Friday 5 June 2015

பெரியார் அம்பேத்கர் வட்டம்

பெரியார் அம்பேத்கர் வட்டத்தை வெளியதான் உருவாக்கனும்ன்னு இல்ல.
வீட்ல இரண்டு பேர் இருந்தாக் கூட உருவாக்க முடியும்.

ஆமா ரெண்டு பேர் சேர்ந்து குறிப்பிட்ட நாள்ல சம்பளம் போட்டு உட்காந்துகிட்டு பெரியார் அம்பேத்கர் எழுதுன புத்தகங்கள எடுத்து கிட்டு வாசிக்கலாம்.அப்படி வாசிக்கும் போது மிக அழுத்தமாக மனதில் பதியும்.
இதை நான் உணர்ந்திருக்கிறேன்.

நானும் துறையூர் சரவணனும் பிரமிள் எழுதிய கட்டுரைகளை ஆளுக்கொரு பத்தியாக வாசிப்போம்.

வேறு யாரும் அந்த அறையில் இருக்க மாட்டார்கள் இருப்பினும் சத்தமாக வாசிப்போம்.அதன் பிறகு அது பற்றி விவாதிப்போம். அதிலுள்ள இண்டிரஸ்டே தனி.

அது மாதிரி புருசன் பொண்டாட்டி குழந்தைகள் அம்மா அப்பா அண்ணன் தம்பி எல்லோரும் மாதம் ஒருநாள் வட்டமாக அமர்ந்து வாசித்து விவாதிக்கலாம்.
பெரியார் அம்பேத்கரை கொண்டாட்டமாக அனுகாமல் நடுநிலையோடு திறந்த மனதோடு அனுகலாம்.

அடுத்து அம்பேத்கர் பெரியார் யாரையெல்லாம் விமர்சித்திருக்கிறார்களோ அவர்களையெல்லாம் கொலைவெறியாக தாக்காமல்,அவர்கள் கருத்துக்களைத் தவறு என்று சொல்லி விவாதிக்கப்பழக வேண்டும்.

“ஏய்யா அங்க தாழ்த்தப்ட்டவங்கள அடி அடின்னு அடிச்சிருக்கான். காந்தி என்னடான்னா லூசுத்தனமா முதல்ல கிரமாத்த விட்டு வெளியேறி உயிரப் பாதுக்காத்துகோங்க அப்புறம் பேசலாம்ன்னு சொல்லியிருக்கார்.காந்தி மொக்க. காந்தி வேஸ்டு” இது போன்று யோசிக்காமல் இதை இன்னும் கண்ணியமாக விவாதிக்கப் பழக வேண்டும்.

ஒருவேளை இந்திய சுதந்திரப்போராட்டமும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைப்போராட்டமும் என்ற இரண்டு பளுவை காந்தியால் தாங்கமுடியாமல் அப்படி சொல்லியிருப்பாரோ,

ஒருவேளை படித்த உயர் ஜாதி ஹிந்துக்களின் ஊடகங்களில் ஆதரவை இழந்தால் இந்திய சுதந்திரப் போராட்டத்தை எடுத்துச் செல்ல முடியாது என்று காந்தி அப்படி செய்திருப்பாரோ” இது மாதிரியாக விவாதிக்க சிந்திக்கப் பழகலாம்.

வீட்டில் சிறு குழந்தைகளை வட்டத்தில் வைத்திருக்கும் போது மிக கவனமாக இதைச் செய்யவேண்டும்.

என் மகளுக்கு காந்தியையும் அம்பேத்கரையும் அறிமுகப்படுத்தப் படுத்தும் போது யாரையும் தாழ்ந்தோ உயர்ந்தோ சொல்லிவிடக்கூடாது என்று மிகக்கவனம் எடுத்துக் கொண்டேன்.

இதில் இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால் இதையெல்லாம் செய்யும் போது பக்கத்தில் இருந்து பலர் கிண்டல் செய்வார்கள்.
குடும்பத்தில் உள்ள மற்றவர்களே கிண்டல் செய்வார்கள்.

நான் முதன் முதலில் கர்நாடக் சங்கீதம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே என் குடும்பத்தில் என்னை கிண்டல் செய்திருக்கிறார்கள்.

முதன் முதலில் தியானம் செய்யும் குடும்பத்தில் உள்ளவர்களே கிண்டல் செய்வார்கள் என்று பாலகுமாரன் சொல்வார்.

அது மாதிரி சொல்வார்கள்.” பாவம் சின்னக் குழந்த அத ஏன் இப்படிப் படுத்துற” என்பார்கள்.

“நீங்கதான் பெரிய புரட்சி செய்றீங்களோ” என்று சொல்வார்கள்.

இன்னும் சில எழுத்தாளர்கள் “முற்போக்காக காட்டிக்கொள்ளும் மோஸ்தரில் இளைஞர்கள் இருக்கிறார்கள்” என்றும் கூட சொல்வார்கள்.

இதற்கெல்லாம் வெட்கப்படக்கூடாது.இப்படி விவாதிப்பது நன்மை பயக்கும் என்ற நம்பிக்கை மனதில் அழுத்தமாக இருந்தால் வெட்கம் வராது.

வெட்கப்படாமல் உங்கள் ”குடும்ப பெரியார் அம்பேத்கர் வட்டம்” அறிவித்த நாள் நேரம் வட்டமாக அமர்ந்து விடுங்கள் புத்தகங்களோடு.

உங்கள் குழந்தை அதில் கலந்து கொள்ளாமல் விளையாடினாலும் அது வியப்போடு பார்க்கும்.அந்த வியப்பில் அதுவும் கொஞ்ச நாளில் கலந்து கொள்ளும்.

குடும்பத்தில் இருந்து முற்போக்கு சிந்தனை உருவாவது மட்டுமே சமுதாய மாற்றத்துக்கு வழியாகும்.

அதனால் அவரவர் குடும்பத்தில் இன்றே இவ்வட்டத்தை தொடங்குங்கள்.
ரூம் எடுத்து தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள்,மேன்சன்வாசிகள் கூட இதைச் செய்யலாம், அலுவலகம் செல்பவர்கள் கூடச்செய்யலாம்.

”லெட்ஸ் பிகின் தி குட் வொர்க்”

No comments:

Post a Comment