Saturday 29 June 2013

ஊர்பேச்சு

ஊர்பேச்சு என்ற விசயம் எல்லோரையும் பயமுறுத்தும் ஆயுதம். ”அவன் அவள வெச்சிகிட்டுருக்கான்.”” அவ கொஞ்சம் அப்படி இப்படி” போன்ற விசயங்கள் சர்வ சாதரணமாக, உண்மையா? பொய்யா? என்று தெரியாமல் பேசப் படுகின்றன.

இருபத்தியோரு வயதில் வேலைக்கு போகும் போது என்னுடன் வேலை பார்த்த நாற்பது வயது அன்பரிடம் நிறைய பேசுவேன். அவரும் நானும் பாலகுமாரன் ரசிகர்கள்.

ஆனால் அலுவலகத்தில் மற்றவர்கள் “அவர்கிட்ட பேசாத அவரு ஹோமோ” என்று கிண்டல் செய்வார்கள். அவருக்கு நாற்பது வயதாகியும் திருமணம் செய்யாததால் அப்படி சும்மானாச்சுக்கும் எல்லோரும் பேசி பேசி அவருக்கு அந்த முத்திரை குத்தி விட்டனர்.

அண்ணன் திருச்சூரில் மெடிக்கல் கோச்சிங்கிளாஸ் படிக்கும் போது அவனிருந்த வீட்டை சுற்றி நிறைய குடும்பபெண்களின் கணவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள்.

அதனால் அவர்கள் யாரும் பேச்சிலர்களிடம் பேசுவதே இல்லை. எதாவது உதவி கேட்டால் கூட சட்டென்று முகத்தில் அடித்தாற் போன்ற பதில்.

அண்ணனின் நண்பன் பொறுக்க முடியாமல், இரண்டு பெண்கள் காலையில் கோயிலுக்கு போகும் போது கேட்டுவிட்டானாம். “ஏங்க அவசரத்துக்கு ஒண்ணு கேட்டா கூட இப்படி இன்சல்ட் செய்றீங்க” என்று.

அதற்கு அந்தப் பெண்கள் எங்களுடைய எல்லா அசைவுகளும் எல்லோராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. நான் உங்களிடம் பேசினால்,பக்கத்து வீட்டுப்பெண் ஃபாரினில் அவள் கணவனிடம் சொல்லிவிடுவாள். அவள் கணவன் என் கணவனிடம்.அப்புறம் பிரச்சனைதான் வரும்” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.

பெண்களை பாலுறுப்புகளின் கோர்வையாக,அல்லது மாபெரும் யோனியாக பார்க்கும் அவலம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

சமூகத்தை மாற்ற முடியாது என்ற கோட்பாட்டில், எப்படி பண்பாட்டில் சில பழக்க வழக்கத்தை செய்வது மூலம், சமூகத்தினரின் அவபேச்சிலிருந்து தப்பலாம் என்று யோசித்து நம் முன்னோர்கள் சில சம்பிரதாயங்களை செய்துள்ளனர்.

அதில் ஒன்றைப் பார்ப்போம்.

தொ.பரமசிவன் எழுதிய “பண்பாட்டு அசைவுகள்” என்ற புத்தகத்தில் ஒரு விசயம் வருகிறது.

ஆசிரியர் பரமசிவன்( அவர் இளம் வயதாய் இருக்கும் போது இருக்கலாம்) நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறிய நகரத்தில், ஒரு சாவு வீட்டுக்கு செல்கிறார்.

இறந்தவரின் வயது இருபத்தியெட்டு. மூன்று வயதில் ஒரு பெண்குழந்தை இருக்கிறது.

ஒரே அழுகை. பிற்பகலில் உடலை எடுக்க வேண்டும் என்ற பேச்சாயிருந்தது. 

அந்த இளைஞனின் உடலை எடுக்கும் முன்னர், மூதாட்டி ஒருவர் கையில் சொம்போடு. சொம்பில் நிறைந்த நீரோடு வந்தார். 

சொம்பை தரையில் வைத்து ’ஒரே ஒரு’ பிச்சிப்பூவை சொம்பில் போட்டு தூக்கிக்காட்டினார்.

கூட்டம் பரிதாபப்பட்டது.

அடுத்து இரண்டாவது பிச்சிப்பூவையும் போட்டு சொம்பை தூக்கிக்காட்டினார்.

அடுத்து மூன்றாவதையும் காட்டி பின் உள்ளே சென்று விடுகிறார்.

மூன்றாவதை காட்டும் போது கூட்டம் மிகவும் பரிதாபப் படுகிறது. சிலர் அழுகிறார்கள்.

பரமசிவன் பக்கத்தில் பெரியவரிடம் கேட்கிறார் “அந்த பாட்டி என்ன பண்றாங்க்”

“இது தெரியலையா உனக்கு, தாலி அறுக்குற பொம்பளபுள்ள மூணுமாசம் முழுகாம இருக்கு.அத எல்லோருக்கும் ’மூணு ’பிச்சிப் பூ போட்டு காட்டுறாங்க”

“அந்த பிள்ள முழுகாம இருக்கிறத ஏன் ஊருக்கு சொல்லனும்” இது பரமசிவன்.

இதைக் கேட்ட இன்னொரு பெரியவர் எரிச்சலோடு இடைமறித்து கேட்டார் “பேரப்புள்ள, ஏழு மாசம் கழிச்சு அவபுள்ள பெத்தா நீ கேக்க மாட்டியா, எப்படி புள்ள வந்துச்சுன்னு”

ஒரு சடங்கு , எப்போதும் பெண்ணின் அந்தரங்த்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும் சமூகத்தின் சந்தேகங்களை தீர்த்து விடுகிறது.

1 comment:

  1. ஊமைச் செந்நாய் கதையில் அடுத்தடுத்து மூன்று பாலுறவுகளை( துரை,தோமா,ஊ.செந்நாய்) சந்திக்கும் பெண்தான் நினைவுக்கு வருகிறாள்.ஆனால் எவ்வளவு முயன்றும் அப்பெண்ணின் பெயர் மட்டும் குழப்பமாகவே (செல்வி?செல்லி? சாந்தி?) உள்ளதால் நானும் பெண்ணை அவளது பாலுறவுச் சூழல்களைப் பார்த்து மட்டுமே பரவசமடையும் ஒரு மிகச் சராசரியான ஆண்தான் என்ற உண்மை இந்தக் கமெண்ட் எழுதும் நேரத்தில் புலனாகி என்னைச் சுடுகிறது…!

    ReplyDelete