நேற்று பெசண்ட் நகர் ”ஸ்பேசஸ்” அரங்கங்களில் தோட்டத்தில் “கிரீன் பஸார்” என்றொரு கண்காட்சியைக் காண குடும்பமாக சென்றிருந்தோம்.
சுற்று சூழல் பற்றிய விழிப்புணர்வு, செயற்கை உரம் மருந்து பயன்படுத்தாத ஆர்கானிக் உணவு கண்காட்சி அது.
நுழைந்ததும் ஒரு தேன்நெல்லிக்காய் பத்துரூபாய் என்று கொடுத்தார் வாங்கி சாப்பிட்டோம்.
அதன் பிறகு நிறைய ஜாம் வகைகள் விற்கிறார்கள்.அதை டேஸ்டும் பார்த்துக் கொள்ளலாம்.நான் எல்லா ஜாம்களை டேஸ்ட் பார்த்து அது பற்றி தெரிந்து கொண்டேன்.பைனாப்பிள் சில்லி ஜாம் ஒரு பாட்டில் வாங்கினேன்.
பப்பாளிப் பழ அல்வா போன்ற பல உணவுவகைகளை சுவை பார்த்தேன்.பைனாபிள் கீரை ஜூஸும், ஸ்டிராபெர்ரி தேங்காய்ப்பாலும் வாங்கிக் குடித்தோம் (ஒரு டம்பளர் வாங்கி மூன்று பேரும் கொஞ்சம் கொஞ்சம்).
துளசி ஹெர்பல் டீ வாங்கி குடித்தோம்.
இது போன்ற கண்காட்சிகளில் ஸ்டால்காரர்களே சுவை பார்க்க ஸ்பூனில் எடுத்து நம் வாயில் நீட்டினாலும், நாம் அதை சுவைபார்க்க கூச்சப்படுகிறோம்.புதிதாய் ஒன்றை விசாரித்துத் தெரிந்து கொள்ள அவ்வளவு கூச்சம் நமக்கு. ஒருமாதிரி கோணலாக ஒதுங்கிப் போகிறோம்.
சுற்றுச்சூழலுக்கான தென்னை நார் தொட்டி, விதைகள், நாப்கின்கள்,சோப்கள் என்று எல்லாவற்றையும் ஒரு ரவுண்ட் தெரிந்து கொண்டோம்.
“இந்த மாதுளம் பழங்கள் அழகாயில்லை என்று நினைப்பீர்கள்.ஆனால் எந்த மருந்தும் அடிக்காத மாதுளம்பழங்கள் இப்படித்தான் இருக்கும்.ஆனால் ஆரோக்கியம்” என்றார் ஒருவர்.
கீழ் அரங்கில் இருந்த Indoor games பிரிவில் போய் அங்கே இருந்த விளையாட்டுகளை சம்பளம் போட்டு உட்கார்ந்து விளையாடினோம்.
ஒரு பெண்மணி ”கரடி மலை மீதியேறி என்ன கொண்டு வந்தது?” என்ற பாடலை தானும் பாடி,சிறுவர்கள் கூட்டத்தையும் கோரஸாக பாடவைத்துக் கொண்டிருந்தார்.
வெளியே வந்தால் அங்கே ஒருவர் சுற்றுசூழல் பற்றி மைக்கில் கதை சொல்லிக்கொண்டிருந்தார் ,
ஒரு ராஜா நைட்டு தூங்கும் போது, தவளைகள் சத்தம் தொந்தரவா இருக்குதுன்னு, எல்லாத் தவளைகளையும் கொல்லச் சொன்னாராம். வீரர்கள் கொன்னுட்டாங்களாம்.
ஒருவாரம் பொறுத்து வழக்கத்துக்கு மாறாக அதிகம் கொசுக் கூட்டங்கள் ராஜாவைக் கடிச்சிருக்கு.ராஜா கேட்டாராம்
“என்ன மந்திரி இப்படி கொசுக்கடிக்குதுன்னு”
“கொசுவ எல்லாம் பிடிச்சித் திங்கிற தவளைகள கொன்னுட்டோமே மன்னா! அப்ப கொசுக்கள் நிறைய வளரத்தான செய்யும்”
“கொசுவ எல்லாம் பிடிச்சித் திங்கிற தவளைகள கொன்னுட்டோமே மன்னா! அப்ப கொசுக்கள் நிறைய வளரத்தான செய்யும்”
என்று கதை சொன்னார்.
நான் சத்தமாக கைத்தட்டி என் பாராட்டை வழங்கினேன்.நல்ல திருப்தியான மனதோடு வெளியே வந்தோம்.
வரும் போது ஸ்பேசஸ் அரங்கை விட்டு அரைக் கிலோ மீட்டர் தூரத்தில் மீன் விற்றுக் கொண்டிருந்தார்கள் பலர்.அவர்கள் பிள்ளைகள் எல்லாம் அருகில் நின்று கொண்டு விளையாடிக்கொண்டிருந்தன.
இவர்களுக்கு இந்த கிரீன் பஸாரில் கலந்து கொள்ள அனுமதி உண்டா? திடீரென்று இவர்கள் எல்லாம் “நாங்களும் சுற்றுச் சூழல் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறோம்” என்று நுழைந்தால் ஸ்பேசஸுக்குள் விடுவார்களா? நம் வெள்ளை சொள்ளை மக்கள்.
இது மாதிரியெல்லாம் யோசித்ததாலே, நான் ஒரு நல்லவன் என்ற உணர்ச்சியோடு குடுமப்த்தோடு.ஆட்டோவில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.
No comments:
Post a Comment