Monday, 15 December 2014

அம்பேத்கர் தொகுப்புகளின் 10 வது புத்தகம் சொல்வதென்ன? மிகச்சின்னச் சுருக்கம்

அம்பேத்கரின் தொகுப்பு புத்தங்கள் 37 இல், புத்தகம் 9 பற்றி அன்று எழுதியிருந்தேன். 

அடுத்து ”புத்தகம் 10” என்னவெல்லாம் சொல்கிறது என்பது பற்றி ரொம்ப சின்ன சுருக்கம் இது.

நாகரிகமா? கொடுங்குற்றமா? 

-நாகரிகம் என்றால் என்ன கேள்வியை வைக்கிறார் அம்பேத்கர்.

நாகரிகம் என்றால்,பண்பாடு என்றால் சகமனிதனை மதித்து அவனுடைய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வது.ஆனால் இந்து நாகரிகத்தில் ஒரு சாரார் மக்களை மிருகங்களை விட மோசமாக இன்றும் கேவலப்படுத்துகிறார்கள்.

அதற்கான ஆதாரமாக இந்து மதத்தைக் காட்டுகிறார்கள்.அதை தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மனிதனை மனிதன் ஒடுக்குவதை ஆதரிப்பது எப்படி நல்ல நாகரிகமாகும். (அமெரிக்கா,கிரேக்க அடிமைமுறைகளுக்கும் இந்திய ஜாதி அடிமைமுறைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை புத்தகம் 9 யில் அம்பேத்கர் சொல்கிறார்).ஆக எப்படி இந்திய இந்து நாகரிகத்தை பெருமையான நாகரிகமாக சொல்ல முடியும்.

ஆங்கிலேயர்களை காரணமில்லாமல் போற்றினாரா அம்பேத்கர்?

-தக்குகள் என்ற ”ஜாதி இந்துப்” பிரிவைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள்.ஆண்கள் பெண்கள் வயதானவர்கள் என்று அனைவரும் கொள்ளையடிப்பதற்கு துணை புரிவார்கள்.ஒருவரிடம் நல்லவனாக நடித்து எதிர்ப்பாராத நேரத்தில் கழுத்தை அறுத்துக் கொன்று கொள்ளையடிப்பது தக்குகளின் பாணி.

அவர்கள் அதற்கு ஒரு மதரீதியான ஞாயம் வைத்திருந்தார்கள்.காளி மாதாவுக்குப் பிடித்தது ரத்தம் என்றும் கொலை என்றும் சொல்லி, காளிக்கு படையலும், சர்க்கரை பொங்கலும் வைத்து, தங்கள் கொலை ஆயுதங்களை வைத்து பூஜை செய்வார்கள்.பணம் பொருள் நகை கொள்ளையடித்து வந்து காளிக்கு நன்றி சொல்வார்கள்.கொலை செய்வது அவர்ளைப் பொருத்தவரை தப்பில்லை. இது பற்றி பொதுமக்களோ, இந்திய அரசியல்வாதிகளோ கூட பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை.

ஏனென்றால் தக்குகள் அதை இறைவனின் பெயரால் நடத்துகிறார்கள்.ஏதோ ஒரு கடவுளின் ஆசியால் கொலை நடக்கிறது என்ற திருப்தியை தக்குகளை விட சமுகம் அதிகமாக கொண்டிருந்த காலம் இருந்திருக்கிறது. 

1835 இல் இருந்து 383 தக்குகள் தூக்கிலப்படுகின்றனர்.பிரிட்டீஷ் அரசாங்கம் இதைச் செய்ய ஆரம்பித்த பிறகு, தக்குகளின் கொலை  கொள்ளைத் தொழில் படிப்படியாக தணிகிறது. ( ஜெயமோகன் பூனா ஒப்பந்தம் பற்றிய தன் கட்டுரையில் அம்பேத்கர் பிரிட்டீஷ் அரசாங்கத்தின் ஆள் என்பதாக எழுதிருந்தார். பிரிட்டீஷ் அரசு மேல் எதன் அடிப்படையில் அம்பேத்கருக்கு நல்ல எண்ணம் இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணம்.அம்பேத்கர் சில விசயங்களில் பிரிட்டீஷ் அரசாங்கம் தைரியமாக முடிவெடுக்கும் என்று நம்புகிறார் (இது என் கருத்து)

காந்தியால் தலித் பிரச்சனைகளில் தெளிவான முடிவு எடுக்க இயலாமை பற்றிய ஆதங்கம்.

-கவிதா என்றொரு கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் குழந்தைகளை  பள்ளியில் சேர்க்கிறார்கள்.அதை எதிர்த்து  ஜாதி இந்துக்கள்  தங்கள் குழந்தைகளை தாழ்த்தப்பட்டவர்களோடு  படிக்க விருப்பமில்லாமல் இருக்கிறார்கள்.இதையொட்டி ஒரு கலவரத்தை உருவாக்கி தாழ்த்தப்பட்டவர்களை தாக்குகிறார்கள். 

பல நாட்கள் ஊருக்கு வெளியே உயிருக்கு பயந்து இருக்க வேண்டிய நிலை. தலித்கள் தங்களைத் தாக்கிய ஜாதி இந்துக்கள் மீது வழக்குத் தொடுக்கின்றனர்.இது பற்றி கேள்விப்பட்ட காந்தி, தலித்களை ஊருக்கு வெளியே இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சொல்கிறார்.தலித்கள் அடைந்த அவமானம் அவமரியாதை அவர்கள் உரிமை பற்றி வருந்தியவராய் தெரியவில்லை.

அதன் பின் சர்தார் வல்லபாய்ப் பட்டேலை அனுப்பி வைக்கிறார் காந்தி. வல்லபாய் பட்டேல் ஊருக்கு வந்து, தாழ்த்தப்பட்டவர்களிடம் பேசி அந்த வழக்கை வாபஸ் வாங்க வைக்கிறார்.( இனிமேல் உங்களை ஜாதி இந்துக்கள் தாக்காதவாரு நான் பார்த்துக் கொள்கிறேன்.நீங்கள் வழக்கை வாபஸ் வாங்குங்கள்). வல்லபாய் பட்டேலின் வற்புறுத்துதலின் பேரில் வழக்கை வாபஸ் வாங்குகிறார்கள். 

வல்லபாய் பட்டேல் ஊரை விட்டுப் போய் கொஞ்ச நாட்களில் மறுபடியும் தலித்கள் தாக்கப்படுகின்றனர்.இப்படித்தான் காந்தியும் பட்டேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவி செய்வது போல செய்துவிட்டு, எதையும் செய்யமுடியாத நிலையிலோ அல்லது அக்கறையில்லாமலோ நடந்து கொண்டனர்.

சமூக பாதுகாப்பும் இஸ்லாமியர்களும்

-பல கிராமங்களில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள்.ஆனால் தலித்கள் பாதுகாப்பில்லாமல் இருப்பார்கள். 

பிளேட்டோ ஒரு விசயம் சொல்வார் முன்னெச்சிரிக்கை உள்ள சமூகம் “அந்நியனை” உபசரிப்பான் என்று. அந்நியன் என்றால் வேறு ஆள். ஏன் வேறு ஆளை உபசரிக்க வேண்டும்.கருணையா,அன்பா,பாசமா. இவையெல்லாம் இல்லை.அந்நியனை ஒருவேளை உபசரிக்காமல், அல்லது அவனை அவமானப்படுத்தினால் அவன் தன் இனத்திடம் அதை முறையிட்டு, அவர்கள் கும்பலாக போர் தொடுத்து விட்டால் அது சேதம்தானே.

அதே விதமாய்தான் இவர்கள் முஸ்லிம்களிடம் அமைதியாக இருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் மேல் கை பட்டால் நாடே திரும்பிப் பார்க்கும் அமைப்பு அவர்களிடம் இருக்கிறது.

ஆனால் தலித்களை யார் எங்கே அடித்தாலும் கேட்க ஆளில்லை.

இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் காந்தி திணறினாரா?

-இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் காந்தி சரிவர பேசவில்லை, தர்க்கம் செய்யவில்லை என்பதுதான் உண்மை.அவர் மிக அதிகமாகத் திணறினார்.வட்டமேஜை மாநாட்டை எதிர்கொள்ளும் பயிற்சியோ தரவுகளோ அவரிடமில்லை.உணர்ச்சிகள் மட்டுமே இருந்தது.

 ”எங்களுக்கான சட்ட மாதிரியை வடிவமைக்க ஏன் நீங்கள் உங்கள் பிரதிநிதியை அனுப்பி உதவி செய்யவில்லை” என்று காந்தி கேட்டதும் பலர் புருவம் உயர்த்தினார்கள்.இவர்கள் சட்டத்தை ஏன் பிறர் வடிமைக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்பதாகப் பார்த்தார்கள்.பல கேள்விகள் கேட்டார்கள்.காந்தியால் பதில் அளிக்க முடியவில்லை.அல்லது சமாளித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாம் வட்ட மேஜை மாநாடு காந்தியின் தோல்வியைக் காட்டிற்று.

ஆனால் அவர் நாடு திரும்பியதும் பிரமாண்ட வரவேற்பு பெற்றார். விமானத்தில் அவர் மேல் மலர் தூவ வேண்டும் என்று கூட காங்கிரஸ் முயற்சி செய்தது.

ஆனால் அது நடைபெறவில்லை. 

தாழ்த்தப்பட்டவர்கள் சார்பில் ஒரு கூட்டம் காந்திக்கு கறுப்புக் கொடி காட்டினார்கள். தனக்கு கறுப்புக் கொடி காட்ட இந்தியாவில் இருக்கிறார்களா என்ற வியப்பு காந்திக்கு வந்திருக்கலாம்.

காந்தியின் உண்ணாவிரதம் பற்றிய அச்சம்.

-தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதி ஒதுக்குவதில் உள்ள காந்தியின் ஒருதலைப்பட்சமான நிலையிலிருந்து பூனா ஒப்பந்தம் வரை நீளமாக இந்தப் புத்தகத்தில் வருகிறது.

காந்தியின் உண்ணாவிரதம் தனக்கு பெரிய தர்மசங்டத்தைக் கொடுத்ததாக அம்பேத்கர் சொல்கிறார்.ஒருவேளை காந்தியின் உயிருக்கு எதாவது ஆனால் அது இந்தியாவின் ஒட்டுமொத்த தலித்களையும் பாதிக்குமோ என்ற அச்சமும் தனக்கிருந்ததாக சொல்கிறார். தனித்தொகுதி ஒதுக்கினால் தாழ்த்தப்பட்டவர்கள் அப்படியே இருப்பார்கள் என்ற காந்தியின் வாதத்தை மறுத்து பல கருத்துக்களை சொல்கிறார் அம்பேத்கர்.

ஒவ்வொரு போராட்டத்துக்கும் ஒவ்வொரு மாதிரி ஆதரவு

-காந்தி, மகத் நகரம் மற்றும் நாசிக் நகரில் நடந்த தலித் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை.ஆனால் கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்தை அதிகம் ஆதரித்தார்.இதற்கு எளிதான காரணம் ஒன்று உண்டு. 

மகத் நகரம்,நாசிக் நகரம் போராட்டத்தை செய்பவர்கள் தலித்கள் அமைப்பு. ஆனால் வைக்கும் போராட்டத்தை செய்பவர்கள் காங்கிரஸ் கட்சி. காங்கிரஸின் நலன் தலித்களின் நலனை விட முக்கியம் என்று காந்தி நினைக்கிறார் போலும்.

தம்மை மேய்ப்பராக ஏற்றுக் கொள்ளாத ஆடுகளுக்கும் பாதுகாப்புத் தர காந்தியார் முன்வரமாட்டார் போலும்.

தகப்பன்களின் பெண்குழந்தை பாசம்...

மாமனாரிடம் அதிக மரியாதையாய் இருப்பேன். டிப்ளோமேட்டிக்காக இருப்பேன்.
ஹைதிராபாத்தில் செட்டிலான புதிதில் மாமாவும் அத்தையும் சென்னையிலிருந்து மகளின் நலம் காண வர, நாங்கள் அவர்களை மனமார வரவேற்று உபசரிப்புகள் செய்தோம்.
ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்றொரு கேப் பிடித்து ஹைதிராபாத்தை சுற்றினோம். சலார் ஜங் மியூசித்தைச் சுற்றி, என்.டி.ஆர் பார்க்குக்கு வரும் போது அங்கே ஒரு குல்பி ஐஸ் ? மாதிரி ஏதோ ஒரு ஐஸ் வண்டிக்காரர் நின்று கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
என் மனைவி என் காதில் போய் கிசுகிசுத்தார்.” அந்த ஐஸ் சாப்பிடுவோமா?
“அய்ய அதா.அதையா. போயேன்.அதப் போய் எவன் சாப்பிடுவான்”
“இல்ல சாப்பிடலாமே”
“எனக்கு அதப் பாத்தாலே அருவருப்பாயிருக்கு.பிடிக்கல. உனக்கு வேணுன்னா நீ வாங்கி சாப்பிடு. நான் வாங்கிட்டு வரமுடியாது”
“நீங்க வேஸ்டு.எனக்கென்னவோ சாப்பிடலாம் போல இருக்கு. கம்பெனி இல்லாம எப்படி சாப்பிடுறது”
“இந்த செண்டிமெண்ட் மொக்கயெல்லா இப்ப எனக்கு பிடிக்கல போயேன்” என்று கொஞ்சம் எரிந்து விழுந்தேன்.
துரதிஷ்டவசமாக இந்த டயலாக்கை என் மாமனார் கேட்டு விட்டார் போலும். இயல்பாக அமைதியாக இருக்கும் அவர். திடீரென்று பரபரப்பானார். தன் மகளின் சின்ன ஆசை நிராகரிக்கப்பட்டதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கொஞ்சம் அதட்டலாக,
”உனக்கு என்னம்மா வேணும். ஐஸா! நான் வாங்கிட்டு வாரேன். என் கிட்ட கேக்க வேண்டியதுதான” என்று குரலை உயர்த்தினார். நான் எதிர்ப்பார்க்காத குரல் உயர்த்தல் அது. அதிர்ச்சியாகி விட்டது. என் மனைவிக்கே அதிர்ச்சியாகிவிட்டது.
நான் அடிபட்ட மாதிரி குரலை மெல்லமாக வைத்துக் கொண்டு “ இல்ல மாமா வாங்கிக் கொடுக்கிறது கொடுக்காதது பத்தி என்ன இருக்கு.அவளுக்கு வேணுமின்னா அவ வாங்கி சாப்பிடட்டும்ன்னு சொன்னேன்.எனக்கு அந்த சுகாதாரம் சுத்தம் பிடிக்கலன்னுதான் சொன்னேன்” என்றொரு விளக்கம் அளித்தேன்.
மாமா அப்போதும் சமாதானம் ஆகவில்லை.இறுக்கமாகவே இருந்தார்.
என் மனைவியும் குறுக்கிட்டு “ யப்பா சும்மா கேட்டேன்.கொஞ்சம் தள்ளி குவாலிட்டி ? ஐஸ்கிரீம் நிக்கிரான் அங்க வாங்கிச் சாப்பிடலாம்” என்று பிரச்சனையை முடித்து வைத்தார்.( வேற என்ன வழியிருக்கு இந்தியப் பெண்களுக்கு  )
அன்று இரவு நானும் மாமாவும் ஹைதிராபாத் நிலவை ரசித்தபடியே முறுக்குத் தட்டை மற்றும் ஸ்பிரைட் குடிக்கும் போது அளவுக்கதிகமாக அன்பாக பேசிக்கொண்டோம்.
உறவை ஒட்ட வைப்பதில் கவனமாக இருந்தோம்.அவர் என்ன சொன்னாலும் நான் ஆமோதித்தேன். நான் சொல்ல வருவதை முன்கூட்டியே அவரே சொல்லி அதையும் அவர் ஆமோதித்தார். 
தகப்பன்களின் பெண்குழந்தை பாசம், எப்ப எங்குன வெடிக்கும்ன்னு தெரியாது... கவனமா டீல் பண்ணனும்

அம்பேத்கரின் வாசகம்...

ஒரு விசயம் சரியென்று உங்களுக்குப் படுகிறது.
அதை சமுதாயத்தில் நிறைவேற்றினால் மக்களுக்கு சமத்துவம் கிடைக்கும், நீதி கிடைக்கும், சுபிட்சம் கிடைக்கும் என்று தெளிவாக உணர்கிறீர்கள்.
ஆனால் அதை நீங்கள் நினைத்த அளவில் நிறைவேற்ற முடியவில்லை.
நிறைவேறுகிறது ஆனால் நினைத்த அளவுக்கு நுண்ணியமாக கூர்மையாக நிறைவேற்ற முடியவில்லை.
Ideal ஆன விசயத்தை அனைவருக்கும் பிடித்தமான ஒத்துக்கொள்ளத் தக்க விசயமாக ஆக்கும் போது இழப்புகள் வரும்.அந்த இழப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் முடிந்த அளவில் நல்லதை நிறைவேற்றத் துடிப்பதுதான் புத்திசாலித்தனம்.
இதற்கு அம்பேத்கார் ஒரு உதாரணம் சொல்கிறார்.
“எப்படி அம்மாவும் மகனும் திருமணம் செய்து கொண்டால் குற்றம் என்று சட்டமிருக்கிறதோ,
எப்படி அண்ணனும் தங்கையும் திருமணம் செய்து கொண்டால் குற்றம் என்று சட்டமிருக்கிறதோ,
எப்படி அப்பாவும் மகளும் திருமணம் செய்து கொண்டால் குற்றம் என்று சட்டமிருக்கிறதோ,
அப்படியே ஒரே ஜாதியில் திருமணம் செய்து கொள்வதும் குற்றம் என்றொரு சட்டம் இயற்றலாம்தான்.ஆனால் காலங்காலமாக ஜாதிவெறியில் அவர்களை அறியாமல் திளைத்திருக்கும் நம் மக்களின் தனிநபர் உரிமையில் அதிகம் தலையிடுவது மாதிரி ஆகிவிடும்.
ஆகையால் அந்தச் சட்டத்தை கொண்டுவர விரும்பவில்லை” என்கிறார்.
அதாவது நல்லது தெளிவாக தெரிகிறது .ஆனால் அந்த நல்லதை 100 பர்சண்ட் செயலாற்ற முடியவில்லை என்றால் முடிந்த வரை அட்லீஸ்ட் ஒரு 70 பர்செண்டாவது நிறைவேற்றுவதுதான் முறை.
அம்பேத்கார் இப்படி சொல்கிறார்.
“What is right i have not done
What is possible i have done"
தெளிவு...

ஆர்கனிக் பொருட்கள் காசுள்ளவர்களுக்கா ?

நேற்று பெசண்ட் நகர் ”ஸ்பேசஸ்” அரங்கங்களில் தோட்டத்தில் “கிரீன் பஸார்” என்றொரு கண்காட்சியைக் காண குடும்பமாக சென்றிருந்தோம்.
சுற்று சூழல் பற்றிய விழிப்புணர்வு, செயற்கை உரம் மருந்து பயன்படுத்தாத ஆர்கானிக் உணவு கண்காட்சி அது.
நுழைந்ததும் ஒரு தேன்நெல்லிக்காய் பத்துரூபாய் என்று கொடுத்தார் வாங்கி சாப்பிட்டோம்.
அதன் பிறகு நிறைய ஜாம் வகைகள் விற்கிறார்கள்.அதை டேஸ்டும் பார்த்துக் கொள்ளலாம்.நான் எல்லா ஜாம்களை டேஸ்ட் பார்த்து அது பற்றி தெரிந்து கொண்டேன்.பைனாப்பிள் சில்லி ஜாம் ஒரு பாட்டில் வாங்கினேன்.
பப்பாளிப் பழ அல்வா போன்ற பல உணவுவகைகளை சுவை பார்த்தேன்.பைனாபிள் கீரை ஜூஸும், ஸ்டிராபெர்ரி தேங்காய்ப்பாலும் வாங்கிக் குடித்தோம் (ஒரு டம்பளர் வாங்கி மூன்று பேரும் கொஞ்சம் கொஞ்சம்).
துளசி ஹெர்பல் டீ வாங்கி குடித்தோம்.
இது போன்ற கண்காட்சிகளில் ஸ்டால்காரர்களே சுவை பார்க்க ஸ்பூனில் எடுத்து நம் வாயில் நீட்டினாலும், நாம் அதை சுவைபார்க்க கூச்சப்படுகிறோம்.புதிதாய் ஒன்றை விசாரித்துத் தெரிந்து கொள்ள அவ்வளவு கூச்சம் நமக்கு. ஒருமாதிரி கோணலாக ஒதுங்கிப் போகிறோம்.
சுற்றுச்சூழலுக்கான தென்னை நார் தொட்டி, விதைகள், நாப்கின்கள்,சோப்கள் என்று எல்லாவற்றையும் ஒரு ரவுண்ட் தெரிந்து கொண்டோம்.
“இந்த மாதுளம் பழங்கள் அழகாயில்லை என்று நினைப்பீர்கள்.ஆனால் எந்த மருந்தும் அடிக்காத மாதுளம்பழங்கள் இப்படித்தான் இருக்கும்.ஆனால் ஆரோக்கியம்” என்றார் ஒருவர்.
கீழ் அரங்கில் இருந்த Indoor games பிரிவில் போய் அங்கே இருந்த விளையாட்டுகளை சம்பளம் போட்டு உட்கார்ந்து விளையாடினோம்.
ஒரு பெண்மணி ”கரடி மலை மீதியேறி என்ன கொண்டு வந்தது?” என்ற பாடலை தானும் பாடி,சிறுவர்கள் கூட்டத்தையும் கோரஸாக பாடவைத்துக் கொண்டிருந்தார்.
வெளியே வந்தால் அங்கே ஒருவர் சுற்றுசூழல் பற்றி மைக்கில் கதை சொல்லிக்கொண்டிருந்தார் ,
ஒரு ராஜா நைட்டு தூங்கும் போது, தவளைகள் சத்தம் தொந்தரவா இருக்குதுன்னு, எல்லாத் தவளைகளையும் கொல்லச் சொன்னாராம். வீரர்கள் கொன்னுட்டாங்களாம்.
ஒருவாரம் பொறுத்து வழக்கத்துக்கு மாறாக அதிகம் கொசுக் கூட்டங்கள் ராஜாவைக் கடிச்சிருக்கு.ராஜா கேட்டாராம்
“என்ன மந்திரி இப்படி கொசுக்கடிக்குதுன்னு”
“கொசுவ எல்லாம் பிடிச்சித் திங்கிற தவளைகள கொன்னுட்டோமே மன்னா! அப்ப கொசுக்கள் நிறைய வளரத்தான செய்யும்”
என்று கதை சொன்னார்.
நான் சத்தமாக கைத்தட்டி என் பாராட்டை வழங்கினேன்.நல்ல திருப்தியான மனதோடு வெளியே வந்தோம்.
வரும் போது ஸ்பேசஸ் அரங்கை விட்டு அரைக் கிலோ மீட்டர் தூரத்தில் மீன் விற்றுக் கொண்டிருந்தார்கள் பலர்.அவர்கள் பிள்ளைகள் எல்லாம் அருகில் நின்று கொண்டு விளையாடிக்கொண்டிருந்தன.
இவர்களுக்கு இந்த கிரீன் பஸாரில் கலந்து கொள்ள அனுமதி உண்டா? திடீரென்று இவர்கள் எல்லாம் “நாங்களும் சுற்றுச் சூழல் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறோம்” என்று நுழைந்தால் ஸ்பேசஸுக்குள் விடுவார்களா? நம் வெள்ளை சொள்ளை மக்கள்.
இது மாதிரியெல்லாம் யோசித்ததாலே, நான் ஒரு நல்லவன் என்ற உணர்ச்சியோடு குடுமப்த்தோடு.ஆட்டோவில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.

அம்பேத்கர் காந்தியிடம் கேட்ட கேள்வி...

காந்தி ஹரிஜன சேவாக் சங்கம் ஆரம்பிக்கிறார்.
காந்தியின் கொள்கைப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்காக தாழ்த்தப்பட்டவர்கள் போராடத் தேவையில்லை.அவர்களுக்காக மற்ற ஜாதியினர்தான் போராட வேண்டும்.
ஏனென்றால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தீங்கிழைத்து வைத்திருப்பதின் பொறுப்பை மற்ற ஜாதினரே ஏற்று அதைக் களைய முயற்சி செய்ய வேண்டும்.
இப்படி ஒரு விநோதமான கொள்கையை அறிவிக்கிறார்.
ஆரம்பகட்டத்தில் ஹரிஜன சேவாக் சங்கத்தில், இணைந்து பணியாற்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆசைப்படும் போது இந்த விநோதக் கொள்கையைக் காட்டி மறுக்கிறார் காந்தி. ( நீ சுமமா இருல உனக்கு உரிமை நாங்க வாங்கிதருவோம்)
இதற்கு அம்பேத்கார் தன்னுடைய சிறுபத்திரிக்கையில் ஒரு பதில் கேள்வி கேட்கிறார்
“ஐயா காந்தி அவர்களே! அடிமைப்படுத்தியவன் தான் சுதந்திரமும் வாங்கித் தரவேண்டும் என்றால், இந்தியர்களை அடிமைபடுத்திய ஆங்கியலேயர்களை எதிர்த்து,நாம் ஏன் போராட வேண்டும்.ஆங்கிலேயர்களிலேயே நல்லவர்கள் பலர் இருக்கிறார்களே அவர்கள் போராடுவதுதானே முறை” என்றொரு கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பினார்.
ஜெயமோகன் போல காந்தி அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
வழக்கம் போல காந்தி ரசிகர்கள் காந்தியை வாழ்த்திக் கொண்டே இருந்தார்கள்.
அந்த அதீத வாழ்த்தொலியில் அம்பேத்கார் எழுப்பிய பல அர்த்தமுள்ள கேள்விகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன என்பது சோகமான உண்மை.

அம்பேத்கரை ஏன் கொண்டாட வேண்டும்...

பாரதியாரை அனைவரும் புகழ்கிறார்கள்.நல்ல விசயம். எனக்கும் பாரதியை ரொம்பப் பிடிக்கும்.பாரதியின் ஒன்றிரண்டு நெகட்டிவ் விசயங்களை வைத்து அவரை தூற்ற நான் தயாராயில்லை.விமர்சிக்கலாம்.ஆனால் தூற்ற முடியாது.
Force is an action exercised on a body so that is changes or tends to change in the direction of the applied force. என்றொரு டெஃப்னிசன் சொல்வார்கள்.
அதில் வரும் "Tends to change" என்பதுதான் முக்கியமானது. அதாவது ”மாற்றத்துக்காக முனைவது”.
பாரதியார் அது போல முனைந்தார்.அதில் ஒன்றிரண்டு முன்னேப் பின்னே இருக்கலாம்.அதை மட்டுமே வைத்து அவர் ஒட்டு மொத்த நோக்கத்தை சந்தேகப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை.
அடுத்து பாரதியார்,காந்தி போன்றவர்கள் ஒரு Icon ஆக பரவியிருக்கிறார்கள்.
சரவணா ஸ்டோர்ஸ், ஐபோன், பென்ஸ் கார், இது போல சட்டென்று எல்லோருக்கும் தெரியும் ஐகான்களாக மாறியிருக்கிறார்கள்.
இதற்கு நமது கல்வித் திட்டமும், நம் அப்பா அம்மாவும் முதல் காரணம்.ஏனென்றால் கல்வித் திட்டத்தில் பாரதியார்,நேரு,காந்தியெல்லாம் புகழப்படுகிறார்கள்.அதைப் படித்த அப்பா அம்மா அதையே நமக்கு போதிக்கிறார்கள்.முடிவாக நமக்குள் பாரதியாரும் காந்தியும் மட்டுமே படிந்து விடுகிறார்கள்.
தலைவன் பெரியவனா? தலைவனுடைய கருத்தா? என்று பார்க்கும் போது தலைவனின் கருத்துதான் பெரியது என்பதில் உண்மை இருக்கிறதென்றாலும், சமூகம் சொல்பவனை எப்போதும் பார்க்கிறது.இதை யார் சொல்கிறார்கள்? அவனுக்கு ஒரு கவர்ச்சி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.(அந்தக் கவர்ச்சியை உருவாக்கத்தான் ஜெயமோகன் சாரு போன்றவர்கள் பல கவர்ச்சி வாக்குமூலத்தை பேசுகிறார்கள் என்பது என் கருத்து).
பாரதியாருக்கும் காந்திக்கும் அந்த கவர்ச்சியை கல்வித்திட்டமும்,அப்பாக்களும் அம்மாக்களும், அந்த அப்பா அம்மாக்களால் வளர்க்கபட்ட ஊடகங்களும், திரைப்படங்களும் இயல்பாகவே கொடுத்துவிடுகின்றன.
நீங்கள் கவனித்துப் பாருங்கள் பாரதியின் மீசையை ஒவ்வொரு ஒவியன் வரையும் போதுஅது அதிக தன்னம்பிக்கையாகவும் கூர்மையாகவும் ஆகிக்கொண்டே இருக்கிறது.அந்தக் கூர்மை முடிவில்லாத போற்றுதலின் வெளிப்பாடுதான்.கண்களின் ரவுத்திரமோ ஏறிக்கொண்டே இருக்கின்றது.
ஆனால் அம்பேத்கார் போன்ற தலைவர்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.
அம்பேத்கார் பாரதியை விட ஆயிரம் மடங்கு உக்கிரமான சமூக சிந்தனை உடையவராக, அறிவுப் பூர்வமாக இருந்திருக்கிறார்.அம்பேத்கார் அறிவியல் மற்றும் மானுடவியல் தெரிந்த ஒரு அறிஞர்.அவரைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? அதிகம் தெரியாது.
காரணம் அம்பேத்கார் பற்றி கல்வித் திட்டத்தில் அதிகம் இல்லை.ஆகையால் அப்பா அம்மாவுக்கு அவரைத் தெரியாது.அதனால் நம் யாருக்கும் அவரைத் தெரியாது.
அம்பேத்காரைத் தெரியாவிட்டால் ஒன்று குடிமுழுகிவிடாது. ஆனால் அவர் சொன்ன அற்புதமான கருத்துக்களை விவாதம் செய்ய சிந்திக்க அவரை கட்டாயம் கொண்டாடி ஆகவேண்டியதிருக்கிறது.
என் மகளிடம் அம்பேத்கார் புகைப்படத்தைப் பார்த்து “இவர் பெரிய அறிவாளி” என்று ஏற்றிப் பாடினால்தான் அவள் அவரை உற்று கவனிப்பாள்.ஆகையால் நாம் அனைவரும் அம்பேத்கார் புகழ்பாடக் கற்றுக் கொள்ள வேண்டும்.அவரை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க பாடுபட வேண்டும்.
“ஐயோ அம்பேத்கார் என் மதத்தைத் திட்டியிருக்கிறாரே.என் ஜாதியை திட்டியிருக்கிராரே அவரை எப்படி என் அடுத்த தலைமுறையினரிடம் சேர்ப்பேன் என்ற அச்சம் பலருக்கு இருக்கலாம்.
அம்பேத்கார் இருந்த காலத்தில் இருந்த தன்மையை விளக்கி அதனால் அவர் அப்படிச் சொன்னார்.இன்று இதே ஜாதிக் கொடுமையை “ஜாதி இந்துக்களும்” அதிகம் செய்கின்றனர் என்று விளக்கலாம்.
“ஒஹோ! கீழ்வெண்மணி பயங்கரத்தில் நாடாரும் ரெட்டியாரும் தேவரும் அவரும் இவரும் என்று எல்லா ஜாதி இந்துக்களும் ஈடுபட்டிருகின்றனரா?.ஏன் அவர்கள் இப்படி ஈடுபட்டார்கள்” என்றொரு குழந்தை கேட்க வேண்டும்.அப்படிக் கேட்பதின் மூலம் அவர்களிடமிருந்து ஜாதி இந்துக்களின் கொடுமைகளை தட்டிக் கேட்கும் பல அம்பேத்கார்கள் உருவாகும் வாய்ப்பு உருவாக வேண்டும்.
அதற்கு அம்பேத்காரை மிகப்பெரிய செலிப்பிரிட்டியாக நாம் கொண்டாட வேண்டும்.அதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
இந்தப் பத்தி கைபோன போக்கில் போகிறது.எங்கே நிறுத்த வேண்டும் என்று தெரியவில்லை.ஆகையால் நிறுத்திக் கொள்கிறேன்.

Tuesday, 2 December 2014

”கேட்டு மறுத்த” ...

கடுங்காய்ச்சலில் சுருண்டு படுத்திருக்கும்
குழந்தையின் முன்
”கேட்டு மறுத்த” பொம்மைகளையெல்லாம்
வாங்கி கொட்ட வேண்டுமென்ற தவிப்பு...

மனுஷா மனுஷா - 36 வருடமாக நிகழ்த்தப்படும் நாடகம்...

ஞானி நடத்தும் பரீக்‌ஷா நாடகக் குழுவின் நாடகங்களைப் பார்த்தேன்.
தன் 24 வயதில் இதைத் தொடங்கி 36 வருடங்களாக நடத்தி வருவதாக ஞானி சொன்னபோது மலைப்பாக இருந்தது.
அம்பையின் கதையொன்றின் பகுதியும்,”மனுஷா மனுஷாவும்” நாடகமாக காட்டினார்கள்.
”மனுஷா மனுஷா” வில் உள்ள எளிய வசனங்களும், பகடிகளும் என்னை ஈர்த்தன.அதில் வியாபாரியாக நடித்த தமிழரசி என்றப் பெண் மிக அருமையாக நடித்திருந்தார்.
விஷ்ணுபுரம் சரவணனையும், அவர் தோழி எல்.கே.ஜி படிக்கும் சாதனாவையும் பார்த்தேன்.சாதனாவின் குறும்பையும் குழந்தைதனத்தையும் ரசித்தேன்.
சரவணனிடம் பேசிக்கொண்டிருந்த போது “கமர்கட்” பாக்கெட் ஒன்றைக் கொடுத்து “விஜய் உங்க பொண்ணுக்கு கொடுங்க” என்றார்.
ஐந்து கமர்கட்டுகள் ஒரு பாக்கெட்டுகள் இருந்தன.எனக்கு அதில் ஒன்றை அப்போதே சாப்பிட வேண்டும் போல இருந்தது.
”இவரு வேற கொழந்தைக்கு குடுங்கன்னு சொல்லிட்டாரு இனிமே எங்க பாக்கெட்ட உடைக்கிறது.ஆட்டோவுல ரிட்டர்ன் போகும் போது உடச்சிரவேண்டியதுதான்” என்று நினைத்து ஆர்வத்தை அடக்கிக் கொண்டேன்.
என் மனவோட்டத்தை சரவணன் புரிந்து கொண்டிருப்பார் போலும், தன் பாக்கெட்டில் இருந்து ஒரு கமர்கட்டை எனக்கு எடுத்துக் கொடுத்தார்.
பிரித்து வாயில் போட்டேன்.கடிக்கக் கூடிய கடினமாய் சுவையாகவே இருந்தது.அதை சவைத்தபடியே நாடகத்தைப் பார்த்தேன்.
இன்று காலை டீ, காலை உணவு, வீடு பெருக்குதல்,பாத்திரம் கழுவுதல், மதிய உணவு,மாலை டீ, மாலை வீட்டுக்கு வெளியே பெருக்கி ஸ்டார் கோலம் போட்டது வரை நானே செய்தேன் ( அத வெளிய சொல்றதுல ஒரு சந்தோசம்  ) இதையெல்லாம் செய்து முடிக்கும் போது மணி ஐந்தே கால்.
நியாயப்படி நான் ரெஸ்ட் எடுக்க வேண்டும்.
நான் உடனே ஆட்டோ எடுத்துக் கொண்டு அரக்கப்பரக்க,ஞானியின் நாடகம் பார்க்கப் போனேன் என்றால் என்ன அர்த்தம்.
கலை மேல இருக்கிற லவ்ங்க 

Dig for Victory

இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டனில் உணவுத் தட்டுப்பாடு ஆரம்பமாகிறது.

அதுவரை உணவையும் பழங்களையும் அமெரிக்கா கனடாவிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்த பிரிட்டனுக்கு போரினால் அதை செய்ய முடியாத சூழ்நிலை.

ஜெர்மெனிகாரன் கப்பலை வரவிட மாட்டேங்குறான்.அதில்லாம போர் வீரர்களை ஏற்றிச் செல்ல உணவு கப்பலையும் பிரிட்டன் பயன்படுத்தியது.விளைவு உணத் தட்டுபாடு.

ரேசன் முறை அமுலுக்கு வருகிறது.அது மட்டும் அரசுக்கு நிலமையை சமாளிக்க போதவில்லை.

அதனால் ”வெற்றிக்காக தோண்டு” ( Dig for Victory) என்ற கோஷத்தை முன்வைக்கிறது அரசு.இந்தத் திட்டத்தின் குறிக்கோள் கிடைக்கும் எல்லா இடங்களிலும் காய்கறி மற்று உணவுச் செடிகள் பயிரிடுவது.பெண்களையும் நிறைய அளவில் விவசாயம் செய்ய வைப்பது போன்றவையாகும்.

வீட்டில் இடமில்லாதவர்களுக்கு அரசு தோட்டம் போட இடம் கொடுத்தது.எங்கெல்லாம் இடமிருக்கிறதோ அங்கெல்லாம் காய்கறித் தோட்டம் போட்டார்கள்.வீட்டுக் பக்கத்தில் கொஞ்சூண்டு இடமிருந்தாலும் அதில் இரண்டுக் கத்திரிக்காய் செடிகளை நட்டார்கள்.தரிசு நிலத்தை சிறிய அளவில் தயார் செய்து அதில் உணவு பயிரிட்டார்கள்.

நகரில் இருக்கும் பார்க்குகளில் கூட காய்கறிகளை பயிரிட்டார்கள்.
மக்கள் வீடுகளில் கோழி ஆடு முயல் போன்றவற்றை வளர்க்க உற்சாகப்படுத்தப்பட்டனர்.

காய்கறிகளை வீணாக்காமல் சாப்பிடுமாறு மக்களுக்கு யோசனை சொன்னார்களாம். காலிஃபிளவரில் இருக்கும் பச்சைத் தண்டுகளையும் இலைகளையும் சாப்பிடச் சொன்னார்கள்.அதற்கென்று தனி சமையல் குறிப்புகள் வந்தனவாம்.பட்டாணியின் தட்டையையும் வீணாக்க்காமல் சாப்பிடச்சொன்னார்களாம்.

”தோண்டு தோண்டு நாட்டின் வெற்றிக்காக தோண்டு” என்பது ஒவ்வொரு பிரிட்டன் குடிமகனின் உள்ளத்திலும் ஆழமாக பதிய, அந்த நாடு உணவுப் பஞ்சத்திலிருந்து தப்பியதாம்.

Dig for Victory எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள் கோஷம்.

பிரிட்டனின் Dig for Victory மாதிரி பிரச்சாரமாக மோடியின் ”சுத்தமாக இந்தியாவை வைத்தல்”(தனிமனித அளவிலான முயற்சி) பிரச்சாரத்தையும் நாம் ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்ளலாம்.

நம்மால் முடிந்த அளவுக்கு குப்பையில்லாமல் சுத்தமாக வைக்க முயற்சி செய்யலாம்.


ரூல் 72...

வட்டி நம்ம எல்லாருக்கும் தெரியும்.
கூட்டு வட்டி (Compound interest) என்பதும் நமக்குத் தெரியும்.அதாவது முதல் வருடத்தின் வட்டி, முதலோடு இணைந்து கொள்ளும்.
அந்த வட்டியும் முதலுமான தொகைக்கு இரண்டாம் வருடம் வட்டி வரும்.அந்த வட்டி மறுபடி முதலோடு இணையுமாம்.
இதுக்கு ஒரு ஃபார்முலா இருக்கு அப்படிங்கிறதெல்லாம் தெரிந்த தகவல்தான்.
அப்படி நான் பொதுவாப் படிக்கும் போது Rule 72 என்றொரு சுவாரஸ்யமான ஒரு தகவல் படிச்சேன்.
”முதல் பணம்” எப்ப இரட்டிப்பா ஆகும். அதாவது கூட்டுவட்டி சேர்ந்து சேர்ந்து எப்ப டபுளா ஆகும், அப்படிங்கிறத டக்குன்னு கண்டுபிடிக்கிறதுக்கு இந்த ரூல் 72 ஆம்.
இந்த ரூல் 72 படி,
வருடத்துக்கு 10 % வட்டி என்ற வைப்புத்தொகை, கூட்டுவட்டியின் துணையோடு எத்தனை வருடங்கள் கழித்து இரட்டிப்பாகும் என்று பார்க்க வேண்டுமானால், 72 என்ற எண்ணை
வட்டி பர்சண்டேஜான ‘10’ ஐக் கொண்டு வகுக்க வேண்டும்.
72/10 = 7.2
பத்து பர்சண்ட் வட்டி என்றால் , 7.2 வருடங்களில் அந்தத் தொகை டபுளாக ஆகும்.(தோராயமாக, ரொம்ப பக்கத்துல).
நமக்கு நல்லாத் தெரிஞ்ச ’கிஸான் விகாஸ் பத்திரம்’ திட்டத்த உதாரணமா எடுத்துக்குவோம்.
அது எப்ப இரட்டிப்பாகும்.
8 வருடம் 4 மாசத்துல,
அதோட வட்டி என்ன ?
8.7 %
ரூல் 72 படி = 72 / வட்டி = 72/8.7 = 8.275 வருடம்
0.275 வருசம்னா கிட்டத்தட்ட நாலு மாசம்.
அப்ப 8.275 வருடம்ன்னா = 8 வருடம் 4 மாசம்.
யாராவது ஒரு ஃபிக்சட் டெப்பாசிட் பத்தியோ, வேற எதாவதோ ஸ்கீம் பற்றி சொன்னா “டக்குன்னு கணக்குப் போட” இந்த ரூல் 72 உபயோகமா இருக்கும்...

மனைவியை அடித்தால்...

பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நாட்டிங்ஹாம் பகுதியைச் சுற்றிய கிராமங்களில் இப்படி ஒரு பழக்கம் இருந்தது.
மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தும் கணவனைத் திருத்த கிராமக்குழுக்கள் செய்யும் செயல் அது.
பெரிய டிரம்பட்கள்,பழைய பாத்திரங்கள்,ஊத்துகள் என்று எடுத்துக் கொண்டு அந்த குழு கிராமத்துக்குள் உலா வரும்.
மனைவியை அடிப்பதாக குற்றம் சொல்லப்படும் நபரின் வீட்டின் முன் நின்று சத்தமாக நாராசமாக ஊருக்கே கேட்கும் படி ஒரு பாட்டைப் பாடுவார்கள்.
அந்தப் பாட்டை நான் கொஞ்சம் மொக்கையாய் எனக்கு தெரிந்த அளவில் தமிழில் கொடுக்கிறேன்.எஸன்ஸ் அளவில் சரிதான்.
// நம்மூரில் ஒரு மனிதன்
அவன் பெயர் ஹோட்ஜ் போட்ஜாம்.
எப்போதும் மனைவியை அடிப்பவனாம்
வெட்கமில்லாத வெறும் பயலாம்.
அவள் சிநேகமற்றவளா அடிக்க;
இல்லை இல்லை
அவள் கோபக்காரியா அடிக்க;
இல்லை இல்லை
கால்சட்டை போட ஆசைப்பட்டால்
காலால் மிதிப்பானா பாவிப்பயல். //
இப்படி பாடி அவனை அவமானப்படுத்துவார்கள்.அது மாதிரி மூன்று நாட்கள் அப்படி இசைக் கச்சேரி நடக்கும்.
அதன் பின் மனைவியை அடிப்பவனின் கொடும்பாவியை ஊருக்கு நடுவே வைத்து எரிப்பார்கள்.
நம்ம ஊரில் 2014 இல இதே சிஸ்டம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால்,
ஒரு இரவு கூட நம்மால் தூங்கமுடியாத அளவுக்கு நாரச இசை நம் காதுகளில் விழும்
என்று சொன்னால்
அதை யாரும் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

ஏடிஎம் காவலாளிகள்...

இந்த ஏடிஎம் காவலாளிகள் இறந்து கொண்டே இருக்கிறார்கள்.
யாராவது அவர்களை கொன்று கொண்டே இருக்கிறார்கள்.
சமீபத்தில் கூட டில்லில் 1.5 கோடி ரூபாய்த் திருட்டில் ஒரு காவலாளியை கொன்றிருக்கிறார்கள்.
பல ஏடிஎம் காவலாளிகளை இரவு நேரத்தில் கொல்கிறார்கள்.அவர்கள் இரவெல்லாம் அரைகுறையாக கண்விழித்து தங்கள் வேலையை செய்து முடித்து, சட்டமாய் விடியும் காலையில், நிம்மதியாய் போது வீட்டுக்குப் போய் தூங்கலாம் என்ற ஆசையோடு இருக்கும் போது கொன்று விடுகிறார்கள்.
அந்த ஏடிஎம் காவலாளிகள் அந்த வருடம் சபரிமலைக்கோ திருப்பதிக்கோ போகலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது கத்தியால் சொருகப்பட்டோ, சுடப்பட்டோ, கழுத்து நெறிக்கப்பட்டோ,பெரிய கல்லால் முகம் சிதைக்கப்பட்டோ சாகடிக்கப்படுகிறார்கள்.
மாதம் 6000 ரூபாய்,ஒருநாளுக்கு 200 ரூபாய் சம்பளத்துக்கு வரும் அந்த ஏடிஎம் காவலாளிக்கு கனவுகள் இருக்குமா இல்லையா என்பது பற்றி ஒரு நொடி யோசிக்காமலேயே இருக்கிறேன்.அவர்களின் இறப்புச் செய்திகள், செய்தித்தாள்களின் ஒரு அங்கமாக ஆகிவிட்டன.
6000 ரூபாய் மாதம் சம்பாதிப்பவனுக்கு என்ன மரியாதையை இந்த உலகம் கொடுத்து விடப்போகிறது.அதுவும் இந்திய ஆணாதிக்க சமூகத்தில் அவனுக்கு “சாணி மிதித்த கல்” லுக்கான மரியாதை கூட கிடைக்காதுதான் என்பதை நான் அறிந்து வைத்திருக்கிறேன்.
ஒரு ஏடிஎம் காவலாளி இறந்த உடன் இன்னொரு காவலாளி காத்திருக்கிறார் அந்த இடத்தைப் பிடித்து யாரோ ஒரு திருடனால் சாகடிக்கப்பட.
இந்தியாவில் 80 சதவிகிதத்துக்கும் மேலாக வறுமைக் கோட்டிற்கு கிழே பிறக்கும் ஜீவன்கள்தாம்.இந்திய ஆண்கள் அதிகம் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள்.இந்திய பெண்கள் அதிகம் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள்.அவர்கள் காமத்துக்கு நிறைய குழந்தைகள் பிறக்கின்றன.
பிராய்லர் கோழிகள் 50 நாட்களில் நமது ஞாயிறு காலை இட்லி தோசைக்கு மசாலாவோடு சேர்ந்து மகிழ்விக்க வளர்க்கப்படுவதைப் போல, இந்த Afterall ஏழைகள் நமக்காக வளர்ந்து வருகிறார்கள்.
அவர்களுக்கு பள்ளி வசதி, அடிப்படை வசதி,உறைவிட வசதி,சுகாதார வசதி எதுவும் கிடையாது.அந்த ஏழைக்குழந்தையின் தாய் தந்தை படித்தவர்கள் இல்லை.
இங்கே அந்த ஏழைக்குழந்தைக்கு Parrallel ஆக அதே காலகட்டத்தில் ஒரளவுக்கு வசதியான குழந்தை அம்சமாக வளர்கிறது.
ஏழைக்குழந்தை எப்படி இந்த உலகத்தில் பிழைக்க வேண்டும் என்று தெரியாமல் முழித்துக் கொண்டு அயர்ன் செய்பவனாகவும், குளத்து வேலை செய்பவனாகவும், வீட்டு வேலை செய்பவனாகவும், வயதாகி ஏடிம் காவலாளியாகவும் ஆகிறான்.
வசதியான குழந்தை படிக்கிறது.அதிகாரத்தைக் கைப்பற்ற, கைநிறைய சம்பாதிக்க படிக்கிறது. கோட்டூர்புரம் லைப்ரரிக்குச் சென்று சர்வீஸ் எக்ஸாமுக்கு வெறித்தனமாக படிக்கிறது.
அரசு உயரதிகாரி ஆகிவிட வேண்டும்.எல்லோரையும் அதிகாரத்துக்குள்ளும் பணங்காசுக்குள்ளும் அடக்கிவிடும் வெறி அந்த குழந்தையின் ஆழ்மனதில் ஏறிக்கிடக்கிறது.
அதை ஏற்கனவே ஒழுங்காக கோவிலுக்கு போய், பிறந்த நாளுக்கு சுவையான சர்க்கரை பொங்கல் வைத்து ஊட்டி விடும் அவன் ”குடும்ப அம்மாவும்”, தனக்கு மட்டும் அடிமையாயிருக்க வேண்டும் என்ற மறைமுகப் பொருளோடு போலி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும் “குடும்ப அப்பாவும்” அவன் மனதில் ஏற்றியிருக்கிறார்கள்.
அவன் படித்து சம்பாதித்து ஏடிமில் நிறைய காசு வைத்திருக்கிறான்.அதை பாதுகாக்கும் ஏடிம் காவலாளி அநியாயமாக செத்து விடுகிறான்.படிக்காவிட்டால் சம்பாதிக்காவிட்டால் அப்படித்தான் இந்திய சமூகம் சகஜமாக கொன்று விடும் என்பது அந்த ஏடிம் காவலாளிக்குப் புரியவில்லை.
எனக்கொன்றும் இல்லை.
எனக்குக் குறையே இல்லை.
நேற்றுதான் பூட்டிய உறுதியான வீட்டில், மனைவியோடு மகிழ்ச்சியாக கலந்தேன்.அதன் பின் ஒரு கப் தயிரும் சீனியும் கலந்து புளிப்பினிப்பு லஸ்ஸி குடித்தேன்.
கொஞ்சம் இறைவன்.கொஞ்சம் இயற்கை ரசிப்பு.
ஒருவேளை குரு இருந்திருந்தால் அவருக்கு விழா எடுத்திருப்பேன்.
குழந்தைக்கு மாதா மாதம் விளையாட்டு சாமான்கள் வாங்கிக் கொடுக்கிறேன்.அவள் அதற்காக எனக்கு முத்தம் கொடுக்கிறாள்.
இந்த ஏடிம் காவலாளிகள்தாம் செத்துப் போய்விடுகிறார்கள்.அது எனக்கொரு செய்தியே இல்லை.அது பற்றி ஒரு விநாடிகூட நான் யோசித்துக் கவலைப்படத் தேவையில்லை.
எனக்கு இரக்க மனத்தில்லையா ? இரக்க மனதை ஒரு Element ஆக நான் வைத்திருக்கவில்லையா? வைத்திருக்கிறேன்.
அதோ அன்று புலி ஒருவனை மிருகக்காட்சி சாலையில் கொன்றதே அன்று இரக்கப்பட்டேன்.
இதோ பவுன்சர் பாலில் அடிபட்டு இறந்தாரே ஆஸ்திரேலிய வீரர் அவருக்காக கண்ணீர் சிந்தினேன்.
இரக்கப்படுவதற்கென்று ஒரு தகுதி இருக்கிறது.
அந்த இறப்பில் ”சம்பவங்களின் விசேசம்” இருக்க வேண்டும். அந்த ”சம்பவங்களின் விசேசத்தின்” தனித்தன்மையும் வித்தியாசத்தையும் பார்த்துதான் என் மனம் இரங்கும்.
சும்மா ஒரே மாதிரியாக செத்துக் போகும் ஏடிம் காவலாளிக்காக இல்லை

Saturday, 22 November 2014

கடவுளும் பலூனும் ...

கடவுள் பலூனை என் கையில் கொடுத்தார்.
”ஊதி, நூலால் கட்டி வை!.பார்க்க அழகாக இருக்கும்.நின்று நிதானமாக ரசி!” என்றார்.
நான் ஊதினேன்.
சமூகம் சொன்னது “இந்த பலூனை எவ்வளவு பெரியதாக ஊதுகிறாயோ அவ்வளவு அழகாக இருக்கும்.அதை ஆனந்தமாக ரசிக்கலாம்” என்றது.
நான் வெறித்தனமாக அடிவயிற்றிலிருந்து காற்றெடுத்து ஊதினேன்.பலூன் பெரிதாய்ப் போய்க் கொண்டிருந்தது.
”ஆஹா அவன் எவ்வளவு அழகா ஊதுறான் பாரு” என்றார்கள் . இன்னும் ஊதினேன்.இன்னும் ஊதினேன்.
தன்னம்பிக்கை வகுப்பெடுப்பவர் சொன்னார்” இன்னும் ஊதலாம்” என்று. இன்னும் ஊதினேன்.
வித்தியாசமாக எதையாவது செய்து பலூனைப் பெரிதாக்க நினைத்தேன்.
நானே பலூனுக்குள் புகுந்து, ஆம்! பலூனுள் புகுந்து ஊதினேன்.
பெரிதாக பெரிதாக கர்வம் வந்தது.
என் பலூன் பெரியது என்று தம்பட்டம் அடிக்க வேண்டும் போல இருந்தது.
இதையெல்லாம் தாண்டி கடவுள் சொன்னது ஞாபகம் வந்தது “பார்க்க அழகாக இருக்கும்” நான் பார்க்க வேண்டும்.என் அழகிய வண்ண பலூனைப் பார்க்க வேண்டும்” என்று நினைத்தேன்.
பலூனை விட்டு வெளியேறப்போனேன்.வாசலை அடைத்த அடைப்பே நான்தான் ஆனதால், அசைந்தால் பலூன் காற்று வெளியேப் போனது.பதற்றமாக மறுபடியும் உடலால் பலூன் வாசலை அடைத்தேன்.
மாட்டிக்கொண்டேன்.வெளியேப் போக முடியாது.
போனால் பலூனில் ஒரு துளிக் காற்றுக்கூட இருக்காது.,”காற்றில்லா பலூன்காரன்” என்று காறித்துப்புவர்கள்.
இப்போது என்ன செய்ய? என்ன செய்ய? வேறு வழியே இல்லை. என் பெரிய பலூனை, நான் பார்த்து ரசித்து அனுபவிக்க முடியாத பலூனை அப்படியே வாசல் பக்கம் நின்று அடைத்து காற்றைப் பிடித்துக் கொண்டேன்.என்னால் அதை தள்ளி நின்று பார்க்கமுடியாத நிலை.
பலூன் வழியே வெளியே உலகம் தெரிந்தது.
அங்கே பலர் அளவாக ஊதி பல வண்ண பலூன்களை ரசித்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது ஏதோ தவறு செய்துவிட்டேன் என்று தோன்றியது.
ஆழ்மனத் தோன்றலை வேக வேகமாக வெளிமனது மணலிட்டு மறைத்தது.
நான் ஆவேசமாக “என்னால விளையாட முடியாமப் போகலாம், பார்த்து ரசிக்கமுடியாமல் போகலாம்.ஆனால்என்னுடைய பலூன்தான் ரொம்ப்ப் பெரிசு” என்று கத்துவதைக் கேட்காமல் அவரவர வேலையை செய்து கொண்டிருந்தனர்.
சலிப்பில் இந்த்ப் பக்கம் திரும்பினேன்.
அங்கே புதிதாய் வந்த பலர்ஆர்வத்துடன் ,
கடவுளிடமிருந்து பலூன் வாங்கி ஊதிக்கொண்டிருந்தனர்.

ஃபேஸ்புக் நன்மைகள்...

ஃபேஸ்புக்கின் பெரிய அட்வாண்டேஜில் சில...
1.அழகானவர்களிடம் பழக முடிகிறது.
அதிலும் அழகான எதிர்பாலினர்.
ஃபேஸ்புக் இல்லாவிட்டால் அவர்கள் ரோட்டில் நடந்து செல்லும் போதோ, மார்க்கெட்டிலோ நட்பாக சிரிக்கக் கூட முடியாது.அவர்களுடைய அழகைப் பார்த்தே நமக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடும்.
அதுவும் இந்தியப் பெண்கள் போன்ற ’சுருள்குணம்’ கொண்டவர்களிடம் எளிதில் பேசிவிட முடியாது.
நம் நாட்டில் பார்ட்டி போன்ற கலாச்சாரங்களும் கிடையாது. ஃபேஸ்புக்கால் மட்டுமே இந்த பழக்கம் சாத்தியமாகிறது.
2.பணக்காரர்களிடம் பழக முடிகிறது.
பெரிய பெரிய பங்களா வைத்திருப்பவர்கள், இரண்டு மூன்று கார்கள் வைத்திருப்பவர்கள், விளையாட்டு சாமான் போல இரண்டு முன்று ஸ்கூட்டிகளை வீட்டின் கொல்லைப் பக்கம் கட்டிவைத்திருப்பவர்கள்.
அமெரிக்கா அடிக்கடி சென்று வருபவர்கள்.
மூன்று கிரவுண்ட் நிலத்தில் வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்கள்,
சரவணா ஸ்டோர்ஸில் அரைக்கிலோ தங்கம் அட் எ டைம் வாங்குபவர்கள் போன்றவர்களிடம்,
என்னை போன்ற லோடு சைக்கிளை உருட்டிச் சென்று ”மூன்று ரூவாய்க்கு பச்சைமிளகாய் கொடுங்க” என்று கேட்கும் சாமான்யர்களால் பழக முடிகிறது.
அட! இவ்வளவு பணமிருந்தும் சாதரணமாத்தானே பழகுறான்கள் என்று கண்டுகொள்ள உதவி செய்த இடம் ஃபேஸ்புக்.
3.அந்தஸ்தானவர்களிடம் பழக முடிகிறது.
பெரிய அரசியல்வாதிகள், ஊடக மொதலாளிகள்,
அறிவின் உச்சத்தைக் கொண்டுள்ள, உலகில் எல்லாம் தெரிந்த வக்கீல்கள்,
தவறே செய்யாத கடவுளுக்கு அடுத்தபடியாக நாமெல்லோரும் கட்டாயம் கும்பிடும் பெரிய பெரிய டாக்டர்கள்,
போலீஸ் அதிகாரிகள்,
பெரிய பெரிய வியாபாரிகள் போன்றவர்களிடம் பேஸ்புக்கின் உதவியால் எளிதாக பழக முடிகிறது.
ஃபேஸ்புக் இல்லாவிட்டால் ஒரு வக்கீலிடமோ அல்லது டாக்டரிடமோ பேச முடியுமா? அவர்கள் பேச வந்தால் நாமே தாழ்வு மனப்பான்மையால் ஒதுங்கி விடுவோம்தானே.
4.அறிவாளிகளுடன் பேச முடிகிறது. பழக முடிகிறது.
எழுத்தாளர்கள் சமுதாயச் சிந்தனையாளர்கள் எல்லாம் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்ற எண்ணத்தை தகர்த்த இடம் ஃபேஸ்புக்.
“அட ! இவர்களும் நம்மை போல ஆட்கள்தான்” என்று எல்லொரும் தெரிந்து கொண்டு பழக ஆரம்பித்தோம் ஃபேஸ்புக்கின் உதவியால்.
பல இடங்களில் அவர்களை விட நாம் அறிவாளிகள் என்பதைக் கண்டு கொண்ட இடமும் ஃபேஸ்புக்தான்.
இப்படி ஃபேஸ்புக் உண்மையான சமத்துவத்தை நமக்கெல்லாம் காட்டி அடக்கமாக நம்மை மகிழ்விக்கிறது.
வாழ்க ஃபேஸ்புக் 

இலக்கியம் தாண்டுதல்...

நிச்சயமாக எழுத்தாளர்களில் படைப்புகளில் அடுக்குகள் உண்டுதான்.
ராஜேஷ்குமார், அனுராத ரமணன்,பாலகுமாரன், தி.ஜா, சு.ரா, பிரமிள் என்பது மாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடுக்கு இருக்கும்.
இதில் சில எழுத்தாளர்களை கடந்து செல்லலாம், ஆனால் தாண்டக் கூடாது.அது பேரிழப்பை கொடுத்து விடும் (இலக்கியத் தன்மை அளவில்).
ராமாயணத்தையும்,மகாபாரத்தையும் ஒருவன் கடந்து போகலாம், அதாவது வாசித்து நன்கு தெரிந்து செரித்து பின் கடந்து விடலாம். ஆனால் வாசிக்காமலேயே தாண்டுவது என்பது வாசகனுக்குத்தான் இழப்பு.
அந்த இரு இதிகாசத்தைத்தில் இருக்கும் இலக்கியத் தன்மையால் அதை அப்படி தாண்டமுடியாதது என்கிறோம்.
ஆனால் கவனியுங்கள் கடந்துவிடலாம்.அதையே வாசித்துக் கிடக்கத் தேவையில்லை.
பொன்னியின் செல்வனும்,சிவகாமியின் சபதுமும் அப்படித்தான். மொழிநடையும் கதை சொல்லும் விதமும் அற்புதமானவை.அதை நிச்சயமாக தாண்டக் கூடாது.ஆனால் வாசித்துக் கடந்து சென்று விடலாம்.
இப்போது ஆனந்தவிகடனில் ப்ரியாதம்பி பல்வேறு பெண்களின் நிலையை தெளிவுற எழுதுவதாக நினைக்கிறோம்.
ஆனால் பாலகுமாரன் இதையெல்லாம் எப்போதோ அழகாக எழுதி விட்டார்.
”கைவீசம்மா கைவீசு” நாவலில் வரும் ஆசிரியை கிளைமேக்ஸில் பேசும் வசனத்தை விடவா ஒரு பெண்ணியக் குரலை ஆவேசமாக பேச முடியும்.நிச்சயமாக பாலகுமாரனைக் கடக்கலாம்.ஆனால் தாண்டக்கூடாது.
சில இலக்கியங்களை கடக்கலாம். தாண்டக் கூடாது....

அடுத்தவர் மனதை பாதிக்கும்...

வீட்டுக்கு வந்தால் கசகசவென்றிருந்தது.
சவரம் செய்யலாமே, என்று செய்து கொண்டிருக்கும் போது மீசை வெட்டும் கத்திரிக்கோல் இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். தேடினால் கிடைக்கவில்லை.
உள் அறையில் அம்மாவும் பொண்ணும் பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டு, கற்றுக் கொண்டு இருக்கும் சத்தம் கேட்டது.
துரிதமாக செயல்பட்டேன்.
சமைலறைக்கு வந்து பால் வெட்டும் கத்திரியை எடுத்து வேக வேகமாக மீசையை ட்ரிம் செய்தேன்.
அதன் பிறகு அதை நன்றாக கழுவினேன்.அதன் பின் அதன் மேல் லிக்விட் டெட்டால் போட்டுக் கழுவினேன்.
அதன் பின் அடுப்பில் குளியலுக்காக கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீரில் முக்கி எடுத்து, மறுபடி அதை டிஸ்யூ பேப்பரில் துடைத்து அதே இடத்தில் வைத்து விட்டேன்.
ஷெர்லாக் ஹோம்ஸ் வந்தால் கூட கண்டுபிடிக்க முடியாது.
சிறுவயதில் அம்மா குத்துவிளக்கு பொருத்துவார்.
விளக்கை நாம்தான் நிறைவேற்ற வேண்டும்.அதுவாகவே நிறைவேறினால்( அணைந்தால்) அது அபசகுனம் என்பது அம்மாவின் நம்பிக்கை.
சில சமயம் மறதியால் அதுவாகவே நிறைவேறியிருக்கும்.
அப்போது அம்மா பதட்டமாக வருவார்” விளக்கு அதுவா நிறைவேறிட்டோ” என்பார்.
நான் முந்திக் கொண்டு “இல்லமா நான்தான் இப்பத்தான் நிறைவேத்தினேன்” என்று சொல்வேன்.
என்ன சொல்லவருகிறேன் என்றால் சில விசயங்களை அந்த இடத்திலேயே தடம் தெரியாமல் அழித்து விட வேண்டும்.
அதுவும் அடுத்தவர் மனதை பாதிக்கும் சின்ன சின்ன விசயங்களை அப்படியே மறைத்துவிடுதல் ரொம்ப நல்லது.

இரண்டு வருடங்கள் பார்க்க முடியாது...

யாரையாவது பிரிந்து போகவேண்டும் என்ற நிலைமையைக் கண்டு அளவுக்கு அதிகமாக அஞ்சுவேன்.
சிறுவயதில்,முழுவருடப் பரீட்சைக்கு அக்கா தம்பி தங்கைகள் முறைப்பெண்கள் என்று திருச்செந்தூர் ஆச்சி வீட்டிலிருந்து ஒவ்வொரு குடும்பமாய் அவரவர் ஊருக்கு திரும்பும் போது என் கண்களில் கண்ணீர் நிறையும்.அந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ளவே முடியாது.அரைமணி நேரம் முன்பு சிரித்து விளையாண்ட அறையில் இருந்து ”ஹூம்கூம்” என்றொரு வெறுமைச் சத்தம் கேட்டது மாதிரி இருக்கும்.
புத்தகங்கள் மூலம் மட்டுமே இது மாதிரி செண்டிமெண்ட் உணர்வுகளிலிருந்து வெளியே வந்திருக்கிறேன்.அல்லது வந்தது மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஹைதிராபாத்திலிருக்கும் போது பக்கத்து வீட்டின் ஆண் வெளிநாடு போவதான செய்தியை நான் கேட்டேன்.அவர் மட்டும்தான்.குடும்பம் இங்கே இருக்கும்.அந்தப் பிரிவே என்னை டிஸ்டர்ப் செய்தது.அந்தப் பெண்ணைப்(அவர் மனைவி) பார்க்கும் போதெல்லாம் பேசும் போதெல்லாம் பிரிவை தாங்குவது எப்படி? என்ற அட்வைஸை மறைமுகமாகவோ நேரடியாக வழங்க ஆரம்பித்தேன்.
“அது அங்கப் போய் முதல் போன அவர் போட்டு பேசினதும் நார்மலாகிரும்”
“அதான் ஸ்கைப் இருக்கில்ல.முகத்தையேப் பாத்து பேசலாமே”
அதன் பிறகு என் மனைவி என் ஆர்வத்தை மென்மையாக சுட்டிக்காட்டியப் பிறகு வெட்கம் கொண்டேன். ஏனென்றால் இரண்டு பேர் பிரிகிறார்கள் என்றால் அதுபற்றி யோசித்து யோசித்து சோர்ந்து போய்விடுவேன்.
குவைத்திலிருந்து இந்தியா திரும்பும் போது என் லேப்டாப்பை சீட்டில் வைத்து விட்டு விமானத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தேன்.ஒருவர் வேகமாக ஒடிவந்து எனக்கு அதைச் சுட்டினார்.அவருக்கு நன்றி சொல்லி, அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அவர் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பிளம்பர்.குவைத்தில் வேலை பார்க்கிறார்.இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஊருக்குப் போவாராம். நான் நிஜமாவா சொல்றீங்க நிஜமாவா சொல்றீங்க என்று கேட்டேன்.ஆம் என்றார்.
போதுமே எனக்கு.. கவலை தொற்றிக் கொண்டது. இதோ இவர் இரண்டு வருடம் கழித்து இப்போதுதான் ஊருக்குப் போகிறார்.
ம்னைவி குழந்தைகளைப் பார்த்து என்ன செய்வார்.அப்படியே குதித்துக் கட்டிக் கொள்வாரா.மனைவியை நெஞ்சோடு அணைத்துக் கொள்வாரா.
இத்தனை காலம் குழந்தைதனத்தை ஒளித்து பொறுப்பாக குடும்பம் நடத்திய மனைவி கணவனைக் கண்டதும் “ஏங்க காலெல்லாம் ஒரே வலி.முதுகுல ஒரே வலி.இதப் பாருங்க இவன் மேலே விழுந்துட்டான்.விரல் கிழிஞ்சிட்டு. சரி நீங்க அங்க டென்சன் ஆகக்கூடாதுன்னு நா சொல்லல” என்றெல்லாம் கொஞ்சுவாரா?
இவர் ஊருக்கு சென்றதும் அவர்களுடைய முதல் கூடல் எப்படி இருக்கும்.ஆனந்தமாக மனவிடுதலையாக இருக்குமா? ஒரு புளியங்காயைக் கடிக்கும் கிளீச்சை இருவரும் மனதாலும் உடலாலும் உணர்வார்கள்தானே.பிரிவதும் சேர்வதும் பற்றி மனிதனின் ஐம்புலன்களும் மூளையும் கொள்ளும் உணர்வுகள்தான் வாழ்க்கையின் முதுகெலும்பா?
இப்படியெல்லாம் யோசிக்கும் போது, அந்த பிளம்பர் தன் லீவை முடித்து அடுத்த இரண்டு வருட சர்வீஸுக்கு கிளம்பும் நாளுக்கு முந்தைய நாளைப் பற்றிய சிந்தனை வந்தது.
அதைப் பற்றி யோசிப்பது அச்சம் தருவதாய் இருந்தது.அவர்களுக்குள் நடக்கும் அந்த இரவில் காமம் இருந்திருக்குமா? ஒரு துளி அளவுக்கு கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் “இதுதான் என்னால் உனக்குக் கொடுக்க கூடிய பெஸ்ட்” என்ற அளவில் ஒருவரை ஒருவர் பகிர்ந்திருப்பார்கள். பரஸ்பரம் கொஞ்சி அழுதிருப்பார்களா? அந்தக் கண்ணீர் எல்லாம் கங்கை காவிரி மாதிரி புனித நதிகள் இல்லாமல் வேறென்ன?
மறுநாள் என்ன நடந்திருக்கும் ஒருவரை ஒருவர் கைகளைப் பிடித்து நின்றிருப்பார்கள்.அப்புறம் கைகளை விட்டிருப்பார்கள். இனி அடுத்த ஸ்பரிசம் இரண்டு ஆண்டுகள் கழித்துதான்.
செல்களால் ஆன திசுக்களால் ஆன சதையையும் எலும்பையும் கொண்ட கணவனும்.
செல்களால் ஆன திசுக்களால் ஆன சதையையும் எலும்பையும் கொண்ட மனைவியும்.
அவர்களுக்குள் மாபெரும் வெளியை அனுமதித்து கலங்கி பிரிகிறார்கள்.
ஒவ்வொரு விநாடியும் உலகில் இது நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கும் போதே சிலிர்க்கிறது அல்லவா

உணர்வை கொல்லும் அறிவு...

சில பல இடங்களில் அறிவுத்தனம், நல்ல உணர்வுகளை கொன்று விடும் ? அதற்கு இரண்டு எக்சாம்பிள் கொடுக்க விரும்புகிறேன்
உதாரணம் ஒன்று :
அம்மா சில விடுமுறை தினங்களில் நன்றாக சமைத்திருப்பார்.எல்லோரும் வீட்டில் இருக்கும் போது நல்ல சுவையான உணவை கொடுத்து விட வேண்டும் என்ற அன்பு அதில் இருக்கும்.
அதற்காக மெனக்கெட்டிருப்பார்.முந்தின நாளே திட்டமிட்டிருப்பார்.
ஒவ்வொரு உணவிற்கும் உப்பை போடும் போது பார்த்து போட்டிருப்பார்.காய்கறிகளை சரியான அளவில் வெட்டியிருப்பார்.
வடை பொரித்திருப்பார்.பொரிக்கும் போது ஒன்றிரண்டு எண்ணெய் துளிகள் முகத்தில் தெறித்திருக்கிலாம்.இல்லை வயிற்றில் பட்டு எரிச்சலை கொடுத்திருக்கலாம்.இருந்தாலும் நல்ல உணவு செய்யவேண்டும் என்ற ஆவேசத்தில் செய்வார்கள் இல்லையா? அப்படி செய்திருப்பார்.
எல்லாவற்றையும் எடுத்து வைத்தாயிற்று.
நாங்கள் எல்லோரும் உட்கார்ந்திருப்போம்.அம்மா பரிமாற ரெடியாக இருப்பார்.பிள்ளைகள் தான் சமைத்த உணவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்,கணவர் சமையலை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசையாயிருப்பார்.
ஆனால் அங்குதான் எங்கள் அறிவு வேலை செய்யும்.
சோற்றை தட்டில் போட்டும் போடாதுமாக நான் ஆரம்பிப்பேன் “யப்பா வாஜ்பாயிக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம்ன்னு நினைக்கிறேன்.நீங்க அதுக்கு சப்போர்ட்டா”.
உடனே அப்பா “என்னயிருந்தாலும் அவங்களுக்கு மதவெறி உண்டு.வெளிய அமைதியா காட்டிப்பாங்க.அத பாத்து ஏமாறக் கூடாது” என்பார்.
உடனே நான் அண்ண்ன்கள் தம்பி எல்லோரும் ஒரு கட்சியிலும், அப்பா இன்னொரு கட்சியுமாக பிரிந்து ஆர்கியூ செய்வோம்.மிகக் கடுமையாக சாப்பிட சாப்பிட கத்திக் கொண்டே இருப்போம்.நானெல்லாம் கையை காலை நீட்டி ஒரு மாதிரி ஒநாய் மாதிரி கூவி கத்தினா மாதிரி உரக்க பேசுவேன்.
இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அம்மா “சாப்பாடு எப்படியிருக்கு? ருசியாயிருக்கா?. நல்லாயிருக்கா,நல்லாயிருக்கா?,உருளைக்கிழங்கு கரெக்டா உப்பு பிடிச்சிருக்கா?பருப்பு குழம்புல புளி கரெக்டா சேர்த்திருக்கேனா? இப்படி பல கேள்விகளை கேட்டு,அதை நாங்கள் சுத்தமாக கண்டு கொள்ளாமல் அரசியலையே பேசி பேசி கத்திக் கொண்டிருப்பதை வெறுமே கேட்டுக் கொண்டியிருப்பார்.
காலையிலிருந்து கஸ்டப்பட்டு உணவு சமைத்திருக்கிறார்.அது பற்றி ஒரு கருத்தும் சொல்லாமல் அறிவை வளர்க்கிறோம் என்று அரசியல் பேசிக்கிடப்பது உணர்வைக் கொல்லுதல்தானே...
உதாரணம் இரண்டு :
அமெரிக்காவில் நானும் ஒரு நண்பர் ஒன்றும் ஒரே வீட்டில் தங்கியிருந்தோம்.ஒரு மாதம் பிறகு இன்னும் இரு நண்பர்கள் பக்கத்து வீட்டில் தங்கினர் (எங்கள் கம்பெனிதான்).
அவர்கள் இருவரும் அப்போதுதான் குடும்பத்தை விட்டு வந்ததவர்களாகையால் கொஞ்சம் கலக்கமாக இருந்தனர்.ஒருநாள் அவர்களே விருந்தொன்று தயார் செய்து எங்களை அழைத்தார்கள்.நாங்கள் போய் சாப்பிட்டுவிட்டு இசை கேட்டுக்கொண்ட்டே அரட்டை அடித்துக் கொண்டே இருக்கிறோம்.
அதில் புதிய நண்பருக்கு அவருடைய ஐந்து வயது மகளைப் பற்றிய ஊர் நினைவுகளை பகிர்ந்து கொள்ள ஆசை.அவர் அதைப் பற்றி பேச நினைக்கிறார்.ஆனால் அவர் ஒருவரியை பேசும் போது ”நண்பர் ஒன்று” தன் அறிவால் இடமறிக்கிறார்.
இப்படியாக
“லைஃப்ஃபே அப்படித்தான் பாஸ்.போகும் போது ஒண்ணுமே கொண்டு போகப்போறதில்ல”
“குடும்பத்த பிரியறது கஸ்டம்தான்.நம்ம அறிவ யூஸ் செய்யனும் பாஸு..கொஞ்சம் யோசிக்கனும்.
“ஒருநாளைக்கு எவ்வளோ அலவன்ஸ் கொடுக்கிறாங்க.அதெல்லாம் இப்படி செண்டிமெண்ட் பாத்தா முடியுமா”
இரண்டாம் நண்பர் தன் மகளைப் பற்றிய நினைவுகளை ஆர்வத்தோடும் அக்கறையோடும் நம்மிடம் பகிர்ந்து கொள்ளவரும் போது, முதலாம் நண்பர் எதார்த்தமாக பேசி உணர்வுகளை கொல்லுகிறார் பாருங்கள்.
அந்த இடத்தில் தன் மகளைப் பற்றி சொல்ல விருப்பப்படும் நணபர் பேசும் போது குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டல்லவா இருக்க வேண்டும்.தன் மகள் மேல் எவ்வளவு பாசம் இருந்தால் அவர் பொதுவாக எல்லோரும் கூடும் ஒரு பார்ட்டியில் இவ்வளவு செண்டிமெண்டாக வெட்கத்தை விட்டு உருகி திரும்ப திரும்ப அது பற்றியே மனம் விட்டு பேச முன்வருவார்.
இந்த இடத்தில் ”நண்பர் ஒன்று “ செய்ததும் உணர்வை கொல்லுதல்தானே.
கடைசியாக நாம எப்போ இது மாதிரி அறிவ வெச்சி அடுத்தவங்க கொன்னிருக்கோம்ன்னு நினைச்சா,
இதோ இரண்டு நிமிசத்துக்கு முன்னாடி அப்படிங்கிற பதில்தானே கிடைக்கும்

Push Pull கதவு..

எந்த கதவில்
Push Pull எழுத்துக்களைப் பார்த்தாலும்
பதட்டம் வந்துவிடுகிறது.
இன்னும் ஒரு விநாடியில்
நான் என்ன செய்ய வேண்டும்.
இழுக்க வேண்டுமா?
தள்ள வேண்டுமா?
முடிவெடுக்க சிந்திக்கையில்
கதவு என் முகத்தருகே வந்து ”ஹலோ” என்கிறது.

விருது...

இங்கே
விருதின் மூலம் தனிநபரை அடையாளப்படுத்தும் அங்கீகரப்படுத்தும் டிரண்டெல்லாம் போய்,
”பிரபல தனிநபர்களுக்கு” கொடுப்பது மூலம் விருதுகள் அடையாளம் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் டிரெண்ட் நிலவுகிறது,
சொன்னால் ”ஜெலுசில் குடி” என்பான்கள் சொக்கன்கள்

சாப்பாட்டுக் கடை

என்னுடைய ”கனவு ஹோட்டலில்” என்ன செய்வேன் என்றால்...
1.மதியம் சாப்பாடு, காலை இட்லி, தோசை மட்டும்தான் கிடைக்கும்.
2.இட்லி தோசையில் வெரைட்டி எல்லாம் கிடையாது.இட்லியும் சாதா தோசை மட்டும்தான்.
3.ஒவ்வொரு உணவின் செய்முறையும் விளக்கமாக ஒரு புத்தகத்தில் அச்சிட்டப்பட்டிருக்கும்.அளவு முதல் கொண்டு அதில் இருக்கும். ஐநூறு சாப்பாட்டுக்கான மீல்ஸுக்கு எவ்வளவு சாம்பார் தேவைப்படுகிறதோ, அந்த அளவு. அப்புறம் இவ்வளவு துவரம் பருப்பு. இவ்வளவு கிலோ இன்ன இன்ன காய்கறிகள் என்று அதில் தெளிவாக குறிப்பிட்டிருக்கும்.
4.உணவின் விலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருப்பதால், அந்த அடிப்படையில் தினமும் மீல்ஸின் விலை ஏறி இறங்கும்.ஒரே விலைதான் வேண்டும் என்று நினைப்பவர்கள் என் ரெஸ்தாரந்துக்கு வரத்தேவையில்லை.
5.ஆயிரம் இட்லி என்றால் அவ்வளவுதான்.அதற்கு மேல் ஒரு இட்லி கூட அவிக்க மாட்டேன்.
6.எக்ஸ்டிரா மாவு வந்தால் அதை அடுத்தநாள் குளிரூட்டி உபயோகிக்க மாட்டேன்.அந்த இட்லி தோசை மாவுகள் அன்றன்று அழிக்கப்படும்.அந்தத் தகவலை போர்டில் எழுதி போடு பார்வைக்கு வைப்பேன்.அதற்கான செலவு இட்லி விலையில் ஏற்றப்படும்.
7.காய்கறி விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப மாற்றிப் போடுவதில்லை.ஒரே ரெசிப்பிதான்.அந்த விலையும் விலையில் ஏறும்.
8.உணவை வீணாக்கினால் அந்த வாடிக்கையாளருக்கு ஒரு துண்டுப் பிரசுரம் கொடுப்போம்.அதில் அவருக்கு அட்வைஸ் இருக்கும் 
9.ஊறுகாய்கள் மிஞ்சியது அழிக்கப்படும்.தயிரின் தரம் பலமுறை சோதிக்கப்படும்
10.மொத்ததுல உணவோட தரம் மாறாமல் இருக்கும். விலை மாறும்.

என்னைப் புகழுங்கள்...

”என்னைப் புகழுங்கள்” என்றான்.
”புகழும் அளவுக்கு நான் ஒன்றுமே செய்யவில்லையா” என்று கெஞ்சினான்.
”ஒரு வார்த்தை என்னை அங்கீகரித்தால் என் மனம் மகிழ்ச்சியடையுமே” என்றான்.
நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.”உன்னைப் புகழக்கூடாதென்றில்லை.எங்கள் மனதில் காழ்ப்பில்லை.எரிச்சல் இல்லை.இதோ நாங்கள் வாய் நிறைய சுவீங்கம் சவைத்துக் கொண்டிருக்கிறோம் எப்படி புகழ்ந்து பேசுவது” என்றோம்.
“அப்படியானால் புகழ்ந்து எழுதலாமில்லையா” என்றான் அவன்.
“நாங்கள் எங்கள் தொடைகளை வறட் வறட் என்று சொறிந்து கொண்டிருக்கிறோம்.எப்படி எழுதுவது” என்றோம்.
அவன் எங்களையே வெறித்துக் கொண்டிருந்தான்.
நாங்கள் அந்த சூவிங்கம் சவைக்கும் ஒசையிலேயே எங்களை மாற்றி மாற்றி புகழ்ந்து கொண்டோம்.
தொடையைச் சொரியும் சத்ததிலேயே எங்களை பரஸ்பரம் புகழ்ந்து கொண்டோம்.
ஒருவருக்கொருவர் வண்ணப் புகைப்படங்கள் பரிமாறி புகழ்ந்து கொண்டோம்.
அவன் எங்களையே வெறித்து கொண்டிருந்தான்.
அவனிடம் தவறாமல் நலம் விசாரித்து மட்டும் வைத்துக் கொண்டோம்.எங்காவது பார்த்தால் அப்படி ஒரு சிநேகப் புன்னகை அவனுக்கு கொடுப்போம்.
ஒருநாள் அவன் அடையாளத்துகாக புழுங்கி நசுங்கி கரைந்து இறந்துப் போனான்.
அவன் அங்கீகாரத்துக்காக அழுத கண்ணீர் கன்னம் ஒரமாய் வரைந்திருந்த கோலத்தின் கோலத்தை குறித்துக் கொண்டோம்.
”அய்யோ செத்தே போய்விட்டானா” என்று அழுதோம்.
மாலை மரியாதையுடன் தோண்டிய குழியில் புதைத்து விட்டு வந்தோம்.
கொஞ்ச தூரம் சென்றதும் மறுபடியும் வந்து சரியாய் புதைத்திருக்கிறோமா என்று காலால் மிதித்து சோதனை செய்து கொண்டோம்.
அதுவரை ஒற்றுமையாய் இருந்த நாங்கள் சூவிங்கத்தை துப்பி தொடை சொறியவதை விட்டு விட்டு,தத்தம் அறையைப் பூட்டிக் கொண்டு அவன் படைப்பையும், அவனையும் புகழ்ந்து நெகிழ்ச்சியானஅஞ்சலிக் கட்டுரைகள் எழுதினோம்.
திருப்தியாய் தூங்கப் போகும் போது இன்னொரு திறமைசாலி வந்து
”என்னைக் கொஞ்சம் அடையாளப்படுத்துங்களேன்” என்று காலில் விழுந்தான்.
நாங்கள் பாக்கெட்டில் இருந்து சூவிங்கம்மை வெளியே எடுத்து பிரித்தோம்.

பிரபலங்களின் நட்பழைப்பு...

பிரபலங்களிடமிருந்து நட்பு அழைப்பு எதாவது வந்தாலே உடம்பெல்லாம் நடுங்குகிறது.
நட்பாக சேர்ந்து இரண்டு நாட்களில் என் பதிவுகளைப் படித்து இவன் ஒரு திமிர் பிடித்தவன், லூசு, அரைகுறை, வாய்ச்சவுடால் என்றெல்லாம் புரிந்து கொள்வார்கள்.
பலர் அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்து விடுவார்கள். ஆனால் சில பிரபலங்கள் அன்பிரண்டு செய்துவிடுவார்கள்.இப்போது எனக்கு தர்மச்சங்கடமாயிருக்கும்.எங்காவது நேரில் அவர்களைப் பார்த்தால் பேசனுமா?பேசக்கூடாதா?சிரிக்கனுமா?சிரிக்கக்கூடாதா?
ஒரு பிரபல புத்தகக்கடைக்கார கவிஞர் என்னை அன்பிரண்ட் செய்துவிட்டார்.காரணமே இப்போது வரைக்கும் எனக்குத் தெரியாது.இத்தனைக்கும் யாருக்குமே லைக் போடாத நான் அவர் சுவருக்கு சென்று பொறுப்பாக லைக் போட்டு வருவேன்.காரணம் புத்தகக் கடை வைத்திருப்பவர்களை எல்லாம் நான் எடுத்தெறியவே மாட்டேன்.குறுக்க நெடுக்க பார்த்தே ஆகவேண்டும் அவர்களை.
இன்னொரு சினிமா ஆர்வலர்,சினிமா விமர்சகர் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவார்.ஆனால் நல்லவர்.அவரும் அப்படியே அழைப்பு விடுத்தார்.அதன் பின் அன்பிரண்டு செய்துவிட்டார்.சென்னையில் தன் சொந்த ஆர்வத்தில் நிறைய மாற்றுத் திரைப்படங்கள் திரையிடுகிறார்.எனக்கு அங்கெல்லாம் சென்று அதைக் காண ஆசை.ஆனால் என்னை அன்பிரண்ட் செய்துவிட்டாரே.அதன் பின் எப்படி அவர் திரையிடலுக்குப் போக.
இப்படியேப் போய்க் கொண்டிருந்தால் யாருமே நட்பு வட்டத்தில் இல்லாமல் போய்விடுவார்கள்.அதற்கு முதலிலேயே நட்பு அழைப்பை நிராகரித்து விடுவது.ஒருவேளை அவர்கள் காரணம் கேட்டால் (கேட்கமாட்டார்கள்) “தெரியலையே நீங்க கொடுத்தீங்களா? அப்படியா? கை தவறி அமுக்கிட்டேனா?” என்றெல்லாம் சொல்லி சமாளிப்பது என்று நினைத்திருக்கிறேன்.
என் மனம் சொல்லத்தான் செய்கிறது விநாயக முருகன், யுவகிருஷ்ணா போன்ற சிங்கங்கள் எல்லாம், பிரபலங்களை எவ்வளவு அன்பாக நடத்துகிறார்கள்.எப்படி அன்பைப் பெறுகிறார்கள்.அது போல நடந்து கொள் என்று.
எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்தக் கலை கைகூடவே மாட்டேன் என்கிறது...