Sunday 7 June 2015

சுவப்னவாஸவதத்தம்

நமக்கு ரொம்ப பிடித்தவர்களை பிரிந்தால் எப்படியிருக்கும்.

பிரிந்த பிறகு அவர்கள் நம்மை நினைப்பார்களா? இல்லை மறந்துவிடுவார்களா? என்று சோதிக்கும்,தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும்.

நான் இந்த உலகில் இல்லாவிட்டால் இவன்/இவள் நம்மை நினைப்பானா/ளா என்ற குறுகுறுப்பு எல்லோருக்கும் இருக்கும்.

அதுபோன்ற எதிர்பார்ப்பையுடைய மனித உணர்வை பேசுகிறது சமஸ்கிருத நாடகமான “சுவப்னவாஸவதத்தம்”.கிபி முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நாடகத்தை எழுதியவர் “பாஸன்”.பாஸன் ,கவி காளிதாசர் வணங்கும் புலவரும் மூத்தோரும் ஆவார் .

அரசன் உதயணனுக்கு சிக்கல்.அவன் நாட்டின் பெரும்பகுதியை பகைநாட்டு அரசன் ஆக்கிரமித்துக் கொள்கிறான்.

உதயணன் சிறு பகுதியில் தன் அன்பு மனைவி ’வாசுவதத்தை’ யுடன் ஆட்சி செய்து வருகிறான்.

ஆனால் மந்திரி யவ்வனராஜனுக்கு இப்படி சிறிய பகுதியை ஆண்டு சிற்றரசனாய் உதயணன் இருப்பதில் உடன்பாடில்லை.என்ன வழி என்று யோசிக்கிறார்.பக்கத்து நாட்டு மன்னன் தர்சகன் உதவி செய்தால் உதயணனால் அவன் இழந்த பகுதியை மீட்க முடியும் என்று நம்புகிறார்.

ஆனால் தர்சகன் சும்மாவெல்லாம் உதவி செய்துவிட மாட்டார்.அவருடைய அழகிய சகோதரி பேரழகி பத்மாவதியை அரசன் உதயணன் திருமணம் செய்து கொண்டால்,தர்சகனின் ஆதரவு கிட்டுமென்று நினைக்கிறார்.

அரசனிடம் சொல்ல,”முடியாது முடியாது நான் வாசுவதத்தை தவிர எந்த பெண்ணையும் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாது.நான்,இது மாதிரி ஒரு திட்டத்தை முளையிலேயே விரும்பவில்லை ” என்று மனைவி வாசுவதத்தை மேலுள்ள அன்பைச் சொல்கிறான்.மந்திரி கவலையடைகிறார்.

மந்திரி வாசுவதத்தையிடம் சென்று நாட்டின் பிரச்சனையையும் உதயணன் - பத்மாவதி திருமணத்தின் அவசியத்தையும் சொல்கிறார்.மந்திரியாக நினைக்காவிட்டாலும் தான் தன்னை சகோதரனாக நினைத்து தான் சொல்வதை பரிசீலிக்கும்படி கெஞ்சுகிறார்.

வாசுவதத்தையின் மனம் ரணமானாலும் கூட நாட்டின் நன்மைக்காக தியாகத்தை செய்ய முன்வருகிறாள்.

மந்திரியும் வாசுவதத்தையும் தீட்டிய திட்டப்படி,பக்கத்து கிராமத்தில் நடக்கும் தீ வீபத்தில் இருவரும் இறந்துவிட்டதாக மக்களையும் உதயணனையும் நம்பச் செய்கிறார்கள்.அனால் மந்திரி யவ்வனராஜனும் வாசுவதத்தையும் மாறுவேடத்தில் திரிகிறார்கள்.

பத்மாவதியின் ( உதயணனுக்கு திருமணம் செய்து வைக்க மந்திரி முயற்சி செய்துவரும் பக்கத்து நாட்டு இளவரசி) தாயார் தங்கியிருக்கும் ஆசிரமத்திற்கு வருகிறார்கள். மந்திரி தன் மதியூகத்தால், வாசுவதத்தையை,தன் அம்மாவைப் பார்க்க வரும் பத்மாவதியிடம் பணிப்பெண்ணாக ஒப்படைக்கிறார்.பத்மாவதிக்கும் வாசுவதத்தையை பிடித்துப் போய் விடுகிறது.அவளுடன் அழைத்துப் போகிறாள்.

பத்மாவதியும் வாசுவதத்தையும் பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கே மனைவியை இழந்த அரசன் உதயணன் அடையும் துன்பங்களைப் பற்றிய செய்தி வருகிறது.

உதயணன் மயங்கி விழுந்தான் என்றும், அதன் பிறகு தற்கொலை செய்ய முயற்சித்தான் என்று ஆனால் காப்பாற்றப்பட்டு விட்டான் என்றும் செய்தி கிடைக்கும் போது வாசுவதத்தை மிகுந்த துன்பத்துக்கு ஆளாயிருந்தாலும், அவள் மனதின் ஒரத்தில் “இறந்தாலும் தன்னை காதலிக்கிறான் கணவன்.மறக்கவில்லை” என்ற விசயம் இன்பத்தை கொடுக்கிறதுதான்.

உதயணன் முதல் மனைவி மேல் வைத்திருக்கும் பாசம் பத்மாவதிக்கு பிடித்துப் போய்விடுகிறது.உதயணனை காதலிக்க ஆரம்பித்து விடுகிறாள்.உதயணனை திருமணம் செய்ய ஆசைப்படுகிறாள்.அண்ணனிடம் சொல்கிறாள்.உதயணன் பத்மாவதி திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

உதயணன் - பத்மாவதி திருமணத்துக்கு மணமாலை தொடுப்பவள் வாசுவதத்தைதான்.தன் கணவன் திருமணத்திற்கு தானே தொடுக்கும் மாலை பற்றி வருத்தமென்றாலும் அடிமனதில் அன்பை வைத்தே நல்ல எண்ணத்திலியே மாலையை தொடுக்கிறாள் வாசுவதத்தை.

உதயணன - பத்மாவதி திருமணம் நடக்கிறது.பத்மாவதியின் அண்ணன் துணையுடன் உதயணன் பக்கத்து நாட்டினரை துரத்தி பேரரசனாகிறான்.

ஆனால் வாசுவதத்தை ஏதோ சொல்லமுடியாத வெறுமையை அடைகிறாள்.

இன்னொருநாள் உதயணன் அவன் நண்பனுடன் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை மனைவி பத்மாவதியும் வாசுவதத்தையும் (பணிப்பெண் மாறுவேடத்தில்) ஒட்டுக்கேட்கிறார்கள்.

அதில் உதயணன் இன்னும் வாசுவதத்தையை விரும்பிக்கொண்டுதான் இருக்கிறேன் என்றும், அவனால் அவள் இறப்பை தாங்க முடியவில்லை என்றும் திரும்ப திரும்ப சொல்லி கலங்குகிறான்.வாசுவதத்தையும் உள்ளம் பெருமிதத்தாலும் அன்பாலும் நிரம்புகிறது.

இன்னொருநாள் உதயணன் கட்டிலில் படுத்திருக்க,இருட்டில் பத்மாவதிதான் படுத்திருக்கிறாள் என்று வாசுவதத்தை கட்டிலில் உட்காருகிறாள்.உதயணன் தூக்கத்தில் கனவில் கூட வாசுவதத்தையை நினைத்து புலம்புகிறான்.கனவிலேயே அவளை பிரிந்து வாடுவதை நினைத்து அழுகிறான்.அதை தூக்கத்தில் வெளிப்படுத்தியும் விடுகிறான்.வாசுவதத்தைக்கு உதயணன்மேல் முன் எப்போதும் விட அன்பு அதிகமாகிறது.ஆனால் ஏதும் சொல்லாமல் இடத்தை விட்டு நகர்கிறாள்.

இன்னொரு நாள் வாசுவதத்தையின் வீணையை கட்டிப்பிடித்து உதயணன் அழுவதையும் பார்க்க நேரிடுகிறது.

ஒருநாள் உதயணனுடைய ஒவிய அறைக்கு வந்த பத்மாவதி,அங்குள்ள வாசுவதத்தையின் ஒவியத்தைப் பார்த்து, இதே சாடையில் தன்னிடம் ஒரு பணிப்பெண் வேலை செய்தவாக சொல்கிறாள்.

உதயணன் ஆசையாக அந்தப் பணிப்பெண்ணை கூப்பிடுகிறான்.வாசுவதத்தையின் வேசம் கலைகிறது.மந்திரி யவ்வனராஜன் அப்போது அங்கு தன் வேசத்தையும் கலைத்து மன்னன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

உதயணன் புரிந்து கொண்டான்.வாசுவதத்தையை கட்டிக்கொண்டு சிறுகுழந்தை போல தேம்புகிறான்.எப்போதுமே என்னை மறக்காத உன்னை முன்னை விட நான் அதிகம் நேசிக்கிறேன் என்று வாசுவதத்தை தன் காதலைச் சொல்கிறாள்.பத்மாவதியும் நிலமையை புரிந்து கொண்டு புன்னகைக்கிறாள்.

அன்போடுகிறது கரைபுரண்டு...

இந்த நாடகத்தில் வாசுவதத்தை, தான் இறந்த பிறகும், கணவன் தன்னை நினைத்து அன்பாயிருப்பதை நினைத்து பூரிக்கும் காட்சிகள்தான் சிறப்பு.

காதல்.

Friday 5 June 2015

பிரபஞ்சன் எழுதிய 'முட்டை'

பிரபஞ்சன் எழுதிய முட்டை (1981 ?) என்னும் நாடகத்தைப் படித்தேன்.இதை ஞானியின் பரீக்‌ஷா குழுவினர் நாடகமாக நடித்திருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.

ஒரு தாத்தா முட்டை கொண்டு வருகிறார்.

அதை எதிரே வந்த இளைஞன் தன் சைக்கிளால் இடித்து பத்து இருபது முட்டைகளை உடைத்து விடுகிறான்.

தாத்தா இளைஞனிடம் விவாதம் செய்து உடைந்த முட்டைக்கான காசைக் கேட்கிறார்.அவனும் கொஞ்ச நேரம் விவாதம் செய்து காசைக் கொடுக்கலாம் என்ற மனநிலையில் பேசிக்கொண்டிருக்கும் போது,
சுற்றியிருக்கும் பொதுஜனங்கள் அதை பெரிய சண்டையாக்க முயற்சி செய்கிறார்கள்.

ஆனால பெரியவரும் இளைஞனும் சண்டை போடாமல் இருக்க ஏமாற்றம் அடைகிறார்கள்.

அப்போது அங்கே அதிகாரி வருகிறார்.அவர் விசாரிக்கிறார்.
தாத்தாவுக்கு ஒரு இளம் மனைவி இருப்பதை அறிந்து கொண்டு,
தாத்தாவை எப்படியாவது பிடித்து வைக்க வேண்டுமென்று,

“இந்த இளைஞன்தான் இந்த முட்டையை உடைத்தான் என்பதற்கு என்ன சாட்சி, ஏன் அவன் மேல் தேவையில்லாமல் குற்றம் சாட்டுகிறாய்? என்று தாத்தாவைப் பிடித்து வைத்து இளைஞனை விடுதலை செய்கிறார்.

சும்மா விடுதலை செய்ய வில்லை அவனிடம் “உன்னை விடுவிக்கிறேன் ஒடிப்போ.ஆனால் காசைக் கொடுத்து விடு” என்று கறந்துவிட்டுதான் அனுப்புகிறார்.

தாத்தா அழுதபடி அதிகாரியின் கஸ்டடியில் இருக்கிறார்.இப்போது அதிகாரியின் அதிகாரி துரை வருகிறார்.துரையிடம் தாத்தா முறையிடுகிறார்.
துரை வெகு நேரம் யோசித்து

“இது உன் கோழிவிட்ட முட்டைதானா? அல்லது பக்கத்து வீட்டுக் கோழி இட்ட முட்டையை திருடி வைத்திருக்கிறாயா? நீ திருட வில்லை என்பதை நிருபித்து விட்டு போகலாம்.அல்லது சிறையில் இரு” சிறை வைக்கிறார்.

அவர்களுடைய குறிக்கோள் எப்படியாவது பெரியவரின் இளம் மனைவியை வரவைப்பதுதான்.அது மாதிரியே பெரியவரின் மனைவி வருகிறாள்.
அதோடு நாடக்ம் முடிகிறது.

இதை இவ்வளவு சுருக்கமாக எழுதுவது தவறான விஷயம். ஆனால்”முட்டை” இன்னும் பலரை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இப்படி எழுதுகிறேன்.

இதில் பிரபஞ்சன் இந்த பொதுமக்கள் பேசும் இடங்களில் எல்லாம் சிக்ஸ்ர் அடிக்கிறார்.

அவ்வளவு சுவாரஸ்யமாக, “ஆமா இல்ல இப்படித்தான் பேசுவோம் இல்ல” என்று நாம் வியப்பது மாதிரி அப்படியே எழுதியிருப்பார்.

தாத்தாவுக்கும் இளைஞனுக்கு இடையே சண்டை வரும் போது ஒருவர் “எங்களுக்கு சண்டை வேண்டும்” என்கிறான்.

அதை இன்னும் பலரும் ஆமோதிக்கின்றனர்.அப்போது ஒருவன் சண்டையில் சேவல் சண்டை நன்றாயிருக்கும் என்கிறான்.தான் ஒரு சேவல் சண்டை பார்த்தாகச் சொல்லி அதை நுணுக்கமாக விவரிக்கிறான்.

சண்டையில் தோற்ற சேவலின் சொந்தக்காரர் தன் நடுவிரலையும் ஆட்காட்டி விரலை வைத்து கத்திரி மாதிரி துவண்டு கிடக்கும் சேவலின் கழுத்தை நறுக்கி நசுக்கிக் கொன்றதாக சொல்கிறான்.

இந்தபொது ஜனங்களின் வீண்பேச்சுக்களை நிறுத்துமாறு ஒரு பெண் குரல் கேட்கிறது. உடனே வெறும் பெண். பொட்டைச்சி என்பது மாதிரி இகழ்ச்சியாக பொதுமக்கள் பேசுகிறார்கள்.

துரை இல்லாத போது அவரைப் பற்றி இகழ்ச்சியாகவும் அவர் வரும் போது பவ்யமாக பணிவது போன்றவற்றை பிரபஞ்சன் அழகாக எழுதியிருக்கிறார்.
பெரியவருக்கு அழகான இளம் மனைவி இருக்கிறாள் எனத் தெரிந்ததும் பாதுகாவலர்கள் பேசும் கீழ்தரமான பாலியல் கிண்டலை பிரபஞ்சன் துல்லியமாக வடித்துள்ளார்.

இந்த முட்டை நாடகத்தை வாசித்து முடிக்கும் போது இந்தக் காலத்திலும் இது மாதிரி யதார்த்த நாடங்கள் நிறைய வரவேண்டும் என்று தோன்றுகிறது.
நாட்டில் எவ்வளவோ அரசியல் பிரச்சனை இருக்கிறது.

அதையெல்லாம் பகடி செய்து இது மாதிரி கொஞ்சம் அர்த்தமான நாடகங்கள் நிறைய வரவேண்டும்.

பெரியார் அம்பேத்கர் வட்டம்

பெரியார் அம்பேத்கர் வட்டத்தை வெளியதான் உருவாக்கனும்ன்னு இல்ல.
வீட்ல இரண்டு பேர் இருந்தாக் கூட உருவாக்க முடியும்.

ஆமா ரெண்டு பேர் சேர்ந்து குறிப்பிட்ட நாள்ல சம்பளம் போட்டு உட்காந்துகிட்டு பெரியார் அம்பேத்கர் எழுதுன புத்தகங்கள எடுத்து கிட்டு வாசிக்கலாம்.அப்படி வாசிக்கும் போது மிக அழுத்தமாக மனதில் பதியும்.
இதை நான் உணர்ந்திருக்கிறேன்.

நானும் துறையூர் சரவணனும் பிரமிள் எழுதிய கட்டுரைகளை ஆளுக்கொரு பத்தியாக வாசிப்போம்.

வேறு யாரும் அந்த அறையில் இருக்க மாட்டார்கள் இருப்பினும் சத்தமாக வாசிப்போம்.அதன் பிறகு அது பற்றி விவாதிப்போம். அதிலுள்ள இண்டிரஸ்டே தனி.

அது மாதிரி புருசன் பொண்டாட்டி குழந்தைகள் அம்மா அப்பா அண்ணன் தம்பி எல்லோரும் மாதம் ஒருநாள் வட்டமாக அமர்ந்து வாசித்து விவாதிக்கலாம்.
பெரியார் அம்பேத்கரை கொண்டாட்டமாக அனுகாமல் நடுநிலையோடு திறந்த மனதோடு அனுகலாம்.

அடுத்து அம்பேத்கர் பெரியார் யாரையெல்லாம் விமர்சித்திருக்கிறார்களோ அவர்களையெல்லாம் கொலைவெறியாக தாக்காமல்,அவர்கள் கருத்துக்களைத் தவறு என்று சொல்லி விவாதிக்கப்பழக வேண்டும்.

“ஏய்யா அங்க தாழ்த்தப்ட்டவங்கள அடி அடின்னு அடிச்சிருக்கான். காந்தி என்னடான்னா லூசுத்தனமா முதல்ல கிரமாத்த விட்டு வெளியேறி உயிரப் பாதுக்காத்துகோங்க அப்புறம் பேசலாம்ன்னு சொல்லியிருக்கார்.காந்தி மொக்க. காந்தி வேஸ்டு” இது போன்று யோசிக்காமல் இதை இன்னும் கண்ணியமாக விவாதிக்கப் பழக வேண்டும்.

ஒருவேளை இந்திய சுதந்திரப்போராட்டமும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைப்போராட்டமும் என்ற இரண்டு பளுவை காந்தியால் தாங்கமுடியாமல் அப்படி சொல்லியிருப்பாரோ,

ஒருவேளை படித்த உயர் ஜாதி ஹிந்துக்களின் ஊடகங்களில் ஆதரவை இழந்தால் இந்திய சுதந்திரப் போராட்டத்தை எடுத்துச் செல்ல முடியாது என்று காந்தி அப்படி செய்திருப்பாரோ” இது மாதிரியாக விவாதிக்க சிந்திக்கப் பழகலாம்.

வீட்டில் சிறு குழந்தைகளை வட்டத்தில் வைத்திருக்கும் போது மிக கவனமாக இதைச் செய்யவேண்டும்.

என் மகளுக்கு காந்தியையும் அம்பேத்கரையும் அறிமுகப்படுத்தப் படுத்தும் போது யாரையும் தாழ்ந்தோ உயர்ந்தோ சொல்லிவிடக்கூடாது என்று மிகக்கவனம் எடுத்துக் கொண்டேன்.

இதில் இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால் இதையெல்லாம் செய்யும் போது பக்கத்தில் இருந்து பலர் கிண்டல் செய்வார்கள்.
குடும்பத்தில் உள்ள மற்றவர்களே கிண்டல் செய்வார்கள்.

நான் முதன் முதலில் கர்நாடக் சங்கீதம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே என் குடும்பத்தில் என்னை கிண்டல் செய்திருக்கிறார்கள்.

முதன் முதலில் தியானம் செய்யும் குடும்பத்தில் உள்ளவர்களே கிண்டல் செய்வார்கள் என்று பாலகுமாரன் சொல்வார்.

அது மாதிரி சொல்வார்கள்.” பாவம் சின்னக் குழந்த அத ஏன் இப்படிப் படுத்துற” என்பார்கள்.

“நீங்கதான் பெரிய புரட்சி செய்றீங்களோ” என்று சொல்வார்கள்.

இன்னும் சில எழுத்தாளர்கள் “முற்போக்காக காட்டிக்கொள்ளும் மோஸ்தரில் இளைஞர்கள் இருக்கிறார்கள்” என்றும் கூட சொல்வார்கள்.

இதற்கெல்லாம் வெட்கப்படக்கூடாது.இப்படி விவாதிப்பது நன்மை பயக்கும் என்ற நம்பிக்கை மனதில் அழுத்தமாக இருந்தால் வெட்கம் வராது.

வெட்கப்படாமல் உங்கள் ”குடும்ப பெரியார் அம்பேத்கர் வட்டம்” அறிவித்த நாள் நேரம் வட்டமாக அமர்ந்து விடுங்கள் புத்தகங்களோடு.

உங்கள் குழந்தை அதில் கலந்து கொள்ளாமல் விளையாடினாலும் அது வியப்போடு பார்க்கும்.அந்த வியப்பில் அதுவும் கொஞ்ச நாளில் கலந்து கொள்ளும்.

குடும்பத்தில் இருந்து முற்போக்கு சிந்தனை உருவாவது மட்டுமே சமுதாய மாற்றத்துக்கு வழியாகும்.

அதனால் அவரவர் குடும்பத்தில் இன்றே இவ்வட்டத்தை தொடங்குங்கள்.
ரூம் எடுத்து தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள்,மேன்சன்வாசிகள் கூட இதைச் செய்யலாம், அலுவலகம் செல்பவர்கள் கூடச்செய்யலாம்.

”லெட்ஸ் பிகின் தி குட் வொர்க்”

பெங்காலி ரைம்ஸ்

பெங்காலி ரைம்ஸ்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒன்றை கவனித்தேன்.
தலையில் கொம்பு வைத்த பறவைகள் முட்டையிடுவது போன்ற அனிமேசன் காட்சிகளைக் காட்டுகிறார்கள்.
”கொய்யால இது என்னடா வித்தியாசமான பறவையா இருக்கு.நம்ம யாளி மாதிரி வித்தியாசமான உயிரா” என்று தேட ஆரம்பித்தேன்.
தேடினால், தலையில் கொம்பு வைத்த பறவை ஒரு கற்பனைப் பறவையாம்.
அதன் பெயர் ”ஹட்டி மட்டி டிம்” (Hatimatim Tim). அந்த ரைம்ஸ் வருமாறு
ஹட்டி மட்டி டிம்
தாரா மாதே பாரே டிம்
தாதேர் கஹாரா தூதோ ஷிங்
தாரா,ஹட்டி மட்டி டிம்
அதன் தமிழாக்கம் (நான் செய்தது) வருமாறு
ஹட்டி மட்டிம் டிம்
வெட்டவெளியில முட்டை போடும் .
கொம்பு ரெண்டு உண்டும்.
ஹட்டி மட்டிம் டிம்.
ஹட்டி மட்டிம் டிம் என்று தலையில் கொம்பு உள்ள பறவை வெட்ட வெளியில் முட்டையிடுகிறது.இதுதான் பாடல்.
வெட்ட வெளியில் முட்டையிடுவதை வங்காளமக்கள் தேவையில்லாத வேலையாகப் பார்க்கிறார்கள்.
விழலுக்கு இரைத்த நீர் போல என்று சொல்வது மாதிரி வெட்டவெளியில் முட்டையிடுவதை பயனளிக்காத நேர விரையமாகப் பார்க்கிறார்கள்.
அதனால் ஹட்டி மட்டிம் டிம் என்ற கற்பனைப் பறவையை கிண்டல் செய்கிறார்கள்.
பறவையையா கிண்டல் செய்கிறார்கள்.அது போல பயனிளிக்காத வேலையை செய்பவர்களை, வேலைக்காகாத விஷயத்துக்காக உழைப்பவர்களை கிண்டல் செய்கிறார்கள்.
ஏன் இந்தப் பாடலில் ”ஹட்டிமட்டிம் டிம்” க்கு ”ரெண்டு கொம்பு உண்டு” என்றக் குறிப்பு வருகிறது.
பல மனிதர்கள் நாம் பார்த்திருப்போம்.
வீண் ஜம்பம் அடித்து கொம்புகள் இருப்பது போலவே போலி கம்பீரம் காட்டித் திரிவார்கள்.
ஆனால் வெட்டவெளியில் முட்டையிடும் வீண் வேலையை செய்து கொண்டிருப்பார்கள்.அதைக் குறிக்கிறது என்றே தெரிகிறது.
எள்ளல் தொனியில் பாடப்பட்டும் இப்பாடலில் இருக்கும் அந்த எள்ளல்தாம் இவையெல்லாம் தவறு என்று சொல்லாமல் சொல்கிறது.
ஃபேஸ்புக்கில் எழுதுவது ”ஹட்டி மட்டிம் டிம்” செய்யும் “வெட்டவெளி முட்டையிடும்” வேலையா அல்லது நல்ல வேலையா என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.
நீங்கள் இந்தப் பாடலை எந்த பெங்காலி நண்பர்களிடத்தும் பாடிக்காட்டுங்கள்.அவர்கள் முகம் விரியும்.