யாரையாவது பிரிந்து போகவேண்டும் என்ற நிலைமையைக் கண்டு அளவுக்கு அதிகமாக அஞ்சுவேன்.
சிறுவயதில்,முழுவருடப் பரீட்சைக்கு அக்கா தம்பி தங்கைகள் முறைப்பெண்கள் என்று திருச்செந்தூர் ஆச்சி வீட்டிலிருந்து ஒவ்வொரு குடும்பமாய் அவரவர் ஊருக்கு திரும்பும் போது என் கண்களில் கண்ணீர் நிறையும்.அந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ளவே முடியாது.அரைமணி நேரம் முன்பு சிரித்து விளையாண்ட அறையில் இருந்து ”ஹூம்கூம்” என்றொரு வெறுமைச் சத்தம் கேட்டது மாதிரி இருக்கும்.
புத்தகங்கள் மூலம் மட்டுமே இது மாதிரி செண்டிமெண்ட் உணர்வுகளிலிருந்து வெளியே வந்திருக்கிறேன்.அல்லது வந்தது மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஹைதிராபாத்திலிருக்கும் போது பக்கத்து வீட்டின் ஆண் வெளிநாடு போவதான செய்தியை நான் கேட்டேன்.அவர் மட்டும்தான்.குடும்பம் இங்கே இருக்கும்.அந்தப் பிரிவே என்னை டிஸ்டர்ப் செய்தது.அந்தப் பெண்ணைப்(அவர் மனைவி) பார்க்கும் போதெல்லாம் பேசும் போதெல்லாம் பிரிவை தாங்குவது எப்படி? என்ற அட்வைஸை மறைமுகமாகவோ நேரடியாக வழங்க ஆரம்பித்தேன்.
“அது அங்கப் போய் முதல் போன அவர் போட்டு பேசினதும் நார்மலாகிரும்”
“அதான் ஸ்கைப் இருக்கில்ல.முகத்தையேப் பாத்து பேசலாமே”
அதன் பிறகு என் மனைவி என் ஆர்வத்தை மென்மையாக சுட்டிக்காட்டியப் பிறகு வெட்கம் கொண்டேன். ஏனென்றால் இரண்டு பேர் பிரிகிறார்கள் என்றால் அதுபற்றி யோசித்து யோசித்து சோர்ந்து போய்விடுவேன்.
குவைத்திலிருந்து இந்தியா திரும்பும் போது என் லேப்டாப்பை சீட்டில் வைத்து விட்டு விமானத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தேன்.ஒருவர் வேகமாக ஒடிவந்து எனக்கு அதைச் சுட்டினார்.அவருக்கு நன்றி சொல்லி, அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அவர் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பிளம்பர்.குவைத்தில் வேலை பார்க்கிறார்.இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஊருக்குப் போவாராம். நான் நிஜமாவா சொல்றீங்க நிஜமாவா சொல்றீங்க என்று கேட்டேன்.ஆம் என்றார்.
போதுமே எனக்கு.. கவலை தொற்றிக் கொண்டது. இதோ இவர் இரண்டு வருடம் கழித்து இப்போதுதான் ஊருக்குப் போகிறார்.
ம்னைவி குழந்தைகளைப் பார்த்து என்ன செய்வார்.அப்படியே குதித்துக் கட்டிக் கொள்வாரா.மனைவியை நெஞ்சோடு அணைத்துக் கொள்வாரா.
இத்தனை காலம் குழந்தைதனத்தை ஒளித்து பொறுப்பாக குடும்பம் நடத்திய மனைவி கணவனைக் கண்டதும் “ஏங்க காலெல்லாம் ஒரே வலி.முதுகுல ஒரே வலி.இதப் பாருங்க இவன் மேலே விழுந்துட்டான்.விரல் கிழிஞ்சிட்டு. சரி நீங்க அங்க டென்சன் ஆகக்கூடாதுன்னு நா சொல்லல” என்றெல்லாம் கொஞ்சுவாரா?
இவர் ஊருக்கு சென்றதும் அவர்களுடைய முதல் கூடல் எப்படி இருக்கும்.ஆனந்தமாக மனவிடுதலையாக இருக்குமா? ஒரு புளியங்காயைக் கடிக்கும் கிளீச்சை இருவரும் மனதாலும் உடலாலும் உணர்வார்கள்தானே.பிரிவதும் சேர்வதும் பற்றி மனிதனின் ஐம்புலன்களும் மூளையும் கொள்ளும் உணர்வுகள்தான் வாழ்க்கையின் முதுகெலும்பா?
இப்படியெல்லாம் யோசிக்கும் போது, அந்த பிளம்பர் தன் லீவை முடித்து அடுத்த இரண்டு வருட சர்வீஸுக்கு கிளம்பும் நாளுக்கு முந்தைய நாளைப் பற்றிய சிந்தனை வந்தது.
அதைப் பற்றி யோசிப்பது அச்சம் தருவதாய் இருந்தது.அவர்களுக்குள் நடக்கும் அந்த இரவில் காமம் இருந்திருக்குமா? ஒரு துளி அளவுக்கு கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் “இதுதான் என்னால் உனக்குக் கொடுக்க கூடிய பெஸ்ட்” என்ற அளவில் ஒருவரை ஒருவர் பகிர்ந்திருப்பார்கள். பரஸ்பரம் கொஞ்சி அழுதிருப்பார்களா? அந்தக் கண்ணீர் எல்லாம் கங்கை காவிரி மாதிரி புனித நதிகள் இல்லாமல் வேறென்ன?
மறுநாள் என்ன நடந்திருக்கும் ஒருவரை ஒருவர் கைகளைப் பிடித்து நின்றிருப்பார்கள்.அப்புறம் கைகளை விட்டிருப்பார்கள். இனி அடுத்த ஸ்பரிசம் இரண்டு ஆண்டுகள் கழித்துதான்.
செல்களால் ஆன திசுக்களால் ஆன சதையையும் எலும்பையும் கொண்ட கணவனும்.
செல்களால் ஆன திசுக்களால் ஆன சதையையும் எலும்பையும் கொண்ட மனைவியும்.
அவர்களுக்குள் மாபெரும் வெளியை அனுமதித்து கலங்கி பிரிகிறார்கள்.
ஒவ்வொரு விநாடியும் உலகில் இது நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கும் போதே சிலிர்க்கிறது அல்லவா
No comments:
Post a Comment