Saturday, 22 November 2014

என்னைப் புகழுங்கள்...

”என்னைப் புகழுங்கள்” என்றான்.
”புகழும் அளவுக்கு நான் ஒன்றுமே செய்யவில்லையா” என்று கெஞ்சினான்.
”ஒரு வார்த்தை என்னை அங்கீகரித்தால் என் மனம் மகிழ்ச்சியடையுமே” என்றான்.
நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.”உன்னைப் புகழக்கூடாதென்றில்லை.எங்கள் மனதில் காழ்ப்பில்லை.எரிச்சல் இல்லை.இதோ நாங்கள் வாய் நிறைய சுவீங்கம் சவைத்துக் கொண்டிருக்கிறோம் எப்படி புகழ்ந்து பேசுவது” என்றோம்.
“அப்படியானால் புகழ்ந்து எழுதலாமில்லையா” என்றான் அவன்.
“நாங்கள் எங்கள் தொடைகளை வறட் வறட் என்று சொறிந்து கொண்டிருக்கிறோம்.எப்படி எழுதுவது” என்றோம்.
அவன் எங்களையே வெறித்துக் கொண்டிருந்தான்.
நாங்கள் அந்த சூவிங்கம் சவைக்கும் ஒசையிலேயே எங்களை மாற்றி மாற்றி புகழ்ந்து கொண்டோம்.
தொடையைச் சொரியும் சத்ததிலேயே எங்களை பரஸ்பரம் புகழ்ந்து கொண்டோம்.
ஒருவருக்கொருவர் வண்ணப் புகைப்படங்கள் பரிமாறி புகழ்ந்து கொண்டோம்.
அவன் எங்களையே வெறித்து கொண்டிருந்தான்.
அவனிடம் தவறாமல் நலம் விசாரித்து மட்டும் வைத்துக் கொண்டோம்.எங்காவது பார்த்தால் அப்படி ஒரு சிநேகப் புன்னகை அவனுக்கு கொடுப்போம்.
ஒருநாள் அவன் அடையாளத்துகாக புழுங்கி நசுங்கி கரைந்து இறந்துப் போனான்.
அவன் அங்கீகாரத்துக்காக அழுத கண்ணீர் கன்னம் ஒரமாய் வரைந்திருந்த கோலத்தின் கோலத்தை குறித்துக் கொண்டோம்.
”அய்யோ செத்தே போய்விட்டானா” என்று அழுதோம்.
மாலை மரியாதையுடன் தோண்டிய குழியில் புதைத்து விட்டு வந்தோம்.
கொஞ்ச தூரம் சென்றதும் மறுபடியும் வந்து சரியாய் புதைத்திருக்கிறோமா என்று காலால் மிதித்து சோதனை செய்து கொண்டோம்.
அதுவரை ஒற்றுமையாய் இருந்த நாங்கள் சூவிங்கத்தை துப்பி தொடை சொறியவதை விட்டு விட்டு,தத்தம் அறையைப் பூட்டிக் கொண்டு அவன் படைப்பையும், அவனையும் புகழ்ந்து நெகிழ்ச்சியானஅஞ்சலிக் கட்டுரைகள் எழுதினோம்.
திருப்தியாய் தூங்கப் போகும் போது இன்னொரு திறமைசாலி வந்து
”என்னைக் கொஞ்சம் அடையாளப்படுத்துங்களேன்” என்று காலில் விழுந்தான்.
நாங்கள் பாக்கெட்டில் இருந்து சூவிங்கம்மை வெளியே எடுத்து பிரித்தோம்.

No comments:

Post a Comment