Tuesday 24 September 2013

சக்கிலிய பிராமண உருமாற்றம் - முத்துப்பட்டன் கதை

பதினாறாம் நூற்றாண்டு அல்லது பதினேழாம் நூற்றாண்டு காலககட்டத்தில்தான் முத்துப்பட்டன் கதை நடந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் நா.வானமாமலை சொல்கிறார்.

முத்துப்பட்டன் என்பவன் ஏழு அண்ணன்களுக்கு பிறகு எட்டாவதாக பிறக்கிறான்.பிராமண குலத்தில் பிறக்கிறான்.ஆச்சாரமாய் வளர்கிறான்.

ஏனோ அவனுக்கு அண்ணன்களை பிடிக்கவில்லை.ஆகையால் அவர்களை விட்டு விலகி மற்றொரு சிற்றரசரிடம் வேலை செய்கிறான்.

சில ஆண்டுகள் பிறகு முத்துப்பட்டனின் ஏழு அண்ணன்களும் அவனைத் தேடி வருகின்றனர்.முத்துப்பட்டனை சமாதானப்படுத்தி அழைத்து சென்று கொண்டிருக்கும் போது,ஒரு குளத்தில் நீர் எடுக்க வந்த பொம்மக்கா திம்மக்கா என்று இரண்டு சக்கிலிய பெண்களைப் பார்த்து முத்துப்பட்டன் காதல் கொள்கிறான்.

அவர்களிடம் பேச்சு கொடுக்கிறான்.அந்தப் பெண்கள் பயந்து வீட்டிற்கு சென்று அவர்கள் தந்தை வாலபகடையிடம் பிராது கொடுக்கிறார்கள்.

வாலபகடை அரிவாளுடன் ஆவேசத்துடன் வரும் போது, பொம்மக்கா திம்மக்கா மேலுள்ள காதலால் மூர்ச்சையுற்று முத்துப்பட்டன் தரையில் கிடக்கிறான்.

வாலப்ப்கடை முத்துப்பட்டனைப் பார்த்து மனமிரங்குகிறான்.

எப்படி பிராமணன் சக்கிலியக்குடியில் பெண்ணெடுப்பது சாத்தியம் என்கிறார் வாலப்பகடை.

காதல் இருந்தால் எல்லாம் சாத்தியமே என்கிறான் முத்துப்பட்டன்.

வாலப்பகடை முத்துப்பட்டன் தன் குல அடையாளத்தை விட்டு விட்டு நாற்பது நாட்கள் சக்கிலியனாய் வாழ்ந்து காட்டினால் மட்டுமே நம்பிக்கை வருமென்றும்,அதன் பிறகே தன் மகள்களை திருமணம் செய்து தர முடியுமென்றும் சொல்கிறான்.

குடுமியையும் பூணூலையும் அறுத்தெறிந்து,முத்துப்பட்டன் சக்கிலியனாய் வாழ்கிறான்.இதற்கிடையில் முத்துப்பட்டனின் அண்ணன்மார்கள் அவனை சிறை வைக்கிறார்கள்.

முத்துப்பட்டன் அவர்களிடமிருந்து தப்பி ஒடி வாலபகடையிடம் வந்து சேர்கிறான்.வாலப்பகடை மகிழ்ந்து தன் இரண்டு மகள்களையும் முத்துப்பட்டனுக்கு திருமணம் செய்து வைக்கிறான்.

மாமனார் வீட்டில் சந்தோசமாக இருக்கும் முத்துப்பட்டனுக்கு சோதனை வருகிறது.வாலப்பகடை வைத்திருக்கும் மாடுகளை கவர்ந்து கொண்டு ஊத்துமலை வன்னியரும்,உக்கிரங்கோட்டை வன்னியரும் செல்கின்றனர்.

மாட்டை திருடுபவர்களிடம் போரிட்டு வீரமரணம் அடைகிறான் முத்துப்பட்டன்.

இந்தக் கதையை திருநெல்வேலி மாவட்டத்தில் வில்லுப்பாட்டாக பாடுகின்றனர்.

சொரிமுத்து ஐயர் கோவில் என்ற கோவிலில் இந்தக்கதையை முத்துப் புலவர் என்றொருவர் பரம்பரை வழியாக பாடிக் கொண்டிருக்கிறார்.

இன்னும் பல கோவில்களில் இந்தக் கதையை பாடுகிறார்கள்.எல்லாக் கோவில்களிலும் பொம்மக்கா திம்மக்கா என்பவர்கள் சக்கிலியர்களே.

ஆனால் முத்துப் புலவர் பாடும் கோவிலில் மட்டும் இந்த பொம்மக்கா திம்மக்கா என்பவர்கள் ஒரு பிராமணனின் மகள்கள் எனவும்.காட்டில் தொலைந்து போகிறார்கள் எனவும்.அவர்களையே வாலப்பகடை எடுத்து வளர்க்கிறான் எனவும் கதை சொல்கிறார்.

அதனால் முத்துப்பட்டன் காதலித்த பெண்கள் சக்கிலியர்கள் அல்ல பிராமணப் பெண்களே என்று புலவர் நிறுவுகிறார்.

பேராசிரியர் வானமாமலைக்கு இது ஆச்சர்யம்.முத்துப்பட்டனின் கதையின் அடிப்படையே தாழ்த்தப்பட்டவர்களின் உணர்வுகளைச் சொல்வதுதான்.

உதாரணமாக வாலப்பகடை முத்துப்பட்டனிடம் இப்படை சொல்கிறான் உண்ர்ச்சிகரமாக

நாயல்லவோ எங்கள் குலம் ஒ நயினாரே
நாற்றமுள்ள விடக்கொடுப்போம் ஒ நயினாரே
செத்தமாடறுக்க வேணும் ஒ நயினாரே
சேரிக்கெல்லாம் பங்கிட வேணும் ஒ நயினாரே
ஆட்டுத்தோலும் மாட்டுத்தோலும் அழுக வைப்போம் நயினாரே
அதையெடுத்து உமக்கு நன்றாய் அடியறுப்போம்
செருப்பு தைப்போம் வாரறுப்போம்
அதை எடுத்து கடைக்கு கடை கொண்டு விற்போம்
சாராயம் கள் குடிப்போம் வெறிபிடித்தபேர்
சாதியிலே சக்கிலியந்தான் நயினாரே.

மேலும் இன்னொரு இடத்தில் முத்துப்பட்டனின் அண்ணகள் கேட்கிறார்கள்.முத்துப்பட்டன் உணர்ச்சிகரமாக தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை சொல்கிறான்.

1.தம்பி! செத்தமாட்டை சாப்பிடும் சக்கிலியன் வீட்டில் பெண்ணெடுக்கலாமா?
அண்ணே !நல்ல மாட்டின் பாலையெல்லாம் உறிஞ்சி நாளெல்லாம் குடிச்சிபுட்டு,செத்த மாட்டத்தான சக்கிலியனுக்கு கொடுக்குறீக.

2.தம்பி! வயல்ல புழுவையும் பூச்சியையும் வயல் நண்டையும் புடிச்சி ஆய்ஞ்சி திங்குற சக்கிலியன் வீட்டுல் பெண்ணெடுக்கலாமா?
 அண்ணே ! வயலுக்கு மேல வெளயுற நெல்லு எல்லாத்தையும் வக்கனையா வழிச்சி தின்னு, நண்டையும் புழுவையும் தானே      சக்கிலியனுக்கு நாம கொடுக்குறோம்.

இது போன்ற உணர்ச்சிகரங்கள் இருக்கும் கதையில் எப்படி பொம்க்காவும் திம்மக்காவும் பிராமணர்களாக இருக்க முடியும் என்று பேராசிரியர் நா.வானமாமலை முத்துப் புலவரிடம் பழகி விசாரிக்கிறார்.

கொஞ்சம் தயங்கி முத்துப் புலவர் சொல்கிறார்.இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தான் இளமையாக இருக்கும் போது அவரிடம் வந்த உயர்சாதியினர் “எப்பா பிராமணன் சக்கிலிச்சிய கட்டிக்கிறதும், பழகுறது கேட்க நல்லாவா இருக்கு,இங்குன கோவிலுக்கு நாலு பெரிய மனுசங்க வந்து போறானுங்க,அவங்களுக்கு கூச்சமாயிருக்காத இது மாதிரி தரங்கெட்ட கதகளக் கேட்க.பாட்ட மாத்தி சொல்லு,கதையை கொஞ்சம் மாத்து” என்று முத்துப் புலவரை வற்புறுத்தியிருக்கிறார்கள்.

முத்துப்புலவர் என்ன செய்வார்.பணம் வேண்டுமே வயிற்றை நிரப்ப. ‘மொள்ளாலிகள்’ ஆசைப்பட்ட மாதிரியே பொம்மக்காவையும் திம்மக்காவையும் சக்கிலிச்சியில் இருந்து பிராமணத்திகளாக மாற்றிவிட்டார்.

உயர்சாதியினர் தங்கள் ஆதிக்கங்களை பழங்கதைகளுக்குள்ளாகவும் புகுத்தி விட்டனர்.புகுத்தி கொண்டிருக்கின்றனர்.கவனமாய் இருக்க வேண்டும் என்று நா.வானமாமலை சொல்கிறார்.

இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.உயர்ஜாதி அல்லாத மக்கள் ஆடி மாசம் பயபக்தியுடன் கொண்டாடும் கொடைகளை மற்றவர்கள் கிண்டல் செய்யும் போக்கு பொதுவாக நம்மிடம் இருக்கிறது.

ஆத்தாவை கிண்டல் செய்வது.அம்மனுக்கு கூழ் ஊத்துவதை கிண்டல் செய்வது.கருவாட்டுக் குழம்பை கிண்டல் செய்வது,கோயிலுக்கு படையல் போடுவதை கிண்டல் செய்வது போன்றவைகளை சொல்லலாம்.

அன்று இந்துமதக் கலைகளஞ்சியம் என்ற புத்தகம் வந்திருப்பதாக ஒரு செய்தியில் படித்தேன்.அதை நான் இன்னும் வாசிக்கவில்லை.ஆனால் எனக்குள் ஒரு பதட்டம் இருந்தது.

அந்தப் புத்தகத்தில் வைதீகமான இந்து மதமே உண்மையான இந்து மதம் என்று நிறுவி இருப்பார்களோ என்று.

ஏனென்றால் பெரும்பான்மையான இந்துக்கள் அவர்கள் சொந்த வழிபாடு என்று நிறைய் முறைகளை வைத்திருக்கிறார்கள்.சொந்தக் கதைகளை என்று நிறைய வைத்திருக்கிறார்கள்.

அவற்றில் எல்லாம் பிராமணத்தன்மையும் வைதீகத்தையும் புகுத்த சதா முயற்சிகள் நடந்து வருகின்றன.

கோவில்களில் பலியை தடுக்க அரசு இட்ட ஆணையை எந்த சாமியாரைக் கேட்டு போட்டது என்று நம் எல்லோருக்கும் தெரியும்.

என் கவலை என்னவென்றால் அவரைப் போன்ற சைவ வைணவ ஆச்சாரியார்கள் சொல்வதே இந்து மதம் என்று நாம் நினைத்து விடக் கூடாது என்பதுதான்.

இந்து மதத்தின் கட்டமைப்பு மந்திரங்களில் ஆச்சாரங்களில் இல்லை. அவரவர்க்கு வழிபடும் உரிமையை கொடுக்கும் அந்த தன்மையில் இருக்கிறது.

அதை நேரடியாக அழிக்க முடியாதவர்கள், இந்த முத்துப்பட்டன் கதையை அழித்தது மாதிரி மறைமுகமாக வருகிறார்கள்.

கவனம் தேவை. 

4 comments:

  1. நல்ல பதிவு. நல்ல உழைப்பு

    ReplyDelete
  2. VIJAY: Appreciate your writing pattern especially regarding Kanyakumari / Tirunelveli district matters.

    Suresh Madhevan, Coimbatore

    ReplyDelete
  3. நல்ல பதிவு

    ReplyDelete