Sunday 21 October 2012

கலவி செய் சிலந்திகளை...

கலவி செய் சிலந்திகளை
கவ்வி விழுங்கியது ஒணான்.

முக்கி களைத்து முட்டையிட்டு
சக்தி திரட்டி காத்தல் இல்லை.

தாய்மை- தியாகம்
ஆண்மை-அரண்

எதுவுமில்லை;வாரிசு வராது.

எச்சிலெடுத்து வலை பின்னக்
கற்றுக் கொடுக்கும் கக்ஷ்டமில்லை.

முற்றி முதிர்ந்து, கால் உதிர்ந்து
வற்றி மடியும் அழிவில்லை.

கூடலில் கனலாய் காய்ந்து
உடலுள் உடலும் இணைந்து,

உள்ளே உள்ளம் ஒன்றி
இன்பத் திளைப்பில் மரணம்

ஒணான் இறை அவதாரம்!

சேறு அப்பிய ...

தொட்டும் தொடாத ரோஜா மென்மையும்
மழையை வருடும் மெல்லிய ஒளியும்
மழலை உதட்டின் எச்சிலும்
தூரிகை தளும்பும் வர்ணமாய்,
மழைபட்ட களிமண்ணாய்
குழைந்து கிடக்கும் மனதில்.

எல்லாம் தாண்டி
நீர் விட்டு கரைக்கவோ
நிலம் உரசி தேய்க்கவோ
தத்துவங்களால் தகர்க்கவோ முடியாது
உள்ளத்தின் ஒரத்தில்
உறைந்து கிடக்கும் பழி உணர்ச்சியால்
சேறு அப்பிய பன்றியாய் நான்

பேருந்தின் இருக்கைகள்...

பேருந்தின் இருக்கைகள் பிய்ந்திருக்கின்றன
வயதான கையோ வாலிப கையோ
பிஞ்சு கையோ பெண்ணின் கையோ
பிய்த்திருக்க கூடும்.
டீசல் நெடியில்,
ஜன்னல் ஒவியங்கள் விரைவாய் ஒட
பிடித்தவளையோ பிரச்சனைகளையோ நினைத்து
கொஞ்சம் தத்துவமாய்
உள்ளேயே வசனம் பேசி,
குழப்ப சிந்தனையில்,
மோன நிலையில்,
குறிக்கோள் இல்லாத நிகழ்வாய்
நானும்
பிய்த்திருக்கிறேன் இருக்கைகளை.

Saturday 20 October 2012

கதை போல ஒன்று - 56

அடிக்கடி சிரித்தபடியே மன்னிப்பு கேட்கும் கெட்ட பழக்கத்தை எனக்கு உண்டாக்கியவர் ராமசாமிதான்.

நான் கம்பெனியில் சேர்ந்து மூன்று வருடம் அனுபவஸ்தனாகி இருக்கும் போது ( அனுபவம் என்ன அனுபவம் .சேர்ந்து மூன்று வருடம் உயிர் இருக்கிறது, அதுதான் இந்திய கம்பெனி அனுபவம்) பத்து வருடம் எக்ஸ்பீரியன்ஸ் உள்ள சீனியராய் சேர்ந்தார்.

பாய்லர் பைப்பிங் பற்றி பிச்சி உதறுவார்.

டெக்னிக்கலா அவர் கேள்வி கேட்க ஆரம்பித்தால் நான் ஒடுவேன்.

என் டேபிளில் இருந்து ஒரு பேனாவை எடுக்க வேண்டும் என்றால் கூட “ விஜி தப்பா எடுத்துக்காதீங்க! பேனா எடுத்துக்கிறேன்” 

”தப்பா எடுத்துகாதீங்க உங்க டிராயிங்ல சின்ன மிஸ்டேக் இருக்கு ”

தப்பா எடுத்துக்காதீங்க கொஞ்சம் கத்திரிக்காய் கூட்டு சாப்பிடுறீங்களா!

சார்! நீங்க எனக்கு கத்திரிக்காய் கூட்டு குடுக்கிறதுக்கு ஏன் தப்பா எடுத்துகாதீங்கன்னு சொல்றீங்க” என்று கேட்டால் சிரிப்பார்.

அவரை கிண்டல் செய்வேன் இதற்கு.

டாய்லட்டில் ஒருநாள் அவரை பார்த்து,
ராமசாமி சார்! தப்பா எடுத்துக்காதீஙக் கொஞ்சம் ஒண்ணுக்கு இருந்துக்கவா” என்று அவரை கலாய்த்தது கம்பெனியில் புகழ்பெற்ற ஜோக்.

கோபமே அவருக்கு வராது.

ராமசாமியின் அட்வைஸ்கள் எப்போதும் உபயோகமானவை.
.
“நீங்க படம் போடும்போது பின்னாடி யாராவது நின்னு பார்த்தா, இப்படி போடு அப்படி போடுன்னு கமெண்ட் பண்ணினா, ஏன் விஜய் பதறுறீங்க?

எனக்கு தெரியுது உங்க கையெல்லாம் நடுங்குது. 

அதுக்கு என்ன பண்ணனும்ன்னா யாராவது பார்க்கிறாங்கன்னா, வேணுமின்னே உங்க செய்கையை மெதுவா செய்ங்க.

மவுஸ்ஸ மெதுவா மூவ் பண்ணுங்க, மெதுவாத்தான் செய்வேன்னு மனசுக்குள்ள சொல்லிக்கோங்க. 

ஆட்டோமேட்டிக்கா பதற்றம் குறையும். பதறாம இருக்கிறதுதான் பெரிய பலம். அத தெரிஞ்சிக்கோங்க என்பார்”.

கற்று கொடுப்பார். கூச்சபடாமல் கற்று கொளவதுதான் பெரிய வரம் என்பார்.

“தெரியாதத கூச்சபடாம கேட்டு தெரிஞ்சிக்கோங்க.

பத்து வருசம் எக்ஸ்பீரியண்ஸ் ஆன பிறகு இந்த டவுட்டை நீங்க கேட்டா, உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு முடிவு பண்ணிருவானுங்க நம்ம ஃபீல்டுல” என்று டிப்ஸ் கொடுப்பார்.

அவரின் பிறந்த ஜாதியால் சைவ உணவுக்காரர்.

அதில் ரொம்ப ஸ்டிரிக்டாய் இருப்பார்.

சாப்பிடும் போது நாம் முட்டை மீன் கொண்டு வந்திருந்தால் முகத்தை சுளிக்க மாட்டார்.

அது பற்றி தப்பாக “நீங்கள் இதை சாப்பிடுகிறீர்கள் நீங்கள் ஒரு நீசன்” என்றெல்லாம் சொல்ல மாட்டார்.

சைவம்தான் பெரிது, நாங்கள் உங்களை விட ஒரடி உயரத்தில் பறக்கும் தேரில் பயணம் செய்கிறோம் என்றெல்லாம் அளக்க மாட்டார்.

எனக்கும் அவர் உணர்வு புரியும். 

சார் ! சாப்பிடுகிறீர்களா என்றெல்லாம் கேட்க மாட்டேன். அது இங்கிதமல்ல என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்தானே.

ஆனால் என் கூட வேலை பார்க்கும், ராமசாமி வயதுடைய மற்ற இரண்டு மஞ்ச மாக்கான்களுக்கும் இந்த இங்கிதம் தெரியாது.

சைவ உணவாளர்களை நக்கல் செய்யும் பழக்கம் நம்ம ஊர்ல நிறைய இருக்கிறது.

அதன்படி ராமசாமியின் சைவ உணவு பழக்கத்தை ஒட்டுவார்கள் தினமும்.

”ராமசாமி மீன் சாப்பிடுறீங்களா! வறுத்தது. நல்ல வஞ்சிரம் மீனு.”

”ராமசாமி அட்லீஸ்ட் ஆம்லெட் சாப்பிடலாம் நீங்க. உடம்புல சத்து பிடிக்கும். நைட்டு வைஃப்கிட்ட பெர்பார்மன்ஸ் காட்டலாம்.ஹா ஹா ஹா”

”லெக் பீஸ இப்படி கடிச்சி சாப்பிட்டுத்தான் பாருங்களேன்.”

”நேத்து ராமசாமி கறிகோழி கடையில் கோழி வெட்றா மாதிரி கனவு கண்டேன்.”

ராமசாமி முதலில் சிரித்து பார்த்தார்.

எனக்கு முதலிலேயே இது பிடிக்கவில்லை. மஞ்ச மாக்கான்களிடத்தில் சொல்லவும் முடியாது.

“நீ பெரிய மயிரா! சூத்த பொத்திட்டு போடா பாடு “ என்பான்கள்.

அவர்கள் ஒட்டும் போது மட்டும் அமைதியாக இருப்பேன்.

அன்று ராமசாமியை எல்லை மீறியே ஒட்டிவிட்டார்கள்.

வழக்கமாக சிரிக்கும் ராமசாமி அன்று சிரிக்கவே இல்லை.

மஞ்ச மாக்கான்களில் சுரணையுணர்வு வேலை செய்த்திருக்கும் போல.

சாப்பிட்டு முடித்தது எல்லோரும் இருந்து பேசிக்கொண்டிருக்கும் போது,மஞ்ச மாக்கான்கள் ஆரம்பித்தார்கள்.

”ராமசாமி கோபமா எங்க மேல ”

”பாஸ் அப்படியெல்லம் ஒண்ணுமில்ல பாஸ்.” ராமசாமி மழுப்பினார்.

”பிறகென்ன எங்கள பார்த்து சிரிக்காம முகத்த உம்முன்னு வைச்சிட்டு இருக்கீங்க. ஆடு கோழின்னு சாப்பிட்டு உடம்ப வளர்த்துகோங்கன்னு சொன்னது தப்பா “

சவுண்டா சிரிச்சான்கள் மஞ்சமாக்கான்கள்.

ராமசாமி சொன்னார் “பாஸ் நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே”

மஞ்ச மாக்கான்கள்” இல்ல தப்பா எடுத்துக்கமாட்டோம் . சொல்லுங்க என்றார்கள்.

மறுபடி மறுபடி ராமசாமி ”தப்பா எடுத்தக்கமாட்டீங்கல்ல!” என்று கேட்டார்.

”விஜி நீங்களும் தப்பா எடுத்தக்கமாட்டீங்கல்ல ” என்றார்.

நான் “சார் நான் இந்த டாப்பிக்குல்லே கிடையாது. அமைதியாய் இருக்கேன். என்ன இழுக்காதீங்க” என்று அவசராமாய் மறுத்தேன்.

எங்கே அவர் என்னை தப்பாய் நினைத்து விடப்போகிறாரோ என்று பயந்து.

இதற்கிடையில் மஞ்ச மாக்கான்கள் “அட சொல்லுங்க பாஸ். ஒவரா பில்ட்டப் கொடுக்காதீங்க” என்று கனைத்தார்கள்.

ராமசாமி ஆவேசமாய் திரும்பி

“பாஸ் தப்பா எடுத்துக்காதீங்க! 

சத்தியமா தப்பா எடுத்துக்காதீங்க!

நீங்க ரெண்டு பேரும் பேசினா மாதிரி வேற எவனாவது பேசியிருந்தான்னு வெச்சுக்கோங்களேன். ’பீ மிதிச்ச செருப்பை எடுத்து’ மூஞ்சியிலேயே அடிச்சிருப்பேன்.”

என்று சொல்லி எழுந்து போய்விட்டார்.

கதை போல ஒன்று - 55

மாடியில் இருட்டாய் இருந்தது.

அண்ணன் முன்னாடியே மாடி லைட்டை அனைத்துவிட்டான்.

”யாரும் இல்லலா” என்றேன்.

”இல்ல” என்று பையில் இருந்து அதை எடுத்தான்.

பன்னிரண்டாக ஐந்தே நிமிடம் இருந்தது.

மண்டையோடு.

உண்மையான மனித மண்டையோடு.

அண்ணன் மெடிக்கல் காலேஜில் சேர்ந்த புதிதில் அவனுடைய படிப்பால் குடுமத்துக்கே கவுரமாகி போனது.

அதிலும் சென்னையில் நம்பர் ஒன் கவர்மெண்ட் காலேஜில் இடம் கிடைத்ததும் மகிழ்ச்சியால் தவித்தோம்.

முதல் வருடம் அனாட்டமி புக்கான ”கன்னிங்காஹ்ம்” என்னும் புத்தகத்தை அவன் பெருமிதமாக படிக்க தொடங்கும் போது, முதன் முறையாக அண்ணனை வேறொரு ஆளாக பார்த்தேன்.

இவன் நம்மை போல ஒருவன் இல்லை. இவன் வேறு. நான் வேறு.இவன் கொஞ்சம் உயர்ந்தவன்.என்பதாய் பட்டது.

அனாட்டமி படிக்க சீனியர்ஸிடம் இருந்து, அவர்கள் சேர்ந்து வைத்திருக்கும் கை, கால் எலும்புகளை எடுத்து வருவான்.

முதலில் பிளாஸ்டிக் எலும்புகள் என்று நினைத்தேன்.

ஆனால் அது உண்மையான மனித எலும்புகள் என்றான்.

அதுதான் படிக்க எளிதாக இருக்கும். அது சட்டப்படி சரியா? தவறா? என்று எனக்கு தெரியாது. 
கேட்கவும் மாட்டேன்.

ஒவ்வொரு எலும்பையும் பார்க்கும் போது இது எதாவது மனிதனின் உடலின் பகுதி என்று நினைக்க சிலிர்ப்பாய் இருக்கும்.

கட்டிலில் படுத்து கொள்வேன். எலும்புகளை கையில் வைத்து புரட்டி புரட்டி பார்ப்பேன். பலதும் தோண்றும். வாழ்க்கையே புரிந்து விட்டதோ என்று கூட மாயை வரும்.

இதுமாதிரி போய் கொண்டிருக்கும் போது, என்னிடம் பழைய மனித மண்டைஒட்டை காட்டினான்.

அம்மாவிடம் சொல்ல வேண்டாம்” மாடி ரூமில் வைத்து விடுவோம்” என்று சொன்னேன்.

”இந்த மண்டையோட்டை ஒரு நாள் அறுக்கனும் விஜய்” என்றான் அண்ணன்.

மெக்கானிக்கல் படித்தமையால், முதலாம் ஆண்டு எங்களுக்கு “வொர்க்க்ஷாப்பில்” அறுக்க, ஃபைலிங் செய்ய சொல்லி தருவார்கள்.

அதை பற்றி வீட்டில் அடிக்கடி சொல்லி கொண்டிருப்பேன்.அதனாலோ அல்லது என்ன நினைத்தானோ தெரியவில்லை. 

அறுத்து பார்க்கனும் என்றான்.ஹாக்ஸா பிளேடை ஹாக்சாவில் போட்டு காத்திருந்தேன்.

அம்மா அப்பா தூங்கிய பிறகு அண்ணன் மண்டைஓட்டை பிடித்து கொள்ள, நான் அறுக்க தொடங்கினேன். 

பிரண்ட் ஸ்டிரோக்கை வேகமாகவும், பின்னால் இழுப்பதை மெதுவாகவும் செய்தேன்.

பத்து தடவை பிளேடை இங்கும் அங்கும் ஒட விட்டேன். சட்டென்று நிறுத்தி,

”இது ஆம்பிளை மண்டையோடா? பொம்பளை மண்டையோடா? என்றேன்.

“ஆம்பிளை மண்டையோடு” என்றான்.

மறுபடி அறுக்க தொடங்கினேன்.அறுக்க முடியவில்லை.கடினமாக இருந்தது.

“எவன் மண்டைஒடுல இது அறுபடவே மாட்டேங்குது” சலித்தேன்.

குடு நான் செய்றேன் என்று அண்ணன் பிளேடை வாங்கினான்.

கர் கிர் கர் கிர் என்று அறுக்க தொடங்கும் போது மண்டைஒட்டையே பார்த்து கொண்டிருக்கிறேன்.

எலும்பு துகள்கள் பறக்கின்றன சில என் கண்ணாடியிலும், முகத்திலும் ஒட்டி கொள்கின்றன.

"சரி இது செட்டாகாது வேணாம் விடு” என்றான் அண்ணன்.

“இல்ல அறுக்கலாம்” அறுக்கிறேன்.

”இத அறுக்க முடியாதுல இப்படி. சும்மா டைம் வேஸ்ட பண்ணாத”

”இல்ல நா அறுத்துதான் பார்க்க போறேன்” 

”அப்ப நான் தூங்க போறேன்”

“போ. நா கொஞ்ச நேரம் அறுக்க டிரை பண்றேன்.”

அண்ணன் போனது நிம்மதியாய் இருந்தது. நானும் மண்டையோடும் கார்த்திகை மாதத்து இரவு குளிரும்.

இந்த மண்டையோட்டை உடையவர் என்னவெல்லாம் செய்திருப்பார். 

வயிறு முட்ட சாப்பிட்டிருப்பார்.

புறம் பேசியிருப்பார்.

பெண்கள் குளிக்கும் போது எட்டி பார்த்திருப்பார்.
தன் பொண்டாட்டி குளிப்பதை எவனாவது பார்க்கிறானா என்று பதட்டமடைந்திருப்பார்.

திருடியிருப்பார்.

அவர் குழந்தைகளின் சொத்துக்களை யாராவது அபகரிக்க கூடாதே என்று சாமிக்கு வேண்டியிருப்பார்.

அவமானப்பட்டிருப்பார்.

கோமணத்தை அவிழ்த்து தொடை நடுவே விருக் விருகென்று சொரிந்திருப்பார்.

அழுதிருப்பார். 

இளநீரை அண்ணாந்து குடித்திருப்பார்.

பசித்திருப்பார்.பிச்சை போட்டிருப்பார். 

முதல் காமத்தை அனுபவித்து பித்த நிலைக்கு சென்று திரும்பி இருப்பார்.

தன் பெண்ணை கட்டி கொடுத்து விட்டு கட்டிலில் படுத்து அழுது குழுங்கியிருப்பார்.

அரை செண்டி மீட்டர் கூட என்னால் அறுக்க முடியவில்லை.

பென்ஞ் வைஸ் இருந்தாலும் பரவாயில்லை. அதில் ஃபிட் செய்து விட்டு அறுக்கலாம்.

அதுவும் இல்லை. அசதியில் ஆவேசம் அடங்கியது. 

புறச்சூழ்நிலைக்கே அப்போதுதான் வருகிறேன்.

சுற்றிலும் எலும்பு பொடிகள்.கை விரலில் துகள்கள். 

எடுத்து மூக்கருகே கொண்டு மணத்தி பார்க்கிறேன்.

வினோதமான கேல்சியம் இரும்பு கம்பிகளின் கலவையான வாடை. 

இது இறந்த மனிதனோடது என்று சட்டென்று அதன் யதார்த்தம் தாக்க குமட்டியது.கையை துடைத்து. தரையை துடைக்கிறேன்.

தலையில் கொஞ்சமாக கீறப்பட்ட மண்டையோட்டை எடுத்து ரகசிய இடத்தில் பத்திரபடுத்தினேன்.கையை எடுத்து மோந்து பார்த்து ம்ஹூம் என்று குமட்டுவேன். 

மறுபடி மோந்து பார்ப்பேன். 

சரி குளிக்கலாம் என்று பாத்ரூம் சென்று க்ஷவரை திறந்து, மைசூர் சாண்டல் சோப்பால் உடல் முழுவதும் தேய்க்கிறேன்.நாறின மாதிரியே இருக்கிறது. 

வழக்கமாக இரண்டு நிமிடத்தில் குளித்து வருபவன், அன்று அம்பத்தி ஐந்து நிமிடம் குளித்திருக்கிறேன்.

இது நடந்து சரியாக பத்து வருடம் கழித்து அமெரிக்காவின் ஐம்பத்தி எட்டாவது பெரிய நகரமான “பேக்கர்ஸ்ஃபீல்ட்டில்” ஒரு நடன நிகழ்ச்சிக்கு சென்றோம். 

அந்த காட்சியின் பேரே “ நைட் சில்லிங் நியூட் டான்ஸ்” என்பதுதான். 

மிகுந்த ஆர்வத்தோடு இரவு ஏழு மணிக்கே நண்பர்களுடன் அங்கே போக ,இப்போது வரக்கூடாது இரவு பதினொன்று மணிக்கு மேல்தான் என்று சொன்னார்கள். 

பதினொன்ரை மணிக்கு நான், உமர், எழில் மூன்று பேரும் போனோம்.ஒரு டிக்கெட் இருபது டாலர்.

போகும் போது இருக்கும் ஆர்வம் இருக்கிற்தே. வார்த்தைகளால் சொல்ல முடியாது.

முக்கால்வாசி இருட்டில் பச்சை விளக்கு தீம்களில், ஸ்டேஜ் இருக்கிறது. வரிசையாக சேர்கள் இருக்கின்றன.

மூன்று பேரும் உட்கார, பெப்ஸி குடுத்தார்கள். 

அங்கே மது குடிக்க கூடாது.

நடனம் ஆடும் பெண்களை தொடக்கூடாது. 

முதலில் மாநிறமாக ஒரு பெண் நடனமாட வந்தார்.

உடம்ப்பில் ஒரு சொட்டு துணி கிடையாது.

மெழுக்கு மாதிரி இருந்தார்.முதல் முறையாக இது மாதிரியான பெண்ணை நேரில் பார்க்கிறேன்.

துணி இல்லை என்பதால் எந்த கூச்சத்தையும் காண்பிக்க வில்லை. 

ஒரு துள்ளல் இசைக்கு எல்லாமும் தெரியும் படியான அங்க அசைவுகளை காட்டி ஆடினார்.

நண்பர்கள் கமெண்ட் அடித்தார்கள். 

நான் பேசவே இல்லை. பார்த்து கொண்டே இருந்தேன்.

ஜானகிராமன் உடையணியாத சின்னஞ்சிறு குழந்தையை “கீரைத்தண்டு “ என்று எழுதியிருப்பார். 

எனக்கும் அப்படித்தான் தோண்றியது. 

எவ்வளவு கிக்காக இருக்கும் என்று நினைத்து வந்தோம்.இப்படி தோண்றுகிறதே என்று நினைத்தேன்.

எனக்குள் எதாவது உடல் மாற்றம் நிகழ்கிறதா என்று பார்த்தேன்.

ஒன்றுமே இல்லை. 

தட்டையாக நின்று வேடிக்கை பார்த்தேன்.

நடனம் ஆடிவிட்டு இறங்கி எனக்கு மிக அருகே நின்று பொதுவாய் சிரித்து விட்டு போனார். 

மனது முழுமையாக ஏதும் அற்று இருந்தது. 

வெகு நேரம் சிறுநீரை அடக்கிவிட்டு இருக்கும் போது, எதாவது சிந்தனை தோண்றுமா? அது ஒரு அதீத யதார்த்த இருப்பு நிலைதானே.

நிர்வாணத்தின் வெறுமை என்னை தாக்கியிருந்தது.

நிகழ்ச்சி முடிந்து காரில் வரும் போது எழில் சொன்னார் “எனக்கு புத்தருக்கு போதி மரத்துல ஞானக் கிடைச்சா போல இருந்தது “ என்றார். 

எனக்கு நான் அவேசமாக அறுத்த மண்டையோட்டின் காட்சி நினைவுக்கு வந்தது.

அந்த மணமும்தான்.

அது மாதிரி ஒரு மண்டைஒடுதான் அந்த ஆடின பெண்ணுக்கும் இருந்திருக்கும்.

”இல்லை நான் அன்று அறுத்ததே அந்த பெண்ணின் மண்டையோட்டைத்தானோ.அண்ணன் ஆணுடையது என்று பொய் சொல்லிவிட்டானோ ? என்றெல்லாம் கிறுக்குதனமாக தோண்றியது.

வாழ்க்கையில் காமம் என்ற உணர்வே போய்விடுமோ என்ற பயமும் வந்தது. 

திரும்ப திரும்ப எலும்பின் துகள் மாதிரி “அந்த பெண்ணின் நிர்வாணம் கொடுத்த அதிர்ச்சி” என்னை படுத்தியது. 

வீட்டிற்கு வரும் போது இரவு மூன்று மணி.

பாத்ரூம் சென்று வெந்நீர் க்ஷவரில் குளித்தேன்.

அன்று நான் குளித்த நேரம் சரியாக் அறுபத்தி ஒன்பது நிமிடங்கள்.

Saturday 6 October 2012

கதை போல ஒன்று - 54


கதை போல ஒன்று - 54 

கல்யாணம் ஆன முதல் வாரமே மனைவிடன்ஹைதிராபாத் வந்து விட்டேன்.

பெரிவர்கள் சொந்தங்கள் தொந்தரவு இல்லாத புதிய திருமண ஜோடி.

ஜாலியாய் போனது வாழ்க்கை.

ஆபீஸ் கிளம்பும் போது ஒரே ஒரு துளி மழைவிழுந்தாலும் லீவுதான்.

சினிமாதான், ஹோட்டல்தான், அன்புதான், கொஞ்சல்தான்.

கிட்டத்தட்ட இருபது நாட்கள் போனது இப்படியே.

ஆபிஸ் விட்டு வரும் போது மனைவி ட்ல்லாய் இருந்தாள்.

ஏன் டல்லாயிருக்க?

ஓண்ணுமில்லையே?

இல்ல டல்லாத்தான் இருக்க. நான் எதாவது மனச கஸ்டபடுத்திரது மாதிரி பேசிட்டேனா?

இல்லையே? அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல. நா நார்மலா இருக்கேன்பா என்று சமாளித்தாள்.

குழப்பத்துடன் இரவு பத்து மணிக்கு படுக்கும் போது சரிவர அன்னியோன்யம் இல்லாமலே படுத்தாள்.

நானும் தொந்தரவு செய்ய வில்லை.

இரவு சரியாக பதினோரு மணிக்கு என்னை எழுப்பினாள்.

என்னங்க எனக்கு “ஸ்டமக் பெயின்” ரொம்ப இருக்கு என்று கலங்கினாள்.

என்னாச்சு எதாவது அஜீரணமா என்றேன்.

’உங்க தலை’ என்று சட்டென்று எரிந்து விழுந்தாள்.

பாத்ரூமுக்கு சென்று திரும்பி மறுபடு சுருண்டு படுத்து கொண்டாள்.

அப்போதுதான் புரிந்தது.

மென்சஸ் ஆ என்றேன்.

ஆம் என்று தலையசைத்தாள்.

’ரொம்ப வலிக்குதுப்பா ’என்றாள்.

பதட்டமானேன். 

காய்ச்சல், தலைவலி, வெட்டுகாயம் பத்தி எனக்கு தெரியும்.

குரோசின் சாப்பிடனும், நார்ஃபிளாக்ஸ் டி. இசட் சாப்பிடனும் என்பது மாதிரி தெரிந்து வைத்திருப்பேன். 

மென்சஸ் வலிக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது.

மாதவிலக்கு,வெள்ளை படுதல், வாடகைத்தாய் போன்ற சமாச்சாரங்களை நன்றாக சொல்லும் அணுராதா ரமணன் கூட அதற்கு எந்த மாத்திரை குடுக்க வேண்டும் என்று சொல்லவே இல்லை.

வழக்கமா என்ன செய்வ இதுமாதிரி வந்தா ? கேட்டேன்.

பதிலில்லை.

சொல்லுப்பா நார்மலா என்ன செய்வ மென்சஸ் வந்தா?

பதிலில்லை.

’சொல்லேம்பா. என்ன செய்வ ஏன் இப்படி மொக்க போடுற. நைட் பதினோரு மணிக்கு ஏன் இந்த டிராமா’ என்றேன்.

“ஆமா டிராமாவா. மனசாட்சியோட பேசுங்க.பொண்டாட்டின்னா ஜாலியா இருக்கத்தானா. அவ வலி புரிய வேண்டாமா?
நடுக்கத்தோடு சத்தமாய் கத்தினாள்.

எனக்கு பெண்கள் உலகமே தெரியாது.

தெரிந்த பெண் அம்மா மட்டும்தான்.

அம்மாவின் மாதாந்திர பிரச்சனைகள் என் கவனதிற்கு வந்ததே இல்லை. 

ஒரு முறை சித்தி துண்டு பேப்பரில் ஒன்றை எழுதி இதை வாங்கி வா என்றார்.படித்து பார்த்ததில் “கேர் ஃபிரீ” என்று எழுதியிருந்தது. அது பற்றி வாசித்திருந்ததால் புரிந்தது. 

பெண்ணின் கருப்பையில் இருக்கும் சினைமுட்டைகள் தங்களுக்கு வேலை இல்லை என்பதால் கழிவாகி வெளியே வரும் மாத நிகழ்வுதான் மென்சஸ்.

அந்த சமயத்தில் பலருக்கு அடிவயிற்றில் வலியும், மனதளவில் அயர்ச்சியும் எரிச்சலும் கோபமும் இருக்கும்.

இதுவரை தெரியும். ஆனால் இரவு பதினோரு மணிக்கு மனைவி கோழிகுஞ்சு மாதிரி சுருண்டு அழ அதற்கு என்ன பண்ண வேண்டும் என்று தெரியவில்லை. 

அதை பற்றி தெரிந்த அவளாவது எதாவது சொல்லலாம் இல்லையா. அவளும் சொல்ல மாட்டேன் என்கிறாள்.

தண்ணி எடுத்து கொடுத்தேன். வாங்கி குடித்தாள்.குளுக்கோஸ் ஒரு ஸ்பூனில் எடுத்து சாப்பிட வைத்தேன்.அவளை என் மேல் கொஞ்சம் சாய்த்து கொண்டேன். 

“சொல்லுப்பா வழக்கமா என்ன பண்ணுவ. அது தெரிஞ்சாதான என்னால எதாவது செய்ய முடியும்”

பேசினாள்.

”ஒண்ணுமே செய்ய மாட்டேன். வலியை தாங்கிப்பேன். அம்மா கிட்ட படுத்துப்பேன். ஒரே ஒரு தடவை வலி பொறுக்க முடியாமல் ஊசி போட்டிருக்கேன்.”

மறுபடி சுருண்டு கொண்டு அம்மா அம்மா என்று அழுதாள்.

நெகிழ்ந்து விட்டேன். அம்மாவை தேடுகிறாள்.

வெறு வழியே இல்லை. 

அண்ணனுக்கு போன்  போட்டேன். அண்ணன் டாக்டராக இருக்கிறார்.

 ரிங் போகிறது எடுக்கவில்லை. பதினொன்னரை மணிக்கு தூங்கியிருக்கலாம். 

இன்னொரு தங்கையும் டாக்டர்தான். அவளுக்கு போன் போட்டேன் தயக்கத்துடன். 

அதிர்க்ஷ்டம் .

எடுத்தாள். விசயத்தை சொன்ன போது  சிரித்தாள். ”இதுக்கு எதுக்கு இப்படி பதட்டமா பேசுறீங்க உங்க குரல் எல்லாம் நடுங்குதுண்ணா”

“சரி அத விடுப்பா. சொல்லு என்ன பண்ணனும்”

“பெயின் கில்லர் குடுங்க போதும், ஃபுருபென்னும், ராண்டெக்கும் குடுங்க” சரியாயிடும்.

“பெயின் கில்லர் கொடுத்தா சைடு எபக்ட் வராதா”

“அது வலியினால நைட்டு தூங்காம இருக்கும் சைட் எஃபெக்ட விட கம்மிதான்” என்று போனை வைத்தாள்.

சரி விடை கிடைத்தது பிரச்சனைக்கு. மாத்திரை டப்பாவை துழாவினால் ஒரு ஃபுருபென்னும் இல்லை.

மணி பண்ணிரெண்டு ஆகப்போகிறது. 

யாருமே தெரியாத மொழி தெரியாத அந்நியமான ஹைதிராபாத். 

வண்டியும் கிடையாது. 

நடந்தே போக வேண்டும். 

கால் மணி நேரம் நடந்தால் இருபத்திநாலு மணி நேரம் திறந்திருக்கும் அப்பல்லோ மெடிக்கல்ஸை அடையலாம்.

லுங்கியில் இருந்து பேண்டுக்கு மாறி, டீ போட்டு கொடுத்து விட்டு, கொஞ்சம் பொறுத்துக்கோ என்று சொல்லி கிளம்பினேன்.

மஞ்சள் சோடியம் விளக்கில், ஆளில்லாத தெருவில் நடக்க நடக்க நான் நண்பனுடன் செய்யும் விளையாட்டு நினைவுக்கு வந்தது.

கூட படிக்கும் பெண்களின் மாதாந்திர தூர நாளை கண்டுபிடிப்பததுதான் எங்கள் விளையாட்டு

சோர்ந்திருப்பார்கள், எரிந்து விழுவார்கள், அந்த நாள் விபூதி சந்தனம் கோவிலை தவிர்ப்பார்கள்.

பழைய டிரஸ்ஸை போட்டு வருவார்கள். “மச்சி இந்த தீபாவ பாரேன். இருபதில் இருந்து இருபத்தி ஐந்து தேதிக்குள் அந்த பழைய ஆரஞ்சு கலர் சுடிய போட்டுட்டு வருவா பாரு” என்பேன்.

அதுமாதிரி அவள் வர, நண்பன் “மச்சி சைக்காலஜில நீ மேதடா “ என்பான் ஜிவ்வென்று இருக்கும்.

இதுமாதிரி பல விசயங்களை வைத்து இவளுக்கு ஐந்தாம் தேதி, இவளுக்கு பதினேழு, இவளுக்கு சரியா சொல்ல முடியாது. என்பது மாதிரி ஆராய்ச்சி முடிவகள் வைத்திருப்போம்.

என் மனைவியின் தேதியை கூட அவளின் நண்பர்கள் குறித்திருப்பார்களோ.

கடை வந்தது. மாத்திரை வாங்கி. போன் போட்டு வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லி, வேகமாக நடையை கட்டினேன்.

ஹைதர் நகரில் இருந்து வசந்த் நகர் ஆர்ச் அருகில் வரும்  போது மூன்று திருநங்கைகள் என்னை பிடித்து கொண்டனர். 

ஹைதிராபாத்தில் அவர்கள் தொல்லை அதிகம்.

ஒரு மூட் வந்தால் காசு கொடுப்பேன். இல்லையென்றாக் இல்லை. 

இரவு பண்ணிரண்டு மணிக்கு பயமாய் மாத்திரை வாங்கி போகும் போது இப்படி சூழ்ந்து கொண்டால் வெறிதானே வரும். தள்ளு! தள்ளு! தமிழிலேயே கத்துகிறேன். 

அவர்கள் தெலுகிலும் ஹிந்தியுலமாய் பேசுகிறார்கள். 

பத்து ரூபாய் கொடுத்தேன். அம்பது ரூபாய் வேண்டுமாம். 

வெறி வந்தது. கையை பந்தாக்கி இரண்டு வீசு விசினேன். இரண்டுபேர் மேல் பட்டது. அக்ரோசத்தை எதிர்ப்பார்க்கவில்லை.

தங்கள் சூழ்ந்துள்ள வட்டத்தை விலக்கினர்.

வெளியே குதித்து ஒடினேன். பின்னால் என்னை திட்டும் சொற்கள் தெளிவாய் கேட்டது. 

விட்டுக்கு வந்தால அழுத்து கொண்டிருதாள் மனைவி. மாத்திரை கொடுத்து ஒரு மணி நேரம் ஆன பிறகு வலி விட்டது. 

குழந்தையாய் தூங்கினாள்
.
கல்யாணமாகி முதன் முதலில் மனைவிடம் கடுமையான திட்டு வாங்கியது, 

என் கல்லூரி கால விளையாட்டு, 

மஞ்சள் கலர் சோடியம் வேப்பர் வெளிச்சம், 

என்னை சூழ்ந்த திருமங்கைகள், 

அவர்கள் மேல் பட்டு வலித்த என் வலது கை,

சிகப்பு கலர் ஃபுருபென் மாத்திரை, 

மனைவியின் அழுகை, 

கரிய இரவின் குளிர் 

எல்லாமும் பிம்பங்களாய் சுற்றி சுற்றி வந்து  என் தூக்கத்தை கெடுத்திருந்தன.

என்னை போன்று எத்தனை வாய்சவுடால் இளைஞ்சர்கள் தங்கள் மனைவியின் முதல் மென்சஸஸை எதிர் கொண்டிருப்பார்கள். மக்கு மாதிரி, பேக்கு மாதிரி.

”இதெல்லாடா ஆண்களுக்கு காலேஜ்ல ஒரு பாடமா வெச்சிருக்கனும்” என்று தோண்றியது.