Friday, 29 August 2014

புக்கர் பரிசுக்கான போட்டி நாவல்கள்...

2014 ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசு போட்டியில் தேர்வான முதல் கட்ட லிஸ்டை எடுத்து (13 நாவல்கள்) அதன் அடிப்படைக் கதையை பிரவுஸ் செய்து அதை மிகச் சுருக்கமாக எழுதினேன்.

இதில் ரொம்ப ரொம்ப சின்னதா எழுதியிருக்கிறேன் தமிழிலில்.

கதையில் தப்பு இருக்கலாம்.முதலிலேயே சொல்லிவிடுகிறேன்....

1.History of the Rain  எழுதியவர்  Niall Williams ஐரிஷ் எழுத்தாளர்
 
தன் தந்தையைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொள்ளும் ரூத் ஸ்வெயின் என்ற பத்தொன்பது வ்யதுப் பெண், தந்தையின் அந்தரங்க எழுத்துக் குறிப்புகளைப் படிக்கிறாள்.தன் மூதாதயரையைப் பற்றி அவர்கள் வாழ்க்கைமுறை எல்லாம் தெரிந்து கொள்கிறாள். அப்படித் தெரிந்து கொள்ளும் போது அது அவள் வாழ்க்கையைப் போல ஒரு வாழ்க்கையாய் இருக்கிறது.

2.How To Be Both எழுதியவர் Ali Smith ஸ்காட்லாந்து எழுத்தாளர்

1490 யில் வாழும் ஐரோப்பிய மறுமலர்ச்சி கால ஒவியர் பற்றி ஒரு பகுதியும். 1960 ஆம் ஆண்டு தன் அம்மாவை பறிகொடுத்த பெண்ணைப் பற்றி இன்னொரு பகுதியும் நாவலில் தனித்தனியே போகின்றன. குறிப்பிட்ட இடத்தில் இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.

3.J எழுதியவர் Howard Jacobson ஆங்கில எழுத்தாளர்

தங்கள் குடும்பங்களில் பின்புலம் வரலாறு அறியாத ஆணும் பெண்ணும் காதல்கொள்கின்றனர். ஏன் அவர்களிடம் அவ்வரலாறுகள் மறைக்கப்படுகின்றன.அவர்கள் காதலின் தன்மை பற்றி நாவல் அலசுகிறது.

4.Orfeo  எழுதியவர் Richard Powers அமெரிக்க எழுத்தாளர்

எழுபது வயதான ”பீட்டர் எல்ஸ்” தன் நாய் மர்மமான முறையில் இறந்தது பற்றி போலீஸுக்கு சொல்ல, அதை விசாரிக்க வந்த போலீஸ் எல்ஸ் தன் பொழுது போக்கிற்காக வைத்திருக்கும் புதிய விநோதமான சாதனம் மேல் சந்தேகம் கொள்கிறது. இசையையும் டி.என்.ஏ அறிவியலையும் அடிப்படையாக கொண்ட நாவல்.

5.The Blazing World எழுதியவர் Siri Hustvedt அமெரிக்க எழுத்தாளர்

நியூயார்கைச் சேர்ந்த பெண் ஒவியர் தன்னுடைய படைப்புகள் விமர்சகர்கரால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுவதை கண்டு வேதனையடைகிறார்.பிரபலமான மூன்று சம கால ஆண் ஒவியர்கள் பெயரில் தன் ஒவியத்தை முன்நிறுத்துகிறார். அதன் விளைவுகள் பற்றிப் பேசும் நாவல் இது.

 6.The Bone Clocks எழுதியவர்  David Mitchell ஆங்கில எழுத்தாளர்

பதினைந்து வயதில் வீட்டை விட்டு ஒடிப்போகும் ஹோலி என்னும் பெண்ணின் வாழ்க்கையி்ல் நடக்கும் அடுத்த அறுபது வருடங்கள்தான் நாவல்

7.The Narrow Road to the Deep North எழுதியவர்  Richard Flanagan
ஆஸ்திரிலேலிய எழுத்தாளர் ( தாஸ்மானியா)

இரண்டாம் உலகப்போரில் சந்தர்ப்பவசத்தால் ஜப்பானியர்களிடம் கைதியாக மாட்டிக்கொள்ளும் ஆஸ்த்திரேலிய டாக்டர் கதாப்பாத்திரம் பற்றி விவரிக்கும் நாவல்.பலர் உயிரைக் குடித்த பர்மா ரயில் பாதை கட்டுமானப் பணிகள் கொடுமை பற்றிய  விவரிப்புகளும் உண்டு.

8.The Lives of Others எழுதியவர் Neel Mukherjee இந்திய  எழுத்தாளர்

கல்கத்தா மத்திய தர மக்களின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல்.

9.The Dog எழுதியவர் Joseph O'Neill ஐரிஷ் எழுத்தாளர்

தன் காதலியை இழந்த வக்கீல் ஒருவர், தன் நண்பனின் சிபாரிசில் துபாயில் இருக்கும் கோடீஸ்வர குடும்பத்தின் ஆலோசகராக வேலைக்கு செல்கிறார்.
அங்கே அவர் சந்திக்கும் அனுபவங்களை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார் நாவலாசிரியர்.

10.The Wake எழுதியவர் Paul Kingsnorth ஆங்கில எழுத்தாளர்

1066 யில் ஆங்கிலோ சாக்சன்களை வீழ்த்தினர் நார்மண்டிகள். வில்லியம் டியூக் திறமையாக அந்தப் போரை வழிநடத்தினார். அதை ”பேட்டில் ஆஃப் ஹேஸ்ட்டிங்ஸ்” என்பார்கள். அதை பின்புலமாக கொண்ட நாவல்.

11.Us எழுதியவர் David Nicholls ஆங்கில எழுத்தாளர்

தன்னை வேறாக பார்க்கும் மகனிடத்து எப்படி அன்பால் நெருங்குவது தவிக்கும் அப்பாவைப் பற்றியதும், தன் மனைவியிடம் எப்படி இன்னும் அன்பாய் பழகுவது என்று ஆர்வமாகும் கணவனைப் பற்றிய கதையாகும். அன்பு பாசம் என்று விவரிக்கும் நாவல்

12.To Rise Again at a Decent Hour எழுதியவர் Joshua Ferris
அமெரிக்க எழுத்தாளர்

பால் ரூர்கே என்ற கதாப்பாத்திரத்துக்கு இந்த உலகைப் பிடித்திருக்கிறது.ஆனால் அதில் எப்படி வாழ்வது என்று தெரியவில்லை. வாழ்க்கையை எதிர் எதிர் துருவங்களில்  வைத்து விட்டவனாக முரண்பாடாக வாழ்கிறான்.அவனைப் பற்றிய கதை.

13.We Are All Completely Beside Ourselves எழுதியவர் Karen Joy Fowler
அமெரிக்க எழுத்தாளர்

சிறுவயதில் கலகலப்பாக இருக்கும் ரோஸ்மேரி குக் என்ற கதாபாத்திரம் பெரியவளானதும் அதிகமான அமைதியை கொண்டிருக்கிறாள். அவள் ஏன் தன்னை மவுனத்தில் திணித்து வைத்திருக்கிறாள் என்பதை பற்றிய கதை.

செப்டம்பர் 9 ஆம் தேதி இந்த 13 லிஸ்ட் ஆறாகும்.

அக்டோபர் 14 ஆம் தேதி மேன் புக்கர் பரிசுப் பெற்றவரை அறிவிப்பார்கள்.

நாம ஃபாலோ அப் செய்வோமே...


Tuesday, 26 August 2014

குளவியும் நானும்...

என்னைக் கொட்டிய குளவி என்னைப் பார்த்து கொண்டே இருந்தது.அது என்னைக் கொட்டியவுடன், அதை அடித்து விட்டேன்.குளவி தன் உயிரை விடப் போகும் போது பேசியது.

குளவி:நான் உயிரை விடப் போவது துரதிஷ்டமானாதுதான்.எனக்கென்று வாழ்க்கையில் சில எதிர்ப்பார்ப்புகள் இருந்தன.
நான்:நீ என் கழுத்தில் கொட்ட முயற்சி செய்தாய்.அதனால் அனிச்சை செயலாய் உன்னை அடித்தேன்.
குளவி:நான் கொட்ட முயற்சி செய்யவில்லை.நம் இருவரது உடலும் தொட்டுக்கொண்டன.நான் கொட்ட முயற்சி செய்தால் இப்படி வரமாட்டேன்.இதை விட ஆக்கிரோசமாக வருவேன்.
நான்:ம்ம்ம்
குளவி: யோசிக்க யோசிக்க தவறு உன்னுடையது என்றுதான் தோன்றுகிறது.
நான் : எப்படி ?
குளவி: சிறுநீர் கழிக்க நீ இந்த ஆளில்லாத தெருமுனைக்கு வந்தாய்.வந்தவன் தைரியமாக நிமிர்ந்து நின்று கழிக்க வேண்டியதுதானே.நீ குளவிகள் சுற்றும் முற்றும் இருப்பதைப் பார்த்து தலையை குனிந்து உன் உடலை தாழ்த்தி சிறுநீர் கழித்தாய்.அப்போது நடந்தது என்ன ? நீ உன் வெளியை உனக்கான வெளியை, உன் உடல் பருப்பொருள் ஆக்கிரமித்திருக்கும் வெளியை தாழ்வுமனப்பான்மையாலும், பயத்தினாலும் விட்டுக்கொடுக்கிறாய்.
குளவியாகிய நான் பறப்பவன்.எனக்கு ஒரு வெளி அடைக்கப்படாமல் இருந்தால் அது நான் பறக்கும் இடம்தான். நான் அப்பாவியாய் பறந்தேன் உன் தலைக்கு மேல். திடீரென்று நீ உன் தலையை நிமிர்த்தும் போது, என்னுடல் உன் மேல் மோதிற்று.ஏற்கனவே குளவிகள் பற்றிய உன் பய முன்கருத்தினால், உன் உடலை சிலிர்த்தாய்.அதே வேகத்தில் உன் கையில் இருக்கும் நோட்டு புத்தகத்தினால் என்னைத் தாக்கி இதோ தரையில் போட்டிருக்கிறாய். உன்னுடைய தன்னம்பிக்கையின்மை என் உயிருக்கு ஆபத்தாய் போய்விட்டது.
நான்: எனக்கு அழுகை வருகிறது. நான் உன்னை வெறுப்பு குரோதம் எதுவுமில்லாமல் முட்டாள்தனத்தால் கொன்றுவிட்டேன்.இப்போது நான் என்ன செய்ய குளவி.
குளவி:தயவு செய்து நான் இறந்த பிறகு அழுதுவிடாதே.கவிதையாய் எதுவும் எழுதிவிடாதே.கல்வெட்டு, ஒவியம் என்று தீட்டிவிடாதே.பொது இடத்தில் இந்த சம்பவத்தைச் சொல்லி உன் குற்ற உணர்ச்சியை பறைசாற்றி ”உன்னை” ”என்னை” பிரபலப்படுத்தி புனிதப்படுத்திவிடாதே.எனக்கு அதில் விருப்பம் இல்லை.இறப்பு என்பது என் இனத்தில் சாதரண ஒன்று.
நான்: ம்ம்ம்
குளவி: நான் சொல்ல வருவதெல்லாம் மனிதா! உன் வெளியை தைரியமாக அடைத்துக் கொள்.மரியாதை மட்டு மாங்கொட்டை அன்பு பாசம் என்று உன் வெளியை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே.தன்னடக்கம் என்ற பெயரில் உன் வெளியை நீ குறுக்கிக் கொள்ளும் போது, இன்னொருவர் அது பொதுவெளி என்று உலவக்கூடும்.திடீரென்று உன் வெளியை நீ ஆக்கிரமிப்பு செய்யும் போது, இப்போது போல் இருவரும் மோதிக் கொள்ளலாம்.அது இருவருக்கும் எரிச்சலைக் கொடுக்கலாம்.
இப்படி சொல்லி குளவி கண்ணை மூடியது.பெருவிரல் நகத்தால் அதை மண்ணுக்குள் அழுத்தி மூடிவிட்டு நடந்தேன்.

Saturday, 16 August 2014

இயல்பு...

சட்டென்று, 

உன் நெற்றியில் முத்தமிட்டால்

அதை அனுமதித்துவிடு.

ஒரு கால் மழைத்துளி,

ஆயிரம் லட்சம் கால்களாய்,

தரையில் குதிப்பதான இயல்பு அது...

Buffon's needle problem.

இருநூறு ஆண்டுகள் முன்னால், ப்ரெஞ்சு கணித அறிஞர் பஃப்பன் ( Buffon) ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்துக் கொண்டார்.

அதில் சம இடைவெளி விட்டு நீள கோடுகளை வரைந்து கொண்டார்.அதன் மேலே ஊசிகளை ரேண்டம் (Random) ஆக தூவினார்.

பேப்பரில் வரைந்திருக்கும் கோடுகளின் மேல் எத்தனை ஊசிகள் பட்டிருக்கின்றன. படாமல் எத்தனை ஊசிகள் இருக்கின்றன என்று ஆராய்ந்தார்.

அதன் பின்னால் எதாவது அறிவியல் இருக்கிறதா என்று யோசித்தார். அதுதான் புகழ்பெற்ற Buffon's needle problem.

பேப்பரில் வரைந்திருக்கும் நீளமான சம இடைவெளி கோடுகளுக்கிடையே, இருக்கும் இடைவெளியை விட,
ஊசியின் நீளம் பெரிதானால், கிட்டத்தட்ட எல்லா ஊசிகளும் கோடுகளை தொட்டுக் கொண்டுதான் இருக்கும்.

அதனால் Buffon's needle problem த்தின் முக்கிய அம்சமாக நீளக் கோடுகளுக்கிடையே இருக்கும் இடைவெளியை விட, ஊசியின் நீளம் குறைவு என்றே எடுத்துக் கொள்வோம். ( ஒரு Ruled note ல குண்டுப் பின்ன போடுறத நினைச்சிக்கோங்க. குண்டுப்பின்னோட நீளம், ரூல்டு கோடுகளின் இடைவெளியை விட குறைவு சரியா)

அப்படிப் போட்டு ஆராய்ச்சி செய்தா இப்படி ஒரு வாய்ப்பாடு தோராயமா கிடைக்குது.



ஊசி குறுக்கே விழும் நிகழ்வு எண்ணிக்கை P = (2/π)( L / d)

இதுல

L = ஊசியோட நீளம்
d = இரண்டு கோடுகளுக்குள்ள இருக்கிற இடைவெளி

P = ஊசி எத்தனை முறை கோட்டில் விழுந்தது என்பதை, எத்தனை முறை ஊசி போடப்பட்டது என்பதால் வகுத்தால் கிடைப்பது ”P” ஆகும்

இதே வாய்ப்பாட இப்படியும் எழுதலாம்  π= (2 / P)( L / d)

”பை” யோட மதிப்பு நமக்கு தெரியும்தானே 3.14

இப்போ பஃப்பனோட இந்த வாய்பாடு சரியா தப்பா அப்படின்னு லாசாரினி  Lazzarini ங்கிறவரு சோதனை போட்டாரு.

லாசாரினி என்ன செய்தாரு...

5 மில்லி மீட்டர் அளவுள்ள ஊசிய எடுத்துக் கிட்டாரு... அத 6 மில்லி மீட்டர் இடைவெளி உள்ள கோடுகள் கொண்ட பேப்பரில் போட்டுப் பார்த்தாரு.

நல்லா கவனியுங்க...  5 மில்லி மீட்டர் என்பது 6 ஐ விடக் குறைவு. முதல்லே இந்தக் கண்டிசன சொல்லிருக்கிறோம்.

சரி ஊசியப் போட்டாரா... எத்தன வாட்டிப் போட்டாரு.  3408 தடவ போட்டாராம்.

அதுல ஊசி எத்தன தடவ கோட்ட தொட்டுச்சாம்.  1808 தடவ தொட்டிச்சாம்

அப்ப N = 1808/3408 = 0.53 ஆகும்

இப்ப இந்த மதிப்புள்ள வாய்ப்பாட்ல அப்ளை செய்யலாம் (2 / P)( L / d) = (2/0.53)(5/6)= 3.14

இப்படியும் ”பை” யின் மதிப்பை கண்டறியலாம்.

இது ரொம்ப ரொம்ப எளிதான ஆரம்பம்தான். முடிந்தவரை புரியும் படி கூறியிருக்கிறேன்.

Geometric probability என்ற துறையின் அடிப்படை இது என்று நினைக்கிறேன்.

இதை படித்து புரிந்து கொண்ட போது மிகுந்த மனநிறைவை அடைந்தேன்...


Sunday, 10 August 2014

அப்படியானது உலகம்

கலகலப்பான, ”நம்முடைய உணர்வை பிறர் மீது செலுத்தக் கூடாது” என்ற கொள்கையை உடையவர்களை உலகோர் விரும்புவார்கள்.
நம்முடைய உணர்வை பிறர் மீது செலுத்துவது என்றால் என்ன ? வீட்டில் சண்டை நடந்திருக்கும். மொக்கையான மூடில் வீட்டில் இருப்பார். ஆனால் ஆபீஸ் வந்தால் அந்த எரிச்சலை சக ஊழியரிடம் ஏதோ விசயத்தில் சின்ன அளவாக கூட பிரதிபலிக்க மாட்டார்.இப்படி ஒருவர் இருந்தால் அதுதான் “நம்முடைய உணர்வை பிறரிடம் செலுத்தாத” தன்மையாகும். வீட்டில் என்னுடன் சண்டையிட்டது என் மனைவி அல்லது அம்மா. அந்த கோபத்தை யாரோ ஒருவரிடம் எப்படி நான் பிரதிபலிக்க முடியும் என்று இவர்கள் நினைப்பார்கள்.

ஆனால் பெரும்பான்மையான மனிதர்கள் இப்படி நினைப்பதில்லை. யார் மீதோ உள்ள கோபத்தை யாரிடமோ காட்டுவார்கள். அதனால் யார் மீதோ உள்ள கோவத்தை யார் மீதோ காட்டாத பக்குவபட்டவர்களை உலகோர் மிக அதிகமாக நேசிப்பார்கள்.

இப்படி கலகலப்பாக பழகும் மனிதர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது உலகத்தோர் அவனுக்கு “செல்லக்கிறுக்கன்” பட்டத்தை மானசீகமாக வழங்கிவிடுவார்கள்.என்றாவது ஒருநாள் அவனுடைய உணர்வுகள் காயப்பட்டு அதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது அவனுக்கு யாருமே இருக்கமாட்டார்கள்.எல்லோரும் அவனை பக்குவப்பட்டவனாக,கலகலப்பானவாக நினைத்து,” உனக்கா ? மனக்கஷ்டமா? ஒஹ்ஹோ” என்று சிரித்தபடி கடந்துவிடுவார்கள். இது அவனுக்கு கிடைக்கும் முதல் அடி.

இரண்டாவது அடிதான் கொடுமையானது. அவன் எப்போதும் சிரிப்பவனில்லையா? எப்போதும் பக்குவப்பட்டவனில்லையா? அதனால் அவன் எப்போதாவது கோபப்பட்டாலோ அல்லது கவலையோடு இருந்தாலோ அதையும் உலகம் வெறுக்கும். “இவன் என்ன கலகலப்பாக ஜாலியாவே இருக்க மாட்டேன் என்கிறான்.இவன் அப்படி இருந்தால்தானே நமக்கெல்லாம் மகிழ்ச்சி.இவன் ஏன் நல்லா போயிட்டிருக்கிற சிஸ்டத்த சிதைக்கிறான்” இதுமாதிரியான அடிதான் அவனுக்கு கிடைக்கும் இரண்டாவது அடி.

கோமாளியின் சிரிப்பைத் தவிர வேறு சாய்ஸ் இல்லைதானே.

ஆஸ்கார் வைல்ட் எழுதிய “இன்ஃபாண்டாவின் பிறந்தநாள்” என்ற கதை கிட்டத்தட்ட இது மாதிரி வரும்.

12 வயதான ”இளவரசி இன்ஃபாண்டாவின்”, பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடுவார்கள்.இளவரசியும் ஆங்காங்கே விளையாடிக்கொண்டும், நடனமாடிக்கொண்டும் இருப்பாள்.அங்கே இளவரசியை ஈர்ப்பது ஒரு குள்ளனின் நடனம். அந்தக் குள்ளனை பார்கக் அசிங்கமாக இருப்பான். அவனைச்சுற்றி கூட்டம் கூடியிருக்கும். அவன் உயரமின்மைக்கும் அசிங்கத்துக்கும் அவன் ஆடும் நடனம் சிரிப்பாக இருக்கும்.அவன் காட்டில் அலைந்து திரிந்த போது, அவனைப் பார்க்க விநோதமாய் இருக்க அந்நாட்டின் தளபதி, குள்ளனை அவன் தந்தையிடம் விலைக்கு கேட்க, இத்தனை நாளும் ஒன்றுக்கும் உதவாத குள்ளப்பிள்ளையை சந்தோஷமாக விற்கிறான் அவன் தந்தை.

குள்ளன் இங்கே இளவரசியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒரு ”எண்டர்டெயின்மெண்ட் எலியாக” ஆடிக்கொண்டிருக்கிறான். பார்ட்டி முடியும் போது குட்டி இளவரசி இன்ஃபாண்டா சொல்கிறாள் ”நீ நன்றாக ஆடுகிறாய். உன்னுடன் இன்னொருநாள் நான் விளையாட நடனமாட விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போகிறாள். குள்ளன் துள்ளுகிறான். துடிக்கிறான். இளவரசியே ஆட விரும்புகிறாள் என்று சொல்லி, அரண்மனைக்குள் போகிறான். அங்கே இளவரசியின் அறை இருக்கிறது. அதுனுள்ளே போகிறான். அறையுனுள்ளே அவனுடைய உருவத்தைப் பார்க்கிறான்.

இதுவரை குள்ளன் நிலைகண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தே இல்லையாதலால் அதிர்ச்சியடைகிறான்.அவனுடைய அசிங்கமான உருவம் அவனுக்கு அப்போதுதான் புரிகிறது. உள்ளத்தில் உறைகிறது. அவமானப்படுகிறான். கதறுகிறான். அவனுக்கு புரிகிறது ஏன் பார்ட்டியில் அவனைப்பார்த்து அனைவரும் சிரித்தார்கள் என்று . ஏன் அவன் அப்பா அவனை விற்றார் என்று புரிகிறது. இளவரசியின் அன்பு என்று நினைத்திருந்தது உண்மையில் அன்பில்லை அது ஒரு வேடிக்கை பார்க்கும் மனப்பான்மைதான் என்று தெரிந்த போது அவன் துக்கம் உச்சமாகியிருந்தது.

அப்படியே அழுகிறான்.சத்தமாக அழுகிறான்.தரையில் விழுகிறான். தரையை தன் கையால் அடித்து அடித்து அழுகிறான். குள்ளன் உணர்வுப்பூர்வமாக தரையை அடித்து அடித்து அழுதுகொண்டிருக்கும் போது இளவரசி வருகிறாள். அவளுக்கு அவன் அப்படி அழுவதும் ஒரு விளையாட்டாக நடனமாகத் தெரிகிறது. இளவரசி சிரிக்கிறாள். ரசிக்கிறாள்.

பின் குள்ளனை எழுந்து அவளுடன் விளையாடக் கூப்பிடுகிறாள். குள்ளன் எழுந்திருக்கவில்லை. அப்போது இளவரசியின் மாமா ஒரு பிரபு வருகிறார்.அவரிடம் இளவரசி குள்ளனை எழுப்பச் சொல்கிறாள். அவர் எழுப்ப எழுப்ப எழும்பாமல் இருக்கிறன் குள்ளன்.

அவர் குள்ளன் நெஞ்சில் கைவைத்துப் பார்க்கிறாள். குள்ளனின் இதயம் சோகத்தால் நின்று விட்டிருக்கிறது.

இளவரசி மாமாவிடம் கேட்கிறாள் “ ஏன் மாமா இவன் எழுந்திருக்க மாட்டான்” 

“அது இவன் இனிமே எழுந்திருக்க மாட்டான்மா... அவனோட குட்டி இதயம் உடைஞ்சு போச்சு” என்று சொல்வார்.

“இனிமே என்கூட யாராவது விளையாட வர்றாங்கன்னா அவங்களுக்கு இதயமே இருக்ககூடாது ஆமா” என்று சலித்தபடியே செல்கிறாள் குட்டி இளவரசி இன்ஃபாண்டா.

குள்ளனின் சேட்டைகளை கோமாளித்தனத்தை ரசித்த உலகத்துக்கு அவனுடைய உணர்வுகள் கடைசிவரை புரியவில்லை.

அப்படியானது  உலகம். .

Sunday, 3 August 2014

இச்சையும் காதலும் துரோகமும் - சலோமி...

ஆஸ்கர் வைல்டு எழுதிய “சலோமி” என்ற சர்ச்சைக்குரிய குட்டி நாடகத்தை அகிலன் “தாகம்” என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

படிக்க நல்ல அனுபவமாக இருந்தது.அதன் கதைச் சுருக்கத்தை சொல்ல விரும்புகிறேன். வைல்டு இதை கற்பனைக் கதையாகவே எழுதியுள்ளார்.

ஹெராட் மன்னன்,ஆளும் நாட்டின் பேரழகியாக இருக்கிறார்  இளம்பெண் சலோமி.

ஹெராட் சலோமியின் அப்பாவான, தன்” சொந்த அண்ணனை” சிறைக்கு அனுப்பிவிடுகிறான். அண்ணன் மனைவியான ஹெரோதியஸை திருமணம் செய்து கொள்கிறான்.

ஹெரோதியஸும்  ஹெராட் மன்னனை காதலிக்கவே செய்கிறாள். ஹெரோதியஸின் ஒரே கவலை தன்னுடைய பேரழகு மகள் சலோமி மேல்தான்.

சலோமியின் அழகைப்பற்றி தேசமே பேசுகிறது. ஹெராட் சலோமியின் சிற்றப்பன் ஆனாலும் சலோமியின் அழகு அவனை ஈர்க்கிறது.

சலோமி மேல் காதல் கொள்கிறான்.ஆனால் ஹெரோதியஸுக்காக அதை வெளிப்படுத்தாமல் எரிச்சலுடன் இருக்கிறான்.

ஹெராட் கொடுக்கோல் ஆட்சி செய்கிறான்.மக்களின் உணர்வுகளை மதிப்பதே இல்லை. தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் கொன்று விடுகிறான்.

அப்படி அவனை கடுமையாக எதிர்த்து, கொல்லப்படாமல் இருக்கும் ஒரே மனிதர் ஞானி மற்றும் தீர்க்கதரிசி ஜோகனான். ஜோகனானுக்கு ஹெராட்டைப் பற்றிய எல்லா ரகசியங்களும் தெரியும்.

ஹெராட் தன் அண்ணனை சதி செய்து அண்ணியை திருமணம் செய்து கொண்டது பற்றி ஜோகனான் கோபமாக எதிர்ப்பை தெரிவித்து சிறையில் இருக்கிறார். ஹெராட் அவரைக் கொல்ல பயப்படுகிறான்.

அவரிடம் இருக்கும் ஞானத்தன்மை பற்றிய பயமோ மரியாதையோ அவனை கொல்லவிடாமல் செய்கிறது. ஆனால் ஜோகனான் சிறையில் இருந்து விடாமல் ஹெரோதியஸை சாடுகிறார் ஜோகனான். யூதர்கள் அவரை தங்கள் ஆசானாக பார்க்கிறார்கள்.

ஜோகனான் விடாமல் சொல்கிறார் “என்னைவிட அறிவிலும் தீர்க்கதரிசனத்திலும் சத்தியத்திலும் சிறந்தவன் வரவிருக்கிறான். அப்போது என்ன செய்வீர்கள் பதர்களே “ என்று.

ஹெரோதியஸுக்கு இது பிடிக்கவே இல்லை. எப்படியாவது ஜோகனானை கொல்ல வேண்டும் என்று நினைக்கிறாள்.ஆனால் அவளால் அது முடியவில்லை.

சலோமிக்கு ஞானி ஜோகனானைப் பார்க்க ஆசை.ஆனால் ஹெராட்டின் கண்காணிப்பில் அது முடியவில்லை. தன்னை காதலிக்கும் “நாராபாத்” என்ற சிரிய நாட்டு இளைஞனிடம் காதல் வசனம் பேசி அவனை தூண்டி, ஜோகனானைப் பார்க்கும் தன் ஆசையைச் சொல்கிறாள். நாராபாத்தினால் சலோமியின் ஆசையைத் தட்ட முடியவில்லை. மிகுந்த பிரயத்தனப்பட்டு சலோமியை பாதாளச் சிறைக்கு கூட்டிச் செல்கிறாள்.சலோமி ஜோகனானைப் பார்க்கிறாள்.

ஜோகனானின் அழுக்கும் ஞானமும் அவளை ஈர்க்கின்றன. ஜோகனான் மேல் மிக மிஞ்சி வெறுப்பும், மிக மிஞ்சிய காமமும் காதலும் விநாடிக்கு விநாடிக்கு மாறி மாறி  வருவதை உணர்கிறாள் சலோமி. சலோமியால் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தன் காதலை ஜோகனானிடம் சொல்கிறாள்.

ஜோகனான் நிராகரித்து ”தூய்மையற்றவளே “ என்று திட்டுகிறார்.சலோமி ஜோகனின் உதட்டில் ஒரே ஒரு முத்தம் கொடுக்க ஆசை கொண்டு கேட்கிறாள். ஜோகனான் சலோமியின் காதலைப் புரிந்து கொள்ளாமல் விரட்டியடிக்கிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த சிரிய நாட்டு இளைஞன் நாராபாத் மனம் வேதனையுற்று தற்கொலை செய்து கொள்கிறான்.

சலோமியால் ஜோகனான் மேலிருக்கும் காதலை தட்டிவிட முடியவில்லை. தொடர்ந்து அது பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறாள்.

நல்ல நிலவின் குளிர்ச்சியில் ஒரு விருந்து நடக்கிறது. ஹெராட் மன்னன் சலோமியையே பார்த்துக் கொண்டிருக்கிறான். ஹெரோதியஸ் தன் மகளையும் கணவனையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறாள்.

ஹெராட் சலோமியிடம் நடனம் ஆடுமாறு கெஞ்சுகிறான்.

சலோமி மறுக்கிறாள்.

ஆனால் ஹெராட்டினால் தாங்க முடியவில்லை “தயவு செய்து ஆடு சலோமி” என்று கெஞ்சுகிறான். சலோமி தான் ஆடினால் தனக்கொரு வரம் தரவேண்டுமென்று கேட்கிறாள். ஹெராட் சம்மதிக்க சலோமி தன் பேரழகு பரிமளிக்க நடனமாடுகிறாள்.

அம்மா ஹெரோதியஸ் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

நடனம் முடிந்தது ஹெராட் சலோமியின் அழகால் ஈர்க்கப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு ”உனக்கு என்ன வேண்டும் கேள்” என்கிறான்.

சலோமி ”எனக்கு ஞானி ஜோகனானின் தலை வேண்டும்” என்று கேட்கிறாள். இதைக்கேட்டதும் ஹெராட் நடுங்குகிறான். ஆனால் அம்மா ஹெராதியஸ் மகிழ்கிறாள்.

ஹெராட் ,சலோமியிடம் கெஞ்சுகிறான்.தன் நாட்டில் பாதி கூட கொடுத்து விடுவதாக சொல்கிறான்.ஆனால் சலோமி பிடிவாதத்தை விடுவதாயில்லை. பிடிவாதமாயிருக்கிறாள். முடிவில் ஹெராட் ஜோகனான் தலையை வெட்டிக் கொண்டு வரச் சொல்கிறான்.

ஜோகானானின் துண்டித்த தலையை தட்டில் வைத்து சலோமிக்கு கொடுத்து விடுகிறார்கள்.

சலோமி அந்தத் தலையின் உதடுகளையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். ”இதோ என்னுடைய காதலன். எதிர்ப்பு தெரிவிக்காத அழகன். என்ன அழகான உதடு” என்று உலகின் அத்தனை காதல் உணர்வையும் திரட்டி ஜோகானானின் வெட்டப்பட்ட தலையின் உதடுகளை சுவைக்கிறாள்.

ஹெராட்டினால் அந்தக் காட்சியை பார்க்க முடியவில்லை.

சலோமியின் தலையையும் வெட்டச் சொல்கிறான். சலோமியின் துண்டிக்கப்பட்ட தலை ஜோகானானின் தலைப் பக்கம் திரும்பி விழுகிறது.

இந்தக் நாடகத்தில் துரோகமும் காதலும் பின்னிப்பிணைந்திருப்பதைப் பார்க்கலாம்.

- ஹெரோதியஸ் தன் கணவனை சதி செய்து சிறைக்கு அனுப்பிவிட்டு கணவனின் தம்பியை திருமணம் செய்துக் கொள்கிறாள். (காதல், துரோகம்)

-சலோமி தன் சித்தப்பாவின் காதலை புறம் தள்ளவில்லை .அதை உபயோகித்து கொள்கிறாள். (காதல் துரோகம்)

-சலோமி தன்னைக் காதலிக்கு சிரிய இளவரசனை ஜோகனானைப் பார்க்க உபயோகித்துக் கொள்ளுதல் (காதல் துரோகம்)

-இப்படியாக போகும் தன்மைகளில் தன் மன்னனை விட, ஞானத்தை உடைய ஜோகனான் மீது வரும் சலோமிக்கு வரும் காதல் (காதல்)

-காதலிப்பவன் கிடைக்காவிட்டால் வரும் வெறி. அவனை கொன்றாவது அதை அடைய நினைக்கும் வெறி (காதல்,இச்சை)

இப்படி இந்த நாடகத்தைப் பற்றி யோசிக்க நிறைய இருக்கிறது.

மனித உணர்வுகளின் நிச்சயமற்ற தன்மையை, சுயநலத்தை, ஆழமன இயக்காங்களை ஆஸ்கர் வைல்டு கொடுத்திருக்கிறார் என்று புரிந்து கொண்டேன்.


Saturday, 2 August 2014

பஸ் ஸ்டாப் காட்சிகள்...

நேற்று பஸ்ஸ்டாப்பில் முக்கால் மணி நேரம் நிற்க வேண்டியதாய்ப் போயிற்று.கையில் புத்தகமுல் இல்லை.

அதனால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் கண்ட காட்சிகளில் சில...

1.-பஸ் ஸ்டாப் ஸ்டீல் பெஞ்சில் இடம் காலியாகிறது ஒரு யுவதியும் ,இளைஞனும் அந்த இடத்தில் அமர வேகமாய் வருகிறார்கள்.பையன் உட்கார்ந்து விட்டான்.யுவதி ஒரு விநாடி உட்காரலாமா வேண்டாமா என்று யோசிக்கிறார்.பின் அமர்கிறார்.இருவரும் அருகருகே இருந்தாலும், நாங்கள் வேறு. எங்களுக்குள் எந்த தொடர்புமில்லை என்ற செய்தியை தங்கள் உடல்மொழியின் மூலமாக சமூகத்திற்கு சொல்கிறார்கள்.

2.-மூன்று போலீஸ்காரர்கள் ரோட்டை கடக்கிறார்கள்.ஒருவர் கையில் துப்பாக்கி. இன்னொருவர் மாற்றுத் திறனாளி ஒருவரை கூட்டி வருகிறார்.போலீஸ் கைகாட்டியதும் சீறிவரும் வாகனங்கள் பம்மி நிற்கின்றன. ரோட்டை கடந்து முடிந்த அடுத்த விநாடி போலீஸ்காரர் அந்த மாற்றுதிறனாளியின் கைகளை உதறி வேகமாக தன் நண்பர்களோடு சென்று விடுகிறார்.அந்தக் காட்சியைப் பார்க்க வித்தியாசமானதாக இருந்தது.கொஞ்ச நேரம் கழித்து யோசித்தால் யார் முதலில் கையை உதறியது என்ற குழப்பம். போலீஸா ? அல்லது மாற்றுத் திறனாளியா? ஒருவேளை மாற்றுத்திறனாளியாய் இருக்க்குமோ? அது பற்றி யோசிக்க வேண்டும் போல இருந்தது.

3.-வெளிச்சமில்லாத ஒரு பக்க பஸ்ஸடாப் ஸ்டீல் பெஞ்சில் கொஞ்சம் வயதானவர் ஒருவர் நன்றாக குடித்து விட்டு மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

4.-கொஞ்சம் தள்ளி ஒரு கார் நின்றது.அதிலிருந்து ஒரு பெண்ணும் ஆணும் இறங்கினார்கள்.பையனும் அழகு தேஜஸ்.அந்தப் பெண்ணும் அழகு தேஜஸ்.அந்தப் பெண்ணின் கைகளை பிடிக்கிறான்.அவள சிரித்தபடியே நாசூக்காக எடுத்து விடுகிறார்.பின் பெண் பஸ்ஸ்டாப்பை நோக்கி வருகிறார்.பையன் பஸ் ஏற்றி விடுவதற்காக பின்னால் வருவதை அந்தப் பெண் தடுக்கிறார்.பஸ் வர பெண் பஸ்ஸைப் பிடித்து ஏறிப் போகிறார்.பையன் காரிலிருந்து அதைப் பார்த்த பிறகு காரை இயக்குகிறார்.ஒருவேளை பெண் லோயர் மிடில் கிளாஸாக இருந்து , பையன் ரொம்ப பணக்காரனாக இருந்தால், திருமணத்துக்கு பின் அந்தப் பெண் தாழ்வுமனப்பான்மையால் வாடக்கூடும் என்பது மாதிரியான சிந்தனைகள் வந்தது.

5.-மொபைல் பேசிய படி ஒரு காலேஜ் மாணவன் பைக்கை வேகமாக ஒட்டிச் சென்றார்.பஸ்ஸ்டாப்பில் நிற்கும் பஸ்ஸின் மீது கிட்டத்தட்ட மோதுவது மாதிரி உரசிச் சென்றார்.கல்லூரி மாணவர்கள் எல்லோரையும் கல்லூரி நிர்வாகங்கள் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை ஜி.ஹெச் கூட்டிச் செல்ல வேண்டும்.அங்கு வரும் விபத்து கேஸ்களை பார்க்கச் செய்ய வேண்டும்.இப்படியாக எனக்கு தோன்றியது.

6.-ட்ரை சைக்கிளில் ஒருவர் சென்றார்.ட்ரை சைக்கிளைப் பார்த்ததும் ஹெச்.கோரி எழுதிய சிறுகதை ஒன்று நினைவுக்கு வந்தது. பிரபல கிளப்பில் ட்ரை சைக்கிள் பெற வந்த மாற்றுத்திறனாளியை விருந்துக்கு கூப்பிடுவார் ஒருவர்.ஆனால் பணக்கார கிளப் மெம்பர்களுக்கு மட்டும்தான் அந்த விருந்து. பரிசுப் பெற்றவர்களுக்கு இல்லை என்ற விவாதம் நடக்கும். விவாதம் முடித்து கிழே வந்து பார்த்தால் அவர்கள் பரிசாக கொடுத்த ட்ரை சைக்கிள் அதே இடத்தில் நிற்கும்.

7.-ஒரு பெண் நைட்டி அணிந்து நின்று கொண்டிருந்தார்.மேடான வயிறு அவர் கர்ப்பத்தை சுட்டிற்று.பதட்டத்தோடு நின்று கொண்டிருந்தார்.ஒரு பஸ் வந்தது. பஸ்ஸில் இருந்து வயதான பெண் ஒருவர் கட்டை பையோடு இறங்கினார். இறங்கியதும் நைட்டிப் பெண் வேகமாக அந்த வயதானப் பெண்ணை நோக்கிப் போனார்.பின் இருவரும் பின்னால் நிற்கும் இன்னொரு பஸ்ஸை வேகமாக வழிமறித்து ஏறுகின்றனர்.பரபரப்பு.

8.-பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு ஒரு நாற்பது பிளஸ் குடும்பத்தலைவர், காலையில் மனைவி கொடுத்து விட்ட சுண்டலில் இருக்கும் சுண்டலை குட்டி டப்பர் வேர் டப்பாவிலிருந்து தட்டி தட்டி எடுத்து பொறுமையாக தின்று கொண்டிருந்தார்.

இப்படி எங்கேப் பார்த்தாலும் மக்கள் மக்கள் மக்கள். 

ஒவ்வொரு காரியங்களை செய்தபடி. மக்கள் மக்கள் மக்கள்.

மீனவர் வலையை விட்டிருப்பாரா ?

ஹொக்கனேக்கலில் இருந்து வரும் நீர்,மேட்டூர் அணையில் தேக்கி வைக்கபடுகிறது.அணைக்கு முன்னால் இரு கரையிலும் இருக்கும் கிராமங்களில் ஒன்றுதான் நண்பர் ஆனைகவுண்டனின் கிராமம்.

கிட்டத்தட்ட 150 குடும்பங்கள் அங்கே இருக்கின்றன.எல்லா குடும்பத்தினரும் மீன்பிடித் தொழிலையே நம்பியிருக்கிறார்கள்.

அணையில்,ஆற்றில் மீன் பிடித்து சம்பாதித்து பிழைக்கிறார்கள். அரசாங்கம் வருடா வருடம் குறிப்பிட்ட அளவு பணத்தை வாங்கிக்கொண்டு, மீன் பிடிக்க அனுமதி கொடுக்கிறது.

அதற்கான லைசென்ஸை வைத்துக் கொண்டுதான் மீன் பிடிக்க வேண்டும்.சிலேபி,சுறா,கட்லா,வாளை,ரோகு,அரஞ்சான்,கெழுத்தி,கல்பாஸ் போன்ற மீன்களை பிடிக்கிறார்கள்.மீன் பிடிப்பதை பரிசலில் போய்தான் செய்கிறார்கள்.

நீண்ட வலையை மாலை நான்கு மணிக்கு வீசினால் அதிகாலை நான்கு மணிக்கு பிரிப்பார்கள்.வலையெல்லாம் செங்குத்தாக நீரைக் கிழித்து மீனை எதிர்நோக்கி காத்திருக்கும்.காலையில் மீனை வலைலிருந்து பிரித்து விற்பார்கள்.

சராசரியாக ஐந்து கிலோ மீன் மட்டுமே கிடைக்கும்.சில நாட்களில் ஒரு கிலோ மீன் மட்டும்தான் கிடைக்கும்.சந்தையில் கமிசன் வியாபாரிகள் ஒரு கிலோ மீன் இருபது ரூபாய்க்கு எடுப்பார்கள்.

ஐந்து கிலோ விற்றால்  பரிசல் போடுபவருக்கு என்ன கிடைக்கும்? நூறு மட்டுமே ரூபாய் கிடைக்கும்.அந்த நூறு ரூபாயை வைத்து எப்படி குடும்பம் நடத்துவார்கள்.

ரேசன் அரிசி இருப்பதால் அரிசிக்கு பிரச்சனையில்லை.கிராமத்தில் அவரவர்க்கு குடியிருக்கு சின்ன வீடுண்டு.நூறு ரூபாயை வைத்து சமாளிப்பார்கள்.பரிசல் முன்னாடி போல மரத்திலானது அல்ல.

இப்போது ஃபைபர் பரிசல் வந்து விட்டன.ஐந்தடி விட்டமுள்ள பரிசல் ஒன்பதாயிரம் ரூபாய்.அந்த பத்தாயிரம் ரூபாயை கடன் கொடுப்பது கமிசன் வியாபாரிகள்.அப்படி கொடுத்தால் வட்டிக்கு மீனை எடுத்துக் கொள்வது எளிது என்பதால் ஆர்வமாக அப்படியான கடனை ஒரு “டேம் மீனவருக்கு” கொடுக்கிறார்கள்.

இப்படியாக ஒரு மீனவரின் வாழ்க்கை நூறு ரூபாய்தாளாகவே ஆகிவிட்ட சூழ்நிலையில்,அவர்களுக்கு சம்பாதிக்க ஒரு வழி வருகிறது.

பெரிய வழியில்லை என்றாலும், அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு முக்கியமான வழி.

ஏப்ரல் மே மாதங்களில் நிறைய குஞ்சு மீன்கள் உலவும் .மேலும் டேமில் அரசாங்கம் வேறு நிறைய புதிய குஞ்சு மீன்களை விடும்.

சென்னாங்கவுணி என்னும் மிகச்சிறிய மீன் நிறைய படும்.நிறைய என்றால் நிறைய.ஐந்து நிமிடம் அதற்கென்றிருக்கும் பிரத்யோக வலையைப் போட்டால், வலை நிறைந்து விடும்.

ஒரு வலையில் கிட்டத்தட்ட இருபதிலிருந்து முப்பது கிலோ தேறும்.வலையை போட்டவுடன் வேக வேகமாக இழுக்க வேண்டும்.

ஏனென்றால் அடுத்த மீனவர் அவர் பங்கிற்கு நிற்பார்.சீக்கிரம் மீன் பிடித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட வேண்டும்.ஒருநாளைக்கு ஐந்து கிலோ எங்கே? முப்பது கிலோ எங்கே?

நிறைய வருமானம் வரும் இந்த சென்னாங்கவுனி மீன் பிடியால்.

சில சமயம் அரசு போட்கள் ரோந்து வரும்.யாராவது குஞ்சு மீன்களை பிடிக்கிறார்களா? என்று கண்கானிக்க. அப்போது பரிசல்காரர்கள் வேக வேகமாக தங்கள் பரிசல்களை ஒட்டி மறைவான இடங்களுக்கு சென்று விடுவார்கள்.வேறு வழியில்லை.பிரச்சனையை சந்தித்துதான் ஆகவேண்டும்.

வருடம் முழுவதும் நூறு ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்ற கணக்கிருக்கிறதா என்ன? கிடைக்கும் ஒரே வாய்ப்பு இந்த சென்னாங்கவுனி மீன்பிடிதான்.அதையும் விட முடியாதல்லவா? முடிந்த மட்டும் கஸ்டப்பட்டு பிடிக்கிறார்கள்.

நிறைய சம்பாதிக்க வேண்டிய, பண நெருக்கடியில் உள்ள மீனவர் ஒருவர் அன்று நிறைய சென்னாங்கவுனி மீன் பிடித்து விட வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தாராம்.

காலையில் ஒருதடவை பிடித்து விட்டு, மற்ற மீனவர்களிடம் அவர் பணக்கஸ்டத்தை சொல்லி அனுதாபம் தேடி, இரண்டாவது ஒருமுறையும் வலையை வீசியிருக்கிறார்.

வீசும் போது தீராமல் ஆண்டவனிடம் பிரார்த்திருக்கிறார்.அவருக்கு எதாவது செலவிருக்கலாம்.அது முக்கியமான தவிர்க்க முடியாத செலவாயிருக்கலாம்.அதனால் வீரியமாய் உருக்கமாய் பிரார்த்தனை செய்திருக்கிறார்.

பத்து நிமிடத்தில் வலையை இழுத்துப் பார்த்தால்.நிறைய மீன்களை உணர முடிந்திருக்கிறது.நல்ல மீன் பாடு.மகிழ்ச்சியில் கூவியபடி வலையை இழுத்திருக்கிறார்.இழுக்க முடியவில்லை.மீண்டும் தம் கட்டி இழுத்திருக்கிறார்.முடியவில்லை.

ரொம்ப நேரம் தன் சக்தியெல்லாம் கூட்டி மீனை இழுக்கவும், அவருக்கு நெஞ்சு வலி வந்தது.அதையும் பொருட்படுத்தாமல் இழுக்க, நெஞ்சு வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து,பரிசலில் விழுந்து சுருண்டு துடித்து இறந்திருக்கிறார்.

நண்பர் ஆனைகவுண்டன் இந்த விசயத்தை சொல்லும் போது எனக்கு ஒன்றும் ஒடவில்லை.

இவர்களும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்.இவர்களும் தமிழர்கள்தான்.இது மாதிரி யோசித்துக் கொண்டிருந்தேன்.

இறந்த மீனவர் தன் கையிலுள்ள வலையை விட்டிருப்பாரா? அல்லது பற்றியே இறந்திருப்பாரா என்ற சந்தேகமும் வந்ததெனக்கு.

ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு ”பழக்கவழக்கம்”

ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு ”பழக்கவழக்கங்கள்” இருக்கும்.

இந்த பழக்கவழக்கத்தின் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை புரிந்து கொள்ளுதல் அவசியமானது.(தெரிந்து கொள்ளுதல்தான் ஆதரிப்பது அல்ல) அது பற்றிய ஒரு அறிவு நம் எல்லோருக்கும் இருக்குமானால் நம்மிடம் உள்ள அடிப்படைவாத எண்ணங்கள் குறையும்.

கர்நாடாகாவில் ’அம்பிகா’ மற்றும் ’ஹரிகந்திரா’ ஜாதியை சேர்ந்தவர்கள் மீன்பிடித்தொழிலையே தங்கள் தொழிலாக கொண்டிருக்கிறார்கள்.ஒருவர் வீட்டுபக்கத்தில் இன்னொருவராக வசித்து அன்னியோன்யம் பாராட்டுகின்றனர்.

அன்பாக பழகுகின்றனர்.திடீரென்று ஒருவரை ஒருவர் பார்த்தால் யார் அம்பிகா மீனவர்கள்,யார் ஹரிகந்திரா மீனவர்கள் என்று கண்டுபிடிக்கமுடியாது.

அப்படியானால் எது அவர்களை வேறு படுத்துகிறது.”பழக்கவழக்கம்” தான். 

மீனவர்களின் முக்கிய பழக்கம் எது? மீன்பிடிக்க வலைவீசுதல்.

அம்பிகா ஜாதியினர் வலையை தலைக்கு மேலே வீசி மீன்பிடிக்கின்றனர்.ஆனால் “ஹரிகந்திரா” மீனவர்கள் வலையை வயிற்றுக்கு கீழே வீசி மீன் பிடிக்கின்றனர்.

தப்பி தவறி கூட இதை மாற்றி செய்வதில்லை.விளையாட்டுக்கு கூட மாற்றி முயற்சி செய்வதில்லை.

இது பற்றி மானுடவியலாளர் “டெபர் டெப்” செய்யும் ஆராய்ச்சியின் முடிவாக, “இனங்கள் புறவயமாக சேர்ந்திருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும்,சமூக ரீதியாக ஒன்று கலக்காமல் இருக்க இந்த பழக்கவழக்கங்கள் உதவி செய்கின்றன.” என்கிறார்.

வேறுபாட்டை காட்டும் பழக்கவழக்கங்கள் எப்போது ஜாதி உணர்வை மங்காமல் இருக்கச் செய்கின்றன.வலையை வீசும் பழக்கத்தில் தங்கள் ஜாதி உணர்வை ரசிக்கிறார்கள்.

டெபர் டெப் இன்னொன்றும் செய்கிறார்.மீன்பிடி பழக்கமே இல்லாத மாணவர் குழுவை ஒவ்வொரு ஜாதினரிடமும் வலைவீச பழக சொல்கிறார்.

மாணவர்கள் இரண்டு பழக்கங்களையும் ஆராய்ந்து தலைக்கு மேல் வலைவீசும் முறைக்கு (அம்பிகா ஜாதியினர்) பழக்கம் அதிகம் உழைப்பை கோருகிறதென்றும்,இடுப்பளவுக்கு வலைவீசும் ஹரிகந்திரா ஜாதினரின் பழக்கவழக்கத்தை விட நான்கு மடங்கு அதிக உழைப்பை கோருகிறது என்றும் கண்டுபிடிக்கின்றனர்.

சரி.ஏன் அம்பிகா ஜாதினர் இவ்வளவு கஸ்டப்பட்டு உழைப்பை வீண்செய்ய வேண்டும்.அவர்கள் ஏன் ஹரிந்திரா ஜாதினரின் முறையை பின்பற்றவில்லை. காரணம் இனப்பற்று.

தன் இனத்தை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்ற ஈடுபாடு.பழமையான இனமாக அம்பிகா விளங்குவதாலும்,”நீரின் குழந்தைகள்” என்ற பட்டத்தை உடைய இனமக்கள் என்பதால் ஏற்பட்ட,தனித்தன்மையை காப்பாற்றும் ஆழ்மன ஆசையே இப்படியான கடின பழக்கத்தை வீம்புக்கு பின்பற்ற செய்கின்றன.என்று நினைக்கிறார்  டெபர் டெப்.

வரலாற்று ரீதியாக அம்பிகா முதலில் வருகிறார்கள்,அடுத்து ஹரிகந்திரா வருகிறார்கள்.

அடுத்து மூன்றாவதாக இன்னொரு இனத்தவரும் வருகிறார்கள்.அவர்கள் முஸ்லிம்கள்.அவர்கள் ஹரிகந்திரா இனத்தவர் மாதிரியே இடுப்பளவிற்குதான் வலை வீசுகிறார்கள்.ஆனால் ஹரிகந்திரா மாதிரி இடது கைபக்கம் இல்லை.வலது கைபக்கமாக.

அந்த முஸ்லிம்களும் தங்கள் இனத்தை தனித்தன்மையாக காட்ட அவர்களை அறியாமல் ஹரிகந்திராவினரின் பழக்கத்தை சற்றே மாற்றி கடைபிடிக்கின்றனர்.

நாகபதினி ஜாதிக்கும் நாகப்பதினி ஜாதிக்கும் சண்டை.
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்... 

ஒரே ஒரு “ப்” தான். ஆனால் அந்த “ப்” என்ற எழுத்து பரம்பரை பரம்பரையாக வந்திருக்குமென்றால்,அது அந்த ஜாதியின் முக்கிய அம்சமாகிவிடுகிறது.

அதை ஒட்டியே பிரச்சனைகளும் ஆரம்பமாகிறது.

குட்மேனும் கொள்ளைக்காரர்களும்

ஆண்ட்ரு லாங் எழுதிய அல்லது தொகுத்த ஃபேரி புக்கிலிருந்து எடுத்த கதை இது.

கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கிறேன்.ஒரிஜினல் தலைப்பு :கன்னிங் ஷூமேக்கர்.

பொறுமையா படிங்க :)

தழுவி எழுதிய கதையின் தலைப்பு:குட்மேனும் கொள்ளைக்காரர்களும்.

குட்மேன் கடுமையான உழைப்பாளி.நல்லவன்.அவனிருந்த கிராமத்தில் தொழிலில்லாமல் நகரத்துக்கு சென்று உழைத்து பெரும் காசோடு வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

அவனுடன் அவன் வாங்கி வந்திருந்த கழுதையும் வந்து கொண்டிருந்தது.காட்டு வழியில் வந்து கொண்டிருக்கும் போது, தூரத்தில் கொடூரமான கொள்ளைக்கார கூட்டம் வருவதை குட்மேன் பார்த்தான்.சில சில்லறை காசுகளை கழுதை மேல் போர்த்தியிருக்கும் துணியினுள் வைத்து விட்டு, மற்ற பணத்தை தன் தோள்பையில் வைத்து விட்டான்.

கொள்ளையர்கள் மறித்து பணம் கேட்கும் போது, தன்னிடம் இருந்த எல்லா பணத்துக்கும் இந்த கழுதையை வாங்கிவிட்டதாக குட்மேன் சொல்கிறான்.ஏன் என்று கொள்ளையர்கள் கேட்டதற்கு அந்த கழுதை காசு கொட்டும் கழுதை என்று சொல்லி குட்மேன் கழுதை அசைக்க, சில்லறை காசுகள் கொட்டின. கொள்ளைகூட்ட தலைவன் அந்த கழுதையை எடுத்துக் கொண்டான்.

குட்மேன் பாவமாக தலையை கவிழ்த்து நின்றான்.கொள்ளைக் கூட்டத்தலைவன் வந்து “எவ்வளவு காசுக்கு கழுதையை வாங்கினாய்”. என்று கேட்டான்.

”நான் 80 பொற்காசுகள் கொடுத்தேன் எஜமான்” இது குட்மேன்.

“இதோ வேண்டுமானால் 40 பொற்காசுகள் வைத்துக் கொள்” என்று கொடுத்து கழுதையை எடுத்துப் போனான்.

குட்மேன் தன் தந்திரத்தால் 40 பொற்காசுகள் சம்பாதித்து விட்ட மகிழ்ச்சியை மனைவியிடம் பகிர்ந்து கொண்டான்.

மந்திரக் கழுதையை எடுத்துப் போன கொள்ளைக்காரர்கள் தினமும் அவரவர் வீட்டில் கழுதையை வைத்து உலுப்பி பார்த்தார்கள்.கழுதை விட்டை போட்டதே அன்றி காசு போடவில்லை. ஆஹா நம்மை ஏமாற்றினான் இந்த குட்மேன் என்று ஆவேசம் கொண்டனர்.

தூரத்தில் கொள்ளையர்கள் வருவதைக் கண்ட குட்மேன்,தன் மனைவியிடம் போய் அந்த தோல்பையில் ”சிகப்பு சாயம் நிரப்பி உன் கழுத்தில் கட்டிக்கொள்.அப்படியே அந்த கித்தாரையும் எடுத்து வை” என்றான்.

கொள்ளைக்காரர்கள் வந்து குட்மேனை கொத்தாக தூக்கினார்கள்.

“என்னை ஏமாற்றிவிட்டாய் குட்மேன்” கர்ஜித்தான் தலைவன்.

“ஐயா அப்போ நீங்க கொடுத்த பணத்த வாங்கிட்டு போங்க.ஏய் டெய்சி போய் பணம் எடுத்து வா உள்ளறையில் இருந்து”

“இருங்க நான் மீன பொரிச்சிட்டு எடுத்துட்டு வர்றேன்”

உடனே குட்மேன் தாவிச் சென்று மனைவியின் முடியை கொத்தாக பிடித்து கொள்ளையர்கள் முன் இழுத்து வந்தான்.

“அட பெஞ்சாதியே! கணவன் உத்தரவை நிறைவேற்றாமல் இப்படி மீன் பொரிக்கிறேன் என்று சொல்கிறாயே.உன் கழுத்தை ஏன் அறுக்கக் கூடாது” 
கொள்ளைக்காரத் தலைவர் கத்துவார். “நோ குட்மேன் மீன் பொரித்ததுக்கெல்லாம் மனைவி கழுத்தை அறுப்பது கொஞ்சம் ஒவர்”

“நீங்க சும்மா இருங்க தலைவரே. இது எங்க குடும்ப பிரச்சனை” என்று சொல்லி கத்தியை எடுத்து மனைவி கழுத்தில் கிடந்த ரத்தம் கட்டிய தோள்பையை கத்தியால் அறுக்க, கொள்ளையர்கள் முன்னால் குட்மேனின் மனைவி டெய்சி கழுத்தறுப்பட்டு இறந்தவளாய் மூச்சை அடக்கி நடித்தாள். 

“இப்போ என்ன செய்யப் போகிறாய் குட்மேன்” கொள்ளையர்கள் பயத்தில் கத்தினார்கள். அவர்கள் கொள்ளையடிப்பார்களே தவிர இப்படி கழுத்தறுத்த உடலையெல்லாம் பார்த்ததில்லை என்பதை அவர்கள் உடல் நடுக்கத்திலேயே குட்மேனால் யூகிக்க முடிந்தது.

உடனே உள்ளேயிருந்து கிதாரை எடுத்து வந்தான். “டுட்டரிங் டுரிங்... என் செல்லப்போண்ணே கண்ணு, நீ எந்திரிச்சி கொஞ்சம் நில்லு” என்றொரு பாட்டைப் பாட ஆச்சர்யமாக டெய்சி உயிர்பெற்று வந்தாள்.கொள்ளையர்கள் எல்லாம் உற்சாகமடைந்ததனர்.

“குட்மேன் இது என்ன மந்திர கித்தார்”

“ஆம் எஜமான் இதை இசைத்து பாட்டு பாடினால் செத்தவர்கள் உயிர் மீண்டு வருவார்கள்”

“குட்மேன் குட்மேன் நல்ல பிள்ளையல்லவா. இதை எங்களுக்கே கொடுத்து விடு குட்மேன்” கொள்ளைக்காரத் தலைவன் கெஞ்சினான்.

“இல்லை எஜமான்,எனக்கு எப்போதெல்லாம் கோபம் வருமோ அப்போதெல்லாம் இப்படி மனைவியின் கழுத்தை அறுப்பேன்.அதன் பிறகு மந்திர கித்தாரினால் பாடுவேன்.அவள் உயிர்பெறுவாள்.இது இல்லாமல் எப்படி மனைவி கழுத்தை அறுப்பது”

எப்படியோ முட்டாள் கொள்ளைக்காரர்கள் அந்த கித்தாரை 60 பொற்காசுகள் கொடுத்து வாங்கிக் கொண்டுவந்தார்கள்.

மறுநாள் காலை, கொள்ளைக்காரத் தலைவன் தன் மனைவியிடம் கேட்டான்.
“இன்று உணவென்ன செய்தாய்?” 
“பிளம் கேக் செய்தேன்”
“ஏன் கிரீம் கேக் செய்யவில்லை” 
இப்படி ஒரு சண்டையை துவக்கி மனைவியை அடித்தான். பெரிய கத்தியை எடுத்து வந்து மனைவியின் கைகளில் கீறினான்.

மனைவி “யம்மோ” என்றலறினாள். அப்போது கொள்ளைக் கூட்டத்தலைவன் அந்த மந்திரகிதாரை எடுத்து வந்து “ என் செல்லப்பொண்ணே கண்ணு, நீ எந்திரிச்சி கொஞ்சம் நில்லு” என்று கிதாரை இசைத்து பாடினான்.

காயம் ஆறவில்லை.ரத்தம் நிற்கவில்லை. தலைவனின் மனைவி ஆவேசமானாள். தலைவனை துரத்தி துரத்தி அடித்தாள்.மற்ற கொள்ளைர்கள் முதலில் தலைவன் தலைவி ஒடிப்பிடித்து விளையாடுவதாக நினைத்தார்கள்.ஆனால் தலைவன் தலையில் இருக்கும் கரண்டிக் கொத்து கொழுக்கட்டைகளை பார்க்கும் போது அது விளையாட்டு மாதிரி தெரியவில்லை.

உடனே எல்லாக் கொள்ளைக்காரர்களும் ஒவ்வொரு நாள் அந்த கிதாரை எடுத்து போய், தங்கள் மனைவியை கைகளை அறுத்து, பாடி சோதனை செய்தனர்.ஒருவேளை தலைவன் பாடத் தெரியாமல் பாடியிருக்கலாம்.அல்லது இசைக்கத் தெரியாமல் இசைத்திருக்கலாம் என்று அவர்கள் நினைத்தனர். எல்லா மனிதனும் தம்மை உயர்வாக நினைப்பது ஒரு நியதிதானே.

முடிவில் குட்மேன் தங்களை ஏமாற்றி விட்டதை நினைத்து கொள்ளைக்காரர்கள் கொதித்தனர்.இந்த முறை குட்மேனை அழித்து விடுவது என்று முடிவு செய்தனர். தங்கள் சாமிகளை கும்பிட்டு கொள்ளையர்களுக்கு ரத்தத் திலகமிட்டு அனுப்பி வைத்தனர் அவர்கள் மனைவிமார்கள்.

கொள்ளையர்கள் வந்தார்கள்.குட்மேனைப் பார்த்து அவேசம் கொண்டார்கள் .அப்படியே குட்மேனை தூக்கி ஒரு சாக்குபையில் வைத்து குண்டு கட்டாக தூக்கி சென்றனர். ரொம்ப தூரம் தூக்கிச் சென்றதால் களைப்பாக இருக்க,அவனை பாதையில் போட்டுவிட்டு, தூர மரத்தடியில் களைப்பாய் இருந்தனர்.அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவன் ஒருவன், இந்த சாக்குப்பையை அவிழ்த்துப் பார்க்க உள்ளே குட்மேன்.

”நான் போக மாட்டேன்.நான் போக மாட்டேன்” என்று அழுதான்.

ஆடுமேய்ப்பவன் “எங்கே போக மாட்டேன் என்றழுகிறாய்” என்கிறான்.

“என்னை இளவரசியை மணமுடிக்க சொல்கிறார்கள்.அதுதான் முடியாதென்கிறேன்”

“ஒ அப்படியா”

குட்மேன் பேசினான் .” நான் ஒரு யோசனை சொல்கிறேன்.நீ இந்த சாக்குப்பையில் இருக்கிறாயா.உனக்கு இளவரசியை திருமணம் முடித்து வைப்பார்கள்,இளவரசியின் அழகு பற்றி தெரியும்தானே”

ஆசைப்பட்ட ஆடு மேய்ப்பவன் அதற்கு ஒத்துக் கொள்கிறான். போய் அவனே சாக்குப் பையில் போய் முடங்கிக் கொள்கிறான்.குட்மேன் அவனை பையில் வைத்து இறுக்கக் கட்டி வைக்கிறான்.களைப்பு தீர்ந்த கொள்ளையர்கள் சாக்குப்பையை தூக்கி நடந்து ஆற்றில் எறிகிறார்கள்.ஏற்கனவே ஆற்றாங்கரையோரம் நிற்கும் குட்மேனின் மனைவி டெய்சி அந்த ஆடு மேய்பவனை காப்பாற்றுகிறாள்.

“செத்தாண்டா குட்மேன்” என்று துள்ளிப் பாடி கொள்ளையர்கள் வரும் போது, அங்கே குட்மேன் ஆடுகளை மேய்த்துக் கொண்டு கொள்ளையர்களைப் பார்த்து கெக்கே பிக்கே என்று சிரித்து நின்றான்.

கொள்ளையர்கள் பயத்தால் நடுங்கினார்கள்.குட்மேன் பேசினான்.

“கவலைப்படாதீர்கள். நான் ஆவியல்ல மனிதன்தான்.நீங்கள் என்னை கட்டிப் போட்டீர்கள் அல்லவா.அங்கே ஒரு தேவதை என்னை காப்பாற்றி இந்த ஆட்டு மந்தையை எனக்கு பரிசாக கொடுத்தது” என்றான்.

“இவ்வளவு ஆடுகளும் உனக்கா சொந்தம் குட்மேன்”

“ஆம்”

“எங்களுக்கும் ஆடுகள் வேண்டும் குட்மேன்”

“அப்படியானால சாக்குப் பையினுள் போங்கள்”

எல்லோரும் ஒவ்வொரு சாக்குப் பையில் போனார்கள்.குட்மேன்  கட்டி கட்டி தூக்கி ஆற்றில் வீசினார்கள்.

சாக்குப் பையில் கிடந்த கொள்ளைக்காரர்களுக்கு மகிழ்ச்சி.மூச்சு முட்டினாலும் காத்திருந்தார்கள்.
சாக்குப் பையை யாரோ தூக்குவது தெரிந்தது.மகிழ்ச்சி.அவிக்கப்பட்டது முடிச்சி.மகிழ்ச்சியின் உச்சம்.

தேவதை வந்து ஆட்டு மந்தை பரிசளிக்கப் போகும் நேரம் வந்து விட்டதாக சிரித்தார்கள்.ஆனால் அவிழ்த்தது மீனவர்கள்.நீங்கள் ஏன் சாக்குப் பையில் இருந்து ஆற்றுக்குள் கிடக்கிறீர்கள் என்று மீனவத்தலைவன் கேட்க, கொள்ளைக் கூட்டத்தலைவன் நடந்ததை சொன்னான்.

அதைக் கேட்டு மீனவர்கள் எல்லோரும் வாய்விட்டு சிரித்தனர்.இப்படி ஒரு முட்டாள்களை பார்த்ததே கிடையாது என்று சுற்றி நின்று கொள்ளையர்களை கும்மி கொட்டி சிரித்தனர்.
அப்போது ஒரு கொள்ளையன் தன் தலைவனிடம் சொன்னான் “தல குட்மேனை சும்மாவிடக் கூடாது.போய் கேட்போம்” என்கிறான்.

கொள்ளைக் கூட்டத்தலைவன் “போடாங்.. ஒவ்வொரு தடவை குட்மேன் வீட்டுக்கு போகும் போது இழப்பு நம்மளுக்குதான்.அவன் அதிக தந்திரமாய் இருக்கிறான்.இனிமேல் அவன் எதிரே வந்தாலும் நாம் ஒதுங்கிப் போய்விட வேண்டும்.இது என் உத்தரவு” என்று கட்டளையிட்டான்.

குட்மேன் எந்த தொந்தரவும் இல்லாமல் தன் மனைவி டெய்சியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.

சிக்மெண்ட் ஃப்ராய்ட் பிடித்த முயலுக்கு மூணுகாலாம்...

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று சொல்லாத மனிதர்களே உலகத்தில் கிடையாது எனலாம்.

கொகெயின் போதைமருந்தை கண்டுபிடித்த போது அதை போதைமருந்தாக யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.

கொகெயினை மார்ஃபின்,ஆல்கஹால் போன்றவற்றுக்கு அடிமையாக இருக்கும் மனிதர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களை போதை மருந்து பழக்கத்திலிருந்து மீட்டுவிடலாம் என்று அவர் நம்பினார்.

அவருடைய நண்பர்களுக்கெல்லாம் அதை பரிந்துரைத்தார்.கொகெயினை அஜீரணக் கோளாறுகள்,உடல் மெலிதல்,ஆஸ்துமா, ஆண்மைக்குறைவு என்று எல்லா வியாதிகளுக்கு மருந்தாக கொடுக்க முடியுமென்று அவர் நம்பினார்.அதையே மருத்துவ உலகில் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி வாதாடினார்.

ஆனால் கொகெயினைக் கொண்டு போதைப் பழக்கதை குறைக்க முடியாது.ஏனென்றால் கொகெயினே ஒரு மோசமான போதை மருந்துதான் என்று தெரியாமல் பிரச்சாரம் செய்த அவரே கொகெயினை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்.

பின் அதற்கு அடிமையுமானார்.

ஆனால் இந்த விஞ்ஞானியின் கொகெயின் பிரச்சாரத்தை அடியோடு மறுத்தார் “எர்லென்மேயர்” என்ற அவர் நண்பர்.”நோ உலகத்து மக்களே! அபின்,மது முதலான சாபக்கேடுகளுடன் கொகெயின் மனித இனத்தைக் கெடுக்க வந்த மூன்றாவது சாபக்கேடு” என்று காட்டமாக சொன்னார்.நிருபித்தார்.

ஆனால் அந்த ”அவர்” விஞ்ஞானி கம் டாக்டர் மட்டும் ஒத்துக் கொள்ளவே இல்லை.கடைசிவரை அவர் “கொகெயின் இஸ் குட் மெடிசின் யா” என்றே சொல்லி தன் வாழ்நாளில் சாதித்தார்.

அவர் பிடிச்ச முயலுக்கு மூணே காலாம்.

கடைசி வரியில் அந்த அவர் யார் என்று சொல்வதுதானே முறை.

அந்த அவர் என்பவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த,மனோதத்துவம் பற்றி புரட்சிகரமான புதிய விசயங்களை ஆராய்ந்து உலகத்துக்கு சொன்ன “சிக்மெண்ட் ஃப்ராய்ட்” தான்... :) :) 

Sugar baby ...

Sugar baby என்பது பொருளாதார உதவியை எதிர்ப்பார்த்திருக்கும் பெண்ணைக் குறிக்கின்றது.ஆண் துணையில்லாமல் இருக்கும் பெண்கள் தங்களை மட்டுமோ, அல்லது தங்கள் குடும்ப மொத்தத்தையும் கவனித்துக் கொள்ள செக்ஸை விலையாக கொடுத்தால்,அவர்களை Sugar babies என்கிறோம் அப்படிப்பட்ட பெண்களுக்கு பொருளாதார உதவி அளித்து அவர்களிடம் செக்ஸை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ளும் ஆணை Sugar daddy என்கிறோம்.

இதுமாதிரி செக்ஸை செக்ஸ் உணர்வின் தேவையில்லாமல் கொடுக்கும் வழக்கம் பழைய காலம் தொட்டே பெண்களுக்கு இருந்து வருகிறது.அதில் ஒரு முக்கியமான காரணம் பரிதாபப்பட்டு செக்ஸை கொடுப்பது.அல்லது தான் ஒரு வசதியைப் பெற செக்ஸைக் கொடுப்பது.

அமெரிக்காவில் 2000களில் பெண்களிடம் ஆய்வு செய்யும் போது இது பற்றி வெளிப்படையாக பேசுகிறார்கள்.

- ஆம்.என் நண்பன் புதிதாய் கார் வாங்கியிருந்தான்.அதை கொண்டாட என்னிடம் கேட்டான்.தொடர்ச்சியாக கெஞ்சினான்.பார்க்க பரிதாபமாக இருந்தது.அதனால் என்னைக் கொடுத்தேன்.

- நாங்கள்  வெப் சேட்டில் பழகி நெருக்கமானோம்.என் ஆன்லைன் காதலன் என்னைப் பார்க்க ஏழு மணி நேரம் காரை ஒட்டிக்கொண்டு களைப்பாக வந்திருந்தான்.நேரில் பார்க்க அவனை எனக்கு பிடிக்கவே இல்லை.ஆனாலும் என்னைத் தேடி இவ்வளவு தூரமிருந்து களைத்து எதிர்ப்பார்த்து வந்திருக்கிறான்.அவனை ஏமாற்றக்கூடாது இல்லையா? அதனால் என்னை அவனுக்கு கொடுத்து மகிழ்வித்தேன்.

சில சமயம் பெண்கள் தங்கள் உடலை அவர்களே ஒரு பண்டமாக நினைத்து விடுகிறார்கள்.”நான் ஒரு பண்டம் வைத்திருக்கிறேன்.அவன் அதை கேட்டு கேட்டு தொந்தரவு செய்கிறான்.என்னை எரிச்சலூட்டி தொந்தரவு செய்யவில்லை.கண்ணியமாக தொந்தரவு செய்கிறான்.ஆனால் தொடர்ச்சியாக செய்கிறான்.அவன் எனக்கு உதவியும் செய்கிறான்.உதவிக்கு பதிலாக என்னை தொந்தரவும் செய்வதில்லை.அவனுக்கு என்னால் ஏதும் செய்ய முடியவில்லை.நான் ஏன் என்னை அவனுக்கு கொடுக்கக் கூடாது? மகிழ்ச்சிப்படுத்தக்கூடாது.இந்த மனநிலையில் பல தொடர்புகள் ஏற்படுகின்றன.

பரிதாபப்பட்டு செக்ஸை கொடுப்பது.

திஜானகிராமனின் ‘மரப்பசு’ நாவலில்,வீட்டு வேலை செய்யும் கட்டுமஸ்தான பெண், அம்மணியிடம் சொல்வாள் “அம்மா நான் அங்கேயும் இங்கேயும் வேலை செய்யும் போது,அதைப் பார்த்து ஐயாவுக்கு உடம்பெல்லாம் நடுங்குது.தெரியாத்தனமா காபி கொடுக்கப்போனா உதறுது.நானே பரிதாபப்பட்டு என்ன அவருக்கு கொடுத்திருவேனோன்னு பயமாயிருக்கு” என்பாள்.

சிகரம் படத்தில் டெல்லி கணேஷ் கேரக்டர், ரம்யா கிருஸ்ணன் கேரக்டரிடம், தான் இத்தனை வருடம் பெண் சுகத்தையே அனுபவித்தது இல்லை என்று கெஞ்சும் போது, ஐயோ பாவம் என்று தன்னை அனுபவிக்கக் கொடுக்கும் பெண்ணை பார்க்கலாம்.

செவன் ஜி ரெயின் போ காலனி திரைப்படத்திலும் கிட்டத்தட்ட அப்படித்தான்.அவன் தொடர்ச்சியாக அவளை வெறித்தனமாக தொடர்ந்து கொண்டிருக்கிறான்.வேறு எதுவுமே அவனுக்கு முக்கியமாக தெரியவில்லை.அந்த விடாப்படியான மனநிலை அவளுக்கு அவன் மேல் பரிதாபம் வந்து அவளைக் கொடுக்கும் மனநிலைக்கு இட்டுச் செல்கிறது.

கி.ராஜநாராயணனின் நாட்டுபுறக்கதையொன்றில்

ஒரு பெண்ணின் மீது,ஆணுக்கு காதல் அதிகம்.அவளை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று நினைக்கிறான்.அவளுக்கோ திருமணமாகிவிட்டது.என்ன செய்வது.இருந்தாலும் அவள் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அவள் கணவன் வெளியூரில் இருக்கிறான்.இதைப் பயன்படுத்தி அந்தப் பெண் போகும் வழியில் ஒரு சிறுகடை போடுகிறான்.அந்தப் பெண்ணும் கடைக்கு வந்து சாமான்கள் வாங்குகிறாள் தினமும்.அவள் குடுக்கும் காசை விட அதிகமான பொருட்களை கொடுக்கிறான்.முதலில் அவளுக்கு அது புரியவில்லை.பின்பு சுதாரித்துக் கொண்டு காரணம் கேட்க,இவன் காரணத்தை சொல்கிறான்.அவள் அவனைத் திட்டி செல்கிறாள்.அதன் பிறகு அவன் கடையில் பொருள் எதையும் வாங்குவதில்லை.ஆனால் தினமும் அவன் கடையை கடந்தாக வேண்டிய நிலை.அவள் அப்படி கடக்கும் போதெல்லாம் இவன் கண்ணீர் விடுகிறான்.

வேறொன்றும் பேசுவதில்லை வெறும் கண்ணீர் மட்டும்தான்.இப்படியே ஒருரிரு மாதங்கள் போனது.கண்ணீர் நின்ற பாடில்லை.இந்தப் பெண்ணுக்கு பரிதாபம் வருகிறது.இவ்வளவு விருப்பமா நம் மேல் என்று நினைக்கிறாள்.அவன் கடையிலெயே மறுபடியும் சாமான் வாங்குகிறாள்.இவனோ சாமானை எடுத்துக் கொடுக்கும் போதெல்லாம் கண்ணீர் கசித்துக் கொண்டே கொடுக்கிறான்.இவளுக்கு ரொம்ப பரிதாபம் வந்து “ஏன்யா இப்படி அழுவுற” என்கிறாள்.இவன் அவளை சுட்டுகிறான்.அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அவள் அவனிடம் “ பொழுதடைஞ்சா அப்படி என் வீட்டுப்பக்கம் வர வேண்டியதுதான.பேசிப்பழகிட்டு இருக்கலாம்ல” என்கிறாள்.

பாதல் சர்கார்....

மே மாதம் 2014 பனுவலில் நடந்த திரையிடலைப் பற்றி எழுதியது...

பார்வையாளர்களை இருட்டில் வைத்துக் கொண்டு, நீங்கள் வெளிச்சத்தில் நின்று நடித்தால் எப்படி அது பார்வையாளர்களுக்கு அதிர்வைக் கொடுக்கும் ? எனற கோட்பாட்டைத்தான் பாதல் சர்கார் வலியுறுத்துகிறார்.

அந்த பாதல் சர்காரைப் பற்றி அம்ஷன் குமார் இயக்கிய ஆவணப்படத்தை  பனுவலில் கண்டேன்.

இந்த ஆவணப்படம் பாதல் சர்க்காரின் வாழ்க்கை வரலாறு,அவர் வளர்ந்த இடம்,படித்த இடம் என்று எதையும் பேசவில்லை.நேரடியாக அவர் செயல்முறைப்படுத்திய  மூன்றாவது அரங்கு நாடகமுறையைப்  ( Third theater ஐ இப்படியா சொல்ல வேண்டும்.சரியாத் தெரியல) பற்றி மட்டும் பேசுகிறது.

Second Theater என்றால் மேடை மேலே இருக்கும்.பார்வையாளர்கள் கிழே இருப்பார்கள்.மேடை வெளிச்சமாக இருக்கும்.பார்வையாளர்கள் இருட்டில் இருப்பார்கள்.ஆனால் மூன்றாம் அரங்கு நாடகமுறையில் அப்படியில்லை.பார்வையாளர்களும் கூடவே நிற்பார்கள்.பார்வையாளர்கள் சுற்றி நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள்.ஏனென்றால் மூன்றாம் அரங்கு நாடகமுறையில் நாடகம் பொதுவெளியில் எந்த செலவும் இல்லாமல்,ஆனால் மக்கள் பிரச்சனையை முன்னிறுத்தி நடத்தப்படும்.இதை முதன் முதலில் பரவலாக்கம் செய்தவர் பாதல் சர்க்கார்.

இவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்.இவரைப் பேட்டி காண்பதே ஆவணப்படம்.அடுத்து இவரின் கருத்தை ஒருவர் விமர்சிக்கிறார்.அந்த விமர்சனமும், இன்னொருவர் ஆதரிக்கிறார்.அவருடைய வாதமும் ஆவணப்படம் நெடுக வருகின்றன.ஆக ஆவணப்படம் பாதல் சர்க்காரை தூக்கியோ துதிபாடியோ இருக்கவில்லை.

ஆனால் அவர் சொல்ல வந்த கோட்பாட்டை பார்வையாளர்களுக்கு புரியவைக்கிறது.பாதல் சர்க்கார் தன் பொதுவெளி நாடகம் மூலம் என்ன சொல்ல நினைத்தாரோ, கிட்டத்தட்ட அதே பாணியில் அம்ஷன் குமாரும் ஆவணப்படத்தைக் கொண்டு போகிறார்.

1994 யில் பாதல் சர்க்காரிடம் சென்று அவர் நடைபாதையில் நடத்திய மூன்றாவது அரங்கு நாடக விழாவை  மையப்படுத்தி இந்த ஆவணப்படத்தை எடுக்கிறார்.பாதல் சர்க்கார் பேட்டியில் இப்படி சொல்கிறார்.

-நாடகம் பார்க்க வருபவர்கள் எந்த டிக்கட்டையும் எந்த பணத்தையும் செலவழிக்க தேவையில்லை.நாங்களும் நாடகத்துக்காக எந்த பணத்தையும் செலவுசெய்யவில்லை.இதனால் பார்வையாளர்களுக்கும் நாடகம் நடத்துபவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.ஒருவிதமான நட்பு வந்து விடுகிறது.

-நாங்கள் ஒப்பனை இல்லாமல்,பொருட்கள் இல்லாமல் நாடகம் நடத்தப் படும் சிரமத்தை பார்வையாளர்களும் பார்க்கிறார்கள்.அதுவே நாடகத்துக்கு சிறப்பாக அமைந்து விடுகிறது.

-எங்களோடு நிற்கிறார்கள் பார்வையாளர்கள்.அவர்களுக்கு எங்கள் மொழியை எளிதாக புரியவைக்க முடிகிறது.நாங்கள் சொல்ல வந்த சமூக மாற்றம் பற்றிய கருத்தைப் பற்றிய அதிர்வை எளிதாக உருவாக்கமுடிகிறது.நாடகத்தின் நோக்கம் அதுதானே.

-ஒருமுறை நாடகம் போடும் போது விளக்கு வசதியில்லாமல் போய்விட்டது.அப்போது பார்க்க வந்தவர்கள் “நாங்கள் சுற்றி நின்று மெழுகுவர்த்திகளைப் பிடித்துக் கொள்கிறோம்.நீங்கள் நடத்துங்கள்” என்றார்கள்.அப்படியே நடந்தது நாடகம்.

பாதல் சர்க்காரின் மேலுள்ள விமர்சனம்,ஆதரவு என்று 51 நிமிடத்தில் அம்ஷன் குமார் பல சிந்தனைகளை தூண்டி விடுகிறார்.

ஆவணப்படம் முடிந்ததும் கலந்துரையாடல் நடந்தது.முதலில் அம்ஷன் குமார் தன் அனுபவத்தை சுருங்கச் சொன்னார்.பாதல் சர்க்கார் இந்த நடைபாதை நாடக கொண்டாட்ட நாடகத்தையே படம் பிடிக்க முதலில் எதிர்ப்பு தெரிவித்தார்.”அப்படி செய்தால் நான் ஏதோ பெரிய ஸ்டாராக தெரிவேன்.என் குழுவில் நானும் ஒருவன்.அவ்வளவுதான்” என்றாராம் பாதல்.அதன் பிறகு அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்ததாக பல தகவல்களை சுவையாக சொன்னார்.

அடுத்து பிரளயன் பேசினார்.பொதுவான இந்திய நாடக போக்கு பற்றி சுருங்க சொன்னார்.பாதல் சர்க்காரின் யுத்தி பற்றி அது மக்களை எப்படி சென்றடைந்தது என்பதற்கு உதாரணமாக ஒன்று சொன்னார் “அன்று தெருவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகம் பார்த்தேன்.அதில் இரண்டு பேர்  கைகளை மேலே தூக்கி குவித்து சேர்த்து வைத்துக் கொண்டனர்.அதனுள்ளே இன்னொருவர் நுழைகிறார்.அதாவது வீட்டுக்குள் நுழைகிறாராம்.இதெல்லாம் பாதல் சர்க்காரின் மூன்றாம் நாடக அரங்கினால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்றுதான்.வீடு என்பதற்கு வீடு தேவையில்லை.இரண்டு மனிதர்கள் போதும் என்ற தன்மையை பரவலாக்கியவர் பாதல் சர்க்கார் என்றார்.

”தளம்” பாரவி பேசினார்.மூன்று விஷயங்கள் சென்னையில் முதன் முதலில் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
-நாடகங்கள் நடத்துவதற்கான,பயிற்சி செய்வதற்கான நிரந்தர அரங்கம்.
-அதே அரங்கில் நாடகம் சம்பந்தப்பட்ட நூல்கள் அடங்கிய நூல் நிலையம்.
-அங்கு வரும் நாடக கலைஞர்கள் தங்குவதற்கு குறைந்த பட்ச வசதி.
இதையெல்லாம் செய்தால் மட்டுமே நாடகம் நிலைக்கும் என்று மிக மிக உணர்ச்சிகரமாக பேசினார்.அவர் குரலில் தெரிந்த அக்கறை பார்வையாளர்களை மனதை நிச்சயமாய் தொட்டிருக்க வேண்டும்.

கலைராணி, மூன்றாம் நாடக அரங்கு கோட்பாட்டில் இருக்கும் செலவில்லை விஷயத்தை எல்லோரும் ஏற்றிப் பாடுவதில் தனக்கு உடன்பாடில்லை என்றார்.நாடக கலைஞர்கள் அடையும் பணக்கஷ்டத்தை விளக்கினார்.சமீபத்தில் நடித்த நாடகம் பெரிய வசதியான அரங்கில் நடத்தப்பட்டாலும், அங்கே நாடக கலைஞர்களின் பிஸ்கட் டீ விஷயங்களை கூட அவர்களேதான் பார்த்துக் கொள்ள வேண்டியதிருந்தது என்றார்.முழு நேர நாடக கலைஞர்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது.அப்படி முழு நேர நாடக கலைஞர்கள் இல்லாமல் நாடக கலையை எப்படி வளர்த்து விட முடியும் என்பது பற்றியும் யோசிக்க வேண்டும் என்றார்.

அடுத்து கருணா பிரசாத் மிக அருமையாக பேசினார்.நாடகம் என்பது தமிழ்நாட்டில் நிச்சயமாய் மெல்லிய நூலாகிவிட்டது என்றார்.பள்ளிக் கூடங்களில் வேறு வழியில்லாமல் ஒரு நாடகம் வைக்கிறார்கள்.அந்த நாடகத்தில் கூட குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுப்பதில்லை.ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் பள்ளி மாணவர்களில் இருந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.இது மாதிரி எதாவது யோசித்தால் ஒருவேளை நாடகத்தை காப்பாற்றலாம் என்றார்.கிராம்ங்களில் கலை சடங்கு மற்றும் மத சம்பந்தப்பட்டதாக இருப்பதால்தான் இன்னும் இருக்கிறது.இல்லாவிட்டால் நம் மக்கள் என்றோ அவைகளை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பார்கள்.இதை அவர் மக்களின் கண்டுகொள்ளாமை மீது உள்ள கோபமாக முன்வைத்தார்.மதம் மற்றும் சடங்குகளை ஆதரிப்பதாக முன்வைக்கவில்லை.

இப்படியே கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் விவாதம் மட்டும் நடந்தது.மிக அருமையான விவாதம் இது.எல்லாவற்றையும் இங்கே எழுதினால் நிறைய வரும்.அதனால் இப்போது இது போதும்.

இதைப் படிப்பவர்கள் எல்லோரும்,தூங்கப்போவதற்கு முன்னால் Badal sarkar பற்றி விக்கிபீடியாவில் படித்து விட்டு தூங்கினால் நான் மகிழ்ச்சியடைவேன்( தெரிஞ்சவங்க இக்னோர் பண்ணிரலாம்)  :)

இன்று ஆபீசில் இருந்து அவசர அவசரமாக ஐந்தரைக்கெல்லாம் வெளியேறி, ஆட்டோ பிடித்து பனுவலுக்கு வந்து வீண்போகவில்லை.அசத்தலான அனுபவமாக ஆகிவிட்டது. :)