கடவுள் பலூனை என் கையில் கொடுத்தார்.
”ஊதி, நூலால் கட்டி வை!.பார்க்க அழகாக இருக்கும்.நின்று நிதானமாக ரசி!” என்றார்.
நான் ஊதினேன்.
சமூகம் சொன்னது “இந்த பலூனை எவ்வளவு பெரியதாக ஊதுகிறாயோ அவ்வளவு அழகாக இருக்கும்.அதை ஆனந்தமாக ரசிக்கலாம்” என்றது.
நான் வெறித்தனமாக அடிவயிற்றிலிருந்து காற்றெடுத்து ஊதினேன்.பலூன் பெரிதாய்ப் போய்க் கொண்டிருந்தது.
”ஆஹா அவன் எவ்வளவு அழகா ஊதுறான் பாரு” என்றார்கள் . இன்னும் ஊதினேன்.இன்னும் ஊதினேன்.
தன்னம்பிக்கை வகுப்பெடுப்பவர் சொன்னார்” இன்னும் ஊதலாம்” என்று. இன்னும் ஊதினேன்.
வித்தியாசமாக எதையாவது செய்து பலூனைப் பெரிதாக்க நினைத்தேன்.
நானே பலூனுக்குள் புகுந்து, ஆம்! பலூனுள் புகுந்து ஊதினேன்.
பெரிதாக பெரிதாக கர்வம் வந்தது.
பெரிதாக பெரிதாக கர்வம் வந்தது.
என் பலூன் பெரியது என்று தம்பட்டம் அடிக்க வேண்டும் போல இருந்தது.
இதையெல்லாம் தாண்டி கடவுள் சொன்னது ஞாபகம் வந்தது “பார்க்க அழகாக இருக்கும்” நான் பார்க்க வேண்டும்.என் அழகிய வண்ண பலூனைப் பார்க்க வேண்டும்” என்று நினைத்தேன்.
பலூனை விட்டு வெளியேறப்போனேன்.வாசலை அடைத்த அடைப்பே நான்தான் ஆனதால், அசைந்தால் பலூன் காற்று வெளியேப் போனது.பதற்றமாக மறுபடியும் உடலால் பலூன் வாசலை அடைத்தேன்.
மாட்டிக்கொண்டேன்.வெளியேப் போக முடியாது.
போனால் பலூனில் ஒரு துளிக் காற்றுக்கூட இருக்காது.,”காற்றில்லா பலூன்காரன்” என்று காறித்துப்புவர்கள்.
இப்போது என்ன செய்ய? என்ன செய்ய? வேறு வழியே இல்லை. என் பெரிய பலூனை, நான் பார்த்து ரசித்து அனுபவிக்க முடியாத பலூனை அப்படியே வாசல் பக்கம் நின்று அடைத்து காற்றைப் பிடித்துக் கொண்டேன்.என்னால் அதை தள்ளி நின்று பார்க்கமுடியாத நிலை.
பலூன் வழியே வெளியே உலகம் தெரிந்தது.
அங்கே பலர் அளவாக ஊதி பல வண்ண பலூன்களை ரசித்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது ஏதோ தவறு செய்துவிட்டேன் என்று தோன்றியது.
ஆழ்மனத் தோன்றலை வேக வேகமாக வெளிமனது மணலிட்டு மறைத்தது.
நான் ஆவேசமாக “என்னால விளையாட முடியாமப் போகலாம், பார்த்து ரசிக்கமுடியாமல் போகலாம்.ஆனால்என்னுடைய பலூன்தான் ரொம்ப்ப் பெரிசு” என்று கத்துவதைக் கேட்காமல் அவரவர வேலையை செய்து கொண்டிருந்தனர்.
சலிப்பில் இந்த்ப் பக்கம் திரும்பினேன்.
அங்கே புதிதாய் வந்த பலர்ஆர்வத்துடன் ,
கடவுளிடமிருந்து பலூன் வாங்கி ஊதிக்கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment