Monday, 28 October 2013

‘சிதம்பரம்’ என்ற படத்தைப் பார்த்தேன்

நேற்று(27-10-2013) பனுவல் தடாகம் அரங்கில் 1985 யில் தேசிய விருது பெற்ற திரைப்படமான ‘சிதம்பரம்’ என்ற படத்தைப் பார்த்தேன்.

விமர்சகரும் எழுத்தாளருமான ஷாஜி வந்திருந்தார்.படம் முடிந்ததும் திருப்தியான உரையாடல் நடந்தது.

கலந்துரையாடல் படத்தை முன்னிட்டே நடந்ததால் முதலில் படத்தின் கதையை சுருங்க பார்த்து விடலாம்.

அந்த மாட்டுப்பண்ணையில் மாடு மேய்க்கும் வேலையை செய்கிறான் தமிழ்நாட்டைச்சேர்ந்த முனியாண்டி( ஸ்ரீனிவாசன்).

அங்கு உயர் பதவியில் இருப்பவர் சங்கரன்( கோபி).திருமணமாகாத மத்திம வயது ஆள்.சங்கரன் கலையில் ஆர்வம் உள்ளவன்.

முனியாண்டியை சகமனிதனாகவே நடத்துகிறார்.சங்கரனின் நண்பனுக்கு இது பிடிக்கவில்லை.

முனியாண்டிக்கு திருமணம் நடக்கிறது.அழகான பெண்ணான சிவகாமியை(ஸ்மிதா பாட்டீல்) மணக்கிறான்.அவரையும் மாட்டுப்பண்ணைக்கு கூட்டி வருகிறார்.சங்கரனின் மனது முனியாண்டியின் மனைவி மீது மெலிதாக அலைபாய்கிறது.இருப்பினும் அவர் கண்ணியமாகவே இருக்க முயற்சி செய்கிறான்.

சங்கரனின் நண்பர்கள் சிவகாமியைப் பற்றி தவறாக பேசும் போது கோபத்தோடு கண்டிக்கிறான்.இதற்கிடையில் சங்கரனின் நண்பன் முனியாண்டியை வேண்டுமென்றே நைட் ஷிப்ட் செய்ய சொல்கிறான்.

முனியாண்டி நைட் ஷிப்ட் செய்யும் போது திடீரென்று சந்தேகம் வந்து தன் வீட்டிற்கு சென்று பார்க்கிறான்.வீட்டின் பின் பக்கமாக உருவம் ஒடி ஒளிகிறது.

கூர்ந்து பார்த்தால் அது சங்கரன்.எந்த மனிதனை மனப்பூர்வமாக நம்பினானோ அவரே துரோகம் செய்து விட்டதை நினைத்து முனியாண்டி தூக்கில் தொங்கி உயிரை விடுகிறான்.

இதைப் பார்த்து சங்கரன் ஒடுகிறான்.

குற்ற உணர்ச்சி அவனை படுத்துகிறது.தீராத குடிப் பழக்கதிற்கு அடிமையாகிவிடுகிறான்.

உடல்நலம் மிக மோசமாக,சங்கரனின் டாக்டர் அவனை ஆன்மீகத் தேடல் செய்யுமாறு சொல்கிறார்.சங்கரன் தமிழ்நாட்டின் சிதம்பரம் கோவிக்கு பாவம் கழுவ வருகிறான்.

அங்கே அதிர்ச்சிகரமாக சிவகாமியை மோசமான நிலையில் பார்க்கிறான்.

சிவகாமியின் முகத்தில் இருக்கும் முனியாண்டி விட்டுச் சென்ற கோரமான தழும்பும் சிவகாமியோடு சேர்ந்து கொண்டு சங்கரனை பார்ப்பதாக படம் முடிகிறது.

தனிமனிதனின் உணர்வுகளை ஆராயும் அல்லது சொல்லும் படமாக இருக்கிறது.

சங்கரனின் கண்ணியம் எங்கு பறிபோகிறது?அல்லது சிவகாமி மாதிரி அழகான பெண்ணைப் பார்த்தால் எந்த ஆணும் இப்படி அடைய ஆசைப்படுவானா?முனியாண்டி ஏன் சங்கரனைக் கொல்லாமல் தான் தற்கொலை செய்து கொண்டான்? ஒருவேளை சங்கரன் மேல் வைத்த மதிப்புதான் காரணமா?சிவகாமி ஏன் சங்கரனின் நிர்பந்ததுக்கு ஒத்துக் கொண்டாள்.அவளுக்கும் காதலா? அல்லது கலவையான உணர்வா?தான் செய்த தவறு யாருக்கும் தெரியாத போது ஏன் சங்கரனால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியவில்லை.குடித்து குடித்தே அழிகிறான்.அப்படியானால் அந்த குற்ற உணர்வின் வீரியம் என்ன? சிதம்பரத்தில் சங்கரனும் சிவகாமியும் சந்திக்கும் போது அவர்கள் மனநிலை எப்படி இருக்கும்? இது மாதிரி எண்ணற்ற கேள்விகளை இந்த சினிமா வைக்கிறது.

சினிமா முடிந்தது எழுத்தாளர் ஷாஜியுடன் கலந்துரையாடல் நடந்தது.வெகு இயல்பாக பேசினார்.எந்த சிக்கலான வார்த்தைகளுக்கும் தெளிவான விளக்கம் கொடுத்தார்.மலையாளத் திரைப்படப் போக்கு,கலாச்சாரம் பற்றி நிறைய தகவல்கள் சொன்னார்.அதில் சிலவற்றை எழுதுகிறேன்.

ஷாஜி சொல்கிறார்

-முப்பது வருடம் இந்தப் படம் பார்க்க சிலிர்ப்பாக இருக்கிறது இப்போதும் இது நம்மை கட்டிப் போடுகிறதே.கலை அனுபவத்தைக் கொடுக்கிறது.

-படத்தின் இசைப் பற்றிய கேள்விக்கு ஷாஜி,இப்போது பார்க்கும் போது இன்னும் நன்றாக இசை அமைத்திருக்கலாம் என்று தோன்றுவதாக சொன்னார்.படத்தில் வரும் தமிழ் பதிகங்களை பின்னனியில் ஒலிக்க செய்திருப்பதில் இயக்குநர் அரவிந்தனின் நுட்பம் தெரிவதாக சொன்னார்.

-படத்தின் இயக்குநர் அரவிந்தன் பற்றி சொல்லும் போது,அவர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு இணையான திறமைசாலியென்றும்,இன்றும் அரவிந்தன்தான் பெரும் படைப்பாளி என்று அரவிந்தன் ஸ்கூலில் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.

-அரவிந்தன் எதையும் ஒங்கியடித்து காட்டமாட்டார்.நளினமாகவே காட்டுவார்.இந்தப் படத்தில் கூட அவர் நினைத்திருந்தால் படுக்கையறை காட்சிகளை காட்டியிருக்கலாம்.கேரளச்சூழலுக்கு அது நன்றாகவே எடுபட்டிருக்கும்.ஆனால் அதை செய்யவில்லை.நிறைய விசயங்களை பார்வையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் படைப்பாளி சொல்லக் கூடாது என்று நினைப்பார்.

-எனக்கு(ஷாஜி)பதினாறு வயது இருக்கும் போது ஒரு காஃபி ஷாப்பில் அரவிந்தன் மாதிரியே ஒருவர் இருந்தார்.நான் ஆர்வத்துடன் போய் விசாரித்தேன்.ஆனால் அவர் அரவிந்தனின் தம்பி என்று சொன்னார்.ஆனால் பார்க்க அரவிந்தன் மாதிரியே இருந்தார்.

-இந்தப் படத்தில் காட்டப்படும் மாட்டுப்பண்ணை மூனாறு பக்கத்தில் இருக்கும் ‘மாட்டுப்பட்டி’ என்னும் ஊர்.மிகக் குளிர்ச்சியான இடம்.இந்தப் படம் வரும் போது இங்கு எட்டு மாதம் கம்பி இழுத்தால் போல் மழை பொழியும்.மிச்ச மாதங்கள் குளிர்.அதனால் சாராயம் என்பது, இது மாதிரி ஊர்களில் வெகுஜன கலாச்சாரமாக இருந்தது.

-அரவிந்தன் ஒரு இயக்குனர் மட்டுமல்ல,கார்டூனிஸ்டும், இசையமைபாளரும் கூட

-அரவிந்தன் தன் திரைப்படம் நன்றாக ஒட வேண்டும் என்றெல்லாம் காம்பிரமைஸ் செய்து கொள்வதில்லை.படைப்பாகவே பார்ப்பார்.அது மாதிரி நல்ல கலாச்சாரம் கேரளாவில் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் நிறைய இருந்தது.ஆனால் இந்தப் படம் ‘சிதம்பரம்’ வணிகரீதியாய் வெற்றிப் பெற்றப் படமே.

-நடிகர் பரத் கோபி,ஸ்மிதா பாட்டீல்.ஸ்ரீனிவாசன் எல்லோரும் குறைந்த சம்ளத்தில் அல்லது சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்தார்கள்

-இது சி.வி.ஸ்ரீராமன் எழுதிய சிறுகதையை அடிப்படையிலான கதை.என்னைக் கேட்டால் இந்தப் படம் சிறுகதையை விட அழகாக வந்திருக்கிறது.சி.வி ஸ்ரீராமன் மலையாளத்தில் மத்திம தரமான எழுத்தாளர்.

-ஸ்மிதா பாட்டீல் நடிப்பு பொருத்தமில்லாமல் இருக்கிறது என்று நான் சொல்ல அதற்கு ஷாஜி ‘ஆம் இப்போது பார்க்க பலகாட்சிகளில் அவரால் ஏழ்மையான் தமிழ் அப்பாவிப் பெண்ணின் கேரக்டரை சரியாக செய்ய முடியவில்லை என்றே தோன்றுகிறது.ஆனால் ஸ்மிதா பாட்டீல் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால்தான் அவரால் இந்த மட்டாவது நடிக்க முடிந்தது.தமிழ் கலாச்சாரம் பற்றி தெரிந்து கொண்டு அதன் படி நடிப்பது கஸ்டமான காரியமே என்றார்.

-கதாநாயகன் ஏன் சிதம்பரம் போவதாக காட்டியிருக்கிறார்கள் என்பதர்கு, கேரளாவில் பாவம் செய்தால் அதைப் போக்க சிதம்பரம் கோவிலுக்கு போவது முன்னர் ஒரு கலாச்சாரமாக இருந்ததாக சொன்னார்.

-ஷாஜி சொல்கிறார் ‘ஒரு படத்தில் நீண்ட காட்சியை இயக்குநர் வைத்தால்,அதில் அவர் ஏதோ சொல்ல வருகிறார் என்பது மாதிரி பாருங்கள்.வேகமான காட்சிகளை மட்டும் ரசித்து பழகுவது நம் ரசனையை சிதைப்பதாகும்.

-நமக்கென்று நம் ரசனைக்கு சில அளவுகோல்கள் வைத்திருக்கிறோம்.அடுத்து நம் எல்லோருக்கும் நான் அறிவாளிகள் என்ற எண்ணம் இருக்கிறது.என் அப்பா சிறுவயதில் பாட்டு முடிந்து ஆங்கில இசை போடும் போது ரேடியோவை அஃப் செய்து விடுவார்.அவரை பொறுத்தவரை அவருக்கு ஆங்கில இசைய் தெரியாது.ஆகையால் அவரால் ரசிக்க முடியாது.இப்படித்தான் நம் எல்லோரின் ரசனையும் இருக்கிறது.நமக்கு கடுகெண்ணெய் பிடிக்கவே பிடிக்காது.ஆனால் கோடிக்கணக்கான வட இந்தியர்கள் அதை விரும்பி சாப்பிடுகின்றனர்.மாற்று ரசனை என்பதால் பொறுமையாலும்,நிறைய வாசிப்பதிலனாலும் மட்டுமே பெற முடியும்.

-அரவிந்தன் இன்னொரு படமெடுத்திருக்கிறார்.அதெல்லாம் ரொம்ப ஸ்லோவாக போகும்.ஆனால் அருமையானதாக இருக்கும்.அந்தப் படத்தில் ஒரு சர்க்கஸில் இரண்டு கேமராவை வைத்திருப்பார்.கேண்டீட் கேமரா மாதிரி.பார்வையாளர் ஒவ்வொரு வித்தைகளுக்கேற்ப காட்டும் முகபாவனைகள் அடிப்படையிலான படம்.எவ்வளவு வித்தியாசமான தீம் பாருங்கள்.

-நான் நடிகர் கோபி பற்றிக் கேட்டேன் ஷாஜியிடம்.நடிகர் கோபியின் ஸ்டார் வேல்யூ பற்றி சொல்லுங்கள்? கேரளாவில் அவர் எப்படி கொண்டாடப் பட்டார்? அவருடைய எளிமையான் பர்சானிலிட்டி அவருக்கு தடையாயிருந்ததா? அவருடைய வீழ்ச்சி எங்கிருந்து தொடங்கியது?

அதற்கு ஷாஜி ‘ஒருபோதும் அப்படி இருந்தது இல்லை.கோபி எப்போதும் மக்களின் முழுஆதரவைப் பெற்றிருந்தார்.அவருக்கு நடிப்பு என்பது இயல்பாய் வரும்.இதே மாதிரி தான் நடிப்பார்.விக் வைக்க மாட்டார்.வில்லனாய் நடித்திருக்கிறார்.அதிலும் அவர் நடிப்பு திறமை மற்ற நடிகர்களை விட அதிகம் பேசப்படும்.அவர் தோற்றத்தினால் அவருக்கு வீழ்ச்சியே வரவில்லை ஆனால் அவரு துரதிஸ்ட்டவசமாக அவருக்கு “ஸ்டிரோக்” வந்து முகம் திரும்பி இழுத்துக் கொண்டது.அப்படி இருந்தாலும் கூட அவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது.அவர்தான் மறுத்து விட்டார்.மலையாள உலகம் பெற்ற அருமையான கலைஞன் தான் நடிகர் பரத்கோபி

-ஸ்ரீனிவாசனும் அப்படியே.அவரைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.ஸ்ரீனிவாசனும் நடிகர் ரஜினிகாந்தும் ஃபிலிம் இன்ஸ்டிடீயூட்டில் ஒன்றாக படித்தவர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ?(சிரிப்பு)

-கலைஞர்கள் எல்லோரும் ஆன்மிகத்தில் நாட்டமுடையவர்கள் என்ற கருத்து அல்லது,ஆன்மிகத்தில் இருந்தால் தான் நல்ல படைப்புகளை படைக்க முடியும் என்பதான தவறான கருத்து இருக்கிறது.அப்படியில்லை.கடவுளை நம்பாத பல கலைஞர்களை எனக்கு தெரியும். பீதோவான்,பிக்காசோ எல்லாம் இறை மறுப்பாளர்கள் தாம்

-Comedy என்பது மகிழ்ச்சியாய் முடிவைக் கொண்ட படம்.நகைச்சுவை இல்லை.அது Tragedy யின் ஆப்போசிட்.

-நவீனத்துவம் என்பது சிலவற்றை மறுத்தது.பின் நவீனத்துவம் நன்மை ,தீமை, அழிவு, ஆக்கம் எல்லாவற்றுக்கும் அது அதுக்காக வெளி இருக்கிறது என்று நம்புகிறது.

இந்த பத்தியை முடிக்கும் முன் ஷாஜி சொன்ன ஒரு மலையாள சினிமாக் காட்சியை சொல்லி முடித்து விடுகிறேன்.

நெடுமுடிவேணு ஒரு படத்தில் நாடகம் போடுவார்.நாடகத்தில் நடிக்கும் கதாநாயகியை கண்களாலே காதலிக்கிறார்.இன்னும் நெருக்கமாய் இருக்க சந்தர்ப்பம் எதிர்நோக்குகிறார்.

ஆனால் பிரச்சனை நடிகையின் வயதான தந்தையால் தான். எப்போதும் மகளுடனே இருக்கிறார்.இவரை எப்படி கையாள என்று நெடுமுடிவேணு யுத்தி கண்டுபிடிக்கிறார்.

ஒரு ஃபுல் மது வாங்கி அவருக்கு ஊற்றிக் கொடுக்கிறார். அந்த வயதானவர் ஒவ்வொரு பெக் அடிக்க அடிக்க எழுந்து அவர் நாடகத் திறமையை காட்டுகிறார்.

கதகளி எல்லாம் ஆடிக்காட்டுவார்.நெடுமுடிவேணுவுக்கு எரிச்சலாய் இருக்கும்.அங்கே ஃபுல் முழுவதுமாய் காலி.ஆனால் இங்கே மனிதர் களிநடனம் புரிந்து கொண்டிருக்கிறார்.

இவரைத் தூங்க வைத்து அவர் மகளை அடையலாம் என்றால் முடியவில்லையே என்ற கவலை வேணுவுக்கு. மெல்ல நடிகையின் அப்பாவிடம் வந்து,

‘உங்களுக்கு உறக்கம் வரலியா.ஃபுல் உள்ள போயிருக்கே’ என்பார்.

அதற்கு நடிகையின் அப்பா, ’சும்மா இருந்தா கூட எட்டு மணிக்கெல்லாம் உறங்கிருவேன்.ஆனா சரக்கு உள்ள போயிருச்சின்னா என்னால தூங்க முடியாதுடா.நைட்டு முழுதுக்கும் இன்னைக்கு ஆடப்போறேன்.நீ பாருடா தம்பி’ என்றாராம்.

இதுபோன்று இந்த கலந்துரையாடல் இனிமையான அனுபத்தைக் கொடுத்தது.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் வெகு சகஜமாக ஜாலியாக சிந்திக்க வைத்தார் ஷாஜி.

ஷாஜிக்கும்,இதை ஏற்பாடு செய்திருந்த பனுவல் குழுவினருக்கு,பரிசல் சிவ.செந்தில்நாதன் அவர்களுக்கும் நன்றி.

- விஜயபாஸ்கர் விஜய்

Sunday, 13 October 2013

ஜோசப் பிரிஸ்ட்லீ எழுதிய கடிதம்...

நாம் சுவாசிக்கும் ’ஆக்சிஜனை’ கண்டுபிடித்த இங்கிலாந்து விஞ்ஞானி ஜோசப் பிரிஸ்ட்லீ, தேர்ந்த பகுத்தறிவாளரும் கூட.

சர்ச்சின் அதிகாரத்தை எதிர்த்தவர்.

பிரெஞ்சு புரட்சி நடைபெறும் போது, இங்கிலாந்திலும் சர்ச் அதிகாரத்தை எதிர்த்து போராட்டம், புரட்சி ஏற்படலாம் என்று அடிப்படைவாதிகள் கூட்டம் நினைத்தது.

அதிலும் பிர்மிங்ஹாம் நகரத்தில் இந்த அடிப்படைவாதம் அதிகமாய் இருந்தது.

அந்தக் கூட்டம் பகுத்தறிவாளர்களையும் சர்ச்சுக்கு எதிரானவர்களையும் எதிரிகளாக பார்க்க ஆரம்பித்தது.

இதுமாதிரியான சூழ்நிலையில் 1791 ஆம் ஆண்டு,பிரிஸ்ட்லீ துண்டு பிரசுரம் ஒன்றை மூடநம்பிக்களைக்கு எதிராக வெளியிட்டார்.

கோபம் கொண்ட மதநம்பிக்கையாளர்கள் ஜோசப் பிரிஸ்ட்லீ ஆராய்ச்சிக்கூடம் மற்றும் அதை ஒட்டிய நூலகத்தை அடித்து உடைத்து தீ வைத்து எரித்து போய் விடுகின்றனர்.

ஜோசப் பிரிஸ்ட்லீ கடுப்பாகி அந்த நகரத்தை விட்டே போகிறார்.அப்படி போகும் போது அவர் பிர்மிங்ஹாம் நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தை கொடுக்கிறேன்.

<<என் முன்னாள் நகரமக்களுக்கும் (பிர்மிங்ஹாம் நகர மக்கள்) அயலார்களுக்கும் எழுதிக்கொள்வது,

நீங்கள் விலைமதிக்க முடியாத,உபயோகமான ஆராய்ச்சி சாதனங்கள் பலவற்றை அடித்து உடைத்துப் போயிருக்கிறீர்கள்.அந்த சாதனங்கள் தனிநபருடையதாகவோ,இந்த நாட்டைச் சேர்ந்ததாகவோ, அல்லது பக்கத்து நாட்டைச் சேர்ந்ததாகவோ இருக்கலாம்.அவைகளுக்கு பொருள்சார்ந்த கண்ணோட்டமில்லாமல் நான் நிறைய பணத்தை செலவழித்திருக்கிறேன்.என் குறிக்கோள் என்னவென்றால் அந்த சாதனங்களால், நம் நாட்டையும் மனிதநேயத்தையும் முன்னேற்ற வேண்டும் என்பதுதான்.

நீங்கள் ஆராய்ச்சி கூடத்தை ஒட்டியுள்ள, எந்தப் பணத்தாலும் திரும்ப வாங்க முடியாத, நூலகத்தையும் எரித்து போயிருக்கிறீர்கள்.

பலவருடங்கள் உழைத்து எழுதி வைத்த ஆராய்ச்சிக்குறிப்புகளைக் கூட விட்டுவைக்காமல் எரித்து போயிருக்கிறீர்கள்.அதை என்னால் திரும்ப மீட்டெடுக்கவே முடியாது. 

நீங்கள் இந்தக் கொடுமையையெல்லாம் உங்களுக்கு தீங்கோ,கொடுமையோ செய்வதை கற்பனை கூட செய்யாத எங்களுக்கு செய்திருக்கிறீர்கள்.

இந்த விளையாட்டில் நாங்கள் எப்போதும் ஆடுகள்.நீங்களோ ஒநாய்கள்.நாங்கள் எங்கள் குணங்களை பாதுகாத்துகொள்கிறோம். ஆனால் நீங்கள் உங்கள் குணங்களை மாற்றிக் கொள்வீர்கள் என்று நம்பிக்கை வைக்கிறேன்.

எந்த சூழ்நிலையிலும் உங்கள் சாபங்களுக்கு பதிலாக ஆசீர்வாதத்தையே உங்களுக்கு கொடுக்க விரும்புகிறோம்.

பிர்மிங்ஹாம் மக்களின் முந்தைய தனித்தன்மை அவர்களின் அமைதியான நல்ல குணங்களில் இருந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.அந்த தனித்தன்மையையே நீங்களும் பின்பற்றி நல்வழி திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் உண்மையான
ஜோசப் பிரிஸ்ட்லீ >>

Monday, 7 October 2013

Leblanc's Process

நீங்கள் கண்டுபிடிக்கும் அறிவியல் கண்டுபிடிப்பு உங்களுக்கு எதைத் தரும்.புகழைத் தரும்.பணத்தைத் தரும்.இன்னும் வேறு என்னவெல்லாம் அது தரும் ?

Nicholas Leblanc என்னும் பெயரை எப்படி உச்சரிப்பது என்று கண்டிபிடிக்க முடியாததால்.நான் ’லீப்லான்’ என்றே உச்சரிக்கிறேன்.

கந்தகம் (Sulphur) ஆதிகாலத்திலிருந்தே மனிதன் உபயோகிக்கும் தனிமம்.அதை வெடிப்பதற்கும் எரிப்பதற்கும் மட்டுமே உபயோகித்தனர்.

அதன் பிறகு கந்தக அமிலம் கண்டுபிடித்தனர் (Sulphuric acid).இது கெமிஸ்டிரி உலகத்தில் இன்னொரு முக்கியமான நிகழ்வாகும்.

இந்த சமயத்தில் சோப்பு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ’காரம்’ (Alkali) அதிகம் தேவையாயிருந்தது.எது அதிகத் தேவையோ அதைக் செய்யும் முறையை கண்டுபிடிக்க போட்டிகள் இருக்கும் என்ற முறையில் காரம் கண்டுபிடிக்க போட்டியிருந்தது.

எல்லோரும் அதைப் பற்றிய ஆராய்ச்சியை செய்து கொண்டு இருந்தனர்.அதிலும் ’சோடியம் கார்பினைடு காரம்’ கம்பெனிகளால் அதிகம் விரும்பப்பட்டது.ஆனால் அதை செய்ய முடியவில்லை.கொஞ்சமாகத்தான் செய்ய முடிந்தது.

1737 ஆம் ஆண்டு சோடா ஆஷ்( சோடியம் கார்பனைடு என்னும் சோப்பு கம்பெனிக்காரர்களால் காதலிக்கபட்ட கெமிக்கல்) மற்றும் உப்பு (Nacl என்னும் நாம் வீட்டில் உபயோகிக்கும் உப்பு) என்ற இந்த இரண்டு கெமிக்கலும் சோடியத்தில்(தனிமம்) இருந்து வந்தவைகள்தான் என்று மொன்சியூ (Monceu) விஞ்ஞானி கண்டுபிடித்தார்.

1772 இல் ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஸ்கிலீ (Scheele) என்பவர் சல்பூரிக் அமிலத்தை உப்போடு கலந்தால் சோடியம் சல்பேட் கிடைக்கும் என்று கண்டுபிடித்தார். (நமக்குத் தேவை சோடியம் கார்பனைடு அத கண்டுபிடிக்கிறதுக்குதான் ஒவ்வொன்னா வருது).

பிரிட்டன் விஞ்ஞானி ஜேம்ஸ் கெயர் (James keir) கண்டுபிடிக்கப்பட்ட சோடியம் சல்பேட்டுடன், சோடியம் ஹைடிராக்சைடை (Slacked lime) சேர்த்தார்.சோடியம் கார்பனைடு கிடைதது.அதனுடன் கிரியா ஊக்கியாக நிலக்கரியையும் இரும்பையும் உபயோகித்தார்.

கெமிக்கல் ரியாக்சனில் பங்கேற்காது ஆனால் துரித்தப்படுத்தவோ அல்லது மெல்ல நடக்கச்செய்வதோ கிரியா ஊக்கி (Catalyst) என்போம்.

இன்னொரு வாட்டி வரேன்.

சோடியம் கார்பனைடு + சல்பியூரிக் ஆசிட் = சோடியம் சல்பேட்டு

சோடியம் சல்பேட்டு + சோடியம் ஹைடிராக்சைடு + கரி = சோடியம் கார்பனைடு

ஆனா என்னப் பிரச்சனைன்னா, சோடியம் கார்பனைடு கொஞ்சமாத்தான் கிடைச்சது.ஆனா அதுக்கான தேவை அதிகமா இருந்தது.விஞ்ஞானிகள் ஆராய்ச்சி தொடர்ந்தது.

அப்போதுதான் நம்ம ஹீரோ ’லீப்லான்’ Nicholas Leblanc ஒரு முறையைக் கண்டுபிடிக்கிறார்.மிகவும் எளிமையான முறை அது.

சோடியம் சல்பேட்டு + சோடியம் ஹைடிராக்சைடு + கரி = சோடியம் கார்பனைடு என்று பார்த்தோமில்லையா.

இதனுடன் ‘சுண்ணாம்புக் கல் ( Limestone or Chalk ) சேர்த்துப் பார்த்தார்.

மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.

லிப்ளானுடைய முறையால் நிறைய வாசிங் சோடா என்ற சோடியம் கார்பனைடு கிடைத்தது.அவருடைய முறை நடைமுறையில் செய்ய எளிதாய் இருந்தது.எளிதாய் இருந்தது.அளவும் நிறைய கிடைத்தது.

’லீப்லான்’ Nicholas Leblanc அதற்கு பேட்டண்ட் எடுத்து வைத்துக் கொண்டார்.

’லீப்லான்’ Nicholas Leblanc அவரே ஒரு பேக்டரி ஆரம்பிக்க திட்டமிட்டு, இரண்டாம் லூயிஸ் பிலிப் என்ற பிரபுவுடன் சேர்ந்து பேக்டரி ஆரம்பித்தார்.ஒரு நாளைக்கு கால் டன் சோடியம் கார்பனைடு தயாரிக்கும் தொழிற்சாலையாக வளர்ந்தது.

ஆனால் ’லீப்லான்’ Nicholas Leblanc யின் துரதிஸ்டம் அந்த நேரத்தில் பிரஞ்சு புரட்சி வந்தது.அந்த போராட்டக்காரர்கள் பிரபு இரண்டாம் லூயிஸை கில்லட்டின் மெசினில் வைத்து தலையை துண்டித்து கொன்றனர்.

’லீப்லான்’ Nicholas Leblanc வைத்திருந்த பேடண்ட் உரிமையைப் பறித்து அது செல்லாது என்றார்கள்.அந்த முறையை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்றார்கள்.
ஃபிரஞ்ச் கெமிக்கல் ஜர்னலில் ’லீப்லான்’ Nicholas Leblanc கண்டுபிடித்த முறையை எல்லோரும் பார்க்கும் படியாக வெளியிட்டார்கள்.

ஆனால் ’லீப்லான்’ Nicholas Leblanc அவர் உரிமைக்காக பலமுறை போராடினார்.பல கடிதங்கள் எழுதினார்.தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்பின் பேடண்ட் தனக்கே சொந்தம் என்று மனம் புழுங்கினார்.

1806 ஆம் ஆண்டு மனக்கவலையும் இறுக்கமும் அதிகமாக ’லீப்லான்’ Nicholas Leblanc துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இப்போது சொல்லுங்கள்...

நீங்கள் கண்டுபிடிக்கும் அறிவியல் கண்டுபிடிப்பு உங்களுக்கு எதைத் தரும்.புகழைத் தரும்.பணத்தைத் தரும்.இன்னும் வேறு என்னவெல்லாம் அது தரும்.

பின்குறிப்பு : Nicholas Leblanc இறந்த பிறகு Dize என்பவர் அது தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு என்று வழக்கு போட்டார்.அதை விசாரித்து Nicholas Leblanc தான் உண்மையான கண்டுபிடிப்பாளர் என்று அறிவித்தனர்.

நாம் சிறுவயதில் படிக்கும் Leblanc's Process பின்னால் ஒரு விஞ்ஞானியின் மனப்புழுக்கமும் தற்கொலையும் இருக்கிறது.

Tuesday, 24 September 2013

சக்கிலிய பிராமண உருமாற்றம் - முத்துப்பட்டன் கதை

பதினாறாம் நூற்றாண்டு அல்லது பதினேழாம் நூற்றாண்டு காலககட்டத்தில்தான் முத்துப்பட்டன் கதை நடந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் நா.வானமாமலை சொல்கிறார்.

முத்துப்பட்டன் என்பவன் ஏழு அண்ணன்களுக்கு பிறகு எட்டாவதாக பிறக்கிறான்.பிராமண குலத்தில் பிறக்கிறான்.ஆச்சாரமாய் வளர்கிறான்.

ஏனோ அவனுக்கு அண்ணன்களை பிடிக்கவில்லை.ஆகையால் அவர்களை விட்டு விலகி மற்றொரு சிற்றரசரிடம் வேலை செய்கிறான்.

சில ஆண்டுகள் பிறகு முத்துப்பட்டனின் ஏழு அண்ணன்களும் அவனைத் தேடி வருகின்றனர்.முத்துப்பட்டனை சமாதானப்படுத்தி அழைத்து சென்று கொண்டிருக்கும் போது,ஒரு குளத்தில் நீர் எடுக்க வந்த பொம்மக்கா திம்மக்கா என்று இரண்டு சக்கிலிய பெண்களைப் பார்த்து முத்துப்பட்டன் காதல் கொள்கிறான்.

அவர்களிடம் பேச்சு கொடுக்கிறான்.அந்தப் பெண்கள் பயந்து வீட்டிற்கு சென்று அவர்கள் தந்தை வாலபகடையிடம் பிராது கொடுக்கிறார்கள்.

வாலபகடை அரிவாளுடன் ஆவேசத்துடன் வரும் போது, பொம்மக்கா திம்மக்கா மேலுள்ள காதலால் மூர்ச்சையுற்று முத்துப்பட்டன் தரையில் கிடக்கிறான்.

வாலப்ப்கடை முத்துப்பட்டனைப் பார்த்து மனமிரங்குகிறான்.

எப்படி பிராமணன் சக்கிலியக்குடியில் பெண்ணெடுப்பது சாத்தியம் என்கிறார் வாலப்பகடை.

காதல் இருந்தால் எல்லாம் சாத்தியமே என்கிறான் முத்துப்பட்டன்.

வாலப்பகடை முத்துப்பட்டன் தன் குல அடையாளத்தை விட்டு விட்டு நாற்பது நாட்கள் சக்கிலியனாய் வாழ்ந்து காட்டினால் மட்டுமே நம்பிக்கை வருமென்றும்,அதன் பிறகே தன் மகள்களை திருமணம் செய்து தர முடியுமென்றும் சொல்கிறான்.

குடுமியையும் பூணூலையும் அறுத்தெறிந்து,முத்துப்பட்டன் சக்கிலியனாய் வாழ்கிறான்.இதற்கிடையில் முத்துப்பட்டனின் அண்ணன்மார்கள் அவனை சிறை வைக்கிறார்கள்.

முத்துப்பட்டன் அவர்களிடமிருந்து தப்பி ஒடி வாலபகடையிடம் வந்து சேர்கிறான்.வாலப்பகடை மகிழ்ந்து தன் இரண்டு மகள்களையும் முத்துப்பட்டனுக்கு திருமணம் செய்து வைக்கிறான்.

மாமனார் வீட்டில் சந்தோசமாக இருக்கும் முத்துப்பட்டனுக்கு சோதனை வருகிறது.வாலப்பகடை வைத்திருக்கும் மாடுகளை கவர்ந்து கொண்டு ஊத்துமலை வன்னியரும்,உக்கிரங்கோட்டை வன்னியரும் செல்கின்றனர்.

மாட்டை திருடுபவர்களிடம் போரிட்டு வீரமரணம் அடைகிறான் முத்துப்பட்டன்.

இந்தக் கதையை திருநெல்வேலி மாவட்டத்தில் வில்லுப்பாட்டாக பாடுகின்றனர்.

சொரிமுத்து ஐயர் கோவில் என்ற கோவிலில் இந்தக்கதையை முத்துப் புலவர் என்றொருவர் பரம்பரை வழியாக பாடிக் கொண்டிருக்கிறார்.

இன்னும் பல கோவில்களில் இந்தக் கதையை பாடுகிறார்கள்.எல்லாக் கோவில்களிலும் பொம்மக்கா திம்மக்கா என்பவர்கள் சக்கிலியர்களே.

ஆனால் முத்துப் புலவர் பாடும் கோவிலில் மட்டும் இந்த பொம்மக்கா திம்மக்கா என்பவர்கள் ஒரு பிராமணனின் மகள்கள் எனவும்.காட்டில் தொலைந்து போகிறார்கள் எனவும்.அவர்களையே வாலப்பகடை எடுத்து வளர்க்கிறான் எனவும் கதை சொல்கிறார்.

அதனால் முத்துப்பட்டன் காதலித்த பெண்கள் சக்கிலியர்கள் அல்ல பிராமணப் பெண்களே என்று புலவர் நிறுவுகிறார்.

பேராசிரியர் வானமாமலைக்கு இது ஆச்சர்யம்.முத்துப்பட்டனின் கதையின் அடிப்படையே தாழ்த்தப்பட்டவர்களின் உணர்வுகளைச் சொல்வதுதான்.

உதாரணமாக வாலப்பகடை முத்துப்பட்டனிடம் இப்படை சொல்கிறான் உண்ர்ச்சிகரமாக

நாயல்லவோ எங்கள் குலம் ஒ நயினாரே
நாற்றமுள்ள விடக்கொடுப்போம் ஒ நயினாரே
செத்தமாடறுக்க வேணும் ஒ நயினாரே
சேரிக்கெல்லாம் பங்கிட வேணும் ஒ நயினாரே
ஆட்டுத்தோலும் மாட்டுத்தோலும் அழுக வைப்போம் நயினாரே
அதையெடுத்து உமக்கு நன்றாய் அடியறுப்போம்
செருப்பு தைப்போம் வாரறுப்போம்
அதை எடுத்து கடைக்கு கடை கொண்டு விற்போம்
சாராயம் கள் குடிப்போம் வெறிபிடித்தபேர்
சாதியிலே சக்கிலியந்தான் நயினாரே.

மேலும் இன்னொரு இடத்தில் முத்துப்பட்டனின் அண்ணகள் கேட்கிறார்கள்.முத்துப்பட்டன் உணர்ச்சிகரமாக தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை சொல்கிறான்.

1.தம்பி! செத்தமாட்டை சாப்பிடும் சக்கிலியன் வீட்டில் பெண்ணெடுக்கலாமா?
அண்ணே !நல்ல மாட்டின் பாலையெல்லாம் உறிஞ்சி நாளெல்லாம் குடிச்சிபுட்டு,செத்த மாட்டத்தான சக்கிலியனுக்கு கொடுக்குறீக.

2.தம்பி! வயல்ல புழுவையும் பூச்சியையும் வயல் நண்டையும் புடிச்சி ஆய்ஞ்சி திங்குற சக்கிலியன் வீட்டுல் பெண்ணெடுக்கலாமா?
 அண்ணே ! வயலுக்கு மேல வெளயுற நெல்லு எல்லாத்தையும் வக்கனையா வழிச்சி தின்னு, நண்டையும் புழுவையும் தானே      சக்கிலியனுக்கு நாம கொடுக்குறோம்.

இது போன்ற உணர்ச்சிகரங்கள் இருக்கும் கதையில் எப்படி பொம்க்காவும் திம்மக்காவும் பிராமணர்களாக இருக்க முடியும் என்று பேராசிரியர் நா.வானமாமலை முத்துப் புலவரிடம் பழகி விசாரிக்கிறார்.

கொஞ்சம் தயங்கி முத்துப் புலவர் சொல்கிறார்.இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தான் இளமையாக இருக்கும் போது அவரிடம் வந்த உயர்சாதியினர் “எப்பா பிராமணன் சக்கிலிச்சிய கட்டிக்கிறதும், பழகுறது கேட்க நல்லாவா இருக்கு,இங்குன கோவிலுக்கு நாலு பெரிய மனுசங்க வந்து போறானுங்க,அவங்களுக்கு கூச்சமாயிருக்காத இது மாதிரி தரங்கெட்ட கதகளக் கேட்க.பாட்ட மாத்தி சொல்லு,கதையை கொஞ்சம் மாத்து” என்று முத்துப் புலவரை வற்புறுத்தியிருக்கிறார்கள்.

முத்துப்புலவர் என்ன செய்வார்.பணம் வேண்டுமே வயிற்றை நிரப்ப. ‘மொள்ளாலிகள்’ ஆசைப்பட்ட மாதிரியே பொம்மக்காவையும் திம்மக்காவையும் சக்கிலிச்சியில் இருந்து பிராமணத்திகளாக மாற்றிவிட்டார்.

உயர்சாதியினர் தங்கள் ஆதிக்கங்களை பழங்கதைகளுக்குள்ளாகவும் புகுத்தி விட்டனர்.புகுத்தி கொண்டிருக்கின்றனர்.கவனமாய் இருக்க வேண்டும் என்று நா.வானமாமலை சொல்கிறார்.

இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.உயர்ஜாதி அல்லாத மக்கள் ஆடி மாசம் பயபக்தியுடன் கொண்டாடும் கொடைகளை மற்றவர்கள் கிண்டல் செய்யும் போக்கு பொதுவாக நம்மிடம் இருக்கிறது.

ஆத்தாவை கிண்டல் செய்வது.அம்மனுக்கு கூழ் ஊத்துவதை கிண்டல் செய்வது.கருவாட்டுக் குழம்பை கிண்டல் செய்வது,கோயிலுக்கு படையல் போடுவதை கிண்டல் செய்வது போன்றவைகளை சொல்லலாம்.

அன்று இந்துமதக் கலைகளஞ்சியம் என்ற புத்தகம் வந்திருப்பதாக ஒரு செய்தியில் படித்தேன்.அதை நான் இன்னும் வாசிக்கவில்லை.ஆனால் எனக்குள் ஒரு பதட்டம் இருந்தது.

அந்தப் புத்தகத்தில் வைதீகமான இந்து மதமே உண்மையான இந்து மதம் என்று நிறுவி இருப்பார்களோ என்று.

ஏனென்றால் பெரும்பான்மையான இந்துக்கள் அவர்கள் சொந்த வழிபாடு என்று நிறைய் முறைகளை வைத்திருக்கிறார்கள்.சொந்தக் கதைகளை என்று நிறைய வைத்திருக்கிறார்கள்.

அவற்றில் எல்லாம் பிராமணத்தன்மையும் வைதீகத்தையும் புகுத்த சதா முயற்சிகள் நடந்து வருகின்றன.

கோவில்களில் பலியை தடுக்க அரசு இட்ட ஆணையை எந்த சாமியாரைக் கேட்டு போட்டது என்று நம் எல்லோருக்கும் தெரியும்.

என் கவலை என்னவென்றால் அவரைப் போன்ற சைவ வைணவ ஆச்சாரியார்கள் சொல்வதே இந்து மதம் என்று நாம் நினைத்து விடக் கூடாது என்பதுதான்.

இந்து மதத்தின் கட்டமைப்பு மந்திரங்களில் ஆச்சாரங்களில் இல்லை. அவரவர்க்கு வழிபடும் உரிமையை கொடுக்கும் அந்த தன்மையில் இருக்கிறது.

அதை நேரடியாக அழிக்க முடியாதவர்கள், இந்த முத்துப்பட்டன் கதையை அழித்தது மாதிரி மறைமுகமாக வருகிறார்கள்.

கவனம் தேவை. 

Saturday, 21 September 2013

பாண்டியனும் யானையும்...

வடிவேலு காமடியில் பொண்ணு பார்க்க போன இடத்தில் மாப்பிள மொக்கசாமி வந்திருக்காக, மற்றும் உறவினர்கள் எல்லாம் வந்திருக்காக வாம்மா மின்னல் என்று சொன்னவுடன் “சல்லென்று” மின்னலாக அந்த பெண் போகும் காட்சி எல்லோருக்கும் தெரிந்ததே.( எப்படி ஜனரஞ்சக்மா தொடங்கினேன் பாத்தீங்களா).

அது போல பாண்டிய மன்னன் போரில் ஜெயித்து ஊருக்குள் யானைமேல் விஜயம் செய்யும் போது, பெண்கள் எல்லோரும் பாண்டிய மன்னனை ரசிக்கிறார்கள்.

இன்னும் கொஞ்சம் ரசிப்பதற்கு முன்னால் மன்னனை சுமந்த பெண் யானை கடந்து விடுகிறது.

உடனே பெண்களுக்கு யானை மீது கோபம் வந்து விடுகிறது. “ஏம்மா யானை கொஞ்சம் ஸ்லோவாத்தான் போயேன்.பொம்பளன்னா ஒரு அடக்க ஒடுக்கம் வேணாம்.இப்படி வேகமா போனா என்ன அர்த்தம்” என்று கோபிக்கிறார்கள்.

இது முத்தொள்ளாயிரத்தில் ஒரு பாடலில் வருகிறது.

பாடல்:

எலா மடப்பிடியே
எம்கூடல் கோமான்

புலா அல் நெடுநல்வெல்
மாறன்-உலா அங்கால்

பைய நடக்கவும்
தேற்றாயால் நின்பெண்மை

ஐயப் படுவது 
உடைத்து.

விளக்கம்:
என் தோழியே! 
என் அழகிய இளம் பெண் யானையே!
எங்கள் அரசற்பெருந்தகை
பகைவரின் சதையில் பாய்ந்த வேல்தனை,
கொண்டிருக்கும் பாண்டிய மன்னன்
உன் மீதேறி உலா வரும் போது
உனக்கு மெல்ல நடக்கவும் தெரியவில்லையென்றால்,
உன் பெண்மை சந்தேகப்படும் படி உள்ளது.

இந்தப்பாடலில் என்னை கவர்ந்த வார்த்தை பாடலின் முதலில் தொடங்கும் “எலா”. ”எலா” என்றால் என் தோழியே என்று அர்த்தம்.

இருப்பினும் தென்னிந்திய சைவ சிந்தாந்த கழகம் 1971 இல் வெளியிட்ட “கழகத்தமிழ் கையகாராதி” புத்தகத்தை புரட்டி அர்த்தம் பார்த்தேன்.அதில் 

/எலா -நண்பினரை விளிக்கும் ஒரு விளிப்பெயர்./ என்று இருந்தது

நான் இந்த “எலா”என்ற வார்த்தை திருச்செந்தூர் தூத்துகுடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் பக்கத்தில் கேட்டிருக்கிறேன்.என் அம்மா பேசி கேட்டதில்லை.ஆனால் ஆச்சி பேசி கேட்டிருக்கிறேன்.

“எலா இங்க வாலா”
”எலா எங்கனலா ஒழிஞ்சி போயிட்ட.தொவையல் அரைச்சியா இல்லியா.”

அது ரொம்ப லோக்கலான ஒரு மொழி என்று அதை பின் வரும் சந்ததியினர் விட்டுவிட்டனர்.

இது பற்றி அம்மாவிடம் போன் செய்து கேட்டபோது. இந்த “எலா” என்ற வார்த்தையை ஆசாரி (விஸ்வகர்மா) ஜாதியினர் அதிகம் உபயோகிப்பார்கள் ஆறுமுகநேரியில் என்றார்.

ஆக “எலா” என்பது ஒரு சுத்த தமிழ்.இனிப்பான தமிழ்.இது மாதிரி எத்தனை வார்த்தை நம்ம மொழிய விட்டு நம்ம கூச்சத்தால “அப்ஸ்காண்ட்” ஆச்சோ தெரியல.

அது மாதிரி இதில் இருக்கும் இன்னொரு வார்த்தை “பைய”. ”பைய” என்றால் மெதுவாக என்றர்த்தம்.

குமரி மாவட்டத்தில் “பைய” என்றுதான் சொல்வார்கள்.

“யல பைய செய்யேம்ல இல்லனாக்கி ஐயம்மா போயிரும்” ( மெல்லச்செய் இல்லையெனில் கெட்டதாய் போய்விடும்).



Thursday, 19 September 2013

சின்னப்பையனும் கணக்கும்...

கணிதம் எனக்கு ஒரு பிரச்சனையானது மூன்றாம் வகுப்பில்தான்.

மல்டி டிஜிட்ஸ்ஸை சிங்கிள் டிஜிட்டால் பெருக்குவது எனக்கு பிரச்சனையில்லை( 1481 x 3)ஆனால் மல்டி டிஜிட்டை மல்டி டிஜிட்டால் பெருக்குவது ( 567 x 67 ) அந்த வயதில் சுத்தமாக புரியவில்லை..

மேத்ஸ் மிஸ்ஸான மலர் மிஸ்ஸுக்கும் எனக்கும் ஒவ்வாமை வந்தது அந்த கணக்கில்தான்.

கணக்கு என்றால் பயம் வந்ததும் அதில் இருந்துதான்.

நான்காம் வகுப்பில் (ஃப்ராக்சன்ஸ்)பின்னம் புரியவே இல்லை.

1,2,3 போன்ற நம்பர்களோடு டீல் செய்துகொண்டிருந்த என்னை இந்த 1/2,1/4 போன்ற நம்பர்கள் துன்புறுத்தின.

நான்காம் வகுப்பு முழுவருட பரீட்சை எல்லாம் எழுதிமுடித்த பிறகு, ஒரு மதியம் எனக்குள் ஒரு ஃப்ளாக்ஷ் அடித்தது.

1/2 என்றால் அரை ஆப்பிள்.1/4 என்றால் கால் ஆப்பிள்.ஒன்றை இரண்டாக பிரித்தால் அரை வருகிறது. அதனால்தான் ஒன்றை மேலே போட்டு இரண்டை கீழே போட்டிருக்கிறார்கள்.

புரிந்தது புரிந்துவிட்டது.

முதன் முதலில் கணிதம் மேல் ஆர்வம் வர அந்த புரிதலே காரணமாய் இருந்தது.

என் மேத்ஸ் புக்கை எடுத்துப்பார்த்தேன். எல்லா பின்ன நம்பர்களையும் ஆழமாக புரிந்து கொண்டேன்.7/8 என்றால் ஏழு மடங்கை எட்டு மடங்கால் பிரித்தால் என்ன வரும்? இது மாதிரி யோசித்து கொண்டே இருந்தேன்.

அட அது நல்லாத்தான் இருந்தது அந்த ஃபீலிங்.

எந்த ஒரு கணிதமும் பிராக்டிக்கல் சென்ஸ் இல்லாமல் உருவாவதில்லை என்ற தெளிவை பெற்றேன்.

இப்போதும் நன்கு கற்றவர்கள் கூட கேட்பார்கள்

இந்த “மாடர்ன் அல்ஜிப்ரா,காம்ளக்ஸ் நம்பர்” சப்ஜக்டெல்லாம் படித்தால் பிராக்டிக்கலா அதுல என்ன யூஸ்.

ஏழாம வகுப்பில் எனக்கு டார்வின் சுந்தர் என்ற நண்பன் உண்டு. ஃப்ரீ பீரியட்களில் எனக்கும் டார்வின் சுந்தருக்கும் பிடித்த பொழுதுபோக்கு என்னவென்றால் ரஃப் நோட்டில் ஸ்கொயர்களை எழுதுவது.(25 x 25 = 625, 35 x 35 = 1225) என்று ஒன்றிலிருந்து வரிசையாக எழுதி கொண்டே போவோம்.

கிட்டதட்ட ஆயிரம் நம்பர்கள் வரை எழுதினோம்.

நண்பர்களோடு பழக்கமாவது போல் நம்பர்களோடு பழக்கமானது அப்படித்தான்.

வர்க்கமூலம்(ஸ்கொயர் ரூட் ) கண்டுபிடிப்பதும் எங்கள் பொழுது போக்காய் இருந்தது.

எட்டாம் வகுப்பில் ”பொன் உமாபதி” நட்பு கிடைத்தது.

கணக்கு புத்தகத்தில் ”அவுட் ஆஃப் சிலபஸ்” என்று பரிட்சைக்கு வராத ஆனால் கண்க்கை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை விவாதிப்போம்.”பை” 22/7 டிவைட் செய்து கொண்டே இருப்போம்.

அதுவும் நல்ல பொழுது போக்காய் அமைந்தது.

எட்டாம் வகுப்பில் எனக்கு அண்ணன்கள் Trignomentary சொல்லித்தந்தார்கள்.

சைன் தீட்டா, காஸ் தீட்டா, தான் தீட்டா என்று சொல்லவே பெருமையாய் இருந்தது.

புரிந்தே படித்தேன்.

பத்தாம் வகுப்பில் என் முதல் மன்திலி பரிட்சையில் இருந்து பப்ளிக் எக்ஸாம் வரையில் நூற்றுக்கு நூறு எடுத்தேன். ஆம். ஒரு மார்க் கூட குறையவில்லை.அதை என்னுடைய பெரிய சாதனை என்று நண்பர்கள் புகழ்வார்கள்.

பத்தாம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் முடிந்த பிறகு மூன்று மாதங்கள் லீவு விடுவார்கள்.அந்த லீவில் எனக்கொரு ஆர்வம் தோண்றியது.

மேத்ஸில் புதிதாக எதையாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்பதுதான் அது.

இப்போ நம்பர் தியரி இருக்கு, ட்ரிக்ணாமெண்டரி இருக்கு அதுமாதிரி ஏன் நாமளும் கணக்கில் புதுசா எதையாவது கண்டுபிடிக்க கூடாது.

யோசித்தேன் யோசித்தேன் யோசித்தேன்.

- சைக்கிள் ஒட்டிகொண்டு போகும் போது ஏற்றத்தை பார்த்தால் ஒரு சலிப்பும் இறக்கத்தை பார்த்தால் ஒரு ஜாலியும் வருகிறதே. இதை வைத்து ஏதுனா மேத்தமெட்டிக்கல் மாடல் உருவாக்க முடியுமா?

-சில பேருக்கு நல்லா ஒவியம் வரைய வருது, சில பேரால் முடியல் அதபத்தி எதாவது மேத்ஸோட தொடர்பா? ...

- வர்ணங்களை எண்களாக்க முடியுமா? அல்லது மேத்ஸ்ல ரெப்ரஸண்ட் பண்ண முடியுமா? இப்போ மஞ்சளையும் நீலத்தையும் கலக்கினா பச்சை வருது. அது மாதிரி வர்ணங்கள மேத்ஸ்ல ரெப்ரசண்ட் பண்ணினா? என்ன வர்ணத்த கலக்கினா என்னென்னா வர்ணங்கள் கிடைக்கும் அப்படிங்கிறத பேப்பர்ல போட்டே தெரிஞ்சிக்கலாம்.ஒவ்வொரு கலரா மிக்ஸ் பண்ணிகிட்டே இருக்கதேவையில்லைதானே.

இப்படி எதுனா ஒண்ணு யோசிச்சிகிட்டிருப்பேன்.ஆனா புதுசு புதுசா யோசிப்பேன். நிறைய

கிறுக்குத்தனமாத்தான் இருக்கும்.

இருந்தாலும் அந்த யோசிக்கும் சுதந்திரம் கொடுக்கும் கிக்கே தனியானது.

செஸ்ஸில் கணித்தத்தை புகுத்த முடியுமா என்று டிரை ப்ண்ணினேன்.

ராணிக்கு அதிக பாயிண்ட், ராஜாவுக்கு சைபர் பாயிண்ட் ( ஏன் ராஜாவுக்கு சைபர் கொடுத்தேன் என்றால் சைபர் இல்லாமல் எந்த நம்பரும் இல்லை. அது போல் ராஜா இல்லாமல் செஸ்ஸே இல்லைதானே.சைபர் ராஜா ரெண்டுமே கொஞ்சம் அமைதியாத்தானே இருக்கும். எப்படியெல்லாம் யோசிச்சிருக்கேன் பாத்தீங்களா)

அப்புறம் செஸ் போர்டில் நடுவில் இருக்கும் நான்கு கட்டங்களை நீங்கள் ஆக்கிரமித்தால் எளிதாக வெல்லலாம் என்று ஒருவர் டீவியில் சொன்னார்.

அந்த “செண்டிரல் ஸ்குயர்ஸ்க்கு” தனி மதிப்பு கொடுத்தேன்.

இப்படி பேப்பரையும் பேனாவை வைத்து ஒரே ஆராய்ச்சிதான்.

என்னுடைய ஆராய்ச்சிகள் மிகவும் ரகசியமானவை.

அண்ணகளுக்கு தெரியாது. தெரிந்தால் கிண்டால் செய்வான்கள் என்ற வெட்கம்தான் காரணம்.

அப்படியே ஆராய்ச்சி போனது.

கடைசியில் உருப்படியாய் ஒன்றை கண்டுபிடித்ததாய் நினைக்க வைத்ததும் நடந்தது.

ஒரு காலைவேளையில் சைக்கிளில் போய் கொண்டிருக்கும் போது நினைத்தேன்.

நாகர்கோவில் கலெக்டர் ஆபீஸை அதிமிக்கேல் தெருவழியாக போயும் அடையலாம்.ராமவர்மபுரம் போயும் அடையலாம்.சேரும் புள்ளி ஒன்றாய் இருந்தாலும் வழி வேறு வேறுதான்.

அப்படியானல் அந்த இரண்டு வழிகளையும் சமண்பாடு செய்யலாம்.

அட நான் ஒன்று கண்டுபிடித்து விட்டேன்.

நான் ஒன்றை கண்டுபிடித்துவிட்டேன்.

”யல விஜய்யி சரியான ஆள இருக்கியேல.கணக்குலயே புதுசா ஒண்ண கண்டு பிடிச்சிட்டியே.பெரிய மத்தவ்னதாம்ப்ள நீ” என்று பெருமை பட்டுக்கொண்டேன்.

அதைப் பற்றியே சிந்தித்து கொண்டிருந்தேன் .ஆனால் அதற்கு மேல் அந்த கணித தத்துவத்தை எப்படி கொண்டு போவது என்று தெரியவில்லை.

பத்தாம் வகுப்பு முடிந்து பதினொன்றாம் வகுப்பு சேர்ந்து ஒரு மாதம் முடிந்த பிறகு வாத்தியார் “Vector algebra" எடுத்தார்.

ஏ வெக்டார் பிளஸ் பி வெக்டார் இஸ் இம்ளைஸ் சி வெக்டார்.

இப்போ ஒரு புள்ளியை இப்படியும் போய் அடையலாம்.அப்படியும் போய் அடையலாம். எப்படியும் போய் அடையலாம். அதைத்தான் வெக்டார் அல்ஜிப்ரா சொல்ல வருகிறது என்று சொன்னார்.

எனக்குன்னா அதிர்ச்சி.

அது நான் யோசித்து வைத்து இருந்தது.

அட மாக்கான்களா என் கண்டுபிடிப்பை அல்ரெடி நீங்க எல்லாம் சேர்ந்து கண்டுபிடிச்சிட்டீங்களாடா

பாவிகளா.

வெக்டார் அல்ஜிப்ராவாம் வெக்டார் அல்ஜிபரா. என்று கிளாஸை கவனித்து கொண்டிருந்தேன்.

பாக்ராஜ் அந்த ஏழுநாட்களில் சொல்வாரே “இது எண்ட டியூனு எண்ட டியூனு “ என்று. அதுமாதிரியான கூவல் எழுந்தது.

அப்புறம் பிளஸ் ஒன் படிப்பு பளுவினாலும், இண்டகிரேசன் டிப்பிரண்சேசன் கால்குலஸில் ஃப்யில் ஆகும் வரை போனதாலும் என்னுடைய கணிதம் கண்டுபிடிக்கும் ஆர்வம் அதுவாக தற்கொலை செய்து கொண்டது.

பிற்காலத்தில் “ஜான் நாஷ்” என்ற கணித மேதையின் படமான “பீயூட்டியுஃபுல் மைண்ட்” படம் பார்க்கும் போது ஒரு காட்சி ஈர்த்தது.

அதில் ரசல் குரோவ் ( ஜான் நாஷ்) பறவைகளுக்கு தீனி போடுவார்.

எந்த புறா முன்னாடி வந்து அந்த தீவனத்தை உண்கிறது. அதில் எதாவது கணிதம் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்வார்.

அவர் நோட்டில் அதை எழுதி வைத்திருப்பார்.

என்னுடைய கணித ஆராய்ச்சி நினைவுக்கு வந்தது.நான் சரியாத்தான் செய்திருக்கிறேன்.

தைரியமாக சிந்திக்கவேண்டியது அறிவியல் மற்றும் கணிதத்தில் முக்கியம்.அதை நான் செய்தே இருக்கிறேன்.

என்னைபோன்ற பல இளம் ஆர்வலர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள், இருந்து கொண்டிருக்கிறார்கள், இருப்பார்கள்.

அதை எப்படி நல்ல புராடக்டாக கன்வெர்ட் செய்கிறோம் என்பதில்தான் இந்தியா வல்லரசாவது இருக்கிறது.

எமெர்சன் வாசித்த “அமரிக்கன் ஸ்காலர்” கட்டுரை அமரிக்காவின் சிந்தனை முறையையே மாற்றியதாம் அல்லது வழிகாட்டியதாம்.

எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதை வாசித்துப்பாருங்கள்.

நாம் இன்னும் நிறைய வளரனும் தம்பி.

Monday, 9 September 2013

ஜெயகாந்தனைப் பற்றிய ஆவணப்படம்...

'எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்’ என்று கவிஞர் ரவிசுப்பிரமணியன் இயக்கிய ஆவணப்படத்தை கடந்த ஞாயிறு பனுவல் புத்தகநிலையம் தடாகம் அரங்கத்தில் பார்த்தேன்.

இந்தப் படத்தை தயாரித்தவர் இசையமைப்பாளர் இளையராஜா.வெளி வந்த ஆண்டு 2008.

படம் ஐந்தரை மணிக்கு ஆரம்பித்தது.பிரளயன் முன்னமே வந்திருந்தார்.ருத்ரனும்,ரவிசுப்பிரமணியனும் பின்னால் சேர்ந்து கொண்டார்கள்.

இந்த படம் ஜெயகாந்தனை ஏற்றிக் கூற முயற்சிக்கவில்லை.ஜெயகாந்தன் இப்படி இருக்கிறார் என்பதை காட்டுகிறது.ஜெயகாந்தன் கொண்டிருக்கும் பிற்போக்கு கருத்துக்களைக் கூட அவர் வாயாலே பேசச் செய்து பதிந்திருக்கிறார்கள்.

கண்டிப்பாக தீவிர சமுதாயப் பார்வையில் இருப்பவர்கள் இதைப் பார்த்தால் கொதிப்பார்கள்.

அப்படி ஒருவர் கொதித்தார்.அதை கடைசியில் பார்ப்போம்.இப்போது டாக்குமென்டரி பிட்ஸ்... என்னை ஈர்த்ததில் கொஞ்சம்.

-காந்திக்கு லியோ டால்ஸ்டாயை அறிமுகப் படுத்தினது ஒரு தமிழர்

-ஜெயகாந்தனுடைய சபையில் இத்தனை பேர்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.ராணித் தேனீயாக அவர் இருக்க வேண்டும் அவ்வளவுதான்.எந்த அளவுக்கு ஆவேசமாக பேசுவாரோ அது போலவே உடனடியாக அமைதியாகவும் பேசுவார்.கருத்துக்கள் தாண்டி, யாரையும் அவமானப்படுத்தி விட வேண்டும் என்று ஜெயகாந்தன் நினைப்பதில்லை.

-”என்னுடைய எழுத்து பிரச்சாரம் என்று விமர்சனம் இருக்கிறது.ஆம் பிரச்சாரம்தான்.எத்தனையோ பிரச்சாரங்கள் நல்ல இலக்கியங்களாக இருந்துள்ளன.இயேசுநாதரின் பிரச்சாரத்தை தாண்டிய நல்ல இலக்கியமில்லை.இங்கு ஏன் பிரச்சாரங்கள் இளக்காரமாய் பார்க்கபடுகிறது என்றால் கலைஞனைத் தவிரவும் நிறைய பேர் பிரச்சாரம் செய்கிறார்கள்.அதனால்தான்” - ஜெயகாந்தன்

-”நான் எழுத வரும் போது முதன் முதலில் அஞ்சியது எதுகை மோனைக்குதான்.அதை தவிர்த்தலே இலக்கியத்திற்கான முதல் படி என்று நினைத்தேன் .நானே பின்னர் “பாதை தெரியுது பார்” திரைப்படத்திற்கு பாட்டு எழுதினேன்.” - ஜே.கே

-மகாபாரதம் தெரியாதவன் அந்தச் சுவைய அறியாதவன் இந்தியன் ஆக மாட்டான் - ஜே.கே

-மயிர் என்பது தூய தமிழ்ச் சொல் அதைச் சொல்வது எப்படி கெட்ட வார்த்தை - ஜே.கே

-இசையில் மிக அதிக நாட்டம் உடையவர்.வீணையெல்லாம் கற்றுக்கொள்ள முயற்சித்திருக்கிறார்.

-தமிழ் எழுத்தாளன் சிந்தனையாளனாகவும் இருப்பான் என்பதை எல்லோருக்கும் முதன் முதலில் புரிய வைத்தவர் ஜெயகாந்தன் - அசோகமித்திரன்

-திராவிட கழக வீரமணியும்,ஜெயகாந்தனும் வகுப்புத்தோழர்கள்.சிறுவயதில் வீரமணியின் பெயர் சாரங்கபாணி,ஜெயகாந்தனின் பெயர் முருகேசன். ”சிறுவயதில் ஜெயகாந்தன் எனக்கு பீடி சுருட்டிக் கொடுத்து இழுக்கச் சொன்னார்.இழுத்துப் பார்த்தேன்.தலைசுற்றியது.அதன் பின் அந்தப் பக்கம் போவதே இல்லை “ என்று வீரமணி நகைச்சுவையாக சொல்கிறார்.

-”பெரியார் அண்ணா போன்றவர்களை பார்க்காமல் இருந்தான் நான் கம்யூனிஸ்டாக இருந்திருப்பேன் என்று கருணாநிதி சொல்கிறார்.ஆனால் நானோ பெரியார் அண்ணாவைப் பார்த்த பிறகுதான் கம்யூனிஸ்டாக மாறிப்போனேன்.- ஜே.கே

-”தமிழ்நாட்டில் திராவிட மாயையை திராவிட மோகத்தை குறைத்ததில் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவுக்கு முக்கிய பங்கு உண்டு.திருக்குறள் படிக்காமல் மார்க்ஸ் படிக்கும் எந்த கம்யூனிஸ்டும் உருப்பட மாட்டான்.முதலில் தமிழனாக உணர்ந்தாலே நல்ல பொதுவுடைமை சிந்தனையாளாராக முடியும்” என்று ஜீவா சொன்னதாக ஜெயகாந்தன் சொல்கிறார்.

-”எம்.ஜி.ஆர் பார்க்க ஆசைப்பட்டார் என்கிறார்.அவரைப் பற்றி நல்லவிதமாகத்தான் சொல்கிறார்கள்.இருந்தாலும் நான் அவரைப் பார்க்க விரும்பவில்லை” - ஜெயகாந்தன்.

-”காமராஜர் ஒருமுறை என்னிடம் அது என்னப் பாட்டு என்றார். நான் எது என்றேன். அதான் “யாதும் யாதும்” என்று யோசித்தார்.நான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” அந்தப் பாட்டையா சொல்கிறீர்கள் என்றேன். “ஆமா ஆமா அது எழுதினது யாரு” . அதை எழுதியது கணியன் பூங்குண்றனார் என்றேன்.காமராஜருக்கு அந்த அளவுக்கு தமிழ் எல்லாம் தெரியாது.ஆனால் அவர் அதற்கு வெட்கப்பட்டது கிடையாது.அதை வெளிப்படையாகச் சொல்வார். - ஜே.கே

-”கருணாநிதி என்னை மிக அழமான நட்பாக பலவருடம் நினைத்தார்.அதனால் அவரிடம் நடபானேன்” - ஜே.கே

-ஜாதி இருக்கிறது.அது இந்தியாவின் வேர் - ஜே.கே (இதைக் கேட்கும் போது கடும் அதிர்ச்சியாக இருந்தது எனக்கு.)

-பிராமண துவேசம் இனி தேவையில்லை. துவேசித்து என்ன ஆகிவிட்டது.பகைதான் வளரும் -ஜே.கே

-எதிரிகளைத் தேடிக்கொண்டே இருக்காதீர்கள் - ஜே.கே

-நானே பார்க்க விருப்பட்ட ஆளுமை, காஞ்சி மகா பெரியவர்.- ஜே.கே

-”முதாளித்துவம் வேண்டும்.உடனே பதினேழாம் நூற்றாண்டு முதலாளிகளை நினைத்துக் கொள்ள வேண்டாம்.நிர்வாகம் செய்யாமல் எந்த ஒரு இயக்கமும்.நிறுவனமும் முன்னேறாது” - ஜே.கே

-”எனக்கு விருது தந்ததன் மூலம் தமிழ் பல்கலைக் கழகம் தன்னை பெருமைபடுத்திக்கொண்டது” - ஜே.கே

-”ஜெயகாந்தன் நாடகம் நடிக்க சிறுவயதில் எவ்வளவு சிரமப்பட்டார் எனபதை நகைச்சுவையாக விளக்குகிறார். “தாயே இந்தப் பக்கம் வாருங்கள்” என்ற டயலாக்கை நாள் முழுவதும் மனப்பாடம் செய்ததை நகைச்சுவையாக விளக்குகிறார்

-”எனக்கு பிடித்த பெண் ஆளுமைகள் என்றால் அதில் முக்கியமானவர் அவ்வையார்.அவர் எல்லோருக்கும் தாய்.பயமில்லாதவர்” - ஜே.கே

-”பக்கத்து மாநிலக்காரன் உன்னை அடித்தாலும் நீ சட்டத்திற்கு உடப்பட்டுதான் இருக்கனும்.அதுதான் நியாம்.உன் நேர்மையை நியாத்தை எக்காரணம் கொண்டும் ஏன் நீ இழக்க வேண்டும்”- ஜே.கே

- “பிற எழுத்தாளர்கள் படைப்பை படித்து கருத்து சொல்வதில்லை.அது வெற்று “காஸிப்பாக” போய் விடுகிறது “ ஜே-கே

-1959 ஆண்டு திருச்சியில் நடந்த கூட்டத்தில் பெரியாரின் கருத்துக்களை, பெரியார் முன்னாலே எதிர்க்கிறார் ஜெயகாந்தன்.

-சில நேரங்களின் சில மனிதர்களை காட்டும் படக்காட்சிகள் வருகின்றன.

-இதுவரை வாழ்ந்த வாழ்க்கை நிறைவாகவே படுகிறது எனக்கு - ஜே.கே

-கடலூருக்கு போகிறார் ஜெயகாந்தன் (இன்றைய காலத்தில்).அங்கே ஒரு சிறுவனிடம் என்னைத்தெரிகிறதா என்று கேட்கிறார்.அவன் தெரியல என்கிறான். “என் பெயர் ஜெயகாந்தன். ரஜினிகாந்த பேர ஞாபகம் வெச்சிகிட்டா என் பெயரை ஞாபகம் வெச்சிக்கலாம் “என்று நகைச்சுவையாக சொல்கிறார்.

-படம் முடிவில் பத்துநிமிடம் அவர் வாழ்க்கை வரலாற்றை சொல்லி முடிக்கிறார்கள்.

படம் முடிந்ததை அடுத்து,

பிரளயன் பேசினார்.”ஜெயகாந்தனின் தர்க்க உலகத்தில் யாரும் லேசில் புகுந்து விட முடியாது.மிகத்தெளிவாக பேசுவார்” என்றார்.ஆவணப்படத்தின் ஒலி பற்றி வருத்தம் தெரிவித்தார்.

ருத்ரன் ஜெயகாந்தனுக்கும் தனக்கு இடையே நல்ல நட்பு இருந்ததைச் சொன்னார்.ஒருமுறை தான்( ருத்ரன்) மிகவும் டிப்பிரஸ்டாக இருக்கும் போது ஜெயகாந்தன் “நல்ல டாக்டருய்யா நீ. depressed ஆ இருந்தா எப்படி பிரச்சனைய தீர்ப்ப... concern ஆ இரு என்று இரண்டிற்கும் வித்தியாசத்தை சொல்லிக்கொடுத்தாராம். மேலும் “உயிரோடு இருக்கும் யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளாதே.பிறகு அவர் செய்யும் எல்லா கிறுக்குதனத்திற்கும் நீ தலையாட்ட வேண்டும்” என்று ஜே.கே சொன்னதாக நினைவு கூர்ந்தார்.

இயக்குனர் ரவிசுப்பிரமணியம் பேசுவதற்கு முன்னால் பார்வையாளர்கள் பேசும் படி பரிசல் செந்தில்நாதன் கேட்டுக்கொண்டார்.

அதில் ஒருவர் மிக ஆவேசமாக “ஜெயகாந்தன் ஜாதி வெறி பிடித்த பார்ப்பண ஆதரவாளர்.உடனடியாக ஊருக்குச் சென்று அவர் புத்தகங்களையெல்லாம் தூர எறிந்து விடுகிறேன்.அதை சாக்கடையில் போட்டால் கூட சாக்கடைக்கு கேவலம்” என்றார்.அவர் அப்படி சொன்னது ருத்ரனின் மனதை பாதித்ததை முகபாவனைகளில் இருந்து புரிந்துக் கொள்ள முடிந்தது.

இன்னொரு முதிர்ந்த பத்திரிக்கையாளர் அவர் ஜே.கேவுடன் பழகிய நாட்களை பகிர்ந்து கொண்டார்.

நான் கொஞ்சம் உதறலுடன் மைக்கைப் பிடித்து “ஜெயகாந்தன் பேசுவது சரியாப் புரியல.அவர் பேசுறதுக்கு தமிழ் சப்டைட்டில் போடுங்க என்றேன்”. அதன் பின் “இல்ல தப்பாச் சொல்லல் ரீச் (Reach) தான் குறிக்கொள் அப்படின்னா அதச் செய்யலாம்” என்றேன்.அப்புறம் ஜெயகாந்தனைக் காட்ட இந்த ஆவணப் படத்தில் “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலைக் காட்டி விளக்கியதில் எனக்கு உடன்பாடில்லை. என்றேன். அந்த நாவல் கருத்தளவில் பாடாவதியானது.என் மகளுக்கு இன்னும் பத்துவருடம் பிறகு அந்த நாவலைப் பற்றிச் சொன்னாள் அதைப் பெரிய விசயமாக எடுத்துக் கொள்ள மாட்டாள்.ஆனால் “ரிஷிமூலம்” மாதிரி சிக்கலான பாலியல் கதைகளை ஜெயகாந்தன் ஆராய்ந்திருப்பதுதான் வருங்கால இலக்கியர்களுக்கு உதவும் என்றேன்.அது போன்ற நாவலை முன் வைத்து காட்டியிருக்க வேண்டும் என்றேன்.

முடிவில் ரவிசுப்பிரமணியன் பேசினார் “இந்தப் படம் இரண்டு முறை நின்று விட்டது.காரணம் ஜெயகாந்தன் சொல்லிய கருத்துக்களும்.அவர் காட்டிய ஆவேசமும்தான்.அப்புறம் இளையராஜா என்னைக் கூப்பிட்டு சமரசம் செய்து எடுக்கச் சொன்னார்.ஜெயகாந்தன் அப்படித்தான்.அவர் யாருக்காகவும் அவர் கருத்தை மாற்றிக் கொண்டதில்லை.சமரசமே இல்லாதவர் அவர்.இங்கு சிலர் ஜெயகாந்தன் மேல் கோபமாக பேசினார்கள்.ஆவணப்படம் என்பது ஒரு கோட்டுச்சித்திரம்.அதன் மேல் ஒவியத்தை நீங்கள் வரைந்து கொள்ளுங்கள் நீங்கள் புரிந்து கொண்டபடி.

ஜெயகாந்தனிடம் மரணம் உங்களை நெருங்கினால் அதாவது தெருமுனையில் வந்து நின்றால் என்ன செய்வீர்கள் என்றேன்.அதற்கு அவர் கூறிய ஆவேசப் பதிலை படத்தில் வைத்திருந்தேன்.அப்புறம் அதைத்தூக்கிவிட்டேன்.இளையராஜா ஏன் என்று கேட்டார்.”இப்போதே ஜெயகாந்தன் உடல்நிலை சரியில்லை.அதனால் அதை வைக்க விரும்பவில்லை” என்றேன்.இளையராஜாவும் அதை ஏற்ற்குக்கொண்டார்.

இந்த ஆவணப்படத்தை பார்த்து கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. என்று முடித்தார்

Thursday, 5 September 2013

கல்முகம்

கோயிலுக்கு போகும் போதெல்லாம் அங்குள்ள சிலைகளின் கருணை முகங்களை பார்க்க பார்க்க ஏன் இந்த சிலைகள் வைக்கபட்டிருக்கின்றன.

இதன் பர்பஸ் என்ன? 

எங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலில் ‘ஜோதி’ தான் பெருமாள்.அது மாதிரி இருந்து விட வேண்டியதுதானே!என்பது மாதிரி நினைப்பேன்.

ஆனால் சில சாமி உருவங்களை பார்க்கும் போது அந்த வடிவங்கள் ஆழ்மனது வரை சென்று ஏதோ செய்யும்.

பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும்.

இந்த சிலைகளின் பர்பஸை புரிந்து கொள்வதற்கு ஒரு அமெரிக்க சிறுகதையை உதாரணம் சொல்வேன்.

இதுமட்டும் காரணமில்லை. ஆனால் இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்பது என் கருத்து.

நினைவிருந்தவரை கதையை சொல்கிறேன்.

இந்த கதையை எழுதியது ‘நதேனியல் ஹார்த்தர்’( 1804-1864).

கதையின் பெயர் ‘கல்முகம்’ (கிரேட் ஸ்டோன் ஃபேஸ்).

வறண்ட மலைகளுக்கு நடுவே இருக்கும் அந்த கிராமத்தில் சிறப்பு, அந்த பெரிய கல்முகம்தான்.

இயற்கையிலேயே மலையின் முன்முகப்பில் அமைந்திருக்கும் மாபெரும் மனித முகம் போன்ற அமைப்பு பற்றி நிறைய கதைகள் உண்டு.

’எர்னஸ்ட்’ சிறுவனாய் இருக்கும் போது அவன் அம்மா அது பற்றி சொன்னாள்.

’அந்த கல்முகம் ஒரு மாமனிதன். உலகின் எல்லா சக்தியும் வாய்க்கப்பெற்றவன்.கருணையானவன்.தீமைகளை வெறுப்பவன்.அடுத்தவர் உணர்வை புரிந்து கொண்டவன். அவன் பிறந்து மனிதனாக நம் கிராமத்துக்கு கட்டாயம் வருவான். நீயும் நானும் ,இந்த கிராமமும் அதற்கு காத்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்.’ என்றாள். 

எர்னஸ்ட் மனதில் அம்மா சொன்னது உறைந்து விட்டது. தினமும் அந்த கல்முகத்தை பார்த்து கொண்டே இருப்பான்.

கடுமையான உழைப்பு முடிந்து ஒய்வு கிடைக்கும் போதெல்லாம் அந்த கல்முகத்தை பார்த்து கொண்டிருக்க ஆரம்பித்தான். 

ஒருநாள் அந்த ஊருக்கு, ஊரில் பிறந்து வெளியூருக்கு போய் பணக்காரனாகிய கணவான் திரும்பி வந்தான். எல்லோருக்கும் பணமாய் இறைத்தான். வாரி வழங்கினான். ஊர் மக்கள் எல்லோரும் அந்த பணக்காரனின் முகம் ‘கல்முகம்’ முகம் மாதிரி இருப்பதாக பேசிக்கொண்டார்கள். 

சிறுவன் எர்னஸ்ட் ஒடி வந்து பணக்காரனை பார்த்தான். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.பணக்காரனின் முகம் கல்முகம் மாதிரி கருணையானதாக இல்லை.

எர்னஸ்ட் மனம் அதை ஒப்புக்கொள்ளவில்லை. பின் எர்ன்ஸ்ட் வளர்ந்து இளைஞனான்.தினமும் கல்முகத்தை பார்த்து அந்த கல்முகத்தின் நல்குணங்களாக பலவற்றை நினைத்து கொண்டான்.கற்பனை செய்து கொண்டான்.அந்த குணங்களை எல்லாம் தானே செய்ய ஆரம்பித்தான்.பிறருக்கு உதவி செய்வதை செய்து கொண்டே இருந்தான்.

அப்போது ஊருக்கு திரும்பிய ’வீரன்’ ஒருவனின் முகம் ‘கல்முகம்’’ மாதிரியே இருப்பதாக சொன்னார்கள். எர்னஸ்ட் போய் பார்த்தான் அவனுக்கு திருப்தி இல்லை. 

எர்னஸ்ட் இப்போது கல்முகத்தின் உதவியால் இன்னும் பக்குவமானவனாய் ஆகியிருந்தான். மக்களுக்கு நிறைய போதித்தான்.வயதும் ஆகிவிட்டிருந்தது. கல்முகம் பார்த்து அவன் மனம் கனித்து விட்டிருந்தது. 

அப்போது ஊருக்கு ஒரு கவிஞன் வந்தான். அறிவை பொழிந்தான்.

மக்கள் அந்த கவிஞனைப் பார்த்து இவன் முகம் கல்முகத்தை ஒத்து இருக்கிறது என்று பேசிக்கொண்டார்கள்.

எர்னஸ்ட்டுக்கு கொஞ்சம் பிடித்து இருந்தாலும், முழு திருப்தி இல்லை. கவிஞரை உபசரித்து கவனித்தார்.

கவிஞர் எர்னஸ்டிடம் மனம் விட்டு நிறைய பேசிக்கொண்டே இருந்தார். பின் திடீரென்று எர்னஸ்ட்டின் முகத்தை கூர்ந்து பார்த்தார்.

“எர்னஸ்ட் நான் கண்டிபிடித்து விட்டேன்.உங்கள் முகம்தான் அந்த ‘கல்முகம்’. நீங்கள் தான் ஊரார் எதிர்பார்த்த மகான். நிச்சயமாக சொல்கிறேன்” என்றார்.

ஊராரும் அதை மனமொத்து ஆமோதித்தார்.

ஆனால் எர்னஸ்ட் அதை ஒப்புக்கொள்ளாமல் அமைதியாக போய்விடுகிறார்.கதை முடிகிறது.

இந்த கதையை முழுவதுமாக படிக்கும் போது மிகநன்றாய் இருந்தது எனக்கு. 

கதையில் உள்ளதைப்போல உயரிய நோக்குள்ள கதைகளால் அலங்கரிக்கப்பட்ட சாமி சிலைகளை அடிக்கடி போய் பார்க்கும் போது, அதன் சாரம் நம் மனதிலும் இறங்கிவிடுமோ என்னவோ.

அதற்காகத்தான் கோயில்களை கட்டிவைத்து, சாமி கும்பிடச்சொல்கிறார்களோ என்னவோ?

எர்னஸ்ட்டின் கண்களும் மனதும் இனிமேல் எனக்கும் சாமி சிலைகளை பார்க்கும் போது வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

Tuesday, 3 September 2013

திருவான்மியூரில் ஒரு புத்தக கடையாம்... அதன் பெயர் பனுவலாம்...

வீட்டிலிருந்து ஷேர் ஆட்டோவில் திருவான்மியூர் பஸ்ஸ்டாண்ட் பக்கத்தில் இறங்கி ஜெயந்தி சிக்னலை நோக்கி நடந்தால் இடது பக்க முதல் மாடியில் ‘பனுவல் புத்தகக் கடை’ வந்துவிடுகிறது.

இன்றுதான் அதை தொடங்கியிருக்கிறார்கள்.தொடக்க விழாவில் கலந்து கொண்டேன்.

நுழைந்ததும் பரிசல் சிவ செந்தில்நாதன் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.கைகளைக் குலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

என்னை பனுவல் கடையை நடத்தும் அமுதரசன(?)க்கு அறிமுகப் படுத்தினார்.’தம்பி நல்ல வாசிப்பாளர்.இலக்கிய ஆர்வலர்’ என்று.

அப்புறம் நடிகை ரோகிணிக்காக வெயிட்டிங்.ரோகிணி வந்ததும் குத்துவிளக்கேற்றி திறப்பு நடந்தது.

இந்தப் பனுவல் புத்தகக் கடையை நடத்துவது மூன்று ஐடி புரொபசனல்ஸ்.அமுதரசன்,முகுந்தன்,சரவணன்.

தங்கள் வேலை நேரம் போக ‘வாழை’ என்றொரு அமைப்பையும் தொடங்கி நிறைய கிராமங்களுக்கு சென்று எழுத்தறிவை போதிப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள்.

இப்போது திருவான்மியூரில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து இந்த புத்தகக் கடையை தொடங்கியிருக்கிறார்கள்.கடை மட்டும் அல்ல கடையினுள்ளேயே ‘தடாகம்’ என்ற சிறிய அரங்கையும் வைத்திருக்கிறார்கள்.அதில் இலக்கிய நிகழ்வுகள் நடக்கும்.

விழாவை பரிசல் சிவ செந்தில்நாதன் தொகுத்து வழங்கினார்.விழாவில் வரிசைப்படி பேசியதை மிகச்சுருக்கமாக எழுதுகிறேன்.

எழுத்தாளர் பிரபஞ்சன் - இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சி.முதன் முதலில் இப்படி புத்தகம் வாங்கவும் அமர்ந்து படிக்கவுமான கான்சப்டை செயல் படுத்தியவர் ‘க்ரியா ராமகிருஷ்ணன்’.தற்போது புத்தங்கள் பற்றிய விமர்சனக்கூட்டங்கள் குறைந்து வருவது கவலையளிக்கிறது.

எப்போது வேண்டுமானாலும் எந்த புத்தகம் வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற நிலைமை வரவேண்டும்.ஃப்ரான்சில் இரவு லைப்ரரிக்கள் நிறைய் இருக்கின்றன.சைனாவில் ஏடிஎம் மெசினில் பணம் விழுவது போல புத்தகம் விழும் அறிவியலை செயல் படுத்தியிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு ஏதாவது புத்தகம் வாங்கி கொடுத்துக் கொண்டே இருங்கள்.என் அப்பா எனக்கு 12 வயதில் ‘அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகள்’ புத்தகம் வாங்கிக் கொடுத்தார்.அதை நான் படித்து புரிந்து கொண்டது என் நாற்பதாவது வயதில்தான்.அதனால் என்ன புத்தகம் இருந்ததினால்தான் எனக்கு அந்த ஆர்வம் வந்தது.ஆகையால் புத்தகம் கொடுத்துக் கொண்டே இருங்கள் உங்கள் குழந்தைகளுக்கு.

கல்வியாளர் கல்யாணி-இப்போதெல்லாம் நான் அதிக புத்தகம் படிப்பதில்லை.ஆனால் வாசிப்பில் வெறியாக இருந்த காலங்கள் இருக்கிறது,அமெரிக்கன் கல்லூரி நூல் நிலையம் முழுவதும் எப்போதும் ரொம்பி இருக்கும் அளவுக்கு முன்னர் படிக்கும் ஆர்வம் நம்மிடையே இருந்தது.

ட்ராஸ்கி மருது - இந்தக் பணிக்கு என்னால் முடிந்த யோசனையை அமுதரனுக்கு சொல்லியிருக்கிறேன்.அடிக்கடி என்னைச் சந்தித்து ஆலோசனை கேட்பார்.மிக ஆர்வமுடையவர் அவர்.புத்தகத்தை திருடிக்கூட படிப்போம்.அந்த அளவுக்கு புத்தகத்தின் மேல் காதல் கொண்டிருந்தோம்.

எனக்கு கோணங்கி ஒரு புத்தகம் கொடுத்தார்.அதில் ‘உங்களுக்க்காக இன்னார் நண்பரிடம் இருந்து திருடிய புத்தகம் -இப்படிக்கு கோணங்கி என்று கையெழுத்து போட்டு கொடுத்தார் கோணங்கி என்று சொன்னார் (இதை சொல்லும் போது அனைவரும் சிரித்தோம்)

கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரன் - நான் ஒரு புத்தகம் வேண்டும் என்று பனுவலுக்கு போன் செய்து கேட்டேன்.கேட்டு எட்டு மணி நேரத்தில் கொடுத்தனர்.கொஞ்சம் அதிக பணம் கொடுத்தேன்.இல்லை புத்தகதிற்கான காசு மட்டும் கொடுத்தால் போது என்று வாங்கிச் சென்றார்கள்.

இது போல் நீதிபதி சந்துரு என்னை ஒரு புத்தகம் கேட்டார்.அதையும் பனுவல் எட்டு மணி நேரத்தில் கொடுத்தார்கள்

குழந்தைகள் டிவி மூலமாக சினிமா மூலமாக உலகை தெரிந்து கொள்கிறார்கள்.அவர்கள் வளர வளர புத்தகம் மூலமாக கற்றுக்கொள்ளும் தன்மையை நாம் வளர்க்க வேண்டும்.

பாலகிருஷ்ணன் மாரா என்பவர் புத்தகம் விற்று இப்போது பெரிய பணக்காரராகி இருக்கிறார்.அது போல் இந்தக் கடை இலக்கியம் வளர்ப்பது மட்டுமன்றி வியாபாரத்திலும் மேம்பட வேண்டும்.

நடிகை ரோகிணி - நான் ஐந்து வயதில் தெலுகு படம் ஒன்றில் கிருஷ்ணர் வேடம் போட்டேன்.அதன் பிறகு நான் எங்கு போனாலும் ஆந்திராவில் ஆரத்தி எடுத்தார்கள்.படிக்காமல் இருந்தால் ஆரத்தி எடுப்பார்கள் என்று மகிழ்ந்தேன்.

ஆனால் அதன் பிறகு பள்ளி சென்று படிக்காததில் வருத்தமுண்டு எனக்கு.என்னுடைய மொத்தப் படிப்பே இரண்டு வருடங்கள்தான்.அதன் பிறகு நான் ஸ்கூல் போனதில்லை.

அப்படியான எனக்கு, அறிவு கிடைத்தது புத்தகங்கள் மூலமாகத்தான்.

இந்த விழாவுக்கு லேட்டாக வந்ததுக்கு காரணம் எனக்கு இருக்கும் உடல் பிரச்சனைதான்.நானே டிரைவிங் செய்தால் வாமிட் வரும்.

இந்த விழாவுக்கு ரொம்ப ஆர்வமாக வந்ததன் காரணம் ஃப்ரீ புக்ஸ் கிடைக்கும் என்பதால்தான்.( சிரிப்பு).

என் மகன் யாரும் சொல்லாமல் அவனே படிக்கிறான்.காரணம் வீடு முழுவதும் இருக்கும் புத்தகங்கள் அவனைப் படிக்க வைக்கின்றன.புத்தகத்தின் விலை கொஞ்சம் அதிகமானால் அதை பெரும் செலவாக நினைக்கிறோம்.அந்தப் போக்கு தவறு. (ரோகிணி மிக அழகாக இருந்தார்.)

இப்படி பேசி முடித்த பிறகு அனைவருக்கும் நவதானிய பொங்கல் பறிமாறப் பட்டது. பின் திணையரிசி பாயசம் கொடுத்தார்கள்.

இரண்டுமே சுவையாய் இருந்தது.

தினை பிளாஸ்டிக் கப்பின் கீழே தங்கிவிட்டது.அதை அப்படியே கவிழ்த்து வாயில் கொட்டப் பார்த்தேன் முடியவில்லை .ஒட்டியிருந்தது.தட்டி தட்டிப் பார்த்தேன்.கிழே விழவில்லை.மற்றவர்கள் என்னைப் பார்க்கிறார்களோ என்ற வெட்கம் வர, போய் ஸ்பூன் வாங்கி எடுத்துச் சாப்பிட்டேன்.

அதன் பிறகு கிழ்கண்ட புத்தகங்களை வாங்கினேன்.

1.சுவர்கள் திசையெங்கும் கொண்ட கிராமம் -அழகிய பெரியவன்

2.மாற்றுவெளி ஆய்விதழ்;கேரளச் சிறப்பிதழ்

3.வெண்மணியிலிருந்து வாய்மொழி வரலாறு - சொலை சுந்தர பெருமாள்

4.வரலாறும் வக்கிரங்களும்- ரொமிலா தாப்பர்

5.பட்ட விரட்டி- காலித் ஹுசைனி

6.ராஜ ராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர் - சி.இளங்கோ.

வாங்கி, பரிசல் சிவ செந்தில்நாதனிடம் சொல்லி (அடிக்கடி வாங்க விஜய்.நிறைய நிகழ்வுகள் இங்க நடக்கும்) விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டில் மோர்குழம்பும் புதினா துவையலும் அவரைக்காய் பொறியலும் வைத்து சாப்பிட்டேன்.

அவ்ளோதான்... 

Saturday, 31 August 2013

தமிழ் எழுத்தாளனும் வறுமையும் - சாருத்துவம்...

பணம் சம்பாதிக்க பலவழிகள் இருக்கிறது.அதில் ஒன்று நெருங்கிய நண்பர்களின் மனசாட்சியை தேர்ந்த வார்த்தைகளால் உலுப்பி எடுப்பது.

சாதுர்யத்தால் கண்ணீர் விட வைப்பது.

அதற்காக பல கதைகளை இட்டுக்கட்டுவது.மயங்கிய சின்ன குழந்தைகளைக் காட்டி குற்ற உணர்வை தூண்டி பணம் கேட்கும் பெண்ணைப் போன்று, வறுமையை பூதக்கண்ணாடியால் பெரிதாக்கி பிறருக்கு காண்பிப்பது.

அப்படிக் காட்டிகொண்டிருக்கும் ஒருவர் எழுதுவது மாதிரி எழுதிப் பார்த்தேன்... இனி அது...

நேற்று எனக்கு நான்கு இட்லிகள் கிடைத்தன.

பக்கத்து தெரு பாம்பாட்டி ஒருவர் அவருக்கு பிச்சையாக கிடைத்த நான்கு இட்லிகளை எனக்கே கொடுத்து விட்டார்.

நான் அன்போடு கேட்டேன் ‘நான்கு இட்லிகளையும் எனக்கே கொடுத்துவிட்டீர்களே.அப்படியானால் நீங்கள் எதைச் சாப்பிடுவீர்கள்” என்று.அதற்கு அவர் உங்கள் புத்தகத்தைப் படித்து பசியாறுவேன் என்றார்.

எனக்கு அன்போடு கிடைத்த நான்கு இட்லிகள் மகிழ்ச்சியைக் கொடுத்தன.ஆனால் நான் பிச்சைக்காரனாய் என்றுமே வாழ்ந்ததில்லை.இட்லி என்று வந்துவிட்டால் ஆறுவகை சட்னி இல்லாமல் சாப்பிட்டதே இல்லை.

மேதைமைக்கு வறுமைக்குமிடையே எப்போதும் கனிந்து கிடக்கும் ரகசிய உறவால் எனக்கு இட்லி மட்டுமே கிடைத்தது.சட்னி கிடைக்கவில்லை.

வெறும் இட்லியை விண்டு சாப்பிட்டேன்.நெஞ்செல்லாம் அடைத்து தலை சுற்றி கிழே விழுந்து விட்டேன்.

நம்புங்கள் ஐயா! கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அப்படியே விழுந்துகிடந்தேன் சுயநினைவின்றி. என்னை தூக்கி ஒருவாய் தண்ணீர் தர ஆளில்லை.உலகத்திற்கே ஞானத்தை போதிக்கும் எழுத்தாளனுக்கு வந்த நிலைமையைப் பாருங்கள்.

சும்மாவா சொன்னான் பாரதி “தனி மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று. நானே பாரதி.பாரதியே நான்.எனக்குள் பாரதியை ஒவ்வொரு அணுவாக உணர்க்கிறேன்.

கடவுளின் அருளால் இரண்டு நாட்களாகியும் அந்த இட்லி கெட்டுப்போகவில்லை.

சட்னி இல்லாவிட்டால் என்ன? கடையில் இட்லி பொடி வாங்கி வரலாம் என்று காசு தேடினேன்.காசு கிடைக்கவில்லை. வறுமை வறுமை.உள்ளங்கை ரேகையிலே வறுமையை ஒட்டி வைத்த இறைவனை பழிக்க முடியுமா? முடியாது.அவன் பெருங்கருணையுள்ளவன்.

சோபாவின் இடுக்கில் ஈர்க்குச்சியை விட்டு ஆட்டுகிறேன் ஒரு ஐந்து ரூபாய் நாணயம் கிடைத்தது.

மிச்ச ரூபாய்க்கு என்ன செய்ய? அழுகை முட்டியது எனக்கு.என் செல்ல நாய் கைகளை பிடித்து இழுத்தது. அது கொண்டு விட்ட இடத்தில் பார்த்தேன் .ஆம் கேஸ் சிலிண்டரின் மறுபக்கம் ஒரு ஐந்து ரூபாய் காயின் கிடைத்தது.

அந்தப் பசியிலும் நாய்க்கு முத்தமிட்டேன். நான் கேட்கிறேன் செய்நன்றி இல்லாதவன் என்ன பிறப்பு அய்யா? அவன் என்ன இருந்தால் என்ன ? செத்தால் என்ன?

கடைக்கு ஒடிப்போய் பத்து ரூபாய் கொடுத்து இட்லிப் பொடிக் கேட்டேன்.பத்து ரூபாய்க்கு கிடைக்காது என்கிறார்.துடித்துப் போய் நிற்கிறேன்.

நினைத்துப் பாருங்கள் தமிழ் எழுத்தாளன் ஒருவன் இட்லிப் பொடிக்காக அண்ணாச்சி கடையில் நிற்கும் கோரக் காட்சியை. நீங்கள் நினைக்க மாட்டீர்கள்.நீங்கள் உங்கள் காதலியின் மார்பில் சாய்ந்து எஸ்கேப் அவுன்யூவில் சினிமா பார்த்துக் கொண்டு இருப்பீர்கள்.தமிழன் என்றாலே பிளாஸ்டிக்கன் தானே.எந்த ஆழமான சிந்த்திப்பும் இல்லாதவன்தானே.

மூன்று மணி நேரம் கடையில் தவமாய் நின்றபிறகு கடைக்காரர் “ஏ ரொம்ப நேரம் நிக்கயில்லா.உங்களப் பார்த்தா பாவமா இருக்கு.ஆனா எங்க ஜாதிக்காரவன்வளுக்கு ஒசில உபகாரம் செய்ஞ்சே பழக்கம் இல்ல கேட்டியலா.ஒரு அரைமணி நேரம் வந்து பொட்டலம் கட்டுனியள்னா.நல்ல இட்லிபொடி பெரிய பாக்கெட்டே தாரேன்.வாரதுன்னா வாங்க” என்றார்.

எனக்கோ பசி.வேறு வழியில்லை.கடையில் பொட்டலம் கட்டும் வேலையை செய்ய ஆரம்பித்தேன்.

வான்காவுக்கு கூட இந்த நிலமை வந்ததில்லை.அவன் தம்பி பணம் அனுப்பிக்கொண்டிருந்தான்.அவன் செக்ஸ் வொர்க்கர் காதலி கிறிஸ்டின் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாள்.

ஆனால் எனக்கு .யாருமே இல்லை.

பொட்டலம் கட்டுவதில் முதல் வேலையாக பத்து முட்டைகளை ஒருவர் கேட்க, மடித்துக் கொடுக்கும் வேலையை செய்ய வேண்டியது இருந்தது.

எனக்கு எழுதத்தெரியும். முட்டை கட்டத்தெரியுமா? நான் எழுத்தாளன் அய்யா?

ஆர்.கே நாராயணனை உங்கள் வேலை என்னவென்று யார் கேட்டாலும் “என் வேலை எழுதுவது “என்று சொன்னாராம்.

ஆனால் நான் பிறக்கும் போதே ,சாமி பக்தியுள்ள நர்ஸ் என்னை ’புக்கர் புண்ணிவான்’ பிறந்துவிட்டான் என்று சொன்னாராம்.

பிற்காலத்தில் அதே நர்சும் நானும் தோழமையானோம்.

நான் கேட்டேன் எதைவைத்து என்னை பிறக்கும் போதே ‘புக்கர் புண்ணியவான்’ என்று சொன்னீர்கள் என்று .அதற்கு அவர் சொன்ன பதிலை இங்கே தரப்போவதில்லை.அந்தப் பதிலை என் நெஞ்சாங்கூட்டுக்குள்ளே அடைகாத்துக் கொண்டிருக்கிறேன்.

வருகிறேன் விசயத்திற்கு

முட்டை கட்ட முடியவில்லை.சரியாக பேப்பர் மடிக்கவில்லையாதலால் பத்து முட்டைகளும் தரையில் விழுந்து ஒடு உடைந்து ஒழுகியது.

அண்ணாச்சி முறைத்தார்.”யல செத்த மூதி பத்து முட்ட வெல தெரிமால.உனக்கு ஒண்ணுமே தெரியாதால.உனக்கு இட்லிப் பொடியும் கிடையாது ஒண்ணும் கிடையாது.ஒடுல’ என்று விரட்டிவிட்டார்.

வீட்டிற்கு வந்து நான்கு இட்லிகளையும் தண்ணீரைத் தொட்டு தொட்டு தின்றேன்.

வறுமையின் கொடுமையை அனுபவித்தாலே தெரியும்.

எனக்கு அண்ணாச்சி மேல் சுத்தமாக கோபமே கிடையாது.அவருக்கு என்னைத் தெரியாது.அதனால் அப்படிப் பேசிவிட்டார்.

ஆனால் உங்களுக்கு என்னைத் தெரியும். என் எழுத்து தெரியும்.

உங்களால் முடிந்தவற்றை கொடுத்து உதவலாம்.

இட்லிக்கு இட்லிபொடியைக் கூட பார்சல் செய்து அனுப்பலாம்.

விருப்பம் உடையவர்கள் மட்டும்.

விருப்பமில்லாதவர்கள் என் மெயிலுக்கு மெயில் செய்து திட்டலாம்.

வசையே எனக்கு டானிக்.அதை மற்றவர்களை திட்ட உபயோகித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு எழுத்தாளன்... 

Thursday, 22 August 2013

நண்டும் மனிதனும் யானையும் பாம்பும் முதலையும் வரும் கதை...

கதைக்குள் கதை வரும்.நடுநடுவே தலைப்பை வசதிக்காக கொடுத்திருக்கிறேன்.இது ஒரே கதைதான்.

 கொஞ்சம் பொறுமையாக படித்தால் பிடிக்கலாம்....

<நண்டும் திலீபனும்>

திலீபன்,

 ’பாவம் களைய; புண்ணியம் தேட’ கங்கைக்கு நீராடச்   சென்றான்.

அவனைப் பார்த்த நண்டு, “நீ போகும் கங்கைக்கு ,என்னையும்
 கூட்டிப்போ.உன் பையில் தூக்கி வைத்துக்கொள்.கங்கையில் இறக்கிவிடு.நானும் அங்கேதான் போகிறேன்.நீ எனக்கு உதவி செய்தால்.நான் உனக்கு தக்க தருணத்தில் உதவி செய்வேன் என்றது.”.

இதைக் கேட்ட திலீபனுக்கு ஆச்சர்யம் “சின்னச்சிறிய நண்டே.நீ எனக்கு எப்படி உதவி செய்வாய்” என்றது.அதற்கு நண்டு ஒரு கதை சொன்னது.

<யானையும் எலியும்>

ஒரு ஊரில் யானை ஒன்று ஊரின் அரசன் இட்ட குழியில் மாட்டிக்கொண்டது.

எட்டு நாட்கள் அந்தக் குழியில் பட்டினியாய் கிடந்தால் மட்டுமே யானை வழிக்கு வரும் என்று அரசன் யானையை குழியில் விட்டு விட்டு வருகிறான்.

யானை அழுது கொண்டே இருக்கிறது.

அப்போது அந்தப் பக்கம்  வந்த குதிரையிடம் உதவி கேட்டது.குதிரை “யானையே நீ இதுவரை யாருக்காவது உதவி செய்திருக்கிறாயா.அப்படி செய்திருந்தால் அவர்களைக் கூப்பிடு “ என்று சொல்லி ஒடிவிட்டது.

யானை சிந்தித்து சிந்தித்துப் பார்ததது.இறுதியில் ஞாபகம் வந்தது.

ஒருமுறை அரசன். ஊரில் உள்ள எலிகளின் அட்டகாசத்தைத் தாங்க முடியாமல்,அவைகளை மொத்தமாக வளைத்து பெரிய பானையில் போட்டு விடுவான்.

மறுநாள் பானை உடைத்து எலிகளை கொல்லலாம் என்பது அவன் எண்ணம்.

எலிக் கூட்டத்தலைவன் மட்டும் தப்பி தன் கூட்டத்தாரை காப்பாற்ற என்ன வழி என்று யோசிக்கும் போத் அந்தப் பக்கமாக வந்த யானையிடம் “யானையே உன் காலால் இந்தப் பானையை உடைத்து என் சொந்தங்களை காப்பாற்றுங்கள் எனறது.யானையும் பானையை உடைத்து எலிகளைக் காப்பாற்றியது.

இந்த சம்பவம் குழியில் விழுந்த யானைக்கு நினைவு வர, எலிக்கூட்டத் தலைவனை  ஒலி எழுப்பிக் உதவிக்கு அழைத்தது.

அங்கே வந்த எலிக்கூட்டத்தலைவனின் உத்தரவு படி எல்லா எலிகளும் தங்கள் வாயால் மண்ணைக் கிள்ளி யானை மாட்டிக்க்கொண்ட குழியினுள் போட்டன.எலிக் கூட்டம் மண்ணை நிரப்பிதால் யானை வெளியே வந்தது. அரசனிடம் இருந்து தப்பித்தது.

இந்தக் கதையை சொன்ன நண்டு “ஆகையால் திலீபனே.உருவத்தை கொண்டு எடை போடாதே.சிறிய எலிகளால் கூட யானைக்கும் உதவி செய்ய முடியும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்.என்றது

<நண்டு காக்கை பாம்பு திலீபன்>

திலீபனும் நண்டை எடுத்து பையினுள் போட்டு யாத்திரையை தொடர்ந்தான்.

ஒரு ஆலமரத்தின் அடியில் அசதியில் தூங்குகிறான்.

அந்த ஆலமரத்தில் ஒரு காக்கா உண்டு.அது மரத்தின் கிழே யாராவது வழிப்போக்கர்கள் வந்தால் ஒரு குரல் கொடுக்கும். அந்தக் குரலைக் கேட்டவுடன் பொந்திலிருக்கும் பாம்பு வந்து உறங்கிக் கொண்டிருப்பவனை கடித்து விடும்.

அவன் இறந்த பிறகு காக்கை தன் இனத்தையெல்லாம் கூப்பிட்டு மனிதனை உண்ணும்.இதற்கு பரிசாக காக்கை பாம்பிற்கு எலிகளை பிடித்துக் குடுக்கும்.

இது தெரியாமல் திலீபன் தூங்கிக் கொண்டிருக்க, பாம்பு அவனைக் கடித்து கொல்கிறது.இதை திலீபன் பையில் இருந்த நண்டு இதனைப் பார்த்து விடுகிறது.

திலீபனின் உடலைக் கொத்தவரும் காக்கைத் தலைவனின் கழுத்தை பிடித்துக் கொள்கிறது நண்டு.

நண்டியின் பிடியில் இருந்து  காக்கையால் தப்ப முடியவில்லை.

நண்டு பாம்பை நோக்கி “பாம்பே நீ திலீபனின் உடலில் இருக்கும் விஷத்தை உறிந்து காப்பாற்று இல்லாவிட்டால் இந்தக் காக்கையின் கழுத்தை நெரித்துக் கொள்வேன்.” காக்கையின் உயிரைக் காப்பாற்ற பாம்பும் திலீபனின் உடல் விஷத்தை உறிஞ்சி காப்பாற்றி விடுகிறது. திலீபன் எழுந்து தன்னை உயிர் பிழைக்க வைத்த நண்டுக்கு நன்றியை சொல்கிறான்.

சிறிய உயிரினமாய் இருப்பினும் உதவி செய்ததே என்று ஆச்சர்யப்படுகிறான்.

நண்டு திலீபனை நோக்கி ‘ நீ பொறுமையாய் ஆச்சர்யப்படு மனிதனே. இப்போது இந்தக் காக்கையை என்ன செய்வது? விட்டுவிடவா அல்லது கொடுக்கால் நெரித்துக் கொல்லவா”என்று கேட்க

அதற்கு திலீபன் ‘நண்டே நண்டே.நாம்தான் பிழைத்து விட்டோமே.பிறகு ஏன் காக்கையை கொல்ல வேண்டும்.விட்டுவிடு” என்று சொல்கிறான்.

நண்டு திலீபனிடம் “நான் விடுவதற்கு முன் ஒரு கதை சொல்கிறேன் கேள்” என்று சொல்ல ஆரம்பித்தது.

<மனிதனும் முதலையும்>

“ஏழை ஒருவன் ஆற்றங்கரையை நோக்கிப் போக,அங்கே வந்த முதலையொன்று, ’மனிதனே நிலத்தில் நான் பலம் குறைந்தவன்.உன்னை உன்னிடம் உள்ள நீண்ட தோல்பையினுள் வைத்து தூக்கிப்போ.தூக்கிப்போய் ஆற்றிவிட்டால் நன்றியுடையவனாய் இருப்பேன்” என்றது.

முதலையிடம் இரக்கப்பட்ட மனிதன்,அதை தூக்கி சுமந்து ஆற்றில் விட்டான்.

ஆற்றில் விட்டதும் முதலை மனிதனின் காலை பிடித்துக் கொண்டது.தனக்கு ஞாயம் அநியாயம் அறம் என்று எதுவும் கிடையாதென்றும், தனக்கு உதவி செய்தால் கூட மனிதனை சாப்பிடப்போவதாகவும் சொல்கிறது.

மனிதன் கூக்குரலிடுகிறான்.அவன் குரலைக் கேட்டு அங்கே நரியொன்று வந்தது.

நரியிடம் முதலையும் மனிதனும் நீதி கேட்டுப்போனார்கள்.

மனிதன் சொன்னான் நான் உதவி செய்தேன் என்று.

முதலை சொன்னது ’என்னுடைய இனத்தில் துரோகம் என்பதே கிடையாது. உதவி செய்தால் கூட அவனை கொன்று தின்றால் அது எங்கள் இனத்தின் குணமே அன்றி வெறுக்கப்படும் விசயமல்ல. என்று வாதாடியது.

நரி யோசித்து.முதலையிடம் ‘நீ எப்படி பையினுள் முதலில் இருந்தாய் செய்து காட்டு “ என்றது. முதலையும் போய் தன்னை அடைத்து வைத்திருந்த பையினுள் போய் உட்கார்ந்து கொண்டது.

உடனே பையை இறுக்க கயிறால் கட்டிய நரி, பெரிய கல்லால் முதலையை அடித்து கொன்றது.

பின் ஏழையிடம் “இப்படி ஏமாளியாய் இருக்காதே.தேவைப்படும் இடத்தில் இரக்கம் காட்டாதே என்றது.

இதைக் கேட்ட திலீபன் “ஆம் இந்தக் காக்கை விட்டுவைத்தால் இன்னும் பலரை கொன்றுவிடக் கூடும்.நமக்கே கூட ஆபத்தாய் முடியும் “ என்றான்.

தன் கொடுக்கால்  காக்கையை, நண்டு நிதானமாக கொன்று போட்டது.

Wednesday, 21 August 2013

பத்து பொது விசயங்கள்...

-மாட்டை கடந்து போகும் போது அதன் வாலால் சுள்ளென்று அடி வாங்கியிருக்கிறீர்களா ?

-நல்ல ஆப்பிளை உருட்டி உருட்டி வாங்கலாம் என்கிற முடிவெடுக்கும் போது, அதில் மனித நகத்தழும்பை பார்த்திருக்கிறீர்களா?

-சாலையில் போகையில் பாதி குடித்துப்போட்ட வாட்டர் பாக்கெட்டை மிதித்து அதன் தண்ணீர் கால்களில் பட்டிருக்கிறதா?

-பொது இடத்தில் சத்தமாக வாயுவை பிரிக்க கூச்சப்பட்டு நாசூக்காக பிருக்ஷ்டத்தை உயர்த்திருக்கிறீர்களா?

-நண்பனிடம் நாம் கற்றுக்கொண்ட பெரிய விசயத்தை ஆர்வத்துடன் விளக்கி கொண்டிருக்கும் போதே பாதியில் அவன் “மச்சி இந்த வாரம் சனிக்கிழமை புரோகிராம் என்னடா? என்று கேட்டிருக்கானா?

-சேவாக்கோ, பீட்டர்சனோ பவுலிங்கை எதிர்கொண்டு கரெக்டாக க்ஷாட் அடிக்கும் போது உங்கள் அம்மாவோ அப்பாவோ தற்செயலாக மறைத்திருக்கிறார்களா?

-முழுக்கை சட்டையின் ஒரத்தில் ஈரம் பட்டு ஒருநாள் முழுவது உங்களை அது சின்னதாக நனைத்து கொண்டே இருந்திருக்கிறதா?

-வெளி இட ரெஸ்ட் ரூமில் டாய்லட் போகும் போது, கதவில் “வால் கிளிப்” இல்லாமல் உடையை எதில் போட என்று தெரியாமல் கழுத்திலே பாம்பு மாதிரி உடையை போட்டு இருந்தீருக்கிறீர்களா?

-நிற்கும் பஸ்ஸில் ஏறி அரைமணி நேரம் கழித்து, இருபது மீட்டர் தொலைவில் இன்னொரு பஸ்ஸை டிரைவர் ஸ்டார்ட் செய்து, “இதுதான் முதலில் போகும்” என்ற சொல்ல, லொங்கு லொங்கென்று ஒடியிருக்கிறீர்களா?

- முகநூலில் பெரிய கமெண்டை கஸ்டப்பட்டு டைப் செய்து கொண்டிருக்கும் போது, எதாவது பட்டனை தட்டி வேறு பக்கத்துக்கு போய் கமெண்ட் எல்லாம் அழிந்து போயிருக்கிறதா?

சொல்லுங்க... உங்களத்தான்... 





-