Thursday, 3 July 2014

மைலாப்பூர் இடைத்தேர்தல்...

1994 ஆம் ஆண்டு மைலாப்பூரில் நடந்த இடைத்தேர்தல் பற்றிய பதிவுகளை, பார்ப்பவர்களின் மனதில் நிறுத்துகிறது. ஆர்.வி ரமணியின் “நமது சின்னம்” என்ற ஆவணப்படம்.

ஆர்.வி ரமணியின் இயக்கத்தில் கேமரா திட்டமிட்டு படமெடுக்காது.
ஒரு ஜோடி கண்கள் சுதந்திரமாக எப்படி அலைபாயுமோ அது மாதிரியே கேமரா அலைபாயும்.காட்சிகளும் கூட.

ஆனால் படத்தின் இறுதியில் ஏதோ ஒன்றை மனதில் ஏற்றி வைத்து விடுவார்.

பாவைக் கூத்து பற்றிய ஆவணப்படத்தில் வண்டியில் பாவைக்கூத்து நடத்தும் பொருட்களை ஏற்றி ஊர் ஊராக செல்லும் கலைஞர் ஒருவரைப் படம் பிடிக்கும் போது மழை பெய்தது.

சிவதாண்டவமான கொடுமழை அது.

அந்த மழையில் வண்டியிலிருந்து எல்லோரும் நனைகிறார்கள்.ஆர்.வி ரமணி அதையும் படம்பிடித்திருப்பார். ஒரு பாவைக் கூத்துக் கலைஞன் படும் அவஸ்த்தையை அதை விட கச்சிதமாக பார்ப்பவர் மனதில் பதிய வைக்க முடியாது இதுவே ஆர்.வீ.ஆரின் யுத்தி.

யதார்த்திலிருந்து காட்சிகளை உருவுவார்..

1.1994 மைலாப்பூர் இடைத்தேர்தலுக்கு முன்புதான் வைகோ திமுகவிலிருந்து பிரிந்து பல பிரச்சனைகள் வந்து,

மதிமுக உதயமாகிறது.மதிமுக வின் மாநாட்டு ஊர்வலமும் ஆவணப்படத்தில் வருகிறது. ராணுவ ஊர்வலம் போல வரும் இளைஞர்கள் கூட்டமது.மிகப்பெரிய எனர்ஜியை அன்று வைகோ வைத்திருந்திருக்கிறார் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி.

2.சுயேட்சை வேட்பாளர்கள் வரும் காட்சி சுவாரஸ்யமானது.ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு ஒரே ஒருவர் நிற்கும் படியான குட்டி மேடை போட அனுமதி கிடைக்கிறது.அவர் அதில் நின்று கொண்டு பேசுகிறார்.

யாருமே அதைக் கேட்கவில்லை.ஆனாலும் அவர் பேசுகிறார்.அவருக்கு காவலாக ஒரு போலீஸ்காரர் நிற்கிறார்.அப்படியே கார் பைக்கில் போகும் நபர்கள் பார்த்தால் சுயேட்சை “இங்க பாக்காதீங்க போய் கிட்டே இருங்க” என்று சொல்கிறார்.

3.இன்னொரு சுயேட்சை வேட்பாளர் சைக்கிளில் தனிஆளாக பயணம் செய்து பிரச்சாரம் செய்கிறார்.” மகக்ளே பணம் கொடுத்து பிரபலமாக இருப்பவரைத்தான் நீங்கள் அடையாளம் கண்டு கொள்கிறீர்கள்.அது தப்பான விசயமாகும்” என்று வேண்டுகோள் வைக்கிறார்.

4.அப்போது அதிமுகவின்ஆட்சி என்பதால் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய வரும் போது மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.பெண்கள் எல்லோரும் வீட்டு வாசலில் வரவேற்பு கோலங்களிட்டு ஜெயலலிதாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கின்றனர். முதல்வரிடம் மனுக்களைக் பொதுமக்கள் கொடுக்க பொறுமையாக வாங்கிக் கொள்கிறார்.

5.திருநாவுக்கரசர் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து ஜெயலலிதாவை தீவிரமாக எதிர்க்கிறார்.

6.கருணாநிதி தன் வழக்கமான கிண்டல் தொனியிலியே பேசுகிறார்.“ நான் உங்களை ஒட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொல்லவில்லை.ஆனால் பார்த்து வாங்குங்கள் என்றுதான் சொல்கிறேன்.அம்மையார் மூக்குத்தி கொடுத்து கொடுத்து ஒட்டு வாங்குவதாக கேள்விப்படுகிறேன். உங்களுக்கு லட்டு கொடுப்பது மாதிரி கொடுப்பார்கள். உள்ளே லட்டை உடைத்துப் பார்த்தீர்களானால் அதில் மூக்குத்தி இருக்கும்.அதாவது ஒரே விலையுள்ள மூக்குத்தி இருக்கமா என்று கேட்டால் இருக்காது. ஏழைகளுக்கு எளிய மூக்குதித்தி, இன்னும் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கு விலையுயர்ந்த மூக்குதியாம்.ஆகையால் உங்களுக்கு கிடைக்கும் லட்டை உடைத்துப் பார்த்து பின்பு ஏற்றுக் கொடுங்கள்” என்கிறார்

7.அதிமுக பாடகர் எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடுகிறார்.அதற்கு மகளிரணியினர் நடனம் ஆடுகிறார்கள்.அவர்கள் நடனத்தை எப்படி தொடங்குகிறார்கள் என்பதை மிக அழகாக ஆவணப்படத்தில் காட்டிருக்கிறார்.

8.வைகோ சேரிகளுக்கெல்லாம் சென்று வாக்கு சேகரிக்கிறார்.அப்போது ஒரு பெண் வைகோவிடம் “நல்ல பாத்ரூம் கட்டிக் குடுங்கய்யா.வயித்த கலக்கிச்சின்னா கோவில் பக்கமுள்ள பொது பாத்ரூமுக்கு போக வேண்டியதிருக்கு.பொம்பளைங்க நிலமையை யோசிச்சிப் பாருங்க என்று சொல்லும் போது பொது மக்களின் உண்மைநிலை தெளிவாகத் தெரிகிறது.

இந்தப் படத்தைப் பற்றி ஆர்.வி ரமணி பேசும் போது...

9.அம்மா பேசியதை படமெடுத்ததால் இரண்டு முறை கைது செய்தப்பட்டென்.அதன் பின் எச்சரித்து என்னை விட்டு விட்டார்கள்.

10.இந்த ஆவணப்படத்தை வைகோ கிட்ட போட்டுக் காட்டனும்ன்னு நினைக்கிறேன்.ஆனா அதுக்கான நேரம் இன்னும் வரல.

இந்திய மக்களுக்கு கொண்டாடுவதற்கு பலதும் இருக்கின்றன.

அதில் தேர்தலும் ஒன்று என்ற செய்தியைத்தான் நான் இந்த ஆவணப்படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.

1 comment: