ஆரோக்கியசாமி என்னுடன் காரில் ஊருக்கு வருவது மகிழ்சியாகவும் இருந்தது, பழைய டிரான்சிஸ்டரை திரும்ப கேட்பானே என்று கவலையாகவும் இருந்தது.
எங்கள் கடைக்கு எதிர்த்தாற்போல உள்ள சித்தப்பாவின் கடையில் காலை ஆறுமுதல் இரவு பதினொன்று வரை வேலை பார்க்கும் பையன்தான் ஆரோக்கியசாமி.பதிமூன்று வயது, என்னுடைய வயதுதான் இருக்கும்.
சித்தப்பா கடைக்கு இரண்டு வருடம் முன் வந்தான்.
வந்த புதிதில் தினமும் அழுது கொண்டே இருப்பான்.
சித்தப்பா அவனை வேலை செய்ய விடாமல் கடையில் வைத்து உன்னியப்பமும்,முட்டைகோஸ் கேக்கும் வாங்கி சமாதானபடுத்துவார்.
கடையில் இருக்கும் மற்ற இரண்டு பையன்கள் ஆரோக்கியசாமியை கிண்டல் செய்வான்கள்.நான் கூட அடிக்கடி சித்தப்பா கடைக்கு போய் ஆரோக்கியசாமி அழுவதை வேடிக்கைபார்த்துவிட்டு வருவேன்.
கன்னங்கரேல் என்றிருப்பான்.
மிகுதி அழுகையால் மூக்கில் வடியும் சளியை துடைக்காமலே இருப்பது வழக்கம்.
தலைமுழுக்க தேங்கா எண்ணெய்யை வைத்திருப்பான்.நெஞ்சில் ஒரு சிலுவை டாலர் போட்ட செயின் தொங்கும்.
தேவைக்கு அதிகமான சலவையால சுருங்கின பிரிந்த கால்சட்டை.முட்டியில் இருக்கும் அழுக்குச்சாம்பல் என்ற தோற்றமாய் இருப்பான்.
ஒருமாதத்தில் சரியாகி விட்டது.அழுகை நின்றது.
எடை போட்டு பொட்டலம் கட்ட பழகிக்கொண்டான்.
பத்து முட்டைகளை லாவகமாக இங்கீலீஸ் பேப்பரில் மடக்கி அழுத்தம் கொடுக்காத ஆனால் உறுதியான சணல் கட்டுக்களை போட பழகிக்கொண்டான்.
சும்மா இருக்கும் நேரத்தில் கையகலத்தில் முக்கால்வாசி இருக்கும் பைபிளை கால்சட்டையில் இருந்து எடுத்துப்படித்து கொண்டிருப்பான்.”
யல ஆரோக்கியசாமி பைபிள் படிச்சி ஃபாதராகப் போறான் என்று மற்ற பையன்கள் கிண்டல் செய்வதை பொருட்படுத்துவதே இல்லை.
சித்தப்பா தன் வக்கீல் தொழிலை அதிகம் கவனித்ததால் பலசரக்கு கடையை நடத்த சிரமப்பட்டு, அதை அரிசி மட்டும் விற்பனை செய்யும் அரிசிக்கடையாக்கினார்.
கடையில் இருக்கும் மூன்று பையன்களில் இரண்டு பையன்களுக்கு கணக்கை முடித்து அனுப்பிவிட்டார்.
ஆரோக்கியசாமியை மட்டும் வைத்துக்கொண்டார்.
அரோக்கியசாமி கல்லாவில் உட்கார்ந்தான்.
சித்தப்பா கோர்ட்டுக்கு போகும் போது ஆரோக்கியசாமியே கடையின் முதலாளியாகிவிட்ட கம்பீரம் அவன் முகத்தில் வந்து சேர்ந்தது.
அப்பா கடைக்கு போனால் மட்டும் கல்லாவில் இருந்து எழுந்து நிற்பான்.
நான் போனால்,கல்லாவில் இன்னும் சாகவாசமாக இருந்து கொண்டு என்னை நோக்குவது போல தோண்றுவது, உண்மையா அல்லது அது என் தாழ்வுணர்ச்சி கொடுக்கும் மாயத்தோற்றமா என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியாது.
நானும் அவனும் நிறைய பேசுவோம்.
அவன் அப்பா,அவன் அக்கா சடங்கிற்கு குடித்து விட்டு வந்தாராம்.
எல்லோரும் அவரை திட்ட வேட்டியை அவுத்து பந்தலுக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தாராம்.
அம்மா அழுதுகொண்டே வேஸ்டியை கட்டி விடும்போது அம்மாவின் முதுகில் அப்பா ஒங்கி குத்த,வர்ம அடியாய் பட்டு அம்மா மூச்சிழுத்து கீழே விழுந்தாளாம்.தூக்கிக்கொண்டு ஆஸ்பித்திரிக்கு எல்லாரும் ஒட,இன்னும் ஒரு கூட்டம் அப்பாவை அடித்து துவைக்க,ஆரோக்கியசாமியும்,சடங்கு பட்டுப்புடவையில் இருக்கும் அவன் அக்காவும் அழுதுகொண்டே நின்றார்களாம்.
அதற்கு மறுநாள்தான் அம்மா ஆரோக்கியசாமி படிப்பை நிறுத்தி நாகர்கோவிலுக்கு வேலைக்கு அனுப்பினாராம்.
“உனக்கு சம்பளம் எவ்வளவு ஆரோக்கியம்”
“தெரியாதுடே.அம்மாக்குத்தான் தெரியும்”
“அடுத்தது எப்போ ஊருக்கு போவ”
“கோயில் திருவிழாவுக்குதான் போகனும்.அக்காவ பார்க்கனும்.அக்காக்கு நான்ன்னா ரொம்ப பிடிக்கும்.இதப்பாரு லட்டர் போட்டிருக்கா”என்று நீலநில கவரை காட்டுவான்.
சித்தப்பா ஆரோக்கியசாமியிடம் முழுதமாய் கடையை ஒப்படைத்தார்.
என்ன வியாபாரம் விற்றது என்பதை தனியாக ஒரு நோட்டில் துல்லியமாக எழுதிவைத்து காசைக்கொடுப்பான்.
காலையில் சித்தப்பாவிடம் பணம் வாங்கிப்போய் கோட்டாறு சென்று அரிசி கொள்முதல் செய்வான்.
சாப்பாட்டை கடையிலே முடித்துக்கொள்வான்.மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய் அரை மணி நேரத்தில் திரும்பிவிடுவான்.இரவு பத்து மணிக்கு மேல் கடையை அடைத்து சாவியை சித்தப்பாவிடம் கொடுப்பது வரை வேலை செய்து கொண்டே இருந்தான்.
நடுவில் ஆரோக்கியசாமி அம்மாவுக்கு அம்மை போட்டிருப்பதாக சித்தப்பாவுக்கு செய்தி வர அவன ஊருக்கு போகச்சொன்னார்.
“வேண்டாம் அண்ணாச்சி. எனக்கு கோயில் திருவிழாவுக்கு போக பத்து நாள் லீவு மட்டும் கொடுங்க. இப்ப லீவு வேண்டாம்” என்றான்.
ஆரோக்கியசாமி கல்லாவில் இருக்க,நான் சித்தப்பாவின் கடையுள் உலாத்திக்கொண்டிருக்கும் போது தூசி படிந்த செல்ஃபின் உள்ளே அது என்னை ஈர்த்தது.பழைய பாக்கெட் டிரான்சிஸ்டர்.எடுத்து திருப்பி திருப்பி பார்த்தேன்.
“இது என்னதுடே”
“அது பழைய பாக்கெட் ரேடியோடே”
“அழகாயிருக்க ஆரோக்கியம்.இத சரி பண்ணி நானே வெச்சிக்கப்போறேன்”
ஆரோக்கியசாமி முகம் மாறியது.
“இல்லடே அது கடைக்க ரேடியோ.அத நீ கொண்டு போகக்கூடாது.அண்ணாச்சி என்கிட்ட கேட்ட அவியளுக்கு என்ன பதில் சொல்றது”
எனக்கு கோபம் வந்தது.நம்ம சித்தப்பா கடைக்கு வேலைக்கு வந்துட்டு நம்மளையே அதிகாரம் பண்ணரான் பன்னிப்பய என்று நினைத்துகொண்டேன்.
மறுநாள் சித்தப்பா இருக்கும் போது, சித்தப்பாவிடம் கேட்டு ரேடியோவை நான் எடுத்துக்கொண்டேன்.
“நீ அத யார்க்கிட்டயாவது கொடுத்து சரி பண்ணி, இங்க கடையில் ரெண்டு நாள் வெச்சி எங்களுக்கு பாட்டு போட்டு காட்டிட்டு அத எடுத்துக்க “ என்றார் சித்தப்பா.வெற்றிப்பெருமிதமாய் ஆரோக்கியசாமியை பார்த்தேன்.
வாரம் போனது.வாங்கிய டிரான்ஸ்சிஸ்டரை தூக்கி ஒரு இடத்தில் போட்டவன் தான் அதை மறந்தே போய்விட்டேன்.
இப்போது ஆரோக்கியசாமி ஆரம்பித்தான்.தினமும் சித்தப்பா கடைக்கு போகும் போதெல்லாம் டிரான்சிஸ்டர் சரியாகிவிட்டதா என்று கேட்ப்பான்.அதுவும் சித்தப்பா இருக்கும் போது வேண்டுமென்றே கேட்பான்.தினமும் ஒரு பதிலைச்சொல்வேன்.
“எதுக்குன்னா விஜய்.ரேடியோ கடைப்பொருள் பாத்துக்க அதான் கேட்டேன்” என்பான்.
அவனிடம் பேசுவதை தவிர்த்தேன்.கொஞ்சம் கொஞ்சமாக சித்தப்பா கடைக்கு போவதையே தவிர்த்தேன்.அப்பாவிடம் சொன்னேன்.
“ஆரோக்கியம் அவன் கடையில் பொறுப்பா கவனமா இருக்கான்.நீதான் வாக்கு கொடுத்த.அப்ப அது படி நீதான் இருக்கனும் “ என்று முடித்துக்கொண்டார்.
ஆரோக்கியசாமி மேல் எரிச்சல் வந்தது.பழைய சரி செய்யாத பாக்கட் ரேடியோவையும் கொடுக்க முடியாது.கிண்டல் செய்வான்.அது மானப்பிரச்சனை.
கோயில் கொடை வந்தது.
வழக்கமாக பஸ்ஸில் போகும் நாங்கள் அன்று கார் பிடித்து போனோம்.காருக்குள் நான் ஏறும்போது உள்ளே சீட்டில் ஆரோக்கியசாமியும் தன்னுடைய பையை மடியில் வைத்து உட்கார்ந்திருந்தான்.மகிழ்ச்சி தாங்கவில்லை
அவன் கையை பிடித்துக்கொண்டேன்.
“நீ கிறிஸ்டின் ஆச்சே உனக்கும் திருவிழாவா இப்போ “என்றேன்.ஆரோக்கியசாமி சிரித்தான்.
பேசவில்லை
“ஒ எங்க கோயில் கொடை முடிஞ்சதும் சர்ச்சுல திருவிழா ஆரம்பமாயிருமோ “என்றேன்.
அதற்கும் ஆரோக்கியசாமி சிரித்தான்.
அம்மா காரில் போகும் போது ஆரோக்கியசாமிக்கு கொழுக்கட்டை,முறுக்கு எல்லாம் கொடுத்தாள்.வேண்டாம் என்று மறுத்தவன் பிறகு சாப்பிட்டான்.
என்னிடம் சரியாக பேசாதது கூட எனக்கு ஆச்சர்யம் இல்லை.ஆனால் டிரான்சிஸ்டர் கேட்காமல் இருப்பது ஆச்சர்யம்.
இதோ அம்மா இருக்கிறார்கள்.அப்பா சித்தப்பா அண்ணன் எல்லோரும் இருக்கிறார்கள்.இப்போது டிரான்ஸ்சிஸ்டரை கேட்க வேண்டியதுதானே ஆரோக்கியசாமி.கேட்டு தர்மசங்கடபடுத்த வேண்டியதுதானே என்று மனதிற்குள் கேட்டேன்.
வள்ளியூரில் இறங்கி முறுக்கு வாங்கித்தந்தார் அப்பா.
ஒண்ணுக்கிருக்க கீழே இறங்கும் போது ஆரோக்கியசாமியையும் கூப்பிட்டேன்.
” எனக்கு வரல” என்று என்னை தவிர்த்தான்.
மெய்ஞானபுரம் தாண்டியதும் “திரேஸ்புரம்” வந்தது, கார் ஊருக்குள் சுற்றி சுற்றி ஒரு தெருமுனையில் நின்றது.என்னை காருக்குள் வைத்துகொண்டு.ஆரோக்கியசாமியும் சித்தப்பாவும் இறங்கினார்கள்.
வெளியே கந்தல் சேலை கட்டி கொண்டுக் ஒல்லியாக பெண் நின்றிருந்தார்.அதுதான் ஆரோக்கியசாமியின் அம்மாவை இருக்கவேண்டும்.
காருக்குள் இருந்து பார்க்கத்தான் முடிந்தது.கேட்க முடியவில்லை.சித்தப்பா பணத்தை எடுத்து ஆரோக்கியசாமியின் அம்மாவிடம் கொடுத்தார்.அவர் கையெடுத்து கும்பிட்டுக்கொண்டே பணத்தை வாங்கிக்கொண்டார்.சிரித்தபடி கும்பிட்டு கொண்டே சித்தப்பா காருக்குள் வந்தார்.
அப்பா கேட்டார் “என்னாச்சி தம்பி”
“என்னத்த சொல்றது.என் பையன் தெரியாம செய்ஞ்சிட்டான்னு அம்மா கெஞ்சுறா.கணக்கு முடிச்சி காச கையில கொடுத்துட்டேன்.”
அப்பா டிரைவரைப்பார்த்து “நீங்க வண்டிய எடுங்கன்னே “ என்று சொன்னவர் சித்தப்பாவிடம் திரும்பி
“ஆமா கடைப்பசங்க பிரச்சனை பண்ணுனா நாம எப்பவுமே பஸ்ஸுல அவனுகள தனியா அனுப்பக்கூடாது.ஒடிப்போனா பிறகு அவன் அப்பா அம்மாவுக்கு நாமதான் பதில் சொல்லனும்.கார் புடிச்சி வீட்டிலயே போய் விட்ரனும்.அதான் சேஃப்டி”
சித்தப்பா கத்தனார்
“தேவ்டியாப்பய.எவ்ளோ நம்பினேன்.மதியானம் ஒருத்தன வரச்சொல்லி சீட்டு கட்டிருக்கான்னே கடைப்பணத்த எடுத்து.தயளி அவன் நெஞ்சழுத்தத பாத்தியா.”
அப்பா பதிலுக்கு கத்தினார்.
“சரி திருடினான் அதுக்கு.நேத்து ராத்திரி அவன அந்த அடியா அடிப்பாங்க.நான் வரலன்னா அவன நீ அடிச்சு கொன்னுருப்ப.அவன் கால் எதுக்கு அஞ்சு கிலோ படிக்கல்ல எடுத்து எறிஞ்ச.கால் முறியாம போனது நம்ம அதிர்க்ஷ்டம்.எவ்வளவு ரத்தம்,ஆஸ்பித்திரி கட்டுன்னு எல்லாருக்கும் கஸ்டம்.உன் முன்கோவத்த கொறச்சுக்கப்பா “ என்றார்.
சித்தப்பா முறைத்து கொண்டே இருந்தார்.
கார் மெல்ல கிளம்பியது.நான் ஆரோக்கியசாமி வீட்டைப்பார்த்தேன்.
பனை ஒலைக்குடிசையை நோக்கி விந்தி விந்தி நடந்து கொண்டிருந்தவனை தாங்கி பிடித்து கூட்டிப்போனவர் அவன் அம்மா இல்லை. பழைய தாவணியும் பாவாடையும் கட்டிருப்பதால் அது ஆரோக்கியசாமிக்கு ப்ரியமான அவன் அக்காவாகத்தான் இருக்கவேண்டும்.
இனிமேல் டிரான்ஸ்சிஸ்டரை கேட்க ஆரோக்கியசாமி இல்லை.அவன் கால்கட்டோடு வலியோடு குடிசையில் படுத்திருப்பான்.
சூன்யம்யாயிருந்தது.
வெறிக்க ரோட்டைப்பார்த்து கொண்டே இருந்தேன்.சித்தப்பா கொஞ்ச நேரம் பொறுத்து காரை நிறுத்த சொன்னார்.
என்னிடம் குனிந்து “இந்த இடத்துல கரும்புச்சாறு நல்லா இருக்கும் குடிக்கிறியா விஜய் “என்றார்.
பதில் சொல்லாமல் சித்தப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தேன்.