Monday 7 March 2016

கிருஷ்ண கோபாலின் சிறுகதைத் தொகுப்பு

31/01/2016  பனுவலில் நடந்த எழுத்தாளர் கிருஷ்ண கோபாலின் சிறுகதைத் தொகுப்பு பற்றிய கலந்துரையாடலில் குறைந்தவர்கள் கலந்து கொண்டாலும் நிறைவாக இருந்தது.
அப்பண்ண சாமி, வெளிரங்கராஜன், பாரதி செல்வா, மற்றும் நான் என்று அனைவரும் அனைத்துக் கதைகளைப் பற்றியும் எங்கள் கருத்துக்களைப் பேசினோம்.
பாரதி செல்வா மிக அருமையாக பேசினார்.
அக்கதைத் தொகுப்பில் வரும் ”எழுத்தாளனின் மனைவி” கதை என்ற கதையைச் சொல்லி அதில் எனக்கு கருத்து வேறுபாடிருக்கிறது என்று சொன்னேன்.
நூறு வருஷத்துக்கு முன்னரும் எழுத்தாளனின் மனைவி எழுத்தாளனால் கிண்டல் செய்யப்படுகிறாள். இப்போதும் அப்படித்தான் சிறுகதைகள் வருகின்றன.
ஏன் இதில் அந்த மனைவி பக்கம் இருந்து எந்த பார்வையுமில்லையா? என்றேன்.
ஒரு பெண்ணை சதா குடும்ப வலையில் தந்திரமாக சிக்க வைத்து விட்டால் அதற்குள்தானே அவள் பங்காற்ற முடியும் என்றேன்.
அதைத்தொடர்ந்து பாரதி செல்வாவும் பிடித்துக் கொண்டார்
“பொதுவாக உலகையே அன்பு மயமாக சமத்துவமாக பார்ப்பவர்கள் கூட வீட்டில் ஒரு ஜீவன் இருக்கிறதே. அவளுக்கு என் கஷ்டம் என்ற பார்க்கத் தவறிவிட்டதை நாம் இன்னும் சுட்டிக் காட்டவே இல்லை” என்ற ரீதியில் மிக அருமையாக பேசினார்.
கிருஷ்ண கோபாலில் மற்ற கதைகளில் தெரியும் முற்போக்கை ரசித்துக் கொண்டிருக்கும் போது இந்த இறுதி சிறுகதை கொஞ்சம் நெருடுகிறது என்றேன்.
அது எழுத்தாளனின் நேர்மையைக் குறிக்கிறது என்பது கிருஷ்ண கோபாலின் வாதம்.
கிருஷ்ண கோபாலின் எழுத்து நடை சுந்தர ராமசாமியின் நடையை ஒட்டி இருக்கிறது என்றேன்.
அதனாலேயே அவர் கதைகளுக்குள் எளிதாக ஒன்றி விட முடிகிறது என்றேன்.
எப்படி விலங்குப் பண்ணை நாவலை வாழ்க்கையின் எல்லா தருணங்களுக்கும் பொருத்திக் கொள்ள முடிகிறதோ அது மாதிரி கிருஷ்ண கோபாலின் சில கதைகளை எந்த ஒரு வாழ்க்கை நிகழுக்கும் பொருத்திக் கொள்ள முடிவது அதன் சிறப்பு என்று பேசினேன்.
எழுத்தாளர்கள் வட்டார வழக்கை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவார்கள்.
எப்படி இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் சில பம்பாஸ்டிக்கான வார்த்தைகளை நடுவே எழுதுவார்களோ, அது மாதிரி வட்டார வழக்கை அதிகப்படியாக திணிப்பவர்கள் மாதிரியான போக்கை விட்டு
தேவைப்பட்ட இடத்தில் மட்டும் வட்டாரச்சொற்களை எழுதியிருப்பது இவர் எழுத்தின் சிறப்பாக பார்க்கிறேன் என்றேன்.
ஆங்கிலத்தில் நன்றாக எழுதபட்ட ஒரு சிறுகதையை தமிழில் மொழிபெயத்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு வாசிப்பு உணர்வை கொடுத்தது என்றேன்.
சமீப காலத்தில் மொழி நடை பற்றிய மிகப்பெரிய குழப்பம் இளம் எழுத்தாளர்களிடம் இருக்கிறது. ஆனால் கிருஷ்ண கோபாலிடம் அந்த நுட்பம் பற்றிய தெளிவு இருக்கிறது என்றேன்.
ஏன் கொஞ்சம் இடது சாரி பார்வையுடைவர்கள் எழுதினாலே நெகிழ்ச்சியை மறுக்கிறீர்கள். நெகிழ்ச்சியாக எழுதக்கூடாது என்றொரு சட்டம் வைத்திருக்கிறீர்களா?
அல்லது நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் கண்கலங்கவே இல்லையா?
ஏன் அறிவுப்பூர்வமாக எழுதுபவர்கள் அனைவரும் அதை சாமர்த்தியமாக தவிர்க்கிறீர்கள் என்ற கேள்வியை வைத்தேன்.
இப்படியாக பல வாதப் பிரதிவாதங்களோடு மனநிறைவான நிகழ்வாக முடிந்தது.
கூட்டம் தொடங்குவதற்கு முன் பாரதி செல்வா, ராணி கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருக்கும் போது
பாரதி செல்வா “நீங்கள் சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை நாவல் பற்றிய விமர்சனத்தை பேசிய விதமும் கருத்துக்களும் எனக்கு பிடித்திருந்தது. அது சரியானதும் கூட” என்றார்.
அவருக்கு மகிழ்ச்சியான நன்றியைக் கூறினேன்.
’ஆடி மாதமும் வயலின் இசையும்’ சிறுகதைத் தொகுப்பு
தாலம் வெளியீடு
எழுதியவர் கிருஷ்ண கோபால்.

No comments:

Post a Comment