Wednesday 27 February 2013

கதை போல ஒன்று - 73

குவைத். வெள்ளி விடுமுறை.

முந்தின நாள எனக்கும் மனைவிக்கு நடந்த சண்டையை நினைத்து கொண்டே பாத்ரூமிற்குள் போனேன்.

”நான் தான் இங்க இருக்கேன்ல.அங்க இருந்து அம்மா கூட எதாவது ஆர்கியூ செய்துட்டே இருக்காத.நான் இருக்கும் போது பேசினா கூட பரவாயில்ல.இல்லாதபோது. வேண்டாம்.என்ன இருந்தாலும் அவுங்க வயசுல மூத்தவங்கப்பா.எதுத்து பேசாத. நீ இப்படி இருந்தா நான் வர ஃபிளைட்டு அப்படியே வெடிச்சிடும், நானும் இருக்க மாட்டேன் நீ நிம்மதியா இரு”

இது போன்ற அற்புதமான டயலாக்குகளை மனதுக்குள்ளே பேசிக்கொண்டே பிரக்ஷ்க்ஷை பிதுக்கி வாயில் வைத்து நுரைக்க நுரைக்க தேய்க்கிறேன்.

இன்னும் நிறைய நினைத்து கொள்கிறேன்.கண்களில் என்னை எல்லோரும் துன்புறுத்தும் கழிவிரக்க கண்ணீர்.

வழக்கமாக ஒரு நிமிடம்தான் பல் தேய்பேன்.

ஆனால் அன்று எவ்வளவுக்கு எவ்வளவு என் மீதே பரிதாபமும் மனைவி மீது கோபமும் கூடுகிறதோ அவ்வளவு விரைவாக பிரக்ஷ் என் பற்களில் இங்கும் அங்கும் ஒடிகொண்டிருந்தது.

அப்படியே தேய்த்து கொண்டே வாக்ஷ் பேசின் மேல் என்னுடைய பிரக்ஷ் இருப்பதை பார்த்தேன்.

முதலில் ஒன்றுமே புரியவில்லை.

நான் பல் தேய்த்து கொண்டே என்னுடைய பிரக்ஷ்க்ஷை பார்க்கிறேன்.அது எப்படி சாத்தியம்.

என்னுடைய பிரக்ஷ் வாக்ஷ் பேசின் மேல் இருக்கிறதென்றால், அப்படியானால் நான் கையில் வைத்திருக்கும் பிரக்ஷ் யாருடையது.பிரக்ஷ்க்ஷை எடுத்துப்பார்த்தேன்.

அது “திரு” என்ற என்னுடன் அறையை பகிர்ந்திருக்கும் திருநாவுக்கரசு என்பவரின் பிரக்ஷ்.

ச்சை..தூ தூ வென்று துப்பினேன்.

அருவெருப்பு.

நான் தங்கியிருக்கும் குவைத்தில், பின்டாஸில் இருக்கும் ஃபிளாட்டில் இரண்டு பெட்ரூம்கள், ஒரு ஹால்.

”திரு”வும் நானும் ஒரு ரூம்.

வசந்தும் தஸ்தகீர்கானும் மற்றொரு ரூம்.

எங்கள் ரூமை ஒட்டி இருக்கும் பாத்ரூமை நானும் திருவும் மட்டும் உபயோகிப்போம்.

அப்படியான சூழ்நிலையில் “திரு” வின் பிரக்ஷ்க்ஷை எடுத்து நான் தேய்த்து விட்டேன்.

முதலில் வாயை கழுவினேன்.கழுவும் போதே அடுத்து “திரு” வந்து அவன் பிரக்ஷ்க்ஷை பார்த்தால் என்ன நினைப்பார் என்று தோண்றியது.

அவர் பிரக்ஷ்க்ஷை நன்றாக கழுவினேன்.

பின் ஆள்காட்டி விரலில் அந்த பிரக்ஷ்சை மல்லாக்க படுக்க வைத்து பெருவிரலால் பிர் பிர் என்று பிசிறினேன்.

ஈரம் குறைந்திருந்தது, பின் பிரக்ஷ்க்ஷை எடுத்து கையில் வைத்து தட்டாமாலை சுற்றினேன்.

வாய் பக்கத்தில் வைத்து பூ பூ என்று ஊதினேன்.

இன்னும் இரண்டும் மூன்று முறை இவை எல்லாத்தையும் செய்ய பிரக்ஷ் காய்ந்திருந்தது.

இனி “திரு” பார்த்தால் கூட கண்டுபிடிக்க முடியாதென்ற நிம்மதி வரும் போது, மனசாட்சி ஒலமிட ஆரம்பித்தது.

”எப்படி மக்கா உன் எச்சி பட்டத எடுத்து அவன் பல்தேய்பான். நீ மறைக்கலாம்.ஆனா அவன் அப்பாவியா அத எடுத்து தேய்கிற காட்சிய நினைச்சு பாரு மக்கா”.

என்ன செய்யலாம.

இன்னைக்கு லீவுதான். திரு எழுந்திருக்க லேட் ஆகலாம்.அதுக்கு முன்னாடி கீழே போய் அந்த சேட்டன் கடையில புது பிரக்ஷ் வாங்கி வைச்சிரலாமே.

சட்டென்று உடை மாற்றி சேட்டன் கடைக்கு போனால் பூட்டியிருந்தது.

அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி இன்னொரு கடை இருப்பது ஞாபகத்தில் வர ஒடினேன்.

திரு எழுந்திருக்கிறதுக்கு முன்னாடி பிரக்ஷ்சை வாங்கிட்டு வீட்டுக்கு போயிடனும்.

ஒடு ஒடு.

ஒடினால் வயிற்றில் வலி வரலாம்.ஆனால் இது மனசாட்சி பிரச்சனை.

தன்னுடைய பிரக்ஷ் எதுவென்று கூடத் சரியாத்தெரியாத கேணையனா விஜய் நீ என்று திரு நினைத்து விட கூடிய சாத்தியங்கள் உள்ள தன்மான பிரச்சனை.

ஒடு ஒடு...

கால்களில் கற்கள் தட்டலாம். குவைத் தேசத்தின் சூரியன் சுள்ளென்று முகத்தில் அடிக்கலாம். ஆனாலும் ஒடு ஒடு.

அரைகிலோமீட்டார் ஒரே சாட்டமாக சாடி ஒட கடை வந்தது.

இந்த கடைக்காரருக்கும் எனக்கும் ஒரு வாரம் முன்பு கடுமையான சண்டை.

இவரும் சேட்டன்தான்.

சண்டைக்கு காரணம். நான் ஒரு குவைத் தினாருக்கு பொருள் வாங்கிவிட்டு மூன்று தினாருக்கு பில் கேட்பேன்.

அதை வைத்து கம்பெனியில் அதிக பணம் கிளைம் செய்து அதை சேர்த்து வைத்து என் குழந்தைக்கு பொம்மைகள் வாங்கி போய் மகிழ்விக்கலாம் என்ற உயரிய குறிக்கொளை கொண்டிருந்தேன்.

ஆனால் அந்த சேட்டன் தீவிர பெந்தகொஸ்தே மார்க்கத்தை பயில்பவராக இருந்தார்.

உலகமே பாவமாகிவிட்டது என்று கொதித்து கொண்டிருக்கும் அவரிடம் போய் , போலி பில்லை கேட்டால் என்னை சாத்தானகத்தானே பார்ப்பார்.

அவர் தர முடியாதென்று சொல்ல. நான் அவரை பதிலுக்கு திட்ட. பெரிய சண்டையாகிவிட்டது.

”இனிமேல் உமது கடையில் கால் வைத்தால் என்னுடைய கால்களை நானே வெட்டி தெருவில் எறிவேன்” என்று கத்திவிட்டல்லவா வந்தேன்.

இப்போது இவர் கடைக்கே வருகிறோம்.

வேறு வழியில்லை.

முதல் முன்னுரிமை பிரச்சனையை சமாளிக்க, இரண்டாம் முன்னுரிமை பிரச்சனையின் காரணரின் கைகளை பிடித்து கெஞ்சலாம். மூன்றாம் முன்னுரிமை பிரச்சைனையின் காரணரின் கால்களிலேயே விழலாம். தப்பே இல்லை.

நான் கடைக்கு போனது சேட்டன் முகம்சுழிப்பார் என்று நினைத்தேன்.

அப்படி நடக்கவில்லை.”வரு” என்று சிரித்தபடியே அழைத்தார்.நானும் ஒரு சிரிப்பை விடுத்து சட்டென்று ஒரு காஸ்ட்லியான பிரக்ஷ்க்ஷை எடுத்து பில் போட போகும் போதுதானா சேட்டன் அன்று நடந்த சண்டைக்கு மன்னிப்பு கேட்டு பேசிக்கொண்டிருக்க வேண்டும்.

மற்றொரு தினமாக இருந்தால் அவருடைய மன்னிப்பை ஒநாய் மாதிரி நக்கி நக்கி ருசித்து குடித்திருப்பேன்.

இன்னும் கொஞ்சம் அவர் குற்ற உணர்ச்சியை தூண்டிவிட்டிருப்பேன்.

ஆனால் இன்று அதுமாதிரியான செயல்களை செய்ய டைம் இல்லை.

அங்கே திரு பிரக்ஷ்க்ஷை எடுத்து தேய்த்து விட்டால் என்னுடைய பாவக்கணக்கல்லவா கட்டுகடங்காமல் ஏறிவிடும்.

அவரிடம் மன்னிப்பு கேட்டு, வெளியே ஒடி, மறுபடி லொங்கு லொங்கென்று குதித்து வருகிறேன்.

அப்படி ஒடும் போது என்னுடைய உடல் கிண்டி வைச்ச அல்வாவாக தளும்புவதையும் கவனித்தே இருந்தேன்.

ஃப்ளாட்டின் லிப்டை தவிர்த்து நாலு நாலு படியாக தாவி தவ்வி ஏறி வீட்டுக்கு வந்தால் பாத்ரூம் சாத்தியிருந்தது

ஆண்டவா “திரு” உள்ளே போய் பல்விலக்கி கொண்டிருக்கிறாரா? அப்படி செய்தால் எனக்கு என்ன தண்டனை. கதவை அழுத்தினேன், உள்ளே தாளிடப்பட்டிருந்தது.

எல்லாம் வேஸ்டாகி விட்டதென்று சோர்ந்திருக்கும் போது கதவு திறந்தது.

“திரு” வை எதிர்பார்த்து எழுந்து நின்றேன்.

ஆனால் கதவை திறந்து வந்தது “தஸ்தகீர்கான்”. இவர் ஏன் இங்கே வருகிறார்?

இவர் பாத்ரூம் அங்கே அல்லவா இருக்கு என்று நினைக்கும் போதே தஸ்தகீர்கான் சொன்னார் “அது பாஸ். எங்க பாத்ரூம்ல வசந்த இருக்கார்.அதான் இது ஃபிரீயா இருக்கேன்னு இங்க வந்தேன் பாஸ். யூஸ் பண்ணலாம்ல”.

ஆசுவாசமாய் இருந்தது.

“அதனாலென்ன பாஸ்” என்று சொல்லியபடியே எங்கள் ரூமை எட்டிப்பார்த்தேன்.

“திரு” தன்னுடைய இரண்டு கால்களிடையே தலையணையை வைத்து சின்னபுள்ள மாதிரி தூங்கிக்கொண்டிருந்தார்.

பாத்ரூம் சென்று திருவின் பிரக்ஷ்க்ஷை குப்பைதொட்டியில் போட்டுவிட்டு, புதுபிரக்ஷ்க்ஷை அங்கே வைத்து விட்டு டீ போட்டு சோபாவில் உட்கார்ந்தேன்.

“திரு” வின் பழைய பிரக்ஷ் என் கைபட்டு அழுக்குதண்ணிரில் விழுந்து விட்டது என்ற பொய்யை அவரிடம் சொல்வதற்காக.

Monday 25 February 2013

கதை போல் ஒன்று - 72

கேசவன் தன்னுடைய வகுப்பிற்குள் நுழைந்ததும் சட்டென்று அதை கவனித்தார்.

வகுப்பின் ஐம்பத்தி நான்கு மாணவர்கள் நெற்றியிலும் விபூதி.பட்டையாக நீரை குழைத்து பூசியிருக்கிறார்க்ள்.

கிறிஸ்த்தவ,இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவகளும் பூசியிருக்கிறார்க்ள்.

ஏதோ நடந்திருக்கிறது.அல்லது நடக்க போகிறது.

அதை கவனிக்காதவர் போல் கணித பாடத்தை எடுக்க ஆரம்பித்தார்.அன்று பாடத்தை சீக்கிரம் முடித்து “விபூதி விசயத்தை” விசாரிக்கிறார்.

நிக்ஷாத் சொல்கிறான்” அது ஒண்ணுமில்ல சார். ரெனோ வந்து தமிழ் டீச்சருக்கு சொந்தக்காரன்.உங்களுக்கே தெரியும் தமிழ் டீச்சர் எப்பவுமே கிறிஸ்டின் மதம்தான் ஒசத்தின்னு பேசிக்கிட்டிருப்பாங்க.ரெனோ போனவாரம் எக்சாம்கிறதால நம்ம ஸ்கூல் பக்கதுல உள்ள பிள்ளையார் கோவில்ல சாமி கும்பிட்டு விபூதி வைச்சிருக்கான்.அது தமிழ் டீச்சருக்கு பொறுக்கல. ரெனோவ பார்த்து கிளாஸ்ல எல்லார் முன்னாடியும் திட்டிட்டாங்க.அதான் தமிழ் டீச்சருக்கு எங்க எதிர்ப்ப தெரிவிக்க எல்லா ஸ்டூடண்ஸும் விபூதி பூசிக்கிட்டோம்.”

ம்ம்ம்.போன் பீரியடு தமிழ்தான.

ஆமா சார்.வந்தாங்க எல்லார் முகத்துலையும் விபூதி பார்த்து அதிர்ச்சியாகி நின்னாங்க.அப்படியே கிளாஸ விட்டு போயிட்டாங்க.

கேசவன் பதில் சொல்லவில்லை.

கொஞ்சம் நேரம் கழித்து “சரி அது உங்க பிரச்சனை அதுக்கு நான் வரல.ஆனா இந்த கிளாஸ் எடுக்கும் போதே இரண்டு கதை சொல்லனும்ன்னு நேத்தே யோசிச்சு வைச்சிருந்தேன்.அத சொல்லலாமா வேணாமான்னு தெரியல். நீங்க வேற இப்ப நல்ல மூட்ல இல்ல” என்று சிரித்தார்.

“சார்.உங்க கத எல்லாமே எங்களுக்கு பிடிக்கும்.

சொல்லுங்க சார்”

ம்ம்ம்... முதல்கதை என் சித்தி பத்தினது.

என் சித்திய கட்டிகொடுத்த ஊர் ஸ்ரீவைகுண்டம்.ஸ்ரீவைகுண்டத்துல ரொம்ப பக்தியான குடும்பம்.

அந்த ஊர் கோவில்கள்ல எல்லாம் அந்த குடுமப்த்துக்கு நிறைய மதிப்பு இருந்துச்சு.சித்தி போன புதுசுல ரொம்ப ஆச்சர்யபட்டிருக்காங்க.

எப்பவும் பூஜை புனஸ்க்காரம்,சாமி,சாமி கதைகள் என்று அந்த குடும்பம் இருக்கிறது.

சித்திக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.அவரும் அப்படியே மாறிட்டார்.

ஒருதடவ நான் சித்தி வீட்டுக்கு போகும் போது சித்தி அந்த ஏரியா சின்ன பசங்கள் கூட்டிவைச்சு “பக்தி சங்கம்” நடத்திகொண்டிருந்தார்.

ஆச்சா.இப்ப சித்திக்கு அழகான பெண்குழந்தை பிறக்குது.விடே அத கொண்டாடுது.

நகையும் டிரஸ்ஸுமாய் அந்த பெண்குழந்தைக்கு போட்டு பேரு வைக்க ஜோசியர கேட்கிறாங்க.

ஜோசியர் ரொம்ப நேரம் குழந்த பிறந்த தேதிய ஆராய்ச்சி செய்து ,:இப்ப என்ன பேருன்னாலும் வைச்சு கூப்பிடுங்க. ஆனால் ஒன்னரை வயசுக்கப்புறம் அவளுக்கு நீங்க வைகக் நினைக்கிற பேர வைச்சி கூப்பிடுங்கன்னு சொல்லிட்டு போயிடுறார்.

அப்படியே செய்தாங்க.

ஒரு வயசுல குழந்தைக்கு “வயித்தலைச்சல்” வந்துச்சு.ஒரே பேதி. என்ன குடுத்தாலும் நிக்கல.

ஊர் பக்க உள்ள டாக்டர்களுக்கு சரியாத்தெரியல.நாகர்கோவில் ஜெயசேகர் ஆஸ்பித்ரிக்கு கொண்டு வந்தாங்க.

டாக்டர் பாத்துட்டு ”குழந்தையோட குடல் ஒரு நூல் அளவுக்கு சுருங்கிருச்சு.பிழைக்கிறது கஸ்டம்.ஆனா நான் என்னால ஆனத பார்க்கிறேன்.நீங்களும் பிரார்த்தனை பண்ணுங்கன்னு சொல்றார்.”

சித்தி எல்லா சாமிகளையும் கும்பிடுறாங்க.எல்லா சாமிக்கும் நேர்ந்து போடுறாங்க.ஆனா குழந்தை உடம்பு மோசமாதான் ஆகுது.

அப்போ பக்கத்து ரூம்ல இருக்கிற அம்மா” வேளாங்கன்னி மாதாவுக்கு “ வேண்ட சொல்றாங்க.

எந்த மதமா இருந்தா என்ன? சித்தி வேளாங்கன்னி மாதா படத்த வைச்சு தினமும் கும்பிட்டிருக்காங்க.அழுதிருக்காங்க.

இப்போ குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமா சரியாயிருக்கு.அப்படியே தேறி பிழைச்சுட்டா.

உடனே சித்தி சித்தபாவ கூப்பிட்டு வேளாங்கன்னி கோயிலுக்கு போய் வந்திருக்காங்க.

ஒன்னரை வயசுல குழந்தைக்கு “மேரி” ன்னு வைச்சிருக்காங்க.குடுமபத்தில எதிர்ப்பு எப்படி “மேரி” ன்னு கிறிஸ்டியன் பேர வைக்கலாம் அப்படின்னு.

அதுக்கு சித்தி சொன்னாங்களாம் “வேளாங்கன்னி மாதா என் வயித்துல பிறந்தா “மேரி” தான வைப்பாங்க.அதனாலத்தான் வெச்சேன் “ அபப்டின்னு.

இப்போ முத கதை முடிஞ்சது.

அடுத்தது என் மாமாவ பத்தினது.

மாமா அத்தைய கல்யாணம் பண்ணும் போதே அத்தை பாதி கிறிஸ்டின்தான்.

சிலுவை டாலர் போட்ட செயின்தான் போடுவாங்க.கல்யாணத்துக்கப்புறம் மாமாவும் ஒண்ணும் சொல்லாததால முழுமையான கிறிஸ்டினா மாறிட்டாங்க.

நாலுமாவடிக்கு ஜெபத்துக்கு போறது அத்தைக்கு பிடிக்கும்.

வரிசையா மூணு பெண் குழந்தைகள் பிறந்தது.

மாமாவுக்கு கடையில நஸ்டம் வந்தது.கொஞ்சம் கொஞ்சமா தரித்திரம் வந்து சாப்பாட்டுக்கே கஸ்டமாகிவிட்டது.ஊர்ல இருக்கிற ஒன்றிரண்டு புளியங்காட்ட வித்து சாப்பிடுறாங்க.

அத்தை என்னடான்னா இந்த கஸ்டத்துலையும் மாமாவ கிறிஸ்டினா மாறிடுங்க மாறிடுங்கன்னு வற்புறுத்திகிட்டே இருக்காங்க.மாமாவுக்கு எந்த சாமி மேலயும் நம்பிக்கை கிடையாது.

இப்படி போய்கிட்டு இருக்கும் போது மாமா ஃபிரண்டு ஒருத்தர் மாமாவ “திருப்பதி” போய் வேண்டிக்க சொல்றாரு.மாமவும் நம்பிக்கை இல்லாம தன்னோட ஒரு குழந்தைய கூப்பிட்டுகிட்டு சென்னை வரார்.

சென்னையில சொந்தகாரங்கள பார்த்துட்டு, தன் பெண்ணோட திருப்பதி போற பஸ்ஸுல ஏறி உட்கார்ந்திருக்கிறார்.

கையில பணமே இலல். பஸ் செலவுக்கு மட்டும்தான் இருக்கு.

காலையில வாங்கிசாப்பிட்ட இரண்டு இட்லி பத்தவே இல்லை.ஏழுவயசு குழந்தைவேற பசில அவரு மொகத்த மொகத்த பார்க்குது.

திருப்பதிக்கு போகனுமான்னு யோசிக்கிறார்.

வீட்டுக்கு போய் பொண்டாட்டி சொன்ன மாதிரி மதம் மாறிடுவோம்ன்னு ஒரு கோவம் வருது.அழுறார்.

இறங்குறதுக்கு எழுந்திருக்குபோது,முனசீட்ல அத பாக்குறார்.

தூக்குசட்டி ஒன்னு தனியா கிடக்குது.

யாராவது விட்டுட்டு போயிட்டாங்கன்னு நெனச்சி கையில எடுக்கிறார்.சூடா இருக்கு.திறந்து பார்க்கிறார்.

சூடான சர்க்கரை பொங்கல்.

விரலை விட்டு நக்குகிறார்.ருசி. சட்டென்று அவரும் குழந்தை அந்த சர்க்கரை பொங்கலை சாப்பிடுகிறார்கள்.

நெய்யும் முந்திரியும் போட்டு செய்த பொங்கல் அவர்களின் பசித்த குடல்களை சாந்தம் செய்தது.

சாப்பிட்டு முடித்தவுடன் மாமா அழுகிறார்.”நான் ஒன்ன வந்து பார்பேன் சாமி” என்று திருப்பதி போய் வருகிறார்.

வியாபாரத்தை மறுபடி ஆரம்பிக்க பிஸினஸ் “கிளிக்” ஆகி விடுகிறது.

கடைசிவரை அத்தையும் அவர் பிள்ளைகளும் மாமாவை கிறிஸ்டியனாக மாற்ற முடியவில்லை.

மாமா வருடம் இருமுறை திருப்பதிக்கு சென்று தரிசித்தே திரும்புவார்.

இப்போ இரண்டாவது கதையும் முடிஞ்சது.

மாணவர்கள் சிரித்தார்கள்.

ஒருவன் கேட்டான்.”அப்ப இது மாதிரி நடந்தாத்தான் நாம எந்த மதம்னே தெரியுமா சார்”

“அப்படி நான் சொல்ல வரல.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவம்.நான் சொன்ன இரண்டு பேரும் அவுங்க அனுபவத்த தர்க்க ரீதியா ஆராய்ச்சி பண்ணாம அத நம்புனாங்க.அப்படி நம்பாமலேயும் இருக்கலாம்.ஆனால் நம்பினால் அவர்கள் வாழ்க்கை எளிதாய் இருக்கும்.
நம்பாவிட்டால் எதைபிடிக்க என்ற அலைந்து கொண்டே இருக்க வேண்டும்.”

“நீங்க சொல்றது இரண்டும் ரொம்ப உணர்ச்சிபூர்வமா இருக்கு சார்”

“ஆமா மதம்கிறது இதயப்பூர்வமானது காதல்மாதிரி.ரொம்ப அந்தரங்கமானது.அத செலபிரேட் பண்ணலாம்.தப்பே இல்ல. ஆனா நீங்க பண்றாமாதிரி இப்படி எல்லோரும் விபூதி பூசி உங்க கோவத்த காட்டுறதெக்கெல்லாம் உபயோகிக்க கூடாது.மதம் அதுக்கானதில்லை.

என்று சிரித்தார் கேசவன்.

மாணவர்கள அமைதியாய் இருந்தார்கள்.

கதை போல ஒன்று - 71


”லன்சுக்கு பணம் வைத்திருக்கிறீர்களா” என்று ஃபிராங் என்னை பார்த்து கேட்பான் என்று நினைக்கவே இல்லை.

பேக்கர்ஸ்ஃபீல்டில் இறங்கி இரண்டு நாள் போனதும் என்னை “லாஸ்ட் ஹில்ஸ்” போய் வேலை பார்க்க சொன்னார்கள்.

தினமும் காலை ஆறுமணிக்கு “ஃபிராங்குடன்” நான் தங்கியிருந்த இடத்தில் இருந்து என்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் “பாதாம் பருப்பு” பதப்படுத்தும் ஆலையில் உள்ள டிசைன் வேலைகளை கவனிக்க வேண்டும்.

ஃபிராங் அங்கே போய்வருவதால்,அவனுடன் என்னை சேர்ந்து கொள்ளச்சொன்னார்கள்.

ஃபிராங்க் பார்க்க வெளுத்து ஒல்லியாக இருந்தான்

.வயது இருபத்தியைந்து இருக்கும்.

அவனுடைய பழைய காரில் ஏறிக்கொள்ள சொன்னான்.
நான் உட்காரும் இடம் தவிர பின் சீட் முழுவதும் வேண்டாத குப்பைகள்.

கார் மெல்ல கிளம்பி பேக்கர்ஸ்ஃபீல்டை கிராஸ் செய்யும் வரை இருவரும் எதுவுமே பேசவில்லை.
சிரித்தபடியே போனது.

அடுத்து ஃபிராங் கேட்ட முதல் கேள்வி”லன்சுக்கு பணம் வைத்திருக்கிறீர்களா” .

அதிர்ச்சியை காட்டிக்கொள்ளாமல்.

“இருக்கிறது.மாலை காபிக்கு கூட வைத்திருக்கிறேன்”

“காபி கம்பெனியிலேயே தருவார்கள்”

“நீ என்ன படித்திருக்கிறாய் ஃபிராங்”

“பள்ளி இறுதிவரை படித்தேன்.அதன் பின் படிக்க வசதியில்லை”

“ஒஹ். யூ.எஸ்சில் டிகிரி படிப்பதது கக்ஷ்டமா”

”கஸ்டம் என்று சொல்லமுடியாது.ஆனால் நான் மிக மிக ஏழையாகி இருந்தேன்.அதனால்” என்று சிரித்தான்.

”எப்படி டிசைன் ஃபீல்டுக்கு வந்தாய்”

“பள்ளிப்படிப்பு முடிந்து, சின்ன சின்ன வேலைக்கு சென்று வாழ்க்கையை அனுபவித்திருந்தேன்.கொஞ்ச நாள் போதைக்கு அடிமையாய் இருந்தேன்”

பயப்பார்வை பார்த்தேன்.

“கவலைப்படாதே இப்போதில்லை. இந்த நகரத்தில் போதை என்பது சாதரண விசயம்.நான் இப்போது போதையிலிருந்து மீண்டு விட்டேன் என்ற சர்டிபிக்கேட் வைத்திருக்கிறேன்.ஸாஃப்ட் காப்பி பிறகு காட்டுகிறேன்”

”டிசைன் ஃபீல்டுக்கு எப்படி வந்தாய்”

“அதன் பிறகு அப்பாவின் நண்பர் ஒருவர் ஆறுமாத டிராஃப்டிங் கோர்ஸ் படியென்று சொன்னார்.ஏனோதானோ என்று படித்தேன்.படித்தவுடன் நம் கம்பெனியில் வேலை கிடைத்தது.”

“ம்ம்ம்” என்று சொல்லி வெளியே பார்த்தேன்.திராட்சை தோட்டங்களை ஹெக்டேர் கணக்கில் சாலையின் இருபக்கமும் காடாய் கிடந்தது.

குளிர் அடித்தது.

“ரொம்ப குளிர்” என்றேன்.

“இது குளிர் என்றால்.குளிரை என்னவென்று சொல்வாய்” என்று ரேடியோவை போட்டான்.

கச்சா கச்சாவென்று ரேடியோ பேசியது எனக்கு பிடிக்கவில்லை.

“அதை நிறுத்தினால் இன்னும் நாம் நிறைய பேசலாம்.அதுதான் எனக்கு விருப்பம்”

“ஒகே ஒகே “ என்று ரேடியோவை அணைத்தான்.

அவனே தொடர்ந்தான்.

இந்த நாடு பிடித்திருக்கிறதா? இந்த கம்பெனி பிடித்திருக்கிறதா?

”நாடு பிடித்திருக்கிறது.இது சொர்க்கம்.கம்பெனியும்தான். ஆனால் இந்த “வெனிசுலா” காரர்கள் தொல்லை கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது ஃபிராங் என்று கண்ணை சிமிட்டினேன்.

“வெனிசுலாகாரர்கள்” என்று சிரித்தவன். “நீ கார்லோஸ் அண்ட் கோவை சொல்கிறாயா வீஜேய்”.

நான் தலையாட்டினேன்.

“நான் உன்னிடம் பேசுவதை எல்லாம் வெளியே சொல்ல மாட்டாய் என்கிற விதத்தில் சொல்கிறேன்.நீ அப்படி வெளியே சொன்னாலும் பரவாயில்லை ஃபிராங்.எனக்கு யாரிடமாவது சொன்னால் பரவாயில்லை என்று தோண்கிறது”

“சொல்”

“வெனிசுலாகாரர்கள் முக்கியமான வேலையை அவர்களே செய்து கொள்கிறார்கள்.

ஒன்றுமே இல்லாத டம்மி வேலையை என்னை செய்ய சொல்கிறார்கள்.

இந்தியாவில் நான் இன்ஜினியர்.இங்கே வந்ததும் “லூயிஸ் மிராண்டா” இருக்கிறானே அவன் என்னை ஆட்டோகேட்டில் கோடுகள் வரைய சொல்கிறான்.

வரைந்ததும்” குட் ஜாப் டன் “ என்று என் முதுகிலேயே தட்டுகிறான்.

டிசைன் செய்வதற்கு எதாவது வேலை கொடு என்று கேட்டால் கொடுப்பதே இல்லை.

எல்லா வேலையையும் அவனே இழுத்து போட்டு செய்கிறான்.கார்லோசிடம் போய் கேட்டேன்.

அவருக்கும் நான் இங்கு வேலை செய்வது மேல் அந்தளவுக்கு ஆர்வம் இல்லை ஃபிராங்.

இப்போது இந்த “லாஸ்ட் ஹில்ஸ்” க்கு தினமும் என்பது கிலோமீட்டர்கள் போகச்சொல்வது கூட என்னை எரிச்சலடையச்செய்யத்தான் ஃபிராங்”

உதட்டை கடித்து என்னை கவலையோடு பார்த்த ஃபிராங் “ஆம் அவர்கள் அப்படித்தான் செய்வார்கள் வீஜேய்”

“ஏன்”

”நீ என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்”

“நீ ஒரு அமரிக்கன்.டிசைனர்”

“இல்லை நான் அமரிக்கன் இல்லை.

நான் மெக்சிகன்.

என்னுடைய இரண்டாவது வயதில் மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள வந்தவன்.

அப்படி வந்தற்காக அப்பா பல கஸ்டத்தை அனுபவித்திருக்கிறார்”

“இங்கே என்ன வேலை செய்தார் அப்பா” கேட்டேன்.

“இப்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறார் தோட்ட வேலை.

பேக்கர்ஸ்ஃபீல்டில் இரண்டு பக்கமும் அழகான புல்வெளிகளை பார்க்கிறாயே அதெல்லாம் இருபத்தியைந்து வருடம் முன் விக்ஷப்பாம்புகள் நிறைந்த இடம்.

கட்டுவீரியன் பாம்புகள் கொத்தி செத்த மெக்சிகன் கூலித்தொழிலாளர்கள் நிறைய.

அதில் சாகாமல் நாங்கள் பிழைத்திருந்து கஸ்டப்பட்டு அமெரிக்கர்களானோம்”

“ம்ம்ம் பாவம்தான் ஃபிராங்”

“நீ வெனிசுலாகாரர்கள் பற்றி சொன்னாய் அல்லவா.அதற்காக சொல்கிறேன்.

அப்படி கூலிவேலை செய்யும்ப்போது மெக்சிகர்கள் எல்லாவேலையையும் இழுத்து போட்டு செய்வார்களாம்.

வேலை இல்லை என்று சொல்லிவிட்டால் அமரிக்காவை விட்டு போகவேண்டும். அதனால் நிறைய போட்டி பொறாமைகள் இருக்கும்.அப்பா காலத்தில் அதற்காக கொலை கூட நடக்குமாம்.

அதே கதைதான் இந்த வெனிசூலாகாரர்களூக்கும்.

நீ இந்தியாவில் இருந்து வேலை செய்ய வந்தால், திறமையாக செய்தால் அவர்கள் இந்த ஆபீஸை விட்டு போகவேண்டி வரும். நேற்று கார்லோஸ் வீட்டில் பார்ட்டி அட்டென்ட் செய்தாயா”

”யெஸ் ஃபிராங் வந்தேன்”

“நானும் வந்தேன்.அதில் கவனித்தாயா! கார்லோஸ் வெனிசுலாகாரர்களை மட்டும் பார்த்து பார்த்து புகழ்ந்தான்.

இந்த கார்லோஸ் வெனிசுலா நாட்டின் மிகப்பெரிய எண்ணய் கம்பெனியில் பெரிய டீம் லீட்.

அதிபர் சாவோஸ்க்கு எதிராக இவனும் இவன் டீமும் ஒரு போராட்டத்தில் கலந்து கொள்ள, அதிபர் இவர்களை கண்வைத்து விட்டார்.

பல குற்றச்சாட்டுகளை சொல்லி கார்லோசையும் அவருடன் உள்ள விளாடிமீர்,ஜென்னி உடபட பதினைந்து பேரை வேலை நீக்கம் செய்து விட்டார்”

“ஹோஹ்”

“வேலை இல்லாமல் என்ன செய்ய.

வேறு வேலையும் கிடைக்கவில்லை.

பணப்பஞ்சம் தாளாமல் வீட்டில் உள்ள டிவீ,பிரிட்ஜ் என்று பொருட்களையும் பிளாட்பாரத்தில் போட்டு விற்பனை செய்திருக்கிறார் நம் கார்லோஸ்.

அப்படியானால் அவர் உன்னை ஒதுக்குவார்தானே வீஜேய்.

அங்கிருந்து இங்கு வேலைகிடைத்து அந்த டீம் மொத்தமும் வந்துவிட்டது.

இப்போது நீங்கள் இந்தியர்கள் வந்தால் மறுபடியும் வெனிசுலாகாரர்கள் அவர் நாட்டு பிளாட்பாரத்திற்கே போக வேண்டும் என்று அச்சபடுகிறார்கள் வீஜேய்.

உண்மை புரியும் போது ஏற்படும் ஆனந்தம் அளவிடமுடியாதது.

இப்போது லூயிஸ் மிராண்டா,கார்லோஸ்,விளாடிமீர் எல்லாரும் செய்த செயல்களை ஒவ்வொன்றாக நினைத்து பார்த்தேன்.

புரிந்தது.உண்மையில் நம்மை பார்த்து பயந்து போயிருக்கிறார்கள்.

எவ்வளவு கொடுமையான சூழ்நிலையில் இருந்து வந்திருக்கிறார்கள் இவர்கள்.

வாழ்க்கையில் இருந்தலுக்கான போராட்டம் இனிமையானது அல்ல. அது மிகவும் அருவெருப்பானதும் அசிங்கமானதுமாக இருக்கிறது.

கார் “லாஸ்ட் ஹில்ஸை “ அடைந்து விட்டது.இருவரும் காரை விட்டு இறங்கி போனோம்.

“முதலில் காஃப்பி குடித்துவிடலாம்.பிராயணக்களைப்பு”

காப்பி கொடுத்தான்.

”நான் இன்னொரு கேள்வி கேட்க வேண்டும். நீ தப்பா நினைக்காவிட்டால்”

“கேள்”

“நீ எடுத்த உடனே லஞ்சுக்கு பணம் கொண்டு வந்தாயா? என்று கேட்டது எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.அது நாகரீகமில்லாமல் தோண்றியது”

காப்பியை டேபிளில் வைத்து தலையை சற்று குனிந்து பின் என்னைப்பார்த்து சொன்னான்

“ஏழை மெக்சிகன் அப்படித்தான் பேசுவான்.என்னிடம் பணம் இல்லை.அதனால் முன் எச்சரிக்கையாக அப்படி கேட்டு வைத்தேன்.” என்றான்.

“அப்படியா மெக்சிகனுக்கும் அமரிக்கனுக்கும் என்ன வித்தியாசம் ஃபிராங்”

“அமெரிக்கன் பொழுது போக்குக்காக வேட்டையாடுவான்
மெக்சிகன் உணவுக்காக வேட்டையாடுவான் வீஜேய்”

இருவரும் அவரவர் வேலையில் மூழ்கினோம்.

Friday 22 February 2013

கதை போல் ஒன்று - 70


ஏழாம் வகுப்பு படிக்கும் போது திடீரென்று “தோட்ட மறுமலர்ச்சி” எங்கள் வீட்டில் நடந்தது.

எப்போதும் வீட்டை சுற்றியுள்ள இடங்கள் பற்றி அப்பா ரொம்ப கவலைப்பட்டதில்லை.

ஆனால் திடீரென்று அந்த சிறிய நிலத்தை பாகம் பிரித்தார்.

ஒரு பாகத்தில் தக்காளி போட்டார்.

கத்திரிக்க்காய் இன்னொரு பாகத்தில்.

வெண்டைக்காய்,மிளகாய் எல்லாம் போட்டார்.

அவரைச்செடியை நான்கு மூலைகளிலும் நாட்டினார்.

பீர்க்கங்கொடியை படர்த்தி விட்டார்.பாவைக்காயும் உண்டு.

அப்பாவுக்கு உதவியாய் நாங்கள்.

சூர்யகாந்தி பூ கூட நான்கு பூத்தது.

இது மாதிரியான் தோட்ட புரட்சியில் வீடு திளைக்கும் போது எனக்கு ஒரு ஆதங்கம்.

நம்மால் தனியே ஒன்று செய்ய முடியவில்லையே என்று.

கடைசியாக யோசித்து. நாலைந்து சின்ன வெங்காயத்தை விதைக்கப்போட்டேன்.

அண்ணன் வாயை பொத்தி சிரித்தான்.

நான் ஆவேசமாக வெங்காயத்திற்கு நிறைய தண்ணி ஊத்துவேன்.

அப்பா சிரித்தபடியே “அழுகி போயிரும்டா. அது வரும் என்றார்.

வெங்காயம் ஏமாற்ற வில்லை. பச்சையாய் தாள் விட்டது.

அப்படியே போய் போய். ஒரிரு மாதத்தில் (?) அப்பா அதை பிடுங்கலாம் என்று அனுமதித்தும், பிடுங்கிப்பார்த்தால் அரைக்கிலோ வெங்காயம் இருந்தது.

துள்ளிக்குதித்தேன்.

அம்மா கேட்டாள்” அட அரைக்கிலோ தேறிருச்சே.நல்லா தீயல் ( காரக்குழம்பு) வைக்கலாமே இத வெச்சு”

அப்போதான் என் கெட்ட புத்தி வேலை செய்தது.

“ஆமா உங்களுக்கு சமையல் பண்ணவா நான் கஸ்டபட்டு வெங்க்காயம் வளர்த்தேன்.”

அம்மாவுக்கு ஆச்சர்யம்.

“அப்ப என்னல பண்ண போறா”

நான் கடையில் வெச்சு விக்கப்போறேன்.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெருமை கலந்த சிரிப்பு.

சிரித்து கொண்டே இருந்தார்கள்.

மறுநாள் கடைக்கு வியாபாரத்துக்கு எடுத்து செல்ல கவரில் வெங்காயத்தை அள்ளும் போதுதான், ஏதோ தண்ணி மாதிரி வெங்காயத்தில் இருந்தது.

எடுத்து மோந்து பார்த்தால் செம வாடை.அம்மாவிடம் ஒடினேன்.அம்மா வந்து பூனை வெங்க்காயத்தில் மோண்டு விட்டது என்று அறிவித்தாள்.

தலை சுற்றியது எனக்கு.

“யம்மா நல்லா வெயில்ல காய வெச்சு யூஸ் பண்ணலாம்மா”

“யம்மா கொஞ்சமா கட்டி அடுப்பு மேல கட்டி தொங்க விட்டுறலாமா”

அம்மா முறைத்தாள்.

”இத இப்ப நாமளும் சாப்பிட முடியாது.கடையிலையும் வெச்சு விக்க முடியாது. போய் உரகுழியில போட்டுறு”

நெஞ்சடைத்துவிட்டது.

சினிமாவில் ஹீரோவின் குடும்பத்தை அழிந்த பிறகு அந்த இடத்திற்கு வரும் ஹீரோ, முதலில் அழுது பின் ஆவேசமாவானே அதுமாதிரி வெங்காயதை பார்த்து அழுத நான் “அந்த பூனையை கொல்லாமல் விட மாட்டேன்” என்று சபதம் எடுத்தேன்.

பல நாட்கள் பூனைத் துரத்தி ஒடுவேன்.

பூனையா மாட்டும் தப்பித்து ஒடிவிடும்.

அப்போது நான் சாமியிடம் விடாமல் பேசிக்கொண்டிருப்பேன் என்பதால் .” சாமீ பூன எப்படியும் என்கிட்ட மாட்டனும்” என்று வேண்டிக்கொள்வேன்.

கடைசியாக பூனை சின்ன ரூமில் எதையோ கடித்து கொண்டிருந்த போது அதை சுற்றி வளைத்து விட்டேன்.

என் கையிலோ பெரிய ஐடிஎம் கிரிக்கெட் பேட் இருந்தது.

இன்று அதை அடித்து சிதைத்து விட வேண்டும் என்று பேட்டை வீச வேறு வழியில்லாமல் பூனை என்மேல் பாய்ந்தது.

அதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை.

“கேட் இன் ஏ கார்னர்” என்ற இடியம்ஸை ஏட்டில் படிப்பதற்கு முன்னால், உணர்ந்து கொண்டேன்.

”யப்பே... என்று பயந்து பேட்டை காலில் போட்டு ஒடிவர சோஃபா தடுக்கி கீழே விழுந்தேன்.

வலி கடும் வலி.

விக்கி விக்கி அழுதேன்.

அம்மா வந்தாள் “என்னடா எப்பவும் கீழ விழுந்துகிட்டு “என்று மேட்டரை அறிந்தவள்.

சொன்னாள்.

“பூனைக்கு உன் பேரு விஜய், நீ உள்ளி வெளைவிச்சிருக்க.அந்த உள்ளி மேல மோண்டுருக்கும்ன்னு தெரியுமா? அதுக்கு எங்க இருக்கோம்னே தெரியாது. தெரியாம பண்ணினது மேல கோவப்பட்டு அடிச்சி கொல்லப்பாத்தியே அதான் முருகர் உனக்கு தண்டனை கொடுத்துட்டார்”

ஹைதிராபாத்தில் நான் வசித்தது இரண்டாவது மாடியில்.

தினமும் குப்பையை இரண்டாவது மாடி வராண்டாவிலே வெளியே வைத்தால் போதும்.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் குப்பை சேகரிப்பவர் மேலே வந்து எடுத்து கொள்வார்.

ஒருநாள் காலை பார்த்தால் வைத்திருந்த பாலத்தீன் குப்பை முடிச்சி, கிழிந்து குப்பை எல்லாம் வராண்டாவை நாறடித்து கிடந்தது.

சாப்பிட்ட சாப்பாட்டு எச்சியெல்லாம் வராண்டாவில் அசிங்கமாய் கிடந்தது.

அப்போது வைஃப் வேற ஊரில் இல்லை.

எல்லா குப்பையையும் சேகரித்து, வராண்டாவை கழுவி விட்டுகொண்டிருக்கும் போது வீட்டு ஒனர் வந்தார்” ஹோஹ் விஜய் டாக் கேம் எஹ்” கேட்டார்.

அப்போதுதான் எனக்கு புரிந்தது இது நாய் பயபுள்ளையின் வேலை என்று.

தினமும் குப்பையை கிழித்து போய்விடும்.

சரி என்று மூடி வைத்த பக்கெட்டை வைத்து மூடி வைத்தேன்.

ஆனால் குப்பை எடுப்பவர் சொல்லிவிட்டார் “மூடியிருந்தால் என்னால் எடுக்க முடியாதென்று”.

கடைசியாக தீர்மானித்தேன்.

இந்த நாயை பயமுறுத்துவதென்று.

இரவு பத்து மணிக்கெல்லாம்,பெரிய கேபிள் வயரை எடுத்துக்கொண்டு எங்கள் மேல் மாடி தொடக்க படியில் அமர்ந்து கொண்டேன்.

நாய் வரவே இல்லை.

பதினொன்றாகி விட்டது. அப்போதும் நாய் வரவே இல்லை.எம் பி திரீயில் பாட்டுகேட்டுக்கொண்டே இருந்தேன்.

ஏதோ சத்தம் கேட்டது.

கேபிள் வயரை நீட்டமாக பிடித்துக்கொண்டேன்.

ஒரு அடிதான் கொடுக்கனும் ஆனா அத நாய் காலத்துக்கும் மறக்க கூடாதென்று நினைத்து கொண்டேன்.

நாய் இருட்டில் குப்பை கவரில் வாயை வைக்கவும் லைட்டை போட்டேன்.

நாயா அது? நல்ல கொழு கொழுவென்று சிங்கம் மாதிரி இருந்தது.

அது என் மேல் பாய்ந்தால் கண்டிப்பாக என்னால் அதை ஜெயிக்க முடியாது.

அந்த பதட்டத்திலும் சுஜாதா தன் “ஆதலினால் காதல் செய்வீர்” நாவலில் ”பரதன்” என்று பெயருள்ள சிங்கமும் மனிதனும் நேருக்கு நேர் சந்திப்பதை எழுதியிருப்பது ஞாபகத்திற்கு வந்தது .

அந்த வரி இப்படித்தான் தொடங்கும் “ பரதன் என்பது ஒரு ”சிங்கம்” என்று அவனுக்கு முன்னமே தெரிந்திருந்தால் அவன் அதை சந்திக்க ஒப்பு கொண்டிருகவே மாட்டான் என்று.

நாயும் நானும் நேருக்கு நேர் நின்று பார்தோம்.

நாயை பதறவே இல்லை.

குப்பை கவரை விட்டு கீழே ஒட வழி வேண்டி என்னைப்பார்த்தது.

எனக்கு ஏற்கனவே பூனையை மறித்து பட்டபாடு ஞாபகத்திற்கு வந்தது.

அதனால அமைதியாக வழியை விட்டேன்.

நாய் நிதானமாக ஒடிவிட்டது.

பூனை என்னை ஜெயித்தது போல் நாயும் என்னை ஜெயித்தது.

என்ன பூனை வன்முறையை கையில் எடுத்தது, நாய் அகிம்சையில் நம்பிக்கை உடையதால் அமைதியாக என்னை ஜெயித்தது.

இன்னும் பிற்காலத்தில் ஒரு எலியும், பேனும் கூட என்னை ஜெயித்து விடும் என்று தோண்றிய போது கழிவிரக்கம் அதிகரித்தது.

அம்மா எனக்கு சின்ன வயதில் சொன்ன அதே பூனை டயலாக்கை மாற்றி யோசித்தேன்.

”நாய்க்கு என்ன என் பேரு விஜய்.சென்னையில இருந்து ஹைதிராபாத்துக்கு வந்திருக்கேன்னு தெரியுமா? அதுக்கு எங்க இருக்கோம்னே தெரியாது. தெரியாம பண்ணினது மேல கோவப்பட்டு அடிச்சி கொல்லப் பாத்தா முருகர்தான் தண்டனை கொடுப்பார்” என்று நினைத்து கொண்டு தூங்கப்போனேன்.

கதை போல ஒன்று- 69


மீரா வர்க்ஷினி! டைனோசர் பட்டர்ஃபிளை கத சொல்லவா?

ஒரு குட்டி டைனோசரும் பட்டர்ஃபிளையும் ஃபிரண்ட்ஸ்.

அதுங்க ரெண்டும் தான் தினமும் ரிங்கா ரிங்கா ரோஸஸ் விளையாடும்.

சறுக்கு விளையாடும்.

வேற எதாவது பெரிய டைனோசர் பட்டர்ஃபிளைய கடிக்க வந்தா, இந்த குட்டி டைனோசர் சண்டைபோட்டு பட்டர்ஃபிளைய காப்பாத்திரும்.

பட்டர்ஃபிளை பறந்து பறந்து டைனோசர் முகத்துல உட்க்காந்து கிச்சு கிச்சு மூட்டும்.

டைனோசர் “அப்படி செய்யாத பட்டர்ஃபிளைன்னு செல்லமா கோவிச்சுக்கும்”.

அந்த ஊர்ல ஹோலி பண்டிகை வரும்.

ஊர்ல எல்லாரும் கலர்ஸ் அடிச்சி முகத்துல பூசி விளையாடுவாங்க.

டைனோசருக்கு கலர் வாங்க காசிருக்காது.

கவலையோட கன்னத்துல கைய வைச்சுகிட்டு இருக்கும்.

பட்டர்ஃபிளை அங்க வந்து “ஏன் டைனோசர் பாவமா உட்கார்ந்திருக்க” என்று கேட்கும்.

“என்கிட்டத்தான் கலர் வாங்க காசில்லையே” என்னு ஃபீல் பண்ணும்.

‘நீ கவலைப்படாத டைனோசர். நான் ஹெல்ப் பண்றேன்னு பட்டர்ஃபிளை ”இஃப்ஃபீ” ன்னு ஒரு விசில் அடிக்கும்.

அப்போ ஹண்டிரட் பட்டர்ஃபிளைஸ் அங்க வரும்.

ஒன்னு சிகப்பு கலர்.

இன்னொன்னு லைட் பச்சை,

இன்னொன்னு யெல்லோ கலர்,

இன்னொன்னு புளூவும் பச்சையும் மிக்ஸ்ஸானது.

இப்படி எல்லா பட்டர்ஃபிளைஸும் வந்து அதுங்க இறக்கையில இருக்கிற கலர்ஸ்ஸ கொடுத்துட்டு போகும்.

டைனோசருக்கு ரொம்ப சந்தோசமாயிருக்கும்.

அந்த கலர்ஸ்ஸ எல்லாம் வைச்சு ஜாலியா ஹோலி கொண்டாடும்.

பட்டர்ஃபிளை பூவில் இருந்து தேன் இருக்குல்ல, ரொம்ப ஸ்வீட்டா இருக்குமே அத எடுத்து டைனோசருக்கு நிறைய கொடுக்கும்.

டைனோசர் ஜாலியா “ம்ம்ம் டேஸ்டி டேஸ்டி” ன்னு ஹனி குடிச்சி என்ஜாய் பண்ணும்.

ஒருநாள் டைனோசர் சொல்லும்” நானும் உன்ன மாதிரி பூவில இருந்து தேன உறிஞ்சி குடிக்கனும் பட்டர்ஃபிளைன்னு” .

பட்டர்ஃபிளை சொல்லும் “டைனோசர் டைனோசர் உன் வாய் பெரிசில்ல.உன்னால அது முடியாதுன்னு சொல்லிரும்”.

டைனோசருக்கு கோவம் வந்துரும்.

என்னால முடியாதா?

நான் எவ்ளோ பெரிசா இருக்கேன்.இந்த குட்டி பட்டர்ஃபிளைனால முடியாதது என்னால முடியாதான்னு, அதோட பெரிய வாய எடுத்து பூ மேல வைச்சு ஃபூன்னு உறியும் பாரு, அப்படியே பூ பிய்ஞ்சிரும்.

டைனோசர் சுத்துமுத்தி பார்க்கும்.

நல்லவேள யாரும் அத பார்க்கல.

இப்ப டைனோசர் தந்திரமா யோசிக்கும்( இதை சொல்லும் போது ஆள்காட்டி விரலை வைத்து கதை சொல்பவர் தன் சைடு மண்டையை தட்ட வேண்டும்).

பட்டர்ஃபிளை மாதிரி நாமளும் பறந்துகிட்டே குடிச்சாத்தான் தேன் வரும்னு,

ஒரு மரத்துல ஏறி அதுல இருந்து பறக்கிற மாதிரி, ஒரு பூ மேல விழும் பாரு,

டைனோசர் ரொம்ப வெயிட்டுல்ல ,

அந்தப்பூ அப்படியே நசுங்கிரும்.

டைனோசரும் கீழே விழுந்து அதோட கால்ல அடிபட்டிரும்.

அப்போ அங்க வந்த பட்டர்ஃபிளை “ஐயோ டைனோசர் ஃபிரண்ட் கீழே விழுந்துட்டியான்னு” டைனோசர தூக்கி விடும்.

கால்ல அடிப்பட்டிருச்சுன்னா என்ன பண்ணனும்ன்னு அப்பா சொல்லிருக்கேன்.

முதல்ல பட்டர்பிளை சுத்தமான தண்ணிய வைச்சு டைனோசருக்கு அடிப்பட்ட இடத்துல கழுவி விட்டிச்சி.

அப்போ டைனோசர் அம்மா அப்பா ன்னு கத்திச்சி.

”மொதல்ல அப்படித்தான் வலிக்கும் டைனோசர் ,உன் ஃபிரண்ட் நானிருக்கேன் இல்லன்னு சொல்லி டைனோசர் கண்ணீர பட்டர்ஃபிளை துடைச்சுவிட்டது.

அப்புறம் டைனோசருக்கு மருந்து போட்டு,

ஃபர்ஸ்ட் எய்ட் செய்து,

டாக்டர்கிட்ட கூட்டி போச்சு பட்டர்ஃபிளை.

டாக்டர் டைனோசர கால செக் பண்ணினாரு,

கட்டு போட்டு விட்டாரு.

அந்த டாக்டர் நல்ல டாக்டர்ல்ல, ஊசி எல்லாம் போடமாட்டாரு.

சிரப்பும் டேபிளட்டும் கொடுத்து அனுப்பிட்டாரு.

அப்புறம் மூணு நாள் பட்டர்ஃபிளை டைனோசர நல்லா கவனிச்சிகிட்டு.

ஒண்டே மார்னிங், டைனோசர் பட்டர்பிளைய எழுப்பிச்சு.

” பட்டர்ஃபிளை பட்டர்ஃபிளை எனக்கு கால் சரியாச்சு பாரு, வலியெல்லாம் சரியாகி விட்டது, நல்லா குதிச்சி குதிச்சி டான்ஸ் ஆடுறேன் பாரு”( இப்போ டான்ஸ் ஆடி காட்ட வேண்டும்).

ஆ ஜிங்

ஆ ஜன் ஜன் ஜன்...

தனன தனன.

பட்டர்ஃபிளையும் ஜாலியா டைனொசர் கூட சேர்ந்து டான்ஸ் ஆடுது,

இப்போ நீதான் பட்டர்ஃபிளை

அப்பாதான் டைனோசர்.

என் கூட சேர்ந்து டான்ஸ் ஆடு செல்லம்.

.ஆ ஜிங்

ஆ ஜன் ஜன் ஜன்...

தனன தனன..
Like ·  · Promote ·