Thursday, 31 July 2014

நிர்வாணம்...

திர்ஷயம் திரைப்படத்தின் கதையென்ன?

தான் அறியாத போது,தன் உடலை படமெடுத்த, ஒரு ஆணின் மிரட்டல் கண்டு பயந்த இளம்பெண், சந்தர்ப்ப வசத்தல், பதட்டத்தால் அந்த ஆணை கொலை செய்துவிடுகிறார்.

அந்தக் கொலையை அவளும் அவள் அம்மாவும் சேர்ந்து மறைக்கிறார்கள்.பின் அவள் தந்தையின் சாதுர்யத்தாலும் மதியூகத்தினாலும் சட்டத்திலிருந்து தப்பிக்கிறார்கள்.

படத்தைப் பற்றிக் குறை கூறவில்லை.அது ஒரு நல்ல மசாலா படம்தான்.
ஆனால் இதையொட்டி எனக்கு தோன்றுவது இது.

இப்போது எல்லோருடைய கைகளிலும் மொபைல் கேமரா இருக்கிறது.எதை வேண்டுமானாலும் படமெடுக்கலாம்.யாரை வேண்டுமானாலும் படமெடுக்கலாம்.
ஒரு பெண்ணின் சிறிய அங்க வெளிப்பாடு கூட உடனே படமெடுக்கப்படுகிறது.இனி வரும் காலத்தில் இது நிச்சயமாக அதிகமாகும்.

இப்படி படமெடுப்பவர்களை எல்லாம் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்தான். தடுக்கப் பட வேண்டும்தான்.

ஆனால் நம்முடைய நிர்வாணத்தை நம்மை அறியாமல் ஒருவன் படம்பிடித்து உலகத்துக்கு போட்டுக் காட்டினால் அது நமக்கு அவமானமா? அவமானம் என்றால் எப்படி அவமானம்?
”இவளப்பாரு இவள நாம நேத்து பாத்துட்டோம். இவளோட அது இப்படி? இது இப்படி? என்று யாராவது சொல்வார்களா?”

நிச்சயம் சொல்வார்கள்.

அனால் அப்படி சொல்வதற்கு படத்தில் இருந்தவர் பொறுப்பாவாரா? இல்லைதானே.

ரெஸ்ட் ரூமில் அவுத்துப் போட்டுட்டு குளிக்கும் போது யாரோ ஒருவன் படமெடுத்தால்,அதை உலகம் பார்த்தால்,அதைக் கிண்டலடித்தால் பிறருடைய அந்தரங்கத்தை எட்டிப்பார்த்த காரியத்துகாக,அவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்.

”அதற்கு நான் எப்படி, ஏன் வெட்கபட வேண்டும். போடா லூசு” என்று சமூகத்தை நோக்கி,
கம்பீரமாக கேட்கும் மனநிலையை பெண் குழந்தைகளுக்கு உருவாக்கித் தரவேண்டியது பெற்றோர்களின் ஆசிரியர்களின் கடமை.

இதைப் பாடமாகவே கற்பிக்க வேண்டும். இதனால் பல தற்கொலைகள் குறையலாம்.
ராஜன்குறை கிருஷ்ணன் முன்பு ஒரு பதிவில் இந்த விழிப்பு சொல்லி இருக்கிறார். அதைப் படித்த பிறகுதான் எனக்கு இவ்விஷயத்தில் தெளிவு வந்தது.

எல்லா மதங்களிலும் சொல்லப்படும் ஒரே விசயம் பெண்ணின் உடலை மூடு என்பதுதான்.”அதை மூடு.இதை மூடு. மூடாட்டா இவன் கிளம்பிருவான். சமுதாயம் நாசமாயிரும்” என்பதுதான் இவை அனைத்தும் விடுக்கும் மொக்கை எச்சரிக்கை.
இது நாள் பட நாள் பட பெண்ணின் அங்கம் பற்றிய அதீத உணர்வாக அவள் மனதில் ஏற்றப்படுகிறது. எங்காவது எவனாவது பார்க்கிறானா? என்று பார்ப்பதும் பெண்ணுக்கு மன பாரமாக ஆகிவிடுகிறது.

இப்படி ஏற்றப்பட்டு ஏற்ற்ப்பட்டு என்றாவது நிர்வாணம் என்பது பலருக்கு தெரிய வரும் துரதிஷ்டம் நடக்கும் போது, அல்லது மிரட்டல் வரும் பொது,அது பற்றிய அளவுக்கதிமான ”கற்பனை அவமானத்தை” வளர்த்துக் கொண்டு பயந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

அல்லது கொலை.

இது மாதிரியான ஒரு தெளிவு ”திரிஷ்யம்” படத்தின் மோகன்லால் மகள் கேரக்டருக்கு இருந்திருந்தால் அவள் என்ன சொல்லியிருப்பாள்?

“போடா இண்டர்நெட் என்ன? போஸ்டர் அடிச்சி என் வீட்டு சுவத்துல கூட ஒட்டிக்கோ. என் அந்தரங்கத்த எட்டிப் பார்த்து படம் புடிச்சேன்னு உன் மேல கம்பளைன் கொடுப்பேன்.
இருக்கிற அமைப்புகள திரட்டிட்டு உன் வீட்டு வாசல்ல நின்னு குரல் கொடுப்பேன். ரோட்ட மறிச்சி போராட்டம் பண்ணுவேன். எனக்கு தெரியாம என்ன எடுத்த படத்துக்கு நான் பொறுப்பில்ல.

நீ எங்க வேணாலும் ஒட்டிக்க.யாருக்கு வேணாலும் எம்.எம்.எஸ் பண்ணிக்க.கல்யாணம் பண்ணிக்க யாரும் வரமாட்டாங்கன்னு மிரட்டாத. நா இந்த உலகத்துல மனித இனத்துல ஒரு வகை. என்னோட உணவு உறைவிடம் உடைய என்னால தேடிக்க முடியும். அதனால இனிமே உன் கூட எனக்கு பேச்சில்ல. வழிய மறிக்காத.தூரப்போ” என்று சொல்லி போயிருப்பாள்.

மோகன்லாலுக்கும் அவர் குடும்பத்துக்கும் சிரமமே இருந்திருக்காது.

Saturday, 5 July 2014

ரேமண்ட் கார்வரின் சிறுகதை ஒன்று...

ரேமண்ட் கார்வர் எழுதிய “குடி மறதி விடுதியில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறேன்” என்ற கதையை காலை தூங்கி எழுந்ததும் படுக்கையில் படுத்துக் கொண்டே ஒரே வீச்சில் படித்து முடித்தேன்.

தமிழில் மொழி பெயர்த்தவர் அப்பணசாமி.

நான் புரிந்து கொண்ட சாரக்கதையை சுருக்கமாக எழுத வேண்டும் போல இருந்தது. எழுதுகிறேன்.

//// குடிப்பழக்கத்தை மறக்க பயிற்சி கொடுக்கும் விடுதியில் தங்கியிருக்கும் நாலைந்து நபர்களைப் பற்றியது கதை.

அவர்கள் தங்களின் கதைகளை பரஸ்பரம் பகிர்ந்து கொள்கிறார்கள்.

”நான்” என்ற கதை சொல்லி ஜே.பி என்பவனின் கதையைக் கேட்கிறார்.

ஜே.பி சிறுவயதில் தான் சிறுவயதில் ஒரு கிணற்றுக்குள் விழுந்து பயந்த கதையைச் சொல்கிறார்.இதிலிருந்து எப்படி மீளப்போகிறேன் என்றே அப்போது அவருக்கு தெரியவில்லையாம். நல்லவேளையாக அவர் அப்பா கண்டுபிடித்து காப்பாற்றினாராம்.

ஜே.பியும் அவன் நண்பனும் இளைஞர்களாக வீட்டில் தனியாக  இருக்கும் போது ”ராக்ஸி” என்ற பெண் ”கணப்படுப்பு” (குளிர்காய உதவி செய்யும் விறகடுப்பு) சுத்தம் செய்ய வருகிறாள்.அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கிறார்கள் நண்பர்கள்.

 போகும் போது ராக்ஸி கேட்கிறாள் “நீங்கள் இருவரும் என்னை முத்தமிட விரும்புகிறீர்களா? “ என்று. நண்பன் முத்தமிடுகிறான். இவனும் முத்தமிடுகிறான்.

ஜே.பியின் முத்தத்தில் இருந்த காதலை ராக்ஸி உணர்ந்து கொள்கிறாள்.இருவருm திருமணம் செய்து கொள்கின்றனர்.ஜே.பி தன் இருபது வயது முடியும் போது நல்ல மனைவியையும் குழந்தைகளையும் சொந்த வீட்டையும் அடைந்து விடுகிறான்.

அதன் பிறகு ஜே.பி ஏன் என்று தெரியாமலேயே குடிக்கிறான்.முதலில் பியர்  குடிக்கிறான். அப்புறம் ஜின் டானிக் குடிக்கிறான்.இரவு குடிக்கிறான்.இரவு குறைந்து மாலையாகி,மதியமாகி, காலையிலேயே குடிக்க ஆரம்பிக்கிறான்.

ஏன் அப்படி குடிக்கிறான் என்று ஜே.பிக்கே தெரியவில்லை. மனைவி குழந்தைகளுடன் சண்டை வருகிறது, மனைவி வேறு காதலனைத் தேடி போகிறாள்.ஆத்திரத்தில் மனைவின் கல்யாண மோதிரத்தை வாங்கி ஜே.பி சிதைக்கிறான். ஜே.பியை ”குடிமறதி” வீடுதியில் விட்டு விட்டு அவன காதல் மனைவி ”ராக்ஸி” போய் விடுகிறாள்.

காக்கா வலிப்பு வரும் ஒரு குள்ளனும் குடிக்கு அடிமையாகி அந்த விடுதியில் இருக்கிறான். அவன் எதன் மீதும் பிடிப்பில்லாமல் இருக்கிறான். “வரும் புத்தாண்டில் என் மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு கேக்குகள் சாப்பிட்டுக்கொண்டே டிவி பார்ப்பதுதான் என் ஆசை” என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொள்கிறான்.

அப்படியே புத்தாண்டு நெருங்கும் போது அவன் உடல்நலம் சரியாகி வீட்டுக்கு போகும் உற்சாகம் மனதில் இருக்கிறது.ஒரு பீதியும் அவன் மனதில் இருக்கிறது. கதையாசிரியர் அந்த இடத்தில் இப்படி சொல்கிறார் “ஒரு விடுதலை என்பது மற்றொரு தளைக்குதானே இட்டுச் செல்கிறது” என்று.

”நான்” என்ற கேரக்டரின் கதையில், அவன் அதிகமாக குடிக்கிறான்.இதனால் மனைவிக்கும் அவனுக்கும் இடைவெளி வருகிறது.அவனுக்கு இன்னொரு காதலி கிடைக்கிறாள்.அவள் இவனுக்கு ஆசுவாசம் கொடுக்கிறாள்.ஆனால் அவளுக்கும் மார்பக புற்று நோய் வருகிறது. இதனால் இவன் இன்னும் அதிகம் குடிக்கிறான்.குடிப்பதில் இருந்து அவனால் வெளியே வரமுடியவில்லை. தன் காதலியிடம் தன்னை குடிமறதி விடுதியில் சேர்க்குமாறு கெஞ்சுகிறான்.அவளும் சேர்த்து விட்டு செல்கிறாள்.

இப்போது நான் கேரக்டர் பேசுகிறது நினைக்கிறது.

புத்தாண்டுக்கு முந்தின நாள் ஜே.பியை கூப்பிட அவன் மனைவி ராக்ஸியே வந்து விடுகிறாள்.எனக்கு அவர்களைப் பார்க்க மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.ஆனால் எனக்கு யாருமில்லையே என்ற ஏக்கமும் இருக்கிறது.மனைவியும் போன் போடுவதில்லை.காதலியும் போன் பேசுவதில்லை.

எனக்கென்று யாருமே இல்லையே. நான் புத்தாண்டு அன்று அவர்களை கூப்பிடுவேன். ஏதாவது பேசுவேன். ஆனால் அவர்கள் பேசுவார்களா என்று தெரியவில்லையே.

ஜே பின் மனைவி ராக்ஸி அழகாக சிரித்தாள். “உன்னைப் பற்றி ஜேபி நிறைய சொல்லியிருக்கிறான்.நல்ல விதமாகத்தான்” என்றேன்.

அவள் சிரித்தாள் .ஆறுதல் சொன்னாள் .

பின் ஜே.பியும் ராக்ஸியும் கிளம்புபோது “ராக்ஸி எனக்கென்று யாருமில்லை.என்னை முத்தமிடுவாயா” என்று கேட்டேன்.

“ஆஹா அதையெல்லாம் விட்டு நாளாகிவிட்டதே” என்று குறும்பாக சொன்ன ராக்ஸி, என்னருகே வந்து உதட்டி அன்பு முத்தம் கொடுத்தாள்.

பின் ஜேபியும் ராக்ஸியும் காரில் கிளம்பினார்கள்.

குள்ளனும் கிளம்பிவிட்டான்.

நானும் மனைவியும் குறும்பாக பேசி பழகிய நாட்கள் நினைவுக்கு வந்தன.

சின்ன சின்ன அர்த்தமற்ற விளையாட்டுகளால் நிரம்பிய வாழ்க்கை அது.ஆனால் அதுதான் எங்கள் அன்புக்கு அர்த்தம் கொடுப்பவைகளாகவும் இருந்தன என்பதையும் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

”நான் நாளை போன் செய்வேன்.சும்மாதான் பேசுவேன் .அதிகம் பேசமாட்டேன். மனைவியோ காதலியோ யாரிடமாவது பேசுவேன். நாளைக்கு நிச்சயமாக போன் செய்வேன். நான் நாளை .... “ ///

காலையில் கல்குதிரை இதழில் இதைப் படித்து கண்களில் கண்ணீர் வர பிரஷ் செய்தேன். கண்ணீர் வர முகம் கழுவினேன். கண்ணீர் வர காபிக் குடித்தேன்.

கண்ணீர் வர எழுதினேன்.

தனிமைதான் மனிதனுக்கு கிடைக்கும் மோசமான தண்டனை.

’Where i'm calling from, from" Raymond carver

இந்தக் கதையில் ஜேபி முதலில் சொல்கிறான் பாருங்கள் சிறுவயதில் தான் ஒரு பாழும் கிணற்றில் விழுந்து திகைத்து முழித்து மீளத் தெரியாமல் அலறுவதாக.

ஒருவேளை அது குடி நோயில் இருந்து மீள முடியாமல் துடிப்பவர்களைச் சுட்டும் குறியீடோ...

Thursday, 3 July 2014

”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்”

”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” பற்றி எழுத வேண்டும் போல இருந்துச்சி பாத்துக்கோங்க.எந்த அளவுக்கு சரியா வந்திருக்குன்னு தெரியல... ஃபேஸ்புக்தானே...போடுவோம்... என்ன இப்ப ? :)

தெனாலிராமன் எப்படியிருந்தாலும் அது நல்ல படம் என்றே எல்லோரும் சொல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

காரணம் மக்களின் பரிதாபமும் அன்பும் இப்போது வடிவேலு மேல் இருக்கிறது.சமுதாயம் தனிமனிதை தூக்கும் விதமும்,பின் அவனை கிழே போட்டு மிதிக்கும் விதமும் ஆச்சரியமானது.

சமுதாயம் என்பது ”மாபெரும் தனிமனிதனாக” தன்னை கற்பனை செய்துகொண்டு,வளரும் தனிமனிதனோடு தன்னை ஒப்பிட்டுக் கொள்கிறது என்றே நினைக்கிறேன்.

சிவகார்த்திகேயன் வளர்கிறார்.வளரும் போது ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” நினைக்கிறான் “ஐயோ பாவம்! பொழைச்சிப்போகட்டும். சிவகார்த்திகேயன்தானே முன்னேறட்டும் முன்னேறட்டும்.

அதே சிவகார்த்திகேயன் முன்னேறி ஒரு ஸ்டாராக வந்து விடுகிறார்.அறிமுகப்பாட்டெல்லாம் வைத்து குத்தி எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதனுக்கு” பொறாமை வந்து விடுகிறது.விமர்சனத்தை தாண்டிய கூரிய கிண்டலால் அந்த வளரும் தனிமனிதனை இறக்கப் பார்க்கிறது.அல்லது அவனுடைய வீழ்ச்சிக்காக காத்திருக்கிறது.

சரி.

”வளரும் தனிமனிதன்” இந்த ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதனை” எப்படி சமாளிக்க வேண்டும்.

1.பணிவு வேண்டும்.உண்மையான பணிவாக இருந்தால் நன்று.அது மட்டும் போதாது.அந்தப் பணிவை மற்றவர்கள் பேசுவது மாதிரி விளம்பரம் செய்யத் தெரியவேண்டும்.சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர் ரஹ்மான் போன்றோர்கள் நல்ல உதாரணங்கள்.என்றாவது நாம் இவர்கள் வீழ வேண்டும் என்று நினைத்திருப்போமா? நினைத்திருக்கவே மாட்டோம்.காரணம் அவர்களின் பணிவு.

கங்கூலியின் வீழ்ச்சிக்காக நாடே காத்திருந்தது ஞாபகத்திற்கு வருகிறது.கங்கூலி தன் பேட்டிங் கிட்டை கூட தன் கையால் கிரவுண்டுக்கு தூக்கிவர மாட்டார்  என்ற செய்திகளை இதழ்கள் வெளியிட்ட போது ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” என்ன நினைத்தான் “கொய்யால கங்கூலி.அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீ” என்று அவருடைய வீழ்ச்சியை எதிர் நோக்க ஆரம்பித்தான்.

2.தேவையில்லாத வார்த்தைகளைப் பேசாமல் இருப்பது. சசிதரூர் ”கேட்டில் கிளாஸ்” என்று சாதரணமாக சொன்னதை “மாட்டுக்கொட்டகை” என்று எடுத்துக் கொண்டு,”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” பெரியதாக்கி வேதனைப்பட்டது தெரியும்தானே.சசி தரூர் அதை சொன்னதால் பெரிய பிரச்சனையில்லை.ஆனால் சொல்லாமல் இருந்திருந்தால் ”சமுதாயம் என்னுன் மாபெரும் தனிமனிதனுக்கு” அது பிடிக்கும்தானே.தேவையில்லாத வார்த்தைகளை ”வளரும் தனிமனிதர்”கள் பேசாமல் இருத்தல் வேண்டும்.

3.தன்னுடன் வளரும் மற்ற தனி மனிதர்களை பகைத்துக் கொள்ளாமை வேண்டும். இதற்கு சிறந்த உதாரணம் ஜெயம் ரவி,விஷால்,ஆர்யா,சூர்யா,தனுஷ்  போன்ற நடிகர்கள்தான்.எல்லோரும் எல்லாரைப் பற்றியும் புகழ்வார்கள்.அவரா அவர் நல்லா நடிப்பார்.இவரா இவரும் நல்லா நடிப்பார்..வளரும் போது இது முக்கியம்.யாரையும் பகைத்துக் கொள்ளல் கூடாது.ஏனென்றால் ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” இவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.ஒருவேளை ”அட என்னப்பா அவன் நடிக்கிறான் நல்லாயில்லை” என்று உண்மையைச் சொன்னால் அதை ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” விரும்புவதில்லை.அன்பாவாகவே பாவனை செய்வது முக்கியம்.

4.வளரும் தனிமனிதன் தன் பாலுணர்வு சார்ந்த இச்சைகளை “சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதனுக்கு” தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதனுக்கு” யார் மீதாவாது செக்ஸ் கிசுகிசு வந்தால் அது பிடிக்காது.கடுமையான கோபம் கொள்வான் இந்த “சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்”. அதனால் வளரும் தனிமனிதனுக்கு தன்னுடைய ஆதரவை நிறுத்தி விடுகிறான்.

இதையெல்லாம் “வளரும் தனிமனிதன்” கவனிக்க வேண்டும்.

இன்னும் கொஞ்சம் பார்ப்போம் இந்த ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதனின்” குணாம்சத்தை

A.இந்த ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” எப்போது யார் மேல் பரிதாபப்படுகிறான் என்றே தெரியாது.சஞ்சை தத்,சல்மான்கான் ஜெயிலில் சப்பாத்தியும் கீரையும் சாப்பிட்டார்கள் என்பதைக் கேட்டு கண்ணீர் வடிக்கிறான்.அவர் செய்த மற்ற  காரியங்களை அப்படியே மறந்து விடுகிறான்.வசதியானவர்கள் செய்யும் தப்பு,தவறுகளைக் கண்டு ஆவேசம் கொள்கிறான்.ஆனால் ஜெயிலில் அவர்களுக்கு “வெறும் சப்பாத்திதானா உணவு” என்று பரிதாபமும் அடைகிறான்.

B.இறந்தவர்களுக்கு நல்லவர்,திறமையானவர் என்று பட்டம் கொடுக்கிறான்.யாராவது அவரை விமர்சித்தால் அவனை பிடிப்பதில்லை ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதனுக்கு”."ஒரு மனித நேயம் கிடையாதா உனக்கு" என்கிறான்.

C.இளையராஜா பாடல்களிலும் சில காப்பியெல்லாம் இருக்கத்தான் செய்கிறது என்று சொன்னால், “அப்படியானால் நீ இசையமைத்துக் காட்டு பார்க்கலாம்.அவர் இசைக்கடவுள்.உன் வயதென்ன அவர் வயதென்ன.அவர் தெய்வீகமானவர்” என்று அடித்துப் பேசுகிறான் இந்த ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்”.

D.ரத்தமும் சதையுமாய் குறைவு நிறைவுகளோடு வாழ்ந்து இறந்து போன அறிவாளிகளின் கருத்துக்களை படித்து விவாதித்து விமர்சித்து தன் அறிவை வளர்த்துக் கொள்ளாமல்,அதே அறிவாளிகளை தெய்வமாக்கி வழிபடுகிறான்.அவர்களுக்கு பூ,பழம்,பத்தி எல்லாம் காட்டி வழிபடுகிறான்.இது ஏன்யா என்று கேட்டால் “அவர் தெய்வம், அவரை அறிவாளி என்று சொல்லாதே” என்று கடிந்து கொள்கிறான் இந்த ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்”.

E.சபையில் வயதான கிளாசிக் ஆளுமைகள் நுழைந்தால் இந்த ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” அடிமைபோல எழுந்து நிற்கிறான்.மிதமிஞ்சிய பாவனை மரியாதை அவனிடம் இருக்கிறது.அந்த கிளாசிக் வயதான ஆளுமைகளுக்கு விருது கொடுக்கும் போதும் எழுந்து நிற்கிறான் இந்த ”சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்”. கூச்சமேயில்லாமல் எல்லோரும் எழுந்து நிறக வேண்டும் என்று தர்மசங்கடமும் படுத்துகிறான் இந்த “சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்”.

இப்படி நிறைய சொல்லலாம் இந்த “சமுதாயம் என்னும் மாபெரும் தனிமனிதன்” பற்றி... :) :)

பின்னம்..

பின்னம் என்ற Fraction ஐ முதன் முதலாக நான்காம் வகுப்பில் படிக்க ஆரம்பித்தேன்.

நேரடியாக வரும்  12 x 26 = ? எவ்வளவு என்ற கணக்குகளை கற்றுக்கொண்டிருந்த எனக்கு திடீரென்று 1/2 என்று படிக்கும் போது ஒவ்வாமையாக இருந்தது.

நல்லா இருந்த நம்பர்கள ஏம்பா இப்படி கோட்டுக்கு மேல ஒண்ணு,கோட்டுக்கு கீழ ஒண்ணுன்னு படிக்கிறோம் என்று எரிச்சல் வந்தது.

நான்காம் வகுப்பு முடியும்வரை Fractions என்றால் என்ன என்பதை உணராமலேயே படித்து முடித்தேன்.பின்னொரு நாளில் தனியே படுத்திருக்கும் போது, ஒரு ஆப்பிள் என்றால் அது ஒன்று, அதை இரண்டாக வெட்டி அதில் ஒரு துண்டை குறிப்பதுதான் இந்த “1/2” என்று நானே தெரிந்து கொண்டேன்.

அல்லது உணர்ந்து கொண்டேன்.

வகுப்புக்குள் பாடம் எடுக்க நுழையும் போதே எஸ்தர் மிஸ் ஒரு ஆப்பிளையும் கத்தியையும் எடுத்துக் கொண்டு “இதப்பாருங்க பசங்களா! என் கையில இருக்கிறதென்ன?

”ஆப்பிள் மிஸ்.”

”சரி.இத எப்படி எழுதுவோம்.

”ஒண்ணுன்னு எழுதுவோம் மிஸ்.”

”சரி இப்ப நான் இந்த ஆப்பிள ரெண்டா நறுக்குறேன்.இப்ப பாருங்க பாதிப் பாதியாக்கிட்டேன்.இப்ப இந்த பாதிய எப்படி எழுதலாம்? யாருக்காவது தெரியுமா? ”

”தெரியாது மிஸ்.”

”இந்த பாதிய எப்படி எழுதலாம்ன்னு படிக்கிறதுதான் Fraction. இப்ப பாருங்க இந்த பாதி ஆப்பிள் துண்ட 1/2 அப்படின்னு எழுதலாம்.எத்தன ஆப்பிள வெட்டுறோம்.

”ஒரு ஆப்பிள மிஸ்.”

”அந்த ஒண்ணுதான் 1/2 ல கீழ இருக்கிற 1.எத்தனை துண்டா வெட்றோம்.”

“இரண்டு துண்டா மிஸ்.அந்த இரண்ட 1/2 வோட கீழ எழுதுறோம்.”

இப்படி சொல்லிக்கொடுத்திருந்தால், நானும் படிக்கும் அந்த நாளிலேயே தசம பின்னத்தை பிரமாதமாய் உணர்ந்திருப்பேன்.எல்லா கணிதங்களையும் அளவுகளையும் உணரும் போது,அதுதான் விஞ்ஞானப் பார்வையின் அடிப்படை.

300 mm கிளியரன்ஸ் என்று படித்ததும் “ஒரு அடி” என்ற அளவு நினைவு வர வேண்டும்.ஒரு மீட்டரென்றால் மூன்றடி தோராயமாக.இப்படியான அறிவை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தால் மட்டுமே சிந்திக்க வைக்க முடியும்.

Fractions ஐ பெரியவர்களும் உணர்ந்து கொள்ள இந்த புதிரைச் சொல்வார்கள்.எனக்கு பிடித்த புதிர் இது.

ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள்.நான்கு நீள்சதுர ரொட்டித்துண்டுகள் இருக்கின்றன.இந்த நான்கு ரொட்டித்துண்டுகளை எப்படி ஐந்தாக பங்கு வைக்க முடியும்.

4/5 என்ற விகிதத்தில் பங்கு வைத்து விடலாம் என்பது கணக்கு.

ஆனால் நடைமுறையில் சிக்கல் இருக்கிறது.ஒவ்வொரு ரொட்டித்துண்டிலும் 1/5 என்ற அளவில்,நான்கிலும் வெட்டி அதை சேர்த்தால் மட்டுமே ஐந்தாவது பிள்ளைக்கு கிடைக்கும்.

ஐந்தாவது பிள்ளை கேட்காதா “ஏன் அவன்களுக்கு எல்லாம் நல்ல ரொட்டித்துண்டு.எனக்கு மட்டும் ஒவ்வொரு ரொட்டியிலும் பிச்சு வெச்ச எச்சி ரொட்டித்துண்டுதான் கொடுப்பியளோ” என்று முகத்தை தூக்கி வைத்துக்கொள்ளாதா?

இடது கையால் நீர் கொடுத்ததால் உயிரையே நீத்த வீரன் வழி வந்த தமிழன் பரம்பரைப் பிள்ளைகள் நிச்சயம் கோபித்துக் கொள்ளும்.

ஆக எல்லோருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்.

என்ன செய்யலாம்?

ஒரு பிள்ளைக்கு 4/5 ரொட்டித்துண்டு என்பதை, இரண்டால் பெருக்கி 8/10 என்று கொள்ளலாமா?

கொள்ளலாமே...

அந்த 8/10 = 5/10 + 2/10 + 1/10 என்று எடுத்துக் கொள்ளலாமா?

கொள்ளலாமே...

சரி 5/10 + 2/10 + 1/10  என்பதை 1/2 + 1/5 + 1/10 ( 5/10 என்பதை வெட்டு கொடுத்து 2/5 ஆக்கியிருக்கிறேன்.அது போலவே 2/10 ஐயும்) என்று எடுத்துக் கொள்ளலாமா ?

கொள்ளலாமே...

இப்போது நான்கு நீள் சதுர ரொட்டித்துண்டுகளையும் டேபிளில் வைத்துக் கொள்ளவும்.

முதல் இரண்டு ரொட்டித்துண்டுகளை பாதி பாதியாக வெட்டிக்கொள்ளவும்.மூன்றாம் ரொட்டித்துண்டில் பாதி வெட்டி வைத்துக்கொள்ளவும்.இந்த ஐந்து பாதிகளையும் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.இந்த ஐந்துதான்.அதாவது 1/2 துண்டுகள், ஐந்து வெட்டியாச்சு இப்ப.

இப்ப மிச்சமிருக்கிறது என்ன? ஒன்றரை ரொட்டித்துண்டுகள்.

அதில் இருக்கும் முழு ரொட்டித்துண்டை எடுத்துக் கொள்ளவும்.

அதை ஐந்து சமபாகங்களாக வெட்டவும்.அந்த ஐந்து துண்டுகளையும் தனியே வைத்துக் கொள்ளவும்.இப்போது 1/5 ரொட்டித்துண்டுகளாக ஐந்து துண்டுகள் வெட்டியாச்சி.

அடுத்து மிச்சமிருக்கும் அரை ரொட்டித்துண்டை எடுத்துக் கொள்ளவும்.நம கணக்குப் படி இதை 1/10 துண்டுகளாக பிரிக்கவேண்டும்.ஒரு ரொட்டித்துண்டை பத்தாக பிரிப்பதும், அரை ரொட்டித்துண்டை ஐந்தாக பிரிப்பதும் ஒன்றுதானே.ஆக அரை ரொட்டித்துண்டை ஐந்து சமபங்காக வெட்டவும்.இப்போது 1/10 துண்டுகள் ஐந்தும் ரெடி.

சண்டை போட்டுக்கொண்டு,நியாயம் வேண்டி நின்ற குழந்தைகள் ஐவரையும் வரிசையாக நிற்க வைக்கவும்.

வரிசையாக ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு 1/2 துண்டும்.ஒரு 1/5 துண்டும்,ஒரு 1/10 துண்டும் கொடுக்கவும்.

ஆளுக்கு மூணு சைசு ரொட்டித்துண்டுகள்.இப்படி ஐந்து பேருக்கு.

முடிந்தது பிரச்சனை... :) :)

நாலு மந்திரிகள்....

தஞ்சை சரஸ்வதி மகால் வெளியீடாக வந்த சுவடி இலக்கியத்தின் ”நாலு மந்திரிகள் கதை”ப் பாடலின் கும்மி வடிவத்தின் கதையை மட்டும் படித்தேன்.கதை வருமாறு.

போதவாதித்தன்,போதவிபூஷணன்,போதவியாகரன், போதச்சந்திரன் என்று நான்கு நண்பர்கள் காட்டுவழியே நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அங்கே வழியில் ஒட்டகத்தின் கால்தடங்களை பார்க்கிறார்கள்.

கொஞ்ச தூரம் போனதும் அங்கே ஒட்டகத்தின் சொந்தக்காரன் அதை தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்து “நீ ஒட்டகத்தையா தேடிக்கொண்டிருக்கிறாய்.உன் ஒட்டகதுக்கு ஒரு கண் கிடையாதுதானே,அதன் வால் மிகவும் குட்டைதானே,அதன் ஒரு கால் ஊனம்தானே என்று நால்வரும் கேட்கிறார்கள்.

ஒட்டகக்காரனுக்கு ஆச்சர்யமாக போய்விட்டது.அவர்கள் சொன்னது அத்தனையும் உண்மை.அவர்கள்தான் திருடர்கள் என்று நால்வரையும் அரசவைக்கு கூப்பிடுகிறான்.அரசன் நால்வரையும் விசாரிக்கிறான்.

- ஆம் ஒட்டகம் ஒரு பக்கமாக புற்களை மேய்ந்திருந்தது.அதனால் அதன் ஒரு கண் பார்வையில்லை என்று கண்டுபிடித்தேன்

-ஆம் ஒட்டகம் போன பாதையில் ஒரு காலின் தடம் சரியாய் பதியவில்லை.அதனால் அது ஊனம் என்று கண்டுபிடித்தேன்.

-ஆம் ஒட்டகம் போன பாதையில் இருந்த ரத்தத்துளிகள்,ஒட்டகத்தை கடிக்கும் ஈயை விரட்ட முடியாத குட்டை வாலை சொல்லிற்று என்றான் ஒருவன்.

அரசன் இதைக்கேட்டு ”ஆஹா இவ்வளவு அறிவாளிகளா?”என்று ஒட்டகக்காரனுக்கு பொன் கொடுத்து அனுப்பிவிட்டு இந்த நான்கு பேர்களையும் மந்திரியாக்கி விட்டான்.

அவர்கள் நால்வரும் “நாலு மந்திரிகள்” என்று பெயர் பெற்றனர்.சீரும் சிறப்புமாக அரசனை நல்லாட்சி செய்ய வைத்தார்கள்.

ஒருநாள் போதவாதித்தன் அம்மனை வழிபடும் போது, ஒரு குரல் அன்றிரவு அரசனை சர்ப்பம் தீண்டும் என்று சொல்கிறது.

போதவாதித்தன் அரசனின் படுக்கை அறையில் ஒளிந்திருக்கிறான்.அங்கே பாம்பு அரசனை தீண்டும் முன் வாளால் வெட்டிக்கொள்கிறான்.

அப்போது பாம்பின் ரத்தத் துளி அரசியின் மார்பில் விழுகிறது.போதவாதித்தன் அதை தன் விரலால் துடைக்கிறான். துடைத்த விரலை வெட்டிவிடுகிறான்.

பாம்பையும் விரலை பத்திரப்படுத்தி வைக்கும் போது, அரசி முழித்து ”அய்யோ தொட்டானே பாவி இவன் என்னை” என்று அலறுகிறாள்.அரசன் விழித்து கொதிக்கிறான்.

போதவாதித்தனை கொல்ல நினைக்கிறான். கொல்வதற்கு முன்னால் போதச்சந்திரனிடம் அலோசனை கேட்கிறான்.

அதற்கு போதச்சந்திரன் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்க வேண்டுமென்று சொல்லி ஒரு கதையை சொல்கிறான்.

1.போதச்சந்திரன் அரசன் அழகேசனுக்கு சொன்ன கதை :

வேடனொருவன் காசில்லாத காரணத்தால் தன் விசுவாசமுள்ள நாயை செட்டியிடம் அடமானம் வைக்கிறான்.அந்தக் காசை எடுத்துக் கொண்டு வெளியூருக்கு கடனை அடைக்கப் போகிறான்.

நாயை வீட்டில் வைத்து செட்டியும் வெளியூருக்கு வியாபாரம் பார்க்க போகிறான். இங்கே வீட்டில் செட்டியின் மனைவி இன்னொரு ஆணோடு தொடர்பு வைத்திருக்கிறாள்.

நாய் இதை கவனித்துக் கொண்டிருக்கிறது.ஒருநாள் அவனை கடித்து கொன்று விடுகிறது.வெளியே தெரிந்தால் பிரச்சனை என்று செட்டியின் மனைவி காதலனை வீட்டின் பின்புறமே புதைத்து வைக்கிறாள்.ஆனால் செட்டி வெளியூரிலிருந்து வந்ததும் நாய் காட்டிக்கொடுக்கிறது அந்த புதைத்த இடத்தை.செட்டி மனைவியை விரட்டுகிறான்.

நாயின் விசுவாசம் கண்டு வியந்து போகிறான்.”உனக்கு சிறை கிடையாது விடுதலை.நீ உன் எஜமானன் வேடனிடமே போ” என்று செல்லமாக அனுப்பிறான்.நாயும் மகிழ்ச்சியுடன் வேடனை பார்க்கப் போகிறது.

அப்போதுதான் வெளியூரிலிருந்து திரும்பும் வேடன் நாயைப் பார்த்ததும் “அட நாயே உன்னை அங்கு அடமானம் வைத்தால் செட்டியை ஏமாற்றிவிட்டா வருகிறாய் என்று நாயைக் கொல்கிறான்.

பின்னர் உண்மை தெரிந்து வருத்தப்பட்டு தற்கொலை செய்துகொள்கிறான்.இதைப்பார்த்த செட்டி தானும் தற்கொலை செய்கிறான்.ஆகவே எதையும் ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது என்கிறான்.

அரசன் அடுத்து போதவிபூஷணனிடம் கேட்கிறான்.

2. போதவிபூஷணன் அரசனுக்கு சொன்ன கதை :

காட்டில் குருட்டு (கதை குருடு என்று வருவதால் அப்படியே சொல்லியிருக்கிறேன்) கணவனோடு வருவது பற்றி சலிப்படைந்த சுயநலக்காரி ஒருவள்,வேறொரு ஆணை கண்காட்டி அவனுடன் போய் விடுகிறாள்.

குருடன் அடர் காட்டில் தவித்து திகைத்து நிற்கையில் அங்கே ஒரு செட்டியும் அவள் மனைவியும் வருகிறார்கள்.குருடன் கதையைக் கேட்டு செட்டி மனைவியை குருடன் கையை பிடித்துக் கொள்ளும்படி சொல்கிறான்.

அவளும் அவன் கைகளைப் பிடித்து காட்டு வழியில் கூட்டிப்போகிறாள்.செட்டி மூட்டைகளை தூக்கி வருகிறான்.நகரத்துக்கு வந்ததும் குருடன் மனம் மாறிவிட்டது.பொய் சொல்கிறான்.

செட்டியின் மனைவியை ”தன் மனைவி” என்று சொல்லி அழுகிறான்.குருடன் கைகளை செட்டியின் மனைவி பிடித்திருந்ததைப் பார்த்து ஊர்மக்களும் அவள் குருடன் மனைவி என்று நினைத்து விடுகிறார்கள்.அரசனும் அதை நம்பி செட்டியை கொல்ல ஆணையிடுகிறான்.

ஆனால் குருடன் அன்றிரவு மனசாட்சியின் தொல்லை தாங்காமல் தனியே தான் செய்த தவறை சொல்லிப் புலம்ப மாட்டிக்கொண்டான்.அநியாயமாக செட்டியைக் கொல்ல பார்த்தோமே என்று சொல்லி அரசன் இறந்து விடுகிறான்.

ஆகவே எதையும் ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது என்கிறான்.

அரசன் அடுத்து போதவியாகரனிடன் கேட்கிறான்.

3.போதவியாகரன் அரசனுக்கு சொன்ன கதை:

வானத்து பட்சி ஒன்று வெளியிலிருந்து மாம்பழம் பறித்து வருவதைப்பார்த்த குடியானவன் அந்த மாம்பழத்தின் விசேஷம் பற்றி கேட்கிறான்.

பட்சி சொல்கிறது “அதை உண்டால் இளமை வரும்” என்று.”அப்படியானால் எனக்கும் ஒன்று வேண்டும் “ என்று கேட்க,

பட்சி பழத்தை கொடுக்க, இதை அரசனுக்கு கொடுப்பேன் என்று சொல்லி அரசனுக்கு கொடுக்க,

அரசன் “இதை சாப்பிடாமல் முளைக்க வைத்தால்,நிறைய பழம் கிடைக்குமே “ என்று சொல்லி முளைக்கப் போட்டான்.

விதை முளைத்து மரம் விரிந்தது.

மாங்கனிகள் பழுத்தன.அதில் ஒரு கனியில் நாகம் விசத்தைக் கக்கி வைக்க, துரதிஷ்டவசமாக அந்த விஷக்கனியை அரசன் பறித்து அவன் உண்ணாமல் அவனுடைய வயதான குருவுக்கு கொடுக்கிறான்.

குரு அதை உண்டு இறந்து விட,அரசன கோபம் கொண்டு குடியானவனை அடித்து நாட்டை விட்டு விரட்ட, குடியானவன் விஷப் பழத்தைக் கொடுத்த பட்சியை வெட்டிக்கொல்கிறான்.

மற்றொரு நாள், நாட்டில் உள்ள ஒரு மாமியார் மருமகளுக்கு சண்டை வருகிறது.தற்கொலை செய்வதற்காக மாமியார் விஷமரம் என்று சொல்லப்படும் அந்த மரத்தில் இரு பழத்தை எடுத்து உண்கிறாள்.இளமையாகி விடுகிறாள்.

இதைக்கண்ட அரசன்,தான் கொடுத்த கனி மட்டுமே விஷம்.எல்லாக் கனிகளும் இல்லை என்று வேதனைப்பட்டு உயிர் துறக்கிறான்.

அரசனைக் கொன்றுவிட்டோமே,பட்சியை கொன்று விட்டோமே என்று சொல்லி குடியானவனும் உயிர் துறக்கிறான்.

ஆகவே எதையும் ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது என்கிறான்.

முடிவில் போதவாதித்தியன் தன் விரலையும் வெட்டப்பட்ட பாம்பையும் அரசனுக்கு காட்டுகிறான்.

அதைக் கண்ட அரசன் ”நானும் உன்னை தவறாக நினைத்து கொல்லப்பார்த்தேனே” என்று சொல்லி வருந்துகிறார்ன்.

எந்த விசயத்தையும் ஆராயாமல் முடிவெடுக்கக் கூடாது என்பதைத்தான் நாலு மந்திரிகள் கதை சொல்கிறது.

ஜெமோ எஸ்.ரா சாரு உயிர்மைக்கு வந்த கதை...


எனக்கு தெரிந்த அரசியலை சொல்ல முயற்சி செய்திருக்கிறேன்.கூடுதல் குறை இருக்கலாம்.

-தான் ஒரு கேளிக்கை எழுத்தாளர் என்று மக்கள் தன்னை அடையாளம் காட்டுவது கண்டு,அதை மாற்றலாம் என்ற எண்ணத்தில் சுஜாதா தன்னை ஒரு தீவிர இலக்கிய பத்திரிக்கையோடு அடையாளப்படுத்திக்கொள்ள நினைக்கிறார்.

கணையாழியில் எழுதினாலும் கூட அவருக்கு திருப்தியில்லை.சுந்தர ராமசாமியின் காலச்சுவடு குழுமத்தில் இணைய முயற்சி செய்கிறார்.

சுந்தர ராமசாமி அதை அனுமதிக்கவில்லை.சுஜாதாவுக்கு அது வருத்தும்.தன்னுடைய கட்டுரையொன்றில் நாகர்கோவிலைக் கடக்கும் போது சு.ரா வீட்டுக்கு போகலாமா வேண்டாமா என்று யோசித்தேன் என்று சொல்கிறார்.அவர் விளையாட்டாய் அதைச் சொன்னால் கூட அவருடைய வருத்தமாக அதை புரிந்து கொள்ளலாம்.

-மனுஷ்யபுத்திரன் காலச்சுவடில் சு.ராவின் சீடனாக சேர்ந்து,அப்புறம் கண்ணனின் நண்பனாக ஆகிறார்.(உயிர்மை குழுமத்தார் இதை கண்ணன் மனுஷ்யபுத்திரனுடைய நண்பனார் என்று வாசித்துக் கொள்ளவும்).அவர்கள் இருவரும் இணைந்து காலச்சுவட்டை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துப் போய் வளர்க்கிறார்கள்.

-மனுஷ்யபுத்திரனுக்கும்,கண்ணனுக்கும் சின்ன மனவேறுபாடுகள் வர, மனுஷ்யபுத்திரன் நீதியை எதிர்பார்த்து சு.ராவிடம் கதற,சு.ராவோ மவுனமாக இருக்கிறார்.

இதனால் மேலும் மனுஷ்யபுத்திரன் மனக்கஷ்டப்பட்டு காலச்சுவடை விட்டு வெளியேறுகிறார்.( இது மனுஷ்யபுத்திரன் ஒரு பேட்டியில் சொல்கிறார்.கண்ணன் பார்வையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை)

- ஏற்கனவே சு.ராவால் நிராகரிக்கப்பட்ட சுஜாதாவும்,லேட்டஸ்டாக வெளியேறிய மனுஷ்யபுத்திரனும் இணைகிறார்கள்.”இவங்க எப்பவுமே இப்படித்தாண்டே.வாடே நாம புதுசா ஆரம்பிக்கலாம் என்று சொல்லி உயிர்மை இலக்கிய இதழ் வருகிறது.

சுஜாதா கூட மேற்கத்திய இசை பற்றி வெகு சுமாரான கட்டுரைகள் எல்லாம் எழுதுகிறார்.

-உயிர்மை குழுமத்தின் முக்கிய தளபதிகளாக மனுஷ்யபுத்திரன் முதலில் வைத்திருந்தது எஸ்.ராமகிருஷ்ணன்,சாரு நிவேதிதா,மற்றும் ஜெயமோகன்.

-எஸ்.ராமகிருஷ்ணன் யாரிடமும் மோதலுக்கு போகாத புத்தன் புத்தியை கொண்டவரானாலும்,அவருக்கான வெளியை காலச்சுவடு கொடுக்கவில்லை என்று நினைக்கிறார்.

தான் ஒரு குழுமத்தின் முக்கிய தளபதியாக இருக்கலாம் என்று நினைக்கிறார்.அதனால் உயிர்மையின் முதல் தளபதி பொறுப்பை ஏற்கிறார்.ஒ.பன்னீர்செல்வம் அம்மாவுக்கு பணிவாக இருப்பது போல இவர் உயிர்மைக்கு காலம் முழுவதும் பணிவாக இருப்பார் என்பதை உறுதியாக சொல்லலாம்.இவரை பெரிய ஆரட்டராக ( orator) உயர்த்திய பெருமை மனுஷ்யபுத்திரனைச் சாரும்.

-சாரு நிவேதிதா.இவர் ஜே.ஜே சில குறிப்புகளை நெக்கு வாங்க அடி அடியென்று அடிக்க ( மேம்போக்காததான்) அதனால் அவருக்கும் காலச்சுவடுக்கும் எப்போதும் ஆகாது.

ஆனாலும் சாரு சு.ராவுக்கு எடுபுடி வேலையெல்லாம் செய்து அங்கே இணைய முயற்சி செய்கிறார்தான்.அவரை கண்டுகொள்ளவில்லை.

ஒருமுறை காலச்சுவடு “தமிழ் இனி” விழா நடக்கும் போது சாருவே போன் போட்டு கேட்கிறார்

“என்னைக் கூப்பிடவில்லையா? “ என்று.

அதற்கு தமிழ் இனி” குழுவினர் “ஸ்பானிஷ் இனி” விழா நடந்தால் கூப்பிடுகிறோம் என்றார்களாம் (இது என் பகடி இல்லை.உண்மை).

இப்படியெல்லாம் பேசினால் தன்மானன் சாரு எப்படி தாங்குவார்.அதனால் அவர் திகைத்து “என்னடா செய்றது ஏழுமலை” என்றிருக்கும் போது,

மனுஷ்யபுத்திரன் “வாங்க பழகலாம் சாரு! நான் ஒரு இலக்கிய பத்திரிக்கை வெச்சிருக்கேன்.அங்க எழுதுங்க.பயங்கரம்,உலகத்தரம் என்றெல்லாம் போட்டு எழுதுங்க” என்கிறார்.

விளைவு சாரு மனுஷ்யபுத்திரனை உலகக்கவிஞர் என்கிறார்.ஒரு மரம் பின்வாசல் வழியே நடந்து வந்து காபி குடிச்சியா என்று கேட்ட கவிதையை அதற்கு உதாரணம் சொல்வார் தலைவர் சாரு.

இப்படி உயிர்மையின் முக்கிய அடியாளாக சாரு விளங்க ஆரம்பித்தார்.அருந்ததிராய் தன் புத்தகத்தை உயிர்மை மொழிபெயர்ப்புக்கு கொடுக்கும் போது அவரை புகழ்ந்தும்.அது பிறகு காலச்சுவடுக்கு போன பிறகு “அருந்ததி ராய் அற்ப பதர்.கள்ளக் காப்பி” என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்.

-ஜெயமோகன் கதையைப் பார்ப்போம்.

ஜெயமோகன் சு.ராவின் சிஷ்யர்.அவர் எப்படி வெளியே வந்தார்.சு.ராவுடன் பகுத்தறிவு கொள்கையைக் கற்ற ஜெயமோகன்,

அதைத்தாண்டியும் உலகம் உள்ளது என்று நம்பினார்.

அப்படியே நித்ய சைத்ன்ய யதி (ஸ்பெல்லிங் கரெக்டா) மேல் பக்தி கொண்டார்.

அவரைப்பற்றி சு.ராவிடம் தொடர்ந்து பேசுகிறார்.சு.ராவுக்கு அதில் பிடிப்பில்லை.ஆனால் ஜெ.மோ விடவில்லை.

காலச்சுவடில் அது பற்றிய ஒரு கட்டுரைய எழுத முயற்சி செய்கிறார்.கட்டுரை நீளமாக போகிறது.கண்ணன் கட்டுரை நீளம்,குறைத்துத் தாருங்கள் என்று கேட்க,

ஜெயமோகன் “எவ்வளவு அதிகமாக கட்டுரை வருகிறதோ,அவ்வளவு பக்கங்கள் அதிகப்படுத்துங்கள்.அதற்குள்ள காசை நான் தருகிறேன்” என்றார்.

அவ்வளவு பாசம் சாமியார் மேல்.

ஆனால் கண்ணன் “நாங்க இதழ் நடத்துறோமா ?அல்லது Dtp சர்வீஸ் நடத்துறோமா” என்று சூடாக கேட்க,

ஜெயமோகன் தான் பிரியும் வேளை வந்து விட்டதாக நினைக்கிறார்.

சோகத்துடன் பிரிந்து வெளியே வருகிறார்.வந்தது மனுஷ்ய புத்திரன் “வாங்க பழகலாம்” என்கிறார் புன்னகையோடு.

-இதுவே ஜெயமோகன்,சாருநிவேதிதா,மற்றும் எஸ்.ரா உயிர்மைக்கு வந்த கதை

:) :)

பூனை மருத்துவர்...

கிட்டத்தட்ட எண்பது வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் வாழ்ந்த, உலகின் முதல் ”பூனைகளின் மருத்துவர்” லூயிஸ்.ஜே.கமுட்டி (Louis j camuti) என்பவரின் சுவாரஸ்யமான நினைவுகளின் ஒரு பகுதி.

இப்போது டாக்டரே பேசுகிறார்.

//// என்னை சந்திக்கும் புதிய நண்பர்களும்,பூனைகளின் சொந்தக்காரர்களும் என்னிடம் தவறாமல் கேட்கும் கேள்வி “இந்தத் துறையை நீங்கள் விரும்பி எடுத்தீர்களா? அல்லது வாழ்க்கை இதை உங்கள் மீது திணித்ததா?.

நான் 1920 களில் இருந்து 1980 வரை பிராக்டிஸ் செய்துள்ளேன்.எனக்கு பிடிக்காத கேள்வி என்றால் இதுதான்.

சிறுவயதில் வீட்டில் இருக்கும் போது,ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் அம்மா, திடீரென்று வீட்டை விட்டு வெளியே ரோட்டுக்கு பாய்ந்தார்.

நாங்கள் பயந்து ஜன்னல் வழியே அம்மாவைப் பார்த்தோம்.

அங்கே ரோட்டில் குதிரையை சவுக்கால் அடித்துக் கொண்டிருந்த கட்டுமஸ்தான குதிரைக்காரனை நோக்கி அம்மா கத்திக் கொண்டிருந்தாள்.அம்மாவை விட அவன் மிக்க பலசாலி ஆனால் அம்மாவின் வெறிகொண்ட சத்தத்தால் அவன் அடங்கியிருந்தான்.

”எப்படி குதிரையை இப்படி அடிப்பாய்” என்று அம்மா அவனை குதிரை வண்டியோடு தள்ளி விட்டு அடித்து விட்டு வந்தாள்.வீட்டுக்கு வந்தும் கூட அம்மாவின் ஆவேசம் அடங்கவில்லை.

எங்களைப் பார்த்து சொன்னாள் “நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள்.”கடவுள் மனிதர்களையும் படைத்தார்.மிருகங்களையும் படைத்தார்.இருவரும் பரஸ்பரம் அமைதியாக வாழ வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம்.இதில் ஒருவருக்கருவொர் மேம்பட்டவர்கள் அல்ல.சமம்தான்.இதில் வலுவுள்ளர்கள் வலுவில்லாதவர்களை அன்போடு பாதுகாக்க வேண்டும்.ஒரு மிருகத்தை காயப்படுத்துவதைப் போன்ற கொடுமையும் பாவமும் உலகத்தில் கிடையாது”.

அம்மா சொன்னது எங்கள் மனதில் இறுகி ஒட்டிக்கொண்டது.ரோட்டில் செல்லும் போது பேஸ்பால் வீரர்கள் சிலர் ஒரு பூனைக்குட்டியை தூக்கி போட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு முறை அதை மேலே தூக்கிப் போடும் போதும் அது ”ஹேய்ங்” பயத்தில் கத்துவதை பார்த்து ரசித்து சிரிப்பார்கள்.நான் துணிந்து அவர்களிடமிருந்து அந்தப் பூனையை மீட்டு வீட்டுக்கு கொண்டுவந்தேன்.

அதற்கு ”சி-நின்” என்று பெயர் வைத்தோம்.முதல் இரண்டு நாட்கள் சி-நின் மனிதர்களைப் பார்த்தாலே பயந்து ஒடியது.அதன் பிறகு என் மீது நம்பிக்கை வைத்து என்னையே சுற்றிச் சுற்றி வந்தது சி-நின்.

நான் வீட்டுக்குள் நுழைந்ததுமே என்னை தொற்றிக் கொள்ளும்.என்னுடனே கட்டிலில் படுத்து தூங்கும்.சில சமயம் அதை செல்லமாக விரட்டியடிப்பேன்.ஒடும்.அடுத்த இரண்டு நிமிடத்தில் என்னருகே அமர்ந்து கொள்ளும்.

இந்தக் கட்டத்தில் திடீரென்று எனக்கு டைஃபாய்ட் ஜூரம் வந்து படுத்த படுக்கையானேன்.என் உடல் இளைத்து அசைக்கவே முடியாத நிலமைக்கு ஆளானேன்.

அப்போதெல்லாம் சி-நின் தான் எனக்கு துணை.என்னுடன் விளையாடிக்கொண்டே இருக்கும்.நான் ரொட்டியை பிய்த்து சாப்பிடப் போகும் போது அதை தட்டி பறிப்பது மாதிரி தன் பாதத்தை வீசுவது அதற்கு பிடித்த விளையாட்டு.

நான் படுத்த படுக்கையாய் சோர்வுடன் இருக்கும் நாளில், அம்மா ஸ்டவ்வில் ஏதோ சூப்பை வைத்து, தீயை பற்ற வைத்தாள்.

நான் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறேன்.

அம்மா ஸ்டவ்வை அணைக்க மறந்து,பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டாள்.

நன்றாக தூங்கிக் கொண்டிருந்த என் போர்வையை யாரோ இழுத்த உணர்வு வர, கஷ்டப்பட்டு கண் விழித்துப் பார்த்தேன். என் போர்வையை இழுத்து என்னை எழுப்பி கத்திக் கொண்டிருந்தது சி-நின்.

வீடெல்லாம் புகை மண்டலம்.என்னால் எழும்ப முடியவில்லை.இன்னும் ஐந்து நிமிடம் இந்த புகை மண்டலம் இருந்தால் நான் மூச்சு திணறி இறந்திருப்பேன்.நல்ல வேளை அம்மா துடித்து ஒடி வந்து ஸ்டவ்வை அணைத்து என்னைக் காப்பாற்றினாள்.

இந்த சம்பவத்தில் என்னைக் காப்பாற்றியது அம்மா என்றாலும். என்னைக் காப்பாற்ற முயன்ற சி-நின் நினைத்து மனம் உருகினேன்.

புகை மண்டலம் வரும் போது சி-நின் நினைத்தால் என்னை விட்டு வெளியே ஒடிப்போய் தன் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்.ஆனால் என் செல்லப்பூனை அதை செய்யாமல் என்னைப் பற்றி, என் உயிரைப்பற்றி கவலைப்பட்டது.

”சி-நின்”  பூனைகளுக்காக சேவை செய்யும் விதையை என்னுள் விதைத்திருக்கலாம்.

”நீங்கள் விரும்பியா பூனைகளுக்கு மருத்தவம் பார்க்கிறீர்கள்?” என்று யாராவது என்னிடம் கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்லுவதற்க்காக இரண்டு நிமிடங்களை வீணாக்கும் மனநிலையில் நானில்லை”.

"All my patients are under my bed" by Dr.Louis J. camuti  என்ற புத்தகத்தில் வரும் பகுதி....

இருபத்தி மூன்று வயது கலக்கம்...

இருபத்தி மூன்று வயதில் ஒரு விசயத்திற்காக அழ வேண்டியதாய் போயிற்று.

அலுவலகத்தில் வேலை பார்த்த பெண்ணிடம் நட்பாயிருந்தேன்.

அவரை எனக்கு பிடிக்கும் என்றால் ரொம்பப் பிடிக்கும்.
அதை காதல் என்றே சொல்லலாம்.

என்னை விட மூன்று வயது அதிகம்.அடுத்து எனக்கு காதல் என்றெல்லாம் செய்து கமிட் ஆகிக் கொள்வதில் எப்போதும் விருப்பமிருந்ததில்லை.ஆனால் அந்தப் பெண்ணிடம் எமோசனலாக மாட்டிக்கொண்டேன்.

எப்போதும் அவரிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றும்.அவர் சாப்பிடும் போது கூட போய் பேசித் தொல்லை செய்வேன்.

அவருக்கும் என்னை பிடித்தே இருந்தது.மற்றவர்களை விட என்னிடம் அதிகம் பேசியது மாதிரிதான் அன்பாயிருந்தது மாதிரிதான் இருந்தது.

அந்தப் பெண்ணோடு காலேஜில் படித்த நிறைய நண்பர்களும், எங்கள் கூடவே வேலை பார்த்தார்கள்.

ஒருநாள் அந்த பெண் என்னைக் கூப்பிட்டு” குமார்  வீடு கிரகப்பிரவேசம் கொளத்தூர்லதான் நடக்குது.எனக்கு வழி தெரியாது.என்ன கூட்டிட்டு போறீங்களா? “ என்று கேட்டார்.

உடனே சரியென்று தலையசைத்தேன்.அந்த நிகழ்வை எண்ணி உள்ளமெல்லாம் பூரித்துக் கிடந்தேன்.

நான் பாதை வழி விசயத்தில் ரொம்ப வீக்.அதனால் முதன் நாளே அந்த நண்பர் வீடு வரைக்கும் சென்று வழியெல்லாம் எப்படி என்று பார்த்து வைத்துக் கொண்டேன்.

மறுநாள் காலை அவர் குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்புக்கு வர,ஆட்டோ பிடித்து நண்பர் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

அங்கே நாங்களிருவரும் ஒன்றாய் வாழ்த்தினோம்.ஒன்றாய் சாப்பிட்டோம்.இது மாதிரி ”ஒன்றாய்” என்பது என் மனதில் சொல்லமுடியாத கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது.

நானே அப்போது இல்லை.காற்றில் கரைந்தது மாதிரி உணர்வு.

அதன் பின் அண்ணா நகர் வந்து 24 ஏ வந்து பேசிக் கொண்டே அலுவலகம் வந்து சேர்ந்தோம்.அந்த டிராஃபிக்கில் ஒன்றரை மணி நேரம் பஸ் பிராயணம் போனதே தெரியவில்லை.

அவர் சிறுவயதிலிருந்தே தான் வாழ்ந்த வாழ்கையைப் பற்றி விளக்கமாக சொல்லிக் கொண்டு வந்தார்.இப்படி மனம் விட்டு பேசி நாளாச்சி என்றும் சொன்னார்.

நான் நெகிழ்ந்தேன்.இருவரும் அலுவலகம் வந்து சேர்ந்தோம்.

இங்கேதான் டுவிஸ்ட்.

அலுவலகம் வந்து சேர்ந்ததும், அவர் என்னைப் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நான் பார்த்து சிரித்தால்கூட சிரிக்கவில்லை.எனக்கு குழப்பம்.”பஸ்ஸில் பார்த்த ஆளா இவர்” என்று குழம்பிப் போனேன்.என்னால் அந்த திடீர் ஒதுக்குதலை தாங்க முடியவில்லை.

அன்று மதியம் ஒரு உருண்டை சோறு கூட  இறங்க வில்லை.மனசெல்லாம் இறுக்கி அடைத்த பஞ்சு மாதிரி இருந்தது.

ஏன் அப்படி? நான் எதாவது அவமானப்படுத்தி விட்டேனா? நான் ஏதாவது தவறுதலாய் சொல்லி விட்டேனா?

அன்று மாலை அவரிடம் சென்று கேட்டே விட்டேன்.

“ஏன் என் கிட்ட சரியா பேச மாட்டேங்கிறீங்க”

“இல்லையே நார்மலாத்தானே பேசுறேன்”

“இல்லையே ஒதுக்குனது மாதிரி இருக்குது”

“சரியா போச்சி அப்படியெல்லாம் நினைக்காதீங்க”

நான் உணர்வு பொங்க உளறினேன்.

“நான் உங்களுக்கு ஸ்பெசல்தானே”

“இல்லையே நான் பேசினேனே”

“மாத்தாதீங்க.நான் உங்களுக்கு ஸ்பெசலா ஸ்பெசல் இல்லையா? அதுக்கு பதில் சொல்லுங்க”

“அது என்னங்க ஸ்பெசல்.எல்லா ஃபிரண்ட்ஸு மாதிரி நீங்களும் ஒரு ஆள்தான்.ஸ்பெசல் எல்லாம் கிடையாது” என்று பளிச்சென்று சொல்லிவிட்டார்.

என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.போய் ரெஸ்ட் ரூமுக்கு சென்று கதவை தாழிட்டேன்.

“துள்ளாத மனமும் துள்ளும்” விஜய் போலெல்லாம் அழவில்லை.ஆனால் கண்களில் கண்ணீர்க் கொட்டிற்று.துடைக்க துடைக்க வந்தது.

என்னை யாரோ ஏமாற்றியது மாதிரி நினைத்தேன்.எனக்கு துரோகம் செய்ததாக நினைத்தேன்.

அதன் தொடர்ச்சியாக ஆணாதிக்க மன்ப்பான்மை அதிகமாகி ஒரு சபதம் எடுத்தேன்.அந்த சபதம் என்னவென்றால் “இனிமேல் பொண்ணுங்களுக்காக நாம் அழக் கூடாது.நாமதான் பொண்ணுங்கள அழ வைக்கனும்”.

இதெல்லாம் அடிமனதில் இருக்கும் ஆதிக்க மனப்பாண்மையிலிருந்து வந்ததுதான்.

அப்புறமும் அந்தப் பெண்ணிடமிருந்து விலக முடியாமல்,அவரைப்  பற்றி பேசி பேசியே நிறைய நண்பர்களை போரடித்தேன்.பின் காலப் போக்கில் எல்லாவற்றையும் மறந்து விட்டேன்.

ஆனால் இப்போது திருமணமாகி குழந்தையும் பெற்ற பிறகு,

அந்த சம்பவத்தை யோசித்தால், ஏன் அவர் என்னை கண்டு
கொள்ளவில்லை என்று நினைத்தால் அவர் மேல் வாஞ்சைதான் வருகிறது.

அவருடன் படித்த நண்பர்கள் எல்லோரும் கூடவே வேலை பார்க்கிறார்கள்.

அவர்களோடு கிரகப்பிரவேசத்துக்குப் போகாமல் என்னோடு வந்தததினால் மற்ற நண்பர்கள் ஏதாவது “கதை கட்டி விடுவார்களோ” என்ற பயத்தில் இருக்கலாம்.

அந்த ”கதை கட்டுதலுக்கு” பயந்து “பார் இவன் சிறுவன்.இவனோடு நான் பேசி குழைந்து சிர்க்கவெல்லாம் இல்லை.நான் விழாவுக்கு போனேன்.
வந்தேன்.அவ்வளவுதான்.வேறொன்றும் இல்லை” என்று நிருபிப்பதற்காக என்னை அவாய்ட் செய்திருக்கலாம்.

ஆம் அதற்குதான் செய்திருக்க வேண்டும்.

ஒரு ஆணுடன் தனியே ஒரு இடத்துக்கு சென்று வர, பெண் எத்தனை பேருக்கு தன்னை நிருபிக்க வேண்டியதிருக்கிறது.

அந்த கட்டுப்பாட்டால் அவள் என்னைப் போன்ற எத்தனை அப்பாவிகளின் மனங்களை காயப்படுத்த வேண்டியிருக்கிறது.

இருந்தாலும் அப்போது நான் அழுததை நினைத்தால் “பப்பி ஷேமாகத்தான்” இருக்கிறது :) :)

பேச்சு சிதைத்த குறிக்கோள்கள்...

ஒரு கதை எழுதிட்டிருக்கேன்.

ஒரு புத்தகம் கொண்டு வரலாம்ன்னு இருக்கேன்.

வேலை செய்துகிட்டே அப்படியே சைடு ஒரு கன்சல்டன்சி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.

ஃபாரின் டிரை பண்ணிட்டுதான் இருக்கேன்.சீக்கிரம் கிளம்பிடுவேன்.

இப்படி "சாதனை" அல்லது "செயல்" செய்யும் முயற்சியை அடுத்தவரிடம் சொல்வதிலேயே அந்த சாதனையையோ அல்லது செயலையோ செய்துவிட்ட உணர்வை நம்மில் பலர் அடைந்து விடுகிறோம்.

சில சமயம் இப்படி சொல்லித்திரிவதின் மூலம் நம் தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்கிறோம்.

நான் பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் போது என்னைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.ஏனென்றால் எனக்குதான் கட் ஆஃப்,எண்டிரன்ஸ் எக்ஸாம்,கவுன்சிலிங், பிரபல காலேஜ்கள் எல்லாம் தெரியும்.காரணம் என் அண்ணன்கள் பொறியலும் மருத்துவமும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களிடமிருந்து நான் பெற்ற தகவல்களை அடித்து விட்டுக்கொண்டிருப்பேன்.எல்லோரும் என்னைச் சுற்றிக் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

அதனாலேயே எனக்கு ஒரு மதிப்பு இருந்தது.என்னுடைய முயற்சிகளை சொல்வதாலேயே சாதனையை அடைந்துவிடுவேன் என்ற குருட்டு நம்பிக்கையை என் மனம் பெற்றிருந்திருக்கக் கூடும்.

கடைசியில் எக்சாம் ரிசல்ட் வந்து என்னைத்தவிர அனைவரும் என்ஜியனியரிங் காலேஜ் சேர்ந்தார்கள்.

நான் மட்டும் டிப்ளமா சேர்ந்தேன்.பள்ளி பருவத்தில் அடித்த சவுடால்களை எண்ணி எண்ணிரொம்ப நாள் சோர்ந்திருக்கிறேன்.

இதைத்தான் சொல்கிறேன் நான் செய்யும் முயற்சியை தேவையில்லாமல் டமாரம் அடித்தல் தேவையில்லாத செயல்.

சரி.எப்போது இது மாதிரி முயற்சிகளை சொல்லலாம்.

-ஒரு தூண்டுதலுக்காக சொல்லலாம்.அதுவும் நம்முடைய உண்மையான வெல் விசரிடம் மட்டுமே சொல்ல வேண்டும்.அப்படி சொல்லும் பட்சத்தில் நமக்கு ஒரு தூண்டுதலாக,பாசிட்டிவ் எனர்ஜியாக இருக்கும் பட்சத்தில். ஒரு பெஞ்ச் மார்க்கை முடித்து அதுபற்றி பேசினால் இன்னும் மனம் உற்சாகமடையும் என்கிற பட்சத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.

-அதை பொதுவில் பகிர்ந்து கொள்ளும் பட்சத்தில் பலர் உதவ முன்வந்தால் பகிர்ந்து கொள்ளலாம். “நான் இது பற்றி ஆராய்ச்சி செய்யப் போகிறேன்" என்று சொல்லும் போது பலர் உதவ முன்வரும் போது முயற்சிகளை சொல்லலாம்

-விளம்பரம் கிடைக்கும் போது அதைச் சொல்லலாம்.எதிர்பார்ப்பை உருவாக்குவதற்கு இந்த டமாரத்தை பயன்படுத்தலாம்.

இந்த காரணத்தை தவிர சும்மா பிறரை அசத்துவதற்காக அல்லது கடுப்பேத்துவதற்காக அல்லது சிறிய சந்தோசத்திற்காக எல்லாம் டமாரம் போடத் தொடங்கினால் நீங்கள் தவறான பாதையை நோக்கி பயணம் செய்கிறீர்கள் என்று பொருள்.

நிச்சயமாக சொல்லமுடிகிறது என்பதால் இதை நிச்சயமாக சொல்கிறேன்... 

ஆவிகட்டுதல் என்ற கட்டிப்பிடித்தல்....

அணைத்துக் கொள்ளுதல், அல்லது இறுக்கக் கட்டிப் பிடித்தலை ஊர் பக்கம் “ஆவி கட்டுதல்” என்பார்கள்.

அப்படியே ”அவள ஆவிகட்டிகிட்டேன்” என்று சொன்னால் காற்று கூட புக முடியாத படி கட்டிபிடித்துக் கொண்டேன் என்று அர்த்தம்.

அந்த காலத்தில்,எங்கள் ஊரில் ,ஆண்கள் கொழும்புவுக்கு போய் சம்பாதிப்பார்களாம்.ஆறு மாதம் ஒருமுறை ஊருக்கு திரும்பி இரண்டு மாதம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு பின் மறுபடியும் கொழும்புவுக்கு சென்று வியாபாரம் செய்வார்களாம்.

அப்படி ஒரு ஆண் ஆறுமாதம் கழித்து ஊருக்கு வரும் போது, கூட்டுக்குடும்பத்தில் உள்ள அவர் மனைவி ”வளவில் ரெஸ்ட் எடுக்கும் கணவனுக்கு” அடிக்கடி காபி கொடுப்பதும்,அவித்த சிறுபயிறைக்கொடுப்பதுமாய் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்திருக்கிறார்.

இது மாமியாருக்கு பிடிக்கவில்லை.ஊர் பக்கம் இது மாதிரி நிறைய மாமியார்களைப் பார்க்கலாம்.மருமகளைப் பிடித்து ஏசியிருக்கிறார்.

“நீ என்ன எப்பவும் அவனையே சுத்தி சுத்தி வந்திட்டிருக்க.வேலை செய்”

“யத்தே அவிய தான் காபி கேக்குறாவ.அதான் காபிகூட்டும் காபியும் கொடுத்தேன்.”

இப்போது மாமியார் எல்லார் முன்னாலும் கத்துகிறார்

“நீ அவனுக்கு காபிக்குடுக்கவா போற. அப்படியே ஆவிகட்டிக்கிடலாம்ன்னுதான போறா”

இதைக்கேட்டு மருமகளுக்கு அவமானமாகப் போய்விட்டது.இருந்தாலும் மருமகள் அசரவில்லை.மாமியார் சொன்ன அதே ஸ்பீடில் ரிப்பீட் அடிக்கிறார் இப்படி.

“யத்த! நீங்கள்லாம் மாமாவ ஆவிகட்டாமத்தான் அஞ்சு பிள்ளையள் பெத்தியளோ”

மாமியார் பதிலே சொல்லாமல் இடத்தைக் காலி செய்கிறார்.

”ஆவிகட்டுதல்” 

மைலாப்பூர் இடைத்தேர்தல்...

1994 ஆம் ஆண்டு மைலாப்பூரில் நடந்த இடைத்தேர்தல் பற்றிய பதிவுகளை, பார்ப்பவர்களின் மனதில் நிறுத்துகிறது. ஆர்.வி ரமணியின் “நமது சின்னம்” என்ற ஆவணப்படம்.

ஆர்.வி ரமணியின் இயக்கத்தில் கேமரா திட்டமிட்டு படமெடுக்காது.
ஒரு ஜோடி கண்கள் சுதந்திரமாக எப்படி அலைபாயுமோ அது மாதிரியே கேமரா அலைபாயும்.காட்சிகளும் கூட.

ஆனால் படத்தின் இறுதியில் ஏதோ ஒன்றை மனதில் ஏற்றி வைத்து விடுவார்.

பாவைக் கூத்து பற்றிய ஆவணப்படத்தில் வண்டியில் பாவைக்கூத்து நடத்தும் பொருட்களை ஏற்றி ஊர் ஊராக செல்லும் கலைஞர் ஒருவரைப் படம் பிடிக்கும் போது மழை பெய்தது.

சிவதாண்டவமான கொடுமழை அது.

அந்த மழையில் வண்டியிலிருந்து எல்லோரும் நனைகிறார்கள்.ஆர்.வி ரமணி அதையும் படம்பிடித்திருப்பார். ஒரு பாவைக் கூத்துக் கலைஞன் படும் அவஸ்த்தையை அதை விட கச்சிதமாக பார்ப்பவர் மனதில் பதிய வைக்க முடியாது இதுவே ஆர்.வீ.ஆரின் யுத்தி.

யதார்த்திலிருந்து காட்சிகளை உருவுவார்..

1.1994 மைலாப்பூர் இடைத்தேர்தலுக்கு முன்புதான் வைகோ திமுகவிலிருந்து பிரிந்து பல பிரச்சனைகள் வந்து,

மதிமுக உதயமாகிறது.மதிமுக வின் மாநாட்டு ஊர்வலமும் ஆவணப்படத்தில் வருகிறது. ராணுவ ஊர்வலம் போல வரும் இளைஞர்கள் கூட்டமது.மிகப்பெரிய எனர்ஜியை அன்று வைகோ வைத்திருந்திருக்கிறார் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி.

2.சுயேட்சை வேட்பாளர்கள் வரும் காட்சி சுவாரஸ்யமானது.ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு ஒரே ஒருவர் நிற்கும் படியான குட்டி மேடை போட அனுமதி கிடைக்கிறது.அவர் அதில் நின்று கொண்டு பேசுகிறார்.

யாருமே அதைக் கேட்கவில்லை.ஆனாலும் அவர் பேசுகிறார்.அவருக்கு காவலாக ஒரு போலீஸ்காரர் நிற்கிறார்.அப்படியே கார் பைக்கில் போகும் நபர்கள் பார்த்தால் சுயேட்சை “இங்க பாக்காதீங்க போய் கிட்டே இருங்க” என்று சொல்கிறார்.

3.இன்னொரு சுயேட்சை வேட்பாளர் சைக்கிளில் தனிஆளாக பயணம் செய்து பிரச்சாரம் செய்கிறார்.” மகக்ளே பணம் கொடுத்து பிரபலமாக இருப்பவரைத்தான் நீங்கள் அடையாளம் கண்டு கொள்கிறீர்கள்.அது தப்பான விசயமாகும்” என்று வேண்டுகோள் வைக்கிறார்.

4.அப்போது அதிமுகவின்ஆட்சி என்பதால் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய வரும் போது மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.பெண்கள் எல்லோரும் வீட்டு வாசலில் வரவேற்பு கோலங்களிட்டு ஜெயலலிதாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கின்றனர். முதல்வரிடம் மனுக்களைக் பொதுமக்கள் கொடுக்க பொறுமையாக வாங்கிக் கொள்கிறார்.

5.திருநாவுக்கரசர் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து ஜெயலலிதாவை தீவிரமாக எதிர்க்கிறார்.

6.கருணாநிதி தன் வழக்கமான கிண்டல் தொனியிலியே பேசுகிறார்.“ நான் உங்களை ஒட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொல்லவில்லை.ஆனால் பார்த்து வாங்குங்கள் என்றுதான் சொல்கிறேன்.அம்மையார் மூக்குத்தி கொடுத்து கொடுத்து ஒட்டு வாங்குவதாக கேள்விப்படுகிறேன். உங்களுக்கு லட்டு கொடுப்பது மாதிரி கொடுப்பார்கள். உள்ளே லட்டை உடைத்துப் பார்த்தீர்களானால் அதில் மூக்குத்தி இருக்கும்.அதாவது ஒரே விலையுள்ள மூக்குத்தி இருக்கமா என்று கேட்டால் இருக்காது. ஏழைகளுக்கு எளிய மூக்குதித்தி, இன்னும் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கு விலையுயர்ந்த மூக்குதியாம்.ஆகையால் உங்களுக்கு கிடைக்கும் லட்டை உடைத்துப் பார்த்து பின்பு ஏற்றுக் கொடுங்கள்” என்கிறார்

7.அதிமுக பாடகர் எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடுகிறார்.அதற்கு மகளிரணியினர் நடனம் ஆடுகிறார்கள்.அவர்கள் நடனத்தை எப்படி தொடங்குகிறார்கள் என்பதை மிக அழகாக ஆவணப்படத்தில் காட்டிருக்கிறார்.

8.வைகோ சேரிகளுக்கெல்லாம் சென்று வாக்கு சேகரிக்கிறார்.அப்போது ஒரு பெண் வைகோவிடம் “நல்ல பாத்ரூம் கட்டிக் குடுங்கய்யா.வயித்த கலக்கிச்சின்னா கோவில் பக்கமுள்ள பொது பாத்ரூமுக்கு போக வேண்டியதிருக்கு.பொம்பளைங்க நிலமையை யோசிச்சிப் பாருங்க என்று சொல்லும் போது பொது மக்களின் உண்மைநிலை தெளிவாகத் தெரிகிறது.

இந்தப் படத்தைப் பற்றி ஆர்.வி ரமணி பேசும் போது...

9.அம்மா பேசியதை படமெடுத்ததால் இரண்டு முறை கைது செய்தப்பட்டென்.அதன் பின் எச்சரித்து என்னை விட்டு விட்டார்கள்.

10.இந்த ஆவணப்படத்தை வைகோ கிட்ட போட்டுக் காட்டனும்ன்னு நினைக்கிறேன்.ஆனா அதுக்கான நேரம் இன்னும் வரல.

இந்திய மக்களுக்கு கொண்டாடுவதற்கு பலதும் இருக்கின்றன.

அதில் தேர்தலும் ஒன்று என்ற செய்தியைத்தான் நான் இந்த ஆவணப்படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.

சிலருக்கு வாழ்க்கை செட் ஆகாது...

சிலருக்கு வாழ்க்கை செட்டாகாது.அப்படி செட்டாகவில்லை என்பதை திரும்பிப் பார்த்து உணர்ந்து கொள்ளும் போது வாழ்க்கை ஒடிவிட்டிருக்கும்.

கண்ணன் என்றொரு நண்பன் எனக்கிருந்தான்.

நானும் அவனும் ரெட்டேரியில் இருந்து ஒன்றாக பாலிடெக்னிக் செல்வோம்.நான் செண்டிரல் பாலிடெக்னிக் தரமணி.அவன் அம்பத்தூரில் இருந்த பாலிடெக்னிக்.

நாங்கள் இரண்டு பேரும் நண்பர்கள்.காரணம் அவனும் பிளஸ் டூ டூ டிப்ளமா.நானும் பிளஸ் டூ டிப்ளமா.

ிளஸ் டூ முடித்த பிறகு சக நண்பர்கள் எல்லோரும் பொறியியல் படிக்கும் போது நான் மட்டும் டிப்ளமோ படிப்பது பற்றி மிகுந்த கவலையும் விரக்தியையும் கொண்டிருந்த காலம்து.ஆனாலும் நான் டிப்ளமா வகுப்புகளுக்கு ஒழுங்காகப் போனேன்.

கண்ணன் போகவில்லை.” சின் சின் கொயந்த பசங்ககெல்லாம் இருக்கிறானுங்கடா.வெறுப்பாயிருக்கு” என்பான்.

”யாரு இருந்தா என்ன மச்சி.நீ ஒரு கோர்ஸ் படிக்க போற.அதப் படிச்சிட்டு வா.” என்பேன்.

ஆனாலும் சோம்பேறித்தனம்,அலட்சியம்,ஏதோ சொல்லத் தெரியாத வெறுப்பு எல்லாம் சூழ்ந்து காலேஜை கட் அடிக்க ஆரம்பித்தான்.

கண்ணன் காலேஜை கட் அடிப்பது வித்தியாசமானதாயிருக்கும்.நேரே வண்டலூர் சூவுக்கு சென்று விடுவான்.அங்கே தானியங்களை பறவைகளுக்கெல்லாம் போட்டு நாள் முழுவதும் வேடிக்கை பார்ப்பான்.மிருகங்களையும் பறவைகளையும் பற்றி பேசிக் கேட்கும்
போது அவன் குழந்தையுள்ளம் தெளிவாக விளங்கும்.

மதியம் வயிற்றை நிரப்ப அம்மா கட்டிக்கொடுத்த உணவு. வகுப்புகளை கட் அடிக்கிறான் என்று தெரிந்ததும் அவனை அதிகமாக திட்டுவேன்.

”மச்சி தப்பு பண்ற.சும்மா கிளாசுக்கு போய்ட்டு வாடா.நீ நூல லூஸ்ல விடுற மச்சி” என்று திரும்ப திரும்ப சொல்வேன்.

கேட்க மாட்டான்.டிப்ளமா முடித்தவுடன் எனக்கு வேலை கிடைத்தது.அவன் 12 அரியர்ஸ் வைத்திருந்தான்.

இதற்கிடையில் தம்மடிக்கவும் தண்ணியடிக்கவும் பழகியிருந்தான்.வீட்டில் சும்மாவே இருக்க போரடிக்கும்தானே.

தெருவில் இரண்டு மூன்று நண்பர்களைப் பெற்றிருந்தான்.அப்போதும் அவனை திட்டியிருக்கிறேன் “இவனுங்கல்லாம் யாரு.ஏண்டா வீட்ல யாரும் இல்லனா, கறி வாங்கிட்டு வந்து பொரிச்சி வெச்சி தண்ணியடிக்கிறது ஒரு வேலையா.நீ அரியர்ஸ் கிளியர் பண்ணு.இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல சரி பண்ணு” என்பேன்.

அதன் பிறகு என் வீட்டு மொட்டைமாடியில் பாடம் படிக்க வருவான். என்னால் முடிந்த மட்டும் அவனை தேற்றுவதற்கான காரியத்தை எடுத்துக் கொண்டேன்.

ஆறுமாதம் ஒழுங்காக இருந்தான்.அப்புறம் மறுபடியும் பழைய மாதிரி ஆகிவிட்டான்.” எனக்கு எதுவுமே செட்டாகாது மச்சி” இதுதான் கண்ணன் அடிக்கடி சொல்லும் வார்த்தை.

நான் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள ஆகிவிட்டிருந்தது.கண்ணன் ஒன்றிரண்டு சின்ன சின்ன வேலைகள் செய்தான்.ஆனால் செட் ஆகவில்லை என்று நின்று கொள்வான்.

வேலைக்கு சென்று திரும்பும் போது தெருமுனையில் அரட்டையடித்துக் கொண்டிருப்பான்.என்னைப் பார்த்ததும் கூப்பிடுவான்.அல்லது அவன் பிரிந்து என்னருகே வருவான்.

வந்து “மச்சி நீ அப்படியே ஆட்டோகேட் நல்லா கத்துக்க.அப்புறம் அப்படி ஹார்ட் ஒர்க் பண்ணி தொழில கத்துகிட்டன்னு வெச்சுக்க, டக்குன்னு ஃபாரின் போயிடலாம்.ஃபாரின் போய் பத்து வருசம் உழைச்சா போதும்டா கோடீஸ்வரன் மச்சி” என்று சொல்லுவான்.

கிட்டத்தட்ட அடுத்த மூன்று வருடங்கள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் இதே டயலாக்கை திரும்ப திரும்ப சொல்வான்.நான் ஒரு கர்ட்டஸிக்காக அதைக் கேட்டுக் கொள்வேன்.

ஒருநாள் பொறுமை தாங்க முடியாமல் வெடித்து விட்டேன்.

“கொய்யால மூடிட்டுப் போ.எனக்கு அட்வைஸ் பண்ணாத.நீ கோர்ஸ் ஒழுங்கா முடிச்சியா.டிஸ்கண்டினியூ தான.உங்க அப்பா இல்லாம் அம்மாதான வளத்தாங்க.உன் அண்ணன பாரு.உன் தங்கச்சிய பாரு.நீதாண்ட்டா வேஸ்டு.புடுங்கி மாதிரி பேசுற. என்னோட வேலை பத்தி உனக்கென்னாடா தெரியும் நொட்ட. சும்மா அட்வைஸ் மயிரெல்லாம் என்கிட்ட செய்யாத.எதாவது வேலை செய்ஞ்சி உருப்படுற வேலையைப் பாரு” என்று கத்திவிட்டேன்.

“இதோப்பாருடா கோவத்த” என்று கண்ணன் சிரித்தபடி என்னை சமாதானப்படுத்தினாலும் அவன் கண்கள் சோகமானதைப் பார்த்தேன்.

அதன் பிறகு கண்ணனை தவிர்க்க ஆரம்பித்தேன்.
பார்த்தால் ஒரு சிரிப்பு.அதோடு நிறுத்திக் கொண்டேன்.

பைக் வாங்கி பேங்கில் கலக்சன் செய்து கொடுக்கும் வேலை செய்தான்.புரோக்கர் வேலை செய்தான்.ஆனால் எதுவுமே அவனுக்கு செட் ஆகவில்லை.

அப்புறம் அவன் அம்மாவிடம் காசு வாங்கி கம்யூட்டர் செண்டர் வைத்தான்.அதைக் கேள்விப்பட்ட பிறகே நிம்மதியானேன்.எப்போதாவது அவனிடம் பேச நினைப்பேன்.

ஆனால் பைக்கில் வேகமாக கடந்து விடுவான்.அவனுக்குள் ஒரு ஆவேசம் வந்ததை ரசித்தேன்.

இரண்டு வருடங்கள் போனது.அதன் பின் எனக்கு ஹைதிராபாத்தில் வேலை கிடைத்தது.ஆறுமாதம் முடிந்த பிறகு இரவு ஒன்பது மணிவாக்கில் அம்மாவிடம் இருந்து போன்.

“யய்யா நம்ம கண்ணன் பையன் இருக்கான்ல.அவன் சூசைட் பண்ணிட்டானாம்.அவன் அம்மா எல்லோரும் ஒரே அழுகை.பாக்க பாவமா இருந்துச்சி.உன் கிட்ட சொல்லிரலாம்னு” .அம்மா அப்படி சொன்னது அதிர்ச்சி தாங்கமுடியவில்லை.

கண்ணன் ரொம்ப நல்லவன் என்பது எனக்குத் தெரியும்.எந்த தந்திரமும் அவனுக்கு கிடையாது.ஆனாலும் இப்படி ஆகிவிட்டானே என்று இரவு ரொம்ப நேரம் தூங்க முடியாமல் கிடந்து தூங்கினேன்.

அதிகாலை மூன்று மணிக்கு சிறுநீர் கழிக்க எழுந்திருக்கும் போது கண்ணனிடம் பேசுவதாக நினைத்துக் கொண்டு “சரி மச்சி போய்ட்டு வா.உனக்கு ஒண்ணுமே செட்டாகல.அடுத்த பிறவில பக்காவா வா.எல்லாமே நல்லதா நடக்கும் உனக்கு” என்று நினைத்தேன்.அதன் பிறகு தூங்க முடிந்தது.

எங்கள் ஊரில் “தட்டழிஞ்சி போறது” என்பார்கள். இப்படி எதுவுமே செட் ஆகாமல் இந்தியாவில் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள்.

அதனால்தான் எனக்கு சேரனின் மாயக்கண்ணாடி பிடிக்கும்.

அதில் சேரன் தட்டழிந்து போவதற்கான எல்லா முயற்சிகளயும் செய்வார்.இறுதிக் காட்சியில் ராதாரவி சொல்லும் வசனம் “எந்த தொழிலானாலும் அதில் குறைந்தது சில வருடங்களாவது இருக்க வேண்டும்.அப்போதுதான் அதைக் கற்றுக் கொள்ள முடியும்”

அதனால்தான் எனக்கு ”ஃபாரஸ்ட் கம்ப்” சினிமாவும் பிடிக்கும்.

கதாநாயகனுக்கென்று என்று எந்த விசேச திறமையும் கிடையாது.ஆனாலும் அவன் மகிழ்ச்சியாயிருப்பான்.

வாழ்க்கையில் முன்னேறுவான்.

காரணம் அவனுக்கு தட்டழிந்து போகத் தெரியாது.

ஒரு மிதக்கும் மரக்கட்டையாக ”வாழ்க்கை ஆறு” அவனை அடித்துச் செல்ல அனுமதிக்கிறான்.ஆனால் மூழ்குவதில்லை.

கண்ணன் ”ஃபாரஸ்ட் கம்ப்” பார்த்திருந்திருக்கலாம்.

நேர்முகத் தேர்வு செல்லும் முன்...

இவையெல்லாம் சொந்த அனுபவத்தில் சொல்வது. உண்மையா என்று தெரியாது  

1.நேர்முகத்தேர்வில் அதிகம் பம்மாதீர்கள்.வேலை கொடுத்த பின்தான் அவர் நமக்கு பாஸ்.(பிராக்டிக்லா சொல்றேன்) அதற்கு முன்னால் நாமும் அவரும் சமம்தான்.அதற்காக நக்கலான பாடி லேங்குவேஜும் தவறு.சாதரணமாக அமர்ந்திருக்க வேண்டும்.

2.எக்ஸ்டிரா பிட் போட்டு நீங்களே மாட்டிக்கொள்ளாதீர்கள்.ஒருமுறை நான் தேவையில்லாமல் NPSH என்று சொல்லிவிட்டேன்.அதே வார்த்தையைப் பிடித்துக் கொண்டு காய்ச்சி எடுத்து விட்டார்கள்.

3.நீளமாக நீங்கள் பேசி முடித்த பிறகு, கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “நான் பேசுவது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்று சொல்லலாம்.( ஆனால் இதெல்லாம் ரிஸ்க்தான்.கேட்கும் முகபாவம் முக்கியம்)

4.Relocation பற்றி கேட்பார்கள். டில்லிக்கோ மும்பைக்கோ நீ எப்படி வருவாய்? எங்கே வீடு பார்ப்பாய் ?இதெல்லாம் கேட்கும் போது மிக சகஜமாய் “அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை” என்று சொல்லவேண்டும்.இந்த சமயத்தில் பாடி லேங்குவேஜ் முக்கியம்.அதை கூர்ந்து கவனிப்பார்கள்.

5.ரொம்ப பணக்காரனும் இல்லை, நீங்கள் கொடுக்கும் சம்பளத்தை மட்டும் நம்பியிருக்கும் ஏழையுமல்ல.மத்திம தன்னம்பிக்கைகாரன் என்பதை எப்படியாவது புரிய வைத்து விடுங்கள்.

6.ஏன் பழைய வேலையை விட்டாய்? என்று கேட்டால் “அதற்கு பல காரணங்கள் இருக்கிறது.பணம் மற்றும் மாற்றம் என்பது முக்கிய காரணம்” என்று சுற்றி வளைத்துப் பேசுங்கள்.இந்த விசயத்தில் மிக நேரடியாக பேசுவது அவர்களுக்கு பிடிக்காது.

7.எங்கள் கம்பெனியில் எத்தனை வருடம் வேலை பார்ப்பீர்கள் என்று கேட்டால் “குறைந்தது நான்கு வருடங்கள் “என்று தைரியமாக சொல்லுங்கள். “நான்கு வருடங்களுக்கு அப்புறம் வேற வேலைக்கு போயிருவீங்களா” என்று கேட்டால் , “அது அப்போதைய பிரச்சனை.இப்போதைக்கு என் மனதின் முடிவு இதுதான்” என்று நச்சென்று சொல்லுங்கள்.

8.உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்றால்,பர்சனலாக கொஞ்சம் சொல்லிவிட்டு வேலை சம்பந்தமாக சொல்ல ஆரம்பித்து விடுங்கள். அதிலும் ரொம்ப நுணுக்கமாக சொல்லாதீர்கள். மேலோட்டமாக Core மட்டும் சொல்லுங்கள். விரித்து கேள்வி கேட்க வேண்டியது அவருடைய வேலை.

10.இண்டர்வியூ செய்பவர் இந்தியர் என்றால் அவர் நிச்சயமாக அட்வைஸ் செய்வார்.நீங்கள் அவரை விட புத்திசாலியாக இருக்கலாம். இருப்பினும் ”இந்திய பெரியவர்களை” அட்வைஸ் செய்ய விட்டால் அவர்கள் மாபெரும் மன நிம்மதியையும்,திருப்தியையும் அடைவார்கள்.இண்டர்வியூவின் முடிவில் அவரை அட்வைஸ் செய்ய விட வேண்டும். உதாரணமாக “ மும்பைல இருந்து சென்னைக்கு எமர்ஜென்சின்னா ஃப்ளைட் அதிக காசாகுமா சார்?” என்று கேட்கலாம். உடனே அவர் அட்வைஸ் செய்யத் தொடங்குவார். புரிகிறதா?

11.சம்பளம் பற்றி பேசும் போது நீங்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியாதென்று சொல்லுவார்கள். நீங்கள் சொல்ல வேண்டும் “சார் நான் நிண்ட காலமாக இங்கே பணியாற்ற விரும்புகிறேன்.எனக்கு பணம் என்பது மனத்தொந்தரவாக இருக்கக் கூடாது. நான் கேட்ட சம்பளம் வேண்டும்” என்று சொல்லி அமைதியாக இருக்க வேண்டும். எதிராளி அந்த மவுனத்தை நீட்டிப்பார்.நீங்கள் அந்த மவுனத்தை போக்குகிறேன் என்று தப்பித்தவறி கூட பேசிவிடாதீர்கள்.பேச வேண்டியது அவர்.அதுவரை அமைதியாக இருங்கள்.

12.உங்களுக்கு இருமல் தும்மல் ஜலதோஷம் இருந்தால் முதலிலேயே சொல்லிவிடுங்கள்.”சார் எனக்கு தண்ணீர் வேண்டும்” என்று கேட்கலாம். கடுமையான காய்ச்சல் தும்மலில் பாட்டில் நீரோடு, நீரைக் குடித்து குடித்து ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் செய்திருக்கிறேன்.அது ஸ்டைலாக இருக்கும். மேலும் இருமல் போன்ற தொந்தரவுகளை நமக்கு சாதகமாக மாற்றும் கலை ( இது எந்த அளவுக்கு உங்களுக்கு புரிகிறது என்று தெரியவில்லை)

13.நீங்கள் தற்போது வேலை செய்யும் புராஜெக்டின் அடிப்படையை தெரிந்து கொண்டு போங்கள். சிலர் அவர்கள் செய்யும் வேலையில் திறமையாக இருப்பார்கள்.அடிப்படை தெரியாமல் இண்டர்வியூவில் மாட்டிக் கொள்வார்கள். என் புராஜெக்டில் தரையில் இருந்து கிடைக்கும் வெப்பத்தை வைத்து நீரைச் சூடாக்கி டர்பனை சுற்ற வைத்து பவர் எடுக்கிறார்கள்.அதில் டர்பைன் ஏரியாவை நான் கவனிக்கிறேன்.இப்படி ரொம்ப அடிப்படையாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதை ஒற்றை வரியில் சொல்லத் தெரிய வேண்டும்.

14.பணிவு என்று வார்த்தையை முழுங்கிப் பேசாதீர்கள்.இதைப் பல முட்டாள்கள் செய்வார்கள். பலர் பதிலை தெளிவாக உரக்க சொன்னாலே உயர் அதிகாரிகளை அவமானப்படுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்வு அடைவார்கள்.அது தவறு. தெளிவான பேச்சு முக்கியம்.

15.ஆங்கிலம் பேசும் போது நிதானமாக மெதுவாக பேசுங்கள்.தமிழ் போன்றே வேகமாக பேசும் போது ஆங்கிலம் தடுமாறும். அது மாதிரி குரலை உயர்த்திப் பேசுவதும் ஆங்கிலத்துக்கு செட்டாகாது. பைக்கை வேகமாக முறுக்கி அடுத்த நான்கு மீட்டரில் பிரேக் போட்டது போன்று ஆங்கிலம் பேசாதீர்கள். சரியாக விளக்க வராவிட்டால் மன்னிப்பு கேட்டு இன்னுமொருமுறை பேசுங்கள்.

16.ரொம்ப டெக்னிக்லாக ஒன்றை விளக்க சிரமம் ஏற்பட்டால், பேப்பரும் பேனாவும் கேட்டு அதில் வரைந்து காட்டி பேசுங்கள்.வரையும் போது அவசரப்பட்டு காமா சோமா என்று செய்யக் கூடாது.அதை பொறுப்பாக செய்ய வேண்டும்.அந்தப் பொறுப்பை கவனிப்பார்கள்.

17.இணடர்வியூ எடுப்பவரின் கண்களை பார்க்க வேண்டும். அப்போது உங்கள் முகத்தில் சிரிப்பு இருக்க வேண்டும். கவனிக்க சிரிப்புதான். அசடு இல்லை.

18.உங்களுக்கு டெக்னிக்கலாக சரியாய் பதில் சொல்ல முடியவில்லை. ரொம்ப மொக்கையாக போகிறது இண்டர்வியூ. நிச்சயமாக செலக்ட் ஆக மாட்டீர்கள் என்று இண்டர்வியூவின் பாதியிலேயே தெரிய ஆரம்பித்து விட்டால், உங்கள் போக்கை மாற்றுங்கள். பணிவாக ஆனால் உறுதியாக சொல்லுங்கள் “சார் எனக்கு ரொம்ப டெக்னிக்கா தியரி கேட்டா தெரியாது. ஆனா ஒரு பிராக்டிக்கலா புராஜெக்ட் பண்ணுவேன். ஒரு டிசைன கொடுத்தா செய்வேன். எனக்கு குடுத்திருக்க வேலையை அதுக்கு தக்கன கத்துகிட்டு செய்வேன்.இதுக்கு முன்னாடியும் இப்பவும் அப்படித்தான் பண்ணிகிட்டிருக்கேன்.” இப்படி பேசலாம்.வேறு வழியில்லை. இப்படி பேசி வொர்க் அவுட் ஆன நண்பர்களை எனக்குத் தெரியும்.

19.மூன்று பேர் இண்டர்வியூவில் இருந்தால் மூன்று பேரையும் பார்க்க வேண்டும்.ஒருத்தரைப் பார்த்து ஒருத்தரை பார்க்காமல் இருக்ககூடாது. அந்த மூன்று பேரில் ஒருவர் தன்னம்பிக்கை குறைந்து தாழ்வு மனப்பான்மையில் இருப்பார்.அவரை அதிகமாக மதிக்க வேண்டும்.இது முக்கியம்.

20.இண்டர்வியூ முடிந்த பின்னர், எடுத்தவருக்கு கைகொடுக்க வேண்டும்.தன்னம்பிக்கை கைகொடுத்தலாக இருக்க வேண்டும் அது.

21.ஒருவேளை நீங்கள் செலக்ட் ஆனால் ஹெச்.ஆர் ”புரபோசல் சம்பளம்” அனுப்பி வைப்பார்கள்.அது உங்களுக்கு சம்மதமானாலும் அதை ஒத்துக் கொள்ளும் போது இப்படித்தான் ஒத்துக் கொள்ள வேண்டும். “சார் உங்க புரபோசல் கிடைத்தது. நீங்கள் 4.5 லட்சம் சிடிசி சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு 5 லட்சம் சம்பளமாக போட்டு அப்பாயிண்மெண்ட் அனுப்பினால் மகிழ்ச்சி.இது என் கோரிக்கைதான். எனக்கு வேலை ஆர்டர் கிடைத்து 60 நாள் கழித்து உங்கள் நிறுவனத்தில் சேர அவலாயிருக்கிறேன்” இப்படி எழுதினால் 5 லட்சம் கொடுக்காவிட்டாலும் 4.7 லட்சமாவது கொடுப்பார்கள். ஒரு கடிதம் மூலமாக கொஞ்சூண்டு பணம் ஏறினால் கூட அது நல்லதுதானே. கிடைப்பதை ஏன் வீணாக்க வேண்டும்.

22.வேலை உத்தரவு கிடைத்தும், அவர்கள் சொன்ன தேதியில் அல்லது பத்து இருபது நாள் அதிகமாக சேருவதாக பேசி, தேதியை சொல்லி கடிதம் அனுப்பி விட வேண்டு.ஒருவேளை நீங்கள் சொன்ன தேதியில் உங்களால் ஜாயின் பண்ண முடியாது என்று தெரிந்தால் ரொம்ப முன்னரே சொல்லாதீர்கள்.நீங்கள் வேலைக்கு சேர ஒருவாரம் இருக்கும் போது சொல்லுங்கள்.அதை நேரடியாக சொல்லக்கூடாது. ஹெச்.ஆருக்கு போன் போட்டு வேறு ஏதோ விசாரிப்பதுபோல் விசாரித்து விட்டு “சார் எவ்ரிதிங்க் செட்.எல்லாமே கிளிரா இருக்கு.மெடிக்கல் டெஸ்ட் எடுத்திட்டேன்.என்றெல்லாம் சொல்லி முடிவில். “சார் ஒன் வீக் கழிச்சிதான் ஜாயின் பண்ண முடியும்” என்று சொல்லுங்கள்.

இவையெல்லாம் என்னுடைய சொந்த அனுபவத்தில் சொல்வது. உண்மையா என்று தெரியாது