Saturday 26 January 2013

கதை போல ஒன்று - 68


நின்று கொண்டிருந்த ஆட்டோவில் படுத்து புகைத்து கொண்டிருந்த ஆட்டோ டிரைவருக்கு அம்பத்து ஐந்து வயது இருக்குமா? இருக்கும்.

புகையை வெளியிடும் வீச்சில் இந்த உலகத்தை அலட்சியப்படுத்தும் தன்மை தெரிந்தது.

”நந்தனம் வருமா?” 

”நூத்தியம்பது ரூபா ஆகும் தம்பி.”

”நூத்தி எழுவது தருவேன்.ஆனா சிகரட் பிடிக்க கூடாது சொல்லி சிரித்தேன்.”

”ச்சே சே கஸ்டமர் இருக்கும் போது சிகரட் பிடிக்க மாட்டேம்பா.”

ஆட்டோவை இயக்கி ஓட்டி கொண்டிருக்கும் போதே சொன்னார்

“இந்த பழக்கம் ராஜண்ணன் சொல்லிக்கொடுத்த பழக்கம்”

“ம்ம்ம்” என்றேன்.

“ராஜண்ணன்னா யாரு தெரியுமா தம்பி”

“நீங்க என்ன மினிஸ்டர் ராஜண்ணன்னையா சொல்லிரப்போறீங்க. சொல்லுங்க யாரு அந்த ராஜண்ணன் ?”

ஆட்டோ டிரைவருக்கு சிரிப்பு அள்ளியது.

”அந்த மினிஸ்டரத்தான் சொல்றேன்.”

நான் நிமிர்ந்து உட்கார்ந்து முகத்தை முன்னால் வைத்து கைகளை கொண்டு முட்டு கொடுத்து கேட்டேன்.

“மினிஸ்டர் ராஜண்ணன் உங்க ஃப்ரண்டா?”

”ஆமா.நானும் அவரும் தான் சின்ன வயசுல ஒண்ணா பீடிப்பிடிப்போம்”

“யண்ணே சும்மா கத வுடாதீங்க” என்றேன்.

“உண்மையில தம்பி.போன்னேரி பக்கம்தான் எங்க ஊரு.அவர் வீடும் என் வீடும் பக்கத்து பக்கதுலதான். சின்ன வயசுல இருந்தே நாங்க பிரண்ட்ஸ்தான்.இப்பவும் அவருக்கு என்னத்தெரியும்”

ஆர்வம் வந்தது ஆட்டோ டிரைவரிடம் பேச.

”அவரு அரசியல்வாதியாயிட்டாரு. நீங்க ஆட்டோ ஒட்ட வந்துட்டீங்க. எப்படி?எதுவரைக்கும் ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சீங்க”

“பி.ஏ வரலாறு முதல் வருக்ஷம் வரை ஒண்ணாத்தான் படிச்சோம். அப்புறம் எனக்கு படிப்பு வரலன்னு காலேஜுக்கு போகல”

“காலேஜ் படிக்கும் போதே ராஜண்ணன் அரசியல்ல இருப்பாரா?”

“அவர் ஸ்கூல் படிக்கும் போதே அரசியல் பேசுவாரு.ரொம்ப தைரியமா இருப்பாரு. ஒரு தடவ ஊர் கிணத்துல குதிக்க முடியுமான்னு ஒருத்தன் சவால் விட்டான், இவரு அப்படியே குதிச்சிட்டாரு.கொஞ்சம் தமிழ் அதிகம் படிப்பாப்ல”

“காலேஜ்ல அரசியல் இருந்திருக்கும்லாண்ணே”

“ஆமா.அப்போ நம்ம ஊர்ல ஒரு கட்சி ரெண்டா உடைஞ்சது தெரியுமா? அந்த பிரிஞ்ச கட்சில போய் நல்லா வேலை செய்வார்.யாரையும் கண்டுக்காம,

பிரதிபலன் பார்க்காம கட்சி வேல செய்வாப்ல.மூணு வருசம் வேலை செய்ஞ்சான்.நான் கூட அவன் கூட கட்சியில இருப்பேன்.வேலை எல்லாம் செய்வேன்.

என்னடா ராஜண்ணா! நல்லா வேல செய்றோம் ஆனா யாரும் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்களேன்னு நான் பொலம்பினா.உழைப்போம்டா. கடவுள் குடுப்பான் நமக்குன்னு சொல்வான்.இல்ல சொல்வாரு.

அப்போ ரெட் ஹில்ஸ்ல எங்க கட்சியின் எதிரி கட்சி மீட்டிங் நடந்தது”

நான் ஆட்டோ டிரைவர் பேச்சை மறித்து ”ராஜண்ணன் முதலியாரா அல்லது வன்னியராண்ணே ”என்றேன்.

அவரு நாயக்கரு. நான் தான் முதலியார்.நான் சொல்றத கேளுப்பா... ம்ம்ம கேளுங்க தம்பி.’

ஒஹ் சாரி. சொல்லுங்க. ரெட் ஹில்ஸ்ல உங்களுக்கு பிடிக்காத கட்சித்தலைவர் கூட்டதுக்கு வரார்ன்னு சொன்னீங்க.

“வராருன்னு சொன்னேனா.நானும் ராஜண்ணாவும் மீட்டிங்கல ஆஜர்.

கையில ஆளுக்கொரு சந்தனமாலை.

கூர்ந்து பக்கதுல பார்த்தா.நாங்க ரெண்டு சந்தனமாலைக்கு நடுவுல எலுமிச்ச மாலைய வெச்சிருக்கிறது தெரியும்.

சந்தன மாலை போடுறாப்புல பக்கத்துல போய் எலுமிச்சை மாலைய போடுறதுதான் ஐடியா.

கூட்டமான்னா செம கூட்டம்.

எனக்கு பயம் அதிகமா இருக்குது.நான் தான் முதல்ல எலுமிச்சை மாலை போடனும். அடுத்தது டக்குன்னு பின்னாடி நிக்குற ராஜண்ணா போடனும். அப்படிங்கர மாதிரி ஏற்பாடு.

இது எங்க கட்சிக்காரங்களுக்கு கூடத்தெரியாது.ரகசியமா வெச்சிருந்தோம்”

“யண்ணே ஒரு நிமிசம்.எலுமிச்ச மாலை போட்டா என்ன. அது அவமானப்படுத்துரதா?”

ஆட்டோக்காரர் என்னைப்பார்த்தார்.

“ஒரு வேள செத்தவங்களுக்குதான் எலுமிச்சை மாலை போடுவாங்களோ” என்றேன்.

“அதெல்லாம் எனக்குத்தெரியாதுப்பா எலுமிச்சை மாலை போட்டா அது அவமானம்.பித்தம் அதிகமானவங்களுக்கு, பைத்தியகாரங்களுக்குதான் அப்படி போடுவாங்கமாதிரி ஒரு நம்பிக்கைன்னு வெச்சுக்கங்களேன்.”

“சரி சரி சொல்லுங்க.”

“எனக்குன்னா பயம் தம்பி.

போட்டா சுத்தி உள்ள எல்லாரும் அடிச்சி தோல உரிச்சிருவாங்க.

மேடைமேல ஏறலாமா வேணாமான்னு கியூல நிக்கிறேன்.

ராஜண்ணா ஆவேசமா பின்னாடியே நிக்குறார்.

நான் பயந்து பின் வாங்க , ராஜண்ணா சடார்ன்னு மேடையில ஏறி அந்த தலைவர் கழுத்தில சந்தன மாலை போடுறாப்புல சட்டுன்னு எலுமிச்சை மாலைய போட்டுட்டாரு”

எனக்கு திக்கென்றிருந்தது.அத்தனை தொண்டர்கள் முன்னாடி தைரியமாக அவர்கள் தலைவருக்கே எலுமிச்சை மாலை போட்டேதான் விட்டார் போல.

“அப்புறம் என்னாச்சுன்னே”

“நல்ல வேள தம்பி போலீஸ் ராஜண்ணாவ சுத்திகிட்டு அடிச்சானுங்க.

தொண்டர்கள் கையில சிக்கியிருந்தா ராஜண்ணா செத்திருப்பார்.

போலீஸ் ஒரு நாள் முழுக்க அவர கோர்ட்டுக்கே கொண்டு போகாம அடிச்சிருக்காங்க.

ரத்தம் உறையிற அடி.இந்த சம்பவத்த பெரிசு பண்ண வேணான்னு அவர விட்டுட்டாங்க.

அப்பத்தான் எங்க கட்சிக்காரங்களே இவர் யாருன்னு திரும்பிப்பார்த்தாங்க.

இரண்டு நாள் கழிச்சு எங்க தலைவரே ராஜண்ணாவ கூப்பிட்டு பேசுனார்.

அப்ப கெடச்ச புகழ்தான். சின்ன சின்ன போஸ்டிங் வாங்கி, எம்.எல்.ஏவாகி ,அப்படியே மேல மேல போயிட்டார்.

இப்ப மினிஸ்டராவும் ஆயிட்டாருல்ல. “

ஆச்சரியத்து கொண்டே இருந்தேன்.

அந்த கணம்தான். அந்த தைரியம்தான் ராஜண்ணாவுக்கும் இந்த ஆட்டோ டிரைவருக்கும் உள்ள வித்தியாசம்.

ஆட்டோடிரைவரின் ஒரு கண தயக்கம். ராஜண்ணாவின் ஒரு செகண்ட் வீரம் இரண்டும் ஒரே புள்ளியில் வெட்டும் எதிர் எதிர் கோடுகள்.

அந்த ஒரு செகண்ட்தான் அந்த புள்ளி.

என் வாட்சை பார்த்தேன்.

விநாடி முள் டக் டக்கென்று போய் கொண்டிருந்தது.அதில் வரும் ஒரு விநாடியை பிடிக்க முயற்சித்தேன்.

உணர முயற்சித்தேன்.

இது மாதிரி ஒரு விநாடியில்தான் எல்லா மனித முடிவுகளும் எடுக்கபடுகின்றன.அது முன்னேற்றதிகோ பின்னேற்றத்திற்கோ வழிவகுக்கின்றது.

மறுபடியும் வாட்சையை முகத்தின் பக்கத்தில் வைத்துப்பார்த்தேன்.

விநாடி முள் ஒடிக்கொண்டே இருந்தது.டிட்ச் டிட்ச் டிச் என்று .

ஆட்டோடிரைவர் தன் மெலிந்த முதிர்ந்த சக்தியற்ற கைகளால் ஆட்டோவை ஒட்டிக்கொண்டிருந்தார்.

கதை போல ஒன்று - 67


”இந்த பாஸ் செல்லாதுப்பா டிக்கட் எடு” என்றார் அந்த கண்டக்டர்.

இருபத்திநாலு ஏ அண்ணாநகர் போகும். நுங்கம்பாக்கம் வழியே போகும்.ஏறிக்கொண்டேன்.

மதிய வேளையானதால் கூட்டமே இல்லை.

பாஸ் இருந்தது.கண்டக்கரிடம் கொடுத்தேன்.அவர் பேனாவால் டிக் அடிக்காமல் என்னிடம் திரும்ப கொடுத்தார்.

என்னைத்தான் டிக் அடிக்க சொல்கிறாரோ என்று நினைக்கும் போது “இந்த பாஸ் செல்லாதுப்பா. நீ டிக்கட் எடு” என்று அதிகாரமாக கத்தினார்.

விசயமே புரியவில்லை.

“ஏன் சார் செல்லாது. நேத்து கூட வந்தேனே.பாருங்க கண்டக்டர் டிக் அடிச்சிருக்காரு”

“பேசாதப்பா நீ எடு”

“நீங்க காரணம் சொல்லாம நான் டிக்கட் எடுக்க மாட்டேன்”

“சனியன் மாதிரி பேசுறியே.நுங்கம்பாக்கத்துல இருந்து அண்ணாநகருக்கு நூத்தி அறுபது ரூபா பாஸு.நீ நூத்திநாப்பது ரூபா பாஸ எடுத்திருக்க”

“நான் எடுக்கல சார்.உங்க டிப்பார்ட்மெண்ட்ல குடுத்திருக்காங்க.ரூட் சொல்ல வேண்டியது என் வேல.அதுக்கு எவ்ளோ ரூபா பாஸுன்னு நான் சொல்ல முடியாது.”

“அதெல்லாம் எனக்கு தெரியாது பாஸ் செல்லாது. டிக்கட் எடு”

“எடுக்க முடியாது சார். செக்கிங் வந்தா நான்
சொல்லிக்கிறேன்”

எழுந்து பக்கத்தில் அவேசமாக வந்தார்.பயந்து பின் வாங்கினேன்.

“எட்றா டிக்கட்ட.பீட மாதிரி வந்த தொல்ல செய்ஞ்சினு”
அந்த அதட்டலில் பாக்கெட்டில் கையை விட்டு பத்து ரூபாய் கொடுத்து டிக்கட் எடுத்தேன்.

மிச்சம் சில்லரையாக மூன்று இரண்டு ரூபாய் நாணயங்கள் கொடுத்தார்.

அநியாயம் இழைக்பட்ட, அடிவாங்கிய வெறி இருந்தது என்னுள்.

பஸ்ஸில் உட்கார்ந்திருப்பவகள் வேறு பார்க்கிறார்கள்.
தனியே வழுக்கினால் பிரச்சனையே இல்லை.எழுந்துவிடலாம்.இதோ நாலு பேர் பார்க்கிறார்கள்.

எல்லோரும் பார்க்க விளையாட்டில் தோற்பதா? தப்பே இல்லாமல் அவமானம் ஏற்பது எப்படி?
கண நேரத்தில் அவருக்கு மறுஅடி கொடுக்க மனம் திட்டமிட்டது.மறுபடி ஆரம்பித்தேன்.

“கண்டக்டர் சார். இப்போ நீங்க இப்படி பாஸ் செல்லாது. டிக்கெட் எடுக்கனும்ன்னு சொல்றத ஒரு பேப்பர்ல எழுதி கொடுத்தா கையெழுத்து போடூவீங்களா”?

சத்தமாக கேட்டேன்.

பஸ் மொத்தமும் பார்க்க. கண்டெக்டர் என்னையும் நான் கண்டெக்டரையும் கூர்ந்து பார்தோம்.

இருபத்தி ஆறு வயதான என் வயதில் அவருக்கு பையன் இருக்கலாம்.அவருடைய நீலச்சட்டை அவர் எக்ஸ்பீரியன்ஸை காட்டியது.

நான் பதட்டத்தை அடக்கி தெளிவாக கேட்கும் கேள்வி அவரை பதட்டமடைய வைத்தது.

“என் பேரு விஜயராகவன்.அண்ணாநகர் டிப்போதான். எங்க வேணாலும் கம்ளைண்ட் பண்ணிக்க”

நான் விடவில்லை.

“அதில்ல விஜயராகவன்.நீங்க பாஸ் செல்லாதுன்னு சொல்றத பேப்பர்ல எழுத்துப்பூர்வமா கொடுக்க முடியுமா”

நிதானமாக கேட்டேன்.

விசில் அடித்து பஸ்ஸை நிறுத்தினார்.

”இறங்குடா கீழ.கீழ இறங்கு. தேவையில்லாம ரொம்ப பேசுற.”

இந்திய வயதானவர்களை பேர் சொல்லி அடிக்கடி கூப்பிட்டால் டென்க்ஷனாவார்கள்.

“நான் ஏன் இறங்கனும் விஜயராகவன்.டிக்கெட் எடுத்துட்டேனே.நீங்க செய்ஞ்த பேப்பர்ல எழுதி தரமுடியுமான்னு கேட்டேன்.நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா முடிஞ்சி போச்சு விஜயராகவன்.ஏன் இறங்க சொல்றீங்க.முடியாது.”

டிரைவருக்கே கண்டெக்டர் செய்தது பிடிக்கவில்லை போலும் பஸ்ஸை எடுத்துவிட்டார்.

பஸ் பயணிகள் எல்லோரும் என்னை கொஞ்சம் ஹீரோத்தனமாக பார்ப்பதாக கற்பனை செய்து கொண்டேன்.

“டேய் தம்பி நீ டிப்போ வாடா அங்க பேசிக்கலாம்.”

“வரத்தான் போறேன் விஜயராகவன்.பாசேஞ்சர “டேய் தம்பின்னு” மரியாதை இல்லாம கூப்பிடுறீங்கன்னு கம்ளயின் பண்ணுவேன்.லட்டர் எழுதி காப்பி டு டிராஃபிக் ஹெட் பல்லவன் ஹவுஸ்ன்னு நேர்லயே போய் பல்லவன் இல்லத்துல கொடுக்கத்தான் போறேன்.அடையார் டிப்போ பிரான்ஞ் மேனேஜர்” சக்திவேல்” எனக்கு தெரியும்.டிவிசன் மேனேஜர் “ராமன்” கூடத்தெரியும். எல்லார்கிட்டயும் பேசுவேன்.உங்க மேல கம்ளைண்ட் கண்டிப்பா உண்டு விஜயராகவன்.”

விளையாட்டில் சிக்கிக்கொண்டார்
கண்டெக்டர்.

முகத்தை நார்மலாக வைத்துக்கொள்ள கஸ்டபட்டது தெரிந்தது.

அண்ணாநகர் டிப்போ வந்தது. வெளியே எல்லோரையும் இறக்கி விட்டார்கள்.நான் இறங்கவில்லை.

டிரைவர் “தம்பி இறங்குப்பா” என்றதும் இறங்கி, மறுபடி உள்ளே போன பஸ்ஸை நோக்கி ஒடிப்போனேன்.

விஜயராகவன் இறங்கவும் பிடித்துக்கொண்டேன்.

“வாங்க சார். பேசுவோம். நீங்கதன் டிப்போவுல போய் பேசலாம்ன்னு சொன்னீங்களே”

அவர் எதுவும் பேசாமல் நடந்து போய் கொண்டே இருந்தார். நான் பின்னாடியே ஒடி ஓடி ஆவேசமாக பேசிக்கொண் டிருந்தேன்.

டிப்போ டீக்கடையில் நின்றார்.

சுத்தி நிறைய கண்டெக்டரும் டிரைவரும் நின்றார்கள்.

அவர்கள் முன்னாலும் விஜயராகவினிடம் கத்தி கத்தி பேசினேன்.

வெட்கத்தை விட்டவனுக்கு என்ன தயக்கம்.

என் பிரச்சனையை இரு அணிகளாக பிரிந்து விவாதம் செய்தனர்.எனக்கும் சப்போர்ட்டாக ஒரு கோஸ்ட்டி உருவாகியது.

புதிதாய் வந்தவர்கள் “என்னப்பா விசயம் விசயம்ன்னு சேர. அந்த இடத்தின் வட்டம் பெரிதாக ஆரம்பித்தது.”

டிப்போவில் நின்ற பயணிகள் எல்லோரும் எட்டி பார்க்க ஆரம்பித்தனர்.

நான் சத்தமாக என் தரப்பு நியாங்களை நிதானமாக கத்தி கொண்டே இருந்தேன்.

விஜயராகவன் சட்டென்று தன் கையில் வைத்திருந்த தோல் பையோடு என்னை ஒரு கும்பிடு போட்டார்.

”எப்பா தம்பி தப்புதாம்பா.தெரியாம செய்ஞ்சிட்டேன்.காலையில இருந்து சாப்பிடவே இல்லை நானு.என் பொண்டாட்டி ஆஸ்பித்திரில இருக்கா. எனக்கே ஆயிரம் பிரச்சனை. கூட்டம் கூட்டி அசிங்கபடுத்தாத” என்றார்.

உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.

அமைதியாக வெளியே வந்தேன்.

கூட்டம் இன்னும் விஜயராகவனிடம் “என்ன பிரச்சனை. என்ன பிரச்சனை என்று கேட்டு கொண்டிருந்தது.

வெற்றியடைந்து விட்டேன். என்னை அவமானபடுத்திய மூத்த நடத்துனரை பிரச்சனைக்குரியவர் என்று காட்டிவிட்டேன்.

காலம் எல்லாத்தை மறக்கடித்து, எனக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து, பிள்ளையின் முதல் பிறந்தநாளை கொண்டாட திட்டமிடும் போது, ஒரு மாதம் முன்பு கம்பெனி குவைத்துக்கு ஆறுமாதம் ”போய்வா” என்று சொல்லியது.

குழந்தைவிட்டு பிரிய கஸ்டமாய் இருந்தது.

குவைத் போவதற்கு ரெண்டு நாள் முன்னாடி எப்போதும் , அவள் பக்கத்துலேயே படுத்துகிடந்தேன்.”அப்பாவுக்கு உன் முதல் பிறந்தநாளுக்கு உன் கூட இருக்கமுடியாது செல்லம்” என்று மனதிற்குள்ளவே வசனம் பேசினேன்.

பிரிவு நாளாகி, மணிநேரமாகி, நிமிடங்களாகி, நான் மட்டும் கால்டாக்சியில் ஏறி விமானசிலையத்தை நோக்கி போகிறேன்.

காலை மணி பத்து இருக்கும்.

முதன்முதலாக குடும்பத்தை விட்டு ஆறுமாதம் பிரியப்போவதில் பைத்தியமான மாதிரி உணர்வு.

தலைசுற்றி வெறுமை.பயம். பிரிவை பற்றிய துக்கம்.

கார் திருமங்கலம் சிக்னலில் நிற்கும் போது. என் பக்கத்தில் ஒரு பைக்கும் நின்று கொண்டிருந்தது.

கண்ணாடி வழியே பார்த்தால் விஜயராகவன்.

நான்கு வருடம் முன்னர் வெற்றிகரமாக அவமானப்படுத்திய விஜயராகவன்தான்.

வயது இன்னும் ஏறி இருந்தது.அப்பாவியாய் முகத்தை வைத்து அவர் சிக்னலில் நிற்கும் போது, “ஏன் இந்த மனுசன் மேல அன்னைக்கு அவ்வளவு வன்மம். அவ்வளவு வெறி.எப்படி இன்சல்ட் பண்ணினோம் இவர.

சம்பவத்துக்கு பிறகு அவருக்கு நமக்கும் என்ன தொடர்பு.

அவர், அவர் வாழ்க்கையை வாழ்ந்தார். நாம நம்ம வாழ்க்கையை வாழ்ந்தோம்.

அன்னைக்கு அவர்கிட்ட சண்டையே போட்டிருக்க கூடாது.

விஜயராகவன் மீது சொல்லமுடியாத கருணையும் அன்பும் தோண்றியது.

இறங்கி போய் அவர் கைகளை பிடித்து கொள்ளவேண்டும் போல் இருந்தது.

சிக்னல் பச்சையானது.

விஜயராகவனுக்கு தெரியாது, நான்கு வருடம் முன் அவருடன் சண்டை போட்ட ஒருவன் அவர் பின்னாடியே காரில் வந்து கொண்டிருக்கிறான்.

மனதில் அழமாக மன்னிப்பும் கேட்டுவிட்டான் என்று.

கதை போல ஒன்று - 66

பாட்டி 1

-ஹைதிராபாத் ஹைட்டெக் சிட்டியில் அந்த பாட்டியை பார்க்கும் போதெல்லாம் பாவமாய் இருக்கும்.

பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்து கொண்டிருப்பார்.வயது எழுபது இருக்கும்.வாயில் கோழை ஒழுகும்.

வருவோர் போவோரிடமெல்லாம் காசு காசு என்று கெஞ்சிக்கொண்டிருப்பார்.

சில சமயம் இட்லிகளை சாப்பிட்டுகொண்டிருப்பார்
ஒன்றிரண்டு நாய்கள் சூழ.

ஹைடெக் சிட்டியில் வேலை பார்க்கும் ஒரே ஒருத்தன் நினைத்தால் அந்த பாட்டியை நிம்மதியாய் வாழவைக்கலாம்.ஆனால் வைக்க மாட்டார்கள்.

பாட்டி இதுமாதிரி அசிங்கமாக பிச்சை எடுத்து கொண்டே இருக்க வேண்டுமா? இன்னும் எத்தனை காலம்தான் இந்த பாட்டி உயிரோடு இருக்கபோகிறார்.

அது பற்றிய ஏதாவது கவலை இந்த வெள்ளையும் சொள்ளையுமாய் இருக்கும் ஹைட்டெக் மனிதர்களுக்கு இருக்கிறதா?

தினமும் இப்படி பாட்டி பற்றி கொஞ்சம் தத்துவமாய் நினைத்து அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அடங்கி விடுவேன்.

வேலைக்கு சேர்ந்த முதல் மாதம் ஜாயின்ங் போனஸ் என்றொர்ரு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்க தலைகால் புரியவில்லை எனக்கு.

அந்த வார இறுதியில் ரயிலை தவிர்த்து விமானத்துக்கு டிக்கெட் எடுத்தேன் சென்னை வர.ஆபீஸில் இருந்து கிளம்ப பாட்டி ஞாபகம் வந்தது.

அந்த பாட்டிக்கு எதாவது செய்ய வேண்டும்.

சும்மா ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் போடக்கூடாது என்று நினைத்து பாட்டி இருக்கும் இடத்திற்கு வேலை இல்லாமலே வந்தேன். பாட்டி பக்கத்தில் நின்று மொபைல் போனை நோண்டுவது மாதிரி பார்த்துக்கொண்டே இருந்தேன்.

சட்டென்று பாக்கெட்டில் இருந்து புது ஐநூறு ரூபாயை பாட்டியின் பிச்சை தட்டில் போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தேன்.

”அந்த ஐநூறு ரூபாயை பார்த்து பாட்டி எப்படி மகிழ்ச்சியாயிருப்பார் என்று கற்பனை செய்து உலகில் உள்ள அனைத்து பிச்சைகாரகர்களும் என்னால் சுகமாகிவிட்டார்கள் போன்று தோன்றியது எனக்கு.

சென்னை லீவு முடிந்து புதன்கிழமை ஹைதிராபாத் வந்தால் பாட்டி அந்த இடத்தில் இல்லை.இரண்டாவது நாளும் பார்த்தேன். அப்போதும் பாட்டி அங்கே பிச்சை எடுக்கவில்லை.

எதையுமே தவறாகவே எடுத்துக்கொள்ளும் என் மனம்.” ஐநூறு ரூபாய்க்காக பாட்டியை யாரோ கொன்றுவிட்டார்கள்.ஆக உன்னுடைய சுயபெருமைக்காக பாட்டியை மறைமுகமாக கொன்றுவிட்டாய்” என்பது மாதிரி கிறுக்குத்தனமாய் நினைப்பு வந்தது.

இரண்டு வாரம் தினமும் தேடினேன்.

பாட்டியை பார்க்க முடியவில்லை.

ஏதோ ஒரு சின்ன கவலையாய் இருந்தது.”ஐநூறு ரூபாய் போட்டோம் அதற்கப்புறம் பாட்டி எங்கே? கேள்வி மெல்ல நிதானமாக என்னைத்துரத்தியது.

ஒருமாதம் கழித்து சில்பாராமம் கலைக்கூடத்திற்கு போகும் போது, அதன் வாசலில் அந்த பாட்டி பிச்சை எடுத்து கொண்டிருந்தை பார்த்து மனம் நிம்மதியானது.

பின் சட்டென்று எரிச்சலாகி மனதினுள் “இந்த சனியம் பிடிச்ச பீடை இங்கதான் இருக்கு.இவளால தேவையில்லத டென்சன்” கூவி கலைநிகழ்ச்சி பார்க்க “சில்பாராமம் உள்ளே சென்றேன்.

பாட்டி 2

-எங்கள் ஊரில் இருக்கும் தேமுத்து பாட்டிக்கு மருமகள் என்றாலே ஆகாது.

எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார்.

இரவு பத்து மணிக்கு மேல் ஒப்பாரி வைத்து தன் இருபது வயதில் இறந்து போன கணவனை நினைத்து அழுவாள்.

ஊரே மிரளும்.

தேமுத்துப்பாட்டியின் ஒப்பாரி பார்த்து.
வீட்டிற்கு வந்த இன்னொரு பாட்டி அம்மாவிடம் சொன்னார்.” தேமுத்துக்கு பிடிச்சிருகிறது என்னதுன்னு தெரியுதாம்மா? அவளுக்கு “காமக்கிறுக்கு” பிடிச்சிருக்கு. இருவது வயசுலேயே தனியாயிட்டாள்ளா.அதக்குப்புறம் ஒழுக்கமா வேற இருந்துட்டா.இப்போ வயசான பிறகு இப்படி “கோட்டி பிடிச்சி” கத்துறா.சில வயசானவயிளுக்கு இப்படி வருமாப்பு”.

தேமுத்துப்பாட்டியின் மறுநாள் ஒப்பாரியை கேட்கும்போது சிலிர்த்தது.

பாட்டி 3

-நான் பிறக்கும் போது அம்மாவுக்கு வீட்டுவேலை செய்ய துணைக்கு வந்த பார்வதி பாட்டிதான் அவர் குடுமப்த்தை நிமிர்த்தியவர்.

புருசன் “வைரவன் ஆசாரி” எப்போதும் மாம்பட்டை அடித்து தூங்கிக்கிடப்பார்.

என்னை வளர்ததே பார்வதிபாட்டிதானாம்.

வெத்தலையும் போயிலையும் சுண்ணாம்பும் எப்போதும் பாட்டியின் வாயில் அடங்கிருக்குமாம்.

பத்து வீட்டு வேலைசெய்து தன் இரண்டுமகளை கட்டிக்கொடுத்து, மகன் வீட்டில் ஆசுவாசமாய் இருக்க நினைக்கையில் பாட்டிக்கு அதிகாமான வெத்தலை போயிலை போட்டதால் “வாய்புத்துநோய்” வந்ததாம்.

திருவனந்தபுரம் சித்திரைதிருநாள் ஆஸ்பித்திரில சொல்லிட்டாங்களாம் அது மோசமான நோயுன்னு.

மகள்களும் நோயை பார்த்து முகம் திருப்பிக்கொள்ள, ஒருதடவை நாகர்கோவில் போயிட்டு ஆஸ்பித்திரிக்கு வந்துரேன் என்று சொல்லி வந்த பாட்டி, எங்க வீட்டுக்கு வந்து அவுங்க வளத்த பிள்ளையான எனக்கு ”க்ரீம் கேக்கு” ஊட்டிவிட்டு “விஜி பாட்டி ஆஸ்பித்திரிக்குக்கு போறேன்” ன்னு சொல்லிட்டு திருவனந்தபுரம் பஸ்ஸ்டாண்டு ஹோட்டல்ல மசால்தோசைல தூக்கமாத்திரை கலந்து சாப்பிட்டு செத்துபோயிட்டாராம்.

பாட்டி 4

நல்லம்மா பாட்டிக்கு எப்பவும் அவுங்க பாம்படத்த யாராவது அறுத்துகிட்டு போயிடுவாங்களோங்கிற பயம்.

சீலைய காத சுத்தி போர்த்திதான் கிடப்பாங்க.

சின்ன வயசுல புருசன் கொழும்புல போய் சம்பாரிச்சு அனுப்ப அனுப்ப ஊரெல்லாம் தனி ஆளா நின்னு சொத்து வாங்கி குவிச்சாங்களாம் .

வெளங்காட்டுக்குள்ள இருக்க புளியமரத்துல எவனாவது புளிபறிக்கானா, சப்போட்டா திருடுறானா ன்னு பாக்குற்தே சின்ன வயசுல இருந்து இருக்க வேலையாம்.

மனசெல்லாம் தந்திரம்.

எவன் நம்மள அழிக்கப்போறான்கிற பயம்.

சொத்துபத்திரத்த எல்லாம் அடிக்கடி இரும்புபொட்டிக்குள்ள இருந்து எடுத்துப்பாக்கது. அப்புறம் இறுக்க பூட்டிவைக்கிறது.

மவன் மருமவள் டவுணுக்கு கூப்பிட்டாக்க கூட போறதுல்ல.

அதுக்கப்புறம் வயசாக வயசாக தனியா இருக்கும்போது பாட்டி பைத்தியம் மாதிரி கத்துனாங்க.

சின்ன பயலுகள் ஏதாவது ஒரு பேப்பர எடுத்துக்கிட்டு” பாட்டி இந்த பத்திரத்துல கையழுத்து போடுங்கன்னு வெளாடுறதும்.பாட்டி என் சொத்த எவனுக்கும் தரமாட்டன் தரமாட்டன்னுட்டு அழுது பொரளுரதும் எங்க ஊர்ல அடிக்கடி நடந்துச்சாம்.

பாட்டி 5

பாட்டியின் கண்களில் வாழ்தலுக்காக பேரார்வம் இல்லையென்றாலும், சத்தே இல்லாத வாழ்க்கை வாழ்வதற்கும் அவர் தயாராய் இல்லைதான்.

தன் முன்னே இருக்கும் காய்கறி தோல்களாலும், பழங்களாலும் அழுக்காக்கப்பட்ட கூடையில் பச்சை திராட்சை கொத்துக்களை அடுக்கி வைத்திருந்தார்.

தூக்கிகளும் தராசுகளும் படிக்கல்லும் கூடையின் ஒரத்தில் குழைந்து கிடந்தன.வாடிக்களையாளர் வந்தால் அவற்றுக்கு கண நேர நிமிர்வு கிடைக்கலாம்.

தரையை பார்த்திருந்த பாட்டின் கண்களுக்கு பூட்ஸ் தெரிகிறது. பூட்ஸை பாத்தபடியே மேலே கண்களை விடுகையில் “ஆஹா போலிஸ்காரர்” அல்லவா நிற்கிறார்.

“ஏம்பாட்டி அரைக்கிலோ திராட்சை போடு”

பாட்டி கூடையில் கையை விட்டு சிந்தினது சிதறினது,முன்னாலே பழுப்பேறிய திராட்சை எல்லாவற்றையும் பொறுமையாக பொறுக்கி பொறுக்கி தராசு தட்டை பிடித்தபடியே எறிகிறார்.

அந்த எறிதலில் தெரியும் சலிப்பும், எரிச்சலும் போலீஸ்காரரை உறுத்த அப்போதுதான் திராட்சை இருக்கும் தராசு தட்டை பார்க்கிறார்.பார்த்தால் பழுப்பேறி திராட்சையும் ஊறின திராட்சைகளும் கிடக்கிறது.

“யம்மா யம்மா... நான் ஒசிக்கு கேட்கிறேன்னு நினைக்காத. பணம் தருவேன். இந்தா வாங்கிக்க. நல்ல திராட்சையா போடும்மா”

பாட்டி அலெட்சியமாக போலீஸ்காரை பார்த்துவிட்டு, காசை வாங்கிக்கொண்டு “ஆராக்கிய கொத்தாய் “ பருத்த திராட்சை கொத்துகளை போட்டு
எடை போட ஆரம்பித்தார் நிதானமாக.

Wednesday 2 January 2013

கதை போல் ஒன்று - 65


இரவில் அரைகுறை தூக்கமாக கண்களை விழிக்காமலே ரெஸ்ட் ரூம் சென்று திரும்பி,கட்டிலில் படுத்து தூங்குவதில் கில்லாடி நான்.

ஆனாலும் குதிகால் எல்லாம் சரியாக தண்ணீர்விட்டு கழுவியே வருவேன்.

அந்த தூக்க கலக்கத்திலும் குதிகால் கழுவாவிட்டால் அதில் சனி ஒட்டிக்கொள்ளும் என்ற வாக்கியம் நினைவுக்கு வரும்.

கண்களை அரைகுறையாக மூடிக்கொண்டு நடந்து வந்தால் அந்த இரவில் டைனிங் டேபிளில் ஒரு உருவம் சாப்பிட்டு கொண்டிருந்தது.

சட்டென்று அந்த காட்சியின் தன்மையை விளங்கிக்கொள்ள முடியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்துக்கு வந்தால், என் அறையை பகிர்ந்திருக்கும் தஸ்தகீர்கான் தான் அது.

குவைத் போய் சேர்ந்து, தனிமையின் வெப்பத்தில் தவித்து கொண்டிருக்கும் போது என் அறைத்தோழராக வந்தவர்தான் தஸ்தகீர்கான்.

என்னைவிட ஏழுவருடம் சிறியவர்.

முதல் நாள் பார்த்தவுடனே எனக்கும் தஸ்தகீர்கானுக்கு இடையே நட்பு பொங்கிற்று.

“என்ன பாஸ் இப்போ சாப்பிட்டுருக்கீங்க”

தஸ்தகீர்கான் சிரித்தபடியே ” இன்னையில இருந்து நோன்பு தொடங்குது பாஸ்”

உறைத்தது அறிவுக்கு.ஆமா இன்னைல இருந்து ரமஜான் தொடங்குது.

“சாரி பாஸ் மறந்தே போயிட்டேன்”

மணியை பார்த்தேன் மூன்றே முக்கால்.

தூக்கம் கலைந்ததால் சோபாவில் உட்கார்ந்தபடியே சாப்பிடும் தஸ்தகீரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

“பாஸ் இன்னையில இருந்து வீட்டலயே காலையில சாப்பிடுறுங்க வெளிய சாண்ட்விச் கடை திறந்திருக்காது”

“நானும் நேத்தே கேள்விபட்டேன். எதாவது சேமியா கிண்டி சாப்பிட வேண்டியதுதான்” என்றேன்.

பேசிக்கொண்டிருக்கும் போதே சாப்பாட்டு தட்டை எடுத்துக்கொண்டு சின்க்கை நோக்கி போனார் தஸ்தகீர்கான்.

தட்டில் பாதி சாப்பாடு அப்படியே இருந்தது.

“ஏன் சாப்பிடலையா” என்றேன்.

”இல்ல சாப்பிட முடியல பாஸ்... முதல் நாள் இல்ல அதனாலன்னு நெனைக்கிறேன்”

”சரி பாஸ் நீங்க சாப்பிடாட்டி போங்க. எனக்கு கொடுங்க பாஸ். நான் சாப்பிடுறேன்” என்றேன்.

“இது எச்சில் நீங்க சாப்பிடுவீங்களா”

“எச்சில்னா நீங்க துப்பியா தந்தீங்க.சும்மா வைச்சிட்டு போங்க. நான் சாப்பிடுறேன். வெளிய வேற சாப்பாடு கிடைக்காது “

சாப்பாட்டை வைத்துவிட்டு ரெடியாகி ஆபீஸ் போய்விட்டார்.

நான் பல்விளக்கி குளித்து சாப்பிட உட்கார்ந்தேன்.

நல்ல சிக்கன் குழம்பு, சிக்கன் பீஸ் செழுமையாக மசாலா பிடித்து ருசியாக இருந்தது.

இருந்தாலும் காலையில் சோறு சாப்பிடுவது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது.

வயிற்றுக்கு சாப்பிட்டேன்.

அல்லது காலையில் சாண்விச் கடையில் நீளமான ரொட்டியில் நம்ம ஊர் வடை போல் ஒன்றை ( பிலாப்பி) வைத்து தருவார்கள். அதையும் பெப்சியையும்தான் குடிக்க வேண்டும்.

சாயங்காலம் வந்தவுடன் தஸ்தகீர்கான் கேட்ட முதல் கேள்வி “சாப்பாடு உங்களுக்கு பத்திச்சா. ருசியா இருந்திச்சா”

திருப்தியான பதிலை நான் சொல்ல அவர் முகத்தில் உண்மையான நட்பு மிளிர்ந்தது.

மறுநாள் முதல் தினமும் எனக்கு தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்தே, அவர் சாப்பிட்டார்.

நானும் சிக்கனும் முட்டையுமாக சாப்பிட்டு வளர்ந்தேன்.

நாங்கள் இருந்தது பிண்டாஸில்.தஸ்தகீர்கானீன் மாமாவின் குடும்பம் இருந்தது ஃபாஹீலீல்.

மாமா வீட்டுக்கு அழைத்துப்போனார்.மாமா தன்னுடைய காரில் குவைத்தை சுற்றிக்காட்டினார்.

தினமும் நானும் தஸ்தகீர்கானும் விடிய விடிய பலகதைகளை பேசுவோம்.

தம்பி மாதிரியான பழக்கத்தை பழகிவிட்டார்.

ஒருகாலையில் நான் சாப்பிடும் போது பக்கத்தில் கிண்ணத்தில் நறுக்கிய பழங்கள் இருந்தன.வடிவமாக நறுக்கப்பட்ட ஆப்பிள், பைனாப்பிள் போன்ற பழங்களில் உலர்பழங்கள் வேறு போட்டிருந்தார்.

அதுபற்றி அன்று மாலை கேட்டதற்கு ”எனக்கு பழம் வெட்டினேன்.அப்படியே உங்களுக்கும்” என்று சிரிக்க, நான் தஸ்தகீர்கான் தோளில் கைபோட்டு கொண்டேன்.

டெபுடேக்ஷனில் என் வேலை முடிந்து ஒரு வாரம் கழித்து என்னை கிளம்ப சொல்லிவிட்டார்கள்.

சொன்னதும் தஸ்தகீர்கானின் கண்கள் கலங்கிவிட்டன.

நானும் உணர்ச்சிமயமானேன் அவர் கைகளை பிடித்து” நாம் உண்மையிலே சொந்தமாகிவிட்டோமா பாஸ்” என்று சொன்னேன் காமடியாக ஆனால் உள்ளே ஒரு நெகிழ்ச்சியை வைத்தே.

தினமும் இன்னும் ஆறுநாள்தான் என்கூட இருப்பீங்க
இன்னும் நாலு நாள்தான் இருப்பீங்க என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

மூன்று நாள் முன்னாடி நான் தஸ்தகீர்கானுக்கு பெரிய டிரீட் வைத்தேன்.அப்புறம் ஒரு பிராண்டட் க்ஷர்ட் பரிசளித்தேன்.

கிளம்ப ஒருநாளே இருக்கும் போது இரவு நெடுநேரம் பேசிக்கொண்டே இருந்தோம்.

எனக்கு ரூமில் விடிபல்பு எரிவது பிடிக்காது.

கும்மிருட்டு விரும்பி.

இருட்டில் அவரவர் கட்டிலில் படுத்துக்கொண்டே பேசிக்கொண்டே இருப்போம்.யார் முதலில் தூங்கிறோமோ அப்போது பேச்சு நிற்கும்.

அன்று பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று தஸ்தகீர்கான் சொன்னார்.

“பாஸ் நீங்க போகும் போது நான் ஒரு பார்சல் தரேன். அத சென்னையில கொடுத்திருங்க.ஒன்னுமில்ல அது பூஸ்ட் மாதிரி ஒரு எனர்ஜி டிரிங்தான்.மாமா உங்ககிட்ட கொடுக்க சொல்லி சொன்னாரு. இந்தியாவுல எங்கப்பா வாங்கிப்பாங்க. என் மாமா பேத்திக்காம், சூட்கேஸ்ல அட்ஜஸ்ட் செய்து வைச்சி கொண்டு போயிருவீங்கல்ல”

இருட்டில் இதை கேட்டுகொண்டிருந்து நான் பதிலே சொல்லவே இல்லை.

“பாஸ் என்ன தூங்கிட்டீங்களா”
“பாஸ் இவ்வளவு சீக்கிரமா தூங்கிட்டீங்களா”
“சரி சரி தூங்குங்க நாளைக்கு அந்த பார்சல் பத்தி உங்ககிட்ட சொல்றேன்”

நான் தூங்கவில்லை.

குழம்பிக்கிடந்தேன்.

என்ன முடிவு எடுப்பது? பார்சலை கொண்டு போவதா? இல்லையா?

இல்லை என்றால் ஏன்?

நான் ஏன் கொண்டு போகனும் தேவையில்லாம ரிஸ்க எடுக்கனும் கூவினேன்.

மனசாட்சி கேட்டது “இதில் என்ன ரிஸ்கப்பா.ஏன் கொண்டு போகமாட்டேன் என்கிறாய்.தெளிவான காரணத்தை சொல்லு”

“அது அது தஸ்தகீர்கான் ஒரு முஸ்லிம்.அவர் மாமா ஒரு முஸ்லிம். அந்த பார்ச்சலில் என்ன இருக்கு என்று எனக்கு தெரியாது”

”இதுதான் உன் நட்பா? பார்சலில் என்ன இருக்கு என்ற குழப்பம் இருந்தால் அதை தஸ்தகீர்கானிடமே கேள். அதை வாங்கிய பில்லைக்கேள்.அதைவிட்டு பதிலே சொல்லாமல் மவுனமாக கிடந்தால் அது என்ன ஞாயம்.இத்தனை நாள் அவன் சாப்பாட்டை சாப்பிட்டு ருசித்து கொழுத்து விட்டு, இப்போ உதவி என்று வரும் போது ஒடுகிறாயே விஜய்”

மனசாட்சியின் கேள்வியால் மனம் பிசைந்தது.

தூக்கமே வரவில்லை. உதவி செய்ய பயமாய் இருந்தது.

திரும்ப திரும்ப ”எதுக்கு தேவையில்லாத ரிஸ்க்” என்று தோண்றியது.

சிறுபான்மையினரை மதித்தல், இலக்கியம்,தீவிர இலக்கியம் எல்லாம் என்னை துன்புறுத்தியது.

கனவில் அ.மார்க்ஸ் வந்து இத்தனை நாளும் என் கட்டுரைகளை படித்து புரிந்துகொண்ட லட்சணம் இதுதானா என்று கேட்பதுபோல் இருந்தது.

என்ன செய்ய? என்ன செய்ய? என்னதான் செய்ய? அப்படியே கிறங்கி தூங்கிவிட்டேன்.

மறுநாள் நான் எதிர்பார்த்தது மாதிரி இல்லாமல் தஸ்தகீர்கான் அந்த பேச்சையே எடுக்கவில்லை.

காத்திருந்தேன்.

ஆனால் அவரோ பார்சல் பத்தி பேசவே இல்லை.

இயல்பாக ஜாலியாக பேசினார்.

ஏர்போர்ட் வரை வந்து வழியனுப்பியெல்லாம் வைத்தார்.

கடைசி கணம் வரை பேசவே இல்லை பார்சலை பற்றி.

அல்லது அன்று இரவு ”உண்மையாகத்தான் தூங்கினீர்களா என்று.”

வர வர என்னுடைய துரோகம் பற்றி கவலைப்பட்டுகொண்டே வந்தேன்.

“ச்சே என்ன கேவலம்டா நான்” என்ற எரிச்சல் வேறு மண்டியது.

சென்னை வந்ததும் குடும்பம் பார்த்து, சாக்லேட் பகிர்ந்து, குழந்தையை பார்த்து உச்சி முகர்ந்து தஸ்தகீர்கானை மறந்தே விட்டேன்.

மனித சுபாவம்தானே.

இரவு படுக்க போகும் போது மனைவி விடிபல்பு எல்லாத்தையும் அணைத்து கும்மிருட்டாக்கினாள்.

எனக்கு அந்த கும்மிருட்டில் தஸ்திகீர்கான் “பாஸ் இவ்வளவு சீக்கிரமா தூங்கிட்டீங்களா” என்று கேட்பது போலவே இருந்தது.

ஸ்டிரஸ்ஸாக இருந்தது.

எழுந்து விடிபல்பை போட்டேன்.

“உங்களுக்கு கசம் இருட்டுதான பிடிக்கும் ஏன் நைட் லாம்ப போடுறீங்க. குவைத் போயிட்டு வந்து மாற்றம் தெரியுதே “ மனைவி செல்லமாக சலித்து கொண்டாள்.

கதை போல் ஒன்று - 64

ப்ரியாவை மடக்க ரொம்ப கஸ்டபட்டேன்.

வழக்கமான “டைம் என்ன” யுத்தியை கையாண்ட போது பஸ்ஸ்டாப்பில் எல்லோர் முன்னாலும் சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.

எல்லோர் கண்களும் என்னை நோக்க அவமானமாகிவிட்டது.

மறுநாள் முதல் வேறு யுத்தி.

ஜெமினியில் இறங்குவாள்.நானும் அங்குதான் இறங்குவேன்.

அவள் ராணி சீதை காம்பவுண்ட் வழியே மவுண்ட் ரோட் செல்வாள்.நான் பின்னாடியே போவேன்.

சரியாக முப்பது மீட்டர் அவளை பின் தொடர்வேன்.
அவள் என்னை பார்க்கிறாளோ இல்லையோ, பின் தொடர்வேன்.

அங்கே ஒரு ஏடிஎம் செண்டர் வர அவளை விட்டு அதில் நுழைந்து விடுவேன்.

அங்கு நூறு ரூபாய் எடுப்பேன்.சில சமயம் மினி ஸ்டேட்மண்ட். சில சமயம் செக் புக் வேண்டுவேன் ஏடிஎம் மிசினிடம்.

இப்படி இரண்டு மாதங்கள் போன பிறகு, மூன்றாவது மாதம் ப்ரியாவிடம் மாற்றம் தெரிந்தது.குறைக்கண் போட்டு பார்க்க ஆரம்பித்தாள்.

நான் அவளை விட்டு பிரியும் போது ஏடிஎம் கண்ணாடி கதவில் அவள் என்னை திரும்பி பார்ப்பது தெரிந்தது.
ஆம் கல் கரைய ஆரம்பித்துவிட்டது.

அதிலிருந்து பஸ்ஸில் அவளைப்பார்த்து சிரிப்பேன்.

பார்ப்பாள் ஆனால் சிரிக்கமாட்டாள்.

ப்ரியா உயரமானவள்.நான் பிளாட்பாரத்தில் நடந்தால், அவள் கிழே நடந்துவந்தால் இருவரும் ஒரே உயரமாய் இருப்போம்.

முகக்களை என்றால் அழுத்தம் திருத்தமான ஒவியம் போல இருப்பாள்.

இப்படியே போனால் எப்போ இவளை பீச்சுக்கு கூட்டிப்போவது, எப்போது முத்தம் கொடுப்பது,

எப்போது எல்லாத்தையும் செய்வது.

தீபாவளிக்கு இரண்டு நாள் முன் சட்டென்று என் மொபைல் நம்பரை பேப்பரில் எழுதி விருவிருவென்று அவளிடம் போய் கொடுத்துவிட்டேன்.

வாங்கிக்க்கொண்டாள்.தீபாவளி அன்று வாழ்த்து சொன்னாள்.

நான் பதில் வாழ்த்து சொல்ல.

”நான் கிறிஸ்டியன்”

“அப்ப பொட்டு வைச்சிருக்க”

“ஆர்.சி சொந்த ஊரு வேளாங்கன்னி”

மறுநாள் நானும் ப்ரியாவும் ஆட்டோவில் ஆபீஸுக்கு போனோம்.ஆபீஸுக்குத்தான் போகவேண்டுமா என்ற யோசனை இருவருக்குமே வர ஸ்பென்சர் பிளாஸாவில் உள்ள ”கப் அன் ஸாஸர்” கடையில் டீ உறிஞ்சி பேசிக்கொண்டிருந்தோம்.

”நீங்க புக்கு படிப்பீங்களா”

ஆமா. சும்மா பஸ்ஸுல பந்தா காட்டுறதுக்கு.

சிரித்தாள்.

நான் பார்த்தேன் அன்னைக்கு நீங்க வாசிச்சிட்டிருந்த புக்கு அட்டைப்படத்த “பசித்த மானிடம்”

ஆமா நல்லாயிருக்கும்.ஹோமோ செக்ஸ்பத்தின புக்கு”

“ஹோமோ செக்ஸ்னா ஜென்சும் ஜென்சும் பண்றதா?

ஆமா”

அது எப்படி பாஸிபிள்.

நான் அவள் கைகளை பிடித்தேன்.இயல்பாய் வைத்திருந்தாள்.கொஞ்சம் மேலே முழங்கை வரை தடவினேன்.

அமைதியாகவே இருந்தாள்.

“ஒருநாள் பீச்சுக்கு போலாமா” என்றேன்.

“அதுக்குத்தான் என்கிட்ட பழகினீங்களா”

“இல்ல அப்படியில்ல.சும்மாதான் கேட்டேன்.ம்ம்ம்..உன்ன பத்தி சொல்லு ப்ரியா”

வேளாங்கண்ணியில இருந்துதான் வரேன்.ஒரே பொண்ணு.அப்பா இல்ல.இங்க சித்தப்பா வீட்ல இருந்து வேலைக்கு போறேன்.
ப்ரைமரி ஸ்கூல்ல டீச்சர்.படிச்சதெல்லாம் இங்குனதான்.சித்தப்பா வீட்லதான்.அப்பப்ப ஊருக்கு போய் அம்மாவ பார்பேன் அவ்ளோதான்.”

”உங்க சித்தப்பா விட்லயே இருக்கியே, உங்க சித்தி கொடும எல்லாம் பண்ணமாட்டாங்களா”

”ச்சே சே அப்படியெல்லாம் இல்ல அவுங்க நல்ல டைப். சித்தப்பா பையன் தான் ஒரு பொடியன் கிடக்கான்.எப்பவும் சண்டைக்கு வருவான்.நானும் சின்ன பிள்ள மாதிரி சண்ட போடுவேன் அவன் கிட்ட”

“ம்ம்ம்..நீ ரொம்ப அழகா இருக்க ப்ரியா.முதல்ல நான் டைம் கேட்கும் போது ஏன் மூஞ்சிய திருப்பிகிட்ட”

“பயமாயிருந்துச்சு அதான்”

கைகளை அவள் கன்னத்தில் ஒரு விநாடி வைத்தேன்.ஒன்றுமே சொல்லவில்லை.சட்டென்று எடுத்துவிட்டேன்.

அன்றிரவு தூங்கவே முடியவில்லை.வாழ்க்கையில் முதன் முதலில் ஒரு பெண்ணின் கன்னங்களை காமத்தோடு தொட்டிருக்கிறேன்.

அதன் இன்பம் இரவு முழுவதும் சுழன்று சுழன்று அடித்தது.

ஏதோ ஒன்றை சாதித்தது மாதிரியான சுகம்.

தினமும் ஃப்ரியாவும் நானும் பேச ஆரம்பித்தோம்.

பாலச்சந்தர் கதாநாயகி மாதிரி எதற்கெடுத்தாலும் சிரிப்பாள்.சத்தாமாக் சிரிப்பாள்.

அவள் அப்பாவின் கால் எப்படி ஃபிராக்சர் ஆனது என்பதை கூட சிரிப்பாய்தான் சொன்னாள்.

கோவப்படவே மாட்டாள்.எல்லாமே வியப்புதான் அவளுக்கு.

அவளிடம் பேசி பேசி தினமும் அவளை அங்கிங்கு தொட்டு தொட்டு இரவு முழுவதும் தூங்காமல் கிடந்தேன்.

ப்ரியாவிடம் பிடித்தது அவள் என்னை லவ் பண்றேன் பண்ணல போன்ற தொல்லைகளை தராமல் இருந்தது.

அந்த டாப்பிக்கையே எடுக்க மாட்டாள்.

ஆனால் காமம் என்னை படுத்த படுத்த முடியவில்லை.

எப்படியாவது பீச்சுக்கு கூட்டிபோய்விட வேண்டும்.
மொபைலில் Send message later என்றொரு ஆப்சன் உண்டு.

அதில் ஐந்து எஸ் எம் எஸ் டைப்செய்தேன்.

“எனக்கு உன் ஞாபகமாகவே இருக்கிறது”

“எனக்கு உன் வயிற்றை முகர்ந்து பார்க்க வேண்டும்”

“சில சமயம் பேசும் போது தெரிக்கும் உன் எச்சில் எனக்கு கொடுக்கும் குளிர்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது”

“பீச்சுக்கு போலாமா ஃப்ளீஸ் ஃப்ளீஸ்”

“ஃப்ளீஸ் ப்ரியா பீச்சுக்கு போலாம்”

இதை முறை இரவு ஒரு மணி, ஒண்ணே முக்கால், இரண்டரை, நான்கு மணி, மற்றும் ஐந்து மணிக்கு போகுமாறு செட் செய்துவிட்டு நிம்மதியாக தூங்கிவிட்டேன்.

காலை சந்திக்கும் போது ப்ரியா கேட்டாள்.
”நைட் முழுசும் தூங்காம எனக்கு மெசேஜ் பண்ணிட்டுருந்தீங்களா”

“ம்ம்ம்”

சிரித்தாள்.நீங்க நல்லவன் மாதிரியே இருக்கீங்க,ஆனா நல்லவன் கிடையாது”

ம்ம்ம்”

மறுபடி சிரித்தாள்.

”நாளைக்கு பீச் போகலாம்”

மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

என்ன செய்வது என்று ஒரே திட்டமிடல்.

கல்லூரிக்காலங்களில் பீச்சுக்கு நண்பர்களோடு ஸீன் பார்ப்பதெற்கென்றே போவோம்.

காதலன் மடியில் காதலியோ, காதலி மடியில் காதலனோ இருந்து முத்தங்கள் பொழிந்து கொள்வார்கள்.காதலன் காதலி மார்பை தடவிக்கிடப்பான்,காதலி சுகத்தில் சொக்கிக்கிடப்பாள்.
பார்க்க பார்க்க உச்சந்தலையில் ஏறும்.

நாளை ப்ரியாவை அணைக்கபோகிறேன்.முத்தமிடப்போகிறேன்.தடவ போகிறேன்.

உள்ளத்தின் ஒரத்தில் எச்சரிக்கை மணியும் அடித்தது

” மாட்டிக்காதடா, லவ், கல்யாணம்ன்னு மாட்டிக்காத”

நானே எனக்கு சமாதானம் சொன்னேன்.

”மாட்டிக்கமாட்டேன் அவ மனசு கஸ்டபடாத மாதிரி எப்படி கழட்டி விடுறதுன்னு எனக்கு தெரியும்”

அண்ணாசமாதி பீச்சும், கண்ணகி சிலை பீச்சும் கூட்டமாய் இருக்கும் என்று நண்பன் சொல்ல, லைட் ஹவுஸ் பீச்சில் நாங்கள்.

கூட்டமே இல்லை.நானும் அவளும் மட்டும் தான்.

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டே இருந்தோம்.

தலைக்கு குளித்து முடியை புஸுபுஸுவென்று விட்டிருந்தாள்.

பின்னால் கைபோட்டு அவள் முடிகளை அணைக்க முடியவில்லை.திமிறிக்கொண்டே இருந்தது.

முதல் முத்தத்தை நெற்றியில் ஆரம்பித்தேன்.கண்களை மூடிக்கொண்டாள்.

ஆவேசமாய் இருவரும் முத்தமிட்டு கொண்டோம்.கன்னத்தில் இருந்து உதட்டுக்கு முத்தம் பரவிற்று.

சொக்கி கிடந்தோம் இருவரும்.

முத்தமிட்டு கொண்டே இருக்கும் போதே அவள் மார்பை தொட்டேன்.

சட்டென்று அடி அடித்து விலக்கிவிட்டாள்.மறுபடி தொடப்போனேன்.

”வேண்டாம் வேண்டாம்” என்று மறுத்தாள்.

மீறித்தொட அமைதியாய் இருந்தாள்.

ஒரு மிருகம் மாதிரி இருந்தேன்.

நான் கற்ற கலாச்சாரம், கல்வி, நல்லது, நளினம் எல்லாம் அங்கே உதறப்பட்டது.

அவள் அமைதியாய் இருந்தாள்.

அங்கு இங்கு விழுந்து,அவள் முதுகில் கைவைத்தேன்.நெளிந்தாள்.

ஜிப் வைத்த சுடிதார் போட்டிருந்தாள்.நான் ஜிப்பை அவிழ்க்க போனேன். சட்டென்று எழுந்து திட்டினாள். “நான் போறேன்ப்பா.நீங்க எனக்கு பிடிக்காதத செய்றீங்க”

“இல்ல ப்ரியா செய்யல ஸாரி. உட்காரு”

உட்கார்ந்தாள்.

ஐந்து நிமிடம் கழித்து மறுபடியும் ஜிப்பை திறக்க போனேன்.திமிறினாள்.

வலுவை சேர்த்து அவளை அடக்கி திறந்து விட்டேன். அவள் க்ஷாலை போர்த்தி , ஜிப்பை ஒரு ஜாண் அளவுக்கு திறந்தேன்.

பளிங்காய் முதுகு தெரிந்தது.

கொஞ்சம் கீழே நகக்கீறலும் பல்தடமும் மாதிரியான தழும்பு.தழும்பை பார்த்தால் அது வலியை கொடுத்திருக்கும் காயம் போல தெரிந்தது.

”ப்ரியா என்னது இது”

“என்னது என்னது”

“இல்ல ஏதோ தழும்பு மாதிரி இருக்கே.”

”ம்ம்ம்...பத்தனைச்சு வருசமா சித்தப்பா வீட்ல இருக்கேன்ல.வீட்ல யாருமே இல்லன்னா சித்தப்பா என்னோட இது மாதிரி விளையாடுவாரு”

அதிர்ச்சியாய் இருந்தது.

“நீ சொல்ல வேண்டியதுதான நாய உங்கம்மா கிட்ட”

“ஒண்ணுமே சொல்ல முடியாதுப்பா.சித்தப்பாதான் பணம் எல்லாத்தையும் கொடுக்கிறார்.அவரும் பலநேரம் நல்லாத்தான் இருப்பார்.என்னைக்காவது வீட்ல யாரும் இல்லன்னா பாய்ஞ்சிருவார்.அப்படியே கிடந்து எந்திருச்சுருவேன்”

அமைதி என்றால் அழ் அமைதி நிலவ ஆரம்பித்தது.

கடலின் அலைகூட சத்தமில்லாமல் அடித்தது போல் இருந்தது.

அவளை இன்னும் இழுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டேன்.

நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

விரலை எடுத்து அவள் முதுகு தழும்பை தொட்டேன்.

தொட்ட அடுத்த கணமே உள்ளே இருந்து கடவுள் வெடிக்க ப்ரியாவை காதலிக்க தொடங்கினேன்.

லவ் யூ ப்ரியா...

கதை போல ஒன்று - 63


எண்ணே நீங்க பூனைக்கறி சாப்பிட்டிருக்கியளா?

இல்ல.

ஏண்ணே டேஸ்டா இருக்கும் தெரியுமா? 
“இந்த மில்ட்டிரி ஹொட்டல்ல எல்லாம் மொயல் கறி மொயல் கறின்னு சொல்றதெல்லாம் என்ன மொயல்ன்னா நெனச்சிட்டுருக்கிய இந்த பூனக்கறிதான்னே. பஞ்சு மாதிரி இருக்கும். அப்படி நாக்குல வைச்சா சும்மா சல்லுன்னு உள்ள போயிரும்.”

நான் சரவணனை பார்த்தேன்.

திருச்செந்தூர் போகும் போதெல்லாம், சரவணன் தூத்துக்குடியில் இருந்து என்னை பார்க்க வந்துவிடுவான்.

தூரத்து உறவு.

என்னை விட மூன்று வயது சிறிவனென்றாலும், அவனுடைய கம்பீரமா அல்லது என்னுடைய கம்பீரமின்மையா என்று தெரியாது, அவனை பார்க்க ஒரு கெத்து இருக்கும்.

பெரிய மீசையும் ஒங்கிய குரலும் ஆணுக்கு அழகு என்று நினைப்பவன்.”என்னன்னே நீங்க அப்படியே தெரைக்க வேண்டாமா” என்பான்.

உண்மையிலேயே பூனைய திம்பாங்கலால சரவணா?

ஆமா... அடிச்சி சொல்லுவேன் ஹோட்டல்ல போடுற முயல் கறில முக்கால்வாசி பூனைக்கறிதான்னே.

வேறன்ன கறியெல்லாம் சாப்பிடுவல என்ற கேள்வி சரவணனை உற்சாகமாக்கியது.

அணில் பக்கடா பண்ணி சாப்பிட்டுருக்கேன்,

முயல் வேட்டைக்கு போயிருக்கேன். நாலு பேரு மொயல கலைச்சி விடுவானுங்க, மூணு பேரு கண்ணி வெச்சிகிட்டு நிப்போம். மாட்டின பிறகு நம்ம சாமுவேல் சர்டருன்னு தோல உரிச்சிருவான்.

மசாலா தடவி சுட்டு சாப்பிடுங்க நல்லாயிருக்கும்.

புறா.

அது இல்லாமையா... டிரான்ஸ்பார்மர் மேல அல்லது போஸ்ட்கம்பத்துல புறா கூடு கட்டி இருக்கும்.

சதிக்ஷ் அண்ணந்தான் அதில ஸ்பெலிக்ஷ்ட்.

நைட் ஆனா மெல்ல போய் புறா தூங்கிக்கிட்டு இருக்கும் போது, புறா எடுத்துட்டு வந்து தரையில ஒங்குனாப்புல அடி.

இந்த தேங்காய சிதறாம வெடல போடுவாங்க இல்ல அது மாதிரி போடனும்.

ம்ம்ம்...

பன்னி சாப்பிட்டுருக்கேன், மாடு சாப்பிட்டுருக்கேன்.

எலி சாப்பிட்டுருக்கியா?

”ஆமா வெள்ளெலி வேட்டைக்கு போவோம்.புடிச்சிட்டு வந்தா ஊருக்கு வெளிய ஒரு தேமுத்து பாட்டி இருக்காவ. அவியட்டதான் கொடுப்போம்.

அவிய என்ன செய்வாவன்னா அந்த எலிய எல்லாத்தையும் கைய கால ஆய்ஞ்சுட்டு, தோல உரிச்சிட்டு, கொஞ்சமா உப்பு மிளகும் சேர்த்து ஒரல்ல போட்டு இடிப்பாவ,

அத சின்ன சின்ன உருண்டயா உருட்டி, நம்ம வெங்காயந்தக்காளி கொழம்புல போடுவாங்க

ஒவ்வொரு உருண்டையையும் சூடா எடுத்து சாப்பட்டா ருசின்னே...

எனக்கோ ஆர்வம் பிய்த்துகொண்டது,எல்லா கறியையும் பற்றி கேட்க வேண்டுமென்றிருந்தது.

அவனுக்கோ எல்லா கறியை பற்றி சொல்ல வேண்டும் போல இருந்தது.

பொதுவாக இரண்டு ஆண்கள் வெகுநாட்களாய் காமம் கிடைக்காமல் இருக்கும் போது இது போன்று உரையாடிக்கொள்வார்கள்.

முதலில் ஒருவன் உலகம் காமத்தால் கெட்டுவிட்டது போல தொடங்குவான்.

அடுத்தவனும் ஆமா ஆமா என்று ஆமோதிப்பான்.

பின் மெல்ல மெல்ல இருவரும், அவரவர்க்கு தோண்றும் உணர்வுகளை அப்படியே பகிர்ந்து கொள்வார்கள்.

அவரவர் அந்தரங்கங்களை அப்படியே கொட்டுவார்காள்.

” மச்சி இத யார்கிட்டயும் சொல்லாத, சின்ன வயசுல பக்கத்து வீட்டுஅக்கா அவுங்க பிளவுஸ்க்குள்ள காயின்ஸ்ஸ போட்டுகிட்டு என்ன எடுக்க சொல்வாங்கடா”

“மச்சி எனக்கு கூட அதுமாதிரிதான், இவ்ளோ நல்லா தெரிஞ்சவங்க டிரஸ் மாத்துறத பார்க்கிறோம்ன்னு அந்த ஆசையில தோணவே இல்லடா” .

அது மாதிரி நான் எல்லா கறி சுவையை பற்றியும், மனிதர்கள் அதை உற்கொள்வது பற்றியும் கேட்கும் வெறியாய் இருந்தேன்.

சரவணனோ தன்னுடைய எல்லா கறி அனுபவத்தையும் சொல்ல வெறியாய் இருந்தான்.

நத்தை சாப்பிட்டுருக்கியா?

ம்ம்ம்.

காக்கா?

காக்கா சின்ன வயசுலேயே சாப்பிடுவோம்னே.. டேஸ்டாத்தான் இருக்கும். இது கூட சாப்பிட்டுருக்கேன் என்றான்.

எது என்று அவனை பார்க்க, அவன் தன்னுடைய விரல் சுட்டும் இடத்தில் இருந்தது ஒரு மயில்.

அது எனக்கு அதிர்ச்சி.சரவணா மயிலாடா சாப்பிட்டுருக்க....

ஆமான்னே.என்ன இப்போ அதுக்கு.

அடப்பாவி மயில் சாப்பிடுறது சட்டப்படி குத்தம்டா.

ஸ்பீக்கர் போட்டு சொல்லிட்டா சாப்பிடுறோம். அது ரகசியமா நடக்கும்ண்ணே.அந்த வேட்டையே திரில்லிங்.

சரவணனிலன் அம்மாவை பற்றி ,அம்மா நிறைய கதை சொல்லியிருக்கிறார்கள். அவர் முருக பக்தை.

எப்போதுமே முருகர் சிந்தனைதான்.

விரதமிருப்பது கோயிலுக்கு போவது என்று கடவுளுக்கே தன்னை அர்பணித்து கொண்டவர்.

கல்யாணம் ஆகி ஏழுவருடங்கள் குழந்தையில்லாமல் இருக்க, ஒவ்வொரு வருடமும் தூத்துகுடியில் இருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை வந்து தரிசித்து போவார்.

அம்மாவுக்க்கு பையன் மயில்கறி சாப்பிடுவது தெரிந்தால்?

எனக்கு அந்த விசயம் வித்தியாசமாய் பட்டது.

முருகனை தரிசித்து, வரம் வாங்கி பெற்ற பிள்ளை மயிலையே சாப்பிடுகிறதே என்பது மாதிரி தோண்றியது.

பின்னர்” என்ன இப்படி செண்டிமெண்டாய் யோசிக்கிறோம்.

மயில் என்பது ஒரு பறவை. அதை சட்டப்படி சாப்பிடக்கூடாது. அந்த ரீதியில்தான் இவனை எச்சரிக்க வேண்டும். என்று நினைத்தேன்.

”என்ன அமைதியாயிட்டீங்கண்ணே... ”

”சும்மா யோசிச்சேன்.”

”மயில் கறி ருசியால்லாம் இருக்காது.
ஒலகத்துலேயே டேஸ்டே இல்லாத கறின்னா மயில் கறிதான். நார் நாரா பிரிஞ்சி வரும். சை சுத்தமா சாப்பிடவே முடியாது. ஏதோ கொண்ணுட்டோமேன்னு சாப்பிட்டோம். “

கைவிரல்களை அசைத்து நார் நாராக என்பது செய்துகாட்டினான்.

”எல நாய உங்கம்மாவுக்கு தெரியுமா? அவுங்க எவ்வளவு சாமி பக்தில” என்றேன்

”தெரிஞ்சாதானன்னே.”

அவனை பார்க்க எரிச்சல் மண்டியது.

கடற்கரை இருட்டியதும் மணலைத்தட்டி நடந்தோம்.

நான் அமைதியானேன்.

கீரிபுள்ள... என்று ஆரம்பித்தான் சரவணன்.

நான் நாழிக்கிணறு இருக்கும் திசைபார்த்தேன்.
அவனிடம் அந்த டாப்பிக் பேச விருப்பம் இல்லை என்பதை நாசூக்காக உணர்த்தினேன்.

சரவணன் அப்பாவி.அவனுக்கு என் தந்திரம் புரியவில்லை. சொன்னான்.

“இந்த கீரிப்புள்ள இருக்குல்லாண்ணே.

அத புடிக்கிறது ரொம்ப கஸ்டம்.

அத மொத மொதல்ல புடிச்சி கொன்னத மட்டும் மறக்கவே மாட்டேன்னே.

அப்படி இப்படி அங்க ஒடி இங்க ஒடி புடிச்சிட்டோம்.

அப்புறம் அத ஒரு சாக்குல (கோணி) போட்டு மேல நல்லா கட்டினாரு சதிக்ஷ் அண்ணன்,

அப்புறம் அந்த சாக்க ஒரமா புடிச்சிக்கிடாரு.

கீர்ப்புள்ள உள்ள துள்ளுது.

அத அப்படி எடுத்து போஸ்டு கம்பில்ல அதுல ஒங்கி ஒரு அடி,

செத்திரோம்ன்னு பார்த்தா, அது இன்னும் துள்ளுது,

உள்ள துள்ளுரது தெரியுது,

ஒரு மாதிரி சவுண்டு கொடுத்திட்டு துள்ளுது,

சதீக்ஷ் அண்ணன் மூணுதடவை ஒங்கி அடிச்சாரு, சட் சட்டுன்னு கீரிபுள்ள அடிவாங்கறத பார்க்கும் போது எனக்கு அடிவயித்துல சுர்ன்னு பயமாயிருக்கு,

பாவமாயிருக்கு,

என்னடா காரியம் பண்ணிட்டுருக்கோம்ன்னு தோணிச்சி.

என்ன அறியாம சாமிய பேர சொல்றேன்.

ரொம்ப நேரம் அடிச்சி சாக்க அவத்து பார்த்தார் சதீக்ஷ் அண்ணன்.

நானும் பார்த்தேன்.

இதோ இப்படி எட்டி பார்த்தேன்.

அப்படியே பிய்ஞ்சி கிடந்துச்சுண்ணே,

செருப்ப கூட தொட்டுக்காம ஒடுனேன். யப்பா சாமி அத இப்ப நெனச்சாலும் மறக்காது அப்படி ஒரு ஒட்டம்.

அன்னையிலயிருந்து நான் கறியே சாப்பிடுறதுல்ல.
என்னால அது முடியாது பாத்துகிடுங்க.

அவன் சொல்லி முடிக்கும் போது திருசெந்தூர் கோயில் பக்கத்தில் வந்திருந்தோம்.