Monday, 25 February 2013

கதை போல ஒன்று - 71


”லன்சுக்கு பணம் வைத்திருக்கிறீர்களா” என்று ஃபிராங் என்னை பார்த்து கேட்பான் என்று நினைக்கவே இல்லை.

பேக்கர்ஸ்ஃபீல்டில் இறங்கி இரண்டு நாள் போனதும் என்னை “லாஸ்ட் ஹில்ஸ்” போய் வேலை பார்க்க சொன்னார்கள்.

தினமும் காலை ஆறுமணிக்கு “ஃபிராங்குடன்” நான் தங்கியிருந்த இடத்தில் இருந்து என்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் “பாதாம் பருப்பு” பதப்படுத்தும் ஆலையில் உள்ள டிசைன் வேலைகளை கவனிக்க வேண்டும்.

ஃபிராங் அங்கே போய்வருவதால்,அவனுடன் என்னை சேர்ந்து கொள்ளச்சொன்னார்கள்.

ஃபிராங்க் பார்க்க வெளுத்து ஒல்லியாக இருந்தான்

.வயது இருபத்தியைந்து இருக்கும்.

அவனுடைய பழைய காரில் ஏறிக்கொள்ள சொன்னான்.
நான் உட்காரும் இடம் தவிர பின் சீட் முழுவதும் வேண்டாத குப்பைகள்.

கார் மெல்ல கிளம்பி பேக்கர்ஸ்ஃபீல்டை கிராஸ் செய்யும் வரை இருவரும் எதுவுமே பேசவில்லை.
சிரித்தபடியே போனது.

அடுத்து ஃபிராங் கேட்ட முதல் கேள்வி”லன்சுக்கு பணம் வைத்திருக்கிறீர்களா” .

அதிர்ச்சியை காட்டிக்கொள்ளாமல்.

“இருக்கிறது.மாலை காபிக்கு கூட வைத்திருக்கிறேன்”

“காபி கம்பெனியிலேயே தருவார்கள்”

“நீ என்ன படித்திருக்கிறாய் ஃபிராங்”

“பள்ளி இறுதிவரை படித்தேன்.அதன் பின் படிக்க வசதியில்லை”

“ஒஹ். யூ.எஸ்சில் டிகிரி படிப்பதது கக்ஷ்டமா”

”கஸ்டம் என்று சொல்லமுடியாது.ஆனால் நான் மிக மிக ஏழையாகி இருந்தேன்.அதனால்” என்று சிரித்தான்.

”எப்படி டிசைன் ஃபீல்டுக்கு வந்தாய்”

“பள்ளிப்படிப்பு முடிந்து, சின்ன சின்ன வேலைக்கு சென்று வாழ்க்கையை அனுபவித்திருந்தேன்.கொஞ்ச நாள் போதைக்கு அடிமையாய் இருந்தேன்”

பயப்பார்வை பார்த்தேன்.

“கவலைப்படாதே இப்போதில்லை. இந்த நகரத்தில் போதை என்பது சாதரண விசயம்.நான் இப்போது போதையிலிருந்து மீண்டு விட்டேன் என்ற சர்டிபிக்கேட் வைத்திருக்கிறேன்.ஸாஃப்ட் காப்பி பிறகு காட்டுகிறேன்”

”டிசைன் ஃபீல்டுக்கு எப்படி வந்தாய்”

“அதன் பிறகு அப்பாவின் நண்பர் ஒருவர் ஆறுமாத டிராஃப்டிங் கோர்ஸ் படியென்று சொன்னார்.ஏனோதானோ என்று படித்தேன்.படித்தவுடன் நம் கம்பெனியில் வேலை கிடைத்தது.”

“ம்ம்ம்” என்று சொல்லி வெளியே பார்த்தேன்.திராட்சை தோட்டங்களை ஹெக்டேர் கணக்கில் சாலையின் இருபக்கமும் காடாய் கிடந்தது.

குளிர் அடித்தது.

“ரொம்ப குளிர்” என்றேன்.

“இது குளிர் என்றால்.குளிரை என்னவென்று சொல்வாய்” என்று ரேடியோவை போட்டான்.

கச்சா கச்சாவென்று ரேடியோ பேசியது எனக்கு பிடிக்கவில்லை.

“அதை நிறுத்தினால் இன்னும் நாம் நிறைய பேசலாம்.அதுதான் எனக்கு விருப்பம்”

“ஒகே ஒகே “ என்று ரேடியோவை அணைத்தான்.

அவனே தொடர்ந்தான்.

இந்த நாடு பிடித்திருக்கிறதா? இந்த கம்பெனி பிடித்திருக்கிறதா?

”நாடு பிடித்திருக்கிறது.இது சொர்க்கம்.கம்பெனியும்தான். ஆனால் இந்த “வெனிசுலா” காரர்கள் தொல்லை கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது ஃபிராங் என்று கண்ணை சிமிட்டினேன்.

“வெனிசுலாகாரர்கள்” என்று சிரித்தவன். “நீ கார்லோஸ் அண்ட் கோவை சொல்கிறாயா வீஜேய்”.

நான் தலையாட்டினேன்.

“நான் உன்னிடம் பேசுவதை எல்லாம் வெளியே சொல்ல மாட்டாய் என்கிற விதத்தில் சொல்கிறேன்.நீ அப்படி வெளியே சொன்னாலும் பரவாயில்லை ஃபிராங்.எனக்கு யாரிடமாவது சொன்னால் பரவாயில்லை என்று தோண்கிறது”

“சொல்”

“வெனிசுலாகாரர்கள் முக்கியமான வேலையை அவர்களே செய்து கொள்கிறார்கள்.

ஒன்றுமே இல்லாத டம்மி வேலையை என்னை செய்ய சொல்கிறார்கள்.

இந்தியாவில் நான் இன்ஜினியர்.இங்கே வந்ததும் “லூயிஸ் மிராண்டா” இருக்கிறானே அவன் என்னை ஆட்டோகேட்டில் கோடுகள் வரைய சொல்கிறான்.

வரைந்ததும்” குட் ஜாப் டன் “ என்று என் முதுகிலேயே தட்டுகிறான்.

டிசைன் செய்வதற்கு எதாவது வேலை கொடு என்று கேட்டால் கொடுப்பதே இல்லை.

எல்லா வேலையையும் அவனே இழுத்து போட்டு செய்கிறான்.கார்லோசிடம் போய் கேட்டேன்.

அவருக்கும் நான் இங்கு வேலை செய்வது மேல் அந்தளவுக்கு ஆர்வம் இல்லை ஃபிராங்.

இப்போது இந்த “லாஸ்ட் ஹில்ஸ்” க்கு தினமும் என்பது கிலோமீட்டர்கள் போகச்சொல்வது கூட என்னை எரிச்சலடையச்செய்யத்தான் ஃபிராங்”

உதட்டை கடித்து என்னை கவலையோடு பார்த்த ஃபிராங் “ஆம் அவர்கள் அப்படித்தான் செய்வார்கள் வீஜேய்”

“ஏன்”

”நீ என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்”

“நீ ஒரு அமரிக்கன்.டிசைனர்”

“இல்லை நான் அமரிக்கன் இல்லை.

நான் மெக்சிகன்.

என்னுடைய இரண்டாவது வயதில் மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள வந்தவன்.

அப்படி வந்தற்காக அப்பா பல கஸ்டத்தை அனுபவித்திருக்கிறார்”

“இங்கே என்ன வேலை செய்தார் அப்பா” கேட்டேன்.

“இப்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறார் தோட்ட வேலை.

பேக்கர்ஸ்ஃபீல்டில் இரண்டு பக்கமும் அழகான புல்வெளிகளை பார்க்கிறாயே அதெல்லாம் இருபத்தியைந்து வருடம் முன் விக்ஷப்பாம்புகள் நிறைந்த இடம்.

கட்டுவீரியன் பாம்புகள் கொத்தி செத்த மெக்சிகன் கூலித்தொழிலாளர்கள் நிறைய.

அதில் சாகாமல் நாங்கள் பிழைத்திருந்து கஸ்டப்பட்டு அமெரிக்கர்களானோம்”

“ம்ம்ம் பாவம்தான் ஃபிராங்”

“நீ வெனிசுலாகாரர்கள் பற்றி சொன்னாய் அல்லவா.அதற்காக சொல்கிறேன்.

அப்படி கூலிவேலை செய்யும்ப்போது மெக்சிகர்கள் எல்லாவேலையையும் இழுத்து போட்டு செய்வார்களாம்.

வேலை இல்லை என்று சொல்லிவிட்டால் அமரிக்காவை விட்டு போகவேண்டும். அதனால் நிறைய போட்டி பொறாமைகள் இருக்கும்.அப்பா காலத்தில் அதற்காக கொலை கூட நடக்குமாம்.

அதே கதைதான் இந்த வெனிசூலாகாரர்களூக்கும்.

நீ இந்தியாவில் இருந்து வேலை செய்ய வந்தால், திறமையாக செய்தால் அவர்கள் இந்த ஆபீஸை விட்டு போகவேண்டி வரும். நேற்று கார்லோஸ் வீட்டில் பார்ட்டி அட்டென்ட் செய்தாயா”

”யெஸ் ஃபிராங் வந்தேன்”

“நானும் வந்தேன்.அதில் கவனித்தாயா! கார்லோஸ் வெனிசுலாகாரர்களை மட்டும் பார்த்து பார்த்து புகழ்ந்தான்.

இந்த கார்லோஸ் வெனிசுலா நாட்டின் மிகப்பெரிய எண்ணய் கம்பெனியில் பெரிய டீம் லீட்.

அதிபர் சாவோஸ்க்கு எதிராக இவனும் இவன் டீமும் ஒரு போராட்டத்தில் கலந்து கொள்ள, அதிபர் இவர்களை கண்வைத்து விட்டார்.

பல குற்றச்சாட்டுகளை சொல்லி கார்லோசையும் அவருடன் உள்ள விளாடிமீர்,ஜென்னி உடபட பதினைந்து பேரை வேலை நீக்கம் செய்து விட்டார்”

“ஹோஹ்”

“வேலை இல்லாமல் என்ன செய்ய.

வேறு வேலையும் கிடைக்கவில்லை.

பணப்பஞ்சம் தாளாமல் வீட்டில் உள்ள டிவீ,பிரிட்ஜ் என்று பொருட்களையும் பிளாட்பாரத்தில் போட்டு விற்பனை செய்திருக்கிறார் நம் கார்லோஸ்.

அப்படியானால் அவர் உன்னை ஒதுக்குவார்தானே வீஜேய்.

அங்கிருந்து இங்கு வேலைகிடைத்து அந்த டீம் மொத்தமும் வந்துவிட்டது.

இப்போது நீங்கள் இந்தியர்கள் வந்தால் மறுபடியும் வெனிசுலாகாரர்கள் அவர் நாட்டு பிளாட்பாரத்திற்கே போக வேண்டும் என்று அச்சபடுகிறார்கள் வீஜேய்.

உண்மை புரியும் போது ஏற்படும் ஆனந்தம் அளவிடமுடியாதது.

இப்போது லூயிஸ் மிராண்டா,கார்லோஸ்,விளாடிமீர் எல்லாரும் செய்த செயல்களை ஒவ்வொன்றாக நினைத்து பார்த்தேன்.

புரிந்தது.உண்மையில் நம்மை பார்த்து பயந்து போயிருக்கிறார்கள்.

எவ்வளவு கொடுமையான சூழ்நிலையில் இருந்து வந்திருக்கிறார்கள் இவர்கள்.

வாழ்க்கையில் இருந்தலுக்கான போராட்டம் இனிமையானது அல்ல. அது மிகவும் அருவெருப்பானதும் அசிங்கமானதுமாக இருக்கிறது.

கார் “லாஸ்ட் ஹில்ஸை “ அடைந்து விட்டது.இருவரும் காரை விட்டு இறங்கி போனோம்.

“முதலில் காஃப்பி குடித்துவிடலாம்.பிராயணக்களைப்பு”

காப்பி கொடுத்தான்.

”நான் இன்னொரு கேள்வி கேட்க வேண்டும். நீ தப்பா நினைக்காவிட்டால்”

“கேள்”

“நீ எடுத்த உடனே லஞ்சுக்கு பணம் கொண்டு வந்தாயா? என்று கேட்டது எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.அது நாகரீகமில்லாமல் தோண்றியது”

காப்பியை டேபிளில் வைத்து தலையை சற்று குனிந்து பின் என்னைப்பார்த்து சொன்னான்

“ஏழை மெக்சிகன் அப்படித்தான் பேசுவான்.என்னிடம் பணம் இல்லை.அதனால் முன் எச்சரிக்கையாக அப்படி கேட்டு வைத்தேன்.” என்றான்.

“அப்படியா மெக்சிகனுக்கும் அமரிக்கனுக்கும் என்ன வித்தியாசம் ஃபிராங்”

“அமெரிக்கன் பொழுது போக்குக்காக வேட்டையாடுவான்
மெக்சிகன் உணவுக்காக வேட்டையாடுவான் வீஜேய்”

இருவரும் அவரவர் வேலையில் மூழ்கினோம்.

No comments:

Post a Comment