Thursday, 3 July 2014

ஆவிகட்டுதல் என்ற கட்டிப்பிடித்தல்....

அணைத்துக் கொள்ளுதல், அல்லது இறுக்கக் கட்டிப் பிடித்தலை ஊர் பக்கம் “ஆவி கட்டுதல்” என்பார்கள்.

அப்படியே ”அவள ஆவிகட்டிகிட்டேன்” என்று சொன்னால் காற்று கூட புக முடியாத படி கட்டிபிடித்துக் கொண்டேன் என்று அர்த்தம்.

அந்த காலத்தில்,எங்கள் ஊரில் ,ஆண்கள் கொழும்புவுக்கு போய் சம்பாதிப்பார்களாம்.ஆறு மாதம் ஒருமுறை ஊருக்கு திரும்பி இரண்டு மாதம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு பின் மறுபடியும் கொழும்புவுக்கு சென்று வியாபாரம் செய்வார்களாம்.

அப்படி ஒரு ஆண் ஆறுமாதம் கழித்து ஊருக்கு வரும் போது, கூட்டுக்குடும்பத்தில் உள்ள அவர் மனைவி ”வளவில் ரெஸ்ட் எடுக்கும் கணவனுக்கு” அடிக்கடி காபி கொடுப்பதும்,அவித்த சிறுபயிறைக்கொடுப்பதுமாய் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்திருக்கிறார்.

இது மாமியாருக்கு பிடிக்கவில்லை.ஊர் பக்கம் இது மாதிரி நிறைய மாமியார்களைப் பார்க்கலாம்.மருமகளைப் பிடித்து ஏசியிருக்கிறார்.

“நீ என்ன எப்பவும் அவனையே சுத்தி சுத்தி வந்திட்டிருக்க.வேலை செய்”

“யத்தே அவிய தான் காபி கேக்குறாவ.அதான் காபிகூட்டும் காபியும் கொடுத்தேன்.”

இப்போது மாமியார் எல்லார் முன்னாலும் கத்துகிறார்

“நீ அவனுக்கு காபிக்குடுக்கவா போற. அப்படியே ஆவிகட்டிக்கிடலாம்ன்னுதான போறா”

இதைக்கேட்டு மருமகளுக்கு அவமானமாகப் போய்விட்டது.இருந்தாலும் மருமகள் அசரவில்லை.மாமியார் சொன்ன அதே ஸ்பீடில் ரிப்பீட் அடிக்கிறார் இப்படி.

“யத்த! நீங்கள்லாம் மாமாவ ஆவிகட்டாமத்தான் அஞ்சு பிள்ளையள் பெத்தியளோ”

மாமியார் பதிலே சொல்லாமல் இடத்தைக் காலி செய்கிறார்.

”ஆவிகட்டுதல்” 

No comments:

Post a Comment