Thursday, 3 July 2014

பூனை மருத்துவர்...

கிட்டத்தட்ட எண்பது வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் வாழ்ந்த, உலகின் முதல் ”பூனைகளின் மருத்துவர்” லூயிஸ்.ஜே.கமுட்டி (Louis j camuti) என்பவரின் சுவாரஸ்யமான நினைவுகளின் ஒரு பகுதி.

இப்போது டாக்டரே பேசுகிறார்.

//// என்னை சந்திக்கும் புதிய நண்பர்களும்,பூனைகளின் சொந்தக்காரர்களும் என்னிடம் தவறாமல் கேட்கும் கேள்வி “இந்தத் துறையை நீங்கள் விரும்பி எடுத்தீர்களா? அல்லது வாழ்க்கை இதை உங்கள் மீது திணித்ததா?.

நான் 1920 களில் இருந்து 1980 வரை பிராக்டிஸ் செய்துள்ளேன்.எனக்கு பிடிக்காத கேள்வி என்றால் இதுதான்.

சிறுவயதில் வீட்டில் இருக்கும் போது,ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் அம்மா, திடீரென்று வீட்டை விட்டு வெளியே ரோட்டுக்கு பாய்ந்தார்.

நாங்கள் பயந்து ஜன்னல் வழியே அம்மாவைப் பார்த்தோம்.

அங்கே ரோட்டில் குதிரையை சவுக்கால் அடித்துக் கொண்டிருந்த கட்டுமஸ்தான குதிரைக்காரனை நோக்கி அம்மா கத்திக் கொண்டிருந்தாள்.அம்மாவை விட அவன் மிக்க பலசாலி ஆனால் அம்மாவின் வெறிகொண்ட சத்தத்தால் அவன் அடங்கியிருந்தான்.

”எப்படி குதிரையை இப்படி அடிப்பாய்” என்று அம்மா அவனை குதிரை வண்டியோடு தள்ளி விட்டு அடித்து விட்டு வந்தாள்.வீட்டுக்கு வந்தும் கூட அம்மாவின் ஆவேசம் அடங்கவில்லை.

எங்களைப் பார்த்து சொன்னாள் “நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள்.”கடவுள் மனிதர்களையும் படைத்தார்.மிருகங்களையும் படைத்தார்.இருவரும் பரஸ்பரம் அமைதியாக வாழ வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம்.இதில் ஒருவருக்கருவொர் மேம்பட்டவர்கள் அல்ல.சமம்தான்.இதில் வலுவுள்ளர்கள் வலுவில்லாதவர்களை அன்போடு பாதுகாக்க வேண்டும்.ஒரு மிருகத்தை காயப்படுத்துவதைப் போன்ற கொடுமையும் பாவமும் உலகத்தில் கிடையாது”.

அம்மா சொன்னது எங்கள் மனதில் இறுகி ஒட்டிக்கொண்டது.ரோட்டில் செல்லும் போது பேஸ்பால் வீரர்கள் சிலர் ஒரு பூனைக்குட்டியை தூக்கி போட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு முறை அதை மேலே தூக்கிப் போடும் போதும் அது ”ஹேய்ங்” பயத்தில் கத்துவதை பார்த்து ரசித்து சிரிப்பார்கள்.நான் துணிந்து அவர்களிடமிருந்து அந்தப் பூனையை மீட்டு வீட்டுக்கு கொண்டுவந்தேன்.

அதற்கு ”சி-நின்” என்று பெயர் வைத்தோம்.முதல் இரண்டு நாட்கள் சி-நின் மனிதர்களைப் பார்த்தாலே பயந்து ஒடியது.அதன் பிறகு என் மீது நம்பிக்கை வைத்து என்னையே சுற்றிச் சுற்றி வந்தது சி-நின்.

நான் வீட்டுக்குள் நுழைந்ததுமே என்னை தொற்றிக் கொள்ளும்.என்னுடனே கட்டிலில் படுத்து தூங்கும்.சில சமயம் அதை செல்லமாக விரட்டியடிப்பேன்.ஒடும்.அடுத்த இரண்டு நிமிடத்தில் என்னருகே அமர்ந்து கொள்ளும்.

இந்தக் கட்டத்தில் திடீரென்று எனக்கு டைஃபாய்ட் ஜூரம் வந்து படுத்த படுக்கையானேன்.என் உடல் இளைத்து அசைக்கவே முடியாத நிலமைக்கு ஆளானேன்.

அப்போதெல்லாம் சி-நின் தான் எனக்கு துணை.என்னுடன் விளையாடிக்கொண்டே இருக்கும்.நான் ரொட்டியை பிய்த்து சாப்பிடப் போகும் போது அதை தட்டி பறிப்பது மாதிரி தன் பாதத்தை வீசுவது அதற்கு பிடித்த விளையாட்டு.

நான் படுத்த படுக்கையாய் சோர்வுடன் இருக்கும் நாளில், அம்மா ஸ்டவ்வில் ஏதோ சூப்பை வைத்து, தீயை பற்ற வைத்தாள்.

நான் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறேன்.

அம்மா ஸ்டவ்வை அணைக்க மறந்து,பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டாள்.

நன்றாக தூங்கிக் கொண்டிருந்த என் போர்வையை யாரோ இழுத்த உணர்வு வர, கஷ்டப்பட்டு கண் விழித்துப் பார்த்தேன். என் போர்வையை இழுத்து என்னை எழுப்பி கத்திக் கொண்டிருந்தது சி-நின்.

வீடெல்லாம் புகை மண்டலம்.என்னால் எழும்ப முடியவில்லை.இன்னும் ஐந்து நிமிடம் இந்த புகை மண்டலம் இருந்தால் நான் மூச்சு திணறி இறந்திருப்பேன்.நல்ல வேளை அம்மா துடித்து ஒடி வந்து ஸ்டவ்வை அணைத்து என்னைக் காப்பாற்றினாள்.

இந்த சம்பவத்தில் என்னைக் காப்பாற்றியது அம்மா என்றாலும். என்னைக் காப்பாற்ற முயன்ற சி-நின் நினைத்து மனம் உருகினேன்.

புகை மண்டலம் வரும் போது சி-நின் நினைத்தால் என்னை விட்டு வெளியே ஒடிப்போய் தன் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்.ஆனால் என் செல்லப்பூனை அதை செய்யாமல் என்னைப் பற்றி, என் உயிரைப்பற்றி கவலைப்பட்டது.

”சி-நின்”  பூனைகளுக்காக சேவை செய்யும் விதையை என்னுள் விதைத்திருக்கலாம்.

”நீங்கள் விரும்பியா பூனைகளுக்கு மருத்தவம் பார்க்கிறீர்கள்?” என்று யாராவது என்னிடம் கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்லுவதற்க்காக இரண்டு நிமிடங்களை வீணாக்கும் மனநிலையில் நானில்லை”.

"All my patients are under my bed" by Dr.Louis J. camuti  என்ற புத்தகத்தில் வரும் பகுதி....

No comments:

Post a Comment