Saturday 5 July 2014

ரேமண்ட் கார்வரின் சிறுகதை ஒன்று...

ரேமண்ட் கார்வர் எழுதிய “குடி மறதி விடுதியில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறேன்” என்ற கதையை காலை தூங்கி எழுந்ததும் படுக்கையில் படுத்துக் கொண்டே ஒரே வீச்சில் படித்து முடித்தேன்.

தமிழில் மொழி பெயர்த்தவர் அப்பணசாமி.

நான் புரிந்து கொண்ட சாரக்கதையை சுருக்கமாக எழுத வேண்டும் போல இருந்தது. எழுதுகிறேன்.

//// குடிப்பழக்கத்தை மறக்க பயிற்சி கொடுக்கும் விடுதியில் தங்கியிருக்கும் நாலைந்து நபர்களைப் பற்றியது கதை.

அவர்கள் தங்களின் கதைகளை பரஸ்பரம் பகிர்ந்து கொள்கிறார்கள்.

”நான்” என்ற கதை சொல்லி ஜே.பி என்பவனின் கதையைக் கேட்கிறார்.

ஜே.பி சிறுவயதில் தான் சிறுவயதில் ஒரு கிணற்றுக்குள் விழுந்து பயந்த கதையைச் சொல்கிறார்.இதிலிருந்து எப்படி மீளப்போகிறேன் என்றே அப்போது அவருக்கு தெரியவில்லையாம். நல்லவேளையாக அவர் அப்பா கண்டுபிடித்து காப்பாற்றினாராம்.

ஜே.பியும் அவன் நண்பனும் இளைஞர்களாக வீட்டில் தனியாக  இருக்கும் போது ”ராக்ஸி” என்ற பெண் ”கணப்படுப்பு” (குளிர்காய உதவி செய்யும் விறகடுப்பு) சுத்தம் செய்ய வருகிறாள்.அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கிறார்கள் நண்பர்கள்.

 போகும் போது ராக்ஸி கேட்கிறாள் “நீங்கள் இருவரும் என்னை முத்தமிட விரும்புகிறீர்களா? “ என்று. நண்பன் முத்தமிடுகிறான். இவனும் முத்தமிடுகிறான்.

ஜே.பியின் முத்தத்தில் இருந்த காதலை ராக்ஸி உணர்ந்து கொள்கிறாள்.இருவருm திருமணம் செய்து கொள்கின்றனர்.ஜே.பி தன் இருபது வயது முடியும் போது நல்ல மனைவியையும் குழந்தைகளையும் சொந்த வீட்டையும் அடைந்து விடுகிறான்.

அதன் பிறகு ஜே.பி ஏன் என்று தெரியாமலேயே குடிக்கிறான்.முதலில் பியர்  குடிக்கிறான். அப்புறம் ஜின் டானிக் குடிக்கிறான்.இரவு குடிக்கிறான்.இரவு குறைந்து மாலையாகி,மதியமாகி, காலையிலேயே குடிக்க ஆரம்பிக்கிறான்.

ஏன் அப்படி குடிக்கிறான் என்று ஜே.பிக்கே தெரியவில்லை. மனைவி குழந்தைகளுடன் சண்டை வருகிறது, மனைவி வேறு காதலனைத் தேடி போகிறாள்.ஆத்திரத்தில் மனைவின் கல்யாண மோதிரத்தை வாங்கி ஜே.பி சிதைக்கிறான். ஜே.பியை ”குடிமறதி” வீடுதியில் விட்டு விட்டு அவன காதல் மனைவி ”ராக்ஸி” போய் விடுகிறாள்.

காக்கா வலிப்பு வரும் ஒரு குள்ளனும் குடிக்கு அடிமையாகி அந்த விடுதியில் இருக்கிறான். அவன் எதன் மீதும் பிடிப்பில்லாமல் இருக்கிறான். “வரும் புத்தாண்டில் என் மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு கேக்குகள் சாப்பிட்டுக்கொண்டே டிவி பார்ப்பதுதான் என் ஆசை” என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொள்கிறான்.

அப்படியே புத்தாண்டு நெருங்கும் போது அவன் உடல்நலம் சரியாகி வீட்டுக்கு போகும் உற்சாகம் மனதில் இருக்கிறது.ஒரு பீதியும் அவன் மனதில் இருக்கிறது. கதையாசிரியர் அந்த இடத்தில் இப்படி சொல்கிறார் “ஒரு விடுதலை என்பது மற்றொரு தளைக்குதானே இட்டுச் செல்கிறது” என்று.

”நான்” என்ற கேரக்டரின் கதையில், அவன் அதிகமாக குடிக்கிறான்.இதனால் மனைவிக்கும் அவனுக்கும் இடைவெளி வருகிறது.அவனுக்கு இன்னொரு காதலி கிடைக்கிறாள்.அவள் இவனுக்கு ஆசுவாசம் கொடுக்கிறாள்.ஆனால் அவளுக்கும் மார்பக புற்று நோய் வருகிறது. இதனால் இவன் இன்னும் அதிகம் குடிக்கிறான்.குடிப்பதில் இருந்து அவனால் வெளியே வரமுடியவில்லை. தன் காதலியிடம் தன்னை குடிமறதி விடுதியில் சேர்க்குமாறு கெஞ்சுகிறான்.அவளும் சேர்த்து விட்டு செல்கிறாள்.

இப்போது நான் கேரக்டர் பேசுகிறது நினைக்கிறது.

புத்தாண்டுக்கு முந்தின நாள் ஜே.பியை கூப்பிட அவன் மனைவி ராக்ஸியே வந்து விடுகிறாள்.எனக்கு அவர்களைப் பார்க்க மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.ஆனால் எனக்கு யாருமில்லையே என்ற ஏக்கமும் இருக்கிறது.மனைவியும் போன் போடுவதில்லை.காதலியும் போன் பேசுவதில்லை.

எனக்கென்று யாருமே இல்லையே. நான் புத்தாண்டு அன்று அவர்களை கூப்பிடுவேன். ஏதாவது பேசுவேன். ஆனால் அவர்கள் பேசுவார்களா என்று தெரியவில்லையே.

ஜே பின் மனைவி ராக்ஸி அழகாக சிரித்தாள். “உன்னைப் பற்றி ஜேபி நிறைய சொல்லியிருக்கிறான்.நல்ல விதமாகத்தான்” என்றேன்.

அவள் சிரித்தாள் .ஆறுதல் சொன்னாள் .

பின் ஜே.பியும் ராக்ஸியும் கிளம்புபோது “ராக்ஸி எனக்கென்று யாருமில்லை.என்னை முத்தமிடுவாயா” என்று கேட்டேன்.

“ஆஹா அதையெல்லாம் விட்டு நாளாகிவிட்டதே” என்று குறும்பாக சொன்ன ராக்ஸி, என்னருகே வந்து உதட்டி அன்பு முத்தம் கொடுத்தாள்.

பின் ஜேபியும் ராக்ஸியும் காரில் கிளம்பினார்கள்.

குள்ளனும் கிளம்பிவிட்டான்.

நானும் மனைவியும் குறும்பாக பேசி பழகிய நாட்கள் நினைவுக்கு வந்தன.

சின்ன சின்ன அர்த்தமற்ற விளையாட்டுகளால் நிரம்பிய வாழ்க்கை அது.ஆனால் அதுதான் எங்கள் அன்புக்கு அர்த்தம் கொடுப்பவைகளாகவும் இருந்தன என்பதையும் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

”நான் நாளை போன் செய்வேன்.சும்மாதான் பேசுவேன் .அதிகம் பேசமாட்டேன். மனைவியோ காதலியோ யாரிடமாவது பேசுவேன். நாளைக்கு நிச்சயமாக போன் செய்வேன். நான் நாளை .... “ ///

காலையில் கல்குதிரை இதழில் இதைப் படித்து கண்களில் கண்ணீர் வர பிரஷ் செய்தேன். கண்ணீர் வர முகம் கழுவினேன். கண்ணீர் வர காபிக் குடித்தேன்.

கண்ணீர் வர எழுதினேன்.

தனிமைதான் மனிதனுக்கு கிடைக்கும் மோசமான தண்டனை.

’Where i'm calling from, from" Raymond carver

இந்தக் கதையில் ஜேபி முதலில் சொல்கிறான் பாருங்கள் சிறுவயதில் தான் ஒரு பாழும் கிணற்றில் விழுந்து திகைத்து முழித்து மீளத் தெரியாமல் அலறுவதாக.

ஒருவேளை அது குடி நோயில் இருந்து மீள முடியாமல் துடிப்பவர்களைச் சுட்டும் குறியீடோ...

1 comment:

  1. ஜெயமோகனின் டார்த்தீனியம் கதைகூட மீளமுடியாத பழக்கத்தின் குறியீட்டுக் கதை என்று கூறுவர்...

    ReplyDelete