Thursday, 3 July 2014

இருபத்தி மூன்று வயது கலக்கம்...

இருபத்தி மூன்று வயதில் ஒரு விசயத்திற்காக அழ வேண்டியதாய் போயிற்று.

அலுவலகத்தில் வேலை பார்த்த பெண்ணிடம் நட்பாயிருந்தேன்.

அவரை எனக்கு பிடிக்கும் என்றால் ரொம்பப் பிடிக்கும்.
அதை காதல் என்றே சொல்லலாம்.

என்னை விட மூன்று வயது அதிகம்.அடுத்து எனக்கு காதல் என்றெல்லாம் செய்து கமிட் ஆகிக் கொள்வதில் எப்போதும் விருப்பமிருந்ததில்லை.ஆனால் அந்தப் பெண்ணிடம் எமோசனலாக மாட்டிக்கொண்டேன்.

எப்போதும் அவரிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றும்.அவர் சாப்பிடும் போது கூட போய் பேசித் தொல்லை செய்வேன்.

அவருக்கும் என்னை பிடித்தே இருந்தது.மற்றவர்களை விட என்னிடம் அதிகம் பேசியது மாதிரிதான் அன்பாயிருந்தது மாதிரிதான் இருந்தது.

அந்தப் பெண்ணோடு காலேஜில் படித்த நிறைய நண்பர்களும், எங்கள் கூடவே வேலை பார்த்தார்கள்.

ஒருநாள் அந்த பெண் என்னைக் கூப்பிட்டு” குமார்  வீடு கிரகப்பிரவேசம் கொளத்தூர்லதான் நடக்குது.எனக்கு வழி தெரியாது.என்ன கூட்டிட்டு போறீங்களா? “ என்று கேட்டார்.

உடனே சரியென்று தலையசைத்தேன்.அந்த நிகழ்வை எண்ணி உள்ளமெல்லாம் பூரித்துக் கிடந்தேன்.

நான் பாதை வழி விசயத்தில் ரொம்ப வீக்.அதனால் முதன் நாளே அந்த நண்பர் வீடு வரைக்கும் சென்று வழியெல்லாம் எப்படி என்று பார்த்து வைத்துக் கொண்டேன்.

மறுநாள் காலை அவர் குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்புக்கு வர,ஆட்டோ பிடித்து நண்பர் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

அங்கே நாங்களிருவரும் ஒன்றாய் வாழ்த்தினோம்.ஒன்றாய் சாப்பிட்டோம்.இது மாதிரி ”ஒன்றாய்” என்பது என் மனதில் சொல்லமுடியாத கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது.

நானே அப்போது இல்லை.காற்றில் கரைந்தது மாதிரி உணர்வு.

அதன் பின் அண்ணா நகர் வந்து 24 ஏ வந்து பேசிக் கொண்டே அலுவலகம் வந்து சேர்ந்தோம்.அந்த டிராஃபிக்கில் ஒன்றரை மணி நேரம் பஸ் பிராயணம் போனதே தெரியவில்லை.

அவர் சிறுவயதிலிருந்தே தான் வாழ்ந்த வாழ்கையைப் பற்றி விளக்கமாக சொல்லிக் கொண்டு வந்தார்.இப்படி மனம் விட்டு பேசி நாளாச்சி என்றும் சொன்னார்.

நான் நெகிழ்ந்தேன்.இருவரும் அலுவலகம் வந்து சேர்ந்தோம்.

இங்கேதான் டுவிஸ்ட்.

அலுவலகம் வந்து சேர்ந்ததும், அவர் என்னைப் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நான் பார்த்து சிரித்தால்கூட சிரிக்கவில்லை.எனக்கு குழப்பம்.”பஸ்ஸில் பார்த்த ஆளா இவர்” என்று குழம்பிப் போனேன்.என்னால் அந்த திடீர் ஒதுக்குதலை தாங்க முடியவில்லை.

அன்று மதியம் ஒரு உருண்டை சோறு கூட  இறங்க வில்லை.மனசெல்லாம் இறுக்கி அடைத்த பஞ்சு மாதிரி இருந்தது.

ஏன் அப்படி? நான் எதாவது அவமானப்படுத்தி விட்டேனா? நான் ஏதாவது தவறுதலாய் சொல்லி விட்டேனா?

அன்று மாலை அவரிடம் சென்று கேட்டே விட்டேன்.

“ஏன் என் கிட்ட சரியா பேச மாட்டேங்கிறீங்க”

“இல்லையே நார்மலாத்தானே பேசுறேன்”

“இல்லையே ஒதுக்குனது மாதிரி இருக்குது”

“சரியா போச்சி அப்படியெல்லாம் நினைக்காதீங்க”

நான் உணர்வு பொங்க உளறினேன்.

“நான் உங்களுக்கு ஸ்பெசல்தானே”

“இல்லையே நான் பேசினேனே”

“மாத்தாதீங்க.நான் உங்களுக்கு ஸ்பெசலா ஸ்பெசல் இல்லையா? அதுக்கு பதில் சொல்லுங்க”

“அது என்னங்க ஸ்பெசல்.எல்லா ஃபிரண்ட்ஸு மாதிரி நீங்களும் ஒரு ஆள்தான்.ஸ்பெசல் எல்லாம் கிடையாது” என்று பளிச்சென்று சொல்லிவிட்டார்.

என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.போய் ரெஸ்ட் ரூமுக்கு சென்று கதவை தாழிட்டேன்.

“துள்ளாத மனமும் துள்ளும்” விஜய் போலெல்லாம் அழவில்லை.ஆனால் கண்களில் கண்ணீர்க் கொட்டிற்று.துடைக்க துடைக்க வந்தது.

என்னை யாரோ ஏமாற்றியது மாதிரி நினைத்தேன்.எனக்கு துரோகம் செய்ததாக நினைத்தேன்.

அதன் தொடர்ச்சியாக ஆணாதிக்க மன்ப்பான்மை அதிகமாகி ஒரு சபதம் எடுத்தேன்.அந்த சபதம் என்னவென்றால் “இனிமேல் பொண்ணுங்களுக்காக நாம் அழக் கூடாது.நாமதான் பொண்ணுங்கள அழ வைக்கனும்”.

இதெல்லாம் அடிமனதில் இருக்கும் ஆதிக்க மனப்பாண்மையிலிருந்து வந்ததுதான்.

அப்புறமும் அந்தப் பெண்ணிடமிருந்து விலக முடியாமல்,அவரைப்  பற்றி பேசி பேசியே நிறைய நண்பர்களை போரடித்தேன்.பின் காலப் போக்கில் எல்லாவற்றையும் மறந்து விட்டேன்.

ஆனால் இப்போது திருமணமாகி குழந்தையும் பெற்ற பிறகு,

அந்த சம்பவத்தை யோசித்தால், ஏன் அவர் என்னை கண்டு
கொள்ளவில்லை என்று நினைத்தால் அவர் மேல் வாஞ்சைதான் வருகிறது.

அவருடன் படித்த நண்பர்கள் எல்லோரும் கூடவே வேலை பார்க்கிறார்கள்.

அவர்களோடு கிரகப்பிரவேசத்துக்குப் போகாமல் என்னோடு வந்தததினால் மற்ற நண்பர்கள் ஏதாவது “கதை கட்டி விடுவார்களோ” என்ற பயத்தில் இருக்கலாம்.

அந்த ”கதை கட்டுதலுக்கு” பயந்து “பார் இவன் சிறுவன்.இவனோடு நான் பேசி குழைந்து சிர்க்கவெல்லாம் இல்லை.நான் விழாவுக்கு போனேன்.
வந்தேன்.அவ்வளவுதான்.வேறொன்றும் இல்லை” என்று நிருபிப்பதற்காக என்னை அவாய்ட் செய்திருக்கலாம்.

ஆம் அதற்குதான் செய்திருக்க வேண்டும்.

ஒரு ஆணுடன் தனியே ஒரு இடத்துக்கு சென்று வர, பெண் எத்தனை பேருக்கு தன்னை நிருபிக்க வேண்டியதிருக்கிறது.

அந்த கட்டுப்பாட்டால் அவள் என்னைப் போன்ற எத்தனை அப்பாவிகளின் மனங்களை காயப்படுத்த வேண்டியிருக்கிறது.

இருந்தாலும் அப்போது நான் அழுததை நினைத்தால் “பப்பி ஷேமாகத்தான்” இருக்கிறது :) :)

No comments:

Post a Comment