Monday 7 March 2016

நல்ல அறமய்யா உங்கள் தேசப்பற்று அறம்....

’வானத்த போல’ திரைப்படத்தில் அண்ணன் விஜயகாந்த் மேல் திருட்டுப் பழி நிருபணமாகிவிட
அண்ணனை கைது செய்ய வரும் தம்பி லிவிங்ஸ்டன் அண்ணன் அருகில் வந்து கைவிலங்கை தூக்கிப் போட்டு
“என் அண்ணன கைது பண்ணச் சொல்ற இந்த போலீஸ் வேலையே எனக்கு வேண்டாம்னு” கதறி அழுது நம்மளையும் செண்டிமெண்டால கதறி அழச் செய்வாரு.
ஆனந்த பட்வர்த்தன் எடுத்த ’ஜெய் பீம்’ டாக்குமெண்டரி படத்துல இது மாதிரி நிஜக் காட்சி பார்த்தேன்.
ஒரு கூட்டத்தில் அப்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சரான சிவசேனா கட்சியை சேர்ந்த மனோகர் ஜோஷி பேசுறார்.
“கிருஷ்ணா கமிஷன் குற்றம் சாட்டிவிட்டால் நான் கைது (பால் தாக்ரேவை) செய்துவிட முடியுமா?. அப்படி ஒரு நிலமை வந்தால் என் முதலைமச்சர் பதவியை ராஜினாமா வேண்டுமானால் செய்வேன்.” என்றார்.
இப்போது எனக்கு என்ன டவுட் என்றால் வானத்தை போல திரைப்படத்தில் அந்தக் காட்சியையே விக்கரமன்
தாக்ரே - ஜோஷியைப் பார்த்துதான் எடுத்திருப்பாரோ என்று.
வானத்தை போல காமடியை ரசிக்க முடிக்கிறது. ஆனால் தாக்ரே ஜோஷி பேச்சு மனம் கொதிக்க வைக்கிறது.
அதே கூட்டத்தில் தாக்ரே பேசுகிறார் “வரட்டும் மும்பை நகரில் என்னை கைது செய்ய வரட்டுமே பார்க்கலாம். என்ன நடக்கிறதென்று” என்கிறார். கூட்டம் கைத்தட்டுகிறது.
பகிரங்கமாக பல மக்களை கொன்று குவித்த ஒருவர் இப்படி பொதுவெளியில் பேசுவது பற்றி அக்கூட்டத்தில் யாருக்கும் பிரச்சனையில்லை.
இதைவிட அருமையான விஷயம் இப்படிப்பட்ட பால் தாக்கரேவுக்கு தேசியக் கொடி போர்த்தி இறுதி அஞ்சலி நடந்தது.
புரிகிறதா அவருக்கு இந்திய தேசப் பற்றாளர் என்று பிராண்ட் செய்து அனுப்பி வைக்கிறோம்.
நாட்டில் நடக்கும் ஜாதிக் கொடுமைகள். சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகளின் ஆவேசத்தில் “இந்தியா ஒரு நாடா?” என்று கோபத்தில் ஒரு இந்தியன் சொன்னால் அவன் தேசத்துரோகி.
அதே இது ஜாதிக்கொடுமைகள், சிறுபான்மை அழிப்புகளை ஒரு சித்தாந்தம் மூலமாக ஒருவர் பரப்பி பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றால் அவருக்கு தேசக்கொடி போர்வை.
அவர் உடம்பில் போர்த்திய அதே தேசியக் கொடியை என் சட்டையிலும் நான் கோர்த்துக் கொண்டு ”நான் இந்தியன் இந்தியன்” என்று காலரை வேறு தூக்கிக் கொள்ள வேண்டும் அப்படித்தானே...
நல்ல அறமய்யா உங்கள் தேசப்பற்று அறம்....
Like
Comment

No comments:

Post a Comment