Thursday, 3 July 2014

நாலு மந்திரிகள்....

தஞ்சை சரஸ்வதி மகால் வெளியீடாக வந்த சுவடி இலக்கியத்தின் ”நாலு மந்திரிகள் கதை”ப் பாடலின் கும்மி வடிவத்தின் கதையை மட்டும் படித்தேன்.கதை வருமாறு.

போதவாதித்தன்,போதவிபூஷணன்,போதவியாகரன், போதச்சந்திரன் என்று நான்கு நண்பர்கள் காட்டுவழியே நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அங்கே வழியில் ஒட்டகத்தின் கால்தடங்களை பார்க்கிறார்கள்.

கொஞ்ச தூரம் போனதும் அங்கே ஒட்டகத்தின் சொந்தக்காரன் அதை தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்து “நீ ஒட்டகத்தையா தேடிக்கொண்டிருக்கிறாய்.உன் ஒட்டகதுக்கு ஒரு கண் கிடையாதுதானே,அதன் வால் மிகவும் குட்டைதானே,அதன் ஒரு கால் ஊனம்தானே என்று நால்வரும் கேட்கிறார்கள்.

ஒட்டகக்காரனுக்கு ஆச்சர்யமாக போய்விட்டது.அவர்கள் சொன்னது அத்தனையும் உண்மை.அவர்கள்தான் திருடர்கள் என்று நால்வரையும் அரசவைக்கு கூப்பிடுகிறான்.அரசன் நால்வரையும் விசாரிக்கிறான்.

- ஆம் ஒட்டகம் ஒரு பக்கமாக புற்களை மேய்ந்திருந்தது.அதனால் அதன் ஒரு கண் பார்வையில்லை என்று கண்டுபிடித்தேன்

-ஆம் ஒட்டகம் போன பாதையில் ஒரு காலின் தடம் சரியாய் பதியவில்லை.அதனால் அது ஊனம் என்று கண்டுபிடித்தேன்.

-ஆம் ஒட்டகம் போன பாதையில் இருந்த ரத்தத்துளிகள்,ஒட்டகத்தை கடிக்கும் ஈயை விரட்ட முடியாத குட்டை வாலை சொல்லிற்று என்றான் ஒருவன்.

அரசன் இதைக்கேட்டு ”ஆஹா இவ்வளவு அறிவாளிகளா?”என்று ஒட்டகக்காரனுக்கு பொன் கொடுத்து அனுப்பிவிட்டு இந்த நான்கு பேர்களையும் மந்திரியாக்கி விட்டான்.

அவர்கள் நால்வரும் “நாலு மந்திரிகள்” என்று பெயர் பெற்றனர்.சீரும் சிறப்புமாக அரசனை நல்லாட்சி செய்ய வைத்தார்கள்.

ஒருநாள் போதவாதித்தன் அம்மனை வழிபடும் போது, ஒரு குரல் அன்றிரவு அரசனை சர்ப்பம் தீண்டும் என்று சொல்கிறது.

போதவாதித்தன் அரசனின் படுக்கை அறையில் ஒளிந்திருக்கிறான்.அங்கே பாம்பு அரசனை தீண்டும் முன் வாளால் வெட்டிக்கொள்கிறான்.

அப்போது பாம்பின் ரத்தத் துளி அரசியின் மார்பில் விழுகிறது.போதவாதித்தன் அதை தன் விரலால் துடைக்கிறான். துடைத்த விரலை வெட்டிவிடுகிறான்.

பாம்பையும் விரலை பத்திரப்படுத்தி வைக்கும் போது, அரசி முழித்து ”அய்யோ தொட்டானே பாவி இவன் என்னை” என்று அலறுகிறாள்.அரசன் விழித்து கொதிக்கிறான்.

போதவாதித்தனை கொல்ல நினைக்கிறான். கொல்வதற்கு முன்னால் போதச்சந்திரனிடம் அலோசனை கேட்கிறான்.

அதற்கு போதச்சந்திரன் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்க வேண்டுமென்று சொல்லி ஒரு கதையை சொல்கிறான்.

1.போதச்சந்திரன் அரசன் அழகேசனுக்கு சொன்ன கதை :

வேடனொருவன் காசில்லாத காரணத்தால் தன் விசுவாசமுள்ள நாயை செட்டியிடம் அடமானம் வைக்கிறான்.அந்தக் காசை எடுத்துக் கொண்டு வெளியூருக்கு கடனை அடைக்கப் போகிறான்.

நாயை வீட்டில் வைத்து செட்டியும் வெளியூருக்கு வியாபாரம் பார்க்க போகிறான். இங்கே வீட்டில் செட்டியின் மனைவி இன்னொரு ஆணோடு தொடர்பு வைத்திருக்கிறாள்.

நாய் இதை கவனித்துக் கொண்டிருக்கிறது.ஒருநாள் அவனை கடித்து கொன்று விடுகிறது.வெளியே தெரிந்தால் பிரச்சனை என்று செட்டியின் மனைவி காதலனை வீட்டின் பின்புறமே புதைத்து வைக்கிறாள்.ஆனால் செட்டி வெளியூரிலிருந்து வந்ததும் நாய் காட்டிக்கொடுக்கிறது அந்த புதைத்த இடத்தை.செட்டி மனைவியை விரட்டுகிறான்.

நாயின் விசுவாசம் கண்டு வியந்து போகிறான்.”உனக்கு சிறை கிடையாது விடுதலை.நீ உன் எஜமானன் வேடனிடமே போ” என்று செல்லமாக அனுப்பிறான்.நாயும் மகிழ்ச்சியுடன் வேடனை பார்க்கப் போகிறது.

அப்போதுதான் வெளியூரிலிருந்து திரும்பும் வேடன் நாயைப் பார்த்ததும் “அட நாயே உன்னை அங்கு அடமானம் வைத்தால் செட்டியை ஏமாற்றிவிட்டா வருகிறாய் என்று நாயைக் கொல்கிறான்.

பின்னர் உண்மை தெரிந்து வருத்தப்பட்டு தற்கொலை செய்துகொள்கிறான்.இதைப்பார்த்த செட்டி தானும் தற்கொலை செய்கிறான்.ஆகவே எதையும் ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது என்கிறான்.

அரசன் அடுத்து போதவிபூஷணனிடம் கேட்கிறான்.

2. போதவிபூஷணன் அரசனுக்கு சொன்ன கதை :

காட்டில் குருட்டு (கதை குருடு என்று வருவதால் அப்படியே சொல்லியிருக்கிறேன்) கணவனோடு வருவது பற்றி சலிப்படைந்த சுயநலக்காரி ஒருவள்,வேறொரு ஆணை கண்காட்டி அவனுடன் போய் விடுகிறாள்.

குருடன் அடர் காட்டில் தவித்து திகைத்து நிற்கையில் அங்கே ஒரு செட்டியும் அவள் மனைவியும் வருகிறார்கள்.குருடன் கதையைக் கேட்டு செட்டி மனைவியை குருடன் கையை பிடித்துக் கொள்ளும்படி சொல்கிறான்.

அவளும் அவன் கைகளைப் பிடித்து காட்டு வழியில் கூட்டிப்போகிறாள்.செட்டி மூட்டைகளை தூக்கி வருகிறான்.நகரத்துக்கு வந்ததும் குருடன் மனம் மாறிவிட்டது.பொய் சொல்கிறான்.

செட்டியின் மனைவியை ”தன் மனைவி” என்று சொல்லி அழுகிறான்.குருடன் கைகளை செட்டியின் மனைவி பிடித்திருந்ததைப் பார்த்து ஊர்மக்களும் அவள் குருடன் மனைவி என்று நினைத்து விடுகிறார்கள்.அரசனும் அதை நம்பி செட்டியை கொல்ல ஆணையிடுகிறான்.

ஆனால் குருடன் அன்றிரவு மனசாட்சியின் தொல்லை தாங்காமல் தனியே தான் செய்த தவறை சொல்லிப் புலம்ப மாட்டிக்கொண்டான்.அநியாயமாக செட்டியைக் கொல்ல பார்த்தோமே என்று சொல்லி அரசன் இறந்து விடுகிறான்.

ஆகவே எதையும் ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது என்கிறான்.

அரசன் அடுத்து போதவியாகரனிடன் கேட்கிறான்.

3.போதவியாகரன் அரசனுக்கு சொன்ன கதை:

வானத்து பட்சி ஒன்று வெளியிலிருந்து மாம்பழம் பறித்து வருவதைப்பார்த்த குடியானவன் அந்த மாம்பழத்தின் விசேஷம் பற்றி கேட்கிறான்.

பட்சி சொல்கிறது “அதை உண்டால் இளமை வரும்” என்று.”அப்படியானால் எனக்கும் ஒன்று வேண்டும் “ என்று கேட்க,

பட்சி பழத்தை கொடுக்க, இதை அரசனுக்கு கொடுப்பேன் என்று சொல்லி அரசனுக்கு கொடுக்க,

அரசன் “இதை சாப்பிடாமல் முளைக்க வைத்தால்,நிறைய பழம் கிடைக்குமே “ என்று சொல்லி முளைக்கப் போட்டான்.

விதை முளைத்து மரம் விரிந்தது.

மாங்கனிகள் பழுத்தன.அதில் ஒரு கனியில் நாகம் விசத்தைக் கக்கி வைக்க, துரதிஷ்டவசமாக அந்த விஷக்கனியை அரசன் பறித்து அவன் உண்ணாமல் அவனுடைய வயதான குருவுக்கு கொடுக்கிறான்.

குரு அதை உண்டு இறந்து விட,அரசன கோபம் கொண்டு குடியானவனை அடித்து நாட்டை விட்டு விரட்ட, குடியானவன் விஷப் பழத்தைக் கொடுத்த பட்சியை வெட்டிக்கொல்கிறான்.

மற்றொரு நாள், நாட்டில் உள்ள ஒரு மாமியார் மருமகளுக்கு சண்டை வருகிறது.தற்கொலை செய்வதற்காக மாமியார் விஷமரம் என்று சொல்லப்படும் அந்த மரத்தில் இரு பழத்தை எடுத்து உண்கிறாள்.இளமையாகி விடுகிறாள்.

இதைக்கண்ட அரசன்,தான் கொடுத்த கனி மட்டுமே விஷம்.எல்லாக் கனிகளும் இல்லை என்று வேதனைப்பட்டு உயிர் துறக்கிறான்.

அரசனைக் கொன்றுவிட்டோமே,பட்சியை கொன்று விட்டோமே என்று சொல்லி குடியானவனும் உயிர் துறக்கிறான்.

ஆகவே எதையும் ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது என்கிறான்.

முடிவில் போதவாதித்தியன் தன் விரலையும் வெட்டப்பட்ட பாம்பையும் அரசனுக்கு காட்டுகிறான்.

அதைக் கண்ட அரசன் ”நானும் உன்னை தவறாக நினைத்து கொல்லப்பார்த்தேனே” என்று சொல்லி வருந்துகிறார்ன்.

எந்த விசயத்தையும் ஆராயாமல் முடிவெடுக்கக் கூடாது என்பதைத்தான் நாலு மந்திரிகள் கதை சொல்கிறது.

No comments:

Post a Comment