Sunday, 3 March 2013

கதை போல் ஒன்று - 74


பாத்ரூம் கதவை உள்ளே இருந்து அப்பாம்மை தட்டினார்கள்.

ஏன் தட்டுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

கொண்டி உள்ளே இருக்கிறது.திறந்து கொண்டு வெளியே வரவேண்டியதுதானே.ஏதோ வெளியே பூட்டி வைத்திருப்பதுபோல் தட்டுகிறார்களே.

ஒருவேளை வெளியேதான் பூட்டிவைத்திருக்கிறோமோ என்று வெளிகொண்டியை பார்க்கிறேன்.பூட்டாமல்தான் இருக்கிறது.

நான் கத்துகிறேன் “அப்பாம்ம என்ன பண்றீங்க.வெளிய பூட்டல நீங்கதான் கதவ தொறக்கனும்”

உள்ளே இருந்து வித்தியாசமான குரல் கேட்டது.

அப்பாம்மைக்கு கிட்டதட்ட எழுபதுவயதுக்கு மேலே.

சின்ன வயதில் இருந்தே மிகச்செல்லமான வளர்ப்பு.

ஊரில் எல்லோரும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கும் போது தன் கணவன் மட்டும் கொழும்பு போய் ஆயிரக்ககணக்கில் சம்பாதித்து கொட்ட ஒரு வித ராணி அந்தஸ்த்தில் வாழ்ந்தவர்.

எதற்கெடுத்தாலும் கொழும்பு புகழ் பாடுவார்.”எனக்கு இந்த கொழும்பு தேங்காத்துருவல்தான் பிடிக்கும்ல” என்பார்.

குடும்பத்தில் அப்பாம்மை பேச்சுக்கு மறுபேச்சு சொல்ல ஆளே கிடையாது.

அப்பாம்மை அம்மாவை படுத்தியதை எல்லாம் இரண்டு தடி நோட்டில் எழுதினாலும் தீராது.

எல்லா சர்வாதிகாரிகளும் வீழ்ச்சிக்குறியவர்களே என்ற தத்துவம் அப்பாம்மைக்கும் பொருந்தியது.தாத்தாவின் காலத்திற்கப்புறம் தனியே இரண்டுமாதங்கள் இருந்தார்.

அந்த தனிமை அவர் மனநலத்தை பாதித்திருந்தது.

சென்னைக்கு வரமாட்டேன் என்றவர் அவரே வருகிறேன் என்று சொல்ல, அப்பா கூட்டி வந்துவிட்டார்.

வழக்கம்போல சென்னை அப்பாம்மைக்கு பிடிக்கவில்லை.

ஊருக்கு போகவேண்டும் என்று அடம்பிடித்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக மனச்சமன்நிலையை இழந்தார்.

அதிலும் ஊரில் காத்தோட்டமாக “ஒண்ணுக்கு” இருந்து பழகிவிட்ட அப்பாம்மைக்கு இந்த சென்னை அட்டாசிடு பாத்ரூம் சுத்தமாக பிடிக்கவில்லை.

சரியாக தண்ணீர் ஊற்றமாட்டார்.நான் கத்துவேன்.

மறுபடியும் அப்பாம்மையை பார்த்து கத்தினேன்.ஏனேன்றால் எனக்கும் பாத்ரூம் தேவையாய் இருந்தது.அன்று ஆபீஸுக்கு சீக்கிரம் போகவேண்டிய வேலை.

“நீங்கதான் பூட்டிகிட்டு இருக்கீங்க திறங்க”

உள்ளே இருந்து “ஹீங் ஹீங்” என்று குரலெழுபினார் அப்பாம்மை.

“அப்பாம்ம உள்ள கொண்டி இருக்கு பாருங்க அத உங்க பெருவிரலும் ஆள்காட்டி விரலும் வெச்சு அப்படியே மேலே தூக்கி இழுங்க திற்ந்துரும்”

“ஹீண் ஹீன் “அழும் குரல்.

“யம்மா இங்க வாங்க உங்க மாமியார பாருங்க. சனியன் மாதிரி உள்ள இருந்து மொக்க போடுறாங்க.எனக்கு பாத்ரூம் வேணும்.இவங்க எல்லாம் யாரு ஊர்ல இருந்து இங்க கூட்டிட்டு வரச்சொன்னது. சரியான லூசு”

அம்மா முறைத்தாள்.

“இப்படி பெரியவங்கள மதிக்காம பேசுறதா இருந்தா என்கிட்ட பேசாத நாய. அப்பா கேட்டா உன் கிட்ட மொகங்குடுத்து பேசமாட்டாங்க”

“அப்பா எங்க”

“முடிவெட்ட போயிருக்காங்க”

“ஆமா உங்க மாமியார் உங்கள இவ்வளவு கொடும படுத்தியும் இப்படி சப்போர்ட் பண்றீங்கன்னா நீங்களும் ஒரு அரைவெட்டுதான்”

இப்போ அம்மா பாத்ரூம் பக்கம் போய்.

“அத்த நான் கீதா பேசுறேன்.அப்படி மேல்ல கொண்டிய திறந்து பாருங்க அத்த”

“ஹீங் ஹீன் ஹீன்”

“அத்த அப்படி மெல்ல” அம்மா பேசிகொண்டிருக்கும் போதே நான் கத்தினேன்.

“ஏய் சனியன சீக்கிரம் வெளிய வா லூசு நாய” கத்தும்போதே அம்மா தொப்பு தொப்பென்று என் முதுகில் அடிக்க நான் திமிர

காலை வாக்கிங்கை முடித்து வீட்டிற்குள் நுழைந்த இரண்டு அண்ணன்களும் பிரச்சனையை தீர்க்க யோசித்தார்கள்.

எனக்கும் அம்மாவுக்கு இடையே ஆன ஆக்ரோச சண்டை பிரச்சனையின் தீவிரத்தை கூட்டியிருந்தது.

இப்போ அண்ணகள் முறை. அப்பாம்மையிடம் நயந்து பணிந்து சொல்லிப்பார்த்தான்கள்.

ஆனால் கதவு வேகமாக ஆடுகிறதே தவிர அவரால் திறக்க முடியவில்லை.

பெரியண்ணன் பாத்ரூமின் பின் பக்கம் போய் ஜன்னலில் பொருத்தியிருக்கும் கண்ணாடிகள் ஒவ்வொன்றாய் எடுத்தான்.கம்பி வழியே அப்பாம்மையை கூப்பிட்டான்.

எட்டிப்பார்த்தேன்.

உள்ளே அப்பாம்மை நடுங்கியபடியே நின்றிருந்தார்கள்.கண்களில் கண்ணீர்.முகமெல்லாம் என்ன செய்யவென்று தெரியாத பரபரப்பு பதட்டம்.
கைகால் எல்லாம் உதறிக்கொண்டே இருந்தன.

எனக்கு ஒரு குரூர சந்தோக்ஷம் வந்தது.எப்படியெல்லாம் எங்கம்மாவை கஸ்டபடுத்திருப்பார்கள்.இப்போ பாரு” இதுமாதிரி யோசிக்கும் போது எனக்கு பாத்ரூம் வேண்டிய யதார்த்தம் உரைக்க கத்த ஆரம்பித்தேன்.

“அந்த கொண்டிய எடுத்து வாங்க.எனக்கு பாத்ரூம் வேண்டாமா? காலங்காத்தால ஏன் இப்படி எரிச்சலாக்குறீங்க.

அண்ணன் கத்தினான் என்னைப்பார்த்து.

“ஏன்ல நாந்தான் பேசிக்கிட்டிருக்கேன்ல கொஞ்சம் அமைதியா இரு. அப்பாம்ம அந்த கொண்டிதான்.உங்க கைபக்கம்தான் இருக்கு அதோ பாருங்க.”

அப்பாம்மை கொண்டியை தவிர எல்லாத்தையும் தொட்டுகொண்டிருந்தார்கள்.நடுங்கிய கைகளால் கொண்டிக்கு மேலே தொடுகிறார்கள்.கீழே தொடுகிறார்கள்.ஆனால் கொண்டிமேல் கைவைக்கத்தெரியவில்லை.

அழுகை.

பாவமாய்தான் இருந்தது.

அண்ணன் காதில் கிசுகிசுத்தேன்.”இவங்கல்லாம் ஏன் உயிரோட இருக்காங்க.பழையகாலத்துல முதுமக்கள் தாழியில வைச்சு வாயில தண்ணி ஊத்தி மூச்ச நிக்க வைப்பாங்களாமே. அதுமாதிரி... “

“யம்மா இந்த நாய அந்தப்பக்கம் போகச்சொல்லுங்கம்மா.கிறுக்கன் தேவையில்லாம பேசுறான்” அண்ணன் கத்த அம்மாவும் திட்ட.

“இன்னும் பத்து நிமிசத்துல எனக்கு பாத்ரூம் வேணும்.அப்படி இல்லன்னா அவுங்கள நானே ஊர்ல கொண்டு விட்டுருவேன்.வயசான காலத்துல நம்மள கஸ்டபடுத்திகிட்டு.அன்னைக்கென்னன்னா நான் பாயில படுத்திருக்கும் போது பக்கதுல தண்ணியா இருக்கு. என்னன்னு பார்த்தா மோண்டு வைச்சிருக்காங்க.நைட்டு ஒரு மணிக்கு எந்திரிச்சி குளிச்சேன்.எனக்கு இவங்க இங்க இருக்க கூடாது.பதினைஞ்சு நிமிசத்துல பாத்ரூம் வேணும்”

“இத உன் அப்பாகிட்ட சொல்லுடா.உனக்கு வயசாகும்தான்” அம்மா கத்தினாள்.

அப்பாவிடம் சொல்ல முடியாது.அப்பாவின் முகத்தை பார்த்த உடனே எல்லா புனிதங்களும் என்னை நிறைத்து விடும்.ஒரு சிறிய சாக்கடைமேல் கங்கை ஆறு விழுந்தால் அதுவும்தானே கங்கை.

சோபாவில் உட்கார்ந்திருந்தேன். அம்மா கதவின் இந்தப்பக்கம் பேச, அண்ணன்களும் தம்பியும் ஜன்னல் பக்கம் விளக்கி சொல்ல அப்பாம்மையால் கடைசி வரை கதவை திறக்க முடியவில்லை.

அழுகையிலிருந்து கதறலாக ஆரம்பித்தார்கள்.சத்தம் அதிகமானவுடன் இன்னும் சத்தமாக கதவை எப்படி திறப்பது எல்லோரும் சொல்ல பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் என்ன விசயம் என்று கேட்க,

ஒட்ட வெட்டிய தலையுடன் அப்பா வீட்டிற்குள் வந்தார்.அப்பா வந்ததும் அவர் முன்னே குதித்து கத்தினேன் .அழுதேன். பாத்ரூம் பிரச்சனையை சொன்னேன்.

அப்பா பாத்ரூம் பக்கம் போனார் “டேய் யாரும் பேசாதீங்க.எல்லாரும் இங்க வாங்க.ஜன்னல் கிட்ட யாரு.எல்லாரும் இங்க ஹாலுக்கு வாங்க.அம்மா அவளாகவே அமைதியாகிவிட்டாள்.நானும் அமைதியாகிவிட்டேன்.

அப்பா தொடர்ந்தார்.

“பத்து நிமிசம் யாரும் பேசாதீங்க.அமைதியா இருங்க.அவுங்க பாத்ரூம்ல அப்பாம்ம மனசளவில ஜாம்மாகி இருக்காங்க.கொஞ்சம் விடுங்க.அமைதியா இருங்க.”

நான் ஏதோ சொல்ல வந்தேன்.

“எதுவுமே பேசாத விஜய்.அமைதியாயிரு.வார்த்தை பேசக்கூடாதுஅவங்க ஈகோவுக்கு தன்னால ஒரு கதவ கூட திறக்கமுடியலன்னு ஒரு தன்னிரக்கம் கோவம் அவமானம் எல்லாம் இருக்கு.அதனால அதுக்கு மேல அவுங்களால யோசிக்க முடியல.நாம அவுங்கள கவனிக்கலன்னு தெரிஞ்சா மட்டும்தாம் நார்மலாவாங்க”

நாங்கள் அமைதியாயிருந்தோம்.ஊசி விழும் ஒசை கேட்கும்.

ஐந்து நிமிடம் ஆனது.அப்பாம்மையின் கதறல் அழுகையையிருந்தது.

இரண்டு நிமிடத்தில் அழுகை நின்றது.

அடுத்த நான்கு நிமிடத்தில் டக்டெக்கென்று கதவு திறக்கப்பட்டது.

அப்பாம்மை வெளியே வந்திருந்தார்.அவருடைய அழுது சிவந்த சுருங்கிய முகத்தை பார்த்தால் பாவமாய் இருந்தது.

அதுவரை அமைதியாய் இருந்த அப்பாவின் கண்களில் கண்ணீர் அரும்பிருந்தது.துடைத்து கொண்டார்.

அவசரமாக உள்ளே கதவை தாளிட்டு ஷவரை திறந்துவிட்டேன்.அப்பாவின் கண்ணீர் ஏதோ செய்தது.

தலைவழியே தண்ணீர் விழுந்து கொண்டிருந்ததால் நான் அழுதேனா இல்லையா என்று கண்டுபிடிக்கமுடியவில்லை.

No comments:

Post a Comment