Sunday 30 June 2013

வெள்ளை நாரை - அமெரிக்க சிறுகதை...

ஸாரா ஆர்னே ஜீவெட்( 1840 - 1909) என்பவர் எழுதிய ’வெள்ளை நாரை ‘ என்ற பழைய அமெரிக்க சிறுகதையை உள்வாங்கி ரொம்ப சின்னதாக எழுதியிருக்கிறேன்.

எனக்கு பிடித்த கதை இது. நான் படித்தது தமிழ் மொழிபெயர்ப்புதான்.

வெள்ளை நாரை... 

அந்தக் காட்டில் சில்வியாவுக்கு தெரியாத இடமே கிடையாது.

பதின் வயது சிறுமிக்குள்ள துடுக்குத்தனத்தை காட்ட அந்த கிழப்பசுவை கண்டுபிடிக்கும் விளையாட்டுதான் அவளுக்கான வாய்ப்பு. 

அந்தபபசு எங்கயாவது புதரில் மறைந்திருக்கும்.

சில்வியா அதைத்தேடி தேடி குரல் கொடுப்பாள். சில சமயம் பசு இருக்கும் இடம் தெரிந்தாலும் கூட தெரியாதது மாதிரியே நடப்பாள். அது மாதிரி சமயத்தில் பசு சலித்து அதுவே வெளியே வந்து விடும். 

பசுவோடு வீட்டிற்கு திரும்பினால் பாட்டி கோபமாக, சில்வியா,பசு இருவரையுமே திட்டுவாள். 

சில்வியாவுக்கு அப்பா அம்மா கிடையாது. அவர்களை இழந்துவிட்டு பாட்டியுடன் வசிக்கிறாள். பாட்டி மற்றும் நியூஇங்கிலாந்திலுள்ள அந்த காடுதான் சில்வியாவின் உலகம்.

அன்றொருநாள் சில்வியா, மாலை அந்த நீரோட்டத்தில் கால்களை நனைத்து விளையாடிக்கொண்டிருந்த போது ஒரு வெள்ளை நாரையைப் பார்த்தாள்.

நீண்ட அலகோடு நாரை நடக்கும் நளினம் அவள் உள்ளத்தில் களிப்பை ஏற்படுத்தியது. திடீரென்று அந்த வெள்ளை நாரை படபடவென்று இறக்கைகளை அடித்து பறந்து சென்றது. 

அது போய் ஐந்து நிமிடத்தில் சீட்டியடிக்கும் ஒசைக் கேட்டு திரும்பினாள். அங்கே நின்று கொண்டிருந்தது அழகான இளைஞன். 

கையில் துப்பாக்கியும், தலையில் தொப்பியும் அணிந்திருந்தான்.பணக்காரத்தனம் அவன் சகலங்களிலும் வழிந்து கொண்டிருந்தது. 

“என்னால் குளிரை தாங்கமுடியவில்லை பெண்ணே. உன் வீட்டிற்கு கூட்டிப்போ” என்று கெஞ்சினவனைப் பார்த்து பாவப்பட்டு வீட்டிற்கு கூட்டி வந்தாள். 

வழக்கமாய் சில்வியாவும் பசுவையுமே மாலை வீடுதிரும்புவதை பார்த்து பழகிய பாட்டிக்கு, அவர்களுடன் வரும் வாலிபனைப் பார்த்து ஆச்சர்யம். பாட்டி பேசுவதற்கு முன் வாலிபன் பேசினான். 

”எனக்கு பால் மட்டுமாது கொடுங்கள்.தங்க கொஞ்சம் இடமும் வேண்டும்.நிற்க முடியவில்லை மயக்கமாக வருகிறது” என்றான்.

பாட்டி அவனுக்கு இனிப்பு கலந்த பாலையும், ரொட்டிகளையும் கொடுத்தார். சூடான கதகதப்பு அடுப்பின் முன் அமர்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். 

அவன் பணக்காரன். அவனுடைய பொழுது போக்கு பறவைகளை வேட்டையாடி அவற்றை பாடம் செய்து சேகரித்து வைப்பது. பல அரிய வகை பறவைகளை அது போல சேகரித்து வைத்திருப்பதாக சொன்னான். 

ஒரே ஒரு வெள்ளை நாரையை அவன் அந்தக் காட்டில் பார்த்ததாகவும், அது கிடைத்தால் மகிழ்ச்சி என்றும் சொன்னான். 

சில்வியாவுக்கு அவன் சொன்ன வெள்ளை நாரையை முந்தின நாள் மாலையில் பார்த்த ஞாபகம் இருந்தது. இருந்தும் அவன் கேட்ட போது தான் அது மாதிரியான வெள்ளை நாரையை இதுவரைப் பார்த்ததே இல்லை என்று பொய் சொல்லிவிடுகிறாள்.

ஆனால் அந்த இளைஞனின் குறுகிய கால லட்சியமாக இருப்பது அந்த வெள்ளை நாரையை பிடிப்பதுதான் என்பதை தெரிந்து வைத்திருக்கிறாள். அதை அடிக்கடி சில்வியாவிடமும் பாட்டியிடமும் சொல்லிவருகிறான். 

அவன் மிக நல்லவனாகவும் இருக்கிறான். அழகானவனாகவும் இருக்கிறான்.

அந்த வெள்ளை நாரை கிடைக்க உதவி செய்பவர்களுக்கு பணம் தருவதாக சொல்லுகிறான். 

அந்த இளைஞனிடம் ஏற்பட்ட கவர்ச்சி, காதல், பணம் மேலுள்ள ஆசை என்று கலவையான உணர்வுகளால் ஊந்தப்பட்ட சில்வியா வெள்ளை நாரயை கண்டுபிடிக்க முடிவு செய்கிறாள். 

காட்டின் மிக உயரமான பைன் மரத்தில் ஏறினால் காட்டையே பார்க்க முடியும். அப்போது நாரை இருப்பதையும் பார்த்து விடலாம் என்று நினைத்து பைன் மரத்தில் ஏற முடிவு செய்கிறாள். 

பைன் மரத்தில் நேரடியாக ஏறமுடியாது. அதனால் பைன் மரத்தின் பக்கத்தில் வளர்ந்திருந்த ஒக் மரத்தில் ஏறி பின் பைன் மரத்திற்கு தாவுகிறாள். 

பைன் மரம் வழுக்க வழுக்க தன் உயிரையும் பொருட்படுத்தாது உச்சியை அடைகிறாள். அந்த சிறுமியின் தைரியம் கண்டு பைன் மரமே ஆடாது அசையாது அவளுக்கு உதவி செய்த காட்சி அங்கு நடந்து கொண்டிருந்தது. 

பைன் மரத்தின் உச்சியை அடைந்த சில்வியா முதன் முதலில் மேலிருந்து கீழாக பருந்து பறப்பதை பார்க்கிறாள். காட்டை ரசிக்கிறாள்.

முடிவில் நாரை இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விடுகிறாள். அதை இளைஞனிடம் சொல்லிவிடலாம் என்று மரத்தை விட்டு கீழே இறங்குகிறாள்.

இறங்க இறங்க காட்டைப் பார்க்கிறாள். 

காட்டிலுள்ள ஜீவராசிகள் ஒவ்வொன்றாய் பார்க்கிறாள். 
மனதை ஏதோ செய்கிறது. 

கீழே இறங்கும் போது அவளுக்கு இளைஞன் மேலுள்ள ஈர்ப்பு போய்விட்டிருந்தது. அந்த வெள்ளை நாரை அவள் மனதை ஆக்கிரமிப்பு செய்திருந்தது.

வீட்டிற்கு வருகிறாள். அவன் அவளைப் பார்க்கிறான். “என்ன எதாவது தெரிந்ததா? “ என்கிறான்.

“இல்லை எனக்கொன்றும் தெரியாது “ என்று சில்வியா சொல்லிவிடுகிறாள். 

அவள் மனது மெலிதாய் பூவாக காற்றில் பறக்கிறது.

இதோ காட்டின் ஜீவராசிகளே! 

உங்கள் சில்வியா உங்களை நோக்கி வருகிறாள். அவளிடம் உங்கள் ரகசியங்களை சொல்லுங்கள். 

அவளுக்கு உணவு கொடுங்கள். அவள் தாகத்துக்கு தேவையான நீரையும் நீங்களே கொடுத்து விடுங்கள். காட்டின் ஜீவன்களே ! அவள் உங்களுக்கானவள்.”

Saturday 29 June 2013

ஊர்பேச்சு

ஊர்பேச்சு என்ற விசயம் எல்லோரையும் பயமுறுத்தும் ஆயுதம். ”அவன் அவள வெச்சிகிட்டுருக்கான்.”” அவ கொஞ்சம் அப்படி இப்படி” போன்ற விசயங்கள் சர்வ சாதரணமாக, உண்மையா? பொய்யா? என்று தெரியாமல் பேசப் படுகின்றன.

இருபத்தியோரு வயதில் வேலைக்கு போகும் போது என்னுடன் வேலை பார்த்த நாற்பது வயது அன்பரிடம் நிறைய பேசுவேன். அவரும் நானும் பாலகுமாரன் ரசிகர்கள்.

ஆனால் அலுவலகத்தில் மற்றவர்கள் “அவர்கிட்ட பேசாத அவரு ஹோமோ” என்று கிண்டல் செய்வார்கள். அவருக்கு நாற்பது வயதாகியும் திருமணம் செய்யாததால் அப்படி சும்மானாச்சுக்கும் எல்லோரும் பேசி பேசி அவருக்கு அந்த முத்திரை குத்தி விட்டனர்.

அண்ணன் திருச்சூரில் மெடிக்கல் கோச்சிங்கிளாஸ் படிக்கும் போது அவனிருந்த வீட்டை சுற்றி நிறைய குடும்பபெண்களின் கணவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள்.

அதனால் அவர்கள் யாரும் பேச்சிலர்களிடம் பேசுவதே இல்லை. எதாவது உதவி கேட்டால் கூட சட்டென்று முகத்தில் அடித்தாற் போன்ற பதில்.

அண்ணனின் நண்பன் பொறுக்க முடியாமல், இரண்டு பெண்கள் காலையில் கோயிலுக்கு போகும் போது கேட்டுவிட்டானாம். “ஏங்க அவசரத்துக்கு ஒண்ணு கேட்டா கூட இப்படி இன்சல்ட் செய்றீங்க” என்று.

அதற்கு அந்தப் பெண்கள் எங்களுடைய எல்லா அசைவுகளும் எல்லோராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. நான் உங்களிடம் பேசினால்,பக்கத்து வீட்டுப்பெண் ஃபாரினில் அவள் கணவனிடம் சொல்லிவிடுவாள். அவள் கணவன் என் கணவனிடம்.அப்புறம் பிரச்சனைதான் வரும்” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.

பெண்களை பாலுறுப்புகளின் கோர்வையாக,அல்லது மாபெரும் யோனியாக பார்க்கும் அவலம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

சமூகத்தை மாற்ற முடியாது என்ற கோட்பாட்டில், எப்படி பண்பாட்டில் சில பழக்க வழக்கத்தை செய்வது மூலம், சமூகத்தினரின் அவபேச்சிலிருந்து தப்பலாம் என்று யோசித்து நம் முன்னோர்கள் சில சம்பிரதாயங்களை செய்துள்ளனர்.

அதில் ஒன்றைப் பார்ப்போம்.

தொ.பரமசிவன் எழுதிய “பண்பாட்டு அசைவுகள்” என்ற புத்தகத்தில் ஒரு விசயம் வருகிறது.

ஆசிரியர் பரமசிவன்( அவர் இளம் வயதாய் இருக்கும் போது இருக்கலாம்) நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறிய நகரத்தில், ஒரு சாவு வீட்டுக்கு செல்கிறார்.

இறந்தவரின் வயது இருபத்தியெட்டு. மூன்று வயதில் ஒரு பெண்குழந்தை இருக்கிறது.

ஒரே அழுகை. பிற்பகலில் உடலை எடுக்க வேண்டும் என்ற பேச்சாயிருந்தது. 

அந்த இளைஞனின் உடலை எடுக்கும் முன்னர், மூதாட்டி ஒருவர் கையில் சொம்போடு. சொம்பில் நிறைந்த நீரோடு வந்தார். 

சொம்பை தரையில் வைத்து ’ஒரே ஒரு’ பிச்சிப்பூவை சொம்பில் போட்டு தூக்கிக்காட்டினார்.

கூட்டம் பரிதாபப்பட்டது.

அடுத்து இரண்டாவது பிச்சிப்பூவையும் போட்டு சொம்பை தூக்கிக்காட்டினார்.

அடுத்து மூன்றாவதையும் காட்டி பின் உள்ளே சென்று விடுகிறார்.

மூன்றாவதை காட்டும் போது கூட்டம் மிகவும் பரிதாபப் படுகிறது. சிலர் அழுகிறார்கள்.

பரமசிவன் பக்கத்தில் பெரியவரிடம் கேட்கிறார் “அந்த பாட்டி என்ன பண்றாங்க்”

“இது தெரியலையா உனக்கு, தாலி அறுக்குற பொம்பளபுள்ள மூணுமாசம் முழுகாம இருக்கு.அத எல்லோருக்கும் ’மூணு ’பிச்சிப் பூ போட்டு காட்டுறாங்க”

“அந்த பிள்ள முழுகாம இருக்கிறத ஏன் ஊருக்கு சொல்லனும்” இது பரமசிவன்.

இதைக் கேட்ட இன்னொரு பெரியவர் எரிச்சலோடு இடைமறித்து கேட்டார் “பேரப்புள்ள, ஏழு மாசம் கழிச்சு அவபுள்ள பெத்தா நீ கேக்க மாட்டியா, எப்படி புள்ள வந்துச்சுன்னு”

ஒரு சடங்கு , எப்போதும் பெண்ணின் அந்தரங்த்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும் சமூகத்தின் சந்தேகங்களை தீர்த்து விடுகிறது.

Friday 28 June 2013

இரண்டு தனிமங்கள் எப்படி வினை புரிகின்றன?

இரண்டு தனிமங்கள் எப்படி வினை புரிகின்றன. 

குளோரின் ஒரு தனிமம். சோடியம் ஒரு தனிமம்.அது இரண்டும் எப்படி ஒண்ணுமண்ணா சேர்ந்து வாழுது.

சோடியம் குளோரைடா நம்ம சாப்பாட்டு உப்பா எப்படி மாறுது? அப்படின்னு ஆராய்ச்சி பண்ணும் போது அங்க “அயனிக் பாண்ட் “ (Ionic Bond) வருது.

ஒரு அணுவிள் புரோட்டானும் நியூட்டிரானும் முட்டை மஞ்சள் கருவிலும், வெள்ளைக் கருவில் எலக்டிரான்கள் வட்டமாக சூரியனைச் சுற்றி வரும் கோள்களைப் போல் சுற்றி வரும் என்று எல்லோருக்கும் தெரியும்.

அந்த சுற்றி வரும் எலக்ட்ரான்கள் தனிமத்துக்கு தனிமம் மாறுபடும்.

குளோரினுக்கு அது மாதிரி 17 எலக்ட்ரான்கள் சுத்தி வரும்.சோடியத்துக்கு 11 எலக்ட்ரான்கள் சுத்தி வரும்.

இப்ப நீங்க குளோரின்ல(17) இருந்து ஆறு எலக்ட்ரான்கள் தூக்கிட்டீங்கன்னு வெச்சிக்கோங்க, அப்ப அதுக்கு 11 எலக்ட்ரான்களாகி அது சோடியமா மாறிடும்.

ஆனா அப்படி இஸ்ட்டத்துக்கு எலக்ட்ரான்கள ,அப்படித்தூக்க முடியாது.அதுக்கு செலவாகும்.கஸ்டமான பிராசஸ் அது.

சரி.இப்ப வட்டமா சுத்தி வரும் எலக்டிரான்கள் அதுக்குன்னு ஒரு அமைப்ப வெச்சிக்கிட்டு சுத்தி வருது.

அது என்ன அமைப்புன்னா கடைசி வட்டத்துல சுத்தி வர எலக்டிரான்கள் ஸ்திரத்தன்மையில இருக்க ஆசைப்படும்.

நாம் நிற்கும் போது உட்காரவும்,உட்காரும் போது படுக்கவும் ஆசைப்படுவோம்.கடமையினால் நடந்துகொண்டும் உட்கார்ந்துகொண்டும் வேலை செய்வோம். ஆனா ஃபிரியா இரு! அப்படின்னு சொன்னா சட்டுன்னு சோஃபால படுத்துக்கிட்டு ரிமோட்ட தூக்கிருவோம். அது மாதிரி கடைசி வட்டத்தில் உள்ள எலக்கிடிரான்கள் ஸ்திரமாக இருக்க விரும்புகின்றன.

எண்கள் 2,8 எல்லாம் ஸ்திரமான எண்கள் ( அதுக்கு ஒரு ஃபார்முலா இருக்கு. அது வேணாம்).

குளோரினோட(17) கடைசி ஆர்பிட்ல ஏழு எலக்டிரான்கள் சுத்தி வரும் ( முதல் வட்டத்தில ரெண்டு, இரண்டாவதில எட்டு, மூன்றாவதுல ஏழு)

அப்ப கடைசி வட்டத்தில இருக்கிற ஏழு எலக்டிரான் எட்டா இருக்ககூடாதான்னு குளோரின் ஏங்கித்தவிக்கும்.ஒன்றை எதிர்பார்த்து தவிக்கும்.

சோடியத்தோட (11) கடைசி ஆர்பிட்ல ஒரு எலக்டிரான் சுத்தி வரும் ( முதல் வட்டத்துல ரெண்டு,இரண்டாவதில எட்டு, மூன்றாவதுல ஒன்று ).

சோடியத்துக்கு தன் கடைசி வட்டத்துல இருக்கிற ஒரே ஒரு எலக்டிரான் பாரமா இருக்கு. அது போயிடுச்சின்னா மூணாவது வட்டம் காணாம போயிடும். இரண்டாவது வட்டத்துல இருக்கிற எட்டு எலக்க்டிரான் அதுக்கு வசதியா இருக்கும்.

அதனால ஏதோ ஒன்றை கொடுக்கும் ஏக்கத்தில் சோடியம் தவிக்கும்.

ராம்கியும் சிந்துவும் இணைந்த கைகள் படத்தில் ஒரு டிரக்கில் ஒன்று சேர்வது போல, சோடியத்தையும், குளோரினையும் ஒன்றாக சேர்த்தால், சோடியம் தன்னிடம் உள்ள ஸ்திரத்திற்கு பாரமான ஒற்றை எலக்கிடிரானை குளோரினுக்கு அன்பாய் கொடுக்கிறது.

குளோரின் தன்னுடைய ஸ்திரத்தன்மைக்கு தேவையான ஒற்றை எலக்கிடிரானை சோடியத்திடம் வாங்கி, கடைசி வட்டத்தில் எட்டாகி ஸ்திரமாகி விடுகிறது.

இப்போ சோடியமும் குளோரினும் ஒன்றாய் சேர்ந்து சோடியம் குளோரைடாகி, நம்ம சாப்பாட்டுல உப்பா விழுது.

வெள்ளைக்காரங்க வரிவிதிக்கிறாங்க,காந்தி தண்டியில தனியா காய்ச்சி எடுக்கிறாரு,ஊறுகாய் போடுறோம், பாய்ஸ்ன் சாப்பிட்டா கரைச்சி வாயில ஊத்துறோம் 

இது மாதிரி ஒண்ணா சேரும் விதத்துக்கு (Ionic Bond) என்று பெயர்.

எனக்கு இந்த லாஜிக் ரொம்ப பிடிக்கும். அதனால பகிர்ந்து கொள்கிறேன்.

Thursday 27 June 2013

தீவிர இலக்கியமும் வேண்டும் ஃபேஸ்புக்கும் வேணுமாக்கும்...

லேட்டஸ்ட்டு காலச்சுவடு படிச்சியா?

இல்ல

லேட்டஸ்ட்டு தீராநதி படிச்சியா?

இல்ல.

கடைசியா படிச்ச தீவிர இலக்கிய சிறுகதை என்ன ?

இல்ல இப்ப கொஞ்ச நாள் படிக்கிறதில்ல.

கடைசியா படிச்ச ஆழமான கட்டுரை பத்தி சொல்லு?

இல்ல இப்ப கொஞ்சநாள் படிக்கிறதில்ல.

மரக்காணத்தில என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?

தெரியும்.ஆனா ஃபுல்லா தெரியாது.குண்டஸாட்த்தான் தெரியும்.

சரி.போன புக் எக்சிபிசன்ல குண்டு குண்டா புக்கு வாங்குனியே அதுல எதாவது படிச்சியா?

இல்ல. வாங்கினது அப்படித்தான் இருக்கு.

ஞாயிறு ஹிண்டு ஆர்டிக்கள வெட்டி பாக்கெட்ல வெச்சிகிட்டு, டாய்லட்டுக்கு போகும் போது கூட எடுத்து படிப்பியே அதெல்லாம்?

இல்ல இப்ப பண்றதில்ல.

லைப்ரரி போவியே அது?

அதுகெல்லாம் ஏது நேரம் பாஸ்.

அப்போ என்னதான் பண்ற?

ஃபேஸ்புக்ல இருக்கேன்.

அதுல என்ன பண்ற?

மனுஷ்யபுத்திரன் தாலி பத்தி ஒண்ணு சொல்லுவார்.அதப்பார்த்து கொதிப்பேன். அப்புறம் சாரு அன் கோ எதாவது காமெடி பண்ணும், அத படிச்சிட்டு சாரு விமர்சகர் வட்டத்த போய் பார்பேன். அவங்க கொடுக்கிற பதிலடிய படிப்பேன். அப்புறம் இவர் அவரப்பத்தி பேசுறத அவர் இவரப்பத்தி பேசுறத படிச்சி அதுக்கு பதில் சொல்லுவேன்.அடுத்து எதாவது வித்தியாசமா ஸ்டேட்டஸ் போடுறதுக்கு தலைய பிச்சிப்பேன். இது மாதிரி நேரம் எனக்கு போகுது பாஸ் இந்த ஃபேஸ்புக்கால.

சரி அப்ப இனிமேல் நீ அவ்வளவுதான்னு நினைக்கிறேன்? தீவிர இலக்கியமெல்லாம் உனக்கு சாத்தியமில்லை.

இல்ல பாஸ் நான் ஃபேஸ்புக்கையும் பாத்துகிட்டு,படிக்கவும் செய்துகிட்டு..

நிறுத்துடா டாபரு... முதல்ல் இந்த ரம்பரை ஊர்வசி மேனகை மாதிரியான ஃபேஸ்புக்கை விட்டு வெளிய வா. பழைய மாதிரி படி.வாசி.ஆழ்ந்து உழு. இவனுங்க சண்டையில நீ இலக்கியத்த இழந்துராத. இலக்கியம்ங்கிறது ஒரு இன்பம். இது மாதிரியான சில்லரை ஃபைட் இல்ல.

இல்ல என்னால ஃபேஸ்புக்க விட்டு வரமுடியாது பாஸ்.

நான் சொல்றத கேளுடா. ஃபேஸ்புக்க விட்டு வந்தாத்தான் இலக்கியம் படிக்க முடியும்.

இன்னொருதடவ ஃபேஸ்புக்க விட்டு வா. ஃபேஸ்புக்க விட்டு வான்னா ஒண்ண கொன்னுருவேண்டா. மரியாதை கொடுத்தா காப்பாத்திக்க... போடா. அட்வைஸ் பண்ண வந்துட்டான்...

கொலைவெறியில் அவன் கத்தினான்.

கதை போல ஒன்று - 96


லேபர் வார்டின் வெளியே அவளின் கரிய நிற செருப்பு கிடந்தது.
அவளே அங்கிருந்து என்னைப் பார்த்தது மாதிரி இருந்தது.

தங்கையிடம் இருந்து ஐந்து நிமிடம் முன்தான் போன் வந்தது. “நீங்க சிசேரியன் எல்லாம் பயப்படாதீங்க. கரெக்ட பண்ணிரெண்டு நிமிசம்தான்.ஆபிரேசனை முடிச்சிருவாங்க”

என்னுடன் யாருமில்லை அந்த கணத்தில்.நான் மட்டும்.தவிப்பு என்னை அலைகழித்தது.

வெளியே வந்து எட்டிப்பார்த்தேன்.”நாகாத்தம்மன்” கோயில் தெரிந்தது.வேண்ட மனது வரவில்லை.

ஆனால் தம்பி நினைவுக்கு வந்தான்.தம்பியின் காதல் நினைவுக்கு வந்தது.

”கிறிஸ்டின் பொண்ண கல்யாணம் பண்றதெல்லாம் நம்ம வீட்ல செட் ஆகுமாம்மா.அவன் அது மாதிரி செஞ்சா நான் குடும்பத்த விட்டு போயிருவேன் இவள கூட்டிக்கிட்டு.அப்புறம் எனக்கு யாரும் வேண்டாம்”.

அம்மா அழுது கமறிய குரலில் சொன்னார்.” அதுக்கு என்னடா பண்ண முடியும்.விரும்பிட்டான்.அந்த பொண்ணும் வீட்ல ஒரே பொண்ணு.என்ன செய்ய முடியும். எனக்கும் ஒருமாதிரிதான் இருக்கு.என்ன பண்ண முடியும்”

“யம்மா அந்தப் பொண்ணு சர்சுக்கு போகும்.அவனுக்கு பிறக்கிற குழந்தை எப்படி வளரும்.குழப்பமாத்தானே. லவ் எல்லாம் பெரிய விசயம் இல்லம்மா ரெண்டு மாசம் பிரிஞ்சிருந்தா எல்லாம் மறந்துரும்.”

......

“இப்ப என்ன இவன் கிறிஸ்டினா மாறுனுமாமா”

‘ஆமா அவுங்க மதத்தில பற்றா இருப்பாங்கல்லா.மதம் மாறி ஞானஸ்தானம் வேற வாங்குமுமாம்லா”

“ஆர்சியா பெந்தகொஸ்தேவா புரொட்டஸ்டண்டா ம்மா”

“ஆர்சிதான் பொட்டெல்லாம் வெச்சிக்கிலாம்.சட்டுன்னு தெரியாது.இப்பவே டெய்லி காலையில பத்து நாள் கிளாஸுக்கு போறான் சர்ச்சுக்கு’

‘எந்த சர்ச்சுக்கு’

‘பெரம்பூர் சர்ச்சுக்கு’

‘ஏம்மா இந்த நாய்க்கு புத்தி இப்படி போகுது.ஒழுங்காத்தான இருந்துச்சு நம்ம குடும்பம்.யாராவது இப்படி ஒரு காரியத்த செய்ஞ்சோமா”

அம்மா அமைதி காத்தாள்.

ஒத்துக்கொள்ளவே முடியவில்லை.அமைதியாக இருந்த குடும்பத்தில் தம்பி குழப்பம் ஏற்படுத்துவதாகவே நினைத்து கொண்டேன். வெறிபிடித்து போய் கத்தினேன்.

‘இந்த பன்னி இது மாதிரி செய்வான்னா, ரெண்டாம் கிளாஸ்ல கிட்னியெல்லாம் இன்ஃபெக்ட் ஆகி, முகமெல்லாம் வீங்கி சாகக்கிடந்தானே கோபாலபிள்ளை ஆஸ்பிட்டல்ல அப்பவே சாகட்டும்ன்னு விட்டிருக்கலாம்” என்றேன்.

அம்மா என்னைப் பார்த்தாள்.”வேணாம் வேணாம் என்ன விட்று.என்னால இந்தப் பேச்சக் கேக்க முடியாது’ என்று அழுதுகொண்டே சோபாவில் சாய்ந்தாள்.என்னை கும்பிட்டாள்.

நான் ஆபீஸுக்கு போய்விட்டேன். கொஞ்ச நேரத்தில் அண்ணனிடம் இருந்து போன்.

“விஜய் அம்மா மனச கண்டதையும் பேசிக்கஸ்டப்படுத்தாத,நீ இன்னும் கொஞ்ச மாசத்துல அப்பா ஆகப்போற.வைஃப் பிரக்ண்டா இருக்கும் போது சந்தோசமா இருக்கனும்.எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்.தயவு செய்து அம்மாகிட்ட போய் “அவன் செத்திருக்கலாம் இவன் செத்திருக்கலாம்ன்னு பேசாத. அம்மா அழுறத போன்ல கேட்டாலே எனக்கு ஒண்ணும் ஒட மாட்டேங்குது”

லேபர் வார்டில் இருந்து ஒரு நர்ஸ் வெளியே வந்தார்.நான் எழுந்தேன்.ஒன்றுமே சொல்லாமல் மறுபடி உள்ளே போனார்.

அதிலிருந்து தம்பியின் காதல் திருமண விவகாரத்தில் நான் தலையிடவில்லை.

என்னைப் பொறுத்தவரை தம்பியே இல்லை என்று நினைத்து வாழ ஆரம்பித்தேன்.

மனைவியிடம் ‘அண்ணி’ என்று பேசுவான்.என்னிடம் பேச வருவான்.பதிலுக்கு பேசுவதில்லை.உறவு இல்லையென்றால் இல்லைதான்.அதை மறக்க அடுத்த கட்ட வேலையை தொடக்கி விடுவது வழக்கம்.

ஆனால் இப்போது மனைவியின் பிரசவம் உள்ளே நடக்க நினைத்து பார்த்தால், ‘ஏன் அப்படியெல்லாம் கீழ்தரமாக நடந்துகொண்டேன்.

படித்த புத்தகத்தின் பக்குவம் என்னுள் இறங்கவே இல்லையே.

ஆண் பெண்ணை காதலிக்கிறான்.இதற்குள் ஏசுவையும் முருகனையும் போட்டு ஏன் குழப்பிக்கொண்டேன்.

இருக்கட்டுமே கிறிஸ்தவர்கள் கொஞ்சம் மத அபிமானம் உள்ளவர்களாகவே இருக்கட்டுமே.தம்பி மதம் மாறட்டுமே.அதனால் என்ன வந்து போச்சு.? என்ன கலாச்சாரம் குழப்பம் வந்துவிடும்.சம்பிரதாயம்தான் கலாச்சாரமா?

அல்லது அது இன்னும் வேறான பொருளா?

இப்போது தம்பி என்ன செய்கிறான்.கல்யாணம் முடிந்து மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறான்.எதாவது கெட்டு போய்விட்டானா?

ஒன்பது நிமிடங்கள் ஆகியிருந்தது.

ஆவேசத்தின் மொழிகளுக்கு இங்கிதம் கிடையாது.இரக்கமும் கிடையாது.

வாழ்க்கையின் நெருக்கடி மனதில் உள்ள அழுக்கை காட்டிக் கொடுத்துவிடுகிறது.

அறிவு ,கற்றது ,உணர்ந்தது, நண்பனின் கதை அடுத்தவன் கதை எல்லாம் கேட்டு நெகிழ்ந்தது அனைத்தும் தனக்கு தனக்கு என்று வரும் போது பொய்யாகிவிடுகிறது.

தனக்கு ஒரு இக்கட்டு என்று வரும் போது, மனதில் உள்ள ஒநாய் விழித்து கடித்து குதறுகிறது.

அம்மாவாய் இருந்தால் என்ன ? அப்பாவாய் இருந்தால் என்ன? அப்போது உள்ளே இருக்கு வளர்ந்த சூழ்நிலை சார்ந்த மதவெறியும் அருவருப்பும் சூழ்ந்து கொள்கிறது.

பதினைந்து நிமிடம் முடிந்ததும், அந்த அழகான வெண்மையான பப்ளி இளம் டாக்டர் துணியில் வைத்து ஒரு குழந்தையை எடுத்து வருகிறார்.

ஆம் அது என் குழந்தைதான்.என்னுள் இருக்கும் பகுதிதான் அவன்/அவள்.கிட்டே பரபரப்பாய் ஒடிப்போகிறேன்.

டாக்டர் முந்திச்சொல்கிறார்.

“பாப்பா பொறந்துக்குங்க.கங்கிராட்ஸ்”

‘வெயிட் ஒகேவா டாக்டர்’

‘இரண்டே முக்கால்.ஒகேதான்’

ரோஸ் நிற போட்டபிள் பேபி பெட்டில் சின்ன பூவாய் படுத்திருக்கிறாள் என் மகள். இதோ என் மகள்தான்.

உடம்பெல்லாம் நடுங்குகிறது.

உள்ளே இருந்து சுரப்பது என்னது.இதுதான் உண்மையான பாசமா? இதுவரை நான் கொண்ட எல்லா உலக அன்புகளும் போலிகள் என்று பட்டவர்த்தனமாய் தோண்றியது.

மிச்ச காலத்திற்கெல்லாம் இந்த குழந்தையின் அடிமையாய் நான் இருப்பேன் என்று தோண்றியது.

கிட்டே சென்று கையில் எடுத்தேன்.பார்த்துக்கொண்டே இருந்தேன்.

“இந்த பன்னி இது மாதிரி செய்வான்னா, ரெண்டாம் கிளாஸ்ல கிட்னியெல்லாம் இன்ஃபெக்ட் ஆகி, முகமெல்லாம் வீங்கி சாகக்கிடந்தானே கோபாலபிள்ளை ஆஸ்பிட்டல்ல அப்பவே சாகட்டும்ன்னு விட்டிருக்கலாம்”

நான் அம்மாவிடம் சொன்ன வாக்கியங்கள் நினைவுக்கு வந்தது.

தம்பியும் இதுமாதிரிதான் சிறுகுழந்தையாய் இருபத்தியாறு வருடங்கள் முன் அப்பா கையில் இருந்திருப்பான் என்று தோண்றியது.

இதோ இதுமாதிரிதான் இளசாக தோலெல்லாம் மென்மையாக இதே குழந்தையாகத்தான் இருந்திருப்பான்.நான் அடையும் இதே உணர்வைத்தான் அம்மாவும் அடைந்திருப்பாள்.

அம்மா அன்று சோபாவில் மயக்க நிலையில் விழுந்து சாய்ந்து அழுது கமறியது எனக்குள் இறங்கியது.

கவலையும் மகிழ்ச்சியும் துக்கமும் சேர்ந்து உடலே கரைந்து பரவசமாய் இருந்தது. என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியவில்லை.

பிள்ளையின் வாயில் சுரந்த எச்சிலை எடுத்து நக்கினேன்.அவளைப்பார்த்து சிரித்தேன்.டாக்டருக்கு நன்றி சொன்னேன்.

அம்மாவை பார்க்கவேண்டும் போல் இருந்தது.

Wednesday 26 June 2013

வினிதாவின் ஷூ...

இப்போதை விடலைகளுக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே கம்பியூட்டரில் பல கவர்ச்சிப்படங்களை ஹை ரிசலுசனில் பார்க்கும் பாக்கியமோ அபாக்கியமோ கிடைத்து விடுகிறது.

எனக்கெல்லாம் அது மாதிரி இல்லை.

விடலையாய் இருக்கும் போது குமுதத்தின் நடுபக்க அட்டையில் “வினிதாவின் க்ஷூ” என்று தலைப்பு போட்டு ஒரு படம் போட்டிருந்தார்கள். 

நடிகை வினிதா க்ஷூ போட்டுக்கொண்டிருப்பது மாதிரி.அதன் சிறப்பம்சம் என்னவென்றால் மினி ஸ்கர்ட் போட்டுக்கொண்டு தன் வாளிப்பான பளபள பான் கேக் தடவிய கால்களை காட்டி வினிதா போஸ் கொடுத்திருப்பார்.

அந்த குமுதத்தை வாங்கி, அந்த படத்தில் இருக்கும் அழகான கால்களை எத்தனைமுறை என் விரல்களால் தடவிப்பார்த்திருப்பேன் என்று எனக்குத்தெரியாது.

இன்ஃபைனைட் டைம்ஸ்...

பிறப்பு முதல் இறப்பு வரை ஆணுக்கு இது பெரிய சவால்.

எப்பவும் ஒரு வெடிகுண்டை வயிற்றில் கட்டி வைத்திருப்பதை போல காமம் அவனை சுழன்று சுழன்று தாக்குகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு செய்திப் படித்தேன்.

ஒரு ஊரின் பிரபலமான டாக்டர் பிளஸ் டூ படிக்கும் பெண்ணின் வயிற்றை சோதனை செய்திருக்கிறார்.சோதனையின் போது தவறாய் தடவியிருக்கிறார்.போலீஸில் கம்ளயின் போய் தூக்கி அவரை ஜீப்பில் வைத்து கம்பிகளுக்கு பின்னால் போட்டு விட்டார்கள்.

பிரபல டாக்டர்,பணத்திற்கு பிரச்சனையே இல்லை, குடும்பம் இருக்கிறது. சரி செக்ஸில் வெரைட்டி வேண்டுமா? அதுவும் அவருக்கு கிடைக்கவே செய்யும் பணத்தைப் போட்டால் இந்தியா போன்ற ஏழை நாட்டில். பின் என்னதான் அவருக்குத் தேவை.

ஒரு அழகான வயிற்றைப்பார்த்து கொப்பளித்த விநாடி நேர காமத்தை அடக்க முடியாத அந்தத்தன்மை.அந்த காம ஆக்கிரோசம்.

(ஒன் மினிட். இந்த டாக்டர நான் சத்தியமா நியாப்படுத்தல... ஆனா இன்னொரு கோணத்த சொல்ல வரேன் )

இதைக் கட்டுப்படுத்த, இந்த மனதை ,காம மனதை கட்டுப்படுத்த மட்டும் ஒரு ஆண் கற்றுக்கொண்டால், அவன் வாழ்க்கையில் பல பெரிய பிரச்சனைகளை கடந்தே விடுகிறான்.

ஆனா அது ரொம்ப கஸ்டம்...

யாக்கோபுவும் ஏசாவும் விநாயகரும் முருகரும் ஞானப்பழக்கதையும்...

ஆபிரகாமின் மகனான ஈசாக்கிற்கு வயதாகி கண் மங்கலாக தெரியும் போது, அவருடைய முத்த மகனு “ஏசா”வுக்கு கொடுக்க வேண்டிய வரங்களை இளைய மகன் ”யாக்கோபு”, அண்ணன் ஏசா மாதிரி வேசம் போட்டு தந்தையிடம் ஏமாற்றி வாங்கிவிடுகிறான்.

யாக்கோபு ”அம்மா செல்லம்” என்பதால் இது அம்மா ரெபெக்காவும் உடந்தை. 

ஏசா கஸ்டபட்டு வேட்டைக்கு போய் தந்தைகாக விலங்கு தேட, 

ரெபெக்கா யாக்கோபைவை மந்தையிலிருந்து கொழுத்த ஆடுகளை கொண்டு வரச்செய்து சுவையாக சமைத்து ஈசாக்குகிற்கு பரிமாறச்செய்கிறாள்.

ஈசாக்கு வரம் கொடுக்குமுன் யாக்கோபுவின் குரலை கேட்டு “உன் குரல் ஏசா குரல் மாதிரி இல்லையே பக்கத்தில் வா” என்கிறார்.

யாக்கோபிற்கு ஒரே டென்சன்.பக்கத்தில் வந்து தொட்டுப்பார்த்தால் ஈசாக் கண்டுபிடித்து விடுவார்.

ஏனென்றால் அண்ணன் ஏசாவின் உடலில் அடர் ரோமங்கள் இருக்கும்.யாக்கோபின் உடல் பளபளப்பாய் இருக்கும்.

அப்போது தாய் ரெபெக்கா யாக்கோபுக்கு ஆட்டின் ரோமம் உடைய தோலை போர்த்திவிடுகிறாள்.

ஈசாக் அந்த ஆட்டு ரோமத்தை தொட்டுப் பார்த்துவிட்டு, ஆகா இது மூத்த மகன் ஏசாவோட முடிதான் என்று ஏமாந்து விடுகிறார்.

வரம் கொடுத்து விடுகிறார்.

கிட்டதட்ட, திருவிளையாடல் மாம்பழக்கதையோட இத ஈக்குவேட் செய்யலாம் ( நிறைய பேராமீட்டர்ஸை நெக்லட் செய்தால்).

ஆனா ரெபெக்காவ செய்த காரியத்த பார்வதி செய்யல.

ஏசாவை முருகர் கூடவும். யாக்கோபுவை பிள்ளையார் கூடவும் ஒப்பிடலாம்.

ஆனா அங்க ஏசா மூத்தவர்.இங்க முருகர் இளையவர்.

ஏசா கஸ்டப்படு வேட்டையாடுகிறார்.முருகர் மயில்வாகனத்தில் உலகை சுற்ற போய்விடுகிறார்.

அங்க யாக்கோபு இளையவர்.இங்க பிள்ளையார் மூத்தவர்.

ஈசாக்கின் வரம் ஈக்குவல் டு ”ஞானப்பழம் மாம்பழம்”

ஈசாக் ஈக்வல்ஸ் டு சிவன்.

யாக்கோபு வேட்டைக்கு போகாமல் மந்தைஆட்டை கொண்டுவருவது ஈக்குவல்ஸ் டு பிள்ளையார் அம்மையப்பனே உலகம் என்று சுற்றி பழத்தை பெறுவது.

சும்மா சுவாரஸ்யத்துக்கு ஈக்குவேட் செய்த்தேன்... நல்லாத்தான் இருக்குவு...

ஒசையில்லாத வன்முறை...

வன்முறையில் பலவகை உண்டு. 

அதில் ”சைலண்டான வன்முறைதான்” கொடுமை.அதாவது நாசுக்காக நோகடிப்பது.

பழைய கம்பெனியில் ஒருவர் மெடிக்கிளைம் இன்சூரன்சை வைத்து கால்முட்டில் ஆப்ரேசன் செய்து கொண்டார்.

ஐந்து வருடங்கள் கழித்தும் அதை செய்திருக்கலாம்.ஆனால் அவர் ரிஸ்க் எதற்கு என்று சீக்கிரமே செய்துவிட்டார்.

முடித்து குணமாகி ஆபீஸ் வந்ததும் நாங்கள் எல்லோரும் விசாரித்தோம்.

அப்போது வந்த உயர் அதிகாரி ஒருவர் சிரித்தபடியே “மெடிக்கிளையம் இல்லாட்டி நீங்க இதுக்கு வெறும் தென்னமரக்குடி எண்ணய் போட்டுட்டு விட்றுப்பீங்க இல்ல” என்று கேட்டார்.

மேலோட்டமாக அது காமெடியாக தோண்றினாலும். அந்த ஆப்பிரேசன் செய்தவரின் மனதை அது பாதித்தது.

“பாஸு அப்ப நான் பிச்சகாரனா பாஸு” என்று சொல்லி சொல்லி நொந்தார்.இதுதான் சைலண்ட் வன்முறை.

அமைதியாக ஒருவர் மனதை புண்படுத்துவது.அதில் மிக மிக தேர்ந்தவர்களைப் பார்க்கலாம்.

தி.ஜானகிராமனின் “முள்முடி” சிறுகதையில் திருடின குற்றத்திற்காக ஒரு மாணவனிடம் பேசாதீர்கள் என்று சொல்லிவிடுவார் பிரம்பை கையால கூட தூக்காத நல்லாசிரியர்.

அந்த ஆசிரியரின் பிரிவு உபசார விழாவுக்கு எல்லோரும் ஒருரூபாய் கொடுக்கும்ப்போது “அந்த மாணவனின்” பங்கை மறுக்கிறார்கள்.

அவன் ஆசிரியர் வீட்டிற்கு வந்து கமறும் போதுதான் ஆசிரியருக்கு புரிகிறது “அன்றே அவனுக்கு பிரம்பால் இரண்டடி போட்டிருந்தால் அதோடு போயிருக்கும்.ஆனால் அன்பு மண்ணாங்கட்டி என்று “ஒதுக்கி” வைக்க” சொல்லி பலநாட்களாக ஒரு மாணவனை புண்படுத்திருக்கிறோம்.என்று

இதுவும் சைலண்ட் வன்முறைதான்.

அம்மா ஒருகதை சொல்வார்கள்.

ஒருகுடும்பத்தில் வீட்டிற்கு வந்த புது மருமகளை நன்றாக பார்த்துக்கொண்டார்கள். நாத்தனார்கள் கூட “அண்ணி அண்ணி” என்று பாசமாகத்தான் இருந்தார்கள். இருந்தாலும் அந்தக்குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது.

காரணம் அந்த மருமகள் காய்கறி வெட்டினால் அவர் போக்கில் காய்கறியை வெட்ட விட்டுவிட்டு, அவர் போனதும் அதே காய்கறியை சின்னதாக அந்த வீட்டின் பொதுதன்மைக்கு ஏதுவாக வேட்டிக்கொள்வார்களாம் நாத்தனார்கள்.

எப்படி இருந்திருக்கும் அந்த மருமகளுக்கு.

இங்கே யாரும் யாரையும் அடிக்கவில்லை.திட்டவில்லை. ஆனால் அரிவாள் வெட்டாக மனதில் காயம் உண்டாகிறது.

இந்த பத்தியை இந்த கதையை சொல்லி முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

சாரு நிவேதிதா ஒரு கதை சொல்லியிருப்பார்.சாருவை கூர்ந்து படித்தாலே அவர் சொல்லும் சாதரண சம்பவத்தின் பின் உள்ள ஆழத்தை உணரலாம்.அப்படி கூர்ந்து பார்க்க தெரியாவிட்டால் அவரை பத்தியாளர் என்றே சொல்லிக்கொண்டும் இருப்போம். சரி அது தனி டாப்பிக்.இப்ப கதைக்கு வருவோம்.

ஒரு ஏழை எழுத்தாளர், தன் பணக்கார நண்பனோடு காரில் போய் கொண்டிருப்பார்.

எழுத்தாளருக்கு பணம் தேவை.

நெருக்கடி.

நண்பனிடம் கேட்க கூச்சம்.

காரைவிட்டு இறங்கும் போது அந்த பணக்கார நண்பன் எழுத்தாளரை கூப்பிட்டு பணம் கொடுப்பார்.

எழுத்தாளர் நன்றி சொல்வார்.

அதற்கு அந்த பணக்கார நண்பன் “பார்த்து செலவு பண்ணுடா! ஹார்ட் எர்ன்ட் மணிடா “ என்பார்.
அதன் அர்த்தம் “பார்த்து செலவு பண்ணுப்பா நான் கஸ்டப்பட்டு சம்பாதித்த பணம்” என்பது.

அந்த துட்டை வாங்கிய எழுத்தாளனின் மனம் எப்படி இருந்திருக்கும்.

இதுதான் “சைலண்ட் வன்முறை” க்கு சிறந்த உதாரணம்.

சாரு போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் அண்ணாவை பற்றி சொல்லும் அவதூறு உண்மையா ?

”அண்ணாவின் எழுத்துக்களை படிப்பவன் எப்படியிருப்பான்” சாரு நக்கலாக எழுதியிருப்பது அவர் அண்ணாவின் எழுத்துக்களை படிக்கவே இல்லை என்பதை காட்டுகிறது.

பிளஸ் டூ வில் நான் டீடேயிலில் உள்ள “செவ்வாழை” சிறுகதையே நான் படித்த மிகத் தரமான சிறுகதை என்பேன்.

சாருவின் அதுமாதிரி கமெண்டுகளை படிப்பர்வர்கள் சி.என்.அண்ணாத்துரையின் எழுத்துக்கள் என்றாலே “டுபுக்கு” என்று நினைத்து விடக்கூடாதல்லவா? அதற்குதான் இதை எழுதுகிறேன்.

‘கம்பரசம்’ கம்பர்பற்றி அண்ணா எழுதிய விமர்சன நூல்.கம்பர் பற்றி மிகக்கடுமையாக கம்பர் வலியத்திணித்த ஆபாசம் பற்றிய ஆதாரங்களாக அவர் நிறைய பாயிண்டுகளை வைக்கிறார்.

அதில் ஒன்று. அண்ணா எவ்வளவு அழகாக அவர் சொல்லும் கூற்றை ஒரு தேற்றமாக கொண்டுவருகிறார் பாருங்கள். ( அந்த எச்ஸ்டிராக்டை நான் எழுதுகிறேன்).

<<இங்கிலாதிலுள்ள வெண்டிரீ என்ற வட்டாரத்து பிரபு,கொடுங்கோலன் தன் மக்களின் மீது மிகக்கடுமையான வரிகளை விதிக்கிறான்.

மக்கள் வரியால் இன்னும் ஏழையாகி உணவுக்கே கஸ்டபடுகிறார்கள்.பிரபுவின் மனைவி ’காடிவா’ பிரபுவிடம் மக்களுக்காக வாதாடுகிறாள். பிரபுவின் மனது கரையவில்லை.

காடிவா திரும்ப திரும்ப இது பற்றியே பேச, பிரபு சொல்கிறார் “என்ன நீ மக்களுக்காக இவ்வளவு கரிசனம் காட்டுகிறாய்.அவ்வளவு மக்களை உனக்கு பிடிக்குமென்றால் ஒன்று செய்.உடலில் துணியில்லாமல் நிர்வாணமாக இந்த நகரத்தை சுற்றிவா.நான் வரியை ரத்து செய்கிறேன்.”

காடிவா அதை செய்ய மாட்டாள் என்று பிரபு நினைத்தார்.ஆனால் காடிவா அப்படி செய்யத் துணிந்தாள் மக்களுக்காக.

இதை கவிஞர் டென்னிசன் எவ்வளவு நாகரீகமாக சொல்கிறார்.பாருங்கள்.ஒரு பெண் நிர்வாணமாக உலா வருகிறாள்.அதையும் இடக்கரடக்கலாகவே சொல்கிறார் டென்னிசன்.

Unclasped th wedded
Eagles of her belt
The grim earl's gift

She linger'd looking
Like summer moon
Half-dipt in cloud

<இரும்பனைய நெஞ்சுடையோன் பரிசளித்த இடையணியைக் களைந்தாள்.கணமென்று கவலை கொண்டாள்.

முகில் மூடிய முழுமதிபோல் நின்றாள்>

Then She rode forth
clothed on with chasity

<கற்பெனும் ஆடை மாட்டி காரிகை குதிரையில் ஏறி சென்றாள்>

இதே மாதிரியான ஒரு காட்சி கம்பருக்கு கிடைத்திருந்தால் அதில் அவர் எவ்வளவு ஆபாசத்தை புகுத்தியிருப்பார் பாருங்கள்.>>

இப்படி போகிறது அண்ணாவின் எழுத்துக்கள்.

எழுத்தில் அவர் சொல்லும் ஒவ்வொரு உதாரணங்களும் தினுசுகளும் அவர் அறிவை பறைச்சாற்றுவதோடு மட்டுமில்லாமல்,வாசிப்பவர்களுக்கும் நிறைய நிறைய விசயங்களை கற்றுக்கொடுக்கிறது.

பொதுவாக அண்ணாதுரையை கிண்டல் செய்வது முற்போக்கு இலக்கியவாதியின் முதல் அடையாளமாக இருக்கிறது.

என்னைப்போன்று,இலக்கியத்தை இப்போதுதன் வாசிப்பவர்கள் இவர்கள் சூழ்ச்சிக்கு பலியாகிவிடக்கூடாது.அண்ணாவிடமும் நிறைய சரக்கு இருக்கிறது என்பதை சொல்வதற்காக இதை எழுதுகிறேன்.

தகுதியே இல்லாமல் நிறையபேர் விமர்சனம் எழுதுவதாக நண்பர் பிரவீன் வெங்கடேக்ஷ் வருந்தியிருந்தார்.

ஆனால் தகுதியுள்ள பலஎழுத்தாளர்கள் கூட இது மாதிரி பொறுப்பில்லாத சிறுபிள்ளைத்தனாமான வார்த்தைகளை கூறுவது வருத்தமாய்தான் உள்ளது.

என்ன செய்ய அவர்களிடம் ஞானம் உள்ளது. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துதான் அந்த ஞானப்பாலை குடிக்க வேண்டும்.

ஞாபகம் வைக்கும் கலை...

வானவில்லின் ஏழுநிறங்களை ஞாபகம் வைக்க VIBGYOR சொல்வோம் தானே.

ஓவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு வர்ணங்களை குறிக்கிறது என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?

இது மாதிரி கணிதத்தில், டிரிக்ணாமெட்ரியில், All Sine Cosine Tangent என்று நினைவு வைப்பதை ALL SILVER TEA CUPS என்று நினைவு வைப்போம்.

கிட்டப்பார்வைக்கு ’குழி லென்சு’ தூரப்பார்வைக்கு ’குவி லென்சு’ என்பதை “கிட்டத்குழி தோண்டி தூரக்குவி” என்பார்களாம் எளிதாய் நினைவு வைக்க.

ஃபர்ஸ்ட் ஆர்டர் லிவர், செகண்ட் ஆர்டர் லிவர், தேர்ட் ஆர்டர் லிவரில் Fulgram Load Effort என்ற மூன்றில் எது நடுவில் வரும் என்று குழப்பமாய் இருக்கும். அதை FLE என்று நினைவில் வைக்க வேண்டுமாம்.

முதல் லிவருக்கு Fulgram. இரண்டாவதுக்கு Load.மூன்றாவதுக்கு Effort. அதுதான் FLE .

இது எல்லாவற்றையும் விட எனக்கு மிக சுவாரஸ்யமாய் இருப்பது Pair of Straight lines யில் உள்ள ஃபார்முலாதான்.இதுக்கும் கணிதத்துக்கும் சம்பந்தம் இல்லை.தெரியாவதவர்கள் போய் விடாதீர்கள்.

அந்த ஃபார்முலா இப்படி வரும் / a h g / h b f / g f c / .இது அடிக்கடி மறந்து போவதால் இப்படி சொல்லி நினைவு வைப்பார்கள்.

இப்படித்தான்.

all hostel gals / having boy friends/ go for cinema/

ஆண் நண்பர்களை உடைய எல்லா ஹாஸ்டல் பெண்களும் சினிமாவுக்கு போகிறார்கள் என்ற வாக்கியம் எந்த பிளஸ் டூ படிக்கும் பையனுக்கோ அல்லது பெண்ணிற்கோ மறக்கும்.

அப்படியே நெஞ்சில் வெச்சி அடிச்ச ஆணி மாதிரி பதிந்து போயிருமல்லவா... 

Saturday 22 June 2013

மலக்குழியைப் பற்றிய ஒரு கன்னடச் சிறுகதை

கன்னடத்தில் மொஹள்ளி கணேக்ஷ் எழுதி தமிழில் பாவண்ணால் மொழிபெயர்க்கப் பட்ட ’பம்பரம்’ என்ற சிறுகதையை சமீபத்தில் படித்தேன்.

கதை சேரியில் வாழும் மத்திய தர வர்க்கத்தினரைப் பற்றி விரிகிறது. 

சிக்கண்ணன் தன் வீட்டின் பின்னால் ஒரு மலக்குழியை வெட்டுகிறார்.மலக்குழி என்றால் என்ன தெரிந்து கொள்ளவேண்டும். 

ஒருகாலத்தில் வடிகால் வசதி இல்லாத சமயம், செப்டிக் டேங் முறை இருந்தது.அந்த செப்டிக் டேங்கில் மலம் நிரம்பும் போது அதை வந்து அள்ளி எடுத்து துப்பரவு செய்வார்கள்.செப்டிக் டேங்க் கட்ட வசதியில்லாதவர்கள் ஒரு குழியை வெட்டி அதன் மேல் தகரமோ ஒலையோ வைத்து மூடிவிடுவார்கள்.

சிக்கண்ணன் காரியவாதி.தன்னுடைய தம்பியின் கல்யாணத்திற்காக இது மாதிரியான மலக்குழியை வெட்டுகிறார்.கல்யாணத்திற்கு வரும் போகும் விருந்தினர்களின் கழிவால் மலக்குழி நிரம்புகிறது.

ஆனால் அதை சுத்தம் செய்யாமல் அலட்சியமாக இருக்கிறார்.மலக்குழியின் ஆழம் ஐந்தடி இருக்கும்.ஊரார் எல்லோரும் சிக்கண்ணனை அதை சுத்தம் செய்ய சொன்னாலும் இவர் கண்டுகொள்வதில்லை.

இதற்கு முன்னாடி அந்த குழியில் ஒரு எருமைமாடு விழுந்து செத்திருக்கிறது. எருமை மாட்டின் சொந்தக்காரர் திப்பே கவுடா வந்து சண்டை போட்டபோது கூட “உன் எருமைய கவனமா நீதான் வெச்சிக்கனும்” என்று சொல்லி சண்டைபோட, அவன் எருமையை விட்டு விட்டுப் போக எருமையை கழுவி அதன் கறியை சிக்கண்ணன் எடுத்துக்கொள்கிறார் தன் சொந்தங்களோடு. 

சிக்கண்ணனின் அப்பாவுக்கு கூட தன் குடும்பம் அந்தஸ்த்தில் வளர்ந்தும் கூட பையன் இப்படி  செய்வது கவலையளிக்கிறது.தன் எதிர்ப்பை சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

இது மாதிரியான சமயத்தில் சிக்கண்ணனின் மகன் சிறுவன் செலுவனின் பம்பரம் அந்த மலக்குழியில் விழுந்து விடுகிறது. செலுவனுக்கு பம்பரம் விடுவது எவ்வளவு ப்ரியமோ  சிக்கண்ணனுக்கு பம்பரம் மேல் வெறுப்பு. 

செலுவன் பம்பரத்தை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துகொண்டிருக்கும் போது, ஒரு நாய்கள் துரத்துலுக்கு பயந்த பன்றி ஒன்று மலக்குழியில் விழுந்து விடுகிறது. 

செலுவன் பன்றி விழுந்ததை போய் தாத்தா, அம்மாவிடம் சொல்கிறான். பன்றியை மீட்க இறங்கும் போது தன் பம்பரத்தையும் எடுத்து தருவார்கள் என்று அவன் கணக்கிடுகிறான்.ஆனால் தாத்தா அம்மா எல்லோரும் அருவருத்து சிக்கண்ணனையும் மலக்குழியையும் திட்டுகிறார்கள். 

சிக்கண்ணன் அதாரி என்பவரின் உதவியை நாடுகிறான். பன்றியை அப்படியே விட்டு விட்டு சாகும் தருவாயில் அதை மீட்டு கொன்று தின்ன சிக்கண்ணனுன் அதாரியும் திட்டம்போடுகிறார்கள்.

மாலை வேளையில் இருவரும் வயிறு முட்டச் சாராயம் குடித்து விட்டு சிக்கண்ணன் மலக்குழியில் இறங்குகிறார்.இறங்கும் போது வழுக்கி உள்ளே விழுந்து உடல் முழுவதும் மலமாகி கிடக்கிறார். 

இதைப்பார்த்த அதாரி மற்றும் எல்லோரும் சிரிக்கிறார்கள். சிக்கண்ணனுக்கு கோபம் வந்து அதாரியையும் மலக்குழியில் இழுத்துவிடுகிறார்.அதாரி கோபமாகி வெளியே வந்து சிக்கண்ணனை ‘தெவ்டியா பயலே’ என்று திட்டி உறவை முறித்து ஊராரிடம் சிக்கண்ணன் மலக்குழியில் பன்றியை எடுத்து வெந்நீரால் கழுவி சாப்பிட முயற்சிக்கிறான் என்று சொல்லிவிடுகிறார். 

முதலில் எருமை மாட்டை மலக்குழியில் தொலைத்த திப்பே கவுடா ஊர் பஞ்சாயத்தை கூட்டுகிறார். ஆனால் சிக்கண்ணன் ஊர் பஞ்சாயத்தை மதிக்காமல் போக, திப்பே கவுடா சிக்கண்ணனை பற்றி போலீஸ் கம்பிளையிண்ட் கொடுக்கிறார். 

போலீஸுக்கு அது விநோதமான கேஸாக இருக்கிறது. 

சிக்கண்ணன் அதாரி இருவரையும் விசாரிக்க கூப்பிட்டு இன்ஸ்பெக்டர் அய்யா விழுந்து விழுந்து சிரிக்கிறார். தன்னுடைய போலீஸ் ஸ்டேசன் செப்டிக் டேங் கூட நிரம்பி நாறுகிறதென்றும் சிக்கண்ணன் அதாரி இருவரும் அதை சுத்தம் செய்யுமாறும் அதிகாரம் செய்கிறார். அந்த தொழிலை விட்டு பலநாளாகிறது என்று இருவரும் சொன்னாலும் கூட “ஏன் அந்த தொழில செய்ஞ்சு வந்த ஜாதிதான நீங்க. ஒழுங்க செய்ங்க. இல்லன்னா ஜெயில்ல தள்ளிருவேன் “ என்று மிரட்டலுக்கு பயந்து இருவரும் போலீஸ் ஸ்டேசனின் மலக்குழியிலிருந்து மலங்களை கூடைகளை வைத்து அன்று முழுவது அள்ளி வீடு வருகின்றனர். 

சிக்கண்ணனுக்கு கோபம். குடித்து விட்டு வீட்டிற்கு வந்து எல்லாவற்றையும் போட்டு உடைக்கிறார்.

செலுவன் பயத்தில் சுவற்றோடு சுவராக நிற்கிறான். அவனுக்கு சூழ்நிலையின் தீவிரம் புரிகிறது. சிக்கண்ணன் ஒரு பானையை உடைக்கும் போது எப்போதோ செலுவனின் அம்மா மறைத்து வைத்திருந்த பம்பரம் தெரிகிறது. 

கதையின் ஆரம்பத்தில் இருந்து என்ன விசயம் நடந்தாலும் அது பற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய பம்பரத்தைப் பற்றிக் கவலைப்படும் செலுவனுக்கு அந்த பம்பரத்தைப் பார்த்த பிறகு மகிழ்ச்சி வந்திருக்க வேண்டும்.ஆனால் வரவில்லை. பம்பரத்தை எடுத்து சட்டென்று தூர வீசியெறிகிறான் செலுவன்.

கண்ணீரோடு தன் அமமாவின் கைகளைப் பிடித்து “என்ன உன் வயித்துக்குள்ளவே மறுபடியும் வெச்சிக்கம்மா” என்று அழுகிறான்.

இந்த கதையில் ஆசிரியர் எந்த இடத்திலும் தத்துவத்தையோ தன்னுடைய பார்வையையோ சொல்லவில்லை.கதை மட்டும் சொல்லிப் போய்விடுகிறார்.

பார்வையை வாசகரிடம் விட்டு விடுகிறார். எந்த இடத்திலும் மலம் அள்ளுபவர்களின் வாழ்க்கையைப் பற்றி ஆசிரியர் உருக உருக நெகிழ்ச்சியை இட்டுக்கட்டவில்லை. ஆனால் கதையை வாசித்து முடிக்கும் போது நமக்கு அதன் தாக்கம் வருகிறது.

ஒரு ஹோட்டல் வைக்கும் அளவுக்கு முன்னேறின சிக்கண்ணன் ஏன் மலக்குழியை முடாமல் வேண்டுமென்றே விட்டு வைத்திருக்கிறான்.அதில் விழும் எருமைபன்றிகள் எல்லாவற்றையும் எடுத்துகொள்வதற்காகவா?

அதற்காக அப்படி ஒரு நாற்றத்தையா தாங்கிக்கொள்வான்.?

ஏன் ஊரார் சிக்கண்ணனின் மலக்குழியை மூடச்சொன்னார்கள்.நாற்றம் மட்டும்தான் காரணமா? அல்லது சிக்கண்ணன் மேல் எதாவது பொறமையா?

பம்பரத்திற்காக ஆசைப்பட்ட செலுவன் ஏன் திடீரென்று பம்பரத்தை வெறுக்கிறான்? தூக்கி எறிகிறான்?

விசாரணைக்காக கூட்டி வந்து தன் போலீஸ் ஸ்டேசன் பீயை அள்ள வைக்கும் இன்ஸ்பெக்டரின் சமய சாதூர்யம் பற்றின கேள்விகள்.

ஜெயிலில் போடாமல் இன்ஸ்பெக்டர் விட்டும் கூட சிக்கண்ணன் ஏன் எல்லோர் மீதும் கோபப்படுகிறான்.?

நாம் கதை படித்து முடித்த பிறகு,இது மாதிரி பல கேள்விகளுக்கு  பொறுமையாக மாடு அசைபோடுவதைப்போல அசைபோட்டு யோசிக்கும் போது கிடைக்கும் பல்தரப்பிலான பதில்கள்,இந்தச் சிறுகதையை இலக்கியமாகிவிடுகிறது.

அது மனதை தொட்ட எழுத்துக்களும் ஆகிவிடுகிறது.  

Tuesday 18 June 2013

கதை போல ஒன்று - 100


லூர்து,தலையணைக்குள் முகத்தை புதைத்து கொண்டு இயேசுவே இயேசுவே இயேசுவே என்று இயேசுவையே துதித்து கொண்டிருந்தாள்.

கிளாஸ் டீச்சராகி அந்த முறைதான் ஸ்டூடண்ஸுக்கு முதன் முதலாக ‘புராகிரஸ் ரிப்போர்ட்’ வழங்கப்போகிறாள். ஆனால் அவளுடைய பதட்டத்திற்கு காரணம் அதுவல்ல.

லூர்து ஹோலிக்கிராஸில் பி.ஏ ஹிஸ்டரி முடித்ததும், பிரைமரி ஸ்கூல் ஹிஸ்டரி டீச்சராக வேலை கிடைத்தற்கு காரணம் தான் எந்த ஞாயிறையும் விடாமல் சர்ச்சுக்கு போனதுதான் என்று நம்பினாள்.

அவளுடைய ஒடிசலான உடலுக்கு கூட சேலை பொருந்தி டீச்சருக்குள்ள கம்பீரத்தை கொடுக்கும் காட்சியை கண்ணாடியில் முதன் முதலாய் பார்க்கும் போதே ‘நல்ல டீச்சராய்’ வேலைக்கு சேர்கிறேன். அதே அளவு நேர்மையை ரிட்டயர்ட் ஆகும் வரை கடைபிடிப்பேன் என்று மானசீகமாய் சபதம் எடுத்துக் கொண்டாள்.

லீவே எடுக்காமல் வருடம் முழுவதும் வந்ததால், சேர்ந்து முதல் வருடம் முடியும் போதே ஐந்தாம் வகுப்பு பி செக்சனுக்கு கிளாஸ் டீச்சராக பெட்டினா மேரி சிஸ்டர் நியமித்தார்.

பெட்டினா மேரி சிஸ்டர் வயதெல்லாம் கணக்கில்லை.திறமைதான் முக்கியம் என்று “சர்ச் சபை” ஏற்பாடு செய்திருந்த ”ஸ்பெசல் மேனேஜ்மெண்ட் டிரனிங்கில்” கேட்டு கேட்டு, அதை செயல்படுத்த லூர்த்தின் பதவி உயர்வை உறுதியாக்கினார்.

அவர் லூர்த்திடம் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் “லூர்து எனக்கு நீ உண்மையான அன்பை நேர்மையை கொடுக்க வேண்டும்.நான் எடுத்த முடிவு சரிதான் என்று என் மனசாட்சி நம்பவேண்டும்” என்று.

லூர்து சிஸ்டரின் வளையல் இல்லாத மெல்லிய கைகளைப் அன்பாய் பிடித்து தன் சத்தியத்தை உறுதி செய்தாள்.

ஜூன் மாதம் மன்திலி டெஸ்டுக்காக சோசியல் சயின்ஸ் பரிட்சை வைக்க வேண்டும்.

மற்ற எல்லா பாட பரிட்சைகளும் வைத்து முடித்து கிளாஸ் டீச்சரான லூத்துவிடம் மார்க் லிஸ்டை கொடுத்து விட்டார்கள் சக டீச்சர்கள்.

சோசியல் சயின்ஸ் மட்டும் லூர்த்து இன்னும் வைக்கவில்லை. அவள் மாணவர்க்ளை திரும்ப திரும்ப நன்றாக கற்க செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

முதன் முறையாக பெட்டினா மேரி சிஸ்டரின் ரூமில் உள்ள உலக உருண்டையை தன் வகுப்பிற்கு எடுத்து வந்து அவள் பாடம் சொல்லிகொடுப்பதை மற்ற ஆசிரியர்கள் பொறாமையுடனும், பெட்டினா மேரி பெருமிதத்தோடும் பார்த்து கொண்டிருந்தார்.

இப்படி சோசியல் சயின்ஸ் பரிட்சையை பிந்தி பிந்தி ஒரு வெள்ளிக்கிழமை வைத்தாள்.

அந்த பள்ளியில் மன்திலி டெஸ்டுகளை நோட்டில்தான் எழுத வேண்டும்.பேப்பரில் எழுதக்கூடாது. நோட்டில் எழுதி மிஸ்ஸிடம் கொடுத்து விட வேண்டும்.

பரிட்சை முடிந்ததும் நோட்டுகளை எல்லாம் வாங்கி வைத்து விட்டு பெட்டினா மேரி சிஸ்டரிடம் தகவல் சொன்னாள்.

“தென் வாட் லூர்து மோளே! திங்கள் புராகிரஸ் ரிப்போர்ட் கொடுத்தரலாமே”

“திங்களா சிஸ்டர்”

“சனி ஞாயிறு லீவு.இந்த மன்திலி டெஸ்ட் நோட்ட வீட்டுக்கு எடுத்து போயிட்டு திருத்து.மார்க் எண்டர் போடு. டோட்டல் போட்டு புராகிரஸ் ரிப்போர்ட் கொடுத்திரு”

’சரி சிஸ்டர்’

‘முத தடவையா புராகிரஸ் ரிப்போர்ட் பிரிப்பேர் பண்ணப்போற. கங்கிராட்ஸ் லூர்து.”

வெள்ளி இரவே நோட்டை கடகடவென திருத்தினாள். திருத்தி முடித்தால் நாற்பத்தி இரண்டு நோட்டுக்கு பதிலாக நாற்பத்தி ஒன்றுதான் இருக்கிறது.எப்படி குறையும்? குழம்பினாள்.

அட்டென்டண்ஸ் ரெஜிஸ்டரை எடுத்துப் பார்த்தாள்.யாருமே லீவ் இல்லை. ஆனால் எப்படி குறைகிறது. தங்கையின் துணையுடன் ஒவ்வொன்றாக சோதித்தாள்.

சோதித்தில் விஜயபாஸ்கர் என்பவனின் நோட்டைக் காணவில்லை.

வெள்ளி இரவு நரகமாய் போயிற்று. சனிக்கிழமையும் லூர்துவுக்கு ஒன்றுமே ஒடவில்லை. நோட்டைத்தொலைத்து விட்டோமே என்ற கவலை.

இதற்கு பதிலாக திங்கள் இன்னொரு பரிட்சையை வைக்க வேண்டுமென்றால் திங்களே புராகிரஸ் கார்டை கேட்கும் பெட்டினா மேரி சிஸ்டரிடம் என்ன சொல்ல.

அழுகை வந்தது, தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள்.

லூர்து மிஸ் அழுதுகொண்டிருக்கும் போது விஜய் சட்டையில்லாமல், ஊக்குகள் இல்லாத டிரவுசரை மடித்துக்கட்டி ஆனந்தமாக பட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.

திடீரென்று பட்டத்தை இன்னும் கொஞ்சம் உயரமாக ஏற்றும் ஆசை வந்தது . வீட்டிற்குள் ஒடிவந்து தன் பையில் வைத்திருக்கும் பட்ட நூலை எடுக்க வந்தவன் , தன்னுடைய ஹிஸ்டரி மன்திலி டெஸ்ட் நோட்டைக் கண்டான்.

கையில் எடுத்துப்பார்த்தான். பரிட்சை எழுதிவிட்டு மிஸ்ஸிடம் கொடுக்க வேண்டும். கொடுக்க மறந்து பையில் வைத்து கொண்டுவந்திருந்தான். பயத்தில் தலைவலித்தது.

லூர்து அழுதுகொண்டே இருந்தாள்.அப்பா விசாரித்தார்.அம்மா விசாரித்தார்.சமாதானப்படுத்தினார்கள்.

ஆனாலும் அழுகையை விடவில்லை.” யம்மா ஏம்மா மொத மொதல்ல புராகிரஸ் ரிப்போர்ட் கொடுக்கப்போறேன் இப்படி பண்ணிட்டாரே ஆண்டவர்” என்று அழுது அழுது கடவுள் மேல் கோபம் கொண்டாள்.

“இனிமே ஞாயிறு சர்சுக்கு போகவே மாட்டேன்மா” என்று சபதம் எடுத்தாள்.

லூர்து சபதம் எடுக்கும் போது விஜய் திருச்செந்தூர் முருகன் படம் முன்னே நின்று சாமி கும்பிட்டு கொண்டிருந்தான்.”முருகா எப்படியாவது என்ன இந்த இதுல இருந்து காப்பாத்து, வேணுமின்னே பண்ணல, தெரியாம பண்ணிட்டேன்.நா வேணா ஒம் சரவண பவ ஃபை ஹண்டிரட் டைம்ஸ் எழுதிர்றேன் முருகா”

ஞாயிறு காலை எழுந்த லூர்து என்னதான் சர்ச்சுக்கு போகக்கூடாதென்று நினைத்தாலும் அவளையறியாமல் குளித்து உடுத்து போனாள் ஆண்டவரை துதிக்க.

ஞாயிறு காலை எழுந்த விஜய்க்கு அந்த ஐடியா தோண்றியது.லூர்து மிஸ்ஸின் வீட்டுக்கு போனால் என்ன? லூர்து மிஸ்ஸின் வீடு இருக்கும் சந்தின் பெயர் தெரியும்.அங்கே போய் விசாரித்தால் என்ன?

முயற்சிப்போம். மன்திலி டெஸ்ட் நோட்டை எடுத்துக் கொண்டு அம்மாவிடம் விளையாடப்போவதாக சொல்லிவிட்டு அதிமிக்கேல் சந்துக்குப் நடந்தான்.

சர்ச்சில் லூர்த்து இயேசுவிடம் கதறிக்கொண்டே இருந்தாள்.வீடு திரும்பும் போது டிரவுசர் சட்டையுடன் ஒரு பையன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

“என்னடா”

”மிஸ் நான் உங்க கிளாஸ்ல படிக்கிறேன்.விஜயபாஸ்கர்”

“உள்ள வா.என்ன விசயம்”

ஹாலில் அவனை உட்காரச்சொன்னார்.விஜய் நோட்டை எடுத்து லூர்துவிடம் கொடுத்தான்.

லூர்துவிற்கு சந்தோசம். தான் தொலைக்கவில்லை. இப்போது நோட்டே கையில் கிடைத்துவிட்டது. தன் பிரச்சனையெல்லாம் தீர்ந்துவிட்டது என்று நினைக்கும் போது அவளுக்கு அந்த கவலை வந்தது.

இவன் வீட்டிற்கு நோட்டை எடுத்து எதாவது பார்த்து எழுதியிருந்தால்

“ஏண்டா நோட்ட எடுத்துட்டுப்போன”

விஜய் சேரைவிட்டு எழுந்து அழ ஆரம்பித்தான்.

“தெரியாம எடுத்து பேக்ல வைச்சுட்டேன் மிஸ்.”

”வீட்ல போய் பாத்து எழுதினியா”

”ச சத்தியமா இல்ல மிஸ்”

நோட்டைப்பிரித்தாள்.

”சொல்லு வாட் இஸ் லேட்டியூட்?

சரியாக பதிலைச்சொன்னான். இன்னும் இரண்டு மூன்று கேள்விகள் மிகச்சரியாக பதில் சொன்னான்.

நேர்மை என்றும் தைரியத்தை கொடுக்க கூடியது. சத்தியத்தின் கம்பீரம் எவரையும் ஈர்க்கவே செய்யும்.
சத்தியம் நிம்மதியானது. நேர்மைக்குள் இருப்பவனக்கு சட்டதிட்டம் பற்றிய கவலையில்லை. தார்மீகம் பலம் கொடுக்கும் சக்தி காண்டாமிருக பலம்.

“ம்ம்ம் நம்புறேன்.இனிமே இப்படி செய்யகூடாது”

“சரி மிஸ்”

“காலையில சாபிட்டியா சாப்பிடுறியா”

‘...... “

ஆப்பமும் குருமாவும் சாப்பிட்டான்.

“இத ஸ்கூல்ல யார்கிட்டயாவது சொல்லுவியா விஜய்”

”சொல்லமாட்டேன்”

”தேங்ஸ்டா”

விஜய் லூர்துமிஸ்ஸைப் பிரிந்து வரும்போது சூரியன் அழகாயிருந்தது, மரங்களின் பச்சை அழகாயிருந்தது. மூச்சை ஆனந்தமாய் இழுத்து விட முடிந்தது, நடக்கவே முடியவில்லை மகிழ்ச்சியில் கிரிக்கட் பேட்டை எடுத்துக்கொண்டு வெறித்தனமாக ஒடினான்.

ஒடிக்கொண்டிருக்கொண்டிருக்கும் போது “தேங்ஸ் முருகா... முருகாஆ தேங்க்ஸ் ” என்று மனதுக்குள் கூவிக்கொண்டிருக்கும் போது

லூர்து தன்னுடைய பிரச்சனையை தீர்த்து வைத்ததற்காக இயேசுவுக்கு தனிஜெபம் மூலம் நன்றி சொல்லி கொண்டிருந்தாள்.