Sunday, 13 October 2013

ஜோசப் பிரிஸ்ட்லீ எழுதிய கடிதம்...

நாம் சுவாசிக்கும் ’ஆக்சிஜனை’ கண்டுபிடித்த இங்கிலாந்து விஞ்ஞானி ஜோசப் பிரிஸ்ட்லீ, தேர்ந்த பகுத்தறிவாளரும் கூட.

சர்ச்சின் அதிகாரத்தை எதிர்த்தவர்.

பிரெஞ்சு புரட்சி நடைபெறும் போது, இங்கிலாந்திலும் சர்ச் அதிகாரத்தை எதிர்த்து போராட்டம், புரட்சி ஏற்படலாம் என்று அடிப்படைவாதிகள் கூட்டம் நினைத்தது.

அதிலும் பிர்மிங்ஹாம் நகரத்தில் இந்த அடிப்படைவாதம் அதிகமாய் இருந்தது.

அந்தக் கூட்டம் பகுத்தறிவாளர்களையும் சர்ச்சுக்கு எதிரானவர்களையும் எதிரிகளாக பார்க்க ஆரம்பித்தது.

இதுமாதிரியான சூழ்நிலையில் 1791 ஆம் ஆண்டு,பிரிஸ்ட்லீ துண்டு பிரசுரம் ஒன்றை மூடநம்பிக்களைக்கு எதிராக வெளியிட்டார்.

கோபம் கொண்ட மதநம்பிக்கையாளர்கள் ஜோசப் பிரிஸ்ட்லீ ஆராய்ச்சிக்கூடம் மற்றும் அதை ஒட்டிய நூலகத்தை அடித்து உடைத்து தீ வைத்து எரித்து போய் விடுகின்றனர்.

ஜோசப் பிரிஸ்ட்லீ கடுப்பாகி அந்த நகரத்தை விட்டே போகிறார்.அப்படி போகும் போது அவர் பிர்மிங்ஹாம் நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தை கொடுக்கிறேன்.

<<என் முன்னாள் நகரமக்களுக்கும் (பிர்மிங்ஹாம் நகர மக்கள்) அயலார்களுக்கும் எழுதிக்கொள்வது,

நீங்கள் விலைமதிக்க முடியாத,உபயோகமான ஆராய்ச்சி சாதனங்கள் பலவற்றை அடித்து உடைத்துப் போயிருக்கிறீர்கள்.அந்த சாதனங்கள் தனிநபருடையதாகவோ,இந்த நாட்டைச் சேர்ந்ததாகவோ, அல்லது பக்கத்து நாட்டைச் சேர்ந்ததாகவோ இருக்கலாம்.அவைகளுக்கு பொருள்சார்ந்த கண்ணோட்டமில்லாமல் நான் நிறைய பணத்தை செலவழித்திருக்கிறேன்.என் குறிக்கோள் என்னவென்றால் அந்த சாதனங்களால், நம் நாட்டையும் மனிதநேயத்தையும் முன்னேற்ற வேண்டும் என்பதுதான்.

நீங்கள் ஆராய்ச்சி கூடத்தை ஒட்டியுள்ள, எந்தப் பணத்தாலும் திரும்ப வாங்க முடியாத, நூலகத்தையும் எரித்து போயிருக்கிறீர்கள்.

பலவருடங்கள் உழைத்து எழுதி வைத்த ஆராய்ச்சிக்குறிப்புகளைக் கூட விட்டுவைக்காமல் எரித்து போயிருக்கிறீர்கள்.அதை என்னால் திரும்ப மீட்டெடுக்கவே முடியாது. 

நீங்கள் இந்தக் கொடுமையையெல்லாம் உங்களுக்கு தீங்கோ,கொடுமையோ செய்வதை கற்பனை கூட செய்யாத எங்களுக்கு செய்திருக்கிறீர்கள்.

இந்த விளையாட்டில் நாங்கள் எப்போதும் ஆடுகள்.நீங்களோ ஒநாய்கள்.நாங்கள் எங்கள் குணங்களை பாதுகாத்துகொள்கிறோம். ஆனால் நீங்கள் உங்கள் குணங்களை மாற்றிக் கொள்வீர்கள் என்று நம்பிக்கை வைக்கிறேன்.

எந்த சூழ்நிலையிலும் உங்கள் சாபங்களுக்கு பதிலாக ஆசீர்வாதத்தையே உங்களுக்கு கொடுக்க விரும்புகிறோம்.

பிர்மிங்ஹாம் மக்களின் முந்தைய தனித்தன்மை அவர்களின் அமைதியான நல்ல குணங்களில் இருந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.அந்த தனித்தன்மையையே நீங்களும் பின்பற்றி நல்வழி திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் உண்மையான
ஜோசப் பிரிஸ்ட்லீ >>

No comments:

Post a Comment