Wednesday, 27 February 2013

கதை போல ஒன்று - 73

குவைத். வெள்ளி விடுமுறை.

முந்தின நாள எனக்கும் மனைவிக்கு நடந்த சண்டையை நினைத்து கொண்டே பாத்ரூமிற்குள் போனேன்.

”நான் தான் இங்க இருக்கேன்ல.அங்க இருந்து அம்மா கூட எதாவது ஆர்கியூ செய்துட்டே இருக்காத.நான் இருக்கும் போது பேசினா கூட பரவாயில்ல.இல்லாதபோது. வேண்டாம்.என்ன இருந்தாலும் அவுங்க வயசுல மூத்தவங்கப்பா.எதுத்து பேசாத. நீ இப்படி இருந்தா நான் வர ஃபிளைட்டு அப்படியே வெடிச்சிடும், நானும் இருக்க மாட்டேன் நீ நிம்மதியா இரு”

இது போன்ற அற்புதமான டயலாக்குகளை மனதுக்குள்ளே பேசிக்கொண்டே பிரக்ஷ்க்ஷை பிதுக்கி வாயில் வைத்து நுரைக்க நுரைக்க தேய்க்கிறேன்.

இன்னும் நிறைய நினைத்து கொள்கிறேன்.கண்களில் என்னை எல்லோரும் துன்புறுத்தும் கழிவிரக்க கண்ணீர்.

வழக்கமாக ஒரு நிமிடம்தான் பல் தேய்பேன்.

ஆனால் அன்று எவ்வளவுக்கு எவ்வளவு என் மீதே பரிதாபமும் மனைவி மீது கோபமும் கூடுகிறதோ அவ்வளவு விரைவாக பிரக்ஷ் என் பற்களில் இங்கும் அங்கும் ஒடிகொண்டிருந்தது.

அப்படியே தேய்த்து கொண்டே வாக்ஷ் பேசின் மேல் என்னுடைய பிரக்ஷ் இருப்பதை பார்த்தேன்.

முதலில் ஒன்றுமே புரியவில்லை.

நான் பல் தேய்த்து கொண்டே என்னுடைய பிரக்ஷ்க்ஷை பார்க்கிறேன்.அது எப்படி சாத்தியம்.

என்னுடைய பிரக்ஷ் வாக்ஷ் பேசின் மேல் இருக்கிறதென்றால், அப்படியானால் நான் கையில் வைத்திருக்கும் பிரக்ஷ் யாருடையது.பிரக்ஷ்க்ஷை எடுத்துப்பார்த்தேன்.

அது “திரு” என்ற என்னுடன் அறையை பகிர்ந்திருக்கும் திருநாவுக்கரசு என்பவரின் பிரக்ஷ்.

ச்சை..தூ தூ வென்று துப்பினேன்.

அருவெருப்பு.

நான் தங்கியிருக்கும் குவைத்தில், பின்டாஸில் இருக்கும் ஃபிளாட்டில் இரண்டு பெட்ரூம்கள், ஒரு ஹால்.

”திரு”வும் நானும் ஒரு ரூம்.

வசந்தும் தஸ்தகீர்கானும் மற்றொரு ரூம்.

எங்கள் ரூமை ஒட்டி இருக்கும் பாத்ரூமை நானும் திருவும் மட்டும் உபயோகிப்போம்.

அப்படியான சூழ்நிலையில் “திரு” வின் பிரக்ஷ்க்ஷை எடுத்து நான் தேய்த்து விட்டேன்.

முதலில் வாயை கழுவினேன்.கழுவும் போதே அடுத்து “திரு” வந்து அவன் பிரக்ஷ்க்ஷை பார்த்தால் என்ன நினைப்பார் என்று தோண்றியது.

அவர் பிரக்ஷ்க்ஷை நன்றாக கழுவினேன்.

பின் ஆள்காட்டி விரலில் அந்த பிரக்ஷ்சை மல்லாக்க படுக்க வைத்து பெருவிரலால் பிர் பிர் என்று பிசிறினேன்.

ஈரம் குறைந்திருந்தது, பின் பிரக்ஷ்க்ஷை எடுத்து கையில் வைத்து தட்டாமாலை சுற்றினேன்.

வாய் பக்கத்தில் வைத்து பூ பூ என்று ஊதினேன்.

இன்னும் இரண்டும் மூன்று முறை இவை எல்லாத்தையும் செய்ய பிரக்ஷ் காய்ந்திருந்தது.

இனி “திரு” பார்த்தால் கூட கண்டுபிடிக்க முடியாதென்ற நிம்மதி வரும் போது, மனசாட்சி ஒலமிட ஆரம்பித்தது.

”எப்படி மக்கா உன் எச்சி பட்டத எடுத்து அவன் பல்தேய்பான். நீ மறைக்கலாம்.ஆனா அவன் அப்பாவியா அத எடுத்து தேய்கிற காட்சிய நினைச்சு பாரு மக்கா”.

என்ன செய்யலாம.

இன்னைக்கு லீவுதான். திரு எழுந்திருக்க லேட் ஆகலாம்.அதுக்கு முன்னாடி கீழே போய் அந்த சேட்டன் கடையில புது பிரக்ஷ் வாங்கி வைச்சிரலாமே.

சட்டென்று உடை மாற்றி சேட்டன் கடைக்கு போனால் பூட்டியிருந்தது.

அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி இன்னொரு கடை இருப்பது ஞாபகத்தில் வர ஒடினேன்.

திரு எழுந்திருக்கிறதுக்கு முன்னாடி பிரக்ஷ்சை வாங்கிட்டு வீட்டுக்கு போயிடனும்.

ஒடு ஒடு.

ஒடினால் வயிற்றில் வலி வரலாம்.ஆனால் இது மனசாட்சி பிரச்சனை.

தன்னுடைய பிரக்ஷ் எதுவென்று கூடத் சரியாத்தெரியாத கேணையனா விஜய் நீ என்று திரு நினைத்து விட கூடிய சாத்தியங்கள் உள்ள தன்மான பிரச்சனை.

ஒடு ஒடு...

கால்களில் கற்கள் தட்டலாம். குவைத் தேசத்தின் சூரியன் சுள்ளென்று முகத்தில் அடிக்கலாம். ஆனாலும் ஒடு ஒடு.

அரைகிலோமீட்டார் ஒரே சாட்டமாக சாடி ஒட கடை வந்தது.

இந்த கடைக்காரருக்கும் எனக்கும் ஒரு வாரம் முன்பு கடுமையான சண்டை.

இவரும் சேட்டன்தான்.

சண்டைக்கு காரணம். நான் ஒரு குவைத் தினாருக்கு பொருள் வாங்கிவிட்டு மூன்று தினாருக்கு பில் கேட்பேன்.

அதை வைத்து கம்பெனியில் அதிக பணம் கிளைம் செய்து அதை சேர்த்து வைத்து என் குழந்தைக்கு பொம்மைகள் வாங்கி போய் மகிழ்விக்கலாம் என்ற உயரிய குறிக்கொளை கொண்டிருந்தேன்.

ஆனால் அந்த சேட்டன் தீவிர பெந்தகொஸ்தே மார்க்கத்தை பயில்பவராக இருந்தார்.

உலகமே பாவமாகிவிட்டது என்று கொதித்து கொண்டிருக்கும் அவரிடம் போய் , போலி பில்லை கேட்டால் என்னை சாத்தானகத்தானே பார்ப்பார்.

அவர் தர முடியாதென்று சொல்ல. நான் அவரை பதிலுக்கு திட்ட. பெரிய சண்டையாகிவிட்டது.

”இனிமேல் உமது கடையில் கால் வைத்தால் என்னுடைய கால்களை நானே வெட்டி தெருவில் எறிவேன்” என்று கத்திவிட்டல்லவா வந்தேன்.

இப்போது இவர் கடைக்கே வருகிறோம்.

வேறு வழியில்லை.

முதல் முன்னுரிமை பிரச்சனையை சமாளிக்க, இரண்டாம் முன்னுரிமை பிரச்சனையின் காரணரின் கைகளை பிடித்து கெஞ்சலாம். மூன்றாம் முன்னுரிமை பிரச்சைனையின் காரணரின் கால்களிலேயே விழலாம். தப்பே இல்லை.

நான் கடைக்கு போனது சேட்டன் முகம்சுழிப்பார் என்று நினைத்தேன்.

அப்படி நடக்கவில்லை.”வரு” என்று சிரித்தபடியே அழைத்தார்.நானும் ஒரு சிரிப்பை விடுத்து சட்டென்று ஒரு காஸ்ட்லியான பிரக்ஷ்க்ஷை எடுத்து பில் போட போகும் போதுதானா சேட்டன் அன்று நடந்த சண்டைக்கு மன்னிப்பு கேட்டு பேசிக்கொண்டிருக்க வேண்டும்.

மற்றொரு தினமாக இருந்தால் அவருடைய மன்னிப்பை ஒநாய் மாதிரி நக்கி நக்கி ருசித்து குடித்திருப்பேன்.

இன்னும் கொஞ்சம் அவர் குற்ற உணர்ச்சியை தூண்டிவிட்டிருப்பேன்.

ஆனால் இன்று அதுமாதிரியான செயல்களை செய்ய டைம் இல்லை.

அங்கே திரு பிரக்ஷ்க்ஷை எடுத்து தேய்த்து விட்டால் என்னுடைய பாவக்கணக்கல்லவா கட்டுகடங்காமல் ஏறிவிடும்.

அவரிடம் மன்னிப்பு கேட்டு, வெளியே ஒடி, மறுபடி லொங்கு லொங்கென்று குதித்து வருகிறேன்.

அப்படி ஒடும் போது என்னுடைய உடல் கிண்டி வைச்ச அல்வாவாக தளும்புவதையும் கவனித்தே இருந்தேன்.

ஃப்ளாட்டின் லிப்டை தவிர்த்து நாலு நாலு படியாக தாவி தவ்வி ஏறி வீட்டுக்கு வந்தால் பாத்ரூம் சாத்தியிருந்தது

ஆண்டவா “திரு” உள்ளே போய் பல்விலக்கி கொண்டிருக்கிறாரா? அப்படி செய்தால் எனக்கு என்ன தண்டனை. கதவை அழுத்தினேன், உள்ளே தாளிடப்பட்டிருந்தது.

எல்லாம் வேஸ்டாகி விட்டதென்று சோர்ந்திருக்கும் போது கதவு திறந்தது.

“திரு” வை எதிர்பார்த்து எழுந்து நின்றேன்.

ஆனால் கதவை திறந்து வந்தது “தஸ்தகீர்கான்”. இவர் ஏன் இங்கே வருகிறார்?

இவர் பாத்ரூம் அங்கே அல்லவா இருக்கு என்று நினைக்கும் போதே தஸ்தகீர்கான் சொன்னார் “அது பாஸ். எங்க பாத்ரூம்ல வசந்த இருக்கார்.அதான் இது ஃபிரீயா இருக்கேன்னு இங்க வந்தேன் பாஸ். யூஸ் பண்ணலாம்ல”.

ஆசுவாசமாய் இருந்தது.

“அதனாலென்ன பாஸ்” என்று சொல்லியபடியே எங்கள் ரூமை எட்டிப்பார்த்தேன்.

“திரு” தன்னுடைய இரண்டு கால்களிடையே தலையணையை வைத்து சின்னபுள்ள மாதிரி தூங்கிக்கொண்டிருந்தார்.

பாத்ரூம் சென்று திருவின் பிரக்ஷ்க்ஷை குப்பைதொட்டியில் போட்டுவிட்டு, புதுபிரக்ஷ்க்ஷை அங்கே வைத்து விட்டு டீ போட்டு சோபாவில் உட்கார்ந்தேன்.

“திரு” வின் பழைய பிரக்ஷ் என் கைபட்டு அழுக்குதண்ணிரில் விழுந்து விட்டது என்ற பொய்யை அவரிடம் சொல்வதற்காக.

2 comments:

  1. Eppudi sir ipdi ellam ezhuthureenga. Chance'ae illa.

    ReplyDelete
  2. வீடு தீப்பிடித்து எரியும்போது பணமும் நகைகளும் முக்கியமெனத் தெரியும் நமக்கு வீட்டுப் பத்திரங்கள்,ரேசன் கார்டுகள் முதலியன அடுத்தாற்போலவே நினைவு வருகின்றன. அதேபோல நெடுநாள் பிரச்னைகளை மறந்து அன்றாட பிரச்னைகளை சமாளித்தே திருப்தியுறுகிறோம்…!

    ReplyDelete