்து,
அவ்வளவு பெரிய விசயத்தை பேச்சு வழக்கில் மிகச்சுருக்கமாக சுருக்கி தன்னையறியாமல் நேர்த்தியாக பேசும் அந்த பாங்கை போகிற போக்கில் சொல்லி நம்மை சிந்திக்கவும் யோசிக்கவும் வைக்கிறார் ஆசிரியர்.
அடுத்தடுத்தடுத்து இரண்டு முறை படித்த பிறகுதான் என்னால் முழுமையாக நாவலை உள்வாங்க முடிந்தது.
இன்னும் கொஞ்சம் விரித்து இதே வீரியத்தோடு எழுதியிருந்தால் இன்னும் ஆழமாக நெஞ்சில் தைத்திருக்கும்.
துரை.குணா அவசரப்பட்டிருந்தாலும் நல்ல படைப்பையே கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். எனக்கு திருப்திதான்.

தோழர் பத்மா

இரண்டாம் உலகப்போர் முடிந்திருக்கும் காலகட்டங்களில் இந்தியாவின் தெலுங்கானாப் பகுதியில் மிகப்பெரிய விவசாய ஆயுதப் போராட்டம் கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் நடந்தது.
கிட்டத்தட்ட 20000 விவசாயிகளும் 2000 கொரில்லா போர்வீரர்களும் சேர்ந்து நடத்திய உயிர்போராட்டம் அது என்று பொதுவுடைமை இயக்கத்தை தோன்றச் செய்தவர்களின் ஒருவரான புச்சலபள்ளி சுந்தரய்யா தன் ”வீரத்தெலுங்கானா” என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
இதில் ஒவ்வொருவரும் போராட்டத்துக்காக செய்த தியாகத்தைச் சொல்லி வரும் போது “தோழர் பத்மா” என்பவருடைய தியாகத்தை சுந்தரய்யா சிலாகித்து சொல்கிறார்.
தோழர் பத்மா இயக்கத்தில் போராடி இறந்த ஒருவரின் மனைவி.கணவர் இறந்தாலும் இயக்கத்தில் தொடர்ந்து இருந்து போராட்டம் செய்து வருபவர்.
அங்கே இருக்கும் திறமையான அமைப்பாளர் ஒருவருக்கும் தோழர் பத்மாவுக்கும் காதல் வருகிறது.இயக்கம் அக்காலத்தில் மறுமணத்தை ஆதரித்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்ததால், அக்காதலை ஆதரித்து தோழர் பத்மாவுக்கு அந்த இயக்க திறமைசாலிக்கும் திருமணம் செய்து வைத்தது.
சிறிது காலத்தில் தோழர் பத்மா சூலுற்று குழந்தை பெற தயாரானார்.
அப்போது அவ்ர் கணவருக்கு காட்டில் சென்று போராடும் கட்டாயம் ஏற்பட்டது.அதற்கு முன் போர் இல்லாத பணிகளில்தாம் இருந்தார்.ஆனால் போராட்டம் உச்சகட்டத்தில் இருக்கும் பட்சத்தில் அனைவரும் காட்டுக்கு சென்று போராட வேண்டிய கட்டாயம்.
இங்கே மனைவி குழந்தையோடு(வயிற்றில்) இருந்தால் இயக்க நண்பரின் மனம் போராட்டத்தில் இல்லை.
தோழர் பத்மாவின் சகோதரர்கள் அனைவரும் வசதியானவர்கள். அவர்கள் தங்கையை ஏற்றுக் கொள்ள தயார்.ஆனால் குழந்தையை அல்ல.
புச்சலபள்ளி சுந்தரய்யா தோழர் பத்மாவுக்கு ஒரு யோசனை சொல்கிறார் “ நீ உனக்கு குழந்தை பிறந்தவுடன் அதை வேறொரு தம்பதியினருக்கு தத்து கொடுத்துவிட்டு, உன் சகோதரர்களோடு போய்விடு.அப்போதுதான் உன் கணவர் காட்டுக்கு வந்து போராடுவார்” என்கிறார்.
தோழர் பத்மா பி.எஸ் சொன்னதை அப்படியே கேட்டு அப்படியே பெற்ற குழந்தையை தத்துக் கொடுக்கிறார்.அதன்பின் இரண்டு வருடங்களில் போராட்டம் முடிவுக்கு வருகிறது.
தோழர் பத்மா தன் கணவருடன் இணைகிறார்.ஆனால் குழந்தையை பார்க்க முடியாத சூழ்நிலையில் கடைசி வரை பார்க்காமல் இருந்து விடுகிறார்.
போராட்டம் என்பது மனிதர்களுக்கு எப்படிப்பட்ட மனஉறுதியையும் கொடுத்துவிடும் தன்மையைக் கொண்டிருக்கிறது.
போராட்டத்தை வழிநடத்துபவர்களுக்கு சில கொடூரமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இந்தக் கொடூரமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கும் தனிமனித உரிமைக்கும் இடையே இருக்கும் முரண்பாடுகளை மட்டும் ஆராய்ந்து அதையே போராட்டத்தை எடுத்து செல்பவர்கள் மேல் குற்றச்சாட்டாய் வைத்து அவர்களை கிரிமினல்கள் ஆக்குவது என்பதும் ஏற்கதக்கதல்ல.
இப்படியெல்லாம் எனக்கு தோன்றிற்று.

குதிரைக்காரன்...

இந்த கருத்தை மிகச் சரியாக புரிந்து கொள்ளுங்கள்....
இந்தக் கதை நம் எல்லோருக்கும் தெரியும்.
ஒரு ஊரில் ஒரு ராஜா இருப்பார்.ராணி மேல் மிக அன்பாயிருப்பார்.
ராணி ராஜாவை விட அதிக அன்பாயிருப்பாள்.
ஒருநாள் மந்திரிக்கும் ராஜாவுக்கும் தர்க்கம் வரும்.
மந்திரி சொல்வார் “எப்பேர்ப்பட்ட பத்தினிப் பெண்ணுக்கும் ஆசையுண்டு.கணவனைத் தவிர இன்னொருவருடன் அன்புண்டு ” என்பார்.
ராஜா கோபப்பட்டு “இல்லை என் மனைவி மாதிரி நல்லவர்களும் இருக்கிறார்கள்” என்பார்.
மந்திரி “அது சரிதான் ராஜா” என்று மெலிதாய் நகைப்பார்.
“என்ன நீர் நம்பவில்லையா? “என்று ராஜா கர்ஜிப்பார்.
மந்திரி ராஜா காதில் கிசுகிசுப்பார்.
அடுத்தநாள் ராஜா மூன்றுமாதம் வேட்டைக்கு போவதாக அறிவித்து நாட்டுமக்களையும் ராணியையும் ஏமாற்றிவிட்டு அரண்மனையிலேயே ஒளிந்து கொள்வார்.இரவு ஒரு மணிக்கு மேலே ராணி எழுந்து நடப்பாள்.ராஜா பின் செல்வாள்.
ராணி குதிரை லாயத்துக்கு செல்வாள்.அங்கே குதிரை வளர்க்கும் குதிரைக்காரன் ராணிக்காக காத்திருப்பான்.
ராணியைப் பார்த்ததும் “ஏன் இவ்வளவு நாள் என்னை பார்க்க வரவில்லை” என்று எட்டி மிதிப்பான்
ராணி கோபப்படாமல் மன்னிப்பு கேட்டு அவன் காலை அமுக்கி விடுவான்.
குதிரைக்காரன் கெட்டவார்த்தைகள் பேசி ராணியின் கன்னத்தில் ஒங்கியடிப்பான். அப்போது கூட ராணி அழுதுகொண்டே” ஏன் இப்படி அடிக்கிறீர்கள்” என்று கேட்பாள்.
இப்படி ஏன் எதற்கு என்று கேட்காமல் ராணி குதிரைக்காரனின் அன்புக்கு அடிமையாகி அவன் காலடியில் வீழ்ந்து கிடப்பாள்.
இந்தக் கதையில் வரும் ”குதிரைக்காரன்” நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் உண்டு என்று நினைக்கிறேன்.
ஆண்கள் பெண்கள் இருவரையும் இந்தக் குதிரைக்காரன் என்ற பதத்தால் அழைக்கலாம்.
ஏன் எதற்கு என்று கேட்காமல் சிலரிடத்தில் அன்பு வைத்து அடிமையாகியிருப்போம்.
அவன்/அவள் அவமானப்படுத்தினாலும் குதிரைக்காரனையே சுற்றி சுற்றி வருவோம்.மனைவிக்கு ஒரு குதிரைக்காரனும், கணவனுக்கு ஒரு குதிரைக்காரியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த குதிரைக்காரன் தியரிப் படி, குதிரைகாரனாக நினைப்பவர்களிடத்தில் நிச்சயமாக உடலுறுவு கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.
உடலுறுவு நடக்காமலேயே பல குதிரைக்கார உறவுகள் இருக்கின்றன.அந்தக் குதிரைகாரர்கள் சொந்தபந்தத்தில் இருக்கலாம், அலுவலகத்தில் இருக்கலாம், பொது இடத்தில் இருக்கலாம், கல்லூரிகளில் இருக்கலாம்.வாழ்க்கைத் துணையைத் தவிர வேறொருவராக கட்டாயம் இருப்பார்கள்.
இந்தக் குதிரைக்காரர்கள் வறண்டு போன வாழ்க்கைக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறார்கள்.வயதைக் குறைத்து உணரவைக்கிறார்கள்.சில சமயம் துள்ளல் இசையில் சத்தமாக பாட வைக்கிறார்கள்.
இனம் புரியாத க்ளுக் க்ளுக்கை மனதில் ஏற்படுத்துகிறார்கள்.
அளவான தூரத்தில் குதிரைக்காரர்களை வைத்துக் கொள்வது, அல்லது அமைந்து விடுவதை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் எங்கே இந்தக் குதிரைககாரர்கள் ஆபத்தவானர்களாக மாறிவிடுகிறார்கள்?
நம்முடைய சுக துக்கத்தை தீர்மானிக்கும் ஆதார காரணிகளாக இந்தக் குதிரைக்காரர்கள் மாறிவிடும் போது நம் வாழ்க்கையில் தவறு செய்கிறோம் என்று பொருள்.
குதிரைக்காரன் அன்று காலையில் நன்றாக பேசினால் நான் அன்று நன்றாகப்பேசுவேன். குழந்தைகளிடம் அன்பாக இருப்பேன்.கனிவின் உச்சத்தில் இருப்பேன்.
குதிரைக்காரன் அன்று சரியாக பேசாவிட்டால் சோர்ந்துவிடுவேன்.குடும்பத்தினரோடு சரி வர பேச மாட்டேன் என்பது ஆபத்தனான குதிரைக்காரயடிமையாகி வருவதன் அறிகுறி.
இதை ஆரம்பத்திலெயே கிள்ளி எறியாவிட்டால் நம் வாழ்க்கை நம் கையில் இல்லை.
இப்படியாக நடைமுறையில் ஒருவருக்கு ராணியாக இருக்கிறோம்.
மற்றவருக்கு குதிரைக்காரனாக இருக்கிறோம்.
முடிவில்லாத மன முடிச்சுகளில் விழுந்து அவிழ்க்கும் வழிதெரியாது சோர்ந்து குழம்பி
”வாழ்க்க்கைச் சக்கரமே ஒரு சிக்கல்.இதிலிருந்து மீள வழிதா இறைவா” என்று அழுது புலம்புகிறோம்

ஷாப்பிங் மால் லுங்கி...

”ஷாப்பிங் மால்களுக்கு லுங்கி கட்டிக் கொண்டு போவது எனக்குப் பிடிக்காது.அது ஒரு புறரீதியான அலப்பரை,அல்லது புறரீதியான வெளிப்பாடு.அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது”
என்பதான சிந்தனைகள், முழுமையாக சிந்திக்கப்படாத சிந்தனைகள் என்று சொல்வேன்.
ஷாப்பிங் மால்களுக்கு ஏன் ஐ.டி இளைஞர்கள் லுங்கிக் கட்டிக் கொண்டு போனார்கள்.
ஏன் என்றால் லுங்கி கட்டிக்கொண்டு போவது ஒரு அநாகரிகமான செயல் அல்ல என்று வலியுறுத்தத்தான்.
காயல்பட்டினத்தில் அல்லது கீழக்கரையில் அல்லது இடலாக்குடியில் இருந்து ஒருவர் ஷாப்பிங் மாலுக்கு லுங்கியோடு வந்தால்,
மால்களில் இருக்கும் லுங்கித்தடை கண்டு எவ்வளவு நொந்திருப்பார்.
அதை உலகத்தாருக்கு சுட்டவும்,அவர்கள் உரிமையையும் அது போன்ற பலரின் மீட்கவும் லுங்கி கட்டிக் கொண்டு போய் மால்களில் பிரவேசம் செய்தார்கள்.
அது வெறுமே அட்டன்சன் சீக்கிங் அல்ல.
அதுமாதிரிதான் மாட்டுக்கறி உண்ணும் பழக்கம் இல்லாதவர்கள் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்துவதும்,
அது பற்றியெல்லாம் எழுதுவதும்,
அந்த உணவுக்கு பழகிக்கொள்வதும்.
இது தவறல்லடா இந்திய மானிடா ! இதுவும் ஒரு நல்ல தகுதியான ஏழைகளின் தாழ்த்தப்பட்டவர்கள் என்று நீங்கள் சொல்லும் மனிதர்களின் உணவுடா என்று உரத்துக் கூறும் தன்மை அது.
ஆக புறரீதியான காண்பித்தல் என்பது,
புறரீதியான உணவு பழக்கம், உடைகளை வைத்தே மனிதர்களை அவமதிக்கும் செயலுக்கு காட்டும் எதிர்ப்பு என்று புரிந்து கொள்வதுதான் முழுமையான சிந்தனையாகும்.

பெற்றதும் இழந்ததும்...

மரத்தடியில் மூன்றாமவன் அமர்ந்திருந்தான்.
முதலாமவன் எதையோ தேடிக்கொண்டே இருந்தான்.
இரண்டாமவனும் எதையே தேடிக்கொண்டே இருந்தான்.
மூன்றாமவன் இருவரையும் அழைத்தான்.தன்னருகே உட்காரவைத்தான்.குடிப்பதற்கு நீரும் உணவும் கொடுத்தான்.
”நீங்கள் இருவரும் எதையோ தேடி மரத்தை சுற்றி சுற்றி வருகிறீர்கள்.முகத்தில் பரபரப்பு தெரிகிறது.என்ன தொலைத்தீர்கள்.ஏன் இவ்வளவு பதட்டம்”
முதலாமவன் “என் பெட்டியின் சாவி தொலைந்து விட்டது அதைத்தேடுகிறேன்” என்று அழகிய பெட்டியைக் காட்டுகிறான்.
இரண்டாமவன்” என் சாவியின் பெட்டி தொலைந்துவிட்டது அதைத்தேடுகிறேன்” என்று சாவியைக் காட்டுகிறான்.
“நன்றாக யோசித்து சொல்லுங்கள்” நீங்கள் தொலைத்ததைத்தான் தேடுகிறீர்களா”
“ஆம் இதிலென்ன சந்தேகம்” என்றார்கள் முதலாமவனும் இரண்டாமவனும்.
“நான் கேட்பது என்னவென்றால் நீங்கள் இருவரும் பெட்டியையும் சாவியையும் ஒரு சேர வைத்திருந்தீர்கள்.அதில் ஒன்றை தொலைத்தீர்களா?.அதை நிச்சயமாக சொல்ல முடியுமா?”
முதலாமவனும் இரண்டாமவனும் யோசித்தபடியே இருந்தார்கள்.
முதலாமவன் பேசினான்”முதலில் என்னிடம் எதுவுமில்லை.நடந்து வரும் போது கிழே இருந்து பெட்டி கிடைத்தது.ஆனால் சாவியில்லை.அந்தச் சாவியைத் தேடுகிறேன்.திறந்தால் உள்ளே அற்புதப் பொருள் இருக்ககூடும்.”
இரண்டாமவன் பேசினான்” முதலில் என்னிடம் ஒன்றுமே இல்லை.வழியில் கிடைத்ததுதான் இந்த அழகிய வேலைபாடுள்ள சாவி.இந்த சாவியின் பெட்டி கிடைத்தால் அதனுள் அற்புதப்பொருள் இருக்ககூடும் என்று நினைத்தேன்”
மூன்றாமவன் பேசினான்
“ஆரம்பத்தில் இருவரிடமும் எதுமில்லை.காலாற நடந்திருக்கிறீர்கள்.அப்போது உங்கள் முகத்தில் மென்காற்று வீசியிருக்கிறது.
வழியில் இருவருக்கும் ஆளுக்கொரு பொருளை விதிவசத்தால் பெற்றிருக்கிறீர்கள்.பெற்றதை முழுமையடையச் செய்ய அல்லது முழுமையாக பெற பரபரப்பாகிறீர்கள்.
முதலாமவன் பெட்டியைப் பெற்றிருக்கிறான்.அவன் சாவியைத் தொலைக்கவில்லை.
இரண்டாமவன் சாவியை பெற்றிருக்கிறான்.அவன் பெட்டியைத் தொலைக்கவில்லை.
உங்கள் இருவருக்கும் ஏதோ ஒன்று கிடைத்திருக்கிறது.ஆனால் உங்கள் மனம் புதிதாய் கிடைத்ததை புதிய பொருள் என்று சிலாகிக்காமல், ஏதோ ஒன்ற தொலைத்த உணர்வை உஙகளுக்குக் கொடுக்கிறது.”
”நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.பெட்டி சாவி என்று வரும்போதுதான் இந்தப் பிரச்சனை.நேரடியாக தங்கம் கிடைத்திருந்தால்.அதை வைத்து மகிழ்ந்திருப்போம்” என்றார்கள் முதலாமவனும் இரண்டாமவனும்.
“கிழித்திருப்பீர்கள். அந்த தங்கத்தை பாதுகாப்பாக வைக்க பெட்டியும் சாவியும் இருக்கிறதா என்று இன்னும் பரபரப்பாக பதட்டமாக இருந்திருப்பீர்கள்.” என்றான் மூன்றாமவன்.
”நீங்கள் என்னதான் சொல்லவருகிறீர்கள்”
“கிடைத்த பொருள் தொலைத்து விட்ட உணர்வை கொடுக்கும் போது, தேவையற்ற மனநெருக்கடியை கொடுக்கும் போது, கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் இன்பத்தின் அடையாளமா? அல்லது துன்பத்தின் அடையாளமா என்று யோசித்துப் பாருங்கள்.எனக்கே அதை நினைத்து குழப்பமாக இருக்கிறது.அதனால் “
“அதனால்.... “
மூன்றாமவன் தொடர்ந்தான் “அந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வழக்கமாக பெட்டியையும் சாவியையும் ஒவ்வொரு இடத்தில் போட்டு விட்டு,இதோ இந்த மரத்தில் உட்கார்ந்து விடுவேன்.உங்களைப் போல ஒவ்வொரு ஜோடியும் அதைத் தனித்தனியாக எடுத்து உங்களைப் போலவே பரபரப்பாக ஒரே மாதிரி இருக்கிறார்கள்.வித்தியாசமாக எதுவும் சொல்வதில்லை”
மூன்றாமவனிடம் பெட்டியையும் சாவியையும் ஒப்படைத்து முதலாமவனும் இரண்டாமவனும் ஊர் பார்த்துக் கிளம்பினார்கள்.

கூவம் படகு சர்வீஸ்...

”இப்போ சிட்டி செண்டர் இருக்குல்ல”
“ஆமா”
”அங்கதான் படகோட ஸ்டாப்.அங்க தொடங்கி மஹாபலிபரம் வரைக்கும் படகுலேயே போயிருக்கிறேன்” என்றார் இன்று நான் வந்த ஆட்டோவின் டிரைவர்.
நம்பமுடியவில்லை.
“கூவம் வழியோடி போட்ல மஹாபலிபுரம் போயிரலாமா”
“ஆமா நா போயிருக்கேன்.அரையனாவோ காலனாவோ டிக்கட்” என்றார்.
நான் அதை கற்பனை செய்து பார்த்தேன்.நானே அப்படி ஒரு படகில் இருந்தால் எனக்கு என்ன என்ன தெரியும் என்று யோசித்துப் பார்த்தேன் த்ரில்லிங்காக இருந்தது.
சிட்டி செண்டர் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு நதி வழியாக மஹாபலிபுரம் போய்விடலாம் என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருந்தது.
”எவ்வளவு நேரம் ஆகும் தல” என்றேன்.
“கிட்டத்தட்ட 7 மணி நேரத்துக்கும் மேல.ராத்திரி ஏறுனா விடியிரப்ப மஹாபலிபுரம் போயிரலாம்” என்றார்.
ஏனோ அதை மனம் நம்ப மறுத்தது. ஏழு மணி நேரம் பிரயாணமா? மஹாபலிபுரத்துகா என்று யோசித்தேன்.
அப்புறம் அவரிடம் பேச்சைக் குறைத்து என் குட்டி மொபைலில் “speed of row boat" என்று கூகிள் செய்தேன்.
அதில் சராசரியாக மணி நேரத்துக்கு ஏழு மைல் என்று வந்தது.
மைலாப்பூருக்கும் மஹாபலிபுரத்துக்கும் இடையே 45 கிமீ ரோடு தூரம் இருக்குமா?
அப்ப 45 கிமிங்கிறது எவ்வளோ மைல். கிமிய மைலா மாத்தனும்னா என்ன செய்யனும் 45 அ 1.6 ஆல வகுக்கனும்.
அப்ப வகு 45/1.6... அய்யோ வெட்டு குடுக்க ஒடலியே அப்ப என்ன செய்ய?
அப்ப 45 அ 48 ஆ மாத்து... 48/1.6 = 30 (பதினாற மூணு தடவ பெருக்கினா 48)
அப்ப மஹாபலிபுரத்துக்கும் மைலாப்பூருக்கும் நடுவுல 30 மைல் ரோடு தூரம் இருக்கு.
துடுப்பு போட் சராசரி வேகம் எவ்ளோனு கூகிள் பாத்தோம்.
7 மைல் ஒரு ஹவருக்கு. அப்ப 30 மைல் தூரம் போகனும்னா
30/7= நாலு ம்ணி நேரத்துக்கு மேல வரும்.
ஆட்டோ டிரைவர் எவ்வளவு சொன்னார் 7 மணி நேரத்துக்கு மேலன்னார்.
ஆனா கூவம் ரோடு மாதிரி நேராவா இருந்திருக்கும் வளைஞ்சி வளைஞ்சி இருந்திருக்கும்.அதனால நிச்சயம் 45 கிமியோட அதிகம்தான் இருந்திருக்கும்.
அடுத்து தண்ணில போறதுல பிராக்டிக்கலா நிறைய ரிஸ்க் மற்றும் கஷ்டம் இருந்திருக்கும்.அதனால இவரு சொல்றது சரிதான் என்று மனதுக்குப் பட்டது.
மறுபடி உற்சாகமாக மெட்ராஸில் எப்படி கைரிக்‌ஷாவை ஒழித்தார்கள்.எப்படி ஒவ்வொரு மாற்றமும் நடந்தது என்று கதையளந்து இறங்க வேண்டிய இடத்தில் இறங்கினேன்

ஆச்சியும் ஒரு நாட்டுப்புறக்கதையும்...

எங்கள் குடும்பத்தில் ஒரு ஆச்சி உண்டு.
அவருடைய பொழுதுபோக்கே கல்யாண வரனுக்கான தகவலை இங்கேயும் அங்கேயும் சொல்லி திருமணம் செய்து வைப்பதுதான்.
ஆச்சிக்கு,விழாக்களில் ஒரு யுவனைப் பார்த்தால், இன்னொரு விழாவில் பார்த்த யுவதியின் நினைவு வரும்.உடனே பையனுடைய அம்மா அப்பாவிடம் பேசுவார்.
அப்படி அப்படி அடுத்த அடுத்த கட்டத்துக்கு போய் அடுத்த இரண்டு மாதங்களில் கல்யாணம் முடிந்திருக்கும்.
இப்படி கல்யாணம் பேசும் போது சில பொய்களை சொல்லவும் தயங்கமாட்டார்.
பையன் டிப்ளமா படித்திருப்பான்.ஆனால் ஆச்சி இன்ஜினியர் என்பார்.இன்னும் ரொம்ப நோண்டிக் கேட்டால்தான் டிப்ளமோ என்றே சொல்வார்.
அதுவும் எப்படி சொல்வார் தெரியுமா? ”நல்ல இடம் நல்ல பையன் நல்ல சம்பந்தம் நல்ல வசதி படிப்பு என்னவோ டிப்ளமோ அல்லது அதுக்கு மேலேயோ சரியாத் தெரியல” என்பார்.
ஒரு பெண்ணுக்கு இதயத்தில் பிரச்சனை என்று சிகிச்சை எடுத்துக் கொண்டார்.அவர் நெஞ்சில் தழும்பொன்று இருக்கும்.அந்தப் பெண்ணின் பெற்றோர்களே மகளுக்கு கல்யாணம் நடக்கும் என்று நம்பவில்லை.
ஆனால் ஆச்சி களத்தில் குதித்து பெண் பார்க்கும் படலம் நடக்க வைத்து, பெண்ணைப் பிடிக்க வைத்து, பெண்ணின் குடும்பத்தைப் பிடிக்க வைத்து கடைசியாக மாப்பிள்ளை வீட்டாரை டாக்டரிடம் அழைத்துச் சென்று “மண வாழ்க்கையில் பிரச்சனையிருக்காது” என்ற நம்பிக்கையை உண்டாக்கினார்.
அவர்கள் தரப்பிலும் ஒரு டாக்டரிடம் கூட்டிச்சென்று காட்டி சோதித்துக் கொள்ள சொன்னார்.திருமணம் நடந்து, இப்போது குழந்தைகளோடு கணவனோடு நல்லபடியாக இருக்கிறார் (பெண்களுக்கு திருமணம்தான் இன்பமா என்ற விவாதம் இந்த இடத்தில் வேண்டாம்.யதார்த்தத்தில் திருமணம் செய்யாமல் நம் சமூகத்தில் இருப்பது கஷ்டம்தானே).
ஒரு ஊரில் கல்யாண வயசுல நெசவாளன் இருந்தானாம்.அவனுக்குன்னு மனுசங்க யாருமே இல்ல.
ஒரு நரி மட்டும்தான் அவனுக்குத் துணை.
”உனக்கு நா கல்யாணம் பண்ணி வெக்கிறேன் நண்பா” என்ற நரி பக்கத்து நாட்டுக்கு போச்சாம்.
அங்கே இளவரசி குளிக்க வர்ற குளத்துக்கு பக்கத்துல நின்னுகிட்டு வெத்தலை போட்டுகிட்டு இருந்துச்சாம்”
இளவரசிக்கு ஆச்சரியம்.நரி வெத்தல போடுமான்னு.நரிகிட்ட கேட்டாளாம்.
“ஆமா இளவரசி எங்க நாட்ல நரி,சிங்கம்,புலின்னு எல்லா மிருகங்களும் வெத்தல போடுவோம்.எங்க ராஜாவோட ஆட்சியில பாலாறும் தேனாறும் ஒடும்”
அது இதுன்னு சொல்லி இளவரசி, மன்னர்,அரசி என்று எல்லார் மனசுலையும் பெரிய நாட்ல இருந்து வர்றா மாதிரி காட்டிகிச்சி.
இப்போ மன்னருக்கு தன் மகள அந்த ராஜாவுக்கு கல்யாணம் செய்து கொடுக்கிற ஆச வந்துச்சி.டபக்குன்னு நரி மூலமா அந்த ராஜாவ பாக்காமலேயே மகளுக்கு நிச்சயம் செய்துட்டார்.
நரி வெற்றிக்களிப்புல இந்தத் தகவல நெசவாளனுக்கு சொல்லிச்சி.
மறுபடியும் ராஜாவ சந்திக்கப் போச்சி “ ராஜா ராஜா எங்க மன்னர் படை பரிவாரத்தோட வந்தாருன்னா அதுகளுக்கு தங்குறதுக்கு உங்க நாட்ல இடமிருக்கா? அதனால மாப்பிள்ளை மட்டும் வருவார்.நீங்க உங்க படைகள அவருக்கு துணைக்கு அனுப்பி கூப்பிட்டுக்கோங்க சரியா”
அதுக்கு ராஜா” இல்ல நா எவ்வளவு பேர் வந்தாலும் தங்க வசதி செய்து கொடுப்பேன்னு” சொன்னாராம்.
“அடைக்கலம் கொடுத்தா சரிதான். நான் இன்னைக்கு பாதி படைய அனுப்பி வெக்கிறேன்” அப்படின்னு சொல்லிட்டு,
நேரே காட்டுக்குப் போய் ஆயிரம் நரி, ஆயிரம் காக்காவ கூட்டிகிட்டு வந்து இரவெல்லாம் ஒரே சத்தமான சத்தம் போடவெச்சதாம்.
ராஜா இளவரசி எல்லோரும் நடுங்கிட்டாங்க அந்த சத்தத்த கேட்டு.
“ஐயோ நிறைய பேர் வந்திருக்காங்க போல இருக்கேன்னு” சொல்லிட்டு நரிகிட்ட ”கல்யாண ராஜாவ மட்டும் வரச்சொல்லுன்னு” சொன்னாராம்.
நெசவாளன் ராஜா வேசம் போட்டுகிட்டு வந்து இளவரசிய கல்யாணம் செய்துட்டு ஊருக்குப் போனானாம்.
ஊருக்கு போனப்புறம்தான் இளவரசிக்கு தன்ன ஏமாத்திட்டாங்கன்னு தெரிஞ்சது.ஆனா நெசவாளன் நல்ல குணமா இருந்ததால கோபம் எல்லாம் போயிட்டதாம்.
இப்ப ஏழ்மைய எப்படி விரட்டுறது.இளவரசி அரிசி மாவ இடிச்சிட்டு வரச்சொன்னாளாம்.அத உடம்பெல்லாம் பூசினாளாம்.
அப்புற காய்ஞ்ச மாவ உதுத்தா மாவெல்லாம் தங்கப்பொடியா விழுது.
அந்தப் தங்கப்பொடிய எடுத்து வித்து நெசவாளன் பெரிய பணக்காரணா வாழ்ந்தானாம்.
நரி ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் செய்துட்டு காட்டுக்குள்ள தன் கூட்டத்தோட கலந்து போச்சாம்.

குடும்பம் நடத்துவது...

இன்னைக்கு மேட்ச்ல இந்தியா யாரு கூட விளையாடுது? என்று என் மகள் கேட்டாள்.
”பங்களாதேஷ்”
”அது எங்க இருக்கு?”
“இப்ப ஆபீஸுக்கு கிளம்புறேன்.அத விளக்கமா சொன்னாத்தான் புரியும்”
”குளோபப் பாத்தா தெரியப் போகுது” என்று சாய்ந்த உலக உருண்டையை என்னிடம் எடுத்து வந்து சுற்றிக் காட்டினாள்.
நான் அதில் பங்களாதேஷைக் காட்டினேன்.அதன் பிறகு பாக்கிஸ்த்தானைக் காட்டினேன்.
“பாத்தியா இதுதான் பாக்கிஸ்தான்”
“ஆமா தெரியும் பாக்கிஸ்தான்னா டெரஸ்டிட்தான.சுட்டுருவாங்க” என்றாள்.
அதிர்ச்சியாயிருந்தது.” ஏன் அப்படி சொல்ற”
“டெரரிஸ்ட்தான். ஸ்கூல் பசங்கள சுட்டுட்டாங்களாமே.எங்க ஸ்கூல்ல அமைதியா இருக்க சொன்னாங்க முன்னாடி ஞாபகம் இருக்கு.பாக்கிஸ்தான்னா டெரரிஸ்ட்தான”
நான் கொஞ்சம் நிதானமாக விளக்கினேன்.
“எந்த நாட்லையும் நம்மளமாதிரி மக்கள்தான் இருப்பாங்க்.
இப்ப நம்ம ரெண்டு பேரும் ஏரோப்பிளேன்ல பாக்கிஸ்தான் போய் இறங்குறோம்ன்னு வெச்சுக்க.
அங்க ஒரு வீட்டுக்குள்ள காலையில எட்டிப்பாத்தா, அங்க ஒரு அப்பா அம்மா அப்புறம் உன்ன மாதிரி கொழந்தைங்க எல்லாம் பரபரப்பா இருப்பாங்க.
பாக்கிஸ்தான் கொழந்தைக்கு அவுங்க அம்மா அன்பா சாதம் ஊட்டுவாங்க,
பாக்கிஸ்தான் அம்மாவும் அப்பாவும் ஆபீஸுக்கு போகும் கொழந்தைக்கு டாட்டா சொல்வாங்க.
பாக்கிஸ்தான் கொழந்தை ரைம்ஸ் சொல்லும். பாக்கிஸ்தான் அப்பா அம்மா அத ரசிப்பாங்க.
பாக்கிஸ்தான் அப்பா பாக்கிஸ்தான் கொழந்தைக்கு ஆசையா சாக்லெட்ட பிச்சி வாயில ஊட்டுவாங்க. பாக்கிஸ்தான் கொழந்த அத சாப்பிட்டு, அந்த பாக்கிஸ்தான் அப்பாவுக்கு முத்தம் கொடுக்கும்.
அப்பா சொல்றது புரியுதா?
இப்படித்தான் எல்லா நாட்லையும் மக்கள் இருக்க ஆசப்படுவாங்க.
நிறைய பேர் இப்படித்தான் இருப்பாங்க.அதனால் எந்த கண்ட்டிரியையும் பாத்து டெரரிஸ்ட் அப்படின்னு சொல்லகூடாது என்ன? “
என்றொரு நீண்ட அட்வைசை சொல்லி வந்தேன்.
ஏனோ அப்படிப் பேசிவிட்டு தெருவில் நடக்கும் போது மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவனாக இருந்தேன்.
’உலகில் மதம் ஜாதி தீவிரவாதம் போராட்டம் அனைத்தையும் தாண்டி குடும்பம் நடத்தவே அனைவரும் விரும்புகிறார்கள்’
என்ற எளிய விசயத்தை
ஏனோ இன்னும் உள்ளே உள்ளே நுழைந்து அனுபவித்து யோசித்துப் நடந்தேன்.

பெண்களைக் கண்கானிக்கும் ஆழ்மனம்...

டிவியில் ஒரு திரைக்காட்சியைத் தற்செயலாகப் பார்த்தேன்.வாட்டகுடி இரணியன் என்று நினைக்கிறேன்.
முரளியும் மீனாவும் ஒரு ஒலைப் பரணில் மறைந்திருக்கிறார்கள்.
தேடி வந்த போலீஸ் ஒலையில் கூர்மையான கத்தியை அங்கேயும் இங்கேயும் சரக் சரக் என்று விடுகிறது.இந்தப் பக்கம் முரளியும் மீனாவும் ஒவ்வொரு கத்தி சொருகலில் இருந்தும் மயிரழையில் தப்பிக்கிறார்கள்.
சினிமா என்றாலும் பார்க்க பயமாய்த்தான் இருந்தது.எப்படிப்பட்ட பதட்டமான சூழ்நிலை அது.
ஆனால் அங்கேதான் இயக்குநர் இப்படி யோசிக்கிறார்.அந்தக் கத்திக் குத்தலில் இருந்து தப்பிக்க மீனாவும் முரளியும் பரஸ்பரம் நெருங்கி அணைத்துக் கொள்கிறார்கள்.
அந்த அணைப்பைத் தொடர்ந்து ஒரு பாடல் காட்சி. “என் மாமன் மதுர வீரன்” என்று மீனா ஒரு பாட்டுப் பாடி நடனமும் ஆடுகிறார்.
இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்த மாதிரியான காதல் -காம உணர்வு தோன்ற வாய்ப்பிருக்கிறதா என்று சலித்துக் கொள்வதைவிட,
அந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் கூட ஒரு ஆணும் பெண்ணும் உரசிக்கொள்வதை நம் (தமிழன் இந்தியன் எக்சட்ரா) மனம் கவனிக்கிறது என்பதுதான் நம்முடைய பொதுபுத்தி என்று நினைக்கும் போது,
நம் மன அமைப்பின் மொத்த செட்டப்பையே மாற்ற வேண்டும் தோன்றுகிறது.
ஒருமுறை லிப்டிலிருந்து வெளியே வரவும்,அந்தத் தளத்தில் இருந்த நண்பன் ஒருவன் கேட்டான்
“மச்சி ஒரே ஜாலிதான் போல”
“ஏண்டா”
“இல்ல லிஃப்டுல உன்னத்தவிர எல்லாருமே லேடீஸ்” என்றான்.
“இதுல என்ன மச்சி ஜாலி” என்று கொஞ்சம் சலித்துக் கொண்டேன்.
இதில் நண்பனைக் குறை சொல்லவில்லை.நானும் இதுபோன்ற கமெண்டுகளை செய்திருக்கிறேன்.
ஆண் பெண் உறவு சார்ந்து ஏதோ ஒரு கருத்து நம் பொதுப்புத்தியில் கேவலமாக உறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
அலுவலகத்தில் பிரிண்ட் எடுக்கும் போது, ஒரு இருபது வயதுப் பெண்ணைப் பார்ப்பேன்.அவர் தன் சக ஊழியர்களின் தோளை, பஸ்ஸின் மேல் கம்பியைப் பற்றியிருப்பது மென்மையாக பற்றி சில நேரம் பேசிக்கொண்டிருப்பார்.
என் வாசிப்பிலும், கல்வியிலும், சமூகத்தை புரிந்துகொண்ட விதத்திலும் அது சகஜமாகத்தான் எனக்குப் பட்டிருக்க வேண்டும்.ஆனால் எனக்கு அப்படிப் படாது.
ஆழ்மனதில் ஏதோ டிஸ்டர்ப் ஆகும். ஏன் அப்படி டிஸ்டர்ப் ஆகிறது, அப்ப நமக்கு இன்னும் பக்குவம் வரவில்லையோ என்பதான் டிஸ்டர்பன்ஸ் வரும்.
வாழும் காலம் முழுக்க பெண்களை கண்கானித்துக் (ரசிப்பதை சொல்லவரவில்லை.) கொண்டே இருக்கிறோம்.
சலிக்காமல் கண்கானித்து
கண்கானித்து கண்கானித்து
கண்கானித்து கண்கானித்து
கண்கானித்து கண்கானித்து
மொத்த அமைப்பையும்
நாசமாக்கி வைத்துக் கொண்டு திணறி வருகிறோம்.

ஏக்கம்...

ஷட்டர் வைத்த கடைகளில் யாராவது ஷட்டரை சர்ரென்று ஏற்றும் போதோ, லகுவாக இறக்கும் போதோ “இந்த ஷட்டர் எவ்வளவு வசதியான சாதனம்” என்று யோசனை வரும்.
ஏனென்றால் அந்த ஷட்டரின் அருமை மற்றவர்களை விட எனக்கு அதிகம் தெரியும் என்று எனக்கொரு நினைப்பு.
நாகர்கோவிலில் பத்து பதினொன்று வகுப்புப் படிக்கும் போது சில சமயம் காலையில் எங்கள் பலசரக்குக் கடையை திறக்கப் போவேன்.
அப்பா இரண்டு மணிநேரம் கழித்து வருவார்.அப்பா சொன்னதும் “சரிப்பா” என்று சாவியை எடுத்துக் கொண்டு சைக்கிளில் கடையை நோக்கி செல்லும் போதே” கடய எப்படி திறக்கிறது” என்ற யோசனை வரும்.
ஏனென்றால் எங்கள் கடையில் ஷட்டர் கிடையாது.பலகைதான்.
மொத்தம் பத்தோ பதிமூணோ பலகைகள் இருக்கும்.ஒவ்வொரு பலகையையும் இரண்டு பக்கமும் போட்டு, நடுப்பலகையையும் உள்ளே சொருகி நீள அடிக்கம்பியில் பூட்டைப் போட வேண்டும்.
அதை மறுபடி திறக்கும் போது லாவகமாக திறக்க வேண்டும்.இல்லையென்றால் பலகை சிக்கிக் கொண்டு வராது.
அன்று அப்படித்தான் பூட்டைத் திறந்து நடுப்பலகையை எளிதாக வெளியே வைத்து விட்டேன்.அடுத்தடுத்து இரண்டு பலகைகள் கூட கொஞ்சமான முயற்சியில் வெளிவந்துவிட்டன.
ஆனால் நான்காவது பலகை சுத்தமாக வரவில்லை.எவ்வளவோ முயற்சி செய்கிறேன்.
மொத்த பலத்தையும் வைத்து பலகையை பக்கவாட்டில் தட்டுகிறேன்.வரவில்லை.கிட்டத்தட்ட பதினைந்து நிமிடமாக அதோடு போராடினேன்.வரவில்லை.
ஜங்சனில் அனைவரும் நான் கடை திறக்கும் அழகை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.
நானோ அவர்கள் யாரிடமும் உதவி கேட்கக்கூடாது என்ற முகத்தை வைத்துக் கொண்டு, பலகையோடு போராடியதால் யாரும் பக்கத்தில் வரவில்லை.
காலை வைத்தெல்லாம் மிதித்துப் பார்த்தேன்.வரவில்லை.
ஒவ்வொரு பலகைகை கழட்டுவதற்கு ஒவ்வொரு அறிவியல் இருக்கிறது என்ற விசயத்தை ரசிக்ககூட விடாமல் யதார்த்தம் என்னை துன்புறுத்தியது.
முடிவில் தோல்வியை ஒத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த சைக்கிள் கடைக்கார அண்ணனிடம் உதவி கேட்டேன்.
அவர் ஒரு சுத்தியலை எடுத்து வந்து பக்கவாட்டில் ஒரு போடு போட்டார், பலகை கழண்டு வந்தது.வேர்வையில் பதறியிருந்தவன் கொஞ்சம் ஆசுவாசமானேன்.
அப்போ உள் மனதில் இருந்து ஒரு ஏக்க மொழி வந்தது “ச்சே ஒரு ஷட்டர் மட்டும் இருந்திச்சினா கட திறக்க எவ்வளவு வசதியா இருந்திருக்கும்”.
இப்போ வரைக்கும் யாராவது கடை ஷட்டரை வேகமாக கேஸுவலாக தூக்கிவிடும் போதோ, இறக்கி விடும் போதோ “பத்தாம் வகுப்பு பலகை போராட்டம் “ ஞாபகத்துக்கு வரும்தான்.
அப்போது ஒரு நிறைந்த புன்னகை என்னிடம் வெளிப்படும்தான் 

இலக்கியத்தில் அறிவியலும் கணிதமும்...

இலக்கியத்தில் அறிவியலும் கணிதமும் வேண்டும் என்று சொன்னால் அதன் அர்த்தம் முழுக்க முழுக்க ’சயின்ஸ் ஃபிக்சன்’ மாதிரி எழுதுவதல்ல.
அப்படி எழுதினால் தமிழின் தற்போதைய எழுத்தாளர்கள் அதை “வெறும் அறிவுஸீன்தான் இது படைப்பு என்பது வேறு.” என்ற விமர்சனத்தை வைக்கக்கூடும்.
நான் சொல்ல வருவது அறிவியலும் கணிதமும் நம் எழுத்தினூடே விரசி வரவேண்டும்.
உதாரணமாக ஜெயமோகன் ஒரு கட்டுரையில் Rubik's Cube ஐ ”இத்தனை கோடி” முறையில் ஒன்றாய் சேர்த்து புதிரை அவிழ்க்கலாம் என்பது போல அவருடைய நாவல் ஏதோ ஒன்றை ( பெயர் மறந்துவிட்டது) அத்தனை முறையாக அணுகலாம் என்றார்.
அதில் அந்த Rubik's Cube என்பதுதான் அறிவியல் மேட்டர்.அதனாலேயே அவருடைய சுயதம்பட்ட வாசகம் கூட ஒரு “அட” அந்தஸ்த்தை அடைந்துவிடுகிறது.
இந்தமாதிரிதான் இலக்கியத்தில் அறிவியலும் கணிதமும் இன்னும் விரவ வேண்டும் என்று சொல்கிறேன்.
தி.ஜானகிராமன் ”தொடர்ச்சியாக வரும்” விசயத்தை சொல்ல “ திரவுபதி புடவை மாதிரி” வந்தது என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
துகிலுரியப்படும் போது தொடர்ச்சியாக திரவுபதிக்கு புடவை கிடைத்தது போல எவ்வளவு பேசினாலும் அவருக்கு பேச விசயம் இருந்தது என்று ஜானகிராமன் சொல்லலாம்.
அதே ஜானகிராமன் காலத்தில் சொன்ன உவமைகளை இந்தகால இளைஞர்களும் சொன்னால் எப்படி?
அவர்கள் இப்படி சொல்லலாம் ”வகுக்க வகுக்க முடிவுறாத Irrational number போல அவள் சிந்தனை முடிவுறாமல் போய்க் கொண்டிருந்தது.”( உதாரணத்துக்கு சொல்கிறேன்).இப்படித்தான் அறிவியல் எழுத்தாக இருக்க முடியும்.
இலக்கியத்தில் துருத்திக்கொண்டு தெரியாமல் சரியான இடத்தில் அறிவியலைச் சொல்லி, அதன் மூலம் வாழ்க்கையை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ளும் உணர்வைக் கிளற வேண்டும்.
வருங்கால தமிழ் இலக்கியத்துக்கு ஒரு Freshness ஐ இம்முறை கொடுக்கும்.
இப்போது நிறைய படித்த விசயம் தெரிந்த மாணவர்கள் ஃபேஸ்புக் கொடுக்கும் தூண்டுதலால் எழுதும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.
ஆக அறிவியலும் கணிதமும் இலக்கியமும் இணையும் காலத்துக்கான சூழ்நிலை,
அதற்கான Climate அதிகமாகியிருக்கிறது.
உழைப்பையும், நேர் நோக்கையும், விடா முயற்சியையும், தன்னம்பிக்கையும் இதோடு கலந்தார்கள் என்றால் எழுத்துலகம் சுபிட்சம் பெரும்.