பிரபலங்களிடமிருந்து நட்பு அழைப்பு எதாவது வந்தாலே உடம்பெல்லாம் நடுங்குகிறது.
நட்பாக சேர்ந்து இரண்டு நாட்களில் என் பதிவுகளைப் படித்து இவன் ஒரு திமிர் பிடித்தவன், லூசு, அரைகுறை, வாய்ச்சவுடால் என்றெல்லாம் புரிந்து கொள்வார்கள்.
பலர் அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்து விடுவார்கள். ஆனால் சில பிரபலங்கள் அன்பிரண்டு செய்துவிடுவார்கள்.இப்போது எனக்கு தர்மச்சங்கடமாயிருக்கும்.எங்காவது நேரில் அவர்களைப் பார்த்தால் பேசனுமா?பேசக்கூடாதா?சிரிக்கனுமா?சிரிக்கக்கூடாதா?
ஒரு பிரபல புத்தகக்கடைக்கார கவிஞர் என்னை அன்பிரண்ட் செய்துவிட்டார்.காரணமே இப்போது வரைக்கும் எனக்குத் தெரியாது.இத்தனைக்கும் யாருக்குமே லைக் போடாத நான் அவர் சுவருக்கு சென்று பொறுப்பாக லைக் போட்டு வருவேன்.காரணம் புத்தகக் கடை வைத்திருப்பவர்களை எல்லாம் நான் எடுத்தெறியவே மாட்டேன்.குறுக்க நெடுக்க பார்த்தே ஆகவேண்டும் அவர்களை.
இன்னொரு சினிமா ஆர்வலர்,சினிமா விமர்சகர் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவார்.ஆனால் நல்லவர்.அவரும் அப்படியே அழைப்பு விடுத்தார்.அதன் பின் அன்பிரண்டு செய்துவிட்டார்.சென்னையில் தன் சொந்த ஆர்வத்தில் நிறைய மாற்றுத் திரைப்படங்கள் திரையிடுகிறார்.எனக்கு அங்கெல்லாம் சென்று அதைக் காண ஆசை.ஆனால் என்னை அன்பிரண்ட் செய்துவிட்டாரே.அதன் பின் எப்படி அவர் திரையிடலுக்குப் போக.
இப்படியேப் போய்க் கொண்டிருந்தால் யாருமே நட்பு வட்டத்தில் இல்லாமல் போய்விடுவார்கள்.அதற்கு முதலிலேயே நட்பு அழைப்பை நிராகரித்து விடுவது.ஒருவேளை அவர்கள் காரணம் கேட்டால் (கேட்கமாட்டார்கள்) “தெரியலையே நீங்க கொடுத்தீங்களா? அப்படியா? கை தவறி அமுக்கிட்டேனா?” என்றெல்லாம் சொல்லி சமாளிப்பது என்று நினைத்திருக்கிறேன்.
என் மனம் சொல்லத்தான் செய்கிறது விநாயக முருகன், யுவகிருஷ்ணா போன்ற சிங்கங்கள் எல்லாம், பிரபலங்களை எவ்வளவு அன்பாக நடத்துகிறார்கள்.எப்படி அன்பைப் பெறுகிறார்கள்.அது போல நடந்து கொள் என்று.
எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்தக் கலை கைகூடவே மாட்டேன் என்கிறது...
No comments:
Post a Comment