Thursday 3 July 2014

”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்”

”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” பற்றி எழுத வேண்டும் போல இருந்துச்சி பாத்துக்கோங்க.எந்த அளவுக்கு சரியா வந்திருக்குன்னு தெரியல... ஃபேஸ்புக்தானே...போடுவோம்... என்ன இப்ப ? :)

தெனாலிராமன் எப்படியிருந்தாலும் அது நல்ல படம் என்றே எல்லோரும் சொல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

காரணம் மக்களின் பரிதாபமும் அன்பும் இப்போது வடிவேலு மேல் இருக்கிறது.சமுதாயம் தனிமனிதை தூக்கும் விதமும்,பின் அவனை கிழே போட்டு மிதிக்கும் விதமும் ஆச்சரியமானது.

சமுதாயம் என்பது ”மாபெரும் தனிமனிதனாக” தன்னை கற்பனை செய்துகொண்டு,வளரும் தனிமனிதனோடு தன்னை ஒப்பிட்டுக் கொள்கிறது என்றே நினைக்கிறேன்.

சிவகார்த்திகேயன் வளர்கிறார்.வளரும் போது ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” நினைக்கிறான் “ஐயோ பாவம்! பொழைச்சிப்போகட்டும். சிவகார்த்திகேயன்தானே முன்னேறட்டும் முன்னேறட்டும்.

அதே சிவகார்த்திகேயன் முன்னேறி ஒரு ஸ்டாராக வந்து விடுகிறார்.அறிமுகப்பாட்டெல்லாம் வைத்து குத்தி எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதனுக்கு” பொறாமை வந்து விடுகிறது.விமர்சனத்தை தாண்டிய கூரிய கிண்டலால் அந்த வளரும் தனிமனிதனை இறக்கப் பார்க்கிறது.அல்லது அவனுடைய வீழ்ச்சிக்காக காத்திருக்கிறது.

சரி.

”வளரும் தனிமனிதன்” இந்த ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதனை” எப்படி சமாளிக்க வேண்டும்.

1.பணிவு வேண்டும்.உண்மையான பணிவாக இருந்தால் நன்று.அது மட்டும் போதாது.அந்தப் பணிவை மற்றவர்கள் பேசுவது மாதிரி விளம்பரம் செய்யத் தெரியவேண்டும்.சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர் ரஹ்மான் போன்றோர்கள் நல்ல உதாரணங்கள்.என்றாவது நாம் இவர்கள் வீழ வேண்டும் என்று நினைத்திருப்போமா? நினைத்திருக்கவே மாட்டோம்.காரணம் அவர்களின் பணிவு.

கங்கூலியின் வீழ்ச்சிக்காக நாடே காத்திருந்தது ஞாபகத்திற்கு வருகிறது.கங்கூலி தன் பேட்டிங் கிட்டை கூட தன் கையால் கிரவுண்டுக்கு தூக்கிவர மாட்டார்  என்ற செய்திகளை இதழ்கள் வெளியிட்ட போது ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” என்ன நினைத்தான் “கொய்யால கங்கூலி.அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீ” என்று அவருடைய வீழ்ச்சியை எதிர் நோக்க ஆரம்பித்தான்.

2.தேவையில்லாத வார்த்தைகளைப் பேசாமல் இருப்பது. சசிதரூர் ”கேட்டில் கிளாஸ்” என்று சாதரணமாக சொன்னதை “மாட்டுக்கொட்டகை” என்று எடுத்துக் கொண்டு,”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” பெரியதாக்கி வேதனைப்பட்டது தெரியும்தானே.சசி தரூர் அதை சொன்னதால் பெரிய பிரச்சனையில்லை.ஆனால் சொல்லாமல் இருந்திருந்தால் ”சமுதாயம் என்னுன் மாபெரும் தனிமனிதனுக்கு” அது பிடிக்கும்தானே.தேவையில்லாத வார்த்தைகளை ”வளரும் தனிமனிதர்”கள் பேசாமல் இருத்தல் வேண்டும்.

3.தன்னுடன் வளரும் மற்ற தனி மனிதர்களை பகைத்துக் கொள்ளாமை வேண்டும். இதற்கு சிறந்த உதாரணம் ஜெயம் ரவி,விஷால்,ஆர்யா,சூர்யா,தனுஷ்  போன்ற நடிகர்கள்தான்.எல்லோரும் எல்லாரைப் பற்றியும் புகழ்வார்கள்.அவரா அவர் நல்லா நடிப்பார்.இவரா இவரும் நல்லா நடிப்பார்..வளரும் போது இது முக்கியம்.யாரையும் பகைத்துக் கொள்ளல் கூடாது.ஏனென்றால் ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” இவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.ஒருவேளை ”அட என்னப்பா அவன் நடிக்கிறான் நல்லாயில்லை” என்று உண்மையைச் சொன்னால் அதை ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” விரும்புவதில்லை.அன்பாவாகவே பாவனை செய்வது முக்கியம்.

4.வளரும் தனிமனிதன் தன் பாலுணர்வு சார்ந்த இச்சைகளை “சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதனுக்கு” தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதனுக்கு” யார் மீதாவாது செக்ஸ் கிசுகிசு வந்தால் அது பிடிக்காது.கடுமையான கோபம் கொள்வான் இந்த “சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்”. அதனால் வளரும் தனிமனிதனுக்கு தன்னுடைய ஆதரவை நிறுத்தி விடுகிறான்.

இதையெல்லாம் “வளரும் தனிமனிதன்” கவனிக்க வேண்டும்.

இன்னும் கொஞ்சம் பார்ப்போம் இந்த ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதனின்” குணாம்சத்தை

A.இந்த ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” எப்போது யார் மேல் பரிதாபப்படுகிறான் என்றே தெரியாது.சஞ்சை தத்,சல்மான்கான் ஜெயிலில் சப்பாத்தியும் கீரையும் சாப்பிட்டார்கள் என்பதைக் கேட்டு கண்ணீர் வடிக்கிறான்.அவர் செய்த மற்ற  காரியங்களை அப்படியே மறந்து விடுகிறான்.வசதியானவர்கள் செய்யும் தப்பு,தவறுகளைக் கண்டு ஆவேசம் கொள்கிறான்.ஆனால் ஜெயிலில் அவர்களுக்கு “வெறும் சப்பாத்திதானா உணவு” என்று பரிதாபமும் அடைகிறான்.

B.இறந்தவர்களுக்கு நல்லவர்,திறமையானவர் என்று பட்டம் கொடுக்கிறான்.யாராவது அவரை விமர்சித்தால் அவனை பிடிப்பதில்லை ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதனுக்கு”."ஒரு மனித நேயம் கிடையாதா உனக்கு" என்கிறான்.

C.இளையராஜா பாடல்களிலும் சில காப்பியெல்லாம் இருக்கத்தான் செய்கிறது என்று சொன்னால், “அப்படியானால் நீ இசையமைத்துக் காட்டு பார்க்கலாம்.அவர் இசைக்கடவுள்.உன் வயதென்ன அவர் வயதென்ன.அவர் தெய்வீகமானவர்” என்று அடித்துப் பேசுகிறான் இந்த ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்”.

D.ரத்தமும் சதையுமாய் குறைவு நிறைவுகளோடு வாழ்ந்து இறந்து போன அறிவாளிகளின் கருத்துக்களை படித்து விவாதித்து விமர்சித்து தன் அறிவை வளர்த்துக் கொள்ளாமல்,அதே அறிவாளிகளை தெய்வமாக்கி வழிபடுகிறான்.அவர்களுக்கு பூ,பழம்,பத்தி எல்லாம் காட்டி வழிபடுகிறான்.இது ஏன்யா என்று கேட்டால் “அவர் தெய்வம், அவரை அறிவாளி என்று சொல்லாதே” என்று கடிந்து கொள்கிறான் இந்த ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்”.

E.சபையில் வயதான கிளாசிக் ஆளுமைகள் நுழைந்தால் இந்த ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” அடிமைபோல எழுந்து நிற்கிறான்.மிதமிஞ்சிய பாவனை மரியாதை அவனிடம் இருக்கிறது.அந்த கிளாசிக் வயதான ஆளுமைகளுக்கு விருது கொடுக்கும் போதும் எழுந்து நிற்கிறான் இந்த ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்”. கூச்சமேயில்லாமல் எல்லோரும் எழுந்து நிறக வேண்டும் என்று தர்மசங்கடமும் படுத்துகிறான் இந்த “சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்”.

இப்படி நிறைய சொல்லலாம் இந்த “சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” பற்றி... :) :)

4 comments:

  1. இந்தச் சமுதாயமெனும் மாபெரும் தனிமனிதன் பற்றி யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது..

    ReplyDelete
  2. ஆஹா, சாகா வரம் பெற்றவன் போல இருக்கே இந்த “சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” :) :) Its written in 2014 and i enjoy reading it in 2017 :) And hope someone will find it more interesting many years later too :) Nicely compiled!!!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete