Thursday 16 April 2015

கொள்கையும் அரசியலும்...

முன்குறிப்பு: நான் பொலிட்டிக்கல் சயின்ஸ் எதுவும் படித்தவனில்லை.ஆனால் ஒன்றை வைத்து ஒன்றாக சிந்திக்கத் தெரிந்தவன் என்று நம்புகிறவன்.இதில் வரும் சில சொற்கள்,சொற் கலவைகள் என் சொந்த யூகமே

கொள்கையை மக்களிடத்தில் பரப்பும் போதும், விளக்கும்போதும் இயக்கமாகவும்,

பின் அதை செயல்படுத்த தேவையான அதிகாரத்தை அடைய அரசியல் கட்சியாகவும் ”பழுக்கும்” விஷயம் உலகெங்கும் நடக்கக்கூடிய ஒன்று.

இயக்கமாக இருக்கையில் இருக்கும் வீரியமும், சமரசமற்ற தன்மையும், கொள்கையை நோக்கிய கொதிநிலையும்,
அரசியல் கட்சியாக இருக்கும் போது கொஞ்சம் நீர்த்துதான் போகிறது.

1.கொள்கை நீர்த்துப் போகிறது என்று மக்கள் நினைக்கிறார்களோ என்ற பயம் இயக்கத்துக்கோ கட்சிக்கோ ஏற்படும் போது அவர்கள் ”கொள்கை செயலாக்க அரசியல்” செய்கிறார்கள்.

உதாரணம்:தாலி அறுத்தல், காதலர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்யும் இந்துத்துவாக்கள்.

2.ஒரு ”சம்பவத்தை உருவாக்கியோ” அல்லது சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தத்தம் அரசியல் கட்சியை உயர்த்திக் காட்டிக்கொள்வது ஒரு வகையான “அரசியல்”.

உதாரணம்:ஈழப்பிரச்சனைக்காக முத்துக்குமார் இறந்த போது மொத்த தமிழ்க் கட்சிகளும் முத்துக்குமார் வீட்டிலிருந்தன.
தர்மபுரி இளவரசன் பிரச்சனை.

3.தனிமனித நன்மைக்காக நடக்கும் அரசியல். இதை ”தனிமனித நன்மை அரசியல்” எனலாம்.

உதாரணம்:2ஜிப் பிரச்சனைக்காக திமுக மத்திய அரசை அன்போடு அணுகுகிறது, அதிமுக தன் தலைவரின் நன்மைக்காக மத்திய அரசை அன்போடு அணுகுகிறது என்பதெல்லாம்.

4.அவன் நமக்கு எதிர்கட்சி.அதனால் அவன் என்னவெல்லாம் நிலை எடுக்கிறானோ அத எதிர்ப்போம் என்ற அரசியல். இதை “எதிர்நிலை அரசியல்” என்போம்.

உதாரணம் பொதுவாக திமுக அதிமுக பரஸ்பரம் எடுக்கும் நிலைப்பாடு.

இது மாதிரி யோசித்தால் பல ”அரசியல்கள்” தெரிய வரலாம்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்
அடிப்படையில் ”மக்கள் நலம்” என்பது ஒரு அரசியல் இயக்கத்துக்கோ அல்லது கட்சிக்கோ கொள்கையானால்
அது செய்யும் எந்த அரசியலிலும் ஏதோ ஒரு நன்மை இருக்கவே செய்யும்.

மக்கள் நலம் என்றால் யதார்த்த ரீதியாக, தர்க்க ரீதியாக சாத்தியப்பட்ட மக்கள் நலக் கொள்கைகள்.

முதலாளிகள் என்ன செய்தாலும் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பார்கள்?
எதற்கெடுத்தாலும் அமெரிக்காதான் காரணம் என்பார்கள்? என்று கிண்டல் விமர்சனம் செய்வார்கள்.

சமீபத்தில் நான் படித்த தகவலில்
1960 களில் கேரளக் கரையோரம் இரண்டு திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியதாம்.

உடனே கம்யூனிஸ்டுகள் “அது உண்மையான திமிங்கலமா? அல்லது அமெரிக்கா அனுப்பி வைத்த வேவு பார்க்கும் பொம்மையா? “ என்று சந்தேகப்பட்டு பிரச்சனையாக்கினார்களாம்.இதை கிண்டலாக எழுதியிருந்தார் கட்டுரையாசிரியர்.

மேலோட்டமாக பார்க்கும் போது அது கம்யூனிஸ்ட்கள் நடத்தும் “சம்பவ அரசியல்” மாதிரிதான் தெரியும்.இல்லை அது சம்பவ அரசியலேதான்.

ஆனால் அதில் நன்மையா? தீமையா? என்றால் நன்மைதான் என்பேன்.எந்த விஷயத்தையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது என்பது மிகச்சரியான விஷயம்.

நினைத்துப் பாருங்கள்.போபால் விஷ வாயு வந்து புழுக்களாக துடிதுடித்து மக்கள் சாகும் போது நம் முதலாளிகள், முதலாளி ஆதரவாளர்கள் எங்கே இருந்தார்கள்.”உங்களுக்கெல்லாம் ஒன்று ஆகாது” என்றுதானே அவர்கள் போபாலில் தொழிற்சாலை தொடங்கியிருந்திருப்பார்கள்.

ஆக கம்யூனிஸ்ட்கள் மக்கள் ஆதரவை பெற,

மக்கள் கவனத்தைப் பெற செய்யும் அரசியல் தந்திரமே , மக்கள் நன்மையாக விளைகிறது.

அதுதான் திகவினர் வீரமணி விஷயத்தில் கூட இருக்கலாம்.

ஆம் அவர் நினைத்திருக்கலாம் “ ஏதாவது செய்யனும்.நம்ம கிராஃப் இறங்கிட்டு வருது” என்று.

அதற்காக அவர் என்ன செய்து விட்டார், ஏதாவது கேவலமாக செய்தாரா? வன்முறை செய்தாரா? ரோட்டில் போகும் பெண்களை தாலியை அறுத்தார்களா?

 தாலி வேண்டாம் என்று ஒரு அரசியல் செய்கிறார்?

சுரேஷ் கண்ணன் சொன்னது மாதிரி தர்க்க மனமாக ஐந்து நிமிடம் யோசித்தாலே தாலி தேவையில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

தாலி பூ பொட்டு கலர்ச்சேலை என்பது போன்ற விஷயங்கள் இல்லாததால் என் குடும்பத்தில் ஒரு சில பெண்கள் வாழ்க்கை முழுக்க திணறியதும்,

திக்கியதும் எனக்குத் தெரியும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இது உண்டு.

வீரமணி அரசியல் செய்கிறார்? வீரமணி அரசியல் செய்கிறார்?

எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை நம்மூர் அறிவாளிகள் கண்டுபிடித்து எழுதுகிறார்கள்.

கொள்கையினால் அரசியல் உருவாகும்.
அரசியல் கொள்கையை நிலைக்கச் செய்யும்.

பகுத்தறிவினால் திக அரசியல் உருவாயிற்று.
திக அரசியலினால் பகுத்தறிவு நிலைக்கும்.அல்லது அழிக்கப்படாமல் காக்கப் படும்.

ஆக அடிப்படையைப் பார்ப்பதுதான் முறை.

இதே ”அரசியல் - கொள்கை” தியரியை இந்துத்துவாக்களுக்கு அப்ளை செய்து பாருங்கள்.அவர்களும் அபப்டியே நடப்பார்கள்.

”இந்துக்கள் மட்டும்தான் இந்தியாவில்” என்ற கொள்கையை வைத்து இந்து அரசியல் உருவாகிறது.

அதன் பிறகு இந்து அரசியலினால் இந்து வெறி தொடர்ச்சியாக தூண்டப்படுகிறது ( மோடி அமைச்சர்களின் இந்து வெறி பேச்சுகள் இதற்கு சிறந்த உதாரணம்)

பகுத்தறிவு என்ற கொள்கை தமிழக மக்களை எப்படி உயர்த்தியிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இந்துவெறி என்ற கொளகை நம் நாட்டை எப்படி கீழாக இழுத்துக் கொண்டு போகிறது என்பதை பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

அந்தப் பகுத்தறிவு கொள்கையை வளர்க்கிறேன் என்று ஒருவர் ”அரசியல்” செய்தால் கூட அது நமக்கு நன்மைதான என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நமக்கு என்ன பிரச்சனை தாலி அகற்றும் போராட்டம் பிரச்சனையா?

அல்லது

தாலி அகற்றும் போராட்டத்தை வீரமணி செய்தது பிரச்சனையா?

”பாக்கிஸ்தான் சுதந்திரதினத்தில் என்னை விடுதலை செய்தால் நான் விடுதலையாக மாட்டேன்” என்றானாம் ஒரு இந்தியப் பற்றாளன்.(பேச்சுக்கு)

விடுதலையாவது முக்கியமா? நாள் கிழமை முக்கியமா ?

நோக்கம் முக்கியமா?

அல்லது நோக்கத்தை செயல்படுத்துபவரின் குற்றத்தை லென்ஸ் வைத்து நோண்டி எடுத்து விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் நோக்கத்தையே சிதைப்பது முக்கியமா?

ஆணிவேர் நல்ல தரமான கொள்கையாக இருந்தால்,

ஒரு இயக்கம் எப்பேர்ப்பட்ட ”அரசியல்” செய்தாலும்

அதில் மக்கள் நன்மையே பெரும்பாலும் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன்.

ஆகையால் திராவிடர் கழகத்தை மனதார ஆதரிக்கிறேன்.

No comments:

Post a Comment