ஏழாம் வகுப்பு படிக்கும் போது திடீரென்று “தோட்ட மறுமலர்ச்சி” எங்கள் வீட்டில் நடந்தது.
எப்போதும் வீட்டை சுற்றியுள்ள இடங்கள் பற்றி அப்பா ரொம்ப கவலைப்பட்டதில்லை.
ஆனால் திடீரென்று அந்த சிறிய நிலத்தை பாகம் பிரித்தார்.
ஒரு பாகத்தில் தக்காளி போட்டார்.
கத்திரிக்க்காய் இன்னொரு பாகத்தில்.
வெண்டைக்காய்,மிளகாய் எல்லாம் போட்டார்.
அவரைச்செடியை நான்கு மூலைகளிலும் நாட்டினார்.
பீர்க்கங்கொடியை படர்த்தி விட்டார்.பாவைக்காயும் உண்டு.
அப்பாவுக்கு உதவியாய் நாங்கள்.
சூர்யகாந்தி பூ கூட நான்கு பூத்தது.
இது மாதிரியான் தோட்ட புரட்சியில் வீடு திளைக்கும் போது எனக்கு ஒரு ஆதங்கம்.
நம்மால் தனியே ஒன்று செய்ய முடியவில்லையே என்று.
கடைசியாக யோசித்து. நாலைந்து சின்ன வெங்காயத்தை விதைக்கப்போட்டேன்.
அண்ணன் வாயை பொத்தி சிரித்தான்.
நான் ஆவேசமாக வெங்காயத்திற்கு நிறைய தண்ணி ஊத்துவேன்.
அப்பா சிரித்தபடியே “அழுகி போயிரும்டா. அது வரும் என்றார்.
வெங்காயம் ஏமாற்ற வில்லை. பச்சையாய் தாள் விட்டது.
அப்படியே போய் போய். ஒரிரு மாதத்தில் (?) அப்பா அதை பிடுங்கலாம் என்று அனுமதித்தும், பிடுங்கிப்பார்த்தால் அரைக்கிலோ வெங்காயம் இருந்தது.
துள்ளிக்குதித்தேன்.
அம்மா கேட்டாள்” அட அரைக்கிலோ தேறிருச்சே.நல்லா தீயல் ( காரக்குழம்பு) வைக்கலாமே இத வெச்சு”
அப்போதான் என் கெட்ட புத்தி வேலை செய்தது.
“ஆமா உங்களுக்கு சமையல் பண்ணவா நான் கஸ்டபட்டு வெங்க்காயம் வளர்த்தேன்.”
அம்மாவுக்கு ஆச்சர்யம்.
“அப்ப என்னல பண்ண போறா”
நான் கடையில் வெச்சு விக்கப்போறேன்.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெருமை கலந்த சிரிப்பு.
சிரித்து கொண்டே இருந்தார்கள்.
மறுநாள் கடைக்கு வியாபாரத்துக்கு எடுத்து செல்ல கவரில் வெங்காயத்தை அள்ளும் போதுதான், ஏதோ தண்ணி மாதிரி வெங்காயத்தில் இருந்தது.
எடுத்து மோந்து பார்த்தால் செம வாடை.அம்மாவிடம் ஒடினேன்.அம்மா வந்து பூனை வெங்க்காயத்தில் மோண்டு விட்டது என்று அறிவித்தாள்.
தலை சுற்றியது எனக்கு.
“யம்மா நல்லா வெயில்ல காய வெச்சு யூஸ் பண்ணலாம்மா”
“யம்மா கொஞ்சமா கட்டி அடுப்பு மேல கட்டி தொங்க விட்டுறலாமா”
அம்மா முறைத்தாள்.
”இத இப்ப நாமளும் சாப்பிட முடியாது.கடையிலையும் வெச்சு விக்க முடியாது. போய் உரகுழியில போட்டுறு”
நெஞ்சடைத்துவிட்டது.
சினிமாவில் ஹீரோவின் குடும்பத்தை அழிந்த பிறகு அந்த இடத்திற்கு வரும் ஹீரோ, முதலில் அழுது பின் ஆவேசமாவானே அதுமாதிரி வெங்காயதை பார்த்து அழுத நான் “அந்த பூனையை கொல்லாமல் விட மாட்டேன்” என்று சபதம் எடுத்தேன்.
பல நாட்கள் பூனைத் துரத்தி ஒடுவேன்.
பூனையா மாட்டும் தப்பித்து ஒடிவிடும்.
அப்போது நான் சாமியிடம் விடாமல் பேசிக்கொண்டிருப்பேன் என்பதால் .” சாமீ பூன எப்படியும் என்கிட்ட மாட்டனும்” என்று வேண்டிக்கொள்வேன்.
கடைசியாக பூனை சின்ன ரூமில் எதையோ கடித்து கொண்டிருந்த போது அதை சுற்றி வளைத்து விட்டேன்.
என் கையிலோ பெரிய ஐடிஎம் கிரிக்கெட் பேட் இருந்தது.
இன்று அதை அடித்து சிதைத்து விட வேண்டும் என்று பேட்டை வீச வேறு வழியில்லாமல் பூனை என்மேல் பாய்ந்தது.
அதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை.
“கேட் இன் ஏ கார்னர்” என்ற இடியம்ஸை ஏட்டில் படிப்பதற்கு முன்னால், உணர்ந்து கொண்டேன்.
”யப்பே... என்று பயந்து பேட்டை காலில் போட்டு ஒடிவர சோஃபா தடுக்கி கீழே விழுந்தேன்.
வலி கடும் வலி.
விக்கி விக்கி அழுதேன்.
அம்மா வந்தாள் “என்னடா எப்பவும் கீழ விழுந்துகிட்டு “என்று மேட்டரை அறிந்தவள்.
சொன்னாள்.
“பூனைக்கு உன் பேரு விஜய், நீ உள்ளி வெளைவிச்சிருக்க.அந்த உள்ளி மேல மோண்டுருக்கும்ன்னு தெரியுமா? அதுக்கு எங்க இருக்கோம்னே தெரியாது. தெரியாம பண்ணினது மேல கோவப்பட்டு அடிச்சி கொல்லப்பாத்தியே அதான் முருகர் உனக்கு தண்டனை கொடுத்துட்டார்”
ஹைதிராபாத்தில் நான் வசித்தது இரண்டாவது மாடியில்.
தினமும் குப்பையை இரண்டாவது மாடி வராண்டாவிலே வெளியே வைத்தால் போதும்.
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் குப்பை சேகரிப்பவர் மேலே வந்து எடுத்து கொள்வார்.
ஒருநாள் காலை பார்த்தால் வைத்திருந்த பாலத்தீன் குப்பை முடிச்சி, கிழிந்து குப்பை எல்லாம் வராண்டாவை நாறடித்து கிடந்தது.
சாப்பிட்ட சாப்பாட்டு எச்சியெல்லாம் வராண்டாவில் அசிங்கமாய் கிடந்தது.
அப்போது வைஃப் வேற ஊரில் இல்லை.
எல்லா குப்பையையும் சேகரித்து, வராண்டாவை கழுவி விட்டுகொண்டிருக்கும் போது வீட்டு ஒனர் வந்தார்” ஹோஹ் விஜய் டாக் கேம் எஹ்” கேட்டார்.
அப்போதுதான் எனக்கு புரிந்தது இது நாய் பயபுள்ளையின் வேலை என்று.
தினமும் குப்பையை கிழித்து போய்விடும்.
சரி என்று மூடி வைத்த பக்கெட்டை வைத்து மூடி வைத்தேன்.
ஆனால் குப்பை எடுப்பவர் சொல்லிவிட்டார் “மூடியிருந்தால் என்னால் எடுக்க முடியாதென்று”.
கடைசியாக தீர்மானித்தேன்.
இந்த நாயை பயமுறுத்துவதென்று.
இரவு பத்து மணிக்கெல்லாம்,பெரிய கேபிள் வயரை எடுத்துக்கொண்டு எங்கள் மேல் மாடி தொடக்க படியில் அமர்ந்து கொண்டேன்.
நாய் வரவே இல்லை.
பதினொன்றாகி விட்டது. அப்போதும் நாய் வரவே இல்லை.எம் பி திரீயில் பாட்டுகேட்டுக்கொண்டே இருந்தேன்.
ஏதோ சத்தம் கேட்டது.
கேபிள் வயரை நீட்டமாக பிடித்துக்கொண்டேன்.
ஒரு அடிதான் கொடுக்கனும் ஆனா அத நாய் காலத்துக்கும் மறக்க கூடாதென்று நினைத்து கொண்டேன்.
நாய் இருட்டில் குப்பை கவரில் வாயை வைக்கவும் லைட்டை போட்டேன்.
நாயா அது? நல்ல கொழு கொழுவென்று சிங்கம் மாதிரி இருந்தது.
அது என் மேல் பாய்ந்தால் கண்டிப்பாக என்னால் அதை ஜெயிக்க முடியாது.
அந்த பதட்டத்திலும் சுஜாதா தன் “ஆதலினால் காதல் செய்வீர்” நாவலில் ”பரதன்” என்று பெயருள்ள சிங்கமும் மனிதனும் நேருக்கு நேர் சந்திப்பதை எழுதியிருப்பது ஞாபகத்திற்கு வந்தது .
அந்த வரி இப்படித்தான் தொடங்கும் “ பரதன் என்பது ஒரு ”சிங்கம்” என்று அவனுக்கு முன்னமே தெரிந்திருந்தால் அவன் அதை சந்திக்க ஒப்பு கொண்டிருகவே மாட்டான் என்று.
நாயும் நானும் நேருக்கு நேர் நின்று பார்தோம்.
நாயை பதறவே இல்லை.
குப்பை கவரை விட்டு கீழே ஒட வழி வேண்டி என்னைப்பார்த்தது.
எனக்கு ஏற்கனவே பூனையை மறித்து பட்டபாடு ஞாபகத்திற்கு வந்தது.
அதனால அமைதியாக வழியை விட்டேன்.
நாய் நிதானமாக ஒடிவிட்டது.
பூனை என்னை ஜெயித்தது போல் நாயும் என்னை ஜெயித்தது.
என்ன பூனை வன்முறையை கையில் எடுத்தது, நாய் அகிம்சையில் நம்பிக்கை உடையதால் அமைதியாக என்னை ஜெயித்தது.
இன்னும் பிற்காலத்தில் ஒரு எலியும், பேனும் கூட என்னை ஜெயித்து விடும் என்று தோண்றிய போது கழிவிரக்கம் அதிகரித்தது.
அம்மா எனக்கு சின்ன வயதில் சொன்ன அதே பூனை டயலாக்கை மாற்றி யோசித்தேன்.
”நாய்க்கு என்ன என் பேரு விஜய்.சென்னையில இருந்து ஹைதிராபாத்துக்கு வந்திருக்கேன்னு தெரியுமா? அதுக்கு எங்க இருக்கோம்னே தெரியாது. தெரியாம பண்ணினது மேல கோவப்பட்டு அடிச்சி கொல்லப் பாத்தா முருகர்தான் தண்டனை கொடுப்பார்” என்று நினைத்து கொண்டு தூங்கப்போனேன்.
No comments:
Post a Comment