Saturday 2 August 2014

குட்மேனும் கொள்ளைக்காரர்களும்

ஆண்ட்ரு லாங் எழுதிய அல்லது தொகுத்த ஃபேரி புக்கிலிருந்து எடுத்த கதை இது.

கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கிறேன்.ஒரிஜினல் தலைப்பு :கன்னிங் ஷூமேக்கர்.

பொறுமையா படிங்க :)

தழுவி எழுதிய கதையின் தலைப்பு:குட்மேனும் கொள்ளைக்காரர்களும்.

குட்மேன் கடுமையான உழைப்பாளி.நல்லவன்.அவனிருந்த கிராமத்தில் தொழிலில்லாமல் நகரத்துக்கு சென்று உழைத்து பெரும் காசோடு வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

அவனுடன் அவன் வாங்கி வந்திருந்த கழுதையும் வந்து கொண்டிருந்தது.காட்டு வழியில் வந்து கொண்டிருக்கும் போது, தூரத்தில் கொடூரமான கொள்ளைக்கார கூட்டம் வருவதை குட்மேன் பார்த்தான்.சில சில்லறை காசுகளை கழுதை மேல் போர்த்தியிருக்கும் துணியினுள் வைத்து விட்டு, மற்ற பணத்தை தன் தோள்பையில் வைத்து விட்டான்.

கொள்ளையர்கள் மறித்து பணம் கேட்கும் போது, தன்னிடம் இருந்த எல்லா பணத்துக்கும் இந்த கழுதையை வாங்கிவிட்டதாக குட்மேன் சொல்கிறான்.ஏன் என்று கொள்ளையர்கள் கேட்டதற்கு அந்த கழுதை காசு கொட்டும் கழுதை என்று சொல்லி குட்மேன் கழுதை அசைக்க, சில்லறை காசுகள் கொட்டின. கொள்ளைகூட்ட தலைவன் அந்த கழுதையை எடுத்துக் கொண்டான்.

குட்மேன் பாவமாக தலையை கவிழ்த்து நின்றான்.கொள்ளைக் கூட்டத்தலைவன் வந்து “எவ்வளவு காசுக்கு கழுதையை வாங்கினாய்”. என்று கேட்டான்.

”நான் 80 பொற்காசுகள் கொடுத்தேன் எஜமான்” இது குட்மேன்.

“இதோ வேண்டுமானால் 40 பொற்காசுகள் வைத்துக் கொள்” என்று கொடுத்து கழுதையை எடுத்துப் போனான்.

குட்மேன் தன் தந்திரத்தால் 40 பொற்காசுகள் சம்பாதித்து விட்ட மகிழ்ச்சியை மனைவியிடம் பகிர்ந்து கொண்டான்.

மந்திரக் கழுதையை எடுத்துப் போன கொள்ளைக்காரர்கள் தினமும் அவரவர் வீட்டில் கழுதையை வைத்து உலுப்பி பார்த்தார்கள்.கழுதை விட்டை போட்டதே அன்றி காசு போடவில்லை. ஆஹா நம்மை ஏமாற்றினான் இந்த குட்மேன் என்று ஆவேசம் கொண்டனர்.

தூரத்தில் கொள்ளையர்கள் வருவதைக் கண்ட குட்மேன்,தன் மனைவியிடம் போய் அந்த தோல்பையில் ”சிகப்பு சாயம் நிரப்பி உன் கழுத்தில் கட்டிக்கொள்.அப்படியே அந்த கித்தாரையும் எடுத்து வை” என்றான்.

கொள்ளைக்காரர்கள் வந்து குட்மேனை கொத்தாக தூக்கினார்கள்.

“என்னை ஏமாற்றிவிட்டாய் குட்மேன்” கர்ஜித்தான் தலைவன்.

“ஐயா அப்போ நீங்க கொடுத்த பணத்த வாங்கிட்டு போங்க.ஏய் டெய்சி போய் பணம் எடுத்து வா உள்ளறையில் இருந்து”

“இருங்க நான் மீன பொரிச்சிட்டு எடுத்துட்டு வர்றேன்”

உடனே குட்மேன் தாவிச் சென்று மனைவியின் முடியை கொத்தாக பிடித்து கொள்ளையர்கள் முன் இழுத்து வந்தான்.

“அட பெஞ்சாதியே! கணவன் உத்தரவை நிறைவேற்றாமல் இப்படி மீன் பொரிக்கிறேன் என்று சொல்கிறாயே.உன் கழுத்தை ஏன் அறுக்கக் கூடாது” 
கொள்ளைக்காரத் தலைவர் கத்துவார். “நோ குட்மேன் மீன் பொரித்ததுக்கெல்லாம் மனைவி கழுத்தை அறுப்பது கொஞ்சம் ஒவர்”

“நீங்க சும்மா இருங்க தலைவரே. இது எங்க குடும்ப பிரச்சனை” என்று சொல்லி கத்தியை எடுத்து மனைவி கழுத்தில் கிடந்த ரத்தம் கட்டிய தோள்பையை கத்தியால் அறுக்க, கொள்ளையர்கள் முன்னால் குட்மேனின் மனைவி டெய்சி கழுத்தறுப்பட்டு இறந்தவளாய் மூச்சை அடக்கி நடித்தாள். 

“இப்போ என்ன செய்யப் போகிறாய் குட்மேன்” கொள்ளையர்கள் பயத்தில் கத்தினார்கள். அவர்கள் கொள்ளையடிப்பார்களே தவிர இப்படி கழுத்தறுத்த உடலையெல்லாம் பார்த்ததில்லை என்பதை அவர்கள் உடல் நடுக்கத்திலேயே குட்மேனால் யூகிக்க முடிந்தது.

உடனே உள்ளேயிருந்து கிதாரை எடுத்து வந்தான். “டுட்டரிங் டுரிங்... என் செல்லப்போண்ணே கண்ணு, நீ எந்திரிச்சி கொஞ்சம் நில்லு” என்றொரு பாட்டைப் பாட ஆச்சர்யமாக டெய்சி உயிர்பெற்று வந்தாள்.கொள்ளையர்கள் எல்லாம் உற்சாகமடைந்ததனர்.

“குட்மேன் இது என்ன மந்திர கித்தார்”

“ஆம் எஜமான் இதை இசைத்து பாட்டு பாடினால் செத்தவர்கள் உயிர் மீண்டு வருவார்கள்”

“குட்மேன் குட்மேன் நல்ல பிள்ளையல்லவா. இதை எங்களுக்கே கொடுத்து விடு குட்மேன்” கொள்ளைக்காரத் தலைவன் கெஞ்சினான்.

“இல்லை எஜமான்,எனக்கு எப்போதெல்லாம் கோபம் வருமோ அப்போதெல்லாம் இப்படி மனைவியின் கழுத்தை அறுப்பேன்.அதன் பிறகு மந்திர கித்தாரினால் பாடுவேன்.அவள் உயிர்பெறுவாள்.இது இல்லாமல் எப்படி மனைவி கழுத்தை அறுப்பது”

எப்படியோ முட்டாள் கொள்ளைக்காரர்கள் அந்த கித்தாரை 60 பொற்காசுகள் கொடுத்து வாங்கிக் கொண்டுவந்தார்கள்.

மறுநாள் காலை, கொள்ளைக்காரத் தலைவன் தன் மனைவியிடம் கேட்டான்.
“இன்று உணவென்ன செய்தாய்?” 
“பிளம் கேக் செய்தேன்”
“ஏன் கிரீம் கேக் செய்யவில்லை” 
இப்படி ஒரு சண்டையை துவக்கி மனைவியை அடித்தான். பெரிய கத்தியை எடுத்து வந்து மனைவியின் கைகளில் கீறினான்.

மனைவி “யம்மோ” என்றலறினாள். அப்போது கொள்ளைக் கூட்டத்தலைவன் அந்த மந்திரகிதாரை எடுத்து வந்து “ என் செல்லப்பொண்ணே கண்ணு, நீ எந்திரிச்சி கொஞ்சம் நில்லு” என்று கிதாரை இசைத்து பாடினான்.

காயம் ஆறவில்லை.ரத்தம் நிற்கவில்லை. தலைவனின் மனைவி ஆவேசமானாள். தலைவனை துரத்தி துரத்தி அடித்தாள்.மற்ற கொள்ளைர்கள் முதலில் தலைவன் தலைவி ஒடிப்பிடித்து விளையாடுவதாக நினைத்தார்கள்.ஆனால் தலைவன் தலையில் இருக்கும் கரண்டிக் கொத்து கொழுக்கட்டைகளை பார்க்கும் போது அது விளையாட்டு மாதிரி தெரியவில்லை.

உடனே எல்லாக் கொள்ளைக்காரர்களும் ஒவ்வொரு நாள் அந்த கிதாரை எடுத்து போய், தங்கள் மனைவியை கைகளை அறுத்து, பாடி சோதனை செய்தனர்.ஒருவேளை தலைவன் பாடத் தெரியாமல் பாடியிருக்கலாம்.அல்லது இசைக்கத் தெரியாமல் இசைத்திருக்கலாம் என்று அவர்கள் நினைத்தனர். எல்லா மனிதனும் தம்மை உயர்வாக நினைப்பது ஒரு நியதிதானே.

முடிவில் குட்மேன் தங்களை ஏமாற்றி விட்டதை நினைத்து கொள்ளைக்காரர்கள் கொதித்தனர்.இந்த முறை குட்மேனை அழித்து விடுவது என்று முடிவு செய்தனர். தங்கள் சாமிகளை கும்பிட்டு கொள்ளையர்களுக்கு ரத்தத் திலகமிட்டு அனுப்பி வைத்தனர் அவர்கள் மனைவிமார்கள்.

கொள்ளையர்கள் வந்தார்கள்.குட்மேனைப் பார்த்து அவேசம் கொண்டார்கள் .அப்படியே குட்மேனை தூக்கி ஒரு சாக்குபையில் வைத்து குண்டு கட்டாக தூக்கி சென்றனர். ரொம்ப தூரம் தூக்கிச் சென்றதால் களைப்பாக இருக்க,அவனை பாதையில் போட்டுவிட்டு, தூர மரத்தடியில் களைப்பாய் இருந்தனர்.அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவன் ஒருவன், இந்த சாக்குப்பையை அவிழ்த்துப் பார்க்க உள்ளே குட்மேன்.

”நான் போக மாட்டேன்.நான் போக மாட்டேன்” என்று அழுதான்.

ஆடுமேய்ப்பவன் “எங்கே போக மாட்டேன் என்றழுகிறாய்” என்கிறான்.

“என்னை இளவரசியை மணமுடிக்க சொல்கிறார்கள்.அதுதான் முடியாதென்கிறேன்”

“ஒ அப்படியா”

குட்மேன் பேசினான் .” நான் ஒரு யோசனை சொல்கிறேன்.நீ இந்த சாக்குப்பையில் இருக்கிறாயா.உனக்கு இளவரசியை திருமணம் முடித்து வைப்பார்கள்,இளவரசியின் அழகு பற்றி தெரியும்தானே”

ஆசைப்பட்ட ஆடு மேய்ப்பவன் அதற்கு ஒத்துக் கொள்கிறான். போய் அவனே சாக்குப் பையில் போய் முடங்கிக் கொள்கிறான்.குட்மேன் அவனை பையில் வைத்து இறுக்கக் கட்டி வைக்கிறான்.களைப்பு தீர்ந்த கொள்ளையர்கள் சாக்குப்பையை தூக்கி நடந்து ஆற்றில் எறிகிறார்கள்.ஏற்கனவே ஆற்றாங்கரையோரம் நிற்கும் குட்மேனின் மனைவி டெய்சி அந்த ஆடு மேய்பவனை காப்பாற்றுகிறாள்.

“செத்தாண்டா குட்மேன்” என்று துள்ளிப் பாடி கொள்ளையர்கள் வரும் போது, அங்கே குட்மேன் ஆடுகளை மேய்த்துக் கொண்டு கொள்ளையர்களைப் பார்த்து கெக்கே பிக்கே என்று சிரித்து நின்றான்.

கொள்ளையர்கள் பயத்தால் நடுங்கினார்கள்.குட்மேன் பேசினான்.

“கவலைப்படாதீர்கள். நான் ஆவியல்ல மனிதன்தான்.நீங்கள் என்னை கட்டிப் போட்டீர்கள் அல்லவா.அங்கே ஒரு தேவதை என்னை காப்பாற்றி இந்த ஆட்டு மந்தையை எனக்கு பரிசாக கொடுத்தது” என்றான்.

“இவ்வளவு ஆடுகளும் உனக்கா சொந்தம் குட்மேன்”

“ஆம்”

“எங்களுக்கும் ஆடுகள் வேண்டும் குட்மேன்”

“அப்படியானால சாக்குப் பையினுள் போங்கள்”

எல்லோரும் ஒவ்வொரு சாக்குப் பையில் போனார்கள்.குட்மேன்  கட்டி கட்டி தூக்கி ஆற்றில் வீசினார்கள்.

சாக்குப் பையில் கிடந்த கொள்ளைக்காரர்களுக்கு மகிழ்ச்சி.மூச்சு முட்டினாலும் காத்திருந்தார்கள்.
சாக்குப் பையை யாரோ தூக்குவது தெரிந்தது.மகிழ்ச்சி.அவிக்கப்பட்டது முடிச்சி.மகிழ்ச்சியின் உச்சம்.

தேவதை வந்து ஆட்டு மந்தை பரிசளிக்கப் போகும் நேரம் வந்து விட்டதாக சிரித்தார்கள்.ஆனால் அவிழ்த்தது மீனவர்கள்.நீங்கள் ஏன் சாக்குப் பையில் இருந்து ஆற்றுக்குள் கிடக்கிறீர்கள் என்று மீனவத்தலைவன் கேட்க, கொள்ளைக் கூட்டத்தலைவன் நடந்ததை சொன்னான்.

அதைக் கேட்டு மீனவர்கள் எல்லோரும் வாய்விட்டு சிரித்தனர்.இப்படி ஒரு முட்டாள்களை பார்த்ததே கிடையாது என்று சுற்றி நின்று கொள்ளையர்களை கும்மி கொட்டி சிரித்தனர்.
அப்போது ஒரு கொள்ளையன் தன் தலைவனிடம் சொன்னான் “தல குட்மேனை சும்மாவிடக் கூடாது.போய் கேட்போம்” என்கிறான்.

கொள்ளைக் கூட்டத்தலைவன் “போடாங்.. ஒவ்வொரு தடவை குட்மேன் வீட்டுக்கு போகும் போது இழப்பு நம்மளுக்குதான்.அவன் அதிக தந்திரமாய் இருக்கிறான்.இனிமேல் அவன் எதிரே வந்தாலும் நாம் ஒதுங்கிப் போய்விட வேண்டும்.இது என் உத்தரவு” என்று கட்டளையிட்டான்.

குட்மேன் எந்த தொந்தரவும் இல்லாமல் தன் மனைவி டெய்சியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.

No comments:

Post a Comment