Thursday 3 July 2014

சிலருக்கு வாழ்க்கை செட் ஆகாது...

சிலருக்கு வாழ்க்கை செட்டாகாது.அப்படி செட்டாகவில்லை என்பதை திரும்பிப் பார்த்து உணர்ந்து கொள்ளும் போது வாழ்க்கை ஒடிவிட்டிருக்கும்.

கண்ணன் என்றொரு நண்பன் எனக்கிருந்தான்.

நானும் அவனும் ரெட்டேரியில் இருந்து ஒன்றாக பாலிடெக்னிக் செல்வோம்.நான் செண்டிரல் பாலிடெக்னிக் தரமணி.அவன் அம்பத்தூரில் இருந்த பாலிடெக்னிக்.

நாங்கள் இரண்டு பேரும் நண்பர்கள்.காரணம் அவனும் பிளஸ் டூ டூ டிப்ளமா.நானும் பிளஸ் டூ டிப்ளமா.

ிளஸ் டூ முடித்த பிறகு சக நண்பர்கள் எல்லோரும் பொறியியல் படிக்கும் போது நான் மட்டும் டிப்ளமோ படிப்பது பற்றி மிகுந்த கவலையும் விரக்தியையும் கொண்டிருந்த காலம்து.ஆனாலும் நான் டிப்ளமா வகுப்புகளுக்கு ஒழுங்காகப் போனேன்.

கண்ணன் போகவில்லை.” சின் சின் கொயந்த பசங்ககெல்லாம் இருக்கிறானுங்கடா.வெறுப்பாயிருக்கு” என்பான்.

”யாரு இருந்தா என்ன மச்சி.நீ ஒரு கோர்ஸ் படிக்க போற.அதப் படிச்சிட்டு வா.” என்பேன்.

ஆனாலும் சோம்பேறித்தனம்,அலட்சியம்,ஏதோ சொல்லத் தெரியாத வெறுப்பு எல்லாம் சூழ்ந்து காலேஜை கட் அடிக்க ஆரம்பித்தான்.

கண்ணன் காலேஜை கட் அடிப்பது வித்தியாசமானதாயிருக்கும்.நேரே வண்டலூர் சூவுக்கு சென்று விடுவான்.அங்கே தானியங்களை பறவைகளுக்கெல்லாம் போட்டு நாள் முழுவதும் வேடிக்கை பார்ப்பான்.மிருகங்களையும் பறவைகளையும் பற்றி பேசிக் கேட்கும்
போது அவன் குழந்தையுள்ளம் தெளிவாக விளங்கும்.

மதியம் வயிற்றை நிரப்ப அம்மா கட்டிக்கொடுத்த உணவு. வகுப்புகளை கட் அடிக்கிறான் என்று தெரிந்ததும் அவனை அதிகமாக திட்டுவேன்.

”மச்சி தப்பு பண்ற.சும்மா கிளாசுக்கு போய்ட்டு வாடா.நீ நூல லூஸ்ல விடுற மச்சி” என்று திரும்ப திரும்ப சொல்வேன்.

கேட்க மாட்டான்.டிப்ளமா முடித்தவுடன் எனக்கு வேலை கிடைத்தது.அவன் 12 அரியர்ஸ் வைத்திருந்தான்.

இதற்கிடையில் தம்மடிக்கவும் தண்ணியடிக்கவும் பழகியிருந்தான்.வீட்டில் சும்மாவே இருக்க போரடிக்கும்தானே.

தெருவில் இரண்டு மூன்று நண்பர்களைப் பெற்றிருந்தான்.அப்போதும் அவனை திட்டியிருக்கிறேன் “இவனுங்கல்லாம் யாரு.ஏண்டா வீட்ல யாரும் இல்லனா, கறி வாங்கிட்டு வந்து பொரிச்சி வெச்சி தண்ணியடிக்கிறது ஒரு வேலையா.நீ அரியர்ஸ் கிளியர் பண்ணு.இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல சரி பண்ணு” என்பேன்.

அதன் பிறகு என் வீட்டு மொட்டைமாடியில் பாடம் படிக்க வருவான். என்னால் முடிந்த மட்டும் அவனை தேற்றுவதற்கான காரியத்தை எடுத்துக் கொண்டேன்.

ஆறுமாதம் ஒழுங்காக இருந்தான்.அப்புறம் மறுபடியும் பழைய மாதிரி ஆகிவிட்டான்.” எனக்கு எதுவுமே செட்டாகாது மச்சி” இதுதான் கண்ணன் அடிக்கடி சொல்லும் வார்த்தை.

நான் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள ஆகிவிட்டிருந்தது.கண்ணன் ஒன்றிரண்டு சின்ன சின்ன வேலைகள் செய்தான்.ஆனால் செட் ஆகவில்லை என்று நின்று கொள்வான்.

வேலைக்கு சென்று திரும்பும் போது தெருமுனையில் அரட்டையடித்துக் கொண்டிருப்பான்.என்னைப் பார்த்ததும் கூப்பிடுவான்.அல்லது அவன் பிரிந்து என்னருகே வருவான்.

வந்து “மச்சி நீ அப்படியே ஆட்டோகேட் நல்லா கத்துக்க.அப்புறம் அப்படி ஹார்ட் ஒர்க் பண்ணி தொழில கத்துகிட்டன்னு வெச்சுக்க, டக்குன்னு ஃபாரின் போயிடலாம்.ஃபாரின் போய் பத்து வருசம் உழைச்சா போதும்டா கோடீஸ்வரன் மச்சி” என்று சொல்லுவான்.

கிட்டத்தட்ட அடுத்த மூன்று வருடங்கள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் இதே டயலாக்கை திரும்ப திரும்ப சொல்வான்.நான் ஒரு கர்ட்டஸிக்காக அதைக் கேட்டுக் கொள்வேன்.

ஒருநாள் பொறுமை தாங்க முடியாமல் வெடித்து விட்டேன்.

“கொய்யால மூடிட்டுப் போ.எனக்கு அட்வைஸ் பண்ணாத.நீ கோர்ஸ் ஒழுங்கா முடிச்சியா.டிஸ்கண்டினியூ தான.உங்க அப்பா இல்லாம் அம்மாதான வளத்தாங்க.உன் அண்ணன பாரு.உன் தங்கச்சிய பாரு.நீதாண்ட்டா வேஸ்டு.புடுங்கி மாதிரி பேசுற. என்னோட வேலை பத்தி உனக்கென்னாடா தெரியும் நொட்ட. சும்மா அட்வைஸ் மயிரெல்லாம் என்கிட்ட செய்யாத.எதாவது வேலை செய்ஞ்சி உருப்படுற வேலையைப் பாரு” என்று கத்திவிட்டேன்.

“இதோப்பாருடா கோவத்த” என்று கண்ணன் சிரித்தபடி என்னை சமாதானப்படுத்தினாலும் அவன் கண்கள் சோகமானதைப் பார்த்தேன்.

அதன் பிறகு கண்ணனை தவிர்க்க ஆரம்பித்தேன்.
பார்த்தால் ஒரு சிரிப்பு.அதோடு நிறுத்திக் கொண்டேன்.

பைக் வாங்கி பேங்கில் கலக்சன் செய்து கொடுக்கும் வேலை செய்தான்.புரோக்கர் வேலை செய்தான்.ஆனால் எதுவுமே அவனுக்கு செட் ஆகவில்லை.

அப்புறம் அவன் அம்மாவிடம் காசு வாங்கி கம்யூட்டர் செண்டர் வைத்தான்.அதைக் கேள்விப்பட்ட பிறகே நிம்மதியானேன்.எப்போதாவது அவனிடம் பேச நினைப்பேன்.

ஆனால் பைக்கில் வேகமாக கடந்து விடுவான்.அவனுக்குள் ஒரு ஆவேசம் வந்ததை ரசித்தேன்.

இரண்டு வருடங்கள் போனது.அதன் பின் எனக்கு ஹைதிராபாத்தில் வேலை கிடைத்தது.ஆறுமாதம் முடிந்த பிறகு இரவு ஒன்பது மணிவாக்கில் அம்மாவிடம் இருந்து போன்.

“யய்யா நம்ம கண்ணன் பையன் இருக்கான்ல.அவன் சூசைட் பண்ணிட்டானாம்.அவன் அம்மா எல்லோரும் ஒரே அழுகை.பாக்க பாவமா இருந்துச்சி.உன் கிட்ட சொல்லிரலாம்னு” .அம்மா அப்படி சொன்னது அதிர்ச்சி தாங்கமுடியவில்லை.

கண்ணன் ரொம்ப நல்லவன் என்பது எனக்குத் தெரியும்.எந்த தந்திரமும் அவனுக்கு கிடையாது.ஆனாலும் இப்படி ஆகிவிட்டானே என்று இரவு ரொம்ப நேரம் தூங்க முடியாமல் கிடந்து தூங்கினேன்.

அதிகாலை மூன்று மணிக்கு சிறுநீர் கழிக்க எழுந்திருக்கும் போது கண்ணனிடம் பேசுவதாக நினைத்துக் கொண்டு “சரி மச்சி போய்ட்டு வா.உனக்கு ஒண்ணுமே செட்டாகல.அடுத்த பிறவில பக்காவா வா.எல்லாமே நல்லதா நடக்கும் உனக்கு” என்று நினைத்தேன்.அதன் பிறகு தூங்க முடிந்தது.

எங்கள் ஊரில் “தட்டழிஞ்சி போறது” என்பார்கள். இப்படி எதுவுமே செட் ஆகாமல் இந்தியாவில் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள்.

அதனால்தான் எனக்கு சேரனின் மாயக்கண்ணாடி பிடிக்கும்.

அதில் சேரன் தட்டழிந்து போவதற்கான எல்லா முயற்சிகளயும் செய்வார்.இறுதிக் காட்சியில் ராதாரவி சொல்லும் வசனம் “எந்த தொழிலானாலும் அதில் குறைந்தது சில வருடங்களாவது இருக்க வேண்டும்.அப்போதுதான் அதைக் கற்றுக் கொள்ள முடியும்”

அதனால்தான் எனக்கு ”ஃபாரஸ்ட் கம்ப்” சினிமாவும் பிடிக்கும்.

கதாநாயகனுக்கென்று என்று எந்த விசேச திறமையும் கிடையாது.ஆனாலும் அவன் மகிழ்ச்சியாயிருப்பான்.

வாழ்க்கையில் முன்னேறுவான்.

காரணம் அவனுக்கு தட்டழிந்து போகத் தெரியாது.

ஒரு மிதக்கும் மரக்கட்டையாக ”வாழ்க்கை ஆறு” அவனை அடித்துச் செல்ல அனுமதிக்கிறான்.ஆனால் மூழ்குவதில்லை.

கண்ணன் ”ஃபாரஸ்ட் கம்ப்” பார்த்திருந்திருக்கலாம்.

3 comments:

  1. எதேச்சையாகத்தான் உங்க வலைப்பக்கம் தெரிந்தது... ரொம்ப நல்லா எழுதறிங்க... நண்பர் வாழ்க்கை சற்று சோகமான அதிர்வை தந்து விட்டது...

    ReplyDelete