Thursday 16 April 2015

எந்தக் கண்கள் அழகானவை

ஏதோ ஒரு பக்திக் கதையில் படித்திருக்கிறேன்.
கடைத்தெருவில் ஒருவன் ஆடாமல் அசையாமல் ஒரு தாசியை வெட்கமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தானாம்.அவனை அனைவரும் இகழ்ச்சியாகப் பார்க்க,
அப்பக்கம் வந்த ஞானி “என்ன அவளிடம் இருக்கிறது” என்றாராம்.
அவளுடைய கண்கள் அழகாக இருக்கின்றன.அவள் கண்களை விட்டு என் கண்களை எடுக்க முடியவில்லை.நான் உலகில் பார்த்ததிலேயே அழகான கண்கள் அவளுடையதுதான் என்றானாம்.
“ஒருவேளை இதைவிட அழகான கண்களைப் பார்த்தால் என்ன செய்வாய்” என்றாராம் ஞானி.
“இருக்க வாய்ப்பில்லை” என்றவனிடம், அருகில் இருந்த கோவிலின் சாமி சிலையின் கண்களைப் பார்க்க வைத்தாராம்.
அந்த உருவத்தில் தெரிந்த கண்கள் தாசியின் கண்களை விட பலமடங்கு அதிகமாய் இருக்கவே அவன் அப்படியே ஞானியைப் பணிந்து பக்தி மார்க்கத்துக்கு வந்துவிட்டானாம்.
இந்தக் கதையை ஜெயமோகன் ரசிகர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
ஜெயமோகன் சுந்தரராமசாமி அசோகமித்திரன் ஒருவேளை தமிழின் சிந்தனையாளராக இருக்கலாம்.ஆனால் அவர்கள் எல்லாம் அந்தக் கடைத்தெரு பெண்ணின் கண்கள் மாதிரிதான்.
இவர்களுடைய சிந்தனைகளையெல்லாம் பலமடங்கு தாண்டும் சிந்தனையாளர் ஒருவர் தமிழில் இருக்கிறார்.
அவர் எழுத்தாளர் பிரமிள்.
ஜெயமோகனின் இளம் ரசிகர்கள் தயவு செய்து பிரமிள் எழுதிய படைப்புகளைப் படித்துப் பார்க்க வேண்டும் என்பது என் கோரிக்கை.
அவருடைய கதைகள் கவிதைகள் கூட படிக்க வேண்டாம்.
அவர் எழுதிய எந்தக் கட்டுரையானாலும் படித்துப் பாருங்கள்.அதில் யோசிக்க பல சிந்தனைமடக்குகள் இருக்கும்.
அவற்றையெல்லாம் படித்தால் சுந்தரராமசாமி அசோகமித்திரன் ஜெயமோகன் கண்களை விட பிரமிளின் கண்களை பிடித்துப் போகும்.
இந்த காரணத்தினாலேயே தமிழின் பல எழுத்தாளர்கள் பிரமிள் பற்றி எழுத மாட்டார்கள்.
பேச மாட்டார்கள்.
ஜெயமோகன் தன் பேட்டியில் தமிழின் சிந்தனையாளர்களாக பேசும் போது பிரமிளை திட்டமிட்டு மறந்துவிடுகிறார்.எங்கே பிரமிளைப் பற்றி பேசினால் தன்னுடைய இளம் வாசகர்களிடத்தில் அது பிரமிளுக்கு விளம்பரமாக அமைந்து விடுமோ என்ற பயம் அவருக்கிருக்கிறது.
பிரமிள் சுந்தரராமசாமி பிரச்சனையால் காலச்சுவடு எப்போதும் பிரமிளை அந்த அளவுக்கு கண்டுகொள்ளாது.
காலச்சுவடுக்கு பாரதி புதுமைப்பித்தனுக்கு அடுத்து சுந்தரராமசாமி என்று மக்கள் மனதில் பதிய வைப்பதுதான் ஒரே உயரிய குறிக்கோள்.அந்தக் குறிக்கோளுக்கு குறுக்கே எவன் வந்தாலும் வெட்டப்படுவான்.
எங்கேயோப் போறேன்.இளைஞர்களுக்கு சொல்கிறேன்.
நாமெல்லோரும் பிரமிளை வாசிக்கப் பழகவேண்டும்.அட்லீஸ்ட் அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்புகளை முதலில் வாசிக்க.
ஏன் சொல்கிறேன் என்றால் ஜெயமோகனின் இளம் ரசிகர்களிடத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது.ஜெயமோகன் மீது யாராவது விமர்சனம் சொன்னால் “சூரியனை பார்த்து ஞமலி குரைக்கிறது” என்ற பாவனையில் இருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு சில இளைஞர்கள் ஜெயமோகன் சொன்னா அது கரெக்டுதான் என்று இருக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் கட்டாயம் பிரமிளைப் படித்துப் பார்க்க வேண்டும் என்பது என் கோரிக்கை. நிச்சயமாக தமிழ் சிந்தனை உலகில் நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் நிறைய மாயைகளில் இருந்து வெளியே வருவீர்கள்.
பிரமிளுக்கென்று ஒரு அறிவுஜீவி ரசிகர்கூட்டம் இருக்கிறது.அவர்கள் யாரும் பிரமிளைப் பற்றி அதிகம் பிரச்சாரம் செய்யமாட்டார்கள்.
”எங்கள் பிரமிள் உயர்தரமானவன்.வாசர்கள்தாம் அவனிடத்தில் போகவேண்டும்.பிரமிளை விளம்பரம் செய்தால் அது பிரமிளுக்கு அவமானம்” என்று 1950 ஆண்டுக் காலத்தில் உள்ள பழைய கொள்கைகளை வைத்திருப்பவர்கள்.
எனக்கு அதில் உடன்பாடில்லை.
இந்த நூற்றாண்டில் பொருள் தரமானதாக இருந்தாலும் விளம்பரம் வேண்டும்.
சில இடத்தில் கட்டாயப்படுத்த வேண்டும்தாம்.
முதன் முதலில் தேனைப் பார்த்த சிறுகுழந்தை அது ஏதோ ஒரு அருவருப்பான பொருள் என்று வேண்டாம் என்று சொல்லி ஒடினால்,
பிடித்து வைத்து கட்டாயப்படுத்தி நாக்கில் தேய்க்கத்தான் வேண்டும்.
ஒருமுறை தேய்த்தால் குழந்தையாச்சு தேனாச்சு.
அதேதான் பிரமிள் படைப்புகளை பேட்டிக்களை மற்றவர்களுக்கு சேர்க்கும் விசயத்திலும் என்பது என் கருத்து.
இனிமேல் அவ்வப்போது பிரமிள் கட்டுரைகள் பேட்டிகள் பற்றி சிறுகுறிப்புகளை எழுதலாம் என்றிருக்கிறேன்.
ஏற்கனவே இது பற்றி எழுதியிருக்கிறேன் என்றாலும் சமீபத்திய ’ஜெயமோகனின் பிரமிள் இருட்டடிப்பு பேட்டி” என்னை பாதித்துவிட்டது.
இவர்களின் இருட்டடிப்பை எல்லாம் பிரமிள் தாண்டுவார் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.

No comments:

Post a Comment