Saturday, 22 November 2014

உணர்வை கொல்லும் அறிவு...

சில பல இடங்களில் அறிவுத்தனம், நல்ல உணர்வுகளை கொன்று விடும் ? அதற்கு இரண்டு எக்சாம்பிள் கொடுக்க விரும்புகிறேன்
உதாரணம் ஒன்று :
அம்மா சில விடுமுறை தினங்களில் நன்றாக சமைத்திருப்பார்.எல்லோரும் வீட்டில் இருக்கும் போது நல்ல சுவையான உணவை கொடுத்து விட வேண்டும் என்ற அன்பு அதில் இருக்கும்.
அதற்காக மெனக்கெட்டிருப்பார்.முந்தின நாளே திட்டமிட்டிருப்பார்.
ஒவ்வொரு உணவிற்கும் உப்பை போடும் போது பார்த்து போட்டிருப்பார்.காய்கறிகளை சரியான அளவில் வெட்டியிருப்பார்.
வடை பொரித்திருப்பார்.பொரிக்கும் போது ஒன்றிரண்டு எண்ணெய் துளிகள் முகத்தில் தெறித்திருக்கிலாம்.இல்லை வயிற்றில் பட்டு எரிச்சலை கொடுத்திருக்கலாம்.இருந்தாலும் நல்ல உணவு செய்யவேண்டும் என்ற ஆவேசத்தில் செய்வார்கள் இல்லையா? அப்படி செய்திருப்பார்.
எல்லாவற்றையும் எடுத்து வைத்தாயிற்று.
நாங்கள் எல்லோரும் உட்கார்ந்திருப்போம்.அம்மா பரிமாற ரெடியாக இருப்பார்.பிள்ளைகள் தான் சமைத்த உணவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்,கணவர் சமையலை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசையாயிருப்பார்.
ஆனால் அங்குதான் எங்கள் அறிவு வேலை செய்யும்.
சோற்றை தட்டில் போட்டும் போடாதுமாக நான் ஆரம்பிப்பேன் “யப்பா வாஜ்பாயிக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம்ன்னு நினைக்கிறேன்.நீங்க அதுக்கு சப்போர்ட்டா”.
உடனே அப்பா “என்னயிருந்தாலும் அவங்களுக்கு மதவெறி உண்டு.வெளிய அமைதியா காட்டிப்பாங்க.அத பாத்து ஏமாறக் கூடாது” என்பார்.
உடனே நான் அண்ண்ன்கள் தம்பி எல்லோரும் ஒரு கட்சியிலும், அப்பா இன்னொரு கட்சியுமாக பிரிந்து ஆர்கியூ செய்வோம்.மிகக் கடுமையாக சாப்பிட சாப்பிட கத்திக் கொண்டே இருப்போம்.நானெல்லாம் கையை காலை நீட்டி ஒரு மாதிரி ஒநாய் மாதிரி கூவி கத்தினா மாதிரி உரக்க பேசுவேன்.
இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அம்மா “சாப்பாடு எப்படியிருக்கு? ருசியாயிருக்கா?. நல்லாயிருக்கா,நல்லாயிருக்கா?,உருளைக்கிழங்கு கரெக்டா உப்பு பிடிச்சிருக்கா?பருப்பு குழம்புல புளி கரெக்டா சேர்த்திருக்கேனா? இப்படி பல கேள்விகளை கேட்டு,அதை நாங்கள் சுத்தமாக கண்டு கொள்ளாமல் அரசியலையே பேசி பேசி கத்திக் கொண்டிருப்பதை வெறுமே கேட்டுக் கொண்டியிருப்பார்.
காலையிலிருந்து கஸ்டப்பட்டு உணவு சமைத்திருக்கிறார்.அது பற்றி ஒரு கருத்தும் சொல்லாமல் அறிவை வளர்க்கிறோம் என்று அரசியல் பேசிக்கிடப்பது உணர்வைக் கொல்லுதல்தானே...
உதாரணம் இரண்டு :
அமெரிக்காவில் நானும் ஒரு நண்பர் ஒன்றும் ஒரே வீட்டில் தங்கியிருந்தோம்.ஒரு மாதம் பிறகு இன்னும் இரு நண்பர்கள் பக்கத்து வீட்டில் தங்கினர் (எங்கள் கம்பெனிதான்).
அவர்கள் இருவரும் அப்போதுதான் குடும்பத்தை விட்டு வந்ததவர்களாகையால் கொஞ்சம் கலக்கமாக இருந்தனர்.ஒருநாள் அவர்களே விருந்தொன்று தயார் செய்து எங்களை அழைத்தார்கள்.நாங்கள் போய் சாப்பிட்டுவிட்டு இசை கேட்டுக்கொண்ட்டே அரட்டை அடித்துக் கொண்டே இருக்கிறோம்.
அதில் புதிய நண்பருக்கு அவருடைய ஐந்து வயது மகளைப் பற்றிய ஊர் நினைவுகளை பகிர்ந்து கொள்ள ஆசை.அவர் அதைப் பற்றி பேச நினைக்கிறார்.ஆனால் அவர் ஒருவரியை பேசும் போது ”நண்பர் ஒன்று” தன் அறிவால் இடமறிக்கிறார்.
இப்படியாக
“லைஃப்ஃபே அப்படித்தான் பாஸ்.போகும் போது ஒண்ணுமே கொண்டு போகப்போறதில்ல”
“குடும்பத்த பிரியறது கஸ்டம்தான்.நம்ம அறிவ யூஸ் செய்யனும் பாஸு..கொஞ்சம் யோசிக்கனும்.
“ஒருநாளைக்கு எவ்வளோ அலவன்ஸ் கொடுக்கிறாங்க.அதெல்லாம் இப்படி செண்டிமெண்ட் பாத்தா முடியுமா”
இரண்டாம் நண்பர் தன் மகளைப் பற்றிய நினைவுகளை ஆர்வத்தோடும் அக்கறையோடும் நம்மிடம் பகிர்ந்து கொள்ளவரும் போது, முதலாம் நண்பர் எதார்த்தமாக பேசி உணர்வுகளை கொல்லுகிறார் பாருங்கள்.
அந்த இடத்தில் தன் மகளைப் பற்றி சொல்ல விருப்பப்படும் நணபர் பேசும் போது குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டல்லவா இருக்க வேண்டும்.தன் மகள் மேல் எவ்வளவு பாசம் இருந்தால் அவர் பொதுவாக எல்லோரும் கூடும் ஒரு பார்ட்டியில் இவ்வளவு செண்டிமெண்டாக வெட்கத்தை விட்டு உருகி திரும்ப திரும்ப அது பற்றியே மனம் விட்டு பேச முன்வருவார்.
இந்த இடத்தில் ”நண்பர் ஒன்று “ செய்ததும் உணர்வை கொல்லுதல்தானே.
கடைசியாக நாம எப்போ இது மாதிரி அறிவ வெச்சி அடுத்தவங்க கொன்னிருக்கோம்ன்னு நினைச்சா,
இதோ இரண்டு நிமிசத்துக்கு முன்னாடி அப்படிங்கிற பதில்தானே கிடைக்கும்

No comments:

Post a Comment