Sunday 12 January 2014

பிரமிளும் பிரமிப்பும்...

ஜனவரி ஆறாம் தேதி (2014) பிரமிளின் நினைவு நாளில்,பிரமிளைப் பற்றிய தத்தம் நினைவுகளை படைப்பாளிகள் பகிர்ந்து கொள்ள அகநாழிகை பொன் வாசுதேவனும் துறையூர் சரவணனும் சேர்ந்து ,அகநாழிகை புத்தகக்கடையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர்.கூட்டத்தில் பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய வசதி செய்திருந்தது சிறப்பாக இருந்தது.

வாசுதேவன்,பிரமிளைப் பற்றி தான் பிரமித்தது பற்றி சுருக்கமாக சொல்லி,பிரமிளின் சில கவிதைகளை நடுநடுவே  சொன்னது புத்துணர்ச்சியாக இருந்தது. நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.இந்த கூட்டம் நடப்பது பற்றிய அளவில்லாத மகிழ்ச்சியை தன் ஒவ்வொரு உடலசைவிலும் வெளிப்படுத்தியது பார்க்க உற்சாகமாய் இருந்தது.

கூட்டத்திற்கு நிறைய இளைஞர்கள் வந்திருந்தனர்.பிரமிளுடைய ஆளுமையை அறிந்து கொள்ள இந்தக் கூட்டம் உதவியாயிருந்தது.இந்த பத்தியில் நான் எல்லாவற்றையும் எழுத முடியவில்லை.குறிப்பெடுத்த வரையில் எழுதியிருக்கிறேன்.சில விசயங்களை வேண்டுமென்றே எழுதாமல் தவிர்க்கவும் செய்திருக்கிறேன்.கிட்டத்தட்ட முக்கால் பாகத்தை இங்கே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.பத்தியில் ஏதாவது தகவல் பிழை இருந்தால் சுட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வரிசையாக ஒவ்வொருவர் பேசியதையும் பார்க்கலாம்.

ராஜ சுந்தரராஜன்:


நான் அப்போது எழுதிய சில கவிதைகளை பிரமிள் பரவாயில்லையே ரகத்தில் சேர்த்து இன்று நன்றாய் எழுதலாம் என்று ஊக்கப்படுத்தினார்.நான் இடதுசாரியாக இருப்பதால் பிரமிளின் கடவுள் சார்ந்த பார்வையை ஏற்றுக்கொள்ளவில்லை.ஒருநாள் கடற்கரையில் கடவுள் பற்றிய  விவாதம் முற்றியது. நான் கடவுளையும் Proabability யை பற்றியும் ஏதோ சொல்ல பிரமிள் உடனே எதுவும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார்.அதன் பிறகு ஒரிரு நாட்கள் பிறகு அவரை சந்தித்த போது திடீரென்று என் கைகளை முறுக்கினார்.முறுக்கிச் “நான் பிராபபிலிட்டி பத்தியும் படிச்சேனே” என்று சொல்லி அன்றைய முடிவுறா விவாதத்தை விட்ட இடங்களில் இருந்து தொடங்கினார்.எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அவர் காட்டும் ஆர்வத்தை சொல்ல வருகிறேன்.

கவிதையில், Abstract ஆக உள்ளதை Concrete ஆகவும்.Concrete ஆக உள்ளதை Abstract ஆகவும் சொல்லக் கூடாது என்று சொல்லுவார்.நாம் பொதுவாக ”கண்களில் நீர்கோர்த்தது”. என்று சொல்வோம்.ஆனால் அவர் வித்தியாசமாக “தத்தளித்தபடி ஈரம் ஏறிக்கொண்டிருந்தது” என்று சொல்லுவார்.சொற்களை கவனமாக பிரயோகிக்க வேண்டும் என்பதை அடிக்கடி சொல்லுவார்.அடிக்கடி சண்டை போடுவார்,திட்டுவார்.என் அக்கா ஒருவர் என்னிடம் அதிகம் பாசம் வைத்திருப்பார்.ஆனால் என்னை தினத்துக்கு இரண்டு மூன்று முறை திட்டி தீர்ப்பார்.பிரமிளைப் பார்க்கும் போது என் அக்காவாக நினைத்துக் கொள்வேன்.

எம்.டி முத்துக்குமாரசாமி:

நான் அவரைப் பார்க்கபோகும் போது அவருடைய பெயர் “தர்மு சிவராம்” என்பதாக இருந்தது.1985 காலகட்டத்தில் அமிர்தராஜ் என்னைக் கூட்டிப் போனார்.கோடம்பாக்கத்தில் சிறிய அறையில் அமர்ந்து கடலை கொறித்துக் கொண்டிருந்தார்.என்னை கண்டுகொள்ளவில்லை.அதனால் நான் வருத்தமானேன்.அதன் பிறகு என்னை கிழே அழைத்துப் போய் கடையில் டீயும் வடையும் வாங்கித்தந்தார்.வடையை தன் கையாலேயே எனக்கு ஊட்டி விட்டார்.எனக்கு வாழ்க்கையில் பிரமிளைத்தவிர யாரும் வாழ்க்கையில் ஊட்டி விட்டதே இல்லை.

பிரமிளுக்கு சா.கந்தசாமி,அசோகமித்திரன் என்றால் பிடிக்காது.ஒருமுறை க.நாசுவைப் பார்க்க பிரமிளுடன் போனேன்.உள்ளே அசோகமித்திரன் நிற்பதாக அறிந்து வெளியவே நின்றார்.

குற்றாலம் இலக்கிய சந்திப்ப்பில் நான் வாசித்த கட்டுரையில் அப்போதைய காலகட்டத்தில், தமிழில் சிறந்த சிறந்த கவிஞர்களாக நான்கு பேரைச் சொன்னேன்.அதில் பிரமிள் பெயரை சேர்க்கவில்லை.கட்டுரை வாசித்துக் கொண்டிருக்கிருக்கும் போது பிரமிள் குறிப்பிட்டு சில கேள்விகளை கேட்டார்.நானும் சலிக்காமல் அவருக்கு பதில் சொன்னேன்.அவர் கோபத்தில் வெளிநடப்பு செய்தார்.அதை கண்டு கொள்ளாமல் நான் கட்டுரையை வாசித்து முடித்தேன்.

பிரமிளை பார்க்க ஒரு Live wire மாதிரி இருப்பார்.மிக அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடந்து கொள்வார்.என்னை “அமுல் பேபி” என்றுதான் கூப்பிடுவார்.

பிரமிளுடைய சிறப்பாக நான் கருதுவது அவருடைய ஆழமான வாசிப்புதான்.நபக்கோவ் பற்றி பதினைந்து நிமிடம் கூர்மையாக பேசுவார்.அப்படி பேசுவதற்கு அவர் நபக்கோவை ஆழமாக படித்திருக்க வேண்டும்.அவர் படித்திருப்பார்.தேடி தேடி படிப்பார்.அடையார் லைப்ரரியில் அடிக்கடி பார்ப்பேன்.கடைசியாக அவரைப் பார்க்கும் போது கையில் சுந்தர ராமசாமி எழுதிய கவிதை புத்தகத்தை வைத்திருந்தேன்.அதற்கே பிரமிள் என் மீது கோபப்பட்டார். நான் எதிர்த்து சொன்னேன் “எல்லாரும் ஒவ்வொரு மாதிரி நல்லா எழுதுறாங்க.சுந்தர ராமசாமி படிச்சா  என்ன தப்பு ? என்று பதிலுக்கு கேட்டேன்.அதற்கு ”அவர் ராமசாமி பத்தி உனக்கு தெரியாது.நான் கொள்கை ரீதியாகவே சுராவை எதிர்க்கிறேன்.” என்று சொன்னார்.

நிறைய போஸ்ட் கார்டு வைத்திருப்பார்.அடிக்கடி கடிதம் போடுவார்.இப்போதும் அந்த கடிதத்தை வைத்திருக்கிறேன் அவர் ஞாபககார்த்தமாக இப்போதும் அந்த கடிதத்தைப் படிக்கும் போது, மகிழ்ச்ச்யான நினைவையே கொடுக்கிறது.பிரமிளின் அறிவு அழமானது.இப்போதிருக்கும் தொழில்நுட்ப வசதி, அப்போது இல்லாத போதே தேடி தேடி படித்து அறிவை வளர்ந்து வைத்திருப்பார்.

என்னிடம் ஒருமுறை நபக்கோவ் பற்றி பதினைந்து நிமிடம் பேசினார்.அப்போது எனக்கு தோன்றியது “பிரமிளுடன் சரி சமமாக பேசுவதற்கு கூட இங்கே ஆள் இல்லை.அதனால் கூட மற்றவர்கள் பிரமிளுக்கு ஒரு கோபம் இருக்கலாம்” என்று.மறக்க முடியாத ஆளுமை பிரமிள்.

எஸ்.ராமகிருஸ்ணன்: 

பிரமிள் தங்கியிருக்கும் அறையை வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் அவர் ஜிப்பாவைப் வைத்து சொல்லிவிடலாம்.நிறைய நடப்பார்.அவரோடு நடக்கும் போது அவர் பார்வையில் படும் காட்சிகள் பற்றி சொல்லும் போது பார்வையின் நுணுக்கம் தெரியும்.பொதுவாக நான் இடுப்புக்கு மேலேதான் உலகத்தைப் பார்ப்போம்.தரையில் என்ன நடக்கிறது என்று தெரியாது.ஆனால் பிரமிள் தரையில் இருக்கும் மனிதர்களை உயிர்களை,நிகழ்வுகளை பார்க்க கற்றுக் கொடுத்தார்.

சில பிச்சைக்காரர்களிடம் பேசுவார்.ஒருமுறை என்னை ரொம்ப தூரமாக கூட்டிப் போனார்.அங்கே குப்பைத்தொட்டியில் ஒரு பிச்சைக்காரர் இருந்தார்.அவரிடம் பிரமிள் தெளிவான ஆங்கிலத்தில் பேசினார்.பிச்சைக்காரரும் ஆங்கிலத்திலேயே பேசினார்.அவர் ஒரு சித்தராம்.பிரமிள் எப்படி இது போன்றவர்களை இனங்கண்டுகொள்கிறார் என்பது அதிசயம்தான். போகும் போது அந்த பிச்சைக்காரருக்கு ஏதாவது காசு கொடு என்றார்.நான் கொடுத்தால் பிச்சைக்காரர் கையால் வாங்கவில்லை.குப்பைத் தொட்டியில் போட வேண்டுமாம். அங்கிருந்து பிச்சைக்காரர் எடுத்துக் கொள்வாராம்.

பிரமிளோடு லைப்பரரிக்கு போயிருக்கிறேன்.இப்போது மாதிரி அமெரிக்கன் லைப்ரரி இவ்வளவு கெடுபுடியாக அப்போதெல்லாம் இருக்காது.எளிதாக உள்ளே சென்று விடலாம்.அங்கே பிரமிள் எனக்கு நிறைய சொல்லித்தந்தார்.சில கடினமான மூளையை பிசையும் புத்தங்களை எடுத்து என்னிடம் கொடுத்து, “போய் எண்டரி போட்டு வா” என்பார்.நான் அவரை நீங்கள் எடுத்த புத்தகத்திற்கு நான் ஏன் எண்டரி போடவேண்டும் என்ற அர்த்ததில் பார்த்தால், “போ அறிவாளி மாதிரி உன்ன காட்டிக்க.இதுதான் நல்ல சந்தர்ப்பம்” என்று தள்ளிவிடுவார். (சிரிப்பு).

பிரமிளிடம் யாரையாவது அறிமுகப்படுத்தி வைத்தால் கண்டுகொள்ள மாட்டார்.காயப்படுத்திவிடுவார்.தெரிந்த கவிஞர் ஒருவர் பிரமிளிடம் என்னை அறிமுகப்படுத்துங்கள் என்று நச்சரித்தார்.நான் வேறு வழியில்லாமல் அறிமுகப்படுத்தினேன்.பிரமிள் அறிமுகம் ஆகும் மனிதருக்கு நேருக்கு நேராக  கும்பிட மாட்டார்.சைடில் எங்கோ கும்பிடுவார்.வணக்கம் என்று அவர் கும்பிடுவதே எதிராளிக்கு அதிர்ச்சியாய் இருக்கும்.

நான் சொன்னேன் “இவர் ஒரு கவிஞர்”. 
“கவிஞரா” என்று கேட்டு “பெயர் என்ன?” என்று கேட்டார்.
நான் “அவர் பெயர் துருவ நட்சத்திரம்” என்றேன்.
உடனே “துருவ நட்சத்திரத்திற்கு பகலில் என்ன வேலை? “ என்று கேட்டார். 
அப்படி கிண்டலாக கேட்டதுமே வந்த நண்பர் ஆடிப்போய் விட்டார்.எனக்கே ஒரு மாதிரி இருந்தது.

மறுநாள் பிரமிளின் அறைக்கு போகும் போது முந்தின நாள் அவர் தாக்கிய அந்த கவிஞரை தன் பக்கதில் உட்கார வைத்து. ஏதோ ஒரு கவிதையை வாசித்துக் காட்டி அன்பாக,வார்த்தைக்கு வார்த்தை விளக்கி அர்த்தம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்ந்தார்.யாரையாவது உண்மையிலேயே காயப்படுத்திவிட்டோம் என்று நினைத்தால் அப்படியே இறங்கி வந்துவிடுவார்.

ஒருமுறை போட்டோ எடுக்க வேண்டும் என்று என்னை ஸ்டுடியோவுக்கு கூட்டிப் போனார்.அங்கே படம் எடுக்கும் இளைஞனுக்கு புகைப்படம் எடுக்கும் கலையை விலாவாரியாக விளக்கினார்.இவர் விளக்க விளக்க அவர் கைகால் எல்லாம் உதறியது.பிரமிளை அவர் பெரிய போட்டோ கிராபர் என்று நினைத்து விட்டார்.இப்படியெல்லாம் முடிந்து அவர் எடுக்கப் போகும் போது என்ன நினைத்தாரோ தெரியவில்லை எடுக்க மறுத்துவிட்டார்.”இன்று என் முகம் வாடியிருக்கிறது.வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளலாம்” என்று கூட்டிச்சென்றுவிட்டார்.இப்படி அவரை புரிந்து கொள்ளவே முடியாது.

ஒருமுறை அவரும் நானும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தோம்.அப்போது அசோகமித்திரன் எங்கள் பக்கத்தில் வந்தமர்ந்தார்.அசோகமித்திரன் வந்தது வெளியே போய் நின்று கொண்டார்.தான் வந்ததும் பிரமிள் வெளியேறியதைப் பார்த்து அசோகமித்திரன் வெளியே கிளம்பிவிட்டார்.அப்படி அசோகமித்திரன் சினிமா பார்க்காமல் கிளம்பிவிட்டது பிரமிளின் மனதை தொட்டிருக்க வேண்டும். என்னைப் பார்த்து “அவர் ஏன் கிளம்புறார்” என்றார்.”நீங்க கிளம்பின மாதிரி அவரும் நினைச்சிருக்கலாம்” என்றேன். “இவரெல்லாம் இந்த படத்துக்கு வந்ததே தப்பு.இப்போ வெளிநடப்பு வேற செய்றாரா?”(சிரிப்பு).

என்னிடம் சு.ராவின் ஜே.ஜே சில குறிப்புகளைப் பார்த்து நபக்கோவ் திருடி எழுதிவிட்டார் என்று  சீரியசாக சொன்னார்.”அது எப்படி நபக்கோவ் எழுதின பிறகுதானே ஜே ஜே சில குறிப்புகள் வந்தது” என்றேன். அதெல்லாம் தெரியாது தமிழ் நாவல் வர்றது பத்து வருசம் முன்னாடியே அதக் காப்பிடிச்சிட்டான் நபக்கோவ்” என்றார் (சிரிப்பு).

சி.சு செல்லப்பாவுக்கு பிரமிளைப் பிடிக்கும்.”அவன் என் பிள்ளை” என்பார்.பிரமிளுக்கும் சி.சு செல்லப்பாவை பிடிக்கும்.அவர் பற்றி கேட்பார்.ஆனால் பார்க்க போகமாட்டார். “செல்லப்பா இல்லன்னா நானில்லை” என்று சொல்வார்.

வெளி ரங்கராஜன்:

மவுனி கதைகளுக்கு பிரமிள் எழுதிய முன்னுரை அற்புதமானது.ஒருமுறை தி.நகரில் நானும் அவரும் வரும் போது, வழியில் வந்த பெரியவருக்கு தன் கையில் இருந்த காசையெல்லாம் கொடுத்து விட்டு, தி.நகரில் இருந்து அடையாருக்கு நடந்தே போனார்.நடப்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் அலாதியானது.அவர் படுக்கையில் இருக்கும் போது இதுதான் அவரை நான் கடைசியாக பார்க்கிறேன் என்பது எனக்கு நன்றாக தெரிந்தது.மிக முக்கியமான மறக்கமுடியாத ஆளுமை பிரமிள்.

இந்திரன்:

ஒருநாள் இரவு ஒன்பது மணி இருக்கும்.அழகிய சிங்கரோடு பிரமிள் என் வீட்டுக்கு வந்தார்.தன் புத்தகத்தில் அட்டைப் படமாக போடுவதற்கு ஒரு போட்டோவை கொண்டுவந்தார்.என்னிடம் எப்படி இருக்கிறது என்று கேட்டார்.
அந்த போட்டோ சாதரணமாகத்தான் இருந்தது.இதை விட நல்ல போட்டோ போடலாமே என்றேன்.
“இல்லை ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி உரை நிகழ்த்த அதன் பின்னனில் நான் எடுத்துக் கொண்ட போட்டோ” என்றார்.
“இதில் ஜே.கேவை காணவில்லையே” என்றேன்.
“அதில் தெரியமாட்டார் அவர் தள்ளியிருந்து பேசினார்” என்றார்.

நான் ஒன்றும் சொல்லவில்லை.திடீரென்று ஒரு கண்ணாடி கொண்டு வரச்சொன்னார்.என் மனைவி கொஞ்சம் அதிசயமாக பார்த்த படியே கண்ணாடியை எடுத்து வர, கண்ணாடியில் அந்த போட்டோவைப் பார்த்தார்.ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டே இருந்தார்.அப்படி பார்க்கையில் தெரியாமல் கிழே விட்டுவிட்டார்.கண்ணாடி கிழே விழுந்து உடைந்து விட்டது.எல்லோரும் பதறினோம்.ஆனால் பிரமிள் பதறாமல் உடைந்த கண்ணாடி துண்டுகளின் பக்கத்தில் அமர்ந்து எல்லாவற்றையும் கூர்ந்து பார்த்து ரசித்தார்.அப்புறம் நிதானமாக சொன்னார் “எவ்வளவு அழகா உடைஞ்சிருக்கில்ல” .இன்னொருமுறை ஒரு பிச்சை எடுக்கும் பெண்ணை எனக்கு காட்டித்தந்து “இவர் பெரிய ரிஷி” என்று சொல்லிப் போனார்.அவரை புரிந்து கொள்வது கடினம்.

கவுதம சித்தார்த்தன்:

இலக்கிய உலகில் மிக மோசமாக வஞ்சிக்கப்பட்டவர் பிரமிள்தான்.திட்டமிட்டு அவரை ஒதுக்கினார்கள்.பிரமிளை ஒரு கோமாளியாக சித்தரித்து சித்தரித்தே அவர் மேதைமையை மழுங்கலாக காட்டினார்கள்.எண்பதுகளில் தூய இலக்கியம் இருந்த போது பிரமிள் மட்டுமே அதை உடைத்தார்.சீரியஸ் இலக்கியத்திற்கான ரசனை கோட்பாட்டை வகுத்தவர்,அதை திரும்ப திரும்ப அலசி அதை தெளிவாக்கி வைத்தவர்.

பிரமிளை இடதுசாரி என்று ஒருபிரிவினர் ஒதுக்கி வைப்பார்கள்.பிரமிளை இந்துத்துவா ஆள் என்று இடதுசாரிகள் ஒதுக்கி வைப்பார்கள்.இப்படி அவரை புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்திவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.பாரதிக்கு பிறகு வந்த ஒரே கவிஞன் பிரமிள்தான்.பிரமிளை உண்மையாக புரிந்து கொள்ள அவர் படைப்புகளை நோக்கி போகவேண்டும்.

முதன் முதலில் அவரைப் பார்க்க நான் சென்ற போது அவர் என்னை கண்டுகொள்ளவில்லை.கோபத்தில் வந்துவிட்டேன்.அதன் பிறகு சொன்னார் “பனைமரத்தில் ஏறுவதற்கு முன்னால் மரம் ஏறுபவன் மரத்தோடு மானசீகமாக பேசுவான்.அதை நட்பாக்கி.அது அனுமதி கொடுத்த பின்னரே ஏறுவான்.அது போலத்தான் கலைஞனும்.அவனை எளிய தர்க்கங்களோடு அளந்து பார்த்தால் நஸ்டம் அளப்பவர்க்கே”. 

நான் கதை எழுதிய போது,அவர் சொன்னார் “கதை எழுதுவதற்கு முன்னால் நிறைய நாவல் அல்லாத ஆழமான புத்தகங்களை படி.பல்தரப்பட்ட அறிவோடு கதை  எழுத உட்கார்ந்தால் அது தனி படைப்பாகவும்,தரமானதாகவும் வரும்” என்றார்.மேஜிக்கல் ரியலிசம் என்பதெல்லாம் அவர் சொல்லித்தான் பலருக்கு தெரியும்.அவரோட பன்முகத்தன்மையான பார்வைதான் அவரோட சிறப்பு.போஸ்ட் மார்டனிஸ்ம் பற்றியெல்லாம் பிரமிள் சொல்லித்தானே தெரிந்து கொண்டோம். போர்ஹேவின் “வ்ட்டச்சிதைவுகள்” சிறுகதையை பிரமிளைத் தவிர வேறு யாராவது மொழிபெயர்க்க முடியுமா?.அவர் படுக்கையில் இருக்கும் போது அவரைப் பார்க்க போனேன்.என்னால் பார்க்கமட்டுமே முடிந்தது.மறக்க முடியாது மனிதர் பிரமிள்.

இராசேந்திர சோழன்:

முன்பு இலக்கியத்தில் செம்மலருக்கும் கசடதபற வுக்கு இடையே ஒரு பரஸ்பர விமர்சனம் இருக்கும்.இடதுசாரிகளுக்கும் தூய இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடுதான் அது.அந்த நிலையில் சமபார்வையாக இரண்டையும் பார்த்து தற்போதைய இலக்கியத்திற்கான கோட்பாட்டை தெளிவுபடுத்தியவர் பிரமிள்.

புதுக்கவிதை என்பது நீர் கொட்டிய பழைய துணியாக இருக்கக் கூடாது.காய்ந்து போன பழைய துணியாக இருக்கவேண்டும்.பற்ற வைத்தால் உடனே பற்றி எரியவேண்டும்.அது மாதிரியான கவிதைகளை எழுதியவர் பிரமிள்.

பிரமிளை வரலாற்றில் மறைத்தது பற்றி பலர் கவலைதெரிவித்தனர்.நான் அந்த வரலாற்றையே மதிக்கவில்லை.வரலாறு என்பது ஆதிக்க சக்திகள் தங்களை புகழ்ந்து பேசவும், தங்களை எதிர்ப்பவர்களைப் பற்றி தவறாய் பேசவும் திட்டமிட்டு உருவாக்கிய கோட்பாடாகும்.

படைப்பாளி படைக்கும் சமயத்தை தவிர மற்ற எல்லா காலங்களிலும் சாதரண மனிதனே.படைக்கும் மனநிலையில் அவன் என்ன படைக்கிறான் என்பதுதான் முக்கியம்.அப்படிப்பட்ட படைக்கும் உத்வேகத்தில் பிரமிள் படைத்தவை எல்லாமுமே தீவிரமானவை,இலக்கியதன்மையுடைதாகவே இருக்கிறது.


செந்தில்நாதன்:

நான் பிளஸ் டூ முடித்ததும் பிரமிளை படிக்க தொடங்கினேன்.பிரமிள் சமூகத்தோடு இருக்க வேண்டும் என்றே நினைப்பார்.சமூகத்தை விட்டு பிரிந்து தனியே ஒன்றை படைப்பது அவருக்கு பிடிக்காது என்று நினைக்கிறேன்.அவரை ஒரு சண்டை மனிதராக சித்திரிப்பது என்பதன் பின்னால் அரசியல் இருக்கிறது என்று நம்புகிறேன்.விடுதலைப்புலிகளுக்காக பல ஆங்கில நூல்களை தமிழாக்கி கொடுத்துள்ளார்.அவர் நினைத்திருந்தால் ஒதுங்கியிருந்திருக்கலாம்.ஆனால் அப்படியில்லை.நம்பும் கோட்பாடுகளுக்காக களம் இறங்குவதில் நம்பிக்கையுடையவராக திகழ்ந்தார்.இன்றுள்ள பல இளம் பிள்ளைகள் பிரமிளைப் பற்றி அழமாக தெரிந்து கொள்ள முன்வர வேண்டும்

அருள் சின்னப்பன்:

பிரமிளைப் பற்றி பேசும் தகுதி எனக்கிருக்கிறதா என்று தெரியவில்லை.ஆனாலும் அவர் கூட பழகியிருப்பதால் பேசுகிறேன்.( இப்போது கவுதம சித்தார்த்தன் குறுக்கிட்டு, அருள் சின்னப்பன் எண்பதுகளில் நிறைய கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்தவர்.முக்கியமானவர்.தன்னடக்கத்திற்காக இப்படி பேசுகிறார் என்று சொன்னார்).என்னைக் கேட்டால் பாரதியை விட பிரமிள் பெரிய கலைஞன் என்பேன்.ஒவியம்,சிற்பம்,புகைப்படக்கலை,மொழிபெயர்ப்ப்யு என்று அவர் எதை செய்யவில்லை சொல்லுங்கள்.எல்லாமே செய்தார்.

கம்பியூட்டர் எப்படியிருக்கும் என்று பார்க்க என் வீட்டுக்கு வந்தார்.என்னிடம் ”இரவு பூமியின் நிழல்” என்று சொன்னார்.எவ்வளவு ரசனை பாருங்கள்.எவ்வளவு நுண்ணுனர்வு.அவ்ருடன் பேசுவதற்கு எதிராளிக்கு ஒரு தகுதி வேண்டும் என்று அவர் நினைப்பதற்கு காரணம் திமிர் அல்ல. அவர் கற்ற கல்வியும் வளர்த்துக் கொண்ட அறிவும்தான்.

நிறைய போஸ்ட் கார்டு வைத்திருப்பார்.நின்று கொண்டே எழுதுவார்.நடந்து கொண்டே எழுதுவார்.பஸ்ஸில்போய் கொண்டே எழுதுவார்.அவர் எப்படி எழுதினாலும் எழுத்து வடிவம் ஒரே மாதிரிதான இருக்கும்.இது சாதரண மனிதனால் செய்ய முடியுமா?அவருக்கு ஜோசியத்தில் ஆர்வம் உண்டு.அது பற்றி நிறைய தெரிந்து வைத்திருப்பார்.அவர்கிட்ட ஒரு தீர்க்கதரிசி பார்வை இருக்குன்னு நான் தனிப்பட்ட விதத்தில் நம்புறேன்.ஒருதடவை எனக்கு Astronomy பத்தி ஒரு புஸ்தகம் வாங்கி வெச்சிருந்தாரு.என் வீட்டுக்கு வந்தவர் அந்த புத்தகத்த கொடுக்கவே இல்லை.இரண்டு நாள் பிறகு என் மகளிடம் “இந்த இது உனக்குதான்” என்று கொடுத்தார்.வளர்ந்து பெரியவளாகி என் மகள் Astronomy பற்றிய ஆராய்ச்சிலேயே பெரிய ஆளாகினாள்.சமீபத்தில் கூட அது பற்றிய கருத்தரங்த்திற்கு வெளிநாடு சென்று வந்தாள்.எனக்கென்னவோ இதை பிரமிள் முன்னமே யூகித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.அவருக்கு எழுத்தாளர்கள் தாண்டி நிறைய பேர்கள் தெரிந்திருந்தது பலருக்கு தெரியாது.

ஒருமுறை நானும் அவரும் நடந்து வந்து கொண்டிருந்த போது ஒருவர் தன் மனைவியை ரோட்டில் வைத்து அடித்துக் கொண்டிருந்தார்.பிரமிள் அதைப் பார்த்து உடனே போய் அவன் கன்னத்தில் அறைந்து கொண்டே இருந்தார்.அவன் தயங்கி தள்ளாடி “இது என் மனைவி” என்று சொல்ல, ”யாருன்னாலும் அடிக்க கூடாது.அடிச்சன்னா நான் அடிப்பேன்” என்று அடிக்க ஆரம்பித்தார்.பல இடங்களில் கொள்கை வேறு,நடத்தை வேறு கிடையாது அவரைப் பொறுத்தவரையில்.எப்போதும் அவர் என் மனதில் இருக்கிறார்.


காலசுப்பிரமணியன்:

பதினேழு வருஷமா பிரமிளோட பழகியிருக்கிறேன்.1979 - 1997 வரை.

நான் வேலையில்லாமல் இருக்கும் போது அவ்வப்போது பிரமிளுடன் பத்து நாட்கள் அது மாதிரி தங்கி அவருடன் பல விசயங்களை விவாதித்துச் செல்வேன்.நான் வருவதை ஆவலுடன் எதிர்ப்பார்ப்பார்.நான் வந்தால் வீட்டிலேயே நாங்கள் சமைப்போம்.பிரமிளுக்கு சாப்பாடு மேல பெரிய ஆர்வம் எல்லாம் கிடையாது.கூட்டு காய்கறிகளை போட்டு பிசைந்து சாப்பிடுவார்.”வயித்த நிரப்புறதுக்கு ஏதோ ஒண்ணுய்யா” என்பார். 

அவர் திட்டாத ஒரே ஆள் நான்தான் என்று நினைக்கிறேன்.

அவர் எந்த கோணத்தில் சிந்திக்கிறார் என்பதை யூகிக்கவே முடியாது.அவர் யாரை விமர்சிக்கிராரோ அவரை பல நேரங்களில் பாராட்டவும் செய்வார்.தனிமனித வெறுப்பு அவரிடம் குறைவாகவே இருந்தது என்று நினைக்கிறேன்.

சுந்தர ராமசாமியும் நகுலனும் கொஞ்சம் நீர்த்துதான் எழுதிக்கொண்டிருந்தார்கள்.பிரமிளின் வருக்கைக்கு அப்புறம்தான் அவர்கள் வீரியமாக எழுதினார்கள் என்று நினைக்கிறேன்.அவர்கள் என்றில்லை பல படைப்பாளிகளை பிரமிள் தன் விமர்சனத்தால் செம்மையாக்கினார்.

சினிமா பற்றி அவருக்கு நிறைய தெரியும்.மிக ஆழமான அறிவு உண்டு.தினமும் ஒரு சினிமா பற்றி எனக்கு சொல்லித் தருவார்.சொல்லும் விதம் மிகச் செறிவாக இருக்கும்.இலக்கியம் சாராத நண்பர்கள் நிறைய பேர் அவருக்கு தெரியும்.பலர் பிரமிளை சித்தர் என்று சந்திக்கவருவதும் நடந்திருக்கிறது.அவருடைய இலக்கிய முகமே தெரியாதவர்கள் அவர்கள்.அவர்களிடம் உரையாடுவார்.

பிரமிளுக்கு ஜோசியம்,மந்திரம்,அமானுஷ்யம்,நியூமராலாஜி போன்றவைகள் மீது நம்பிக்கை உண்டு.எனக்கு நம்பிக்கை கிடையாது.ஆனால் அவர் இருபது வருசமாக பெரிய சார்ட் ஒன்றை ஜோசியத்திற்காக தயாரித்தார்.

உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஜோசியம் பற்றி புத்தகம் எழுத வேண்டியதுதானே என்று கேட்டால்,”இதை எழுதினால் மக்களிடையே மூடநம்பிக்கைதான் அதிகரிக்கும்.இதை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் ஆபத்தான மூடநம்பிக்கையாய் போய்விடும்.இதையெல்லாம் எழுதக் கூடாது.பேசனும்” என்பார்.

அவருக்கு சயின்ஸ் ஃபிக்சன் மேல் காதலுண்டு.ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சயின்ஸ் ஃபிக்சன் படிக்காமல் மர்மக்கதைகள் ஏன் படிக்கிறார் என்று திட்டுவார்.

சாது அப்பாத்துரையைப் பற்றிய தியானதாரா புத்தகத்தை அவர் எழுதியது எல்லோருக்கும் தெரியும்.அந்த சாது அப்பாத்துரை மேல் பிரமிளுக்கு மதிப்பு அதிகம்.”அவர் இல்லாவிட்டால் நான் கிரிமினலாக ஆகியிருப்பேன்” என்பார்.யோகிராம் சூரத் குமாருக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு.அடிக்கடி யோகி வரச்சொல்வார்.இருவரும் சந்தித்து பேசிக்கொள்வார்கள்.

எந்த ஒரு துறையைப் பற்றியும் ஆழமாக பேசுவார்.தெரியும் என்பது மாதிரி காட்டிக்கொள்வது அவருக்கு பிடிக்காது.சின்ன வயதில் நடந்த சம்பவத்தை கூட தெளிவாக சொல்லுவார்.சில சமயம் “இந்த நினைவுகளிலில் இருந்து வெளியேற வேண்டும்” என்று ஆதங்கத்தோடு சொல்வார்.

அவர் வரைந்த ஒவியங்கள் என்னிடம் இருக்கின்றன.ஆனால் சிற்பங்களை பிடித்தவர்களுக்கு கொடுத்துவிட்டார்.

இரண்டு முறை கடுமையான மஞ்சள் காமாலை நோய் வந்து கஸ்டப்பட்டார்.அதன் பின் வயதாக ஆக அடிவயிற்றில் கேன்சர் வந்தது.அதனால மிகவும் கஸ்டப்பட்டார்.அவரால் இயல்பு வாழ்க்கை நடத்த முடியாதது பற்றிய கவலை அதிகம் கொண்டார்.அவர் இறந்துபோனதாகவே எனக்கு தோன்றாது.அவருடைய சமாதி வேலூரை அடுத்துள்ள கரடிக்குடி என்ற ஊரில் இருக்கிறது.

சமீபத்தில் அங்கு சென்றிருந்த போது சமாதியில் உள்ள படங்கலையெல்லாம் அழித்திருகின்றனர் யாரோ தெரியாவதர்கள்.பிரமிளை தெரியாத அவர்களுக்கு அது ஒரு விஷமத்தனம்.பிரமிளோடு பழகிய எனக்கு அது வேதனை.

இன்னும் நிறைய பேசலாம்.ஆனால் இந்த இடத்தில் இது போதுமென்று நினைக்கிறேன்.

பிரமிளின் மொத்த படைப்புகளையும் வெளியிடும் வேலையை செய்து வருகிறேன்.இங்கு வந்து தம் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

இந்த வருடத்தின் மிகச்சிறந்த நிகழ்ச்சியை நடத்திய பெருமையை அகநாழிகை பெற்றுக் கொண்டது.

விஜயபாஸ்கர் விஜய்