Monday 7 March 2016

அம்மாவும் மழலையும்

பார்ட் டைம் பி.ஈ படிக்கும் போது இரவு வகுப்பு முடிந்து, வீடு திரும்ப நேரமாகிவிடும்.
காலை ஏழு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் இரவு 11 மணிக்கு வீடு அடைவேன்.
பசி களைப்பு உடல் வலி என்று எரிச்சலாய் கோபம் பொத்து கொண்டு வரும்.
கோபத்தை காட்ட எளிதான இலக்கு "அம்மா". அம்மாவிடம் எரிந்து எரிந்து விழுவேன்.
- உடனே கதவ திறக்க மாட்டீங்களா
-என்ன சோறு ஐஸ் மாதிரி குளுந்து இருக்கு. நான் என்ன பிச்சக்காரனா பிள்ள.
-ஆம்லேட ஏன் இவளோ வேக விடுறீங்க. எனக்கு வேண்டாம்.
-என்ன மீன் குழம்புல இவ்ளோ முள்ளு மிச்ச மீதிய எனக்கு கொடுபீங்களோ
-என்ன எனக்கு சாப்பாடு போடுறப்ப தூங்கி வழிறீங்க. தேவை இல்ல உங்க சாப்பாடே எனக்கு வேண்டாம்.
-நான் ஒருத்தன் லேட்டா வர்றது உங்களுக்கு எரிச்சலா இருக்கு. நாளையில இருந்து தனியா ரூம் எடுத்து தங்கிகிறேன்.
இப்படி ஏதாவது ஓன்று சொல்வேன்.
சில வரிகள் எல்லாம் கேட்பவர் மனதை குத்தி கிழிக்கும்.
ஆனால் அம்மா அதற்கு பதிலே சொல்ல மாட்டார்.
அமைதியாக இருப்பார்.
பின்னர் ஒருநாள் அம்மாவிடம் அன்பாக பேசும்போது கேட்டேன்
"நான் உங்கள ரொம்ப கோவமா பேசும் போது எல்லாம் உங்களுக்கு கோவமே வராதா பிள்ள . அமைதியா இருக்கீங்க" என்றேன்.
அதற்க்கு அம்மா பதில் சொல்லாமல் சிரித்தார்.
நான் அதிகம் வற்புறுத்தி கேட்கவே அம்மா சொன்னார்
"விஜை ! நீ நீ பிறக்கும் போதே உன்ன எனக்கு உன்ன தெரியும். அம்மாவுக்கு தெரியும்தானே. அப்போ நீ பேச ஆரம்பிக்கும் போது மழலை பேசுவ இல்ல. அப்போ ரசிப்பேன்ல. அதே மாதிரி நீ கோவமா கத்தி டயலாக் விடும் போது நீ மழலை பேசுறதா நினைச்சுப்பேன். அப்ப எனக்கு ஒன்னும் தோணாது. பச்ச புள்ளதான நீ " என்று சொல்லி சிரித்தார்.
பின் விடாமல் சிரித்தார்.
குலுங்கி குலுங்கி சிரித்தார்.
எனக்கு வெட்கமாய் போய் விட்டது.
அம்மாக்கள் வலிமையானவர்கள்.
அவர்கள் ஒரு அன்பினால் பிள்ளைகள் தலையில் தட்டாமல் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment