Monday, 15 December 2014

தகப்பன்களின் பெண்குழந்தை பாசம்...

மாமனாரிடம் அதிக மரியாதையாய் இருப்பேன். டிப்ளோமேட்டிக்காக இருப்பேன்.
ஹைதிராபாத்தில் செட்டிலான புதிதில் மாமாவும் அத்தையும் சென்னையிலிருந்து மகளின் நலம் காண வர, நாங்கள் அவர்களை மனமார வரவேற்று உபசரிப்புகள் செய்தோம்.
ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்றொரு கேப் பிடித்து ஹைதிராபாத்தை சுற்றினோம். சலார் ஜங் மியூசித்தைச் சுற்றி, என்.டி.ஆர் பார்க்குக்கு வரும் போது அங்கே ஒரு குல்பி ஐஸ் ? மாதிரி ஏதோ ஒரு ஐஸ் வண்டிக்காரர் நின்று கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
என் மனைவி என் காதில் போய் கிசுகிசுத்தார்.” அந்த ஐஸ் சாப்பிடுவோமா?
“அய்ய அதா.அதையா. போயேன்.அதப் போய் எவன் சாப்பிடுவான்”
“இல்ல சாப்பிடலாமே”
“எனக்கு அதப் பாத்தாலே அருவருப்பாயிருக்கு.பிடிக்கல. உனக்கு வேணுன்னா நீ வாங்கி சாப்பிடு. நான் வாங்கிட்டு வரமுடியாது”
“நீங்க வேஸ்டு.எனக்கென்னவோ சாப்பிடலாம் போல இருக்கு. கம்பெனி இல்லாம எப்படி சாப்பிடுறது”
“இந்த செண்டிமெண்ட் மொக்கயெல்லா இப்ப எனக்கு பிடிக்கல போயேன்” என்று கொஞ்சம் எரிந்து விழுந்தேன்.
துரதிஷ்டவசமாக இந்த டயலாக்கை என் மாமனார் கேட்டு விட்டார் போலும். இயல்பாக அமைதியாக இருக்கும் அவர். திடீரென்று பரபரப்பானார். தன் மகளின் சின்ன ஆசை நிராகரிக்கப்பட்டதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கொஞ்சம் அதட்டலாக,
”உனக்கு என்னம்மா வேணும். ஐஸா! நான் வாங்கிட்டு வாரேன். என் கிட்ட கேக்க வேண்டியதுதான” என்று குரலை உயர்த்தினார். நான் எதிர்ப்பார்க்காத குரல் உயர்த்தல் அது. அதிர்ச்சியாகி விட்டது. என் மனைவிக்கே அதிர்ச்சியாகிவிட்டது.
நான் அடிபட்ட மாதிரி குரலை மெல்லமாக வைத்துக் கொண்டு “ இல்ல மாமா வாங்கிக் கொடுக்கிறது கொடுக்காதது பத்தி என்ன இருக்கு.அவளுக்கு வேணுமின்னா அவ வாங்கி சாப்பிடட்டும்ன்னு சொன்னேன்.எனக்கு அந்த சுகாதாரம் சுத்தம் பிடிக்கலன்னுதான் சொன்னேன்” என்றொரு விளக்கம் அளித்தேன்.
மாமா அப்போதும் சமாதானம் ஆகவில்லை.இறுக்கமாகவே இருந்தார்.
என் மனைவியும் குறுக்கிட்டு “ யப்பா சும்மா கேட்டேன்.கொஞ்சம் தள்ளி குவாலிட்டி ? ஐஸ்கிரீம் நிக்கிரான் அங்க வாங்கிச் சாப்பிடலாம்” என்று பிரச்சனையை முடித்து வைத்தார்.( வேற என்ன வழியிருக்கு இந்தியப் பெண்களுக்கு  )
அன்று இரவு நானும் மாமாவும் ஹைதிராபாத் நிலவை ரசித்தபடியே முறுக்குத் தட்டை மற்றும் ஸ்பிரைட் குடிக்கும் போது அளவுக்கதிகமாக அன்பாக பேசிக்கொண்டோம்.
உறவை ஒட்ட வைப்பதில் கவனமாக இருந்தோம்.அவர் என்ன சொன்னாலும் நான் ஆமோதித்தேன். நான் சொல்ல வருவதை முன்கூட்டியே அவரே சொல்லி அதையும் அவர் ஆமோதித்தார். 
தகப்பன்களின் பெண்குழந்தை பாசம், எப்ப எங்குன வெடிக்கும்ன்னு தெரியாது... கவனமா டீல் பண்ணனும்

No comments:

Post a Comment