Monday 26 January 2015

சீனர்களின் பன்றி மோகம்...

சீனர்களின் பன்றிக்கறி(Pork) உண்ணும் ஆர்வத்தைப் பற்றி ஒரு கட்டுரை படித்தேன்.அதிலிருந்து கொஞ்சம்.
-1970 க்குப் பின் சீனா அதிக பன்றிகளை உற்பத்தி செய்தது, உட்கொண்டது. சுமார் 50 கோடி பன்றிகள் சீனாவால் உற்பத்தி செய்யப்படுகிறது.அதை சீன மக்களே உணவாகக் கொள்கின்றனர்.உலகின் மொத்த பன்றிகளில் பாதி அளவு இதுவாகும்.
-மேண்டரின் மொழியில் மாமிசம் என்றாலும் பன்றி இறைச்சி என்றாலும் ஒரே பொருள்தான்.
-சீன ராசி நிலையில் பன்றியும் ஒரு குறியீடு. பன்றி செழிப்பு,நன்மை போன்றவற்றைக் குறிக்கும் நல்ல விசயம்.
-ஹான் பரம்பரை மக்களின் கல்லறையில் நிறைய பன்றி பொம்மைகள் இருந்தனவாம்.ஒருவேளை அது உணவாக படைக்கப்பட்டிருக்கலாம்.
- கிட்டத்தட்ட பன்றியின் அனைத்து பாகங்களையும் சீனர்கள் உண்டு விடுகின்றனர்.எதையும் விட்டு வைப்பதில்லை.
-1950 களில் பஞ்சத்தால் பன்றிக்கறிக்கு தட்டுப்பாடு வரும் போது சீனமக்கள்,பன்றியின் கொழுப்பை காய்கறியில் தேய்த்து அந்த வாசனையில் உணவை ருசித்திருக்கிறார்கள்.
-சராசரியாக ஒவ்வொரு சீனக் குடிமகனும் வருடத்துக்கு 39 கிலோ பன்றி இறைச்சியை உட்கொள்கிறான். 1979 யில் இருந்ததை விட இது ஐந்து மடங்கு அதிக உட்கொள்தல் ஆகும்.
-2007 யில் பன்றிகளுக்கு நோய் வந்து, இறைச்சித் தட்டுப்பாடு ஏற்பட்ட போது கறி வாங்க அதிக போட்டி இருந்ததாம். சூப்பர் மார்க்கெட்டுகளில் தள்ளு முள்ளு நடந்து காயங்கள் சகஜமாயிற்றாம்.
-ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்தி செய்ய 6 கிலோ உணவு தேவைப்படுகிறது.சீனப் பன்றிகளை மொத்தமாய் உற்பத்தி செய்யும் போது அதற்கு சோயா பீன்ஸுகளை உணவாக கொடுக்கிறார்கள்.
-உலகில் உற்பத்தியாகும் சோயா பீன்ஸுகளில் பாதி அளவை சீனாவே இறக்குமதி செய்கிறது.அவைகளை பன்றிகள் தின்று தீர்க்கின்றன.
-சீனாவுக்கு சோயா பீன்ஸ் ஏற்றுமதி செய்ய பிரேசில்,அர்ஜெண்டைனா போன்ற நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. அதிக சோயாவை சாகுபடி செய்ய காடுகளை வேகமாக அழிக்கின்றனர்.இது சுற்றுச் சூழலுக்கு சவாலான விசயமாகும்.
-சீனாவில் வளரும் பன்றிகள் ஒருநாளைக்கு 5 கிலோ கழிவுகளை இடுகின்றன.இதனால் நிலத்துக் கேடு விளைகிறது. மேலும் அந்தக் கழிவுகளில் இருந்து வெளியேறும் மீதேனும் ,நைட்ரஸ் ஆக்சைடும் மாசு விளைவிக்கும் கார்பன் டை ஆக்சைடை விட 300 மடங்கு கொடியதயாகும்.
இப்படியாக சீனர்களின் பன்றி மோகம் பற்றி படிக்கும் போது மலைப்பாக இருக்கிறது 

தேவநேய பாவணர் நூலகம்

அன்று அண்ணா சாலையில் இருக்கும் தேவநேய பாவணர் நூலகத்தில் இரண்டு மணி நேரம் இருந்தேன்.
அங்கே நான் வாசித்து முடித்த புத்தகம் இப்சனின் “டால் ஹவுஸ்” என்ற நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான “பொம்மை வீடு” ஆகும்.(நான் படித்தது க.நா.சுவின் மொழிபெயர்ப்பு அல்ல )
கணவனுக்காக, கணவனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மனைவி சந்தர்ப்ப சூழ்நிலையில் கள்ளக்கையெழுத்து போட வேண்டிய சூழ்நிலை வந்துவிடுகிறது.
அது கணவனுக்கு தெரிந்து விடக் கூடாது என்று கவனமாயிருக்கிறாள்.ஆனால் எதிரி மூலம் கணவனுக்கு விசயம் தெரிந்து விடுகிறது. கணவன் மனைவியை ஏமாற்றுக்காரி என்று குற்றஞ்சாட்டி, இனிமேல், ஊருக்காக தம்பதிகள் மாதிரி நடிக்கலாம் ஆனால் உண்மையில் அப்படியில்லை என்று வெறுப்பை உமிழ்கிறான்.
எதிரி மனம் மாறி அந்த கள்ளக் கையெழுத்திட்ட கடன் பத்திரத்தை கொடுக்கும் போது, கணவன் அதை வாங்கி எரித்து விட்டு மனைவியைப் பார்த்து “ இனிப் பிரச்சனையில்லை. நாம் அன்பாகவே இருக்கலாம்” என்கிறான்.
ஆனால் மனைவி அதை மறுத்து இனிமேல் நாம் ஒன்றாய் வாழ்வது சரிபடாது என்று வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
பாரதிராஜாவின் புதுமைபெண் சினிமா மாதிரியே இப்சன் 1879 யில் ஏன் தான் எழுதி வைத்திருக்கிறாரோ என்று சலித்துக் கொண்டேன். smile emoticon
நான் சொல்லவந்ததை விட்டு கதைச்சுருக்கத்தை சொல்கிறேன். தேவநேய பாவணர் நூலகத்தில் இரண்டு மணி நேரம் இருந்து படிக்கமுடியவில்லை.அவ்வளவு எரிச்சலான அனுபவமாக இருந்தது.
நூலகம் என்பது தெரியாமல் அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.நான் படித்துக் கொண்டிருக்கிறேன். என் பின்னே நின்று இரண்டு இளைஞர்கள் கூலாக மச்சி மாமா என்று பேசினார்கள்.
உட்கார்ந்து படிக்க சரியான வசதியில்லை. மொத்தமே நாற்பது சேர்கள்தான் இருக்கின்றன.
நாம் படிக்கும் இடத்தின் பக்கத்திலேயே மலை மலையாக புத்தக்கட்டுகள்.அவற்றை ஒவ்வொரு இடத்துக்கும் கொண்டு செல்லும் போது ஏற்படும் ஒசை.
அந்தக் கட்டிடத்தின் தூசியும் தும்பும் தரையும். எனக்கென்னவோ பெரிய கோடவுனில் இருந்து படித்த உணர்வு. அல்லது மவுண்ட் ரோடு பிளாட்பாரத்திலேயே இருந்து படித்த உணர்வு.
நாட்டின் மாபெரும் நகரமாம் சென்னையின் இதயத்தில் இருக்கும் பிரபல நூலகத்தின் நிலைமைய்ப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது.சகிக்க முடியல.
இதையெல்லாம் யார் எப்போது மாற்றுவார்கள் என்று தெரியவில்லை.

பொய்சொல்லிகள்...

நேரடியாக ஒருவிசயம் பார்த்திருப்போம்.அதை இன்னொருவர் இட்டுக்கட்டி பொய் சொல்லும் போது நமக்கு தாங்காது.
அது மாதிரி கழிந்து இரண்டு நாட்களாக நான் மன துன்பப்படும் விசயம் என்னவென்றால் மனுஷ்யபுத்திரன் சொன்ன பொய்யும் அதற்கு மற்றவர்கள் அடிக்கும் ஜால்ராவும்தான்.
நெல்சன் சேவியர் சாருவிடம் நீங்கள் ஏன் திமுகவை விமர்சிக்கிறீர்கள் அதிமுகவை விமர்சிக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்கிறார்.
சாரு அதற்கு நல்லதோ கெட்டதோ குறிப்பிட்டு பதில் சொல்கிறார்.ஆனால் மனுஷ்யபுத்திரன் தன் ஃபேஸ்புக் பதிவில் சாரு பதிலே சொல்லவில்லை என்று பொய் பரப்புகிறார்.
அதற்கு 400 லைக்ஸ் விழுந்திருக்கிறது.
அதற்கு கிழே என்ன நடந்தது என்றே தெரியாமல் எம். எம் அப்துல்லா போன்ற திமுக அடிவருடிகள் சொறிந்து கொடுக்கிறார்கள்.
அதை விடுங்கள். இந்த விழாவுக்கு எனக்கு தெரிந்து கலந்து கொண்டவர்கள் கே.என் சிவராமன், யுவகிருஷ்ணா, அதிஷா, ஜோவ்ராம் சுந்தர்,நெல்சன் சேவியர் போன்றவர்கள்.இவர்களில் யாராவது மனுஷ்ய புத்திரனின் சுவரில் “இல்லையே சாரு பதில் சொன்னாரே” என்று எழுதலாம்.
ஆனால் எழுதவில்லை.
இப்போது என்ன ஆகிறது மனுஷ்ய புத்திரன் சொல்வது சரியான தகவல் மாதிரி அது ஒரு பதிவாக பதிவாகிறது அல்லவா? இது என்ன நியாயம்.
இதை விடுங்கள் நான் கொஞ்சம் நேர்மையானவாரக மதிக்கும் பதிவர்களில் ஒருவர் சாம்நாதன். அவர் மனுஷ்யபுத்திரனின் பதிவைப் பார்த்தாரா இல்லையா என்று தெரியவில்லை. அவரும் ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இது ஒரு மேட்டரா இதை எதிர்த்தால்தான் எல்லாம் நல்லதாகிவிடுமா என்று கேட்கலாம். அப்படியில்லை. பச்சையாக புளுகி வைக்கிறார் மனுஷ்யபுத்திரன்.
அதை அப்படியில்லை என்று சொல்வதற்கு இந்த முதுகெலுமில்லாத யுகிகிருஷ்ணாவுக்கும்,கே.என் சிவராமனுக்கும்,அதிஷாவுக்கு தைரியமில்லையே. இது என்ன மாண்பு என்று தெரியவில்லை.
எங்கள் கம்பெனிகளில் ஒருவனுக்கு அதிகம் இன்கிரீமெண்டோ அல்லது புரமோசனோ கிடைத்தால் இளைஞர்கள் கேலிக்கு “மச்சி நீ மேனேஜர் டேபிளுக்கு அடியில டெய்லி போய்ட்டு வர்றியா” என்று கேட்பார்கள் ( நான் ஒரு அப்பாவி இப்போதுவரைக்கும் அதற்கு எனக்கு அர்த்தமே தெரியாது.
இப்போது அதே கேள்வியை கே.என் சிவராமனுக்கும்,யுவகிருஷ்னாவுக்கும்,அதிஷாவுக்கும், ஜோவ்ராம் சுந்தருக்கும் புரியும்படியாக, நான் கேட்கிறேன்.
“ஏங்க நீங்கல்லாம் மனுஷ்யபுத்திரன் டேபிளுக்குள்ள போயிட்டு வர்ற ஆட்களா”
அட மானமுள்ள மக்காஸ்களா...

Pk மற்றும் பராசக்தி...

வயதானவர்களில் சிலர் இப்படி சொல்வார்கள் “நான் அந்த காலத்து எஸ்.எஸ்.எல்.சி.அது என்ன மாதிரி படிப்பு.இந்த காலத்து எம்.ஏ வுக்கு சமம் ( இப்போது இப்படி யாரும் சொல்வதில்லையோ.நான் சிறுவயதில் கேட்டிருக்கிறேன்).
அதைக் கேட்கும் போது ” ஆமா அந்த காலத்துப் கொஞ்சம் படிப்பு = இந்த காலத்து நிறையப் படிப்பு” என்றொரு தேற்றத்தை நானே உருவாக்கிக் கொண்டேன்.ஆனால் பின்னால் அதை ஆராயும் போது அப்படியில்லை என்பதை கண்டுகொண்டேன்.
இப்போது பத்தாம் வகுப்பில் படிக்கும் திரிகோணமதியை (கணிதம்) அவர்க பியூசி தாண்டிதான் தொட்டிருக்கிறார்கள்.இப்போதைய பிளஸ் டு கால்குலஸ் எல்லாம் கல்லூரி காலத்தில்தான் படித்திருக்கிறார்கள்.
இருந்தாலும் பெருமைக்காக எங்கள் படிப்பு ஒசந்தது என்றொரு தொனியில் அப்படி சொல்வார்கள்.அதை ஒரு இங்கிதத்துக்காகவும், சபை கண்ணியத்துகாகவும் பேசுபவரை மறுக்காமல் ”ஆமா இல்ல” என்ற தொனியில் தலையாட்டிச் சென்று விடுவோம்.
அது போன்ற ”அந்த காலத்து எஸ்.எல்.சி” என்ற டாம்பீகம்தாம் பராசக்தி திரைப்படம்.
அதை அமீர்கானின் பி.கே படத்தோடு ஒப்பிட்டு,”நாங்கெல்லாம் இதை அப்போதே சொல்லிவிட்டோம்” என்று ஒன்றிரண்டு குரல்கள் கேட்டால் பரவாயில்லை, ஆனால் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் அதை சொல்லிவிடுமோ என்ற அச்சத்தில் இதை எழதுகிறேன்.
பி.கே என்ற ஹிந்திப்படத்தின் அருகில் கூட பராசக்தியால் வரமுடியாது என்பது என் கருத்து.
பி.கே 1000 என்றால் பராசக்தி 50 துதான்.இதுதான் உண்மை.பராசக்தியின் காலகட்டத்துக்கு பராசக்தி ஒக்கே.ஆனால் பராசக்தியில் அப்படியே எல்லா இடங்களிலும் பகுத்தறிவு கருத்துக்கள் பரவியிருக்கவில்லை.பராசக்தி பெரும்பான்மையான இடங்களில் பெண்ணின் பிரச்சனையை மட்டும்தான் பேசுகிறது.மத எதிர்ப்பு கொஞ்சம்தான் வருகிறது.
ஆனால் பி.கே முழுவதுமாய் மூடக்கருத்துக்களை எதிர்ப்பதை மட்டுமே பேசுகிறது.அதற்கு படைப்பாளி தேர்ந்தெடுத்திருக்கும் வேற்று கிரக கேரக்டர் என்ற வசதி அருமையானது.
பெரிய சிலை பெரிய அருளையும், சின்ன சிலை சின்ன அருளையும் தருமா? என்று கேட்பதாகட்டும்.
ராங் நம்பர் என்று இந்தியாவின் அனைத்து ”கடவுள் மனிதர்களையும்” சந்தேகப்படுவதாகட்டும்.
படம் முழுவதும் பி.கேவுக்கு ஒரே குறிக்கோள்தான்.அது மக்களுக்கு சில செய்திகளை சொல்வது மட்டுமே.
ஆனால் பராசக்தி அப்படியில்லை.செய்தி சில இடங்களில் மட்டுமே வருகிறது.
அடுத்து பி.கே திரைப்படம் சொல்லும் முக்கியமான கருத்து “முன்முடிவு” பற்றி.
பாக்கிஸ்தான் காதலனை (சர்ஃபரஸ்) இந்திய காதலி (ஜக்கு) திருமணம் செய்ய நினைத்து ஏற்கனவே இருவரும் திட்டமிட்டபடி சர்ச்சில் காத்திருக்கிறாள்.
காதலன் வர நேரமாகிறது.
அப்போது சிறுவன் ஒருவன் கடிதம் கொடுக்கிறான்.அதில் சர்ஃபரஸ் “நம் கலாச்சார வேறுபாடு என் குடும்பத்துக்கு பிடிக்காது.அதனால் திருமணம் வேண்டாம்” என்று எழுதியிருக்கிறான்.
ஜக்கு அழுகிறாள்.
அதற்கு முன்னால் அவர்கள் குடும்ப சாமியார் “ அவன் பாக்கிஸ்தானி உன்னை ஏமாற்றி விடுவான்” என்று சொன்னது யூகித்தது உண்மைதான் என்றெண்ணி மனம் குமைகிறாள்.
ஆனால் வேற்று கிரகவாசி பி.கே அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கிறான்.
அந்த விளக்கம் கொடுக்கும் போது ஜக்குவின் குடும்பச சாமியார், ஜக்கு மற்றும் மக்கள் அனைவரும் இருக்கிறார்கள்.
பி.கே( மற்றும் பலரும்) ஜக்குவை சர்ஃபரஸுக்கு போன் செய்ய வைக்கிறார்கள்.போன் செய்தால் தெரிகிறது சர்ஃபரஸ் ஜக்குவை ஏமாற்றவில்லை.அவன் இன்றும் கண்ணீரோடும் காதலோடும் ஜக்குவுக்காக காத்திருக்கிறான் என்று.
அன்று அந்த சிறுவன் கொடுத்த கடிதம் சர்ஃபராஸால் எழுதப்படவில்லை. அது வேறு ஏதோ ஒரு ஆணால் வேறு ஒரு பெண்ணுக்கு எழுதப்பட்டக் கடிதம்.தவறுதலாய் ஜக்குவுக்கு கிடைத்துவிடுகிறது.
இப்போது பி.கே குடும்ப சாமியாரைப் பார்த்துச் சொல்கிறான்
“நீங்கள்தான் ஜக்கு சர்ஃபரஸைப் பிரித்தீர்கள்.பாக்கிஸ்தானி என்றாலே ஏமாற்றிவிடுவான்.அவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்ற முன்முடிவை ஜக்குவின் மனதில் ஏற்றிவிட்டீர்கள்.திணித்தீர்கள்.அதனால்தான் ஜக்கு ஏன் எதற்கு என்று ஆராயாமல், அந்தக் கடிதம் சர்ஃபரஸ் எழுதியதுதான் என்று தீர்மானத்துக்கு வந்திருக்கிறாள்” என்கிறான்.
பிகே வெறும் கடவுள் மறுப்பையோ மனிதநேயத்தையோ மட்டும் பேசவில்லை. அது மனிதநேயத்தை சக மனிதனை எப்படி நேசிக்க வேண்டும் என்ற வழிமுறையையும் கற்றுத் தருகிறது.
”இனம்,மொழி,மற்றும் இன்னபிற அடிப்படையில் ”முன்முடிவோடு” யாரையும் அணுகாதே, அப்படி அணுகினால் உன்னால் அவர்களை நேசிக்க முடியாமல் போகும்.அவர்களை தவறாகப் புரிந்துக் கொள்வாய்” என்ற அற்புதமானக் கருத்தை பி.கே சொல்கிறது.
ஆனால் பராசக்தி அப்படியெல்லாம் சொல்லவில்லை.பல இடங்களில் தட்டையாக போகிறது.
ஆனாலும் ,
இரும்பு குதிரைகள் நாவலில் விஸ்வநாதன் காயத்திரியிடம் சொல்வான் (?) “ பாரதி பளபள தான்.ஒத்துக்கிறேன் அவர் கவிதை பளபளதான்.ஆனா அந்த காலகட்டத்துல மக்களுக்கு அந்த பளபள தேவைப்பட்டுச்சி” என்பான்.
அதுமாதிரி பராசக்தி என்பது” அந்த காலகட்டத்துக்கு ஒரு புரட்சிப்படமாக இருந்திருக்கலாம்.தைரியமான படமாக இருந்திருக்கலாம்.ஆனால் அதற்காக இப்போதைய பி.கேவை நாங்க அப்போதே சொல்லிட்டோம் என்று சொல்வதை மூடத்தனமான உணர்ச்சிவசப்பட்ட சொற்களாக நன் நினைக்கிறேன்.
இதுவும் பழம்பெருமை பேசும் தாத்தாத்தனம்தான்.
இதன் மூலம் பி.கே போன்ற நுணுக்கமான சில விசயங்களைச் சொல்லும் படங்களை நம்மையும் அறியாமல் இருட்டடிப்பு செய்கிறோமோ என்று தோன்றுகிறது.

புத்தகக்கண்காட்சியில் இமையம் பேசியதென்ன...

நேற்றைய புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் இமையம் சிற்றரங்கத்தில் பேசியதின் சுருக்கம் வருமாறு :
சமுதாயத்தை பிரதிபலிப்பவர்கள் எழுத்தாளர்கள்தாம் என்பதை நம்புகிறேன்.
திருவள்ளுவர்,கம்பர்,தொல்காப்பியர் என்ற எழுத்தாளர்களைத்தான் தமிழ் சமூகத்தின் அடையாளமாக சொல்கிறோம்.
சமுதாயத்தை அடையாளப்படுத்தும் பணியை செய்பவர்கள் ஆதலால் அவர்களுக்கு மற்றவர்களை விட கூடுதல் பொறுப்பு உண்டு என்பதை உணர்ந்து எழுத வேண்டும்.
ஆனால் கடந்த பத்து வருடங்களாக பலர் சொற்களை விரையம் செய்கிறார்களோ என்ற எண்ணம் வருகிறது. நான் யாரையும் குறை சொல்லவரவில்லை.சொல்வதன் நோக்கம் திறன் மேம்படுத்துதல் பற்றிய அக்கறைதான்.
நூறு ரூபாய் கையில் கிடைத்தால் அதை வீணாக செலவழிப்பீர்களா? மாட்டீர்கள் அல்லவா?
அப்படித்தான் சொற்களையும் வீணாக்குதல் கூடாது.
ஆனால் நாம் என்ன செய்கிறோம். ஆயிரக்கணக்கான வார்த்தைகளை சிந்தி சிதறடிக்கிறோம். ஃபேஸ்புக்கில் லைக்ஸ் அதிகம் கிடைக்கும் கிளுகிளுப்பில் இருந்து எழுத்தாளன் விடுபட வேண்டும்.
தேவையில்லாமல் ஆயிரக்கணக்கான வார்த்தைகளை கொட்டி இறைக்கும் போது அவர்களிடமிருந்த சொற்கள் தீர்ந்து போகின்றன. பின் எதை வைத்து அவன் இலக்கியம் படைப்பான்.
நல்ல சரியான வாக்கியம் அமைத்தல் பற்றி கூட தெளிவில்லாமல் பலர் இருக்கின்றனர்.”மொழியை வளப்படுத்துவதன் இலக்கியம்” என்ற முக்கியமான கோட்பாட்டுக்கு எதிரானது இது.
இதற்கு உழைப்பும் அக்கறையும் கவனமும் வேண்டும்.சொல்லை ரசிக்க வேண்டும். வாக்கியத்தை ரசிக்க வேண்டும்.
என் ஆசிரியர் எனக்குச் சொன்ன கதையை சொல்கிறேன். ஆண்டன் செகாவ் கதை எழுதி பதிப்பாளரிடம் கொடுத்தாராம்.
பதிப்பாளர் வெளியிடாமல் ”திரும்ப எழுதி வா” என்றாராம்.
செகாவ் எழுதி வர மறுபடியும் ”திரும்ப எழுதி வா” என்றாராம்.
இப்படி ஏழு தடவை நடந்து எட்டாவது முறை எழுதி வரும் போது செகாவ் பதிப்பாளரிடம் இப்படி சொன்னாராம் “ ஐயா இனிமேல் இந்தக் கதையில் எழுத எதுவுமில்லை.இதற்கு மேல் திருத்தி எழுத முடியாது” என்று சொல்ல, ”அப்படியானால் நிச்சயம் இது நல்ல கதைதான்.வெளியிடுகிறேன்” என்றாராம்.
இதைத்தான் நானும் சொல்ல வருகிறேன்.அவசரப்படாதீர்கள். இன்றே எழுதி இன்றே பாரட்டப்பட வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
எப்போது மில்லாத அளவு இப்போதைய காலகட்டத்தில் இலக்கியத்தில் வெற்றுப் புகழ்ச்சி அதிகமாக இருக்கிறது.
பரஸ்பரம் சொறிந்து கொடுத்தால் மட்டுமெ இலக்கியத்தில் அடையாளத்தை அடைய முடியும் என்பதை நம்பாதீர்கள்.
இலக்கியம் என்பதே விமர்சிக்கும், சல்லடை போட்டு அலசும் தன்மையில்தான் இருக்கிறது.
இன்றே எழுதி, அதை ஒரு பதிப்பாளர் புத்தகமாக போட வேண்டும். புத்தகம் போட சம்மதித்தவர்கள் நல்லவரகள். நான் அவர்கள் அணி.சம்மதிக்காதவர்கள்,என் படைப்பை புகழாதவர்கள் என் எதிர் அணி போன்ற சக்கரத்தில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
அவையெல்லாம் பிற்காலத்தில் நிலைப்பது கடினம்.
நினைவில் கொள்ளுங்கள் !
ஒரு வாக்கியத்தை எழுதி கூட இரண்டாயிரம் வருடம் ஒருவன் நிலைத்து இருக்கிறான். பேசப்பட்டுக் கொண்டிருக்கிறான்.அந்த வாக்கியம்
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
மவுனி,லா.ச.ரா,நகுலன் போன்றவர்கள் தமிழ் இலக்கணத்தை மீறி படைப்பை ஏற்றினாரகளே என்பதை நாம் செய்யும் வாக்கிய இலக்கிய தவறுகளுக்காக சமாதானப்படுத்தும் உதாரணமாக கொடுக்கக் கூடாது.
அவர்கள் தங்கள் படைப்பை மிகுந்த அக்கறையோடு செதுக்கி கொடுத்தாரக்ள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நன்றி

ஜப்பான் நாட்டுக் கதை...

ஜப்பானிய மொழி கற்றுக்கொள்ளுங்கள் என்றொரு புத்தகத்தில் ஏதேட்சையாக படித்த குட்டிக் கதையைப் (கண்காட்சியில் படித்தேன்) பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.
கதை வருமாறு
குடியானவன் ஒருவன் உழைத்துக் கொண்டே இருப்பான்.விவசாயம் செய்வது, தூங்குவது இரண்டும் தவிர எதுவும் தெரியாமல் இருந்தான்.
ஒருநாள் வண்ணத்துப்பூச்சிகளோடு விளையாடிக்கொண்டிருக்கும் அழகான இளம்பெண்ணை பார்க்கிறான்.அவள் அழகில் மயங்கி,அவள் சம்மதம் பெற்று,அவளை திருமணம் செய்து கொள்கிறான்.
அன்போடும் முத்தங்களோடும் அவர்கள் வாழ்க்கை இனிப்புப் பண்டமாய் இனிக்கிறது.அவன் தன் தொழிலான விவசாயத்தை மறந்து வீட்டிலேயே மனைவியின் திருந்திய அழகான முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.அதை பார்க்க பார்க்க ஆர்வம் அதிகமாகிறதன்றி சலிக்கவில்லை.
கணவனின் இந்தப் போக்கை மாற்ற மனைவி, தன் முகத்தை அழகிய ஒவியமாக வரைந்து கொள்கிறாள்.அதை கணவனிடம் கொடுத்து “போய் நிலத்தில் வேலை செய்யுங்கள் என் முகத்தை பார்க்க வேண்டுமென்று தோன்றினால் இந்த ஒவியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்ல கணவன் அந்த ஒவியத்தை எடுத்துக் கொண்டு போகிறான்.
மறுபடியும் கடுமையாக உழைக்க ஆரம்பிக்கிறான்.ஒவியத்தை மறந்து விடுகிறான்.
ஒவியம் காற்றில் பறந்து விடுகிறது.தூரமாக போய்க்கொண்டிருக்கிறது.அந்த ஊரின் அதிகாரமிக்க செல்வந்தன் கையில் கிடைக்கிறது.அவனுடைய பணத்தால் அதிகாரத்தால் யாரையும் அடிமை செய்யும் நம்பிக்கை உடையவன். இந்த அழகான ஒவியத்தைப் மயங்கி ”உடனே அந்தப் பெண்ணை கொண்டுவாருங்கள்” என்று சொல்கிறான்.
அவன் வேலைக்காரர்கள் பெண் வீட்டுக்கு சென்று விஷயத்தை சொல்கிறார்கள்.மறுத்தாலும் தூக்கிப் போகப் போவதாக சொல்கிறார்கள்.வாடிய முகத்தோடு செல்கிறாள்.போகும் போது கொஞ்சம் “பீச்” பழவிதைகளை விட்டுச் செல்கிறாள்.
வீடு திரும்பிய குடியானவன், மனைவியை காணாது திகைக்கிறான்.அழுகிறான்.உண்ணாமல் கதறுகிறான்.
மனைவி விட்டுச் சென்ற பீச் பழ விதைகளைப் பார்க்கிறான்.அதை முளைக்கப் போடுகிறான்.உரம் போட்டு,மருந்து அடித்து கவனமாக வளர்க்கிறான்.
பீச் பழங்கள் விளைகின்றன.அதை எடுத்து வேண்டிய மட்டும் ருசிக்கிறான்.இன்னும் நிறைய மிஞ்சுகிறது.அதை விற்கலாம் என்று கூடையில் எடுத்துச் சென்று விற்கிறான்.
தெருத்தெருவாய் போகும் போது அதிகாரமிக்க பணக்காரன் வீட்டின் முன்னாலும் நின்று கூவுகிறான்.
அங்கே சிறையில் இருக்கும் மனைவி கணவனின் குரல் கேட்டு மகிழ்ச்சியுடன் வெளியே ஒடிவருகிறாள். அவனை உள்ளே அழைத்துச் செல்கிறாள்.
அதிகாரமிக்க பணக்காரன் பீச் பழங்களை வாங்குகிறான்.
பீச் பழங்கள் விற்கும் குடியானவனிடம் சொல்கிறான் “நான் இவளை கவர்ந்து வந்து பட்டு உடை கொடுத்தேன்.அப்போதும் சோகமாயிருந்தாள்.தங்கம் கொடுத்தேன்.அப்போதும் இறுக்கம்.நல்ல சுவையான உணவு கொடுத்தேன்.அப்போதும் இறுக்கம்.சிரிப்பாளில்லை.பஞ்சு மெத்தையும் வாசனையும் கொடுத்தேன். சிரிக்கவில்லை.ஆனால் பீச் பழங்கள் விற்பவனே ! இன்று உன் குரல் கேட்டு சிரிக்கிறாள். பெண்ணின் உடலை கைகொண்ட அளவுக்கு மனதை கைக்கொள்ளத் தெரியாத அறியாமைக்காரனாக இருந்திருக்கிறேன். நீ எப்படி இந்த அழகிய பெண்ணின் மனதை ஈர்த்தாய்”
குடியானவன் சொன்னான் “ நான் பீச் பழங்கள் விற்றேன்”
“என்ன”
“நான் பீச் பழங்கள் விற்றேன்”
“நானும் பீச் பழங்கள் விற்றால் அன்பான மனிதாக மாறிவிடுவேனா? உன்னைப் பார்த்து இவள் சிரித்தது மாதிரி,என் அன்பையும் பார்த்து வேறு ஒரு பெண் மகிழ்ச்சியோடு சிரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது அல்லவா?
“இருக்கிறது”
“நானும் பீச் பழங்கள் விற்கட்டுமா? உன் பீச் பழங்களையும் கூடையையும் எனக்குக் கொடுக்கிறாயா?
“சரி” என்றான் குடியானவன்.
அதிகாரப் பணக்காரன் பீச் பழங்கள் நிரம்பிய கூடையை எடுத்துச் சென்று கூவி விற்க ஆரம்பித்தான்.
மாளிகையை விட்டுச் சென்றதும், ”அதிகாரமிக்க பணக்காரன்” சாதரண மனிதனாக மாறினான்.
குடியானவன் அந்த மாளிகையின் செல்வங்களை,தன் காதல் மனைவியோடு மகிழ்ச்சியாக அனுபவித்து வாழத்தொடங்கினான்.

கோல மாட்டுக்கு என்ன கொடுப்பது....

மாட்டுப் பொங்கல் கோலமாக ஒவ்வொருவரும் தெருவை நிறைத்து கோலம் போட்டார்கள்.
என் வீட்டுக் குட்டிப்பெண் நானும் கோலத்துக்கு கலர் போடுவேன் என்றாள். அவளை யாரும் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ளவில்லை.
இன்று காலை எழுந்ததும் என் அப்பாவிடம் கம்ப்ளைண்ட் “ தாத்தா என்ன கோலம் போடவே விடல.கலர் கொடுக்க எனக்கு ஆசையாயிருக்கு” என்றாள்.
உடனே அப்பா “ அப்படியா யாரு உன்ன கலர் போட விடாம தடுத்தது.இங்க வா தாத்தா நா ஒரு கோலம் போடுறேன். நீ கலர் கொடு” என்றார்.
தாத்தாவும் பேத்தியும் உற்சாகமாக வாசலுக்கு சென்றார்கள்.அப்பா சாக்பீஸை எடுத்துக் கொண்டார். வேகமாக ஒரு மாடு படம் வரைந்தார்.
“ம்ம்ம் இதுக்கு கலர் கொடு” என்றார்.
பேத்தி பல்விளக்காமல் சூரிய ஒளி முதுகில் பட கலர் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.அவளுக்கு எப்போது கலர் கொடுப்பது பிடிக்கும். முடிந்த அளவு கச்சிதமாக கொடுத்து அழகாக்கினாள்.
அங்கே என் அம்மா பேத்தியை நோக்கி “ யம்மா நீ கொஞ்சம் டீ குடிக்கிறியா. கொஞ்சம் பால் குடிக்கிறியா” என்று கெஞ்சிக்கொண்டிருந்தார். அதை அவள் சட்டை செய்யவே இல்லை.
நான் வந்து “சொல்றத கேக்க மாட்டியா” என்று அதட்டினேன். அதையும் கண்டுகொள்ளாமல் “கோட்டு சித்திர மாட்டை” “வர்ண மாடாக்கினாள்”. அழகாகவே இருந்தது.
அப்புறம் பல்விளக்கும் போது கோலத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.நாங்கள் கலரிங்க ஆஹா ஒஹோ என்று புகழ்ந்து கொண்டே இருந்தோம்.
பல் தேய்த்து முடித்ததும் கோலம் பக்கம் வந்தாள்.பக்கத்தில் இருக்கும் செடிகளின் இலைகளை பிய்த்தாள்.அதை கையால் சிறுதுண்டாக்கினாள்.
துண்டாக்கிய இலையை வர்ண கோல மாட்டின் வாயெருகே வைத்தாள்.
அப்பா கேட்டார் “ அட இது என்ன வைக்கிற” என்று செல்லமான
நக்கலாக
“மாடு சாப்பிடுறதுக்கு புல் வைக்கிறேன். உங்களுக்கென்ன”
என்றாள்.
வள்ளலார் கேட்டிருக்க வேண்டும் இதை..

மாதொருபாகனில் ஒரு பகுதி...

பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலில் இப்படி ஒரு சம்பவம் வருகிறது.( நான் சுருக்கமாக சொல்கிறேன்)
காளி வளர்க்கும் கோழிக்குஞ்சுகள் மட்டும் காக்கைகள் கையில் சிக்காமல்,கழுகின் அலகால் சிதையாமல் தப்பித்து வளர்ந்து விடுகின்றன.
காளியின் நண்பன் “எப்படி” என்று வியக்கிறான்.அது எப்படி என்று காளி சொல்கிறான்.(இதையும் நான் சுருங்க எழுதுகிறேன்)
அந்த விளையில் இருக்கும் நெருக்கமான பனைமரங்களில் சிலதின் ஒலைகளை வெட்டாமல் விடுகிறான்.பனை ஒலைகள் சிலுப்பிக் கொண்டு நிற்கின்றன.அங்கே கரிக்குருவிகள் கூடுகட்டுவதற்காக மோப்பம் பிடித்து அலைகின்றன.காளி அதை கவனமாக கவனிப்பான்.கரிக்குருவிகள் கூடு கட்டத்தொடங்கும் போது, தன் கோழி அடைக்காத்து குஞ்சு பொரிப்பது போல திட்டமிடுகிறான்.
கரிக்குருவிகள் (ஆணும் பெண்ணும்) தன் முட்டையை அடைகாக்கும் போதும் சரி, குஞ்சுகளை வளர்க்கும் போதும் சரி வேறு எந்த பறவையையும் அந்த இடத்தில் அண்டவிடாதாம்.
காக்கை,கழுகு என்று எதுவந்தாலும் ஆக்கிரோஷமாக விரட்டிவிடுமாம்.
ஆக பனைஒலையை வெட்டாமல்,கரிக்குருவிகளை வரவழைத்து, அதன் தாய்மை தந்தை ஆக்கிரோஷத்தை உபயோகித்து காளி தன் கோழிக்குஞ்சுகளை வித்தியாசமாக பாதுகாக்கிறான்.
எவ்வளவு அழகான விஷயம் இது.பெருமாள் முருகன் சொன்னது சரியா? இல்லையா என்று சோதித்துப் பார்க்க வேண்டுமல்லவா?
அது பற்றி தேடிப்படித்தேன்.கரிக்குருவிகள் என்பதின் பயலாஜிக்கல் பெயர் Black Drongo Dicrurus macrocercus
இதை கரிக்குருவிகள் என்று இரட்டைவால் குருவிகள் என்றும் சொல்வார்கள்.ஆம் இதற்கு mobbing என்றொரு குணம் இருக்கிறது.
பறவைகள் விலங்கினங்கள் அகராதியில் Mobbing என்றால், குஞ்சு குட்டிகளை வளர்க்கும் போது,தாய் தந்தை காட்டும் வெறித்தனமான உடல்மொழியைச் சுட்டும்.
பூனை நாய்கள் எல்லாம் குட்டி போட்டதும் யாரும் தன் குட்டிகளை தொடாமல் இருக்கும் போது கூட சும்மாவேனும் ஒரு சவுண்ட் விடும்.
கோபம் காட்டும்.
மற்ற எதிரிகள் அது பார்த்து பயந்து அந்தப் பக்கம் வராது.
அந்த குணம் கரிக்குருவிகளிடம் அதிகம் இருக்குமாம்.
ஆக பெருமாள் முருகன் எழுதியது மிகச்சரியான தகவல்.
வெறும் தகவலை எழுதிவிட்டால் அவன் எழுத்தாளனா? அல்லது அதை அழகியலாக எழுதிவிட்டால் அவன் எழுத்தாளனா?
காளி இப்படியாக கோழிகுஞ்சுகளை திறம்பட வளர்ப்பதைப் பார்த்து பொன்னாத்தா சொல்கிறாள்
“கோழிக்குஞ்செல்லாம் கருத்தா வளக்கற உங்கையில ஒரு கொழந்தயக் குடுக்க முடியலியே”
இங்குதான் பெருமாள்முருகன் என்ற எழுத்தாளன் மிளிர்கிறார்.
எதையும் எதையும் எப்படி பொருத்துகிறார் பாருங்கள்.
ஒருவேளை அறிவயையும் மனித உணர்ச்சியையும் ஒரே நேரத்தில் தூண்டும் சக்தி இலக்கியத்தின் முக்கிய கூறாக இருக்கும் பட்சத்தில் பெருமாள்முருகன் எப்பேர்பட்ட திறமைசாலியாக இருக்கிறார்.
போகிறபோக்கில் நாவலைப் படிக்காமலேயே பல எழுத்தாளர்கள் “மொக்கை நாவல்” என்று சொல்லிவருகிறார்கள்.இதையெல்லாம் நம்பாதீர்கள்.
வாசகர்களாகிய நமுக்கு அறிவிருக்கிறது.
நமக்கு சரிபார்க்கும் வசதி இருக்கிறது.
தகவல்களை எளிதாகப் பெறமுடிகிறது.
நாமே இறங்கிப் படிப்போம். நாமே உண்மையை உணர்ந்து கொள்வோம்.
எழுத்தாளர்களின் சீக்குப் பிடித்த அரசியல் சண்டையில் நாம் ”மாதொருபாகன்” மாதிரி நல்ல இலக்கியத்தை மிஸ் பண்ணிவிடக்கூடாது.

மனித உரிமை போராளிகளின் பயம்...

நேற்று புத்தகக் கண்காட்சியில் கீரனுர் ஜாகிர்ராஜா (குட்டிச்சுவர் கலைஞன் - நாவல் ) புத்தக வெளியீட்டு நிகழ்வில் கோம்பை எஸ்.அன்வரைப் பார்த்தேன்.
அவர் தமிழக் முஸ்லிம்கள் என்பவர்கள் தமிழர்களே என்றக் கருத்தை வலியுறுத்தி எடுத்த ஆவணப்படமான “யாதும்” பற்றி பேசினேன்.
”அடுத்து எப்ப செகண்ட் பார்ட் வருது” என்றேன்.
“முதல் எடுக்குறதுக்குள்ளே அதிக செலவாயிடுச்சி” என்று சிரித்தார்.
“உங்கள் ஆவணப்படத்தை கண்டும்காணாமல் இருப்பது போன்ற புறக்கணிப்புகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்” என்று கேட்டேன்.
“இதுல பல உள் அரசியல் இருக்கு.பல இஸ்லாமிய அமைப்புகளே இந்த ஆவணப்படத்தை ரசிக்கவில்லை” என்றார்.
அதைக் கேட்க கொஞ்சம் அதிர்ச்சியாயிருந்தது.
“ஏன் எதாவது எதிர்ப்பு வந்ததா?” என்றேன்.
“எதிர்ப்பு வரவில்லை.எதிர்க்குமளவுக்கு என் ஆவணப்படத்தில் எதுவுமில்லை. தமிழர்கள்தாம் தமிழ் முஸ்லிம்கள் என்பதை நிருபித்திருப்பேன்.அதைத்தவிர நான் எதுவும் செய்யவில்லை.ஆனால் ஏன் இஸ்லாமிய அமைப்புகள் ரசிக்கவில்லை என்று நினைக்கிறேன் என்றால், ஏதோ ஒருவகையில் நான் இந்த தமிழ் உணர்வையும் இஸ்லாமியர்களையும் இணைப்பது அவர்களை எரிச்சலூட்டி இருக்க வேண்டும்.”
“தமிழ் உணர்வையும் இஸ்லாமியர்களையும் இணப்பது ஏன் அவர்களை எரிச்சலூட்ட வேண்டும்? “
“இஸ்லாமியர்கள் இஸ்லாமிய உணர்வைமட்டும் தான் கொண்டிருக்க வேண்டும் என்பது இங்குள்ள இயக்கங்களின் மறைமுக விருப்பமாக இருக்கலாம்.ஒருவேளை அவர்களுக்கு வேறு இன உணர்வும் (தமிழன் என்ற உணர்வு) ஊட்டப்பட்டால் ஒரு மதத்து மக்களை ஒன்று திரட்டுவதற்கு வசதியில்லாமல் போகக் கூடும் என்று அவர்கள் நினைக்கலாம்.” என்றார்.
“அப்படியானால் சீறாப்புராணம் போன்ற இலக்கியங்கள் எப்படி பிறந்தன இஸ்லாமியர்களின் தமிழ் உணர்வால்தானே.முதல் தமிழ் புத்தகம் கூட அப்படித்தானே பிறந்தது? “ இது நான்.
“நான் இஸ்லாமிய பொதுமக்களை சொல்லவில்லை.ஆனால் அமைப்புகளைச் சொல்கிறேன்.எல்லா மதத்திலும் அமைப்புகளே பொதுமக்களின் சிந்தனையை ஏதோ வகையில் வடிவமைக்கின்றன.
என் ஆவணப்படத்தைப் பார்க்க கூட மறுக்கும் பல அமைப்புத்தலைவர்களின் கவனத்தை ஆராய்ந்தப் பின் இதை சொல்ல வேண்டியதிருக்கிறது.இன்னொன்றும் சொல்கிறேன்.
சமீபத்தில் குழந்தைகளுக்கான சீறாப்புராணம் ஒப்புவித்தல் போட்டி ஒன்று நடந்தது.அதில் வெற்றிபெற்றவர்கள் ஒருவர் கூட முஸ்லிம் அல்ல. முஸ்லிம் அல்லாதவர்கள்தாம் சீறாபுராணம் ஒப்புவித்தல் போட்டியில் ஜெயித்தவர்கள்.”
“ம்ம்ம். இது மாதிரி புறக்கணிப்புகள் உண்மையில் வேதனைதான்”
“இயக்கங்களின் புறக்கணிப்பை விடுங்கள் மனித உரிமைக்காக போராடும் அந்த நபரே என் ஆவணப்படத்தை பார்க்க தயக்கம் காட்டுகிறார்.நான் கேட்கும் போதெல்லாம் இப்ப பாக்குறேன் அப்ப பாக்குறேன் என்று காலம் கடத்துகிறார்”
“அவரா அந்த மனித உரிமை ஆர்வலர் மேல் எனக்கு மதிப்பு இருக்கிறதே” என்றேன்.
“எனக்கு இருக்கிறது. ஆனால் ஏன் அவர் என் ஆவணப்படத்தைப் பார்க்காமல் தவிர்க்கிறார் என்று தெரியவில்லை.”
“ஒருவேளை பார்த்தால் கருத்துச் சொல்ல வேண்டும். கருத்துச் சொன்னால் அவருடைய இமேஜ் போய்விடும் என்று நினைக்கிறாரோ என்னவோ” என்றேன்.
“இருக்கலாம்” என்று சிரித்தார்.
“சரி பாஸிட்டிவ் தன்மை சொல்லுங்கள்”
“நிறைய பேர் பாராட்டவும் செய்கிறார்கள்.குறிப்பாக இஸ்மாலிய தனிமனித மக்கள். வந்து பாராட்டிவிட்டுப் போகிறார்கள். தமிழ்மண்ணின் தமிழ்கலாச்சாரத்தின் வேர்களாய் இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள் என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள்,பெருமையாக இருக்கிறது” என்று அவர்கள் சொல்வதுதான் கொஞ்சம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.என்றார்.
”எனக்கு உங்கள் ஆவணப்படம் கொடுக்கும் உணர்வு அபாரமானது” என்றேன்.
“ம்ம்ம்”
“இந்தியனாக இரு. அனைத்து மதத்தினரையும் மதி, நேசி என்று சிறுவயதில் படித்திருக்கிறேன்.
இருந்தாலும் ஒரு முஸ்லிம் கல்யாணத்தில் முஸ்லிம்களோடு உணவு உண்ணும் போது ஏதோ ஒரு அடிஆழ மனநிலையாக “இவர்கள் வேறு” என்ற எண்ணம் எனக்கிருந்தது.
அதாவது கருத்தளவில் அப்படியில்லையென்றாலும் ஆழ்மன அளவில் அப்படியிருந்தது.
உங்கள் ஆவணப்படத்தைப் பார்த்ததும் அது வெகுவாக குறைந்தது.அல்லது காணாமல் போனது.
அந்த ஃபீல்தான் முக்கியமானது. அந்த சகோதரனாக உணரும் உணர்வைக் கொண்டுவரத்தான் இந்திய சுதந்தர காலத்தில் பல தலைவர்கள் உழைத்திருக்கின்றனர்.
நீங்களும் உங்கள் ஆவணப்படத்தின் மூல்மாக அதையே செய்திருக்கிறீர்கள்.
இன்னும் இரண்டாம் பாகமும் எடுங்கள்.
எங்களைப் போன்று பலர் உங்களுள் படைப்பை ரசிக்க சிந்திக்க காத்திருக்கிறோம்” என்று சொல்லி கைகொடுத்து விடைபெற்றேன்.
இந்தப் புத்தகக் கண்காட்சியின் நிறைவான் உரையாடலாக திருப்தியாக உணர்ந்தேன்

சிறுநீர்...

பொதுவாக எனக்கு பலர் முன் சிறுநீர் கழிக்க கூச்சமாயிருக்கும்.
பக்கத்தில் ஒருவர் நின்று கழித்துக் கொண்டிருக்கும்போது என் இடம் மறைவாக இருக்கவேண்டும்.
ஆண்கள் மறைவு இல்லாமல் வரிசையாக நின்று அடிப்பார்கள்.அப்படி மறைவு இல்லாமல் இருந்தால் சிறுநீர் வராது.
அது மாதிரி நம் இந்திய மக்கள்,தியேட்டரில் ஒரு ஜான் மட்டும் இடைவெளிவிட்டு பின்னால் நிற்பார்கள் .அப்போதும் வராது.
நாகர்கோவில் எஸ்.எல்.பி ஸ்கூல் படிக்கும் போது அங்கே டாய்லட் கட்டிடம் என்பது ஒரு காம்பவுண்ட் மட்டும்தான்.அந்த சதுர காம்பவுண்டில் சிறுநீர் போக குழியாக வெட்டி பூசி விட்டிருப்பார்கள்.
வரிசையாக பையன்கள் அதில் நின்று அடிப்பார்கள்.(அப்படி அடிக்கும் போது இவன் நீர் அவன் காலிலும் அவன் நீர் இவன் காலிலும் தெறிக்கும்)
நான் ஒன்றிரண்டுமுறை அந்த வரிசையில் நின்று அடிக்க முயற்சி செய்திருக்கிறேன்.ஆனால் ஏதோ பதட்டத்தில் வராது.
வரவில்லையே என்ற பதட்டத்தில் இன்னும் வராது.
வரவில்லையே என்ற பதட்டத்தை மற்றவன்கள் பார்க்கிறான்களோ என்ற பதட்டத்தில் இன்னும் வராது.முடிவில் கவலையும் முட்டும் சிறுநீரும் மட்டுமே எஞ்சும்.
ஆனால் எனக்கும் ஒரு வழியைக் கடவுள் கொடுத்தார்.
அதே காம்பவுண்டில் ஒரு லெட்ரின் இருக்கும்.அது பாழடைந்த லெட்ரின்.உள்ளே அசிங்கமாயிருக்கும்.ஆனால் உலர்ந்திருக்கும்.கதவுகள் கிடையாது.
நான் அதன் வாசலில் நின்று ஒண்ணுக்கடிப்பேன்.பள்ளி படிப்பை முடிக்கும் வரைக்கும் அந்த லெட்ரின் உதவி செய்ததை மறக்கவே முடியாது.
சில சமயம் காரில் குடும்பமாக வெளியூர் செல்வோம்.அங்கு ஒண்ணுக்கடிக்க வேண்டியதிருந்தால் காரை நிறுத்தி ஆண்கள் அனைவரும் காமா சோமாவென்று போவார்கள்.
என்னால் அது முடியாது. நான் அப்படியே வேகமாக நடந்து முள்காட்டுக்குள் ரொம்ப ரிஸ்கான இடத்துக்குச் செல்வேன்.யாரும் என்னைப் பார்க்கக் கூடாது.பார்க்கவில்லை என்று தெரிந்தால் மட்டுமே ஒண்ணுக்கடிப்பேன்.
பஸ் மோட்டலில் நிற்கும் போது வரிசையாக சிறுநீர் கழிக்கும் போதும் இதேப் பிரச்சனைதான்.இருட்டாயிருந்தாலும் கூட கூச்சமாயிருக்கும்.திணறுவேன்.
ஒருமுறை மோட்டல் வெளியே நானும் அப்பாவும் சிறுநீர் கழித்து வரும் போது அப்பாவிடம் இது பற்றி டிஸ்கஸ் செய்து வந்தேன்.
நான் சொல்வதை கவனமாக கேட்டவர் “அப்படியா ஒருவயசுல அப்படி இருக்கும். கல்யாணம் ஆனா அந்தக் கூச்சம் சரியாப்போயிரும்” என்றார்.
அப்பா சீரியஸாக சொன்னாரா அல்லது காமெடியா சொன்னாரா என்று தெரியவில்லை, உண்மையில் கல்யாணம் ஆன பிறகு இந்த சிறுநீர் கூச்சம் வெகுவாக குறைந்திருந்தது.
பொது இடத்தில் ஒண்ணுக்கு வர ஐந்து நிமிடம் ஆனாலும், பின்னால் ஆள் இருந்தாலும் “என்ன இப்போ” என்று அலெட்சியமாக இருக்க முடிந்தது.
ஒருவேளை இது மாதிரி கூச்சப் பிரச்சனை எதாவது இளைஞர்களுக்கு இருந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள்.
ஒருமுறை கிண்டி தொழிற்பேட்டை பஸ்ஸ்டாப்பில் நின்றிருந்தேன்(திருமணத்துக்கு முன்) .அவசரமான உணர்வு முட்டிற்று. சும்மா ரோட்டிலும் அடிக்க முடியாது.
போய் கட்டணக் கழிப்பறையில் கேட்டேன்.வாசலில் ஒரு பெண் நின்றிருந்தார்.உள்ளே சுத்தம் செய்கிறார்கள் பதினைந்து நிமிடம் ஆகும் என்றார்.
நான் ”எனக்கு அவசரம் இப்படி சொல்லிவிட்டீர்களே” என்றேன்.என் கணகளின் தவிப்பைப் பார்த்த அவர், பெண்களின் கழிப்பறை ஒன்றை திறந்து விடுவதாக சொல்லி கொத்துச் சாவியை(?) எடுத்தார்.
நான் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தேன்.அதற்கு அவர் சத்தமாக என்னைத் திருத்தி அட்வைஸ் செய்தார்.
சத்தம என்றால் அதிக சத்தம்.
இந்த மணல்கயிறு படத்தில் ”தெரு பார்க்க” , எஸ்.வி சேகர் “மாப்ள மாப்ள்” என்று கத்துவாரே அதுமாதிரி,
அந்தப் பெண் “கூச்சப்படாத தம்பி” என்று கத்தினார்.
பலர் என்னைத் திரும்பிப் பார்த்த உணர்வு. வேலையை முடித்து வெளியே வந்தேன்.
பஸ்ஸில் ஏறி கொளத்தூர் வர வர ஏதோ ஒரு அவமானமாக இருந்தது.
சுந்தரராமசாமிதான் (?) சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.
”சுதந்திரம் அடைந்து ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டது.இந்தியனுக்கு இன்னும் மானமாக ஒண்ணுக்கு போக வழியில்லை”

தேவடியாப் பையன்

”தேவடியாப் பையன்” என்று சொன்னால் கோபப்படாத பக்குவத்தை நம் சமுதாயம் அடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.(இருக்கிறோம்)
அம்மா பலருடன் உறவு கொண்டால் பிள்ளை ஏன் அவமானப்பட வேண்டும்.குழந்தைகள் அதனால் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?
ஏதோ ஒரு ஆணின் ஆரோக்கிய புரதம் அவனுக்கு அடையாளம் கொடுக்கிறது.
அவன் ஐம்புலன்களோடு பிறக்கிறான்.
அடுத்தவனை தொந்தரவு செய்யாமல் அவனுக்குத் தெரிந்த திறமையில்லாத அல்லது திறனான வேலையை செய்து பிழைத்து வாழ்ந்து முடிக்கிறான்.
ஒன்றும் ஒன்றும் மட்டும் பொருந்திய ஒன்றில் பிறந்தவர்கள் உயர்ந்தவர்கள் என்றும்,
ஒன்றும் பலவும் பொருந்திய ஒன்றில் பிறந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் சொல்வது,
மதவெறி, ஜாதிவெறிக்கு சமமாக தெரிகிறது எனக்கு.

நாசூக்கு...

சில ஆட்டோ டிரைவர்கள் சிரிக்க சிரிக்க பேசுவார்கள்.
அதில் ஒருவர் இப்படி ஒரு கதை சொன்னார்.
அவருக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் உண்டு.அவர் மாமியாருக்கும் தண்ணி அடிக்கும் பழக்கம் உண்டாம்.(சிறுவயதில் மலேசியாவில் வளர்ந்தவர் )
ஆனால் கணவன் இருக்கும் போது அதைச் செயவதில்லை.கணவன் வீட்டில் இல்லாத சமயத்தில் மகள் வீட்டுக்குப் போகும் போது தானே விருந்து சமைப்பதாக மகளிடம் சொல்லி விட்டு
மருமகனிடம் சொல்வாராம்
“ நான் சொல்ற லிஸ்ட எல்லாம் வாங்கியாந்துருங்க”
“சரிங்க அத்த”
“ஒரு கிலோ சிக்கன்”
”சரி”
”கொஞ்சம் மட்டன்”
“சரி”
“பூண்டு கால்கிலோ”
”சரிங்க அத்த”
“ஒரு எம்.சி குவார்ட்டரு”
“சரிங்க அத்த”
“பச்சப் பட்டாணி கொஞ்சம்”
“சரிங்க அதத”
“சோடா இருந்தா சோடா”
“சரிங்க அத்த”
அதாவது மருமகனிடம் நேரடியாக சரக்கு வாங்கிவா என்று சொல்ல வெட்கம்.அதனால் மளிகைக்கடை லிஸ்ட் சொல்லும் போதும் போகிற போக்கில் குவார்ட்டரை நுழைப்பாராம்.
மருமகப்பிள்ளையும் வாங்கிவந்திருவார்.மாமியார் இழுத்துப் போட்டு மகளுக்கும் மருமகனுக்கும் குழந்தைகளுக்கும் சமைப்பார். அன்பாக பரிமாறுவார்.மற்றவர்கள் சாப்பிட்டு படுத்த பிறகு,
மாமியார் மட்டும் தனியாக அமர்ந்து விருந்துண்டு, மதுவையும் அருந்துவாராம்.
இதை அவர் நகைச்சுவையாக சொல்லும் போது ஆட்டோவில் உருண்டு உருண்டு சிரித்தேன்.
பெண்கள் பொதுவாக குடிக்கமாட்டார்கள் ஆனால் குடிக்கிறார்கள் என்பதை ஏளனமாக நினைத்து சிரிக்கவில்லை. அந்த மாமியார் மளிகைப் பொருட்களின் நடுவே குவார்ட்டரை சொல்லும் விதத்தை எண்ணி அந்தச் சிரிப்பு.
கொஞ்சம் திட்டமிட்டால் தர்மசங்கடமான விஷயத்தைக் கூட நாசூக்காக கேட்கலாம் என்பதுதான், இந்த பத்தியில் நான் சொல்லவரும் நீதி.

பெண்ணின் முடிகள்...

மானுடவியல் என்றால் என்ன?
மனிதனைப் படிப்பதுதான் மானுடவியல்.
மனிதனின், உணவு,உடை,உறைவிடம்,இனம்,மொழி,கலாச்சாரம் எல்லாத்தையும் படிக்கிறது மானுடவியல்.
மனிதனை ஒரு அறிவியல் பொருளாக எடுத்துக் கொண்டு நேரடியாக பார்ப்பது.எந்த வித நெகிழ்ச்சியும் இல்லாமல் அறிவியலை மட்டும் பார்ப்பது.
ஏன் சீனர்கள் பூச்சி சாப்பிடுகிறார்கள்? ஏனென்றால் மத்திய சீனாவில் 200 வருடம் உணவுப் பஞ்சம் விட்டு விட்டு வந்து கொண்டே இருந்தது.அதனால் எதில் எல்லாம் புரதம் கிடைக்கிறதோ அதையெல்லாம் மக்கள் வேட்டையாடினார்கள்.இது மானுடவியல் கருத்து.இது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்.
மானுடவியலுக்கு ஜாதி மத இன நெகிழ்ச்சிகள் கிடையாது.அறிவியலும் தகவல்களும் மட்டுமே அதற்கு தெரியும்.
நாமெல்லோரும் எஸ்கிமோக்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்போம்.ஆனால் அவர்களின் வாழ்க்கைமுறையை உலகிற்கு தெரிய வைத்தவர் ஃபிரான்ஸ் போஸ் என்னும் மானுடவியலாளர்தான் ( நவீன் மானுடவியலின் தந்தை).
வளர்ந்த நாடுகள் வளரும் நாட்டு மக்களை மிருகங்கள் மாதிரி ஆராய்ச்சி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இந்த துறை மீது உண்டு.
நான் இங்கே பதியப்போவது ’டெஸ்மொண்ட் மோரிஸ்' (Desmond morris) என்பவர் எழுதிய “Naked woman" என்ற புத்தகத்தில் வரும் கட்டுரை பற்றி .
இந்த டெஸ்மொண்ட் மோரிஸ் மூன்று முக்கிய புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.அவை 1.Naked Ape 2.Naked Man 3.Naked Woman.
இந்த மூன்று புத்தகங்களிலும் அவர் குரங்கு,ஆண்,பெண் என்ற மூன்று உயிரனங்களின் ஒவ்வொரு உடலுறுப்பாக எடுத்து அதன் பின்புலத்தை ஆராய்ந்திருப்பார்.கண்,காது ,மூக்கு,அந்தரங்க உறுப்புகள் என்று எல்லாம் எடுத்து அவற்றின் தேவைகள் பற்றி எடுத்துச் சொல்லியிருப்பார்.
அதற்காக இது உயிரியல் புத்தகம் என்று நினைத்து விட வேண்டாம்.
சரி இப்போது “Naked Woman" புத்தகத்திலிருந்து “Pubic hairs" என்ற கட்டுரையைப் பற்றி எழுதுகிறேன்.
Pubic hairs என்பது வளர்ந்த பெண்ணின் பெண்ணுறுப்பில் வளரும் முடி.இதன் தமிழ் அர்த்தம் பார்த்தால் “அந்தரங்க முடி” என்று வருகிறது.சரி நானும் அதையே உபயோகப்படுத்துகிறேன்.இப்போது பத்தியை டெஸ்மோண்ட் மோரிஸ் சொல்வதாகவே நினைத்து படியுங்கள்.
பெண்ணுக்கு அந்தரங்க முடி அவள் பிறப்புறுப்பைச் சுற்றி பதினைந்து வயது வாக்கில் வளரத்தொடங்குகிறது.சிறுவயதில் இருந்தே பளபளப்பாய் இருக்கும் பெண்ணுறுப்பில் திடீரென்று முடி வளரும் போது, பெண் மிகவும் குழம்பிப் போய் விடுகிறாள்.எதற்காக அந்த முடிகள்? அதன் காரணம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடையாக வருவன
-ஆதிகாலத்தில் ஆணை அழைக்கும்,உடலுறவு அடையாளமாக இருந்தது.பெண்ணின் குறியில் முடி அடர்த்தியாய் இருந்தால் அவளுடன் கூடலாம் என்ற மறைசெய்தியை முடி சொன்னது
-அந்தரங்க முடியின் வளர்ச்சியால்,வயதுப் பெண்ணுக்கு குறியில் சுரக்கும் உறவு வேட்கையைத தூண்டும் வாசனைச் சுரப்பிகளின் வாசனையை தக்க வைக்க முடியும்.அந்த வாசனை ஆதிஆணைத்தூண்டும்.ஆனால் தற்காலத்தில் பெண்கள் உள்ளாடை அணிவதால் அது ஒரு நாற்றமாக உருவெடுப்பதை பார்க்கிறோம்.
-உடலுறுவின் போது,அந்தரங்கமுடிகள், ஆணின் உறுப்பு பெண்குறியை சுற்றியிருக்கும் உப்பிய சதைப் பகுதியை காயப்படுத்தாமல் தடுக்குமாம்
-ஒரு இயற்கை உடையாக காயம், குளிர், வெயிலில் இருந்து காப்பது.
ஜெர்மனியை சேர்ந்த மானுவடவியலாளர் தென் பசிபிக்கில் இருக்கும் பழங்குடியனரைப் பற்றி ஆராய்ச்சி செய்யும், போது அங்குள்ள் பெண்களுக்கு அடர்த்தியான அந்தரங்கமுடி இருப்பதைக் கண்டாராம்.அதைவிட அவருக்கு ஆச்சர்யம்,” நாம் கைகழுவிய பிறகு கைத்துடைக்க கைக்குட்டையை உபயோகப்படுத்துவது மாதிரி அந்த பழங்குடிப் பெண்கள் தங்கள் கைகளை அவர்கள் குறிமுடியில் துடைத்தார்களாம்.
மனிதன் நாகரீகத்தில் வளர வளர இந்த அந்தரங்க முடிகளை வெறுத்தான்.புனிதமடையும் போது பெண்ணின் குறிமுடிகளை (அந்தரங்க முடி என்ற சொல் வேண்டாம் குறிமுடி நன்று) மழிக்கச் சொன்னான்.அதை நாற்றமடிக்கும் அழுக்கான பொருளாய்ப் பார்க்க ஆரம்பித்தான்.முதன் முதலில் வந்த பெண்ணியவாதிகள் குறிமுடிகளை எடுப்பதை எதிர்த்தார்கள்,எப்படி மேக்கப் ஒரு பெண்ணை அலங்காரப் பொருளாய் ஆக்குகிறதோ அது போலத்தான் குறிமுடி எடுப்பதும் என்று வாதிட்டார்கள்.
இதில் பார்த்தீர்களானால் அந்த காலத்து ஐரோப்பிய சிலைகளில் பெண் சிலைகளில் குறிமுடியை வடிக்க மாட்டார்கள்.அது மொழ மொழவென்றே இருக்கும்.
முன்காலத்தில் ஜான் ரஸ்கின் என்னும் சிலை செய்யும் கலைஞருக்கு இதனால் ஒரு பிரச்சனை வந்தது.அவர் சிலைகளில் இருப்பது போலத்தான் வளர்ந்த பெண்களின் குறிகளும் முடியில்லாமல் இருக்கும் என்று நினைத்து வந்திருக்கிறார்.கொஞ்சம் அப்பாவி.ஆனால் முதலிரவில் மனைவியின் குறியில் முடிகளைப் பார்த்து அவருக்கு அதிர்ச்சி.அந்த அதிர்ச்சியினால் அவரால சரியாக உடலுறவு கொள்ள முடியவில்லை.இப்படியே கொஞ்ச நாள் போக,எரிச்சலுற்ற மனைவி விவாகரத்து வாங்கிப் போய்விட்டாராம்.
குறிமுடியை ஏன் பெண்களும் எடுக்கிறார்கள்.ஏன் ஆண்கள் கூட அதை ஆமோதிக்கிறார்கள் என்றால்
-குறிமுடியை எடுத்தால் பெண்ணின் உறுப்பு அழகாக இருக்கிறது.அதன் பிளவு (இது கடவுளின் தங்கக் கோடாலியால் ஏற்பட்ட பிளவாம்) தெளிவுற தெரிந்து ஆண்களின் காமத்தை தூண்டும்.
-குறிமுடி இல்லாமல் இருக்கும் போது அது அவர்களின் இளமையைக் குறிப்பதாக நினைத்தார்கள்.நிறைய முடியகள் இருந்தால் வயதானவர்கள் என்று நினைத்து விடக் கூடும் என்று பெண்கள் அச்சப்பட்டார்கள். (இப்படி குறிமுடி இல்லாத பெண்ணுறுப்பை ரசிக்கும் ஆண்கள் குழந்தைகளை கூட காமமாக நினைக்கும் குணமுள்ளவர்கள் என்றெல்லாம் ஆரம்பத்தில் பிரச்சாரம் நடந்ததாம்)
-குறிமுடியில்லாத பெண்ணுறுப்பு இன்னும் இன்பம் தரக்கூடியதாக் நினைத்தார்கள் .எளிதில் கிளர்ச்சியுறும் என்று நம்பினார்கள்.வாய் வழிப் புணர்ச்சியை குறியில் முடியிருந்தால் சரிவர செய்யமுடியாது என்ற கருத்தும் காரணம்.
-நிறையப் பெண்கள் குறிமுடியை மழித்து விட்டால் எளிதாக நடந்து போக முடியவதாக நினைக்கிறார்கள்.அதை வேண்டுகிறார்கள்.
வரலாறு இந்த குறிமுடி எடுப்பதைப் பற்றி என்ன சொல்கிறதென்றால்...
-எகிப்தியர்கள் தங்கள் குறிமுடிகளை தேனும் மூலிகை எண்ணெய்யும் கலந்த கலவையிட்டு எடுத்தார்களாம்.
-சாலமன் மன்னன்,ராணி ஷீபாவை மணமுடித்ததும் அவள் முடியை நீக்குமாறு வேண்டினார் என்பதாக வரலாறு
-கிரேக்கர்கள் பெண்குறி அழகை பார்க்க ரசிக்க விரும்புபவர்கள்.அதனால் கிரேக்கப் பெண்கள் ஒவ்வொரு முடியாய் பிய்த்தோ,அல்லது தீயை வைத்து கருக்கியோ,அல்லது சாம்பல் வைத்து தேய்தோ பெண் குறியின் முடியை எடுப்பார்கள்.
-ரோமானியர்கள் இதற்கென்றே தனிக் கருவிகள் வைத்திருந்தனர்.
-செஞ்சிலுவைப் போருக்காக வந்த ஐரோப்பியர்கள் அரபுப் பெண்களிடம் குறிமுடி நீக்கும் கலையைக் கற்றுக் கொண்டு,அதை ஐரோப்பாவுக்கு பரப்பினர்.
-விக்டோரியன் காலத்திலும் குறிமுடி என்பது அசிங்கம்,நாற்றம் என்றொரு எண்ணமிருந்தது.குறிமுடி மழித்தல் முக்கியமான வேலையாய் இருந்தது குடிமக்களுக்கு.
1960 யில் மேரி குவாண்ட் என்னும் பெண் தான் தன் கணவனின் உதவியால் ஆர்ட்டின் (இதயம்) வடிவம் உள்ளமாதிரி குறிமுடியை கத்தரித்தேன் என்று சொன்னா.அப்போது மக்கள் மத்தியில் அது ஒரு பரபரப்பான விசயமாக இருந்தது.
1970 களில் இருந்து மேலை நாடுகளில் குறிமுடியை டிசைன் செய்யும் மோஸ்தர் வந்தது.இதயம் வடிவத்தில் வெட்டிக்கொள்வது,ஹிட்லர் மீசை மாதிரி வெட்டிக்கொள்வது,கேள்விக்குறி மாதிரி குறிமுடி வெட்டிக்கொள்வது,முக்கோணம்,செவ்வகம் என்பது மாதிரி பிடித்த விதமாக பெண்கள் குறிமுடி வெட்டும் சலூன்கள் வந்து விட்டன.
எப்படி குறிமுடியை எடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்களோ, அது மாதிரி குறிமுடியை வைப்பதிலும் ஒரு கூட்டம் ஆர்வமுடையதாயிருக்கிறது.அதை Merkin-wearing என்றழைக்கிறார்கள்.அவற்றின் தேவையென்ன...
-அழகிற்காக தலையில் டோப்பா வைப்பது போல,குறிமுடியை வைத்து வைத்துவிடுவார்கள்.
-நோய்வாய்ப்பட்டிருந்த பாலியல் தொழிலிலாளிகள், தங்கள் பெண்ணுறுப்பை மறைக்க வைத்தார்கள்
-சினிமாவில் காட்டுவதற்காக இந்த குறிமுடி டோப்பாவை உபகயோகித்தார்கள்.
இவ்வாறு டெஸ்மோண்ட் மோரிஸ் எழுதிய கட்டுரையின் சுருக்கம முடிகிறது.
இது போல இந்த Naked Woman புத்தகத்தில் ஒவ்வொரு உறுப்பாக எழுதியிருப்பார்.

Sunday 11 January 2015

ஒருவருடம் போனால் ஒருவயது போகிறதா ?

சந்தர்ப்ப சூழ்நிலையில், பிளஸ் டூ முடித்து விட்டு முதலாமாண்டு டிப்ளமா இன் மெக்கானிக்கல் சேர்ந்த போது மனச்சோர்வுக்கு ஆளாகியிருந்தேன்.
அதற்கு காரணம் இந்த சமூகம் எனக்குள் திணித்திருந்த மொக்கை பயங்கள் என்பதை இப்போது உணர்கிறேன்.
சிறுவயதில் எனக்கு டியூசன் எடுக்கும் ஜான் பேட்ரிக் சார் ஒரு எளிய கணக்கை சொல்வார்.
ஒருவன் எல்.கே.ஜி. யில் ஒருவருடம் பிந்தி சேருகிறான் என்று வைத்துக் கொள்வோம்.பிற்காலத்தில் அவன் மாதம் 5000 ரூபாய் சம்பளம் வாங்கினால், வருடம் 60000 ரூபாய் சம்பளத்தை அவன் இழக்கிறானே.அதனால் வாழ்க்கையில் ஒரு வருடத்தைக் கூட வேஸ்ட் செய்யக் கூடாது.
சட்டென்று கேட்பதற்கு இது நல்ல விசயமாக தோன்றும்.ஆனால் அப்படியில்லை.இது மாதிரி சிந்தனைகள் மனிதனுக்கு தேவையில்லாத நெருக்கடிகள்தான் கொடுக்கும்.
ஒருவேளை உடல்நிலை சரியில்லாமல் போகும் பட்சத்தில் ஒருவருடத்தை இழக்கும் பட்சத்தில் மாணவனின் மனம் என்ன பாடு படும்.
அடுத்து,எப்போது வேண்டுமானாலும் முடிந்து விடுகிற மனித வாழ்க்கையில் ஒருவருடத்தை கூர்ந்து கவனித்து காப்பாற்றிக் கொள்ளும் அவசியம் தேவையில்லை.
ஜான் பேட்ரிக் சார் சொன்ன கதையை உள்வாங்கிய மனநிலையில் நான் வளர்ந்ததாலும்,
“பிளஸ் டூ முடிச்சிட்டு டைரக்ட் செகண்ட் இயர் சேரலையியா? அப்ப நீ ஏன் பிளஸ் டூ படிக்கனும்.இரண்டு வருஷம் வேஸ்டுதானே” என்பதான நெருக்கடியில் இருந்தேன்.திடீர் திடீரென்று அந்த ஞாபகம் வரும்.
நான் ஏதோ வழி தவறிய ஆட்டுக்குட்டி போல ஒரு உணர்வு இருக்கும்.
அப்போதெல்லாம் நான் நினைப்பேன் “ச்சே இந்த பிளஸ் டூவ ஏன்தான் படிச்சேனோ? வயசெல்லாம் வேஸ்ட்”.
அதன் பிறகு டிப்ளமா முடித்து, பார்ட் டைமில் பொறியியல் படித்து இந்த So called சமூகம் எதிர்பார்க்கும் சம்பாத்தியதையும் வேலையையும் பெற்ற பிறகு, இப்போது யோசித்துப் பார்க்கும் போது ஏதாவது இழந்திருக்கிறேனா என்று நினைக்கும் போது ஒன்றுமில்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கிறது.
ஏன் அப்படி இரண்டு வருடம் வேஸ்ட் செய்தது பற்றி அதிக கவலை கொண்டோம் என்று நினைத்தால் வெட்கமாயிருகிறது.
அப்படியானால் விதி வசத்தால் ஏன் பிளஸ் டூ படித்தேன் என்பதற்கான பதிலாக நினைப்பது “ உன் வாழ்க்கையை அனுபவிக்க கடவுள் ?
உன்னை பிளஸ் டூ வரை படிக்க வைத்தார்” என்பதுதான் .
பிளஸ் டூ படிப்பதற்கும் வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் என்ன சம்பந்தம்?
எனக்கு உலகின் எல்லா சப்ஜெக்டுகள் மீதும்( இந்த கார் பைக் மற்றும் ரியல் எஸ்டேட் தவிர) ஒரு ஈர்ப்பு இருக்கிறது. சோசியல் சயின்ஸ்,கெமிஸ்ட்டிரி,பிஸிக்ஸ்,கணிதம், பாட்டனி, ஸூவாலஜி என்று எந்த புத்தகத்தை எடுத்தாலும் படிக்க முடியும்.படிக்கும் ஆர்வம் இருக்கும்.
இந்த ஆர்வத்தை இந்த Horizontal தன்மையைக் கொடுத்தது அந்த பிளஸ் டூ படிப்புதான்.
ஒரு லைப்ரரிக்குச் சென்றால் எந்த செக்சனிலும் சென்று என்னால் படிக்க முடிகிறது.நான் அன்று என்ன படிக்கப் போகிறேன் என்று எனக்கே தெரியாது.
ஃபாரெஸ்ட் கெம்பில் நாயகனின் அம்மா சொல்வாரே” வாழ்க்கை ஒரு சாக்லெட்கள் கொண்ட பெட்டி.எந்த சாக்லெட் எப்போது கிடைக்கிறது என்று நமக்கே தெரியாது”.
அது போல அன்று எதை தெரிந்து கொள்ளப் போகிறேன் என்று எனக்கே தெரியாது.ஆனால் உயிருள்ளவரை ஏதாவது ஒன்றை தேடும் ஆர்வமும் மனநிலையும் இருக்கிறது.
இதைத்தான் வாழ்க்கையின் Substance ஆக நினைக்கிறேன்.நான் பெற்ற பேறாக நினைக்கிறேன்.
படிப்பு ன்பது அறிந்து கொள்ளுதல்தான்.அது எந்த காலத்திலும் வீண் இல்லை என்ற எழுத்துக் கருத்தை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து கொண்டேன் என்பதை சொல்லவருகிறேன்.

அம்பேத்கர் மனதை பாதித்த ஆறுசம்பவங்கள்...

தன் மனதை பாதித்த ஆறு முக்கியமான சம்பவங்களாக அம்பேத்கர் சொல்வதை மிகச்சுருக்கமாக தருகிறேன்.
சம்பவம் 1:
1901 வருடம் அம்பேத்கரும் அவருடைய சகோதரர்களும் அவர் அப்பாவைப் பார்க்க கோரேகன் செல்கிறார்கள்.அம்பேத்கரின் அப்பாவுக்கு சரியான தகவல் கிடைக்காத குழப்பத்தால்,அம்பேத்கர் குதிரைவண்டியில் கிட்டத்தட்ட பத்து மணி நேரத்துக்கும் மேலாக பயணம் செய்யவேண்டிய நிலமை ஏற்படுகிறது.
ஒரிரவு, தெரியாத ஊரின் ரோட்டோரம் தங்க வேண்டிய நிலமை. இந்தப் பயணத்தில் சிறுவன் அம்பேத்கருக்கு வித்தியாசமான பிரச்சனை ஏற்படுகிறது.அவனுக்கு சாப்பிட, வேண்டிய மட்டும் உணவை அவன் அம்மா கட்டிக்கொடுத்திருக்கிறார்.ஆனால் வழியில் அவருக்கு தண்ணீர் கொடுக்க ஆளில்லை.
தாழ்த்தபட்டவன் என்ற காரணத்தால் தண்ணீரே கிடைக்கவில்லை.
தண்ணீரில்லாமல் உணவு உண்ணுதல் முடியாத காரியம்.அதனால் கடைசிவரை அவற்றையெல்லாம் சாப்பிடாமலேயே அப்பாவைச் சென்றடைகிறார் அம்பேத்கர். ஜாதி வெறியின் கொடுமையின் வீரியத்தை அவர் புரிந்து கொண்டது இதிலிருந்துதான்.
சம்பவம் 2:
1916 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தன் உயர்கல்வியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இந்தியா திரும்பும் அம்பேத்கருக்கு பரோடா மன்னருக்காக உழைக்க வேண்டிய வேலை. அவருக்கு வேலை கிடைக்கிறது.
ஆனால் தங்குமிடம் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் ஒரு பார்சி ஹாஸ்டலுக்கு செல்கிறார்.அங்கே அவரை பார்சி என்று நினைத்து தங்க இடம் கொடுக்கிறார்கள். அம்பேத்கரும் அதை மெயிண்டயின் செய்து வருகிறார்.
ஒரிரவு அம்பேத்கரின் ஜாதியை அறிந்து பார்சிக்கள் கூட்டம் கம்பு தடி எல்லாம் எடுத்து வந்து அவரை சுற்றிக்கொண்டு “எப்படி எங்கள் இன ஹாஸ்டலில் நீ தங்கியிருக்கலாம்” என்று அவரைச் சுற்றி அடிக்க நிற்கிறது. அம்பேத்கர் அவர்கள் அவேசத்தைப் பார்த்து பயந்து மன்னிப்புக் கேட்டு மனக்கஷ்டத்துடன் அந்த இடத்தைக் காலி செய்கிறார்.
இந்துக்களுக்கு பிடிக்காத தாழ்த்தப்பட்டவர்கள் பார்சிக்களுக்கும் பிடிப்பதில்லை என்பதை அவர் புரிந்து கொள்கிறார்.
சம்பவம் 3 :
1929 இல் தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்சனையொன்றைப் பற்றி விசாரனை செய்ய மும்பை அருகே ஒரு கிராமத்துக்குச் செல்கிறார் அம்பேத்கர். ரயில் நிலைத்திலிருந்து நான்கு மணி நேர டோக்லா வண்டிப் பிரயாணம். வண்டியை ஒட்டி வந்த வண்டிக்காரன் சரியாகவே ஒட்டவில்லை. பக்க மறைப்பு இல்லாத மரப்பாலங்களை அவன் கடக்கும் போது பல அசம்பாவிதங்கள் நடக்க இருந்தன.
அவனுக்கு வண்டி ஒட்டத்தெரியவில்லை என்பதை அம்பேத்கர் கண்டுபிடித்துவிட்டார். அன்றைய நாள் கடைசியில் அது பற்றி விசாரித்திருக்கிறார். டோக்லா வண்டிக்காரர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வண்டி ஒட்ட வரமுடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.அதனால் தாழ்த்தப்பட்டவர்கள் வண்டியை மட்டும் வாடகைக்கு வாங்கி, அவர்களில் அரைகுறையாக தெரிந்த ஒருவனை வண்டியோட்டியாக்கி ரிஸ்க் எடுத்திருக்கிறார்கள்.
இந்துக்களுக்குப் பிடிக்காதவர்களை பார்சிக்களுக்கு மட்டுமல்ல டோக்லா வண்டிக்காரர்களுக்குக் கூட பிடிக்காது என்று அவர் புரிந்து கொண்டார்.
சம்பவம் 4
1934 யில் ஹைதிராபாத்தில் இருக்கும் தவலாபாத் கோட்டையைச் சுற்றிப் பார்க்க அம்பேத்கரும் அவர் இயக்க அங்கத்தினர்களும் போயிருக்கின்றனர்.அந்தக் கோட்டை முஸ்லிம்களால் பராமரிக்கப்படும் கோட்டை.
கோட்டையில் நுழைந்ததும் அம்பேத்கருடன் வந்தவர்கள் அங்கிருந்த குளத்தில் கால் கை கழுவியிருக்கிறார்கள்.
அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று தெரிந்து கொண்ட அங்கிருந்த முஸ்லிம்கள் “ நீங்கள் தெத்கள் ( தாழ்த்தபட்டவர்கள்) எப்படி எங்கள் குளத்தைத் தொடலாம். அது தீட்டாகிவிட்டது” என்று அடிக்க வருகிறார்கள்.
உடனே அம்பேத்கர் “ இப்படித்தான் உங்கள் மதம் உங்களுக்கு சொல்கிறதா? இந்தக் கோட்டையை நாங்கள் சுற்றிப் பார்க்க வேண்டுமா? வேண்டாமா? அதற்கு அனுமதியுண்டா? கிடையாதா ? பளிச்சென்று சொல்லுங்கள் “ என்று உரத்து சொல்கிறார்.முஸ்லிம்கள் நெடுநேரம் யோசிக்கிறார்கள். போனால் போகிறதென்று அனுமதி கொடுக்கிறார்கள்.
ஆனால் குளத்தைத் தொடக்கூடாதென்று கூடவே ஒரு காவலாளியையும் அனுப்பி வைக்கின்றனர்.
இந்துக்களுக்குப் பிடிக்காதவர்களை, பார்சிக்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் பிடிக்காது என்று அவர் புரிந்து கொண்டார்.
சம்பவம் 5:
இது அம்பேத்கருக்கு நேர்ந்தது அல்ல.ஒரு பங்கி ஜாதியைச் சேர்ந்த இளைஞனுக்கு நேர்ந்தது என்று அம்பேத்கர் சொல்கிறார். அவனுக்கு அரசு அலுவலராக வேலை கிடைக்கிறது.
ஆனால் அவன் அலுவலகத்தில் அவனுக்கு இருக்கை கொடுக்கவில்லை.அவனுக்கு குடிநீர் வேண்டுமானால் மொண்டு குடிக்க முடியாது.வேறு யாராவது நீரை அவன் கைகளில் ஊற்ற வேண்டும்.
ஒருநாள் அவன் தெரியாமல் உயர் ஜாதிகார அதிகாரி இருக்கையில் அமர்ந்துவிட, அவர் ஊரிலிருந்து ஆட்களை கூட்டி வந்து அவனை அவமானப்படுத்தி அடிக்க வருகிறார்.அவன் அந்த வேலையே வேண்டாம் என்று விட்டு ஒடிப்போகிறான்.
சம்பவம் 6 :
இது அம்பேத்கருக்கு நேர்ந்தது அல்ல. ஒரு தாழ்த்தப்பட்டவர் காந்தியின் ”யங் இந்தியா” இதழுக்கு எழுதிய கடிதம்.
அவருடைய குழந்தைக்கு உடல் சரியில்லை.
கடுஞ்ஜுரம்.
மருத்தவர் ஜாதியைக் காட்டி வரமறுக்கிறார்.இவர் பணம் கொடுக்கிறேன் என்கிறார்.அப்போதும் மருத்தவர் வரமறுக்கிறார்.
பல சிபாரிசுகளுக்குப் பிறகு இரண்டு நாள் கழித்து மருத்துவர் வருகிறார்.
குழந்தையை ஹரிஜனக்குடியிருப்பின் வெளியே எடுத்து ஒரு வீட்டில் வைக்கிறார்கள்.
தெர்மாமீட்டரை டாக்டர் ஒரு முஸ்லிமிடம் கொடுக்கிறார், முஸ்லிமிடமிருந்து இவருக்கு அது வருகிறது, பின் அதை மனைவிடம் கொடுத்து குழந்தைக்கு வைத்து காய்ச்சலை அளவெடுக்கிறார்கள்.
டாக்டர் மாத்திரை எழுதிக்கொடுத்துவிட்டு போய்விடுகிறார். ஆனால் குழந்தை ஒருநாளில் இறந்துவிடுகிறது.
இந்துக்களுக்குப் பிடிக்காதவர்களை
பார்சிகளுக்கும்,
டோக்லா வண்டிக்காரனுக்கும்,
முஸ்லிம்களுக்கும்
அரசு அலுவலர்களுக்கும்
மருத்துவர்களுக்கும் கூட பிடிக்கவில்லை.
இந்தக் கட்டுரை அம்பேத்கர் தொகுப்பான புத்தகம் 25 யில் வருகிறது