Thursday, 8 December 2016

நான்- ஸ்ருதி டிவி மற்றும் கே.என் சிவராமன்...

நண்பர் கே. என் சிவராமன் விஷயத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் தன் சுவரில் என் மீது சில விஷயங்களை அபாண்டமாக எழுதியிருக்கிறார்.
கே.என் சிவராமன் !
நீங்கள் விஷயத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் அரைகுறையாக புரிந்து கொண்டு பேசுகிறீர்கள் ஐயா...
நான் நடந்ததை கோர்வையாக எழுதிவிடுகிறேன்.

1. 15 அக்டோபர் 2016 அன்று பிரேம் புத்தக நிகழ்வில் திருமா பேசிய வீடியோவை பகிர்ந்து, அதில் ஸ்ருதி டிவியை புகழ்ந்து போஸ்ட் போடுகிறேன்.
2.அப்படி போட்ட பிறகு கீழே உள்ள எழுத்தை தற்செயலாக பார்க்கிறேன். அதில் திருமா இந்துத்துவ சக்திகளோடு துணை போவேன். மோடி எனக்குப் பிடிக்கும் என்றெல்லாம் சொல்வதாக வாசகங்களை ஸ்ருதி எழுதியுள்ளார்.
3.அக்கூட்டத்தை நேரில் சென்று பார்த்தவன் என்ற முறையில் எனக்கு கொதிப்பு வருகிறது. அதை ஸ்ருதிக்கு சுட்டிக்காட்டுகிறேன். பதிவுக்கு லைக்கிட்ட ஸ்ருதி, என் சுட்டிக்காட்டலை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். நான் கோபத்தில் அவரை பிளாக் செய்கிறேன்.
4. அரவிந்த் யுவராஜ் வந்து கண்ணியம் பேசுகிறார். என்ன இது இப்படி செய்து விட்டீர்களே என்று சொல்லி, நான் ஸ்ருதி டிவியிடம் பேசுகிறேன் என்கிறார். நான் அதை கண்டுகொள்ளவில்லை.
5.அக்டோபர் 18 இன்று அதாவது மூன்று நாட்கள் பிறகு, அக்காணொளியை பார்க்கிறேன். அதில் அந்த விஷ எழுத்துக்கள் அப்படியே இருக்கின்றன. நான் மறுபடியும் கொதிக்கிறேன். மத்தியஸ்தம் என்ற போலி முகம் காட்டிய நண்பர் அரவிந்த் யுவராஜை டேக் செய்து இன்னும் அவர் எடுக்கவில்லை. அவர் செய்தது தவறு என்கிறேன்.
6. அரவிந்த் யுவராஜ், விஜய் அவர் அன்றே அதற்கு பதில் சொல்லிவிட்டார் என்கிறார். எனக்குக் குழப்பம். வேறு ஐடி மூலம் ஸ்ருதி டிவி சுவருக்கு சென்று பார்க்கிறேன்.
7.அங்கே அவர் அதே 15 ஆம் தேதி ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் அக்காணொளியில் 38 வது நிமிடம் திருமா அப்படி பேசியிருக்கிறார். அதைத்தான் எழுதியிருக்கிறேன். வேறு யாராவது அப்படியில்லை என்று சொன்னால் மாற்றிக் கொள்கிறேன் என்கிறார்.
8. நான் குழப்பத்தோடு மறுபடியும் கேட்கிறேன். அந்த 38 வது நிமிடத்தில் அதற்கு எதிராகத்தான் திருமா பேசியிருக்கிறாரே தவிர, ஸ்ருதி எழுதியிருப்பது போல் பேசவே இல்லை.
9. நான் ஆவேசமாக ஸ்கிரீன் ஷாட் எடுத்து, அரவிந்த யுவராஜிடம் இவர் திருந்தவில்லை. அவரை ஆதரிக்கும் நீங்களும் ஒரு போலி என்று அரவிந்தை பிளாக் செய்கிறேன்.
10. தோழர் கிருபா முனுசாமி களத்தில் வருகிறார். அவர் ஸ்ருதி டிவி சொல்வது போல 38 வது நிமிடம் அப்படி எதுவுமில்லை. திருமா அப்படி பேசவில்லை என்று நிருபிக்கிறார்.
11. ஸ்ருதி டிவி இப்போதும் ரியாக்ட் செய்கிறது. அப்போதும் தன் தவறை ஒத்துக் கொள்வது போல செய்து, அக்காணொளியையே நீக்கி விடுகிறது. இதற்கு ஆதாரமாக வெற்றிவேல் கிருபா சுவரில் முதலி காணொளியை பார்க்க முடியவில்லை என்றொரு ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார். நானும் வேறு ஐடி மூலம் அதை ஒபன் செய்த போது செய்ய முடியவில்லை.
12. நான் மறுபடியும் காணொளியின் விவரிப்பை திருத்தச் சொன்னால், காணொளியையே நீக்கியிருக்கிறாரே என்று சொல்கிறேன்.
13. இப்போது மறுபடி ஸ்ருதி டிவி காணொளியை பதிவேற்றுகிறார். தன் நண்பர்களிடம் போய் ஆதரவு கேட்கிறார். ஸ்ருதி எனக்கும் தெரிந்தவர்தான். என்னிடமும் நன்றாக பேசுபவர்தான். அவர் தலித் விரோதியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் காணொளி விஷயத்தில் அவர் செய்தது தலித் விரோதம்தான். அதை அவர் அறிந்து செய்தாலும் சரி அறியாமல் செய்தாலும் சரி. நான் இன்று இப்படி நிலையாய் நிற்காவிட்டால் அவர் அதை நீக்கியிருக்கவே மாட்டார். ஒரு தவறான தகவலை மக்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.
14. 38 வது நிமிடத்தில் அப்படியில்லை என்று ஸ்ருதி டிவிக்கு தெரியாதா. அவரால் அன்றே அதைக் கேட்டு திருத்தியிருக்க முடியும்தானே.
15 ஏன் அன்றே திருத்தவில்லை. அதுதான் என் கேள்வி. சிவராமன் அவர்களே... இரண்டு நிமிடம் அதை கேட்டு ஏன் நீங்கள் திருத்தவில்லை என்று ஸ்ருதி டிவியை கேளுங்களேன். நீங்கள் கேட்க மாட்டீர்கள். ஆனால் ஒரு பக்கம் மட்டும் கண்ணியம் கண்ணியம் என்று அட்வைஸ் பண்ண வந்துவிடுவீர்கள்.

பிரச்சனையை சரியாக புரிந்து கொள்ளாமல் பதிவிட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
இன்னும் இது பற்றி பல கோணங்கள் இருக்கின்றன. தொடர்ச்சியாக எழுதுகிறேன். உங்களுக்குப் பிடித்த கண்ணியதோடயே எழுதுகிறேன் ஐயா...

Sunday, 29 May 2016

பால்கட்டு

பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ’பால்பண்ணை’ என்று சகமாணவர்கள் கூப்பிடுவார்கள்.அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ’நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களை கொண்டுள்ளதால் அவரைப் ’பால்பண்ணை’ என்று அழைப்பார்கள்.
அப்பெயரை நான் உச்சரிக்கவில்லையே தவிர பையன்கள் அப்படிச் சொல்லும் போது கலகலவெனச் சிரித்திருக்கிறேன்.
அதற்கும் முன் சிறுவயதில் ’சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் லட்சுமி நடித்திருக்கும் கேரக்டருக்கு பால்கட்டி கொண்டது என்று துன்பப்படுவதாக ஒரு காட்சி வரும்.
ஒரு விநாடி இப்படின்னா என்ன? என்று தோன்றி பின் மறந்த காட்சி அது.
பொதுவாக பெண்ணின் மார்பு என்பது ஆணுக்கு உச்சமான இன்பத்தைக் கொடுக்கும் விசயம். பார்க்கும் பெண்களின் மார்புகளில் எல்லாம் தன் விழிகளை பதிக்காமல் இருக்க அவனால் முடியவில்லை.
ஆனால் அதன் பின்னால் பெண்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மாதவிலக்கு, மென்ஸஸ் போன்ற விஷ்யங்கள் பற்றி கூட கொஞ்சம் விழிப்புணர்ச்சி வந்தாற்போல இருக்கிறது.ஆனால் இந்த மார்பினால் வரும் துன்பத்தைப் பற்றி மிகக் குறைந்த விழிப்பே இருக்கிறது.
சமீபத்தில் அமரந்தா எழுதிய ’பால்கட்டு’ என்றொரு கதையைப் படித்த பிறகுதான் எனக்கு இதன் வலி புரிந்தது.
கதைச் சுருக்கம் வருமாறு.
மத்திய தர வர்க்கத்துப் பெண்ணுக்கு,வேலைக்கு போயே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் பெண்ணுக்கு ‘பால்கட்டுதல்’ என்றப் பிரச்சனை இருக்கிறது.
மார்பகங்களில் பால் அதிகமாகக் கட்டிக்கொண்டு வலியைக் கொடுப்பதுதான் இதன் அம்சம்.
மிக அதிகமாக கட்டிக்கொள்ள டாக்டரிடம் போகிறாள்.நர்ஸ் பம்ப் வைத்து பாலை எடுக்க முயற்சி செய்கிறார். வலியால் துடிக்கிறாள் இவள்.
இவள் வலியால் துடிப்பதைப் பார்த்த நர்ஸ் ‘யார்கிட்டயும் சொல்லாதம்மா” என்று தன் வாயால் மார்பில் வாயைவைத்து பாலை உறிஞ்சி துப்புகிறார்.
பின் பெண்ணின் முலைகளை ஆராய்ந்து, அதில் புண் இருப்பதாகவும், அதனால் பால் சரிவர வெளிவராமல் கட்டிக் கொள்வதாகவும் சொல்லி, அதற்கு ஒரு க்ரீம் கொடுக்கிறார்.
அந்த க்ரீமைத் தடவ வேண்டும். பின் குழந்தைக்குப் பாலைக் கொடுக்கும் முன் அதை சுத்தம் செய்ய வேண்டும். பின் மறுபடியும் தடவ வேண்டும் என்று நரக வாழ்க்கையை வாழ வேண்டியதாயிருக்கிறது.
காலை அலுவலகத்துக்கு வந்துவிட்டு மதியம் குழந்தைக்கு பால் கொடுக்கச் செல்வதற்குள் அது மார்பில் கட்டிக் கொண்டு கெட்டுப் போய் விடுகின்றது.
இவளுக்கு குழந்தை பால் குடித்தால் பாரம் குறையும் என்றிருக்கும் போது, குழந்தையோ கெட்டுப் போன பாலைக் குடிக்காமல் அழுகிறது.
மறுநாளில் இருந்து அலுவலகத்தின் பாத்ரூம் சென்று அவ்வப்போது மார்பை பிதுக்கி அவ்வப்போது பாலை எடுக்கிறாள்.
இப்படியாக பால்கட்டுதலால் அவள் படும் கஷ்டத்தை ஆசிரியர் கதை நெடுகச் சொல்கிறார்.
ஒருநாள் மாலை வீடு செல்லும் போது கதவு திறந்திருக்கிறது. வழக்கமாக இரவு லேட்டாக வரும் கணவன் அன்று சிக்கிரமே வந்திருக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி.அவனிடம் காப்பிக் குடிக்க வேண்டும் என்று கேட்க நினைக்கிறாள்.
ஆனால் மார்பு பாரம் தாங்க முடியாமல் குழந்தையை எடுத்து வராண்டாவிலேயே பால் கொடுக்கிறாள். குழந்தைக் குடிக்க ஆசுவாசப்படுகிறாள்.
ஆனால் கணவனோ உள்ளே போ உள்ளேப் போ போ என்று விரட்டுகிறான். இவள் வேறு வழியில்லாமல் உள்ளே வருகிறாள்.
“வாசல்ல இருந்துதான் இதெல்லாம் செய்வியோ’ என்று கணவன் அவள் முகத்துக்கு நேரே கையை நீட்டி கடுத்து வருகிறான்.
அவள் தலை கிறுகிறுத்துப் போகிறது.
இப்படியாகக் கதை முடிகிறது.
இதைப் படித்த பிறகுதான் பால்கட்டுதல் என்பதில் இவ்வளவு பிரச்சனையா என்று எனக்குத் தெரிந்தது. மனவியிடம் கேட்டேன்.
“ஆமா அது எவ்வளவு பெரிய கொடுமை” என்று நிறையச் சொன்னார். நான் அவளிடம் கேட்டேன் “இது எனக்குத் தெரியாதே” என்றேன்.
“இதெல்லாம் சொல்லிட்டா இருப்பாங்க” என்ற பதில் கிடைத்தது.
அம்மாவுக்கு போன் போட்டுக் கேட்டேன்.
அம்மா இந்தக் கதையை ஆமோதித்து, பால் கட்டுதல் என்பது சில பெண்களுக்கு கொடுமையான விசயம் என்று விளக்கினார்.
நான் அம்மாவிடம் கேட்டேன் “ஏம்மா இத்தன வருஷம் உங்க கிட்ட ஃப்ரெண்டா பேசியிருக்கேன். இந்த விஷயத்த எனக்கு சொல்லவே இல்லை” என்றேன்.
யாருமே எங்கேயுமே இதுமாதிரியெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லாமல் இருந்தால் ஆணுக்கு எப்படித் தெரியும்.
அப்படி ஆணுக்குப் பெண்ணின் வலிதெரிவது இப்போதைய வன்புணர்வு கலாச்சாரத்தில் முக்கிய தேவையாகும்.
என்னைக் கேட்டால் பிளஸ் டூ தமிழ் சிறுகதைகளில் ஒன்றாக அமரந்தாவில் “பால் கட்டு” சிறுகதையை வைக்க வேண்டும் என்பேன்.
ஒருவேளை இக்கதையைப் படித்தால்
“பால் பண்ணை, இளநீ, காய், முலை, முயல் குட்டி” என்றெல்லாம் மார்பகங்களை பேசுவதை கொஞ்சம் ஆண்களாவது தவிர்ப்பார்கள்.
அந்த கொஞ்ச ஆண்கள் பிற்காலத்தில் நிறைய ஆண்களாக ஆகலாம்.
பண்பட்ட சமூகத்தை அடைவதுதான் நம் நோக்கம் என்றால் இது போன்ற சிறுகதைகள் நிறைய வரவேண்டும்.
விவாதிக்கப்பட வேண்டும்.

Wednesday, 13 April 2016

ஏன் அம்பேத்கர் வழி செல்ல வேண்டும்...

நீங்கள் மாதம் குறைந்தது 30,000 க்கும் மேல் சம்பாதிக்கும் நபர்.
சுத்தமான வீடு, பாத்ரூம், கழிவறை.
நல்ல சாப்பாடு
வாரம் ஒருநாள் மால், சினிமா, பீச், ரெஸ்டாரண்ட்.
கணவன் மனைவி குழந்தைகள் என்றிருக்கிறீர்கள்.
வெள்ளிக்கிழமை காலை குளித்து நல்ல உடை தரித்து கோவிலுக்குப் போகிறீர்கள்.
தெருமுனையில் இருக்கும் குப்பைப் பெட்டியில் இரண்டு பேர் குப்பை அள்ளும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை எளிதாக கடந்துவிடுகிறீர்கள்.
கொஞ்சம் மனிதாபிமானம் இருந்தால் என்ன நினைப்பீர்கள்.
”ஐயோ பாவம் இப்படி அழுக்கில் வேலை செய்கிறார்கள். இந்த நாற்றத்தில் வேலை செய்கிறார்கள்”. என்று நினைத்து அவரைக் கடந்து செல்வீர்கள்.
அது ஒன்றும் போலித்தனமான இரக்கம் கிடையாது. உண்மையில் உங்கள் மனதில் அந்த குப்பை அள்ளுபவரைப் பார்த்து அன்பு சுரக்கவே செய்கிறது.
ஆனால் இந்த அன்பு அந்த குப்பை சுத்தம் செய்யும் தொழிலாளிக்கு பெரிய நன்மை எதையும் கொடுக்காது.
கொஞ்சம் இப்படி யோசித்துப் பாருங்கள்.
- இப்படி குப்பை அள்ளுகிறாரே, சாக்கடை சுத்தம் செய்கிறாரே இவர் எப்படி இந்த தொழிலுக்கு வந்தார்?
- இவர் என்ன ஜாதியாய் இருக்கக்கூடும்?
- எப்படி இது மாதிரி சுத்தம் செய்யும் தொழில் செய்பவர்கள் 99 சதவிகிதம் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்?
- அதற்கு என்ன காரணம்?
- வறுமையினால் தொழில் அழுக்கு சுத்தம் செய்யும் தொழிலுக்கு வந்திருப்பார்கள். இருக்கலாம். நம் குடும்பத்திலும் நிறைய சொந்த பந்தங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் எல்லாம் இந்த குப்பை அள்ளும் தொழிலுக்கு வரவில்லை.
-எப்படி இத்தொழிலை தாத்தா அப்பா பையன் என்று பரம்பரையாகக் கூட செய்கிறார்கள். மனமுவந்து செய்கிறார்களா? எப்படி இந்த குப்பை அள்ளும், சாக்கடை சுத்தம் செய்யும் தொழில் அவர்கள் மேல் திணிக்கப்படுகிறது?
இப்படியெல்லாம் ஒரு கேள்வியை எடுத்துக் கொண்டு நீங்கள் யோசித்தால் உங்களுக்கு ஒரு குற்ற உணர்வு வரும்.
போதும் அது போதும். வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்.
அந்த குற்ற உணர்வு சமூதாயத்தில் உள்ள அனைவருக்கு வருவதுதான் முக்கியமானது. அதுவே நம்மில் பலருக்கு வருவதில்லை.
ஒரு மனிதன் அழுக்கில் வேலை செய்கிறான் என்று பரிதாபப்பட்டு போய்விடுகிறோம்.
ஒரு மனிதனை எது பரம்பரையாக அழுக்கில் வேலை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது என்ற சிந்தனையை தவற விட்டுவிடுகிறோம்.
சரி.
இப்படியாக நீங்கள் குற்ற உணர்ச்சியை கொண்டிருக்கிறீர்கள்.
டிஸ்டர்ப் ஆகிவிட்டீர்கள்.
அது பற்றி பெரியவர்களிடமோ, குடும்பத்தினரிடமோ, அலுவலக நண்பர்களிடமோ விவாதிக்கிறீர்கள். அவர்கள் என்ன செய்வார்கள்.
- ஆம் பாவம்தான் என்பார்கள். நீங்கள் மேலும் மேலும் அதையே சொல்லிக் கொண்டிருந்தால் ‘நம்மால் என்ன செய்ய முடியும்’ என்பார்கள்.
-நம் சிஸ்டம் தவறு என்பார்கள். எங்கப் பாத்தாலும் ஊழல் என்பார்கள். நம்ம டவுன் பிளானிங்கே தப்பு சார். அதனாலத்தான் பாதிப்பிரச்சனை என்பார்கள்.
- ’அப்படியில்லையே குப்பை அள்ளுரத யார் வேண்டுமானாலும் செய்யலாமே’. இதுல ஜாதி எங்க வந்துச்சி. உனக்கு ஜாதி வெறி என்பார்கள்.
- அப்ப நீ போய் அள்ளு. அள்ளமாட்டதான. பெரிசா பேச வந்துட்ட. சும்மா அன்னைத் தெரசா வேஷம் போட்டுட்டு வந்துட்ட என்பார்கள்.
ஆனாலும் உங்களுக்கு அந்த கேள்வி மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. உறுத்திக் கொண்டே இருக்கிறது.
நான் ஏன் இங்கே சுத்தபத்தமாக இருக்கிறேன்?
அவர் ஏன் அங்கே அழுக்கு அள்ளி இருக்கிறார்?
இந்தக் கேள்வி உங்களை வாட்டும் போது நீங்கள் இரண்டு பக்கம் பிரியலாம்.
பிரிய வாய்ப்பிருக்கிறது.



1.இது அனைத்தும் கர்மா.
முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் அடிப்படையில் வரக்கூடியது. அவன் குப்பை அள்ளும் பரம்பரையில் இருக்கிறான். நீ குப்பை அள்ளாத பரம்பரையில் இருக்கிறாய் என்றால் அது போன பிறவியில் அவன் பாவம் செய்ததையும், நீ நன்மை செய்ததையும் சுட்டுகிறது.
நீ கலங்கத் தேவையில்லை.
நீ இன்னும் ஏற்றம் பெற கடவுளைத் துதி. விளக்கு பூஜை செய். கடவுள் நாம ஜெபி.
இந்த ஜாதி வித்தியாசம் கூட கர்மாதான். நீ புண்ணியம் செய்ததால் இந்த மகத்தான ஜாதியில் பிறந்தாய். இது உன் பெருமை. இதை அனுபவி.
மற்றவர்களுக்கு நீதான் வழிகாட்ட வேண்டும். அவர்கள் புண்ணியம் செய்து அடுத்த பிறவியில் நம் ஜாதியில் பிறக்கட்டுமே. யார் வேண்டாம் என்று சொன்னது. இப்போது குப்பை அள்ளட்டும். இதில் குற்ற உணர்வு கொள்ள எதுவுமில்லை.
இந்த கர்மா வழி சென்றால் மனித நேயம் போய்விடும்,அடுத்த கட்ட சிந்தனை அனைத்தும் மனதில் இருந்து சுத்தமாக போயிவிடும்.
கொள்கை அளவில் ஜாதியை ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்று அர்த்தம். அதன் பிறகு உங்கள் மனம் அடங்கிவிடும்.
மெல்ல மெல்ல அடிப்படைவாதத்தை நோக்கி நீங்கள் திரும்பி இருப்பீர்கள்.
2. நீங்கள் அம்பேத்கர் சிந்தனை பக்கம் இதே கேள்விகளை வைத்து திரும்பலாம்.
அம்பேத்கர் என்ன சொல்கிறார்?
நீ குப்பை அள்ளுவதே உன் மீதான திணிப்புதான். அந்தத் திணிப்பை பலநூறு வருடங்களாக உன் மீது திணித்து வைத்துள்ளனர்.
மதத்தின் மதநூல்கள் அடிப்படையில் உன்னை அடக்கி இருக்கின்றனர். நீ இதை எதிர்த்து போராட வேண்டும். எப்படி இந்த தொழிலை உன் மீது திட்டமிட்டு சுமத்தினார்கள் என்பதை அறிந்து கொள்.
கல்வி கொள்.கேள்வி கேள் எதிர்த்துப் போராடு. அப்போது மட்டுமே உன் விடுதலை சாத்தியம் என்கிறார்.
உங்கள் கேள்வியோடு அம்பேத்கரைப் படிக்கும் போது உண்மையை தெரிந்து கொள்கிறீர்கள். கொள்கை அளவிலாவது ஜாதிக்கு எதிராக திரும்புகிறீர்கள்.
ஜாதியின் கொடுமை உங்களுக்குப் புரிகிறது. ஜாதி எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு வருகிறீர்க்ள்.
இதனால் “மக்கள் நலம்” கிட்டுகிறது.
பாருங்கள் ஒரே கேள்வியோடு
கர்மா பக்கம் போனால் ஜாதியை ரசிக்கும் அயோக்கியமாக, சமூகத்திற்கு தீமை விளைவிக்கும் மனநிலைக்கும்,
அம்பேத்கர் பக்கம் போனால் ஜாதியை எதிர்க்கும் அன்பாக, சமூகத்திற்கு நன்மை விளைவிக்கும் மனநிலைக்கு போகிறீர்கள்.
இந்த புள்ளியில்தான் அம்பேத்கர் அடுத்த இருநூறு வருடங்களுக்கு இந்தியாவுக்கு அதிகமாக தேவைப்படுகிறார்.
”நான் ஆணையிட்டால்” பாடலைப் பார்க்கும் போது ஏன் கிளர்ச்சியடைகிறோம்.
தொடர்ச்சியாக நியாயத்துக்கு எதிராக ஒருவன் அடிமைப்படுத்தப்படும் போது,
ஒருநாள் அவன் அதை எதிர்த்து போராடும் போது சவுக்கை வீசும் போது,
நம்மை அறியாமல் நேர்பக்கம் நிற்கும் நம் மனது மகிழ்கிறது. விசில் அடிக்கிறது.
அப்படியானால் பலநூறு வருடங்கள் நியாயத்துக்கு எதிராக, மதத்தின் பெயரால் அடக்கி வைக்கப்பட்டு அடிமைப்படுத்தபட்ட மக்களின் சார்பாக
‘நான் ஆணையிட்டால்’ என்று தன் சவுக்கை வீசிய அம்பேத்கரை எப்படியெல்லாம் நாம் கொண்டாடி இருக்க வேண்டும்.
யோசித்துப் பாருங்கள்.

Monday, 7 March 2016

கிருஷ்ண கோபாலின் சிறுகதைத் தொகுப்பு

31/01/2016  பனுவலில் நடந்த எழுத்தாளர் கிருஷ்ண கோபாலின் சிறுகதைத் தொகுப்பு பற்றிய கலந்துரையாடலில் குறைந்தவர்கள் கலந்து கொண்டாலும் நிறைவாக இருந்தது.
அப்பண்ண சாமி, வெளிரங்கராஜன், பாரதி செல்வா, மற்றும் நான் என்று அனைவரும் அனைத்துக் கதைகளைப் பற்றியும் எங்கள் கருத்துக்களைப் பேசினோம்.
பாரதி செல்வா மிக அருமையாக பேசினார்.
அக்கதைத் தொகுப்பில் வரும் ”எழுத்தாளனின் மனைவி” கதை என்ற கதையைச் சொல்லி அதில் எனக்கு கருத்து வேறுபாடிருக்கிறது என்று சொன்னேன்.
நூறு வருஷத்துக்கு முன்னரும் எழுத்தாளனின் மனைவி எழுத்தாளனால் கிண்டல் செய்யப்படுகிறாள். இப்போதும் அப்படித்தான் சிறுகதைகள் வருகின்றன.
ஏன் இதில் அந்த மனைவி பக்கம் இருந்து எந்த பார்வையுமில்லையா? என்றேன்.
ஒரு பெண்ணை சதா குடும்ப வலையில் தந்திரமாக சிக்க வைத்து விட்டால் அதற்குள்தானே அவள் பங்காற்ற முடியும் என்றேன்.
அதைத்தொடர்ந்து பாரதி செல்வாவும் பிடித்துக் கொண்டார்
“பொதுவாக உலகையே அன்பு மயமாக சமத்துவமாக பார்ப்பவர்கள் கூட வீட்டில் ஒரு ஜீவன் இருக்கிறதே. அவளுக்கு என் கஷ்டம் என்ற பார்க்கத் தவறிவிட்டதை நாம் இன்னும் சுட்டிக் காட்டவே இல்லை” என்ற ரீதியில் மிக அருமையாக பேசினார்.
கிருஷ்ண கோபாலில் மற்ற கதைகளில் தெரியும் முற்போக்கை ரசித்துக் கொண்டிருக்கும் போது இந்த இறுதி சிறுகதை கொஞ்சம் நெருடுகிறது என்றேன்.
அது எழுத்தாளனின் நேர்மையைக் குறிக்கிறது என்பது கிருஷ்ண கோபாலின் வாதம்.
கிருஷ்ண கோபாலின் எழுத்து நடை சுந்தர ராமசாமியின் நடையை ஒட்டி இருக்கிறது என்றேன்.
அதனாலேயே அவர் கதைகளுக்குள் எளிதாக ஒன்றி விட முடிகிறது என்றேன்.
எப்படி விலங்குப் பண்ணை நாவலை வாழ்க்கையின் எல்லா தருணங்களுக்கும் பொருத்திக் கொள்ள முடிகிறதோ அது மாதிரி கிருஷ்ண கோபாலின் சில கதைகளை எந்த ஒரு வாழ்க்கை நிகழுக்கும் பொருத்திக் கொள்ள முடிவது அதன் சிறப்பு என்று பேசினேன்.
எழுத்தாளர்கள் வட்டார வழக்கை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவார்கள்.
எப்படி இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் சில பம்பாஸ்டிக்கான வார்த்தைகளை நடுவே எழுதுவார்களோ, அது மாதிரி வட்டார வழக்கை அதிகப்படியாக திணிப்பவர்கள் மாதிரியான போக்கை விட்டு
தேவைப்பட்ட இடத்தில் மட்டும் வட்டாரச்சொற்களை எழுதியிருப்பது இவர் எழுத்தின் சிறப்பாக பார்க்கிறேன் என்றேன்.
ஆங்கிலத்தில் நன்றாக எழுதபட்ட ஒரு சிறுகதையை தமிழில் மொழிபெயத்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு வாசிப்பு உணர்வை கொடுத்தது என்றேன்.
சமீப காலத்தில் மொழி நடை பற்றிய மிகப்பெரிய குழப்பம் இளம் எழுத்தாளர்களிடம் இருக்கிறது. ஆனால் கிருஷ்ண கோபாலிடம் அந்த நுட்பம் பற்றிய தெளிவு இருக்கிறது என்றேன்.
ஏன் கொஞ்சம் இடது சாரி பார்வையுடைவர்கள் எழுதினாலே நெகிழ்ச்சியை மறுக்கிறீர்கள். நெகிழ்ச்சியாக எழுதக்கூடாது என்றொரு சட்டம் வைத்திருக்கிறீர்களா?
அல்லது நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் கண்கலங்கவே இல்லையா?
ஏன் அறிவுப்பூர்வமாக எழுதுபவர்கள் அனைவரும் அதை சாமர்த்தியமாக தவிர்க்கிறீர்கள் என்ற கேள்வியை வைத்தேன்.
இப்படியாக பல வாதப் பிரதிவாதங்களோடு மனநிறைவான நிகழ்வாக முடிந்தது.
கூட்டம் தொடங்குவதற்கு முன் பாரதி செல்வா, ராணி கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருக்கும் போது
பாரதி செல்வா “நீங்கள் சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை நாவல் பற்றிய விமர்சனத்தை பேசிய விதமும் கருத்துக்களும் எனக்கு பிடித்திருந்தது. அது சரியானதும் கூட” என்றார்.
அவருக்கு மகிழ்ச்சியான நன்றியைக் கூறினேன்.
’ஆடி மாதமும் வயலின் இசையும்’ சிறுகதைத் தொகுப்பு
தாலம் வெளியீடு
எழுதியவர் கிருஷ்ண கோபால்.

பாத்திரம் விளக்குவது என்னுடைய முறை

அன்று பாத்திரம் விளக்குவது என்னுடைய முறை.
ஆனால் சோம்பலாக இருந்தது. காலையில் இருந்தே ஒத்திப் போட்டுக் கொண்டிருந்தேன்.
மனைவி விளக்கப் போனார்.
“இப்படித்தான் ஆண்களுக்கு திமிர வளக்குறீங்க. அது என் வேலை நான்தான் செய்வேன்” என்று அதை நிறுத்தினேன்.
எப்படியோ இரவு ஏழு மணிக்கு பிறகு ஆரம்பித்தேன்.
மொபைலில் ”ஊட்டி வரை உறவு” படத்தில் வரும் பூமாலையில் ஒர் மல்லிகை பாடலை வைத்தேன். இப்போது கொஞ்ச மாதங்களாக இப்பாடலைக் கேட்டுக் கொண்டு வருகிறேன்.
ஏனோ அதிகம் பிடித்த பாடலாக இருக்கிறது. முதலில் டம்ளர்களைத்தான் விளக்குவேன்.
சதுரங்கத்தில் சிப்பாய்கள் மாதிரி எனக்கு பாத்திரம் கழும் போது டம்ளர்கள் தெரியும். குக்கர் ராணி. டீ போடும் பாத்திரங்கள் யானை. இப்படியெல்லாம் தோன்றும்.
அப்போது பாடலில்
// சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ // வந்தது.
ச்ச என்ன இனிமை... இந்த ஆஆஆ ஹம்மிங் கொடுக்கும் இனிமை இருக்கிறதே... ம்ம்ம் செம...
நானும் அதை கூடவே பாடினேன்.இசைதான் நமக்குள் இருக்கும் அனைத்தையும் அழிக்க வல்லது.
ஒஷோ கூட இனிமையான இசை கேட்பது காமத்தை கட்டுப்படுத்தும் என்று சொல்லி இருக்கிறார்தானே என்று நினைத்துக் கொண்டேன்.
’ஐயர் தி கிரேட்’ படத்தில் மம்முட்டி மனைவியுடன் கூடும் போது இசையை தவழ விடுவார்.நிச்சயமாக அது சாத்தியமில்லை என்று தோன்றியது.
இசை காமத்துக்கு எதிரானது அல்ல.ஆனால் காமத்தை விட அதிக இன்பம் கொடுப்பதாக இருக்கிறது.இப்படியாக யோசிக்கும் போது
“அந்தப் புத்தகம் எங்க இருக்கு” என்றொரு குரல் மனதில் கேட்டது.
ஆமா எங்க வெச்சேன். எங்கதான் வெச்சேன். என்று யோசிக்க பதட்டம் கூடியது.
பாத்திரம் கழுவுவதை பாதியில் விட்டுவிட்டு ஹாலுக்கு வந்து தேடினேன்.
மனைவி கேட்டார் “ என்ன தேடுறீங்க”
“இல்ல ஒரு புக்கு ’ஆடி மாதமும் வயலின் இசையும்’ ன்னு ஒரு சிறுகதைத் தொகுப்பு”
“சரி பாத்திரம் கழுவிட்டு வந்து பாருங்க என்ன இப்போ”
“லூசு மாதிரி பேசாத. அதப்பத்தி ஞாயித்துக் கிழம பேசனும்”
“படிக்கலையா என்ன?”
“படிச்சிட்டேன். இருந்தாலும் இன்னும் அதுல இன்னும் நிறைய பாக்கனுமில்ல. உனக்கு ஒண்ணுமே தெரியாது. நீதான் இப்ப வீட்ட க்ளீன் செஞ்ச. நீதான் சுத்த வெறி புடிச்சி அலைவ. நீதான் அந்த புக்க எங்கயாவது தூக்கி வெச்சிருக்கனும்”
“இல்ல நான் வைக்கலியே. நா ஒரு புக்கு கூட இப்ப எடுக்கல”
“இல்ல எப்பெல்லாம் ஒரு புக்கு எனக்குத் தேவைப்படுதோ. அப்பெல்லாம் அது கிடைக்காது. அதுக்கு நீதான் காரணம். நீ உன்ன அறியாம எதோ செய்து வெச்சிர்ர”
“இதென்ன உளறலா இருக்கு”
“ஆமா உளறல்தான். எல்லாத்தையும் விளக்க முடியாது” என்று கத்தினேன்.
மறுபடியும் பாத்திரம் விளக்க வந்தேன்.
அங்கே பூமாலையில் மூன்றாம் முறையாக ஒடிக்கொண்டிருந்தது.
கேட்கவே எரிச்சலாய் இருந்தது. பாட்டும் மயிரும் என்று அணைத்து வைத்தேன். இப்போது பாத்திரங்கள் மேல் ஆத்திரம் வந்தது.
“டீத்தூள அரிச்சிட்டு அரிப்ப உடன கழுவி வையின்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன். ஏன் அதப் பண்ணல”
“மறந்துட்டேன்” என்று சிரிப்பாக ஒரு குரல் ஹாலில் கேட்டது.
கூடவே சேர்ந்து என் மகளும் சிரிப்பது கேட்டது.
என் மகள் ஒரு மாதிரியாக ஜால்ரா போட்டு அம்மாவை மகிழ்ச்சிப்படுத்துவாள். ஏனென்றால் பாடம் சொல்லிக் கொடுப்பது என் மனைவிதான்.
அதிகாரம் மிக்கவர்களிடம் அதிகாரம் இல்லாதவர்கள் காட்டும் பணிவு அது.
அடிமைகள் என்று முணுமுணுத்துக் கொண்டேன்.
அப்போது பாவைக்காய் பொரியல் பாத்திரத்தில் மிஞ்சி இருப்பதைப் பார்த்தேன்.
“ஏம்பா பாவைக்காய எடுத்து குப்பைகவர்ல போட்டு ஸின்க்ல போட வேண்டியதுதான”
அதற்கும் இரண்டு சிரிப்பொலிகள் கேட்டது.
அப்படியே எரிச்சலடைந்து கொண்டே விளக்கி முடித்தேன்.
குளிக்க வெந்நீர் வைத்தேன். அது சூடாகும் முன்னால் வந்து என் புக்கு என் புக்கு என்று வேதனையோடு முணுமுணுத்துக் கொண்டே தேடினேன்.
அதிகாரத்தில் இருந்து வேதனைக்கு மாறுவதைப் பார்த்த மனைவியும் மகளும் பரிதாபப்பட்டார்கள். அவர்களும் கூட சேர்ந்து தேடினார்கள்.
ஒருவேளை நீங்கள் பாத்ரூமில் கூட வைத்திருப்பீர்கள் என்று தேடினார்கள். கட்டிலுக்கு அடியில்.டிவி அலமாரியில். பேப்பர் குவியலுக்கு நடுவே. எங்கேயும் கிடைக்கவில்லை.
அதன் பிறகு மனைவி அம்பேத்கர் புத்தகங்களுக்குள் தேடினார். அது அவ்வரிசையின் பின்னால் இருந்திருகிறது.
“இதப்பாருங்க இங்க வெச்சிருக்கீங்க. இத நானா வெச்சேன். சரியான மொக்க நீங்க” என்றார்.
புத்தகத்தைப் பார்த்ததும் அப்படியே ஆஃப் ஆகி மகிழ்ச்சியடைந்தேன். மனம் நிம்மதியானது.
உற்சாகத்தில் “என் அன்பே எந்தன் ஆருயிரே என்ற பாலிமர் டீவி ’உறவே உயிரே’ சீரியல் பாட்டைப் பாடினேன்.
அப்படியே பாடிக்கொண்டு குளிக்கப் போனேன். குளித்துக் கொண்டிருக்கும் போது ஒன்றை நினைத்து சிரித்துக் கொண்டேன்.
வெளியே வந்ததும் மகளை அழைத்தேன்.
“ஏ பிள இங்க வா”
“என்ன”
“ நீ ஏன் ப்ரிட்ஜுக்குள்ள வெச்சிருக்கலாம்ன்னு ஃப்ரிட்ஜ திறந்து பாத்த. அந்த அளவுக்கா தெரியாம இருக்கேன் நான். நக்கல்தான. நீ அப்படிப் பாக்கும் போது எவ்வளவு கடுப்பா இருந்துச்சி தெரியுமா”
என்று சிரித்தேன்
“ஒரு டவுட்டுதாம்பா” என்று அவளும் சிரித்தாள்

இரும்புக் கொல்லனின் காமம்...

அந்த இரும்புக்கொல்லன் கடுமையான உழைப்பாளி.
அன்றிரவு கடைத்தெருவில் அவளைப் பார்த்தான்.
காமம் தலைக்கேறிற்று. அவளை அடைய பணம் தருவதாக சொன்னான். அவள் காறி உமிழ்ந்து மறுத்தாள்.
அவளைப் பற்றி விசாரித்தான். அவள் இன்னொரு பணக்காரனின் அடிமை என்று தெரிந்து கொண்டான். எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று உடலை வருத்தி பணம் சேர்த்து அவளை வாங்கினான்.
மகிழ்ச்சியியோடு அவளை தொட முயன்றான்.
“உனக்கு வேலை எதுவென்றாலும் செய்து தருகிறேன். ஆனால் உடலைத்தர முடியாது” என்று திட்டவட்டமாக சொல்கிறாள்.
அடித்து உதைத்துப் பார்க்கிறான். முடியாது என்கிறாள்.
மண் தின்னும் உடல்தானே, கற்பென்று ஒன்றிருக்கிறதா? என்று தத்துவமாக அணுகிப் பார்த்தான்.
“நானும் கற்பை நம்புவதில்லை. ஆனால் இது அடிபணிதல் பற்றிய பிரச்சனை. என் மன உவப்பின்றி என்னிடம் இருந்து ஒன்றைப் பிடுங்குவது பற்றியப் பிரச்சனை. தரமாட்டேன்” என்கிறாள்.
”அப்படியானால் நீ என் அடிமையாகவும் இருக்கத் தேவையில்லை ஒழிந்து போ” என்று உதைத்து அனுப்புகிறான். அந்த ஊரில் நலிந்தவர்கள் யாரிடமாவது அடிமையாக இருந்தால் மட்டுமே பசியாற்ற முடியும். அதை மனதில் வைத்து அவளைத் துரத்தி விடுகிறான்.
ஊர் மக்களிடம் அவளைப் பற்றி பொல்லாதது சொல்லி யாருக்கும் அடிமையாக முடியாமல் செய்கிறான். எதையாவது தின்று எதையாவது கொண்டு உயிர்வாழ்கிறாள்.
உடல் அழகு மட்டும் கூடுகிறதே அன்றி குறையவில்லை.அப்போதும் கொல்லன் அவள் உடலை சுகிக்க கேட்கிறான். தரமுடியாது என்கிறாள். அவன் கேட்க கேட்க கொடுக்ககூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறாள்.
ஊரில் பஞ்சம் வருகிறது. கொடுமையான பஞ்சத்தில் மக்கள் திணறுகிறார்கள். மிருகங்களும் செடிகொடிகளும் காய்ந்து கருகிவிடுகின்றன.கொல்லன் மாதிரி பணக்காரர்கள் வீட்டில் சேமித்து வைத்திருக்கும் தானியத்தை வைத்து பிரச்சனையில்லாமல் வாழ்கிறார்கள்.
கொல்லன் வீட்டுக் கதவை தட்டுகிறாள். “வந்தாயா வழிக்கு. தானியம் தருகிறேன். அவித்து உண்டுவிட்டு. படு” என்கிறான்.
“கொல்லப் பட்டறையில் ஏதாவது வேலை இருந்தால் கொடு. செய்துவிட்டு தானியம் வாங்கிக்கொள்கிறேன். வெட்கத்தை விட்டு சொல்கிறேன் பசிக்கிறது. கூலிக்கு உணவு கொடேன்” என்கிறாள்.
“நீ படு என்னை சுகிக்க விடு. இந்த வீட்டின் ராணியாகு” என்கிறான் கொல்லன். முடியாது என்று மறுத்துச் செல்கிறாள்.
அடுத்து இரண்டு நாட்கள் பிறகு மீண்டும் கதவைத்தட்டி கூலிக்கு உணவு கேட்கிறாள். கொல்லன் உடலைக் கேட்க இடத்தை காலி செய்கிறாள்.
மூன்றாம் நாள் பசியினால் நடக்க முடியாமல் கம்பை ஊன்றி கதவைத் தட்டுகிறாள். “நான் தன்மானத்தோடு உயிர் வாழ ஆசைப்படுகிறேன். ஒரே ஒரு கை தானியம் கொடு. நான் பிழைத்துக் கொண்டு அதற்கு மேலான உழைப்பை உனக்குக் கொடுக்கிறேன்.” என்று கெஞ்சுகிறாள்.
“நீ எனக்கு காமத்தைக் கொடு. அதற்காக பல வருடங்கள் அலைந்து கொண்டிருக்கிறேன். நிச்சயமாக தானியம் தருகிறேன்”
அவள் வெறியாகி கத்துகிறாள் “ பாவி என் குடல் ஒட்டு நூலாகிக் கிடப்பதை இதோ என் வயிற்றைக் கிழித்துக் காட்டவா? உணவுப் பருக்கையை காணாமல் இரண்டு வாரங்கள் சுருண்டு கிடக்கும் குடலின் பசிக்கொடுமை பற்றி ஒரு துளி கூட உனக்குத் தெரியாதா? என் தன்மானத்தை விலையாக கொடுத்துதான் நான் அதைப் பெற வேண்டுமா? தேவையே இல்லை.
இன்று நான் உனக்கு ஒரு சாபம் கொடுக்கிறேன். பயப்படாதே கல்கண்டை எத்தனை உடைத்தாலும் அது இனிக்கும்தான். என்னால் உனக்கு கெட்ட சாபம் கொடுக்க முடியாது.
நல்ல சாபம் கொடுக்கிறேன். இதோ உன் கைகளில் தீக்காயத்தினால் நிறைய தழும்புகள் இருக்கிறதல்லவா? இனிமேல் அந்தத் தழும்பு உனக்கு வராது.
ஆம் இனிமே தீ உன் கையைத் சுடவே சுடாது. ஒவ்வொருமுறை நீ நெருப்பைப் பார்க்கும் போது இது சுட்டுவிடுமே என்று கவனமாக மூளையில் யோசித்து, கவனமாக வேலை செய்யும் போது அது கைகளை சுடாத முரண்பாடு கண்டு திகைக்க வேண்டும்.
அதுவே நீ எனக்குச் செய்த பாவத்தை உனக்கு ஞாபகப்படுத்தும் தண்டனை.
இது என் சாபம்” என்று சொல்லிவிட்டு அழுது கொண்டே நடக்க முடியாமல் தெருவில் தவிழ்ந்து சென்றாள்.
இரும்புக் கொல்லன் ஒட்ச்சென்று கைகளை நெருப்பில் வைத்துப் பார்த்தான்.அது சுடவில்லை.
தீக்கங்குகளை நீரை அளைவதுபோல அளைந்துப் பார்த்தான் சுடவே இல்லை. பதறிக்கொண்டு ஒடினான்.
அங்கே அவள் தெருவில் பசியினால் தவிழவும் முடியாமல் உடலை இழுத்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தாள்.
அவளிடம் மண்டியிட்டு “என்னை மன்னித்துவிடு. உன் சாபம் பலிக்கிறது. என் கைகள் நெருப்பில் பொசுங்காமல் கல்மாதிரி இருக்கிறது. எரி உணர்வே இல்லை “என்று கெஞ்சுகிறான்.
அவள் ஆச்சர்யத்துடன்
“அப்படியா நான் மனமுடைந்து சொல்லும் அந்த வார்த்தை பலித்துவிட்டதா? என் வாக்கு பலிக்கும் என்று தெரிந்தால் நான் இவ்வளவு அவமானப்பட்டு உயிரோடு இருந்திருக்க மாட்டேனே.
இதோ இப்போது ஒரு வாக்கு சொல்கிறேன். நான் இப்போதே இறந்துபோக வேண்டும்.
பசித்து துடிக்கும் போதும் கூட என் முலைகளையும் யோனியையும் மட்டும் துரத்தும் இவ்வுலகில் இருந்து விடைபெற வேண்டும் “என்று சொல்லி இறந்து போகிறாள்.
இரும்புக் கொல்லன் அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.
அந்த ஊரில் பொசுங்காத கைகளைக் கொண்ட கொல்லன் என்று மக்கள் அவனை அதிசயமாக பார்க்கிறார்கள்.
அவன் கைகளை நெருப்பு சுடவில்லை.
ஆனால் சுட்டது.
சுட்டுக் கொண்டிருக்கிறது.
பின்குறிப்பு:
எப்போதோ படித்த என்னை அதிகம் பாதித்த ஒரு Fairy Tales அடிப்படையிலான கதை.

கறாரான பெண்கள்...

சில பெண்கள் பஸ்ஸில் பக்கத்தில் சீட் இருந்தாலும் கொடுக்க மாட்டார்கள்.
மத்திமமாக அமர்ந்து கொள்வார்கள்.
அன்று பஸ்ஸில் நின்று கொண்டிருக்கும் பொது, அமர்திருக்கும் பெண்ணின் கையில் இருந்த மூன்று வயதுக்குள்ளான சிறுவன் என்னைப் பார்த்து சிரித்தான்.
பொதுவாக என் முகம் இறுக்கமாய் இருப்பதால் எந்த சிறு குழந்தையும் என்னைப் பார்த்து சிரிக்காது. ஆனால் என் கண்களும் குழந்தையின் கண்களும் லாக் ஆகிவிடும்.
இவனோ என்னைப் பார்த்து சிரித்தான்.
அவனை இம்பிரஸ் செய்ய வேண்டும் என்று என் கையில் இருக்கும் நோட் பேப்பரை கிழித்து ஒரு கப்பல் செய்தேன்.
அதை திடீரென அக்குழந்தையிடம் நீட்டினேன். அவன் உற்சாகத்தில் ஓசை கொடுத்த படியே வாங்கிக்கொண்டான்.
ஆனால் அந்த இளம் அம்மா அதை ரசிக்கவில்லை.
என்னை ஒரு மாதிரி சந்தேகமாகவே பார்த்தார்.
சிரிக்கவில்லை. இறுக்கமாய் இருந்தார்.
நல்ல வேலையாக நான் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்ததால் இறங்கி சமாளித்தேன்.
இப்படி சமூகம் நல்ல விதமாக இருந்தாலும், சிடு சிடு என்று இருக்கும் பெண்களை எப்போதும் பார்க்கலாம்.
அதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது.
அன்று என் மனைவி ஒரு கதை சொன்னார்.
பள்ளியில் ஒரு எட்டு வயது பெண் குழந்தையின் பாட்டி இதை சொன்னாராம்.
அந்த 'லோயர் மிடில் கிளாஸ் வயதானப் பெண்' பேத்தியை அழைத்துக் கொண்டு பஸ்ஸில் போயிருக்கிறார்.
அங்கே வயதில் மூத்த நரை மனிதர் அன்போடு தன் பக்கத்தில் அமருமாறு அச்சிறுமியை அழைத்திருக்கிறார்.
சிறுமி போகாமல் நிற்க
பாட்டி "பராவயில்லை உக்காரும்மா" என்று சொல்லி உட்கார வைத்து இருக்கிறார்.
கொஞ்ச நேரத்தில் பேத்தி அங்கிருந்து ஓடி வந்து விட்டாள். பாட்டியிடம் எதுவும் சொல்ல வில்லை.
அன்று முழுவதும் வீட்டில் யாருடனும் பேசவில்லை.
மறுநாள் காலையில் பள்ளி செல்ல மாட்டேன் என்று சொல்லி இருக்கிறாள்.
விசாரிக்கும் பொது "பாட்டி சொன்னதாலதான் அங்க உக்கார்ந்தேன் ஆனா அவரு என்ன" என்று சொல்லி அழுதிருக்கிறாள்.
அந்த 'பேருந்து வயதானவர்' அச்சிறுமியின் முலைகளை தடவி இருக்கிறார். இந்த அதிர்ச்சியால் அவள் எழுந்து ஓடி வந்திருக்கிறாள்.
அன்று இரவு முழுவதும் தூங்க முடியாமல் அழுது மறுநாள் காலை இத்தனைக்கும் காரணம் பாட்டிதான் என்று திட்டி இருக்கிறாள்.
"இப்ப வரைக்கும் என் பேத்தி என்கிட்டே சரி பேச மாட்டேங்குறா " என்று சொல்லி கண் கலங்கி இருக்கிறார் அந்த வயதானப் பெண்.
"நான் சிறுமியாக இருக்கும் போது பஸ்ஸில் அமர்ந்திருக்கும் போது நின்று கொண்டிருந்த ஒருவன், அப்பயணம் முடியும் வரை அவன் ஆண் குறியை எடுத்து எனக்கு மட்டும் தெரியும் படி போட்டு வைத்திருந்தான். அதைப் பார்த்து நான் அடைந்த அருவருப்புக்கு அளவே இல்லை. இதில் என்ன பிரச்னை என்றால் வெகுநாள் வரை நான் எதோ தப்பு செய்து விட்டதாக பயந்து கொண்டிருந்தேன்"
என்ற விவரிப்பை ஒரு பெண் சொல்ல கேட்டுருக்கிறேன்.
பத்து வயதுக்கு உட்பட்ட ஆணுக்கு இப்பிரச்சனைகள் எல்லாம் இல்லை.
அதனால்தான் எப்போதும் சீட் கொடுக்காமல் ஒரு பெண் இருந்தால் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதிகம் சிரிக்காமல் அளவுக்கு அதிகமாய் ஒரு பெண் கறாராய் இருக்கும் பட்சத்தில் அதையும் புரித்து கொள்ள வேண்டும்.

சு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா'

சு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா' நாவல் வாசித்தேன்.
அன்றொரு நாள் ஷேர் ஆட்டோவில் போகும் போது அதில் ஒட்டி இருந்த ஸ்டிக்கரை பார்த்தேன்.
முஸ்லிம் இந்து கிறிஸ்தவ ஆலயங்கள் வரிசையாக இருபது மாதிரியான மத ஒற்றுமை ஸ்டிக்கர் அது.
சிறு வயதில் இது மாதிரியான விஷயங்களை அதிகமாக ரசிப்பேன். அதன் பிறகு இன்னும் புத்தகம் வாசிக்க இதெல்லாம் ஒரு போலியாக ஒரு காமடியாக தெரிய ஆரம்பித்தது.
இதெல்லாம் மேலோட்டமாக சீன் போடும் விஷயங்கள்.
இதெல்லாம் ஆழ்ந்து யோசிக்க தெரியாதவர்கள் செய்யும் வேலை என்று நினைப்பேன்.
ஆனால் அறிதலின்,சிந்தனையின் அடுத்த கட்டத்தை அடையும் போது இந்த ஸ்டிக்கர் மாதிரியானவற்றின் அவசியத்தை அறிகிறேன்.
மக்களுக்கு தேவையான அடிப்படை உண்மையை அந்த ஸ்டிக்கர் பிரசாரம் செய்வதாக நினைக்கிறேன்.
கீதையில் இருந்து ஒரு மேலோட்டமான வாசகம் நம் அனைவருக்கும் தெரியும்.
"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...... " இப்படியே போகும் அந்த வாசகம் நாலாபக்கமும் பரப்ப படுகிறது இந்த ஸ்டிக்கர் போஸ்டர் காலேண்டர் மாதிரி எளிமையான விஷயங்களில்தான்.
ஆனால் அது கொடுக்கும் மாற்றத்தை பாருங்கள். எல்லா மக்களும் கீதையை ஒரு நல்ல நூல் என்று நினைகிறார்கள்.
கீதையில் இருந்து ஒரு வாசகம் அதிகமாக கேளுங்கள் தெரியாது என்பார்கள்.
ஆனால் கீதை ஆழமானது என்பார்கள்.
இது இந்துத்துவ ஆதரவாளர்களின் பிரசாரத்துக்கு கிடைத்த வெற்றி எனலாம்.
அதே வழியை அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நேர்மையானவர்களும் செய்யலாம்.
என் மனைவிடம் அம்பேத்கர் பற்றி சொல்லும் போது அம்பேத்கர் மனதை பாதித்த ஆறு சம்பவங்களைத்தான் சொன்னேன்.
எனக்குத் தெரியும் அது அவர் மனதை பாதிக்கும் என்று. அதன் பிறகு அம்பேத்கர் பற்றி பேசும் போது காது கொடுத்து கேட்க ஆரம்பித்தார்.
இன்னொரு நாள் அதே அம்பேத்கர் சம்பவங்களை அவர் அம்மா அப்பாவிடம் சொல்லி இருக்கிறார்.
மாமனாரும் மாமியாரும் ஜாதி வெறியால் ஒரு குழந்தை சிகிச்சை கிடைக்க வழி இல்லாமல் இறந்தது பற்றி கேட்டு மிகுந்த வருத்தபட்டிருகிறார்கள்.
பாருங்கள் 1928 யில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஒரு கொடுமை இன்னும் மக்களுக்கு போய் சேரவில்லை.
அசோகமித்திரன் தி.ஜா, சு.ரா, சுஜாதா, இ.பா, ஆதவன், பாலகுமாரன் என்று எத்தனையோ எழுத்தாளர்கள் மயிரைப் புடுங்கி என்ன பயன்.
தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய ஒரு அடிப்படை புரிதலை கூட சமுகத்தில் ஏற்படுத்த முடியவில்லை.
அவர்கள் அழகியலையும், அகத்தையும், கற்பனை பிரச்சனைகளையும் நொட்டி கொண்டிருந்தார்கள்.
திரும்ப திரும்ப செத்துப் போன புராணக் கதைகளுக்கு 'தத்துவ வலு' சேர்த்து இந்து வைதீக மதத்துக்கு வலு சேர்த்தனர்.
இதன் அடிப்படையில் சு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா' நாவல் நல்ல படைப்பாக தெரிகிறது.
அரசு அலுவலகத்தில் கோட்டா சிஸ்டத்தில் வேலை கிடைத்து,
வேலை பார்ப்பவர்களை உயர்த்தப்பட்ட ஜாதியினர் எவ்வாறு எல்லாம் அடக்குகிறார்கள், அலட்சியப் படுத்துகிறார்கள் என்பதை சமுத்திரம் மிக அழகாக சொல்கிறார்.
சர்வீஸ் பரிட்சை எழுதி தேறியிருக்கும் 'அன்னம்' என்னும் பெண்ணுக்கு ஜாதியின் அடிப்படையில் சுமாரான வேலையை கொடுப்பதும்,
தற்காலிக ஊழியர் ஒருவருக்கு நான்கு வருடங்கள் நல்ல வேலையைக் கொடுப்பதும் என்று இருக்கும் அலுவலகத்தை காட்டி வாசகரை பதற வைக்கிறார்.
யோசிக்க வைக்கிறார்.
அன்னம் என்ற அப்பெண்ணை ஒரு கிளார்க் "நீ காலனி பொண்ணு உனக்கு நாங்க எவ்வளவு செய்திருக்கோம் என்று அதட்டும் போது
அன்னம் மிரண்டு நிற்க
அங்கே வரும் இன்னொரு கிளார்கான தங்கசாமி அன்னத்திடம் சொல்கிறார்
"இனிமே உன்ன யாராவது காலனி பொண்ணுன்னு சொன்னா உன் காலணிய கழட்டி அடிசிரும்மா"
என்னும் இடம் சிலிர்பூட்டுகிறது.
இலக்கியம் பற்றிய எனது கொள்கைகள் அனைத்தையும் மறு பரிசீலனை செய்யதூண்டுகிறது
சாகித்திய அகதெமி விருது பெற்ற சு.சமுத்திரத்தின் 'வேரில் பழுத்த பலா'.

ஈகோவை மீட்டுக் கொள்ள...

ஒருநாள் மின்விசிறியை பார்த்துக் கொண்டிருக்கும் போது நின்றது விட்டது.
எனக்கு தெரிந்த மெக்கானிக்கை அழைத்தேன். கொஞ்சம் வயதானவர்.
காயில் சுற்ற வேண்டும் என்று கழட்டிக் கொண்டு போய் விட்டார்.
மறுபடி இரண்டு நாள் கழித்து எடுத்து வந்தார். அப்போதும் fan சரிவர சுற்றவில்லை. மறுநாள் எடுத்து வருகிறேன் என்றார்.
நான் மாலை ஆறு மணிக்கு மேல் கொண்டு வரும்படி சொன்னேன்.
"ஈவினிங் நான் வரமாட்டேன்"
"ஏன்"
"இல்ல எனக்கு வேற வேலை இருக்கு"
"வீட்ல ஆள் இருக்கும் போதுதான நீங்க வரமுடியும் அண்ணே. சும்மா வாக என்று வற்புறுத்தினேன்.
மாலை வேளையில் அவர் நீர் அருந்துவார் என்பது என் யூகம்.
மறுநாள் மாலை என் சந்தேகத்தை தெளிய வைத்து விட்டார்.
மேலே ஏறி விசிறியை மாட்டும் போதே ஸ்கிரூவ் டிரைவர், திருகாணி வயர் எல்லாம் கிழே விழுகிறது.
நான் எடுத்து கொடுக்க கொடுக்க கிழே விழுகிறது.
விசிறி மட்டும் சுற்றவில்லை.
அவர் மறுபடி ஓடிபோய் காப்பசிடர் வாங்கி வந்து போட்டார்.
அதைப் போடும் முன் அதே மாதிரி மேலே இருந்து கை தவறி அனைத்து பொருட்களையும் விட்டார். அவரை பொறுத்தவரை அது தீர்த்த நேரம். எதுவும் ஓட வில்லை.
நான் அவரை ஒன்றும் சொல்லாமல் வேலை நடக்க உதவி செய்தேன். ஆனால் மனைவி குறுக்கே புகுந்தார்
"என்னங்க காத்தாடியே சுத்த வைக்க மாட்டேன்கிறீங்க" என்று சிரித்தார்.
மெக்கானிக் பொறுமையாக பதில் சொன்னார்.
இன்னும் கிண்டலாக இரண்டு மூன்று வாக்கியங்களை மனைவி சொல்ல மெக்கானிக் கொஞ்சம் அசடாக சிரித்தபடி வேலையை தொடர்ந்தார்.
எப்படியோ விசிறி சுத்த ஆரம்பித்தது. மெக்கானிக் போய் விட்டார்.
அவர் போனதும் மனைவி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
"ஏன் பிள்ள சிரிக்கிறே"
"இல்ல இல்ல" என்று சொல்லி சிரித்துக் கொண்டே இருந்தார்"
"சொல்லிடுட்டு சிரி"
"இல்ல அவர நான் கிண்டல் செய்தது அவரு மனச பாதிசுட்டு போல. பேன் சுத்த ஆரம்பிச்ச உடனே டக்குன்னு எண்ணப் பாத்து பெருமையா ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சார் பாருங்க" என்று மறுபடி சிரித்தார்.
"ம்ம்ம் "
"பொண்ணு கிண்டல் பண்ணிட்டான்னு அவ்வளவு ஈகோ அவருக்கு. அவரு வெற்றிகரமா ரிப்பேர் செய்துடாராம், உடனே என்னை டக்குன்னு பாத்து ஒரு வெற்றி சிரிப்பு. சரியான காமெடி" என்று சொல்லி சிரித்தார்.
"உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இப்படி ஒரு ரீல் ஓடிட்டு இருந்தத நா கவனிக்கவே இல்லையே பிள்ள" என்றேன்.
"இல்ல அது சுத்தினதும் பெருமையா அப்படி என்னப் பார்த்து பாத்து " என்று மறுபடியும் சிரிப்பு.
"தயவு செய்து லூசாயிராத" என்று சொல்லி சிரித்து வைத்தேன்.
ஒரு பெண் கிண்டல் செய்வதை ஆண் அதிகமான ஈகோ சிதைப்பாக எடுத்துக் கொள்கிறான்தான் போல.
எப்படியாவது வெற்றி பெற்று
அல்லது
அவளை மறுபடி அடக்கி
அவன் ஈகோவை மீட்டுக் கொள்ள முடிந்த வரைக்கும் முயற்சி செய்கிறான்.
துரியோதனன் மாதிரி

ஆசிரியர்களின் யுத்தி

சில ஆசிரியர்களின் யுத்திகளை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கும்.
1.எனக்கு 'ஆபரேஷன் ரிசர்ச்' பாடம் எடுத்த சார் முக்கியமான கணக்கு எடுக்கும் போது மின்விசிறியை அணைக்க சொல்வார்.
கொஞ்சம் புழுக்கமாய் இருந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்.
ஏன் என்றால் இரவு நேரத்தில் அந்த பேன் சத்தத்தின் அளவுக்குள்ளாக பயல்கள் பேச்சை ஆரம்பிப்பார்கள்.
அப்படியே கண கண வென்று பேச்சு வளரும்.
சுத்தம் இல்லாத இடத்தில தைரியமாக குப்பை போடுவோம். இடம் சுத்தமாக இருந்தால் அதில் குப்பை போட யோசிப்போம்.
அதே கதைதான் இங்கும்.
மின்விசிறியின் சத்தம் என்ற சத்தம் இருந்தால் அதை ஒட்டி இன்னும் சத்தம் எழுப்ப தயங்க மாட்டோம்.
ஆனால் மின்விசிறி ஓடாமல் சத்தமே இல்லாமல் இருந்தால் முதல் சத்தம் எழுப்ப தயங்குவோம்.
அந்த மவுனமே அவர் எடுக்கும் வகுப்பை கூர்ந்து கவனிக்க சொல்லும்.
கால் மணி நேரம்தான் மறுபடி காத்தாடியைப் போட சொல்லுவார்.
மற்ற மாணவர்கள் இவ்வுத்தியை கிண்டல் செய்தாலும் என்னளவில் எனக்குப் பிடித்த டெக்னிக் ஆகும்.
2.பத்தாம் வகுப்பில் சவுந்திர ராஜன் என்று ஒரு சார் உண்டு.
அவர் மிக எளிமையான உண்மைகளை நேரடியாக சொல்வார்.
'எல உங்க அப்பா அம்மா எல்லாம் உங்களுக்கு முன்னாடி செத்து போயிருவாவ. அது புரிஞ்ச்சாக்கி நீங்க நல்ல மெனசில இருத்தி படிப்பிய கேட்டியளா" என்பார்.
அப்பா அம்மா மேல் அதிக அன்பாய் இருக்கும் பயல்கள் எல்லாம் முதல் தடவை இதைக் கேட்கும் போது ஆடிப் போயிட்டான்கள்.
ஆனாலும் எப்போதும் உண்மை உரைக்கும் சார் அவர் பேசுவதை விடவே இல்லை.
அவர் வகுப்பு எடுக்கும் போது ஒரு யுத்தி செய்வார்.
முக்கியமான ஒரு வகுப்பு எடுப்பதற்கு முன்னால் வரிசையாக எங்களிடம் கேள்வி கேட்பார்.
கையில் பிரம்பு இருக்கும்.
நிச்சயமாக பலருக்கு தெரியாது.
தெரியாதவர்களை எல்லாம் அடிப்பது மாதிரி வருவார். அப்படியே ஐந்து நிமிடம் மிரட்டுவார்.
அவர் மிரட்டுவது கண்டு பயம் வரும்.
ஏனென்றால் அவர் எப்போது அடிக்கிறார் என்று தெரியாது.
சில மூட் வந்தால் அடிப்பார். சில மூட் வந்தால் அடிக்க மாட்டார்.
ஆனால் முக்கியமான பாடம் எடுக்க இருந்தார் என்றால் அடிக்கவே மாட்டார்.
அனால் அடிப்பது மாதிரி மிரட்டி நம் இதயத்துடிப்பை அதிகப்படுத்துவார்.
அதன் பிறகு எங்கள் மனம் சும்மா ரெண்டு கிமி வேகமாக ஓடி வந்தாற்போல சுறு சுறுப்பாய் இருக்கும்.
பாடத்தை சோர்வில்லாமல் முழு மனதையும் குவித்து கேட்போம்.
தூக்கமே வராதுங்குறேன்

சரணடைதல் மட்டுமே

காதலர் தினம் வருகிறது.
சமீபத்தில் முக்கிய கண்டுபிடிப்பு ஒன்றைக் கண்டுபிடித்தேன்.
அதன் படி
பார்ட்னருக்கு 'பாதம்' என்ற உள்ளங்காலை அமுக்கி விடும் போது
அவர் கால் பெருவிரலை மென்மையான அழுத்தம் கொடுத்து தடவி விட்டு,
அதன் பின் அவ்விரலின் பக்கவாட்டில் பல்லை வைத்து
ஒரு பிஸ்கட்டை ஓரமாக கரும்புவது போல கரும்ப வேண்டும்.
பெருவிரல் மத்தியில் கரும்ப வேண்டும்.
அதன் பிறகு 'குதிகால் பாதம்' ஓரத்திலும் கரும்ப வேண்டும்.
இதை ஆசையாக ஒரு மாபெரும் 'மனித எலியாக' நம்மை நினைத்துக் கொண்டு இனிமையாக செய்ய வேண்டும்.
இப்படி செய்தால் அது பாட்னருக்கு சுகத்தை கொடுக்கும்.
ஆரம்பத்தில் எதிர்ப்பு வரும்.
எப்படி காலை கரும்புவது?
என்பதான பிற்போக்கு புத்தியில் விளைந்த கருத்தில் எதிர்ப்பு வரும்.
ஆனாலும் விடாமல் கூடலில் ,அன்பில்
வெட்கம்,
அருவருப்பு,
'நான் என்ற அகம்பாவம்' என்ற அனைத்தையும் விட்டு
சரணடைதல் மட்டுமே இன்பத்தை தரும் என்பதை புரிய வைக்க வேண்டும்.
இதுதான் என் காதலை தின அட்வைஸ் ஆகும்.
செயல்படுத்திப் பாருங்கள்

ஒண்ணுக்கு..

காலையில்
குளிர்ந்த நீரில் குளித்து, பதினைத்து நிமிடம் நடந்து ,கோவிலுக்கு போவது எனக்கு பிடித்த பொழுது போக்கு.
இன்றும் அப்படியே கிளம்பினேன்.
கோவில் உள்ளும் வெளியும் சாமி கும்பிட்டு வரும் பெண்களின் முகத்தைப் பார்த்தேன்.
அம்சமாகவும் கம்பிரமாகவும் பெருமிதமாகவும் இருந்தது.
கோவிலை தவிர வேறு எங்கவாது ஒரு பெண்ணால் இவ்வளவு கம்பிரமாக 'என்னை யாரும் கேட்க முடியாது' என்று போய் வரமுடியுமா என்று தெரியவில்லை.
ஏனோ எனக்கு இன்று சாமி எந்த அதிர்வையும் கொடுக்கவில்லை.
"கொடுத்தா கொடு கொடுக்காட்டி போயேன்" என்று சொல்லி போட்டோ எடுத்துக் கொண்டிருந்தேன்.
அதன் பின் அம்மனைக் கும்பிட்டேன். அங்கே எழுதி இருந்த அபிராமி அந்தாதி(?) செய்யுள்களை கொஞ்ச நேரம் வாசித்தேன்.
நல்லா எதுகை மோனை அருமையாகத்தான் இருந்ததது.
இதை எழுதியவர் பத்திரிக்கையாளர்களை,பதிபாளர்களை தன முகநூல் நண்பர்களை மட்டும் கொஞ்சம் புகழ்ந்து வைக்கத் தெரிந்தால் நல்ல புகழ் பெறலாம் என்று யோசிக்க சிரிப்பு வந்தது.
கோவிலுக்கு போய்விட்டு உடனே கிளம்பக் கூடாது என்று என் மம்மி சின்ன வயசுலேயே சொல்லி தந்திருக்காங்க.அப்படியே வந்து வெளியே அமர்ந்தேன்.
பக்கத்தில் ஒரு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. கோவில்களில் நடுக்கும் திருமணங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
அதில் ரசிக்க யோசிக்க நிறைய இருக்கும்.
அப்போது புதுமண ஜோடி சாமி கும்பிட வந்தது. பெண் நீலமும் பச்சையும் கலந்த சேலை கட்டி இருக்கிறாள். பார்க்க அப்படி ஒரு அம்சம்.
நானும் புதிதாய் கல்யாணமான புதிதில் மனைவியோடு இப்படி வந்திருக்கிறேன்.
பட்டு சேலையும் நகையும் போட்டு கூட ஒரு அழகு பெண் வரும் போது "இவள் என் மனைவி" என்று பெருமிதமாய் இருக்கும்.
அப்படியே அன்பில் அவள் கைகளை கோர்த்துக் கொள்வேன்.
மெத்து மெத்து என்றிருக்கும் அக்கைகளின் அன்பும் அரவணைப்பு அந்த freshness அதெல்லாம் இப்போ எங்கே போனது என்று தெரியவில்லை.
ஆனால் இதோ இப்புது மணப்பெண்ணைப் பார்த்தால் அந்த freshness வருகிறது.
அப்புறம் கல்யாண வீடு வாண்டுகளை பராக்கு பார்த்து கொண்டிருந்தேன்.
அதில் என் மகள் வயதுடைய குட்டிப் பெண் விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென அவள் ஆச்சியிடம் வந்தாள் " ஆயா எனக்கு ஒன பாத்ரூம் வருது " என்றாள்.
அந்த ஆயவோ சுத்தமாக கண்டு கொள்ளவில்லை.
"ஆயா எனக்கு ஒன பாத்ரூம் வருது ஆயா". மறுபடியும் அப்ச்சிறுமி சொல்கிறாள். ஆயவோ அரட்டை அடித்து கொண்டிருக்கிறார்.
இப்போது சிறுமின் பிரச்னை என் பிரச்னை ஆன உணர்வு ஏற்பட்டது.
அச்சிறுமி வேறு வழி தேட ஆரம்பிக்கிறாள். அப்படியே கோவிலை சுற்றி வருகிறாள்.
எங்காவது நல்ல இடம் கிடைத்தால் சட்டென்று அமர்ந்து விட எதுவாக பாவாடையை கொஞ்சமாக கணுக்கால் அளவு தூக்கிக் கொண்டு இடம் பார்த்தாள். இடம் கிடைக்கவில்லை.
கோவில் உள்ளே அனைவரும் இருக்க, அங்கே இருந்தால் பிரச்னை வரும் என்று அவள் உள்ளுணர்வுக்கு தெரிகிறது.
மறுபடி வந்து ஆயாவைப் பார்க்கிறாள்.
ஆயவோ சிறுமியின் பிரச்னை பற்றி எதுவும் தெரியாதவளாய் நடந்து கொண்டிருக்கிறாள்.
எனக்கு தாங்கவில்லை ஏதாவது உதவி செய்யலாம். நானே கூட அசிறுமியை வெளியே அழைத்து செல்லலாமா என்று தோன்றியது.
"வேண்டாம் புள்ள புடிகாரன் என்று நினைத்து விடபோகிறாள். அவளேதான் அவள் பிரச்சனயை தீர்த்து பார்க்கட்டுமே என்று அமைதியாக இருந்தேன்.
அதன் பிறகு சிறுமி கோவிலின் மினியேச்சர் உருவத்தை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
மறுபடியும் கோவிலைச்சுற்றி பார்த்தாள். அவள் முகம் மாறிக்கொண்டிருந்தது.
அவளுக்கு ஒன்னுக்கு நெருக்கிக் கொண்டிருந்தது எனக்கும் நெருக்கிய உணர்வைக் கொடுத்தது.
திடீரென்று கூட்டதில் காணாமல் போய் விட்டாள்.
எங்கே போனாள் என்று மனம் தேடிற்று. அப்படியே அக்கல்யாணக் கூட்டத்தில் தேடினேன்.
"எங்கம்மா போயிட்ட செல்லம் . ஒன்னுக்கு இருந்தியா ?இல்லையா? உன் வயசுக்கு நீ கோவிலுக்கு உள்ள கூட ஒண்ணுக்கடிக்கலாம்" என்றெல்லாம் வாஞ்சையாக வந்தது.
அப்படியே அந்த பாட்டியை சுவத்தோடு சேர்த்து வைத்து ஒரு அடி அடிக்கணும் போல தோன்றியது.
அச்சிறுமி கண்ணில் பட்டாள்.
அங்கே அமர்ந்து எதோ கல்யாண வேலை செய்து கொண்டிருக்கும் அம்மாவின் முதுகில் ஆவேசமாக அடித்துக் கொண்டிருந்தாள்.
எப்படி சொன்னால் பெரியவர்கள் நாசூகானவர்கள் காது கொடுத்து கேட்பார்கள் என்பதை அவள் கற்று கொண்டது பற்றி திருப்தி வந்தது.
இவள் இனிமேல் சீக்கிரம் சிறுநீர் கழித்து நிம்மதி அடைவாள் என்ற முடிவோடு, வெளியே விட்டு சென்ற செருப்பு அப்படியே இருக்குமா என்ற கவலையை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.
வீட்டுக்கு வந்ததும் மனைவி ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டார்
"நம்ம வீடு வாண்டு சைசுல ஒரு வாண்டு. அவ ஒன்னுக்கு இருந்தாளா இல்லையான்னு பாத்துட்டு வரேன். அதான் லேட்ட" என்றேன்.