Friday 5 June 2015

பெங்காலி ரைம்ஸ்

பெங்காலி ரைம்ஸ்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒன்றை கவனித்தேன்.
தலையில் கொம்பு வைத்த பறவைகள் முட்டையிடுவது போன்ற அனிமேசன் காட்சிகளைக் காட்டுகிறார்கள்.
”கொய்யால இது என்னடா வித்தியாசமான பறவையா இருக்கு.நம்ம யாளி மாதிரி வித்தியாசமான உயிரா” என்று தேட ஆரம்பித்தேன்.
தேடினால், தலையில் கொம்பு வைத்த பறவை ஒரு கற்பனைப் பறவையாம்.
அதன் பெயர் ”ஹட்டி மட்டி டிம்” (Hatimatim Tim). அந்த ரைம்ஸ் வருமாறு
ஹட்டி மட்டி டிம்
தாரா மாதே பாரே டிம்
தாதேர் கஹாரா தூதோ ஷிங்
தாரா,ஹட்டி மட்டி டிம்
அதன் தமிழாக்கம் (நான் செய்தது) வருமாறு
ஹட்டி மட்டிம் டிம்
வெட்டவெளியில முட்டை போடும் .
கொம்பு ரெண்டு உண்டும்.
ஹட்டி மட்டிம் டிம்.
ஹட்டி மட்டிம் டிம் என்று தலையில் கொம்பு உள்ள பறவை வெட்ட வெளியில் முட்டையிடுகிறது.இதுதான் பாடல்.
வெட்ட வெளியில் முட்டையிடுவதை வங்காளமக்கள் தேவையில்லாத வேலையாகப் பார்க்கிறார்கள்.
விழலுக்கு இரைத்த நீர் போல என்று சொல்வது மாதிரி வெட்டவெளியில் முட்டையிடுவதை பயனளிக்காத நேர விரையமாகப் பார்க்கிறார்கள்.
அதனால் ஹட்டி மட்டிம் டிம் என்ற கற்பனைப் பறவையை கிண்டல் செய்கிறார்கள்.
பறவையையா கிண்டல் செய்கிறார்கள்.அது போல பயனிளிக்காத வேலையை செய்பவர்களை, வேலைக்காகாத விஷயத்துக்காக உழைப்பவர்களை கிண்டல் செய்கிறார்கள்.
ஏன் இந்தப் பாடலில் ”ஹட்டிமட்டிம் டிம்” க்கு ”ரெண்டு கொம்பு உண்டு” என்றக் குறிப்பு வருகிறது.
பல மனிதர்கள் நாம் பார்த்திருப்போம்.
வீண் ஜம்பம் அடித்து கொம்புகள் இருப்பது போலவே போலி கம்பீரம் காட்டித் திரிவார்கள்.
ஆனால் வெட்டவெளியில் முட்டையிடும் வீண் வேலையை செய்து கொண்டிருப்பார்கள்.அதைக் குறிக்கிறது என்றே தெரிகிறது.
எள்ளல் தொனியில் பாடப்பட்டும் இப்பாடலில் இருக்கும் அந்த எள்ளல்தாம் இவையெல்லாம் தவறு என்று சொல்லாமல் சொல்கிறது.
ஃபேஸ்புக்கில் எழுதுவது ”ஹட்டி மட்டிம் டிம்” செய்யும் “வெட்டவெளி முட்டையிடும்” வேலையா அல்லது நல்ல வேலையா என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.
நீங்கள் இந்தப் பாடலை எந்த பெங்காலி நண்பர்களிடத்தும் பாடிக்காட்டுங்கள்.அவர்கள் முகம் விரியும்.

No comments:

Post a Comment