Sunday 1 June 2014

உரையாடல்...

சிலரை பார்க்கிறோம்.பேசுகிறோம்.மறந்து விடுகிறோம்.
சிலரை பார்க்கிறோம்.பேசுகிறோம்.அவர்கள் சொன்ன வார்த்தைகளை திரும்ப திரும்ப யோசித்துக் கிடக்கிறோம்.

அன்று துறையூர் சரவணன் அருளால் டி.கண்ணனை பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.என்னை அறிமுகப்படுத்தி வைத்து அடுத்து ஒரு நிமிடத்தில் அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன்.

கண்ணன் ”வெஸ்டர்ன் பிலாசஃபி” போன்ற விசயங்களில் தேர்ந்த ஞானமுடையவர் என்பதுதான் என்னுடைய அவசரத்துக்கு காரணம்.”ஹிஸ்டிரி ஆஃப் பிலாசபி” எல்லா வால்யூம்களும் படிச்சிருங்க” என்றார்.

நான் சொன்னேன் “நான் முதன் முதலில் படித்த புத்தகம விலி டூரண்ட் எழுதியதுதான்” என்றேன்

.”அது சின்ன புக்.அதுவும் நல்ல புக்குதான்.முதல்ல ஒரு ஆழமான புக்க பொறுமையா படிச்சி முடிங்க.” அதுதான் முக்கியம்.

எல்லா தத்துவவாதிகள் பற்றியும் கொஞ்ச கொஞ்சம் சொல்லி ஹிண்ட் கொடுத்தார்.பாஸிட்டிவசம் பற்றி சொல்லிக் கொடுத்தார்.

1.நான்:ஏன் தமிழ்ல இது மாதிரி தத்துவ புத்தகங்கள் கம்மியா இருக்குது?

கண்ணன்: அப்படி சொல்ல முடியாதே இருக்கே.எஸ்.வி ராஜதுரையெல்லாம் நிறைய செய்திருக்கிறார்.

2.நான்:நான் அதச் சொல்ல வரல.அன்னைக்கு லைப்ரரி போனேன்.அங்க பழம்தமிழ் இலக்கிய புத்தகங்கள்.அதற்கு விரிவுரை,சிற்றுரை அப்படின்னு ஏகப்பட்ட புஸ்தகங்கள் இருக்குது.

சின்ன பசங்க படிக்கிறா மாதிரியும் புலவர்கள் எழுதியிருக்கிறார்கள்.பெரிய அறிவாளிகள் படிக்கிறா மாதிரியும் எழுதியிருக்காங்க.இப்ப ”புலியூர் கேசிகன்” தமிழ் உரைய ரொம்ப படிச்சவங்க ஒத்துக்க மாட்டாங்க.கிண்டல் பண்ணுவாங்க.ஆனா ஆரம்ப கட்ட வாசகனுக்கு அந்த புலியூர் கேசிகனோட உரை தேவையாத்தான் இருக்குது இல்லையா?

அப்போ இது மாதிரி தமிழ் இலக்கிய உரைகள் பெருகி விளையுறதுக்கு காரணம் ஒரு காலத்துல தமிழ்நாட்ல நடந்த பழந்தமிழ் இலக்கிய தேடல்கள்தான் சரியா? அது மாதிரியான ஒரு நிலை வெஸ்டர்ன் பிலாசபிக்கு இருக்கிறதா? அப்படி பார்க்கும் போது தமிழ்ல புக்கு கம்மிதான.

கண்ணன்:அப்படி பாக்கும்போது குறைவாத்தான் இருக்குதுன்னு சொல்லலாம்.1980 கள்ல இது மாதிரி ஒரு அலை வந்துச்சி.ஆனா அது பரவலாக்கமாகல.பலர் அந்த அலையை பாத்து குழபிட்டாங்க.இலக்கியம் என்பது நம் சொந்த சிந்தனையில் இருந்து வருவது.இதை மேலை நாட்டிலிருந்து கடன் வாங்குவதா ?அப்படி இப்படி என்று குழப்பி விட்டார்கள்.

நான் சுந்தரராமசாமி வீட்டில் தங்கி அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இது பற்றிய என்னுடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறேன்.

நான் சு.ராவிடம் சொன்னேன் “உங்களுக்கு மொழிச்சரளம் இருக்கிறது.அதனால் நீங்கள் சொல்லும் எல்லா விசயங்களிலும் உண்மை இருப்பது போன்று எழுதிவிடுகிறீர்கள்.பலர் இங்கே மிகுந்த அறிவோடும்,ஞானத்தோடும்,மேலை நாட்டு தத்துவ உண்மைகளோடும் மொழிச்சரளமில்லாமல் அல்லது மொழிச்சரளம் கைகூடாமல் இருக்கிறார்கள்.அதற்காக அவர்கள் சொல்ல வரும் உண்மையை மறுக்கவோ,இருட்டடிப்போ செய்யக் கூடாது.அப்படி செய்தால் அது தமிழ் ஆரோக்கிய சூழலுக்கு நல்லதல்லதான்”.

இன்னும் நிறைய வரணும்தாங்க.

3.நான்:தமிழ்நாட்டில் நமக்கு அறிவியல்,கணிதப் பார்வைகள் மிகக்குறைவா இருக்கிறதுதான் மேலை நாட்டுதத்துவங்கள் பற்றி ஆர்வமில்லாமல் இருக்கிறதுக்கு காரணமா?

கண்ணன்:இருக்கலாம்.ஆனால் இந்த நிலை சீக்கிரம் மாறும் என்ற நம்பிக்கையாத்தான் எனக்கிருக்கு.

ஏன்னா தெரிஞ்சோ தெரியாமலோ நாம் அறிவியல் கணிதத்த படிக்க ஆரம்பிச்சிட்டோம்.நம்மோட பாடத்திட்டங்கள் அத திணிக்குது.ஆனா அது டெக்னாலஜியத்தான் திணிக்குது.சயின்ஸுக்கும் டெக்னாலாஜிக்கும் வித்தியாசம் இருக்குங்க.

முதல்ல கார் கண்டிபிடிச்சா அதுதான் சயின்ஸ்.அதுக்கப்புறம் அதுல மாற்றம் வந்து ஆயிரம் கார் வந்தாலும் அது சயின்ஸ் கிடையாது.அது டெக்னாலாஜி.

அதுமாதிரி நாம கத்துக்கிறதெல்லாம் அறிவியல் அல்ல.டெக்னாலஜி.ஆனாலும் ஏதோ ஒரு விதத்தில் பேக்கான ( Francis Bacon) தொடர ஆரம்பிச்சிட்டோம்தானே.இன்னும் ஒன்றிரண்டு தலைமுறையில இது மாறும்.

ஒரு மனிதனுக்குள் இருக்கும் ”அறிவியல் Angst" நிச்சயமா அவனோட ஜீன் வழியா அடுத்தவனுக்கு கடத்தப்படுதுன்னு நம்புறேன்.தேவைகளின் அடிப்படையில் வரும் அந்த Angst தொடர்ந்து தொடர்ந்து ஒருநாள்ல பெரிய அறிவியல் புரட்சியா வெடிச்சி நம்ம முன்னாடி நிக்குது.

அதுமாதிரி நம்ம ஊர்லையும் நிலைமை மாறும்.புதுசா வர்றவங்களும் இதுக்கான முயற்சிகளப் பண்ணனும்.

4.நான்: நீங்க அறிவியல் angst தலைமுறை தலைமுறையா கடத்தப்படுத்துன்னு சொல்லும் போது எனக்கொன்னு ஞாபகம் வந்துச்சி.நியூட்டனும்,லெப்னிஸும் கிட்டத்தட்ட ஒரே சமயத்துல கால்குலஸ் கண்டுபிடிக்கிறாங்க.என்ன எப்போதும் ஆச்சர்யபடுத்திற விசயம் இது.

இப்போ, ஒரு எழுத்தாளர் எழதிய ஒரு “சாதரண சிந்தனை” சிறுகதையை இன்னொருத்தரும் அதே மாதிரி ஃபீல் பண்ணி எழுதிட்டாலே,அத விடுங்க ஒரு வாக்கியம் எழுதிட்டாலே எல்லோரும் கொதிச்சி போயிருவோம்.

ஆனா நீயூட்டனுக்கும்,லெப்னிஸுக்கு மொத்த அறிவியல் கணிதப்பார்வையையே மாற்றக் கூடிய Calculas ஒரே சமயத்துல தோணுது.அது என்னுடைய ஐடியா அப்படின்னு ரெண்டு பேரும் சண்டை போடுறாங்க.நான் என்ன நினைக்கிறேன்னா மனிதர்களுக்கு அந்த “அறிவியல் Angst" தலைமுறை தலைமுறையா கடத்தப்பட்டு ஒரு குறிப்பிட்ட சமயத்துல கால்குலஸா வெடிக்குது.இதப்பத்தி நினைக்கும் போதே பரபரப்பா ஆயிடுது.

கண்ணன்: (சிரிக்கிறார்)

5.நான்:சமீபத்துல உம்பர்தோ ஈகோவோட தமிழ் மொழிபெயர்ப்பு பேட்டி படித்தேன்.திரும்ப திரும்ப படித்தேன். பேராசிரியர்.அவர் அறிவியல் அடிப்படையில் எழுதிய “the name of rose" நாவல் ரொம்ப ஹிட் ஆகுது.சித்தார்த்தன் இந்தப் படம் பற்றி எழுதி படிச்சிருக்கிறேன்.இதுமாதிரி அறிவியலும் கணிதமும் தமிழ் படைப்புச்சூழ்நிலையோட பொருந்தி எப்போது வரும்.உருப்படியா வரணும்.தமிழ்நாட்டிலையும் கல்லூரிகளி பிலாசபி வாத்தியார்கள், படிச்சவங்க இருக்கத்தான செய்றாங்க.அவுங்களுக்கு இலக்கிய விழிப்பே இல்லையா? அவுங்க எல்லாம் உம்பர்தோ ஈகோ மாதிரி டிரை பண்ணலாம்.

கண்ணன்:the name of rose" சினிமா கூட நல்லா இருக்கும்.

கண்டிப்பா.இன்னும் கல்லூரி அளவில் பேராசிரியர்கள் இலக்கிய விழிப்பு அதிகமில்லாமல்தா இருக்கிறார்கள்.வேறு வழியில்ல.அத ஒத்துக்கத்தான் வேணும்.

தமிழ்நாட்டுல பேராசிரியர்கள் கல்லூரிகள் பல்கலைக்கழங்கள் செய்யும் வேலையை சில எழுத்தாளர்கள் தனி ஆளாக செய்கிறார்கள். இப்போ கோணங்கி எடுத்துக்கோங்க.அவர் கொண்டு வரும் ”கல்குதிரை” இதழ்களப் பாருங்க. ஒவ்வொரு எழுத்தாளர்கள் பற்றியும் ஒவ்வொரு இதழ்களை கொண்டு வருகிறார்.அதற்கு எவ்வளவு உழைக்க வேண்டும்.வாழ்க்கையை பணயம் வைக்க வேண்டும் என்பதை பக்கத்தில் போய் பார்த்தாத்தான் தெரியும்.

நியாயப்படி இந்த வேலையை ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டும்.ஒரு கல்லூரியின் இலக்கிய அணி செய்ய வேண்டும்.ஆனால் கோணங்கி தான் படைக்கும் நேரத்தை பணயம் வைத்து இதைச் செய்கிறார்.இதுதான் நம்ம ஊர்ல கொடுமை.

இதெல்லாம் ரொம்ப நாளா விவாதிக்கபடுற விசயம்தாங்க.ஒருவேளை உம்பர்த்தோ ஈக்கோ மாதிரி யாராவது எழுதினாலும்,அது நம்முடைய தலைமுறைய பாதிக்குமான்னா அது சந்தேகம்தான்.நாளை வரும் சமூகத்தினர் அதை கொண்டாலாம்.

6.நான்:தமிழ் எழுத்தாளர்கள் எழுதும் கட்டுரைகளில் ஏதாவது ஒரு அறிவியல் அல்லது மேலைநாட்டு அறிவியல் சார்ந்த சிறிய தெளிப்பு இருந்தாலும் அதை நான் ரசிக்கிறேன்.

ஒருமுறை ஜெயமோகன்
Rubik's Cube ஐ சேர்க்க இத்தனை வழியிருக்கிறது.அதுபோலத்தான்
விஷ்ணுபுரம் நாவலை புரிந்து கொள்ளவும் பல வழிகள் இருக்கிறது என்று எழுதியதைப் படித்தவுடன் எனக்கு பிடித்திருந்தது.

அவர் சொல்லவந்த கருத்தை விட,அவர் அந்த ரூபிக்ஸ் கியூபை உதாரணமாக சொன்னதைப் படிக்கும் போது Refresh ஆக இருக்கிறது.இதைத்தான் நான் சொல்ல வருகிறேன்.தமிழ் எழுத்தாளர்கள் இதுமாதிரி தங்கள் கட்டுரைகளில் ஆங்காங்கே கொஞ்சம் அறிவியல் சார்ந்த விசயங்களை தூவினாலே போதும்.மற்றவர்கள் பிடித்துக் கொள்வார்கள்.அது ஒரு டிரண்டாக வரவேண்டும்.

கண்ணன்:பலர் இதை முயற்சி செய்யாமலில்லை.அதற்கு போதிய ஆதரவு கிடைக்காமல் இருந்திருக்கலாம்.அதனால் இங்கே என்ன டிரண்டோ அதை பின்பற்ற தொடங்கியிருக்கலாம்.அங்கீகாரப் பிரச்சனையாயிருக்கலாம்.

7.நான்: பிளேட்டோவின் Theory of forms என்ற கான்சப்டை படித்து முடித்துவிட்டேன்.அது பற்றி பத்தி ஒன்று எழுதலாம் என்றிருக்கிறேன்.

என்னுடைய ஆதங்கம் அதுதான். பிலாசபி என்றாலே கடுமையான கஷ்டமான வார்த்தைகளை முன்வைத்து எழுதிவிடுகிறார்கள்.எளிமையான சிறுபத்தி எழுத்துக்கள் தான் தேவை என்று நினைக்கிறேன்.

Immanuel kant பற்றி படிக்கிறோம்.அவருடைய தத்துவங்களை பத்து சிறு பத்தியாக சுவாரஸ்யமாக யாராவது எழுதினால் அவர் மேல் தமிழர்கள் ஆர்வமில்லாமலா போய்விடுவார்கள்.

அந்த ஆர்வத்தைக் எழுப்புவதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன்.

அதற்கு எளிமையாக எழுதினால் தன்னை ”சாதரண எழுத்தாளன்” என்று யாராவது சொன்னாலும் பரவாயில்லை என்று தைரியத்துடன் எழுதுபவர்கள்தான் இப்போது நமக்குத் தேவை.

கண்ணன்: நீங்கள் நியாயப்படி இப்படி நடுவில் ஒரு விசயத்தை மட்டும் படித்து எழுதுவது என்பது முழுமையான அறிவை நீங்கள் அடையாமல் செய்து விடலாம்.

பிலாசபிக்கென்று ஒரு வரிசை இருக்கிறது.அந்த வரிசையில் படித்தால் ரொம்ப நல்லது.

பொறுமையாகத்தான் இதில் அறிவை எட்ட முடியும்.

ஒருவேளை நீங்கள் பிலாசபி படிக்கும் ஆர்வம் தூண்டப்பட வேண்டும் (மற்றவர்களுக்கும் உங்களுக்கும்) என்று நினைத்தால் இதுமாதிரி நடுவில் ஆங்காங்கே படித்து பிடித்திருந்தால் அதை பகிர்ந்து கொள்ளலாம்.ஆனால் எப்போதும் கவனம் “மெயின் ஸ்டிரீம்” அறிவு வளர்த்தலிலே இருக்க வேண்டும்.அதுதான் தத்துவம் படிக்க ரொம்ப முக்கியம்.

நீங்கள் கண்ட் பற்றி சொன்னதும் எனக்கு வெங்கடேஷ் சக்கரவர்த்தி நியாபகத்துக்கு வருகிறார்.அவரை விட அதிகமாக கண்ட் டை தெரிந்தவர்கள் யாரும் கிடையாது. அவர் வாயிலிருந்து கண்ட் அருவியாக கொட்டும்.

ஒரு நல்ல சினிமா ஆயிரம் புத்தகங்களுக்கு சமம்.ஒரு நல்ல விசயம் தெரிந்த பண்பான அறிவாளியுடன் மது அருந்துவதென்பது ஆயிரம் நல்ல சினிமாக்களுக்கு சமம்.அவ்வளவு விசயம் தெரிந்து கொள்ளலாம்.( சிரிப்பு)

இப்படியாக பேசிக்கொண்டிருந்தோம்.துறையூர் சரவணன் என்னை பேசவிட்டு கவனித்துக் கொண்டிருந்தார்.முடிவில் கண்ணனிடம் இப்படிக் கேட்டேன்.

8.நான்: ஒருவிதமான தம்பட்டம் மாதிரியாக இருக்கலாம்.எப்படித்தான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டீர்கள்.நானும் இது மாதிரி கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.இதுதான் என்னுடைய தற்போதைய obsession ஆக் இருக்கிறது.

கண்ணன்: நான் கிரிக்கட்டில் ஆர்வமுடையவன்.இப்போது அம்பையராக இருக்கிறேன்.

ஒரு பந்து வீச எல்லாம் சரியாகி, பந்து வீச பவுலர் ஒடத்தொடங்கும் போது, என் பக்கவாட்டில் இருக்கும் ஃபீல்டர் ஒருவர் தூரத்தில் அங்கே இருப்பார்.

பவுலர் ஒடி பந்து வீசப்போகும் போது அந்த ஃபீல்டர் பக்கத்தில் வந்திருப்பார்.

எனக்கு தோன்றும் “இவர் எப்படி நம் பக்கத்தில் வந்தார்.இவர் அங்கே அல்லவா நின்றார்”.

அதுமாதிரிதான் பொறுமையா நிதானமா விடாம வெஸ்டர்ன் பிலாசாபியை படிச்சோம்னா,

கிட்டத்தட்ட ஒருவருசத்துல

அரிஸ்டாட்டில்,பிளேட்டோ,ஹெகல்,தெரிதா எல்லோரும் உங்க பக்கத்துல அந்த கிரிக்கட் ஃபீல்டர் மாதிரி வந்திருப்பாங்க.

அப்போ நீங்க ஆச்சர்யப்படுவீங்க “அட இவுங்கெல்லாம் எப்போ நம்ம பக்கத்துல வந்தாங்க” என்று (சிரிப்பு)

கொஞ்ச நேரம் பேசினாலும் வாழ்க்கையில் சிந்தனைமுறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பேச்சாக இருந்தது .

கண்ணனுக்கு நன்றி.

அவரை அறிமுகப்படுத்தி வைத்து துறையூர் சரவணனுக்கும் நன்றி.