Monday 25 February 2013

கதை போல் ஒன்று - 72

கேசவன் தன்னுடைய வகுப்பிற்குள் நுழைந்ததும் சட்டென்று அதை கவனித்தார்.

வகுப்பின் ஐம்பத்தி நான்கு மாணவர்கள் நெற்றியிலும் விபூதி.பட்டையாக நீரை குழைத்து பூசியிருக்கிறார்க்ள்.

கிறிஸ்த்தவ,இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவகளும் பூசியிருக்கிறார்க்ள்.

ஏதோ நடந்திருக்கிறது.அல்லது நடக்க போகிறது.

அதை கவனிக்காதவர் போல் கணித பாடத்தை எடுக்க ஆரம்பித்தார்.அன்று பாடத்தை சீக்கிரம் முடித்து “விபூதி விசயத்தை” விசாரிக்கிறார்.

நிக்ஷாத் சொல்கிறான்” அது ஒண்ணுமில்ல சார். ரெனோ வந்து தமிழ் டீச்சருக்கு சொந்தக்காரன்.உங்களுக்கே தெரியும் தமிழ் டீச்சர் எப்பவுமே கிறிஸ்டின் மதம்தான் ஒசத்தின்னு பேசிக்கிட்டிருப்பாங்க.ரெனோ போனவாரம் எக்சாம்கிறதால நம்ம ஸ்கூல் பக்கதுல உள்ள பிள்ளையார் கோவில்ல சாமி கும்பிட்டு விபூதி வைச்சிருக்கான்.அது தமிழ் டீச்சருக்கு பொறுக்கல. ரெனோவ பார்த்து கிளாஸ்ல எல்லார் முன்னாடியும் திட்டிட்டாங்க.அதான் தமிழ் டீச்சருக்கு எங்க எதிர்ப்ப தெரிவிக்க எல்லா ஸ்டூடண்ஸும் விபூதி பூசிக்கிட்டோம்.”

ம்ம்ம்.போன் பீரியடு தமிழ்தான.

ஆமா சார்.வந்தாங்க எல்லார் முகத்துலையும் விபூதி பார்த்து அதிர்ச்சியாகி நின்னாங்க.அப்படியே கிளாஸ விட்டு போயிட்டாங்க.

கேசவன் பதில் சொல்லவில்லை.

கொஞ்சம் நேரம் கழித்து “சரி அது உங்க பிரச்சனை அதுக்கு நான் வரல.ஆனா இந்த கிளாஸ் எடுக்கும் போதே இரண்டு கதை சொல்லனும்ன்னு நேத்தே யோசிச்சு வைச்சிருந்தேன்.அத சொல்லலாமா வேணாமான்னு தெரியல். நீங்க வேற இப்ப நல்ல மூட்ல இல்ல” என்று சிரித்தார்.

“சார்.உங்க கத எல்லாமே எங்களுக்கு பிடிக்கும்.

சொல்லுங்க சார்”

ம்ம்ம்... முதல்கதை என் சித்தி பத்தினது.

என் சித்திய கட்டிகொடுத்த ஊர் ஸ்ரீவைகுண்டம்.ஸ்ரீவைகுண்டத்துல ரொம்ப பக்தியான குடும்பம்.

அந்த ஊர் கோவில்கள்ல எல்லாம் அந்த குடுமப்த்துக்கு நிறைய மதிப்பு இருந்துச்சு.சித்தி போன புதுசுல ரொம்ப ஆச்சர்யபட்டிருக்காங்க.

எப்பவும் பூஜை புனஸ்க்காரம்,சாமி,சாமி கதைகள் என்று அந்த குடும்பம் இருக்கிறது.

சித்திக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.அவரும் அப்படியே மாறிட்டார்.

ஒருதடவ நான் சித்தி வீட்டுக்கு போகும் போது சித்தி அந்த ஏரியா சின்ன பசங்கள் கூட்டிவைச்சு “பக்தி சங்கம்” நடத்திகொண்டிருந்தார்.

ஆச்சா.இப்ப சித்திக்கு அழகான பெண்குழந்தை பிறக்குது.விடே அத கொண்டாடுது.

நகையும் டிரஸ்ஸுமாய் அந்த பெண்குழந்தைக்கு போட்டு பேரு வைக்க ஜோசியர கேட்கிறாங்க.

ஜோசியர் ரொம்ப நேரம் குழந்த பிறந்த தேதிய ஆராய்ச்சி செய்து ,:இப்ப என்ன பேருன்னாலும் வைச்சு கூப்பிடுங்க. ஆனால் ஒன்னரை வயசுக்கப்புறம் அவளுக்கு நீங்க வைகக் நினைக்கிற பேர வைச்சி கூப்பிடுங்கன்னு சொல்லிட்டு போயிடுறார்.

அப்படியே செய்தாங்க.

ஒரு வயசுல குழந்தைக்கு “வயித்தலைச்சல்” வந்துச்சு.ஒரே பேதி. என்ன குடுத்தாலும் நிக்கல.

ஊர் பக்க உள்ள டாக்டர்களுக்கு சரியாத்தெரியல.நாகர்கோவில் ஜெயசேகர் ஆஸ்பித்ரிக்கு கொண்டு வந்தாங்க.

டாக்டர் பாத்துட்டு ”குழந்தையோட குடல் ஒரு நூல் அளவுக்கு சுருங்கிருச்சு.பிழைக்கிறது கஸ்டம்.ஆனா நான் என்னால ஆனத பார்க்கிறேன்.நீங்களும் பிரார்த்தனை பண்ணுங்கன்னு சொல்றார்.”

சித்தி எல்லா சாமிகளையும் கும்பிடுறாங்க.எல்லா சாமிக்கும் நேர்ந்து போடுறாங்க.ஆனா குழந்தை உடம்பு மோசமாதான் ஆகுது.

அப்போ பக்கத்து ரூம்ல இருக்கிற அம்மா” வேளாங்கன்னி மாதாவுக்கு “ வேண்ட சொல்றாங்க.

எந்த மதமா இருந்தா என்ன? சித்தி வேளாங்கன்னி மாதா படத்த வைச்சு தினமும் கும்பிட்டிருக்காங்க.அழுதிருக்காங்க.

இப்போ குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமா சரியாயிருக்கு.அப்படியே தேறி பிழைச்சுட்டா.

உடனே சித்தி சித்தபாவ கூப்பிட்டு வேளாங்கன்னி கோயிலுக்கு போய் வந்திருக்காங்க.

ஒன்னரை வயசுல குழந்தைக்கு “மேரி” ன்னு வைச்சிருக்காங்க.குடுமபத்தில எதிர்ப்பு எப்படி “மேரி” ன்னு கிறிஸ்டியன் பேர வைக்கலாம் அப்படின்னு.

அதுக்கு சித்தி சொன்னாங்களாம் “வேளாங்கன்னி மாதா என் வயித்துல பிறந்தா “மேரி” தான வைப்பாங்க.அதனாலத்தான் வெச்சேன் “ அபப்டின்னு.

இப்போ முத கதை முடிஞ்சது.

அடுத்தது என் மாமாவ பத்தினது.

மாமா அத்தைய கல்யாணம் பண்ணும் போதே அத்தை பாதி கிறிஸ்டின்தான்.

சிலுவை டாலர் போட்ட செயின்தான் போடுவாங்க.கல்யாணத்துக்கப்புறம் மாமாவும் ஒண்ணும் சொல்லாததால முழுமையான கிறிஸ்டினா மாறிட்டாங்க.

நாலுமாவடிக்கு ஜெபத்துக்கு போறது அத்தைக்கு பிடிக்கும்.

வரிசையா மூணு பெண் குழந்தைகள் பிறந்தது.

மாமாவுக்கு கடையில நஸ்டம் வந்தது.கொஞ்சம் கொஞ்சமா தரித்திரம் வந்து சாப்பாட்டுக்கே கஸ்டமாகிவிட்டது.ஊர்ல இருக்கிற ஒன்றிரண்டு புளியங்காட்ட வித்து சாப்பிடுறாங்க.

அத்தை என்னடான்னா இந்த கஸ்டத்துலையும் மாமாவ கிறிஸ்டினா மாறிடுங்க மாறிடுங்கன்னு வற்புறுத்திகிட்டே இருக்காங்க.மாமாவுக்கு எந்த சாமி மேலயும் நம்பிக்கை கிடையாது.

இப்படி போய்கிட்டு இருக்கும் போது மாமா ஃபிரண்டு ஒருத்தர் மாமாவ “திருப்பதி” போய் வேண்டிக்க சொல்றாரு.மாமவும் நம்பிக்கை இல்லாம தன்னோட ஒரு குழந்தைய கூப்பிட்டுகிட்டு சென்னை வரார்.

சென்னையில சொந்தகாரங்கள பார்த்துட்டு, தன் பெண்ணோட திருப்பதி போற பஸ்ஸுல ஏறி உட்கார்ந்திருக்கிறார்.

கையில பணமே இலல். பஸ் செலவுக்கு மட்டும்தான் இருக்கு.

காலையில வாங்கிசாப்பிட்ட இரண்டு இட்லி பத்தவே இல்லை.ஏழுவயசு குழந்தைவேற பசில அவரு மொகத்த மொகத்த பார்க்குது.

திருப்பதிக்கு போகனுமான்னு யோசிக்கிறார்.

வீட்டுக்கு போய் பொண்டாட்டி சொன்ன மாதிரி மதம் மாறிடுவோம்ன்னு ஒரு கோவம் வருது.அழுறார்.

இறங்குறதுக்கு எழுந்திருக்குபோது,முனசீட்ல அத பாக்குறார்.

தூக்குசட்டி ஒன்னு தனியா கிடக்குது.

யாராவது விட்டுட்டு போயிட்டாங்கன்னு நெனச்சி கையில எடுக்கிறார்.சூடா இருக்கு.திறந்து பார்க்கிறார்.

சூடான சர்க்கரை பொங்கல்.

விரலை விட்டு நக்குகிறார்.ருசி. சட்டென்று அவரும் குழந்தை அந்த சர்க்கரை பொங்கலை சாப்பிடுகிறார்கள்.

நெய்யும் முந்திரியும் போட்டு செய்த பொங்கல் அவர்களின் பசித்த குடல்களை சாந்தம் செய்தது.

சாப்பிட்டு முடித்தவுடன் மாமா அழுகிறார்.”நான் ஒன்ன வந்து பார்பேன் சாமி” என்று திருப்பதி போய் வருகிறார்.

வியாபாரத்தை மறுபடி ஆரம்பிக்க பிஸினஸ் “கிளிக்” ஆகி விடுகிறது.

கடைசிவரை அத்தையும் அவர் பிள்ளைகளும் மாமாவை கிறிஸ்டியனாக மாற்ற முடியவில்லை.

மாமா வருடம் இருமுறை திருப்பதிக்கு சென்று தரிசித்தே திரும்புவார்.

இப்போ இரண்டாவது கதையும் முடிஞ்சது.

மாணவர்கள் சிரித்தார்கள்.

ஒருவன் கேட்டான்.”அப்ப இது மாதிரி நடந்தாத்தான் நாம எந்த மதம்னே தெரியுமா சார்”

“அப்படி நான் சொல்ல வரல.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவம்.நான் சொன்ன இரண்டு பேரும் அவுங்க அனுபவத்த தர்க்க ரீதியா ஆராய்ச்சி பண்ணாம அத நம்புனாங்க.அப்படி நம்பாமலேயும் இருக்கலாம்.ஆனால் நம்பினால் அவர்கள் வாழ்க்கை எளிதாய் இருக்கும்.
நம்பாவிட்டால் எதைபிடிக்க என்ற அலைந்து கொண்டே இருக்க வேண்டும்.”

“நீங்க சொல்றது இரண்டும் ரொம்ப உணர்ச்சிபூர்வமா இருக்கு சார்”

“ஆமா மதம்கிறது இதயப்பூர்வமானது காதல்மாதிரி.ரொம்ப அந்தரங்கமானது.அத செலபிரேட் பண்ணலாம்.தப்பே இல்ல. ஆனா நீங்க பண்றாமாதிரி இப்படி எல்லோரும் விபூதி பூசி உங்க கோவத்த காட்டுறதெக்கெல்லாம் உபயோகிக்க கூடாது.மதம் அதுக்கானதில்லை.

என்று சிரித்தார் கேசவன்.

மாணவர்கள அமைதியாய் இருந்தார்கள்.

2 comments:

  1. நம் எண்ணங்களுக்கும் தேடல்களுக்கும் கட்டுப்படாத ஒரு super natural power இருக்கிறது என்பதை சில அதிசயமான சம்பவங்களில் உணர்ந்திருக்கிறேன். அதன் பெயர்தான் மதம் என்றால் எனக்கு 'மதம்' பிடித்திருக்கிறது…!

    ReplyDelete