Monday, 15 December 2014

அம்பேத்கரை ஏன் கொண்டாட வேண்டும்...

பாரதியாரை அனைவரும் புகழ்கிறார்கள்.நல்ல விசயம். எனக்கும் பாரதியை ரொம்பப் பிடிக்கும்.பாரதியின் ஒன்றிரண்டு நெகட்டிவ் விசயங்களை வைத்து அவரை தூற்ற நான் தயாராயில்லை.விமர்சிக்கலாம்.ஆனால் தூற்ற முடியாது.
Force is an action exercised on a body so that is changes or tends to change in the direction of the applied force. என்றொரு டெஃப்னிசன் சொல்வார்கள்.
அதில் வரும் "Tends to change" என்பதுதான் முக்கியமானது. அதாவது ”மாற்றத்துக்காக முனைவது”.
பாரதியார் அது போல முனைந்தார்.அதில் ஒன்றிரண்டு முன்னேப் பின்னே இருக்கலாம்.அதை மட்டுமே வைத்து அவர் ஒட்டு மொத்த நோக்கத்தை சந்தேகப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை.
அடுத்து பாரதியார்,காந்தி போன்றவர்கள் ஒரு Icon ஆக பரவியிருக்கிறார்கள்.
சரவணா ஸ்டோர்ஸ், ஐபோன், பென்ஸ் கார், இது போல சட்டென்று எல்லோருக்கும் தெரியும் ஐகான்களாக மாறியிருக்கிறார்கள்.
இதற்கு நமது கல்வித் திட்டமும், நம் அப்பா அம்மாவும் முதல் காரணம்.ஏனென்றால் கல்வித் திட்டத்தில் பாரதியார்,நேரு,காந்தியெல்லாம் புகழப்படுகிறார்கள்.அதைப் படித்த அப்பா அம்மா அதையே நமக்கு போதிக்கிறார்கள்.முடிவாக நமக்குள் பாரதியாரும் காந்தியும் மட்டுமே படிந்து விடுகிறார்கள்.
தலைவன் பெரியவனா? தலைவனுடைய கருத்தா? என்று பார்க்கும் போது தலைவனின் கருத்துதான் பெரியது என்பதில் உண்மை இருக்கிறதென்றாலும், சமூகம் சொல்பவனை எப்போதும் பார்க்கிறது.இதை யார் சொல்கிறார்கள்? அவனுக்கு ஒரு கவர்ச்சி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.(அந்தக் கவர்ச்சியை உருவாக்கத்தான் ஜெயமோகன் சாரு போன்றவர்கள் பல கவர்ச்சி வாக்குமூலத்தை பேசுகிறார்கள் என்பது என் கருத்து).
பாரதியாருக்கும் காந்திக்கும் அந்த கவர்ச்சியை கல்வித்திட்டமும்,அப்பாக்களும் அம்மாக்களும், அந்த அப்பா அம்மாக்களால் வளர்க்கபட்ட ஊடகங்களும், திரைப்படங்களும் இயல்பாகவே கொடுத்துவிடுகின்றன.
நீங்கள் கவனித்துப் பாருங்கள் பாரதியின் மீசையை ஒவ்வொரு ஒவியன் வரையும் போதுஅது அதிக தன்னம்பிக்கையாகவும் கூர்மையாகவும் ஆகிக்கொண்டே இருக்கிறது.அந்தக் கூர்மை முடிவில்லாத போற்றுதலின் வெளிப்பாடுதான்.கண்களின் ரவுத்திரமோ ஏறிக்கொண்டே இருக்கின்றது.
ஆனால் அம்பேத்கார் போன்ற தலைவர்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.
அம்பேத்கார் பாரதியை விட ஆயிரம் மடங்கு உக்கிரமான சமூக சிந்தனை உடையவராக, அறிவுப் பூர்வமாக இருந்திருக்கிறார்.அம்பேத்கார் அறிவியல் மற்றும் மானுடவியல் தெரிந்த ஒரு அறிஞர்.அவரைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? அதிகம் தெரியாது.
காரணம் அம்பேத்கார் பற்றி கல்வித் திட்டத்தில் அதிகம் இல்லை.ஆகையால் அப்பா அம்மாவுக்கு அவரைத் தெரியாது.அதனால் நம் யாருக்கும் அவரைத் தெரியாது.
அம்பேத்காரைத் தெரியாவிட்டால் ஒன்று குடிமுழுகிவிடாது. ஆனால் அவர் சொன்ன அற்புதமான கருத்துக்களை விவாதம் செய்ய சிந்திக்க அவரை கட்டாயம் கொண்டாடி ஆகவேண்டியதிருக்கிறது.
என் மகளிடம் அம்பேத்கார் புகைப்படத்தைப் பார்த்து “இவர் பெரிய அறிவாளி” என்று ஏற்றிப் பாடினால்தான் அவள் அவரை உற்று கவனிப்பாள்.ஆகையால் நாம் அனைவரும் அம்பேத்கார் புகழ்பாடக் கற்றுக் கொள்ள வேண்டும்.அவரை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க பாடுபட வேண்டும்.
“ஐயோ அம்பேத்கார் என் மதத்தைத் திட்டியிருக்கிறாரே.என் ஜாதியை திட்டியிருக்கிராரே அவரை எப்படி என் அடுத்த தலைமுறையினரிடம் சேர்ப்பேன் என்ற அச்சம் பலருக்கு இருக்கலாம்.
அம்பேத்கார் இருந்த காலத்தில் இருந்த தன்மையை விளக்கி அதனால் அவர் அப்படிச் சொன்னார்.இன்று இதே ஜாதிக் கொடுமையை “ஜாதி இந்துக்களும்” அதிகம் செய்கின்றனர் என்று விளக்கலாம்.
“ஒஹோ! கீழ்வெண்மணி பயங்கரத்தில் நாடாரும் ரெட்டியாரும் தேவரும் அவரும் இவரும் என்று எல்லா ஜாதி இந்துக்களும் ஈடுபட்டிருகின்றனரா?.ஏன் அவர்கள் இப்படி ஈடுபட்டார்கள்” என்றொரு குழந்தை கேட்க வேண்டும்.அப்படிக் கேட்பதின் மூலம் அவர்களிடமிருந்து ஜாதி இந்துக்களின் கொடுமைகளை தட்டிக் கேட்கும் பல அம்பேத்கார்கள் உருவாகும் வாய்ப்பு உருவாக வேண்டும்.
அதற்கு அம்பேத்காரை மிகப்பெரிய செலிப்பிரிட்டியாக நாம் கொண்டாட வேண்டும்.அதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
இந்தப் பத்தி கைபோன போக்கில் போகிறது.எங்கே நிறுத்த வேண்டும் என்று தெரியவில்லை.ஆகையால் நிறுத்திக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment